புதன், 17 செப்டம்பர், 2025

கூர்ந்து கவனிப்போம்!


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

 

நாம் பார்ப்பதை, கேட்பதை, பிறர் சொல்வதை நினைவில் வைத்துக்கொள்ள முடியாமல் அவ்வப்போது மறந்துவிடுகிறோம். இரண்டிரண்டு இலக்கமாகச் சொல்லப்பட்ட செல்பேசி எண்ணை, ‘நான்  ஒரு தடவை சொல்றேன்; சரியான்னு பாருங்க’ என்கிறோம். அவ்வப்போது ‘மறந்துவிட்டேன்’ என்ற வார்த்தையைச் சொல்லிக்கொண்டே இருக்கிறோம். அல்லது செய்யக்கூடாததைச் செய்துவிட்டு, ‘சாரி’ என்கிறோம். இவையெல்லாம் நம் கவனச் சிதறல்களால் ஏற்படுபவை.

 

இந்தக் கவனச் சிதறல் நாம் செய்யும் பல்வேறு செயல்களில் ஏற்படுகிறது. அதனால்தான் நாம் எந்தச் செயலையும் வெற்றிகரமாகச் செய்து முடிக்க இயலுவதில்லை. இந்தக் கவனச் சிதறல்தான் நாம் தொழுகின்ற தொழுகையிலும் ஏற்படுகிறது. நாம் தொழுகின்றபோது, ஏற்கெனவே மனனம் செய்துவைத்துள்ள அல்ஹம்து அத்தியாயத்தையும் பிற அத்தியாயங்களையும் நம்மையறியாமலேயே ஓதிவிடுகிறோம். நாம் அவற்றை ஓதுகிறபோது அதன் ஒவ்வொரு வார்த்தைக்கும் பொருள் என்ன என்று யோசித்திருக்கிறோமா? பொருள் உணர்ந்து ஓதியுள்ளோமா? அல்லாஹ்வைப் புகழ்வதும் நமக்கான பிரார்த்தனையும் அல்ஹம்து அத்தியாயத்தில் உள்ளன. அவற்றை உணர்ந்து நாம் ஓதியுள்ளோமா? இல்லை என்பதே நம்முள் பெரும்பாலோரின் பதிலாகும்.

 

அதுபோலவே அதில் ஒவ்வொரு தடவையும் நாம் சொல்கிற ‘அல்லாஹு அக்பர்’ என்பதன் பொருள் உணர்ந்து சொல்லியுள்ளோமா? ருகூஉ, சஜ்தாவில் ஓதுகிற துதிச் சொற்களைப் பொருள் உணர்ந்து சொல்லியுள்ளோமா? தொழுகையின் இறுதியில் ஓதுகிற அத்தஹிய்யாத், தரூதே இப்ராஹீம், துஆ ஆகியவற்றைப் பொருள் உணர்ந்து ஓதியுள்ளோமா? எல்லாமே நாம் மனனம் செய்துவைத்துள்ளதால்  அவை அப்படியே, தானியங்கி இயந்திரம்போல் இயல்பாக ஓடிக்கொண்டே இருக்கின்றன. இறுதியில் ஸலாம் சொல்லித் தொழுகையை முடித்துவிடுகிறோம். ஆனால் நாம் தொழுத அந்தத் தொழுகை நமக்கு மனஅமைதியைத் தந்ததா? அதன்மூலம் நமக்கு முழுமையான நன்மை கிடைக்குமா என்றெல்லாம் நாம் சிந்திப்பதே இல்லை. 

 

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அம்மார் பின் யாசிர் அறிவித்துள்ளதாவது: ஒருவர் தமது தொழுகையை முடித்துக்கொண்டு (வீடு) திரும்புகிறார். அப்போது (தொழுததற்காகக் கிடைக்கும் நன்மையில்) பத்தில் ஒன்று, ஒன்பதில் ஒன்று, எட்டில் ஒன்று, ஏழில் ஒன்று, ஆறில் ஒன்று, ஐந்தில் ஒன்று, நான்கில் ஒன்று, மூன்றில் ஒன்று, பாதி இவற்(றில் ஒன்)றைத் தவிர வேறெதுவும் அவருக்கு எழுதப்படுவதில்லை. (அபூதாவூத்:, 796/ 675)

 

இந்த நபிமொழி நம் தொழுகையைக் குறித்து நம்மைச் சிந்திக்க வைக்கிறது. நாம் தொழுத தொழுகைக்கு நமக்கு முழுமையான நன்மை கிடைப்பதில்லை. காரணம், நாம் தொழுகின்றபோது நம் கவனம் முற்றிலுமாக அல்லாஹ்வை நோக்கியதாகவோ அவனைப் பற்றி மட்டுமே சிந்திப்பதாகவோ இருப்பதில்லை. நாம் என்ன ஓதுகிறோமோ அவற்றில் நம் கவனத்தைச் செலுத்துவதில்லை.  ஒவ்வொரு  தடவை நாம் கூறும் அல்லாஹு அக்பர் - அல்லாஹ் மிகப்பெரியவன் என்பதன் பொருள் என்ன, அவன் எவ்வளவு பெரியவன் என்பதையெல்லாம் நாம் சிந்திப்பதே இல்லை.

 

அதாவது ஒருவர் தாம் தொழும் தொழுகைக்கு அவரது கூரிய கவனம், இறையச்சம், மனஓர்மை ஆகியவற்றைப் பொருத்துதான் நன்மையைப் பெற முடியும். இவை இல்லாமல் தொழுதோர்  அவர்களின் நிற்றல், குனிதல், சிரம் பணிதல், அமர்தல் ஆகியவற்றிற்கான நன்மையை மட்டுமே பெறுகிறார்கள். அதன்படி அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தொழுதோரின் நன்மையைக் கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்திக்கொண்டே செல்கிறார்கள். பத்தில் ஒன்று என்பது நூற்றுக்குப் பத்து மதிப்பெண்கள்ஒன்பதில் ஒன்று என்பது நூற்றுக்குப் பதினொன்று சொச்சம் மதிப்பெண்கள்; எட்டில் ஒன்று என்பது நூற்றுக்கு 12.5 மதிப்பெண்கள்; ஏழில் ஒன்று என்பது நூற்றுக்குப் பதினான்கு சொச்சம் மதிப்பெண்கள் என்று பொருள். இப்படியே படிப்படியாகக் கூடி, மிகுந்த கவனக் குவிப்போடு தொழுதவர் பாதி நன்மையைப் பெறுகிறார். அதாவது நூற்றுக்கு ஐம்பது மதிப்பெண்கள். இதுதான் நம் கூரிய கவனத்திற்கும் கவனச் சிதறல்களுக்கும் இடையே உள்ள வித்தியாசம் ஆகும்.

 

பள்ளிவாசலில் சிலர் தொழுகின்றார்கள். அவர்களுடைய உடல் மட்டுமே அங்கே உள்ளது.  அவர்களின் உள்ளமோ உலகெல்லாம் உலா வந்துகொண்டிருக்கிறது. கூட்டுத் தொழுகையில் கலந்துகொண்டுள்ள அவர்கள், இமாம் என்ன ஓதுகிறார்; எத்தனை ரக்அத் தொழுவிக்கிறார்; இது எத்தனையாவது ரக்அத் என்பதையெல்லாம் அறிவதில்லை. அல்லாஹு அக்பர் என்றவுடன் குனிவது, நிமிர்வது, சிரம் பணிவது, அமர்வது என்று ஒன்றன்பின் ஒன்றாகச் செய்வது அல்லது பக்கத்திலுள்ளவர் செய்வதைப் போன்று செய்வது. இதுதான் பெரும்பாலோரின் நிலை. இத்தகையோரின் தொழுகையைக் குறித்துதான், “தொழுகையில் அறவே கவனம் இல்லாமலிருந்தால் அந்தத் தொழுகை அவன் முகத்திலேயே வீசியெறியப்படும்” என்று வேறொரு நபிமொழி கூறுகிறது. (அத்துர்ருல் மன்ளூத்)

 

தொழுகையில் நம் கவனத்தைச் சிதறடிக்கக்கூடிய பல்வேறு சாதனங்கள் இன்றைய செயற்கை நுண்ணறிவு உலகில் உள்ளன. பற்பல திரைப்படக் காட்சிகள், இசைகள், பாடல்கள், வியாபாரச் சிந்தனைகள், அலுவலகச் சிந்தனைகள், இஎம்ஐ கடன் தொல்லைகள் உள்ளிட்ட பல்வேறு குறுக்கீடுகள் உள்ளன. அதையெல்லாம் தாண்டித்தான் நாம் தொழ வேண்டியுள்ளது. பல்வேறு காட்சிகள் நிறைந்த இந்தக் காலத்திலும் கூரிய கவனத்துடனும் மனஓர்மையுடனும் இறையச்சத்துடனும் தொழுவோரே  பாதி நன்மையைப் பெறுகின்றனர்.                                            

அனஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் உருவப்படங்கள் பொறித்த திரைச் சீலை ஒன்று இருந்தது. அதனைக்கொண்டு வீட்டின் ஒரு பகுதி(யிலிருந்த அலமாரி)யை அவர்கள் மறைத்திருந்தார்கள். (அதை நோக்கித் தொழுத) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “இந்தத் திரைச் சீலையை நம்மிடமிருந்து அகற்றிவிடு! ஏனெனில் இதிலுள்ள உருவப்படங்கள் என் தொழுகையில் (என்னிடம்) குறுக்கிட்டுக்கொண்டேயிருக்கின்றன” என்று சொன்னார்கள். (புகாரீ: 374)

 

திரைப்படப் பாடல்களோ காட்சிகளோ இல்லாத நபியவர்களின் காலத்தில் ஒரே ஒரு திரைச்சீலையில் பொறிக்கப்பட்டிருந்த உருவப்படங்கள் அவர்களின் கவனத்தைத் திருப்புவதாக உணர்ந்தார்கள் என்றால் எந்த அளவுக்குத் தொழுகையில் மனஓர்மையை விரும்பியுள்ளார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். ஆனால் இன்று நாம் திரும்பும் திசையெங்கும் காட்சிகள், படங்கள், இசை ஆகியவற்றையே பார்க்கிறோம்; செவியுறுகின்றோம். அதையும் தாண்டி நம் கைகளிலேயே தவழ்ந்துகொண்டிருக்கிற அறிதிறன்பேசியில் நாம் காணும் காட்சிகள் ஏராளம். இதன்பிறகு நாம் தொழுகையில் நின்றால் நம்முடைய மனக்கண் என்ன தோன்றும்? இறைவனைப் பற்றிய சிந்தனையா, நாம் பார்த்த காட்சிகளின் பிம்பங்களா?

 

தொழுகையில் மட்டுமின்றிச் செய்யும் செயலில் மனத்தை ஒருமுகப்படுத்தி, கூர்ந்து கவனம் செலுத்துவோர் மற்றோரை வென்றுவிடுகின்றனர். திருக்குர்ஆன் மனனம் செய்யும் வகுப்பிலுள்ள இருபது மாணவர்களுள் சிலர் மட்டும் ஈராண்டுகளில் அதை மனனம் செய்துவிடுகின்றனர். அவர்களுள் சிலர் நான்காண்டுகளாகியும் மனனம் செய்து முடிப்பதில்லை. இது அவ்விரு சாராரின் நினைவாற்றலையும் கவனக் குவிப்பையும் வேறுபடுத்திக் காட்டுகிறது.

 

சாலையில் வாகனம் ஓட்டுவோருள் சிலர் பல ஆண்டுகளாக எந்த விபத்துமின்றி ஓட்டிவருகின்றனர். வேறு சிலர் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர். தம்முடைய நூறு சதவிகிதக் கவனத்தையும் சாலையில் செலுத்தி வாகனத்தை இயக்குவோர் விபத்தின்றிக் கடந்து சென்றுகொண்டிருக்கின்றனர். சாலையில் கவனத்தைச் சிதற விடுவோர் விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். பத்து, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவோர் பலர் ஒரே தடவையில் தேர்ச்சி பெற்றுவிடுகின்றனர். வேறு சிலர் விடுபட்ட பாடங்களை மீண்டும் மீண்டும் எழுதியும் தேக்கமடைகின்றனர். தம்முடைய முழுக் கவனத்தையும் பாடத்தில் செலுத்துவோர் வெற்றிபெறுகின்றனர்; கவனச் சிதறலுக்குள்ளானோர் தோல்வியடைகின்றனர்.

 

தள்ளுவண்டியில் வியாபாரத்தைத் தொடங்கி, பின்னர் சிறிதாக ஒரு கடையை வாடகைக்குப் பிடித்துகொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி இன்று நகரத்தில் மிகப்பெரிய வணிக வளாகத்தையே நடத்துகின்ற அளவுக்கு உயர்ந்திருக்கிறார் என்றால் அவர்தம் வியாபாரத்தில் செலுத்திய நூறு சதவிகிதக் கவனம், உழைப்பு, தன்முனைப்பு ஆகியவையே ஆகும். ஆக ஒவ்வொரு துறையிலும் செயலாற்றுகின்ற அனைவரின் நிலையும் இதுதான். அவர்களுள் மிகுந்த கவனத்தோடும் தன்முனைப்போடும் செயல்படுவோர் வெற்றியடைகின்றனர்; எடுத்துக்கொண்ட செயலில் முழுமையான கவனம் செலுத்தாதோர் தோல்வியடைகின்றனர்; அல்லது பின்தங்கியே இருக்கின்றனர்.

 

எனவே நம்முடைய செயல்பாடுகளில் வெற்றியடைய வேண்டுமெனில் ஆழ்ந்த கவனம் செலுத்துவதோடு தன்முனைப்போடும் செயல்பட வேண்டும். அது தொழுகையானாலும் தொழிலானாலும் சரியே! தொழுகின்ற நேரத்தில் அதில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்; தொழில்  செய்கின்றபோது அதில் மட்டும் முனைப்போடு ஈடுபட வேண்டும். அதுதான் நமக்கு வெற்றியைத் தரும். அவ்வாறு ஈடுபட்டால்தான் முழுமையான நன்மையையும் இலாபத்தையும் பெற முடியும்.

=====================







கருத்துகள் இல்லை: