செவ்வாய், 16 செப்டம்பர், 2025

தீர விசாரிப்பதே மெய்...

 

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

இமாம் மதீனா பள்ளிவாசல், பட்டினம்பாக்கம் சென்னை-28   

செயற்கை நுண்ணறிவால் (ஆர்ட்டிஃபிசியல் இன்டலிஜென்ஸ்-ஏஐ) இயங்கக்கூடிய மாய உலகில் நாம் தற்போது வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இங்கு நாம் பார்க்கும் காணொலிகள், படங்கள், குரல்கள் ஆகியவற்றுள் பெரும்பாலானவை பொய்யானவை ஆகும். இவ்வுலகில் பொய் குறித்து எச்சரிக்காதோர் இல்லை. அறிஞர்கள், முன்னோர்கள், தீர்க்கதரிசிகள் அனைவரும் பொய் குறித்து எச்சரிக்கை செய்துள்ளனர். அந்த வகையில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் பொய் குறித்து எச்சரிக்கை செய்துள்ளார்கள்.

 

மனிதர்களை ஏமாற்றிப் பிழைப்போர் மிகுந்த காலமிது. எவ்வளவுதான் எச்சரிக்கையாக இருந்தாலும் எப்படியாவது நம்மை ஏமாற்றிவிடுகின்றார்கள். படித்தவர்களே பல தடவை ஏமாறியிருக்கின்றார்கள்; தாம் பாடுபட்டுச் சேமித்த பணத்தை இழந்திருக்கின்றார்கள். நாம் ஏதேனும் பொருள் வாங்குவதாக நம் நண்பர்களிடம் பேசியிருப்போம்; ஆலோசனை செய்திருப்போம். அல்லது நாம் குறிப்பிட்ட ஒரு பாடத்தைப் படிக்கப்போவதாக நம் நண்பர்களிடம், உறவினர்களிடம், பெற்றோரிடம் சொல்லியிருப்போம். அல்லது குறிப்பிட்ட வேலைக்கு விண்ணப்பம் செய்திருப்போம். அதை எப்படியோ தெரிந்துகொண்டு அதற்குத் தோதுவாகச் சில இணைப்புகளை நம்முடைய செல்பேசிக்கு அனுப்பி, நீங்கள் விரும்பிய பொருளைக் குறைந்த விலையில் வாங்க, நீங்கள் விரும்பிய பாடத்தைக் குறைந்த கட்டணத்தில் படிக்க, நீங்கள் இந்த வேலையைப் பெற இங்கு க்ளிக் செய்யுங்கள் என்று சொல்லியிருப்பார்கள். அதை நாம் தொட்டுவிட்டால் அவ்வளவுதான். உள்ளே சென்றவுடன் நாம் அவர்களுடைய அடிமையைப் போல் அவர்கள் சொன்னதையெல்லாம் செய்வோம். கடைசியில் நாம் நம் பணத்தை இழப்போம். இதுதான் இன்றைய ஏமாற்றுக்காரர்களின் மிக எளிமையான தந்திரம்.

 

காணொலிகளை உருவாக்குதல்: இன்றைய இளம் தலைமுறையினர் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்திப் பல்வேறு முன்னேற்றங்களை அடைகின்றார்கள்; மிக எளிதாகத் தம் செயல்திட்டங்களைச் செய்துமுடிக்கின்றார்கள் என்பது வரவேற்புக்குரியது.  ஆனால் மக்களை ஏமாற்றுவதற்காகவே எங்கோ ஓரிடத்தில் அமர்ந்துகொண்டு இந்தச் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி வருகின்றார்கள் சிலர். அவர்களிடம்தான் நாம் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இன்று நாம் காணுகின்ற காணொலிகள் பல உண்மைக்கு முரணானவை. யானை, குதிரை, சிங்கம் போன்ற விலங்குகள்  மிதிவண்டி ஓட்டுவதைப் போல காணொலிகள் புலனத்தில் (வாட்ஸ்அப்) வலம் வந்தன. பார்த்தோர் சிரித்துவிட்டு, நகர்ந்துவிட்டனர். காரணம் இதெல்லாம் சாத்தியமற்றது; ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கியிருக்கின்றார்கள் என்பதைப் புரிந்துகொண்டு கடந்துசென்று விடுகின்றார்கள். ஆனால் அந்தத் தொழில்நுட்பத்தை வேறு பல கோணங்களில் பயன்படுத்தி காணொலிகளை உருவாக்கி வருகின்றனர். அத்தகைய காணொலிகளை நாம் இனம் காண முடியாது.

 

ஏமாற்றுக்காரர்கள் உருவாக்கக்கூடிய காணொலிகள் நம்மை மிக எளிதாக ஏமாறச் செய்துவிடும். சான்றாக அதில் பேசுபவர் மிகப்பெரும் தொழிலதிபராக இருப்பார். அவர் பொய் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்பது நமக்கும் தெரியும். எனவே அவர்தாம் பேசுகிறார் என்று நம்பிவிடுவோம். “என்னுடைய நிறுவனத்தின் பங்குகளை விற்பதாக உள்ளேன். அதன் பங்குகளை வாங்குவதன்மூலம் அதில் நீங்களும் பங்குதாரர் ஆகலாம். ஒரு பங்கின் விலை இவ்வளவு, நீங்கள் எத்தனைப் பங்குகளை வாங்க விரும்புகிறீர்களோ அத்தனைப் பங்குகளை வாங்கிக்கொள்ளலாம். நீங்கள் பணம் செலுத்த வேண்டிய வங்கிக் கணக்கு எண் இதோ கீழே தரப்பட்டுள்ளது” என்று அவர் அந்தக் காணொலியில் பேசுவார். ஆனால் அந்தக் காணொலி ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அவரது குரலில் உருவாக்கப்பட்டது என்பதைப் பலர் அறிய மாட்டார்கள். அதனால் அதில் பணத்தைச் செலுத்தி ஏமாறுவார்கள்.

 

அதாவது அந்தக் காணொலி எவ்வாறு உருவாக்கப்படுகிறதென்றால், அவர் எங்கோ பேசிய காணொலிக் காட்சியின் ஒளிப்படக் காட்சியை மட்டும் எடுத்து வைத்துக்கொண்டு, அதன் பின்னணியில் அவர்கள்  விரும்புவதைச் சேர்த்துவிடுவார்கள். அவரது குரலில் பேசுவதற்கு, அதற்கென உள்ள செயலியில் (ஆப்) அவரது குரலைப் பதிவு செய்துவிட்டால், நாம் கொடுக்கின்ற வாக்கியங்களை அவரது குரலில் பதிவு செய்து தந்துவிடும். பின்னர் அவ்விரண்டையும் இணைத்து ஒரு காணொலியை மிக எளிதாக உருவாக்கிவிடுவார்கள். பின்னர் அதைச் சமூக ஊடகங்களில் உலாவ விடுவார்கள். அதைக் காணுகின்ற பலர் அதை உண்மையென நம்பித் தம் பணத்தைச் செலுத்தத் தொடங்குவார்கள். இறுதியில்தான் தாம் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பதை அவர்கள் அறிவார்கள்.

          

படங்களைப் பேச வைத்தல்: கடந்த கால அல்லது நிகழ்காலப் படம் ஒன்றைப் பதிவேற்றம் செய்து, அதிலுள்ளவரைப் பேசுமாறு செய்யலாம். அந்த அடிப்படையில் இறந்துபோன நம்முடைய பெற்றோர், முன்னோர்மூத்த தலைவர்கள் ஆகியோரைப் பேச வைக்கலாம். இவ்வாறு செய்யும்போது யாராவது மூத்த அறிஞர் ஒருவரை ஏதாவது முக்கிய விஷயங்களைப் பேசவைத்து, யூடியூபில் பதிவேற்றம் செய்துவிட்டால் பிற்காலத்தில் அந்தக் காணொலியைக் காணுகின்றவர்கள், ஏதேனும் தகவலைத் தேடுகிறபோது அந்தக் காணொலி தென்பட்டு, அதில் சொல்லப்படுகிற தவறான தகவலைக்கூட உண்மையென நம்பி வழிகெடும் நிலை உண்டாகலாம். எனவே காணொலி குறித்து மிகுந்த எச்சரிக்கை வேண்டும். மேலும் பேச இயலாதவரின் நிழற்படத்தைப் பதிவேற்றம் செய்து, அதைப் பேசுமாறு உருவாக்கி, அவர் இயல்பாகப் பேசக்கூடியவர்தாம் என்று பிறரை நம்ப வைக்கலாம்.

 

உருவங்களை மாற்றுதல்: இது தொன்றுதொட்டு இருந்து வருகிற ஒரு பழக்கம்தான். இறைவன் படைத்த உருவங்களை மனிதன் தன் மனத்தில் தோன்றும் கற்பனைத்திறனுக்கேற்ப மாற்றியமைக்கிறான். முற்கால மனிதன், கடவுள் என்றால் மனிதனைப் போன்று இருக்கக்கூடாது. அவர் மனிதனைவிட வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று நினைத்தான். எனவே கடவுளுக்குப் பத்துத் தலைகள் இருபது கைகள் எனக் கற்பனை செய்து, அத்தகைய ஒரு தோற்றத்தை உருவாக்கி, அதற்கு ‘இராவணன்’ எனப் பெயரிட்டான். அது போலவே ஆறு தலைகளை உடைய கடவுளுக்கு ‘ஆறுமுகம்’ எனப் பெயரிட்டான். மேலும் வெட்டி ஒட்டும் கலையின் அடிப்படையில் மனிதனுக்கு யானைத் தலையை வெட்டி, ஒட்டி அதற்கு ‘விநாயகர்’ என்று பெயரிட்டான்.

 

வெட்டி, ஒட்டும் தொழில்நுட்பம்தான் இன்று பரவலாகக் காணப்படுகிறது. மனிதத் தலையை வெட்டி எடுத்துவிட்டு, அவ்விடத்தில் வேறொரு மனிதனின் தலையை ஒட்டிவிடுகிறான். அரசியல் தலைவர்களை, நடிகர்களை, பிரபலமானவர்களைக் கேலி கிண்டல் செய்வதற்காக இவ்வாறு உருவங்களை மாற்றியமைக்கிறார்கள்.   மனித உருவங்களைச் சிதைத்து புதிய புதிய உருவங்களை உருவாக்குகிறார்கள். இதை ‘மார்ஃபிங்’ என்று அழைக்கிறார்கள். ஆனால் அதையும் தாண்டி, சமூக ஊடகங்களில் பதிவிடப்படுகிற அழகிய முகங்களை உடைய பெண்களின் நிழற்படங்களைச் சேர்த்து, அவற்றிலுள்ள தலைகளை மட்டும் வெட்டியெடுத்து நிர்வாணப் பெண்களின் உடலில் வைத்து, புதிய புதிய படங்களை உருவாக்கி, அவற்றை அதற்கென உள்ள  இணையதளங்களில் விற்பனை செய்துவிடுகின்றார்கள். எனவே சமூக ஊடகங்களில் தம்முடைய நிழற்படத்தைப்  பதிவேற்றம் செய்கின்ற பெண்கள் அதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

 

மேலும் ஆணின் படத்தைப் பெண்ணைப் போலவும் பெண்ணின் படத்தை ஆணைப் போலவும் உருமாற்றம் செய்கின்றார்கள். இவ்வாறு உருமாற்றம் செய்வது ஷைத்தானின் செயலாகும். அவன் அல்லாஹ்விடம் அறைகூவல் விட்டு வந்துள்ளான். “நிச்சயமாக நான் அவர்களை வழிகெடுப்பேன். அவர்களுக்கு வீண் நம்பிக்கைகளை உண்டு பண்ணி (பிசாசுகளுக்காக பிரார்த்தனை செய்து விடப்பட்ட) ஆடு, மாடுகளின் காதுகளை அறுத்து விடும்படியும் அவர்களை ஏவுவேன். அல்லாஹ்வின் படைப்பினங்(களின் தோற்றங்)களை மாற்றும் படியாகவும் நிச்சயமாக நான் அவர்களை ஏவுவேன்'' (என்று கூறினான்.) ஆகவே, அல்லாஹ்வையன்றி (இத்தகைய) ஷைத்தானை (தனக்கு)ப் பாதுகாவலனாக எடுத்துக்கொண்டவன் பகிரங்கமான நஷ்டத்தை அடைந்துவிட்டான். (4: 119)

 

பழையதைப் புதிதாக மாற்றுதல்: புதிய படங்களைப் பழையதாக மாற்றுதல், பழைய படங்களைப் புதிதாக மாற்றுதல் ஆகிய இரண்டு வகையான தொழில்நுட்பங்களும் தற்காலத்தில் உள்ளன. நம்முடைய மூதாதையரின்  பழைய நிழற்படத்தைப் புதிதுபோல் மாற்றியமைத்துக்கொள்ள முடியும். புதிய நிழற்படங்களைப் பழையதைப் போல் மாற்றியமைத்துக்கொள்ளவும் முடியும். இதைச் சாதாரணமாகச் செய்துகொள்வதில் எந்தச் சிக்கலும் இல்லை. ஆனால் குறுமதிகொண்ட மனிதன், குறுக்கு வழியில் சம்பாதிக்க நினைக்கிறான். எனவே சொத்துப் பத்திரம் ஒன்றைப் பழையதைப்போல் உருவாக்கி, இந்த இடம் என்னுடையதுதான் என்று சொல்லி, யாரோ ஒருவரிடம் விற்றுவிடுகிறான். அந்நிலத்தை வாங்கியவன் பிற்காலத்தில் தான் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்பதை உணர்கிறான்.  ஆகவே சொத்து வாங்குவோர் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டியது கட்டாயமாகும்.

 

பிறரைப் போலப் பேசுதல்: குரலை மாற்றிப் பிறர் பேசுவதைப்போல் பேசுவதை இன்று ஒரு கலைத்திறனாகக் காண்கின்றார்கள். அக்கலையில் ஈடுபடுவோருக்கு ‘மிமிக்ரி ஆர்டிஸ்ட்’ (பல குரலில் பேசுபவர்) என்று பெயர்சூட்டியுள்ளார்கள். அக்கலையில் தேர்ச்சி பெற்றோருக்குப் ‘பல குரல் மன்னன்’ என்று பட்டமும் கொடுக்கின்றார்கள். அத்தகையோர் மேடைகளில் மக்கள் முன்னிலையில் பல குரல்களில் பேசுகிறபோது அதைக் கேட்டு அவர்கள் இரசித்துவிட்டுச் சென்றுவிடுவார்கள். அதில் சிக்கல் ஏதும் இல்லை. ஆனால் குயுக்திகொண்ட மனிதர்கள் சிலர் மக்களை ஏமாற்ற இக்கலையைப் பயன்படுத்துகின்றார்கள். அதுதான் ஆபத்தானது.

 

அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறியதாவது: நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களிடம் ஒரு மனிதரைப் போல (ஏளனமாக) நடித்துக் காட்டிப் பேசினேன். அப்போது நபி  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “எனக்கு இன்னின்ன (செல்வங்கள்) கிடைக்கும் என்றிருந்தாலும் ஒரு மனிதரைப் போல (ஏளனமாக) நடித்துக் காட்டிப் பேசுவதை நான் விரும்பமாட்டேன்” என்று கூறினார்கள். (அபூதாவூத்: 4875/ 4232)

 

இன்று பெரும்பாலான தகவல் பரிமாற்றங்கள் புலனத்தில் (வாட்ஸ்அப்) நடைபெறுகின்றன. நமக்கு நெருங்கிய நண்பர் அல்லது உறவினரின் குரலில், “எனக்கு அவசரமாக இவ்வளவு தொகை வேண்டும்; உடனடியாக ஜீ-பே மூலம் இந்த எண்ணுக்கு அனுப்பு; என்னுடைய செல்லுக்குத் தொடர்புகொள்ள வேண்டாம். என்னுடைய செல் சார்ஜ் இல்லாமல் அணைந்துவிட்டது” என்று நமக்கு ஒரு குரல் பதிவு வரும். அதைக் கேட்கின்ற நாம், நண்பர் ஏதோ அவசரத்தில் இருக்கிறார்போலும் என நினைத்துக்கொண்டு அதில் குறிப்பிடப்பெற்ற தொகையை அந்த எண்ணுக்கு அனுப்பிவைப்போம். பிறகு நேரடியாக நண்பரைச் சந்திக்கின்றபோது நடந்ததைச் சொல்வோம். அவர் அதை மறுப்பார். பிறகு நாம் அந்தக் குரல் பதிவை அவருக்குக் காட்டுவோம். இறுதியில் நாம் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பதை உணர்வோம்.

 

அந்தக் குரல் பதிவில் ‘என்னுடைய செல்லுக்குத் தொடர்புகொள்ள வேண்டாம்’ என்று இருந்தாலும் நாம்  ஒரு தடவை நம்முடைய நண்பரைத் தொடர்புகொண்டு விசாரிக்க முயல வேண்டும். அவ்வாறு தொடர்புகொண்டிருந்தால் நமக்கு உண்மை புலப்பட்டிருக்கும். ஆனால் செய்தியைக் கேட்டவுடன் பதற்றமடைகிற நாம், உடனடியாகப் பணத்தை அனுப்பிவிடுவதால்தான் இத்தகைய ஏமாற்றத்தை அனுபவிக்கிறோம். இவ்வாறு பற்பல வகைகளில் ஏமாற்றுவோர் நம்மைச் சுற்றி உள்ளனர்.  எனவே நாம் மிகுந்த எச்சரிக்கையோடு நடைபோட வேண்டும்.

 

இந்த ஏஐ தொழில்நுட்பம் மனிதர்கள் தம் செயல்திட்டங்களை மிக எளிதில் செய்துகொள்ள வேண்டும் எனும் உயரிய நோக்கில்தான் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் குறுக்குப் புத்தியுடையோர் இதை வைத்து மனிதர்களை எவ்வாறு ஏமாற்றலாம் என்று யோசித்து, அதற்கான வேலைகளைச் செய்துவருகின்றார்கள். எனவே நாம் மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் இருப்பதோடு நம்மைச் சார்ந்தவர்களையும் எச்சரிக்கை செய்ய வேண்டும். எந்த விஷயமாக இருந்தாலும் உடனடியாக நம்பிவிடாமல், சற்று ஆழ்ந்து சிந்தித்து, தெரிந்தவர்களிடம் ஆலோசனை செய்து, தீர விசாரித்து முடிவெடுக்க வேண்டும். எதையும் வாங்குவதானாலும் கொடுப்பதானாலும் பணத்தைச்  செலுத்துவதானாலும் நிதானம் தேவை; ஆலோசனை அவசியம் தேவை. அதுவே நம்மை ஏமாற்றத்திலிருந்து தடுக்கும்.

====================================











கருத்துகள் இல்லை: