சனி, 6 செப்டம்பர், 2025

கூட்டு வியாபாரம்-இஸ்லாமிய வங்கி

  

     

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

இமாம் மதீனா பள்ளிவாசல், பட்டினம்பாக்கம் சென்னை-28  

 


 இஸ்லாத்தின் பார்வையில் கூட்டு வியாபாரம் (Partnership Business) என்பது "முஷாரகா’ என்ற ஆக்கப்பூர்வமான வடிவத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியப் பொருளாதாரக் கொள்கையின் அடிப்படையில், கூட்டு வியாபாரம் சில நிபந்தனைகளுக்கும் நெறிமுறைகளுக்கும் உட்பட்டது.

 

 முஷாரகா என்றால் என்ன?: முஷாரகா என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டோர் அல்லது நிறுவனங்கள் ஒன்றாக முதலீடு செய்து, இலாபத்தையும் இழப்பையும் ஓர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் பகிர்ந்து கொள்ளும் வியாபார வடிவம் ஆகும்.

 

முஷாரகா எனும் கூட்டு வியாபாரத்தில் ஈடுபடுவோர் நியாயமாகவும் நேர்மையாகவும் ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும். ஒவ்வொருவரின் முதலீடும் தெளிவாக இருக்க வேண்டும். ஒப்பந்தம் எழுத்துப்பூர்வமாக இருக்க வேண்டும். அனைத்துப் பங்காளிகளும் எவ்வளவு இலாபத்தை எதிர்பார்க்கிறார்கள் என்பதை ஒப்பந்தத்தில் வரையறுக்க வேண்டும்.

 

இலாபப் பங்கீடு (Profit Sharing): முதலீட்டின் அடிப்படையில் அல்லது இருவரும் ஏற்றுக்கொள்ளும் விகிதத்தில் இலாபம் பகிர்ந்துகொள்ளப்படும். ஆனால், உத்தரவாத இலாபம் (Guaranteed Profit) என்பது ஹராம் ஆகும். அதாவது வருகின்ற இலாபத்தில் இவ்வளவு ரூபாய் எனக்குக் கொடுத்துவிட வேண்டும் என்று யாரும் நிபந்தனை விதிக்க முடியாது.

 

இழப்புப் பங்கீடு (Loss Sharing): ஒருவேளை கூட்டு வியாபாரத்தில் எதிர்பாரா விதமாக இழப்பு ஏற்பட்டுவிட்டால், முதலீட்டின் விகிதத்துக்கு ஏற்ப இழப்பு பங்காளிகள் மத்தியில் பகிரப்படும். ஒருவரே எல்லா இழப்புகளையும் ஏற்க முடியாது; அது நீதியுமன்று.

 

ஹலால் வியாபாரம்: கூட்டுவியாபாரத்தில் ஈடுபடுவோர் இஸ்லாத்தின் சட்டங்களுக்கு எதிரான வியாபாரங்களில் ஈடுபடக் கூடாது. சான்றாக மதுவிற்பனை, சூதாட்டம், வட்டி சம்பந்தப்பட்ட தொழில்கள் போன்றவற்றில் ஈடுபடக்கூடாது. அது முற்றிலும் ஹராம் ஆகும். மாறாக ஹலாலான வியாபாரங்களில் மட்டுமே ஈடுபட வேண்டும். 

 

நம்பகத்தன்மை (அமானத்) முக்கியம்: ஒவ்வொரு பங்காளியும் நேர்மையோடும் நம்பகத்தன்மையோடும் பொறுப்புணர்வோடும் செயல்பட வேண்டும்.  குறிப்பாக இறையச்சத்தோடு இதில் ஈடுபட வேண்டும்.

 

முஷாரகாவின் அடிப்படையில் வியாபாரம்: நால்வர் ஒன்றாகச் சேர்ந்து ஒவ்வொருவரும் இரண்டு இலட்சம் எனச் சமமான தொகையை முதலீடாகப் போட்டு, கேஎஃப்சி மாதிரி ஒரு சிக்கன் கடை தொடங்கினார்கள். நால்வரும் மிகுந்த ஆர்வத்தோடு அத்தொழிலைச் செய்துவந்தார்கள். ஆண்டின் இறுதியில் இலாபத்தைக் கணக்கிட்டார்கள். அதை நான்கு பங்காகப் பிரித்து தலா ஒவ்வொரு பங்கை எடுத்துக்கொண்டார்கள். இதுதான் கூட்டு வியாபாரத்தின் பயன்.

 

அதன்பின் அந்நால்வரும் ஒன்றாகச் சேர்ந்து ஈட்டிய இலாபத்தில் நடுத்தரமான நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்து, அதில் கூட்டாக முதலீடு செய்தார்கள். ஈராண்டுகள் கழித்து அதில் கிடைத்த இலாபத்தைச் சமமாகப் பங்கிட்டுக் கொண்டார்கள். பின்னர் இஸ்லாமிய வங்கிகளில் கூட்டாக முதலீடு செய்தார்கள். அதில் ஓராண்டின் இறுதியில்  கிடைத்த தொகையைச் சமமாகப் பங்கிட்டுக்கொண்டார்கள். இவ்வாறு நால்வர் சேர்ந்து, இணைந்து தொடங்கிய ஒரு தொழில் வளர்ந்து பல்வேறு தளங்களில் முதலீடு செய்யுமளவிற்கு வளரலாம். இது கூட்டு முயற்சிக்குக் கிடைக்கும் வெற்றி எனலாம்.

 

இஸ்லாமிய வங்கி முறை: இது, பாரம்பரிய வங்கியியலிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு சமூகப் பொருளாதார அமைப்பாகும். இது வட்டி (interest) அடிப்படையிலான பணப் பரிமாற்றத்தை முற்றிலும் தவிர்த்து, இலாபப்பகிர்வு (profit-sharing) மற்றும் நேரடி முதலீட்டு முறைமைகளைப் பயன்படுத்துகிறது. இம்முறை இஸ்லாமிய ஷரீஅத் சட்டத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால், இது நியாயமானதொரு பொருளாதார மாற்றாகவும், சமூக நலனைப் பாதுகாக்கும் நடைமுறையாகவும் திகழ்கிறது.

 

இஸ்லாமிய வங்கியின் செயல்பாடு: இஸ்லாமிய வங்கிகள் பொதுமக்களிடமிருந்து பெறும் முதலீட்டு நிதியை, ‘முளாரபா’ எனப்படும் கூட்டாண்மை வணிக ஒப்பந்தத்தின் அடிப்படையில் வாங்குகின்றன. இதில் முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை வங்கிக்கே ஒப்படைக்கின்றனர். வங்கி, அந்த நிதியைத் தொழில், வர்த்தகம் அல்லது சொத்துப் பரிமாற்றம் போன்ற முறைகளில் முதலீடு செய்து இலாபத்தை ஈட்டுகிறது.

 

இது தவிர, வங்கியின் வெற்றியும், நட்டமும் முதலீட்டாளர்களுடன் பகிர்ந்துகொள்ளப்படும். எனவே வட்டி விகிதம் என்ற உறுதியான தொகை இல்லாமல், உண்மையான வருமான அடிப்படையில் இலாபம் பகிர்ந்துகொடுக்கப்படும். இந்த முறையில் இலாபம் அதிகமாக இருந்தால், முதலீட்டாளருக்கு அதிக வருவாய் கிடைக்கும். குறைவாக இருந்தால், அவர் பெற்ற தொகையும் குறைவாகவே இருக்கும். ஒருவேளை நட்டம் ஏற்பட்டால், முதலீட்டாளருக்கும் அது உரிய பங்காகப் பகிரப்படும். இது ஒரு நெகிழ்வான முறைமையாக இருக்கின்றது. வங்கியில் வட்டியைப் பெறுவதைவிட இது மிகவும் நியாயமானது, ஏனெனில் இது ஒருவரின் நிலையான வருமானத்திற்காக மட்டும் பாடுபடுகிறதே தவிர மற்றொருவருக்கு நட்டத்தை ஏற்படுத்த முனைவதில்லை.

 

இஸ்லாமிய வங்கி எங்கு உள்ளது?: இஸ்லாமிய வங்கிகள் பெரும்பாலும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள நாடுகளில் பரவலாக இயங்கி வருகின்றன. சவூதி அரேபியா, மலேசியா, இந்தோனேசியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இவை வழக்கமான வங்கி முறையாகவே செயல்படுகின்றன. இந்தியாவை எடுத்துக்கொண்டால், இஸ்லாமிய வங்கிக்கு முழுமையான அரசு அனுமதி இன்னும் கிடைக்கவில்லை. ஆனால் இஸ்லாமிய வங்கி அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இஸ்லாமியக் கூட்டுறவு வங்கிகள் (ஜன்சேவா கோ-ஆப்ரேட்டிவ் க்ரெடிட் சொசைட்டி) தற்போது இந்தியாவின் பல இடங்களில் இயங்கிக்கொண்டிருக்கின்றன. அது மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவருகிறது.

 

இந்தியா முழுவதும் தற்போது முப்பதுக்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன, தமிழ்நாட்டின் முக்கிய இஸ்லாமிய நகரங்களான வாணியம்பாடி, திருநெல்வேலி, காயல்பட்டணம், மதுரை, லால்பேட்டை, நாகர்கோயில், இராமநாதபுரம் ஆகிய இடங்களில் கிளைகள் உள்ளன. மேலும் சென்னையின் திருவல்லிக்கேணி பகுதியில் ஒரு கிளை செயல்பட்டு வருகிறது. சென்னையிலுள்ளோர் அங்குச் சென்று வங்கிக் கணக்கைத் தொடங்கலாம். மேலும் தகவலுக்கு 9840550709 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அதன் வலைப்பக்க முகவரி: www.janseva.in

 

ஃபிக்ஹ் சட்ட அடிப்படை - முளாரபா: இஸ்லாமிய வங்கி முறை முளாரபா எனும் ஃபிக்ஹ் (இஸ்லாமியச் சட்டம்) அடிப்படையில் இயங்குகிறது. இதில் இரண்டு முக்கியமான தரப்புகள் உள்ளன. முதலீட்டாளர் (Rabbul-Maal) என்பவர் பணம் கொடுப்பவர். முதலீட்டுப் பயனாளர் (Mudarib) என்பவர் பணத்தைக் கொண்டு வியாபாரம் செய்பவர். முதலீட்டாளர், தமது பணத்தை ஒப்பந்தத்தின் அடிப்படையில் மற்றொருவரிடம் கொடுக்கிறார். முதலீட்டுப் பயனாளர் அந்தப் பணத்தில் தொழில் செய்து வருமானம் ஈட்டுகிறார். இலாபத்தில், ஒப்பந்தத்தின்படி ஒரு பங்கை முதலீட்டாளருக்கு வழங்குகிறார். இதில் பணம் கொடுப்பவர் வியாபாரத்தில் நேரடியாக ஈடுபடுவதில்லை, ஆனால் இலாபத்தில் பங்கு பெறுகிறார். நட்டமடைந்தால், அவருடைய முதலீட்டில் ஒரு பங்கு குறையும்.

 

வட்டி இல்லா வணிகம்: இஸ்லாமிய வங்கியின் ஒரு முக்கியமான நோக்கம் - வட்டியை முற்றிலும் தவிர்ப்பதே ஆகும். இது நேரடியாகத் திருக்குர்ஆனின் கட்டளையைப் பின்பற்றுவதாகும். “அல்லாஹ் வியாபாரத்தை ஆகுமாக்கி, வட்டியைத் தடை செய்துள்ளான்.”  (அல்குர்ஆன் 2: 275) இதன்படி, வட்டி அடிப்படையில் கிடைக்கும் வருவாயை இஸ்லாம் சட்ட விரோதமாகக் கருதுகிறது. எனவே, இஸ்லாமிய வங்கி முறையில் வட்டி இல்லை; அதன் மாற்றாக இலாபப் பகிர்வு மட்டுமே உள்ளது.

 

ஏன் இதனைப் பயன்படுத்த வேண்டும்?: இஸ்லாமிய வங்கி முறை நியாயமானது; சமுதாயத்தில் சமூக நலனையும் பொருளாதார நலனையும் கட்டியெழுப்புகிறது; வட்டி எனும் அநீதியான சூழ்நிலைகளிலிருந்து பாதுகாக்கிறது; இலாபத்தில் பங்கு கொடுக்கின்றது. இத்தனை நன்மைகள் உள்ளபோதும், நாம் இதைப் பயன்பாட்டில் கொண்டுவராமல் இருப்பது ஏன்? முஸ்லிம்கள் மட்டுமின்றி, நியாயமான, மாறுபட்ட முதலீட்டு வாய்ப்புகளை நாடும் யாரும் இதைப் பயன்படுத்த முடியும். பயன்படுத்தியும் வருகின்றார்கள் என்பதே நிதர்சன உண்மை.

 

முடிவு: இஸ்லாமிய வங்கி முறை என்பது நவீனக் காலத்திலும் இஸ்லாமியச் சட்டத்தைப் பின்பற்றும் வகையில் பொருளாதார வளர்ச்சியையும் நலனையும் இலக்காகக் கொண்ட ஒரு முறையாகும். இது வட்டி இல்லாததுடன், நெகிழ்வான, நியாயமான வணிக முறைமையாக இருப்பதால், நம்மைப் பொருளாதாரச் சுமைகளிலிருந்து விடுவிக்கக் கூடியதாகும். இம்முறையை இன்னும் விரிவாக அறிந்து, பயன்படுத்திக் கொள்ளும்போது நம் சமூகத்தின் வளர்ச்சிக்கு இது ஒரு வலிமையான அடித்தளம் ஆகும்.

================================







கருத்துகள் இல்லை: