செவ்வாய், 24 டிசம்பர், 2024

தொடர்: 4 விடாமுயற்சியின் வெற்றிக்கனி (குறுநாவல்)

 


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி

 

இவ்வாறு நற்பணிகள் பலவும் செய்துகொண்டிருந்த அஹத் இமாமிடம் ஒருவர், “நீங்க பிஎச்.டி. பட்டம் பெற்றிருந்தும் ஏன் கல்லூரிப் பேராசிரியராகச் செல்லவில்லை?” என்று கேட்டார். நான் இமாமாகவும் மொழிபெயர்ப்பாளராகவுமே நீண்ட காலம் இருந்துட்டேன்; அதனால் அது பற்றி யோசிக்கல. இருந்தாலும் புதுக் கல்லூரிக்கு இரண்டு தடவை நேர்காணலுக்குச் சென்றிருக்கிறேன். அப்போது என்னைவிட வயதில் மூத்தவங்களெ தேர்வு செய்துட்டாங்க; அதன்பிறகு நான் அதற்காக எந்த முயற்சியும் எடுக்கலஎன்றார்.

 

இப்ப போங்க இமாம் ஸாப். இப்போது புதிதாக அறிவிப்பு வந்திருக்கு. அரபுப் பேராசிரியர் பணிக்கு ஆள் தேவைப்படுகிறதாம்என்று அவர்மீது அன்புகொண்ட ஒருவர் சொன்னார். அச்சமயத்தில் கொரோனா தீநுண்மி பரவி, அடங்கியிருந்த காலம். அதனால் பள்ளிவாசல் பணியிலிருந்து விடைபெற்றுச் சென்றுவிட்டார். குறிப்பிட்ட நாளில் இன்டர்வியூ செல்லத் தயாரானார். தமது இரு சக்கர வாகனத்தை ஓங்கி உதைத்து, ஓடச் செய்ய முயன்றார். அச்சமயம் பார்த்து அது ஓட மறுத்துவிட்டது. அதனால் ஆட்டோ ஒன்றில் ஏறி, புதுக்கல்லூரியை அடைய சற்றுத் தாமதமாகிவிட்டது. முதலில் வந்தோர் தம் வருகையைப் பதிவுசெய்துவிட்டனர். பின்னர் இவர் சென்று, தம் வருகையைப் பதிவுசெய்துகொள்ளும்படி கூறினார்.

 

அதெல்லாம் தேவையில்லை; இதோ அவர்களோடு சேர்ந்து அமருங்கள்; ஒவ்வொருவராக அழைப்பார்கள்என்றார் அங்கிருந்த அலுவலகப் பணியாளர். சரியென அவர்களோடு அமர்ந்துவிட்டார். அவர்களுள் ஒவ்வொருவரும் முறைப்படி அழைக்கப்பட்டார்கள். ஆனால் வெகுநேரமாகியும் அவரது பெயர் மட்டும் அழைக்கப்படவே இல்லை.

 

என்னங்க, வெகுநேரமாகியும் எனது பெயர் மட்டும் அழைக்கப்படவே இல்லை?” என்று எழுந்து சென்று அந்த அலுவலகப் பணியாளரிடம் கேட்டபோது, அவர் உள்ளே சென்று, “இன்னும் ஒரு கேண்டிடேட் இருக்கிறார்என்று சொன்னார். சரி அவரை உடனடியாக உள்ளே வரச்சொல்லுங்கஎன்று சொல்ல, அதன்பின் உள்ளே சென்றார். இன்டர்வியூ நடைபெற்றது. அவர்கள் கேட்ட வினாக்களுக்கு விடையளித்தார். இறுதியில் வழமையாகக் கேட்பதுபோல், “உங்களுக்குப் பாடம் நடத்திய அனுபவம் இருக்கா?” என்று இப்ராஹீம் சார் கேட்டார்.

 

அந்தக் கேள்வியைக் கேட்டாலே அஹதுக்குக் கோபம் வந்துவிடும். இதுவரை இரண்டு தடவை எந்த வாய்ப்பும் கொடுக்கவில்லை. வாய்ப்பே கொடுக்காமல் முன்அனுபவம் இருக்கா என்று கேட்பது என்ன நியாயம்?

 

ஆனால் அவர்கள் கேட்பதோ இதற்குமுன் வேறு எங்கேனும் பள்ளிக்கூடத்தில் அல்லது கல்லூரியில் பாடம் நடத்திய அனுபவம் இருக்கா என்பதுதான். அது அஹதுக்குத் தெரியாமல் இல்லை. இருப்பினும் அந்தக் கேள்வி அவருக்குக் கோபத்தை ஏற்படுத்தும்.

 

அவர்களின் அந்தக் கேள்விக்கு, “மகளிர் அரபுக் கல்லூரியில் மூன்றாண்டுகள் பாடம் நடத்தியுள்ளேன்என்று சொன்னார். அதனை அவர்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. ஸ்கூல் அல்லது காலேஜில் அனுபவம் இருக்கா?” என்று மீண்டும் கேட்க, “இல்லைஎன்று சொன்னார். சரி, நீங்க போகலாம்என்றனர். சரி, நாம் தேர்வாகவில்லை என்று முடிவுசெய்துகொண்டு வெளியே வந்துவிட்டார். வீட்டிற்கு வந்து தம்முடைய மொழிபெயர்ப்புப் பணியைத் தொடர்ந்தார்.

 

அதன்பின் ஒரு மாதத்தில், சென்னையிலிருந்து நானூறு கிலோமீட்டர் தூரத்திலுள்ள ஒரு முஸ்லிம் கல்லூரியில் அரபுத்துறைப் பேராசிரியர் பணியிடம் காலியாக இருப்பதாகச் செய்தி கேள்விப்பட்டு, அதற்காக விண்ணப்பித்தார். குறிப்பிட்ட தேதியில் நேர்காணலுக்கு வரச் சொல்லி கடிதம் வந்தது.

 

அங்கு புறப்பட்டுச் சென்றார். நீண்ட தூர இரயில் பயணம். காலையில் அங்கு சென்று எங்கு குளிப்பது, ஆடை மாற்றுவது என்று யோசித்துக்கொண்டே சென்றார். அப்போது அந்தப் பெட்டியிலேயே பயணம் செய்த ஒரு முஸ்லிம் குடும்பத்தினர், இவரிடம் பேச்சுக் கொடுத்தனர். ஹஜ்ரத், என் மனைவிக்கு மிடில் பெர்த்-தான் கிடைச்சிருக்கு. அவங்களால மேலே ஏற முடியாது. நீங்கள் உங்களோடு லோயர் பெர்த்-தை விட்டுக்கொடுத்தீங்கன்னா அதுல அவங்க படுத்துக்குவாங்க, நீங்க மிடில் பெர்த்ல படுத்துக்குங்கஎன்று அன்போடு கோரிக்கை வைத்தார் ஷாகுல் ஹமீது.

 

சரியென அந்த லோயர் பெர்த்தை அவருடைய மனைவிக்கு விட்டுக்கொடுக்கச் சம்மதித்தார். அதன்பின்  அவர்களிடையே பேச்சு தொடர்ந்தது. எங்கெ போறீங்க ஹஜ்ரத்?” என்று ஷாகுல் ஹமீது கேட்க, அவர் தாம் செல்லும் ஊர்ப் பெயரைச் சொல்ல, “நாங்களும் அங்கெதான் போறோம்; எங்க சொந்த ஊரே அதுதான் ஹஜ்ரத்என்றார்.

 

அப்படியா?” என்று சொல்லி முடித்துக்கொண்டார். அதன்பின் அவர், “என்ன விஷயமா அங்கெ போறீங்க?” என்று கேட்க, “நான் அங்குள்ள கல்லூரியில் அரபி உஸ்தாத் போஸ்ட்டுக்காக இன்டர்வியூ போறேன்என்றார்.  அப்படியே அவர்களின் பேச்சு தொடர்ந்தது. பின்னர் இரவு உணவைப் பரிமாறிக்கொண்டார்கள். அவர்களிடையே நட்பு வளர்ந்தது.

 

நீங்க கவலைப்படாதீங்க ஹஜ்ரத், நீங்க எங்க வீட்டுக்கு வந்து, குளிச்சுட்டு, ட்ரெஸ் மாத்திக்கிட்டு இன்டர்வியூ போகலாம். எந்தப் பிரச்சனையும் இல்லை; உங்களுக்கு அந்த வேலை கண்டிப்பா கிடைக்கும்என்று சகோதர வாஞ்சையோடு நேர்மறையான வார்த்தைகளைக் கூறினார்.

 

காலையில் இரயிலைவிட்டு இறங்கினார்கள்; அவரும் இறங்கினார். அவர்களோடு ஆட்டோ ஒன்றில் ஏறி,  சில பல தெருக்களைக் கடந்து அவருடைய வீட்டை அடைந்தார். அங்கு சென்றதும் குளித்து, புத்துணர்வடைந்து கொண்டார். ஆடைகளை மாற்றிக்கொண்டு, அவர்கள் கொடுத்த தேநீரைப் பருகிவிட்டு, அவர்களுக்கு நன்றி கூறிப் புறப்பட்டார். வெளியில் சென்று இங்குமங்கும் சற்றுநேரம் ஊரைச் சுற்றிப் பார்த்துவிட்டு, பிறகு ஓர் ஓட்டலில் காலைச் சிற்றுண்டியை முடித்துவிட்டு, காலார நடந்து கல்லூரி நோக்கிச் சென்றார்.

 

அங்கு சென்று தம் வருகையைப் பதிவு செய்துகொண்டார். அரபுத் துறைக்கு இவரைச் சேர்த்து இருவர் மட்டுமே வந்திருந்தனர். தமிழ், ஆங்கிலம், வரலாறு உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள் நேர்காணலுக்கு வந்திருந்தார்கள்.

 

நேர்காணலுக்கு வந்திருந்தோர் நீண்ட நேரம் காத்திருந்தார்கள். அவர்களோடு அஹதும் காத்திருந்தார். பின்னர் அக்கல்லூரியின் தாளாளர் (கரஸ்பாண்டென்ட்) வந்தார். அவர் வந்தபிறகுதான் நேர்காணல் தொடங்கியது.  எல்லாமே நேரடியான பேச்சுவார்த்தைதான் என்பது அப்போதுதான் புரிந்தது. ஒவ்வொருவராக அவருடைய அறைக்குள் செல்கிறார்கள்; முகத்தில் சோகத்தோடு திரும்பி வருகின்றார்கள். இக்காட்சியை அஹத் பார்த்துக் கொண்டே இருக்கிறார். என்னதான் நடக்கிறது என்று யூகிக்க முடியவில்லை. பிறகு அரபுத்துறைக்கான அழைப்பு.  அப்போது அஹதுக்கு முன்னரே கேரளாவிலிருந்து வருகை புரிந்திருந்த கேண்டிடேட் ஒருவர் தம் தந்தையுடன் உள்ளே சென்றார். அவர் கையில் ஒரு சூட்கேஸ் இருந்தது. நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடந்தது.

 

அவர் பிஎச்.டி. முடிக்கவில்லை என்பது பிறகுதான் தெரிந்தது. எம்.ஃபில். மட்டுமே முடித்திருந்தார்.  பிஎச்.டி. தொடர்கிறார். அவ்வளவுதான். பிறகு அஹதை அழைத்தனர்.

 

எவ்வளவு தருவீங்க?” என்று தாளாளர் கேட்டார். உடனடியாகப் பணமெல்லாம் என்னால் தர இயலாது; வேண்டுமானால் என்னுடைய சம்பளத்திலிருந்து மாதந்தோறும் ஒரு தொகையைப் பிடித்துக்கொள்ளுங்கள்என்றார்.

 

அதெல்லாம் முடியாது ஹஜ்ரத். மற்றவர்களுக்கு 30 இலட்சம்; உங்களுக்காக 25 இலட்சம். ஏற்பாடு செய்ய முடியுமா?” என்றார்.

 

என்னால் இயலாது சார்; அவ்வளவு பணத்திற்கு நான் எங்கெ போவேன்?” என்று அப்பாவியாகக் கேட்டார். சரி நீங்க போகலாம்என்று சொல்லிவிட்டார். பின்னர் அந்தக் கேரளக்கார கேண்டிடேட்டை அழைத்தார். சூட்கேஸ் கைமாறியது. அந்த போஸ்ட் அவருக்கு வழங்கப்பட்டது.

 

அதுபோலவே தமிழ்த்துறைக்கு ஆமினா என்ற பெண்மணி வந்திருந்தார். அவருக்குக் கிடைக்க வேண்டிய போஸ்ட், அவரிடம் பணம் இல்லாததால் சகோதர சமுதாயத்தைச் சார்ந்த ஒருவர் பணத்தைக் கொடுத்துப் பெற்றுக்கொண்டார். பணம்தான் இன்டர்வியூ என்று அப்போதுதான் அஹதுக்குப் புரிந்தது.

 

எல்லோரும் மதியம் சாப்பிட்டுவிட்டுப் போங்க; எல்லோருக்கும் சாப்பாடு தயார் செய்யப்பட்டுள்ளதுஎன்று தாளாளர் அறிவிப்புச் செய்தார். பிறகு லுஹர் தொழுதுவிட்டு, அங்கு சாப்பிட்டுவிட்டு, சென்னையை நோக்கித் திரும்பினார். இனி எந்த இன்டர்வியூ-க்கும் போகக் கூடாது என்று முடிவெடுத்தார். பேராசிரியர் பணி நமக்குக் கிடைக்க வாய்ப்பில்லை. ஏதேனும் பள்ளியில் இமாமாக இருந்துகொண்டு, எழுத்துப் பணியையே கவனிப்போம்; அல்லாஹ் அதற்காகவே நம்மைத் தேர்வு செய்துள்ளான் எனத் தீர்மானித்துவிட்டார்.

 

***

அதன்பிறகு மத்தியச் சென்னையின் ஒரு மஹல்லாவில் ஓர் இமாம் தேவைப்படுகிறார் என்ற தகவல் நண்பர் கஃபூர் ஆலிம் மூலம் அஹதுக்குக் கிடைத்தது. அவர் கொடுத்த செல்பேசி எண்ணில் தொடர்புகொண்டு பேசினார். குறிப்பிட்ட நேரத் தொழுகைக்கு வரச் சொன்னார்கள். அங்கு சென்று தொழுகை நடத்தினார். அவர் தொழுகை நடத்திய விதமும் தஜ்வீத் முறைப்படி ஓதியதும் அவர்களுக்குப் பிடித்திருந்தது.

 

பின்னர் ஜும்ஆ தொழுகைக்கு வரச் சொன்னார்கள். பயான் செய்யும் விதத்தையும் குத்பா ஓதும் விதத்தையும் நேரடியாகப் பார்த்துக்கொண்டார்கள். தொழுகைக்குப் பிறகு கூடிப் பேசிய நிர்வாகிகள், அஹத் இமாமை அழைத்து, “பொயிட்டு வாங்க, தகவல் தெரிவிக்கிறோம்என்று கூறி, செலவுக்குப் பணம் கொடுத்து அனுப்பிவைத்தார்கள். அதன்பின் ஒவ்வொரு வாரமும் ஒவ்வோர் ஆலிமை வரவழைத்துச் சோதனை செய்துகொண்டே இருந்தார்கள்.  ஒன்று இருந்தால், மற்றொன்று இல்லை என்ற நிலையே நீடித்ததால் அவர்களுக்குத் திருப்தி இல்லை. இரண்டு மாதங்களுக்குப் பிறகு, அஹத் இமாமைத் தொடர்புகொண்ட அப்பள்ளியின் நிர்வாகி ரஸீன் என்பவர், “நீங்க இந்த ஜும்ஆவுக்கு வந்துடுங்க இமாம் ஸாப்என்று கூறி, தகவல் தெரிவித்தார். அதைக் கேட்ட அவர், “அல்ஹம்து லில்லாஹ்என்று அல்லாஹ்வைப் புகழ்ந்தார்.

 

குறிப்பிட்ட நாளில் ஜும்ஆ தொழுகைக்கு வந்து, பயான் செய்து, குத்பா ஓதி, தொழுகையும் நடத்தினார். அவரின் ஓதல், பயான், குத்பா அனைத்தும் நிர்வாகிகளுக்குப் பிடித்திருந்தன. தொழுகைக்குப்பின் இமாமை அமர வைத்து, தங்குவதற்கான வீடு, சம்பளம், விடுமுறை உள்ளிட்ட அனைத்தைப் பற்றியும் தெளிவாகப் பேசிக் கொண்டார்கள். மாதத்தில் மூன்று நாள்கள் விடுப்பு என்பதை 15 வக்துகளாக நான் எடுத்துக்கொள்கிறேன்என்று அஹத் இமாம் கூறியதை அப்பள்ளியின் செயலாளர் ஆமோதித்து ஏற்றுக்கொண்டார்.

 

அதன்பின், “நீங்க பிஎச்.டி. வரை படிச்சவரா இருப்பதால், உங்க தலைமையில்தான் ஓர் அரபுக்கல்லூரி இங்கு தொடங்கத் திட்டமிட்டுள்ளோம். அதற்கு நீங்க ஒத்துழைக்கணும்என்று தலைவர் கூறினார்.

 

இன் ஷாஅல்லாஹ் தொடங்கலாம் ஹாஜியார். நிச்சயமாக ஒத்துழைக்கிறேன்என்றார் இமாம்.

 

ஒவ்வொரு நாளும் அஸர் தொழுகைக்குப் பிறகு, சிறுமியர் சிறுமியருக்கான குர்ஆன் வகுப்பை நடத்தினார்.  பருவ வயதடைந்த பெண்களுக்குத் தனியாக வகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த வகுப்பை அவருடைய மனைவி சுல்தானா பார்த்துக்கொண்டார். வாரந்தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை வகுப்பு. சனி, ஞாயிறு இரண்டு நாள்கள் விடுமுறை என்ற நடைமுறையைக் கொண்டுவந்தார்.

 

வாரத்தில் இரண்டு நாள்கள் ஏன் விடுமுறை விடுறீங்க? மற்ற மத்ரஸாக்களெல்லாம் ஒரு நாள்தானே விடுமுறை?” என்று நிர்வாகிகள் கேட்டனர்.

 

பாய், நான் ஏற்கெனவே அனுபவப்பட்டிருக்கேன். மற்ற மத்ரஸாக்களில் வெள்ளிக்கிழமை மட்டும் விடுமுறை விட்டுட்டு, சனி, ஞாயிறு மத்ரஸா நடத்துவாங்க. ஆனால் மாணவர்களுக்கு சனி, ஞாயிறுதான் ஸ்கூல் லீவு.  அந்த நாள்களில் அவர்கள் உறவினர்கள் வீடுகளுக்கோ, தாத்தா-பாட்டி வீடுகளுக்கோ, திருமண வீடுகளுக்கோ சென்றுவிடுவார்கள். அதனால் அவர்களுக்கு வாரத்தில் மூன்று நாள்கள் லீவு ஆகிடுது. அதைத் தவிர்க்கவே நான் இவ்வாறான நடைமுறையை வச்சிருக்கேன்என்று தெளிவாக விளக்கிச் சொன்னார்.

 

அவருடைய நியாயமான விளக்கத்தை நிர்வாகிகள் ஏற்றுக்கொண்டனர். மாணவர்களும் உஸ்தாதின் கட்டளைக்கேற்ப சனி, ஞாயிறுகளில் மட்டுமே தம் உறவினர்கள் வீடுகளுக்கோ, தாத்தா-பாட்டி வீடுகளுக்கோ, திருமண வீடுகளுக்கோ செல்வதை வழக்கமாகக் கொண்டார்கள். ஆனால் ஒரே ஒரு குடும்பத்தில் மட்டும் அந்த மாணவனின் அம்மா, தம்முடைய தாய் வீட்டிற்குப் பிள்ளையைக் கூட்டிச்சென்றுவிடுவதால் வெள்ளிக்கிழமை விடுப்பு எடுத்துக்கொண்டே இருந்தான்.

 

ஏம்பா, நீ மட்டும் சொன்ன பேச்சைக் கேட்க மாட்டாயா?” என்று கேட்டார், “நான் என்ன உஸ்தாத் செய்வது? எங்க அம்மா என்னோட பாட்டி வீட்டுக்குக் கூட்டிட்டுப் போயிடுறாங்கஎன்றான். சரி, ஒரு பையன்தானே, என்று அவனை மட்டும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்.

 

அந்த மஹல்லாவில் பல்வேறு புதிய புதிய திட்டங்களை நிர்வாகிகளோடு சேர்ந்து செய்துவந்தார். நிர்வாகிகள் அஹத் இமாமின் செயல்பாடுகளைப் பாராட்டியதோடு, உரிய ஒத்துழைப்பும் வழங்கினார்கள். இமாமின்  யோசனைகளையும் கருத்துகளையும் ஏற்றுக்கொண்டு ஒவ்வொன்றாகச் செயல்படுத்தினார்கள்.

 

பள்ளியைச் சுற்றி அந்த மஹல்லா மக்கள் எத்தனை பேர் வசிக்கின்றார்கள்; அவர்களுள் படித்த பட்டதாரிகள் எத்தனை பேர், குர்ஆன் ஓதத் தெரிந்தோர் எத்தனை பேர், அரசுப் பணியில் இருப்போர் எத்தனை பேர், ஸகாத்  கடமையானவர்கள் எத்தனை பேர், ஸகாத் பெறத் தகுதியுடையோர் எத்தனை பேர் என எல்லா விவரங்களும் அடங்கிய விண்ணப்பப் படிவத்தின் மூலம் மஹல்லா கணக்கெடுப்புஎடுக்கப்பட்டது. அதன்பின் அவை அனைத்தும் பள்ளிவாசலின் அலுவலக அறையிலுள்ள கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டது. குடும்பத்தலைவர், குடும்பத் தலைவி ஆகியோரின் செல்பேசி எண்களும் பதிவு செய்யப்பட்டன.

 

ஒவ்வொரு குடும்பத்தாருக்கும், சந்தா எண் இடப்பெற்ற ஐடி கார்டு வழங்கப்பட்டது. திருமணத்திற்கான என்ஓசி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், இறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட என்ன தேவை இருந்தாலும் அதைப் பெறுவதற்காகப் பள்ளிவாசலுக்கு வரும்போது, அந்த அடையாள அட்டையைக் காட்டினால் போதுமானது. வேறு எந்த ஆவணமும் தேவையில்லை என்ற எளிய நடைமுறையை நிர்வாகத்தினர் கடைப்பிடிக்கத் தொடங்கினர்.

 

நாளடைவில் இந்த நடைமுறை மிக எளிதாக இருப்பதாக மக்கள் நிர்வாகத்தினரையும் இமாமையும் பாராட்டினர். ஏதாவது அவசரத் தேவையெனில், பள்ளி அலுவலகத்தை மஹல்லா மக்கள் தொடர்புகொண்டு பேசுவதற்காக அலுவலகத்தில் ஓரு தொலைபேசி இணைப்பு வைக்கப்பட்டு, அதன் எண் நோட்டிஸ் போர்டில்  ஒட்டப்பட்டது. அலுவலகப் பணியைக் கவனித்துக்கொள்ளவும், தொலைபேசி அழைப்பை ஏற்கவும் ஒரு பணியாளர் நியமிக்கப்பட்டார்.

 

பின்னர் அப்பள்ளியில் கன்ஸுல் மால்எனும் பெயரில் பொதுநிதியகம்ஒன்று தொடங்கப்பட்டது.  தர்மப் பொருள்களையும் ஸகாத் பொருள்களையும் பணத்தையும் வசூல்செய்து, ஏற்கெனவே தயார் செய்துள்ள பட்டியலிலுள்ள தகுதியானவர்களுக்கு வழங்கப்பட்டது. அந்த மஹல்லாவில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கும் கைம்பெண்களுக்கும் மாதாந்திர உதவித்தொகை வழங்கப்பட்டது. அத்தோடு தேவைப்படுவோருக்கு வட்டியில்லாக் கடன் வழங்கும் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளனர். தொழில் செய்வதற்கான கடனும் கொடுக்கப்பட்டது.

 

இவ்வாறு மிகச் சிறப்பாக இவையெல்லாம் நடைபெறக் காரணம், அஹத் இமாம் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக் கிழமை பயானில் பிறருக்கு உதவ வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்ததும் அதனை ஆழமாக உள்வாங்கிய  மக்களுமே ஆவர். அத்தோடு அன்றொரு நாள் ரமளான் மாதத்தின் வெள்ளிக்கிழமையன்று மக்கள் மத்தியில் ஸகாத் பற்றி உரையாற்றியபோது, “அன்பான மக்களே! உங்கள் ஸகாத்தை இமாமாகிய  எனக்குக் கொடுக்காதீர்கள்.  அதேநேரத்தில் நீங்கள் அன்போடு கொடுக்கும் அன்பளிப்புகளை நான் பெற்றுக்கொள்வேன். ஏனெனில் நபியவர்கள் அன்பளிப்புகளை ஏற்றுக்கொண்டுள்ளார்கள்என்று கூறினார்.

 

அதைக் கேட்ட மக்கள் அஹத் இமாமை வெகுவாகப் பாராட்டினார்கள். அவர்மீது மிகுந்த மரியாதை செலுத்தினார்கள். இதுவரை எந்த இமாமும் இத்தகைய அறிவிப்பைச் செய்ததில்லை என்றார்கள். அதன்பின் அம்மக்கள் கொடுத்த ஸகாத் அனைத்தும் கன்ஸுல் மால்-இல் சேர்க்கப்பட்டது. ஏழை மக்களுக்கு உதவும் மஹல்லாவாக அது மாறிவிட்டது. இந்த மஹல்லாவின் செயல்பாடுகளைப் பார்த்து பிற மஹல்லாக்களிலும் இதுபோன்ற சேவைகளைத் தொடங்கிவிட்டார்கள். ஆக இப்பள்ளியை முன்மாதிரிப் பள்ளியாக மாற்றியதில் அஹத் இமாமுக்குப் பெரும் பங்குண்டு. இதை நிர்வாகிகளே ஒப்புக்கொண்டார்கள்.   

***

 

காணாமற்போன பொருளைப் பள்ளிவாசலுக்குள் தேடிக்கொண்டிருப்பவரின் குரலைச் செவியுறுபவர் அல்லாஹ் அதை உனக்குத் திரும்பக் கிடைக்காமல் செய்வானாக!என்று கூறட்டும். ஏனெனில், பள்ளிவாசல்கள் இதற்காகக் கட்டப்படவில்லைஎன அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ள ஹதீஸை நிர்வாகிகளிடம் எடுத்துச் சொல்லி, உள்பள்ளிக்குள் வசூலுக்கான எந்த அறிவிப்பையும் நாம் அனுமதிக்கக்கூடாது. பொதுமக்களுக்கான அவசியமான அறிவிப்பு மட்டுமே செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.

 

அப்படியெனில் பள்ளிவாசல், மத்ரஸா வசூலுக்காக வருவோரை என்ன செய்வது?” என்று செயலாளர் கேட்டார்.

 

அதற்கென ஓர் இடத்தை முடிவுசெய்து, ‘நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்டவர்என்று அவ்விடத்தில் எழுதிவைத்துவிட்டால், அங்கு நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்டவர் நின்று வசூல் செய்துகொள்ளட்டும். இதனால் தொழுகையாளிகள் எந்தத் தொல்லையும் இல்லாமல் நிம்மதியாகத் தொழுவார்கள் அல்லவா?” என்றார்.

 

அதைக் கேட்ட நிர்வாகிகள் இமாமின் யோசனையை ஏற்றுக்கொண்டார்கள். அவர் பணியாற்றுகிற பள்ளிவாசலில் ஒவ்வோராண்டும் ரமளான் கடைசிப் பத்தில் ஸஹர் உணவு எல்லோருக்கும் ஏற்பாடு செய்து வழங்கி வந்தனர். பக்கத்து மஹல்லா பள்ளிவாசலில் ரமளான் மாதம் முழுவதும் ஸஹர் உணவு ஏற்பாடு செய்து வழங்கி வந்தார்கள். இதைப் பார்த்து மனவேதனையடைந்த அஹத் இமாம், வெள்ளிக்கிழமை பயானில் இது குறித்துப் பேசினார்.

 

இளைஞர்களே! நீங்கள் யாருக்காக ஸஹர் உணவு ஏற்பாடு செய்கிறீர்கள்? அவர்களுள் யாரும் சாப்பாட்டிற்கு வழி இல்லாதவர்களா? ஏழைகளா? பயணிகளா? எல்லோரும் நன்றாகச் சம்பாதிப்பவர்கள்; மற்றவர்களுக்கு உணவு வழங்கும் தகுதியுடையவர்கள். அத்தகையோருக்கு ஸஹர் உணவு ஏற்பாடு தேவையா? அதற்காகப் பல இலட்சங்கள் வசூல் செய்கிறீர்களே இது தகுமா?

 

பயணிகளுக்கும் வெளியூரிலிருந்து வந்து தங்கியுள்ள மாணவர்களுக்கும், தொழிலாளிகளுக்கும் வேண்டுமானால் ஸஹர் உணவு ஏற்பாடு செய்துகொடுக்கலாம். ஆனால் மஹல்லா மக்கள் அனைவருக்கும் உணவு ஏற்பாடு செய்வது தவறு. பணம் கொடுப்போருள் பலர் தம் ஸகாத் பணத்தைத்தான் கொடுக்கின்றார்கள்.  ஸகாத் என்பது ஏழைகளுக்கு மட்டும் போய்ச் சேர வேண்டும். ஆனால் இந்த உணவைச் சாப்பிடுபவர்களுள் பணக்காரர்களும் இருக்கின்றார்கள். எனவே இதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.

 

நம் சமுதாயம் கல்வியில் எவ்வளவோ பின்தங்கியிருக்கிறது; நீங்கள் ஏன் கல்விக்காக அதைச் செலவிடக்கூடாது? நீங்கள் வசூல் செய்கிற பணத்தைக் கல்வி உதவித்தொகையாக வழங்கலாமே? நம் மஹல்லாவில் நன்றாகப் படிக்கின்ற மாணவ-மாணவிகளுள் பத்துப் பேரைத் தேர்ந்தெடுத்து, ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் சிறந்து விளங்கும் வகையில் மருத்துவம், பொறியியல், கணினித் துறை, பத்திரிகைத்துறை, மனோதத்துவம் முதலான துறைகளில் பிஎச்.டி வரை படிப்பதற்கு உதவி செய்யுங்கள் இவ்வாறே ஒவ்வொரு மஹல்லாவும் செயல்படத் தொடங்கிவிட்டால் எதிர்வரும் பத்தாண்டுகளில் நம் சமுதாய இளைஞர்கள் பலர் உயர்பதவிகளில் இருப்பதைக் காணலாம் இன் ஷாஅல்லாஹ்என்று காரசாரமாக உரையாற்றினார்.

 

உரையைக் கேட்டுச் சிலிர்த்துப்போன இளைஞர்கள் மனங்களில் மாற்றம் ஏற்பட்டது. நாம் செய்யும் செயலை மறுபரிசீலனை செய்யத்தான் வேண்டும் என்பதை உணர்ந்தார்கள்.

இது மாதிரி பல்வேறு சீர்திருத்தக் கருத்துகளைப் பேசியுள்ளார். அந்தக் கருத்துகள் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுச் செயல்பாட்டுக்கு வந்தன.

                                                                      -தொடரும்





ஞாயிறு, 22 டிசம்பர், 2024

தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்துவோம்

 


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

 

கடந்த காலங்களில் இல்லாத வளர்ச்சியைத் தற்காலத்தில் நாம் அடைந்துள்ளோம். அயல் நாட்டிலுள்ள கணவனிடம் பேசுவதற்குத் தவித்த மனைவி, மகனிடம் பேசுவதற்குச் சிரமப்பட்ட பெற்றோர், தற்போது ஒருவருக்கொருவர் முகம் பார்த்துப் பேசிக்கொள்கின்றனர். பொருள்களைச் சந்தைக்குச் சென்று பேரம்பேசி வாங்கி வந்த காலம் படிப்படியாகக் குறைந்துவருகிறது. வீட்டிலிருந்தபடியே கைப்பேசியில் அழைத்து, வேண்டிய பொருள்களை வாங்கிக்கொள்கிறோம். கடைகளுக்கே செல்லாமல் நமக்குத் தேவையான பொருள்களை ஆர்டர் செய்து வாங்கிக்கொள்கிறோம். காய்கறிகள் வாங்கிச் சமைக்கச் சிரமப்படுவோர் வீட்டிலிருந்தபடியே ஆர்டர் செய்து உணவை வாங்கி, உண்டுவருகின்றனர். இவ்வாறான தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்த யுகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

 

தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்த இந்தக் காலத்தில், இதைப் பயன்படுத்தத் தெரியாதோரும் இருக்கவே செய்கின்றார்கள். இந்தத் தொழில்நுட்பத்தைக் கல்வி ரீதியாகப் பயன்படுத்தினால் இன்னும் அதிகமான வளர்ச்சியை நாம் அடையலாம். குறிப்பாக கல்வியில் சற்றே முன்னேறிவருகின்ற இன்றைய முஸ்லிம்கள் இது விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அன்று காகிதத்தில் அச்சிடப்பட்ட புத்தகங்களை வைத்துக்கொண்டு மாணவ-மாணவியருக்கு ஆசிரியர்கள் கற்பித்தார்கள். இன்று அப்புத்தகங்களை மின்னூலாக மாற்றி, காட்சி வடிவில் திரையில் காண்பித்து, அத்தோடு விளக்கப்படங்களையும் நேரடியாகக் காட்டி மாணவர்களுக்குக் கற்பிக்கின்றார்கள். ஆக இன்றைய மாணவர்கள் எல்லாவற்றையும் காட்சி வடிவில் நேரடியாகக் கண்டு தெளிவாகக் கற்றுக்கொள்கின்றார்கள்.

 

தொலைவழி காணொலிக் காட்சி:  ஒரு கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றக்கூடிய ஒருவர், தாம் நடத்தும் பாடத்தை வேறு சில கல்லூரிகளில் பயில்கின்ற மாணவர்களும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கின்றார். எனவே அவர், தாம் நடத்துகின்ற பாடத்தை நேரலையில் முகநூல் வழியாக அல்லது யூடியூப் வழியாக ஒளிபரப்புகிறார். அதன் இணைப்பை வாட்ஸ்ஆப் வழியாக அனுப்புகிறார். அந்த இணைப்பைச் சொடுக்கி உள்ளே வருகின்ற அனைவரும் அந்தப் பேராசிரியர் நடத்துகின்ற பாடத்தைத் தொலைதூரத்திலிருந்தே கற்றுக்கொள்கின்றனர். ஆக ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயன்பெறும் வாய்ப்பு இன்று சாத்தியமாகியுள்ளது.

மற்றொரு முறையானது, முகநூல் வழியாக அல்லது யூடியூப் வழியாக ஒளிபரப்பப்படுகின்ற அந்தப் பாடத்தை பிராஜெக்டர் மூலம் திரையில் ஒளிபரப்புச் செய்து, ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பார்த்துப் பயன்பெறும் வாய்ப்பையும் உருவாக்கலாம். ஆகவே ஒரு கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர், எங்கும் பயணம் செய்யாமலே பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்குப் பாடம் நடத்த முடியும் என்ற அளவில் இன்றைய தொழில்நுட்பவியல் வளர்ந்துள்ளது.

 

குற்றம் சாட்டப்பெற்ற ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அவர்மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவர் தமிழ்நாட்டின் ஏதோ ஓர் ஊரில் இருக்கிறார். சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெறுகிறது. இப்போது அவரை உயர்நீதி மன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். பன்னூறு கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து அவரைக் காவலர்கள் அழைத்துச் சென்றுதான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்.   இதுதான் பழைய நடைமுறை. இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியால், அது மிக மிக எளிதாகியுள்ளது. அவ்வளவு தூரம் பயணித்து, பண விரயம், நேர விரயம் எதுவும் செய்யத் தேவையில்லை. மாறாக குற்றம் சாட்டப்பட்டவரை அவ்வூரின் மாவட்ட நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்று, அங்கு தொலைவழி காணொலிக் காட்சி  (Video teleconference) மூலம் முகத்துக்கு முகம் பார்த்து, நீதிபதி கேட்கின்ற கேள்விகளுக்கும் வக்கீல் செய்கின்ற குறுக்கு விசாரணைக்கும் பதிலளித்தால் போதுமானது. ஆக இதுபோன்ற தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்துவதால் மக்களின் சிரமங்கள் குறையும்; எளிதில் பல்வேறு வழக்குகளுக்குத் தீர்வு காண முடியும்.

 

கூகுள் மீட்: ஒரு பெரிய அரசியல் கட்சி அது. பல்வேறு ஊர்களிலும் அதன் முக்கியப் பொறுப்பாளர்கள் இருக்கின்றார்கள். இப்போது அவர்களுடன் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்த வேண்டும். எனவே உடனடியாகத் தலைமையகத்திலிருந்து அனைவருக்கும் வாட்ஸ்ஆப் மூலம் செய்தி அனுப்பப்படுகிறது. பின்னர் குறிப்பிட்ட நேரத்தில் கூகுள் மீட் வழியாக ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. முக்கியப் பொறுப்பாளர்கள் தம் ஆலோசனைகளை வழங்குகின்றார்கள். ஆக அவர்கள் அனைவரும் தத்தம் இருப்பிடத்திலிருந்தவாறே நிர்வாகக் கூட்டத்தில் கலந்துகொண்டுவிட்டனர். அக்கூட்டமும் இனிதே நடைபெற்று முடிவடைந்துவிட்டது. கூகுள் மீட். கூகுள் கிளாஸ்ரூம் ஆகிய இணையவழிச் செயலிகள் மூலம் ஒரே நேரத்தில் 100 முதல் 1000 பேர் வரை இணைந்து வகுப்புகளை அல்லது ஆலோசனைக் கூட்டங்களை நடத்தலாம் என்ற புதிய வசதி தற்காலத்தின் தொழில்நுட்ப வளர்ச்சியாகும்.

 

துரித நூல்கள்: கடந்த காலங்களில் எழுத்தாளர் உள்ளிட்ட படைப்பாளர்கள் தம் புத்தகங்களை அச்சுக்குக் கொண்டுவர மிகுந்த சிரமப்பட வேண்டும். மிகுதியான பணத்தைச் செலவழிக்க வேண்டும்; நீண்ட நாள்கள் காத்திருக்க வேண்டும்.  ஆனால் தற்காலத் தொழில்நுட்ப வளர்ச்சியால், படைப்பாளர்கள் எழுதுவதை அவர்களே தட்டச்சு செய்து விடுகின்றார்கள்.  புத்தக வடிவமைப்புக்கு மட்டும் பிறரை நாடுகின்றார்கள். புத்தக வடிவமைப்புக்குப்பின் அதனை அப்படியே அச்சுக்குக் கொடுத்துத் தமக்குத் தேவையான பிரதிகளை அச்சில் பெற்றுக்கொள்கின்றார்கள். கடந்த காலங்களைப்போல் நூல்களை அச்சிட நிறையப் பணத்தைச் செலவிட்டு, அதில் முடக்க வேண்டிய அவசியமில்லை. மாறாக எத்தனைப் பிரதிகள் தேவையோ அத்தனைப் பிரதிகளை மட்டும் அச்சிட்டுப் பெற்றுக் கொள்ளலாம். குறைந்த பட்சம் எட்டுப் பிரதிகள் முதல் அதிகபட்சம் எத்தனைப் பிரதிகள் வேண்டுமானாலும் அச்சிட்டு, வாங்கி வைத்துக்கொண்டு, இருப்பிடத்திலிருந்தே விற்பனை செய்துகொள்ளலாம். இந்த முறைக்கு ஓடிபீ (On Demand Print)  என்று சொல்லப்படுகிறது.

 

காகிதமில்லா நூல்கள்: படைப்பாளர்கள் தாங்கள் எழுதிய நூல்களை, அறவே செலவின்றி வெளியிட முடியும்; விற்பனை செய்து இலாபமும் ஈட்ட முடியும். அதற்கான சாத்தியக்கூறு இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏற்பட்டுள்ளது. படைப்பாளர் ஒருவர் தமது நூலை எழுதியவுடன் அதை எம்எஸ் வேர்ட்-இல் தட்டச்சு செய்து,  பிழைகளைக் களைந்து அதை அப்படியே அமேசான் வலைதளத்தில் கேடிபீ பகுதியில் பதிவேற்றம் செய்துவிட்டால்  அவருடைய நூல் விற்பனைக்குச் சென்றுவிடும்.

 

காகித நூல் விற்பனையில், அதனை அனுப்பக் குறிப்பிட்ட இடம், தூரம் என்ற எல்லை உண்டு; அனுப்புவதற்கான செலவும் உண்டு. ஆனால் காகிதமில்லா இந்த மின்னூல் உலகெல்லாம் பரவியுள்ள தமிழர்கள் மத்தியில் பரவி அதைப் பற்பலர் வாங்கிப் படிக்கும் வாய்ப்பு உருவாக்கப்படுகிறது. இதனால் படைப்பாளரின் வாசகர்கள் வட்டம் விசாலமாகின்றது. இதனை கிண்டில் நூல்என்று அழைக்கின்றார்கள். அதற்கெனத் தனிக் கருவியும் உண்டு; அதில் வாசிக்கலாம். அல்லது அவரவர் தத்தம் அறிதிறன் பேசியில் அதற்கான செயலியைத் தரவிறக்கம் செய்தும் வாசிக்கலாம்.

 

நூல்களை ஆவணப்படுத்துதல்: அழியும் நிலையில் உள்ள பழைய நூல்களை ஆவணப்படுத்த புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம். எத்தனையோ மூத்த அறிஞர்களின் நூல்கள் மீள்பதிப்பு செய்யப்படாமல்  இங்கொன்றும் அங்கொன்றுமாக இருக்கின்றன. அந்த நூல்களைத் தேடிப்பிடித்து, அவற்றைத் தட்டச்சு செய்து, மின்னூல்களாக உருவாக்கிப் பத்திரப்படுத்தலாம். அத்தோடு அவற்றை மற்றவர்களும் படித்துப் பயன்பெறும் வகையில் சமூக ஊடகங்களில் பரப்பலாம். மேலும் அவற்றை மின்னூல்களாகப் பத்திரப்படுத்துவதால் எதிர்காலச் சந்ததிகள் அவற்றின் மூலம் பயனடைவார்கள்.

 

தற்கால இளைஞர்கள்-இளைஞிகள் காகித நூல்களை வாசிப்பதைவிட மின்னூல்களைக் கணினியில் அல்லது அறிதிறன்பேசியில் அல்லது படிப்பதற்கென்றே உருவாக்கப்பட்டுள்ள கிண்டில் உள்ளிட்ட சாதனங்களில் படிக்கின்றார்கள். ஆகவே படைப்பாளர்களும் கொஞ்சம் கொஞ்சமாகக் கணினி மூலம் தம் நூல்களை மின்னூல்களாக உருவாக்க முன்வந்துள்ளார்கள். தாம் ஏற்கெனவே எழுதிய நூல்களையெல்லாம் மின்னூல்களாக உருவாக்கி, இணையத்தில் பதிவேற்றம் செய்துவருகின்றார்கள். அதனால் அவர்கள் தாம் வாழும் காலத்திலேயே தம் நூல்களைப் பாதுகாப்பாக வைத்துவிட்டுச் செல்லும் வாய்ப்புள்ளது.

 

செயற்கை நுண்ணறிவு: ஏஐ தொழில்நுட்பம் தற்போது மிகுந்த வளர்ச்சியடைந்துள்ளது. அது பயன்படுத்தப்படாத துறையே இல்லை எனலாம். எல்லாவற்றிலும் அதன் பங்கு உள்ளது. அந்த வகையில் அந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, நமக்குத் தேவையான கருத்துகளைக் கேட்டுப் பெறலாம். தேவையான தகவல்களைத் தேடிப் பெறலாம். ஒரு மொழியிலிருந்து வேறொரு மொழிக்கு மாற்றிக்கொள்ளலாம். இப்படி எண்ணற்ற பயன்கள் இதில் உள்ளன. 

 

இவ்வாறு தொழில்நுட்ப வளர்ச்சியின் மூலம் எண்ணற்ற நன்மைகள் இருக்கின்றன. அவற்றையெல்லாம்  விட்டுவிட்டு, வெறுமனே செல்ஃபோன் மூலம் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பரப்பப்படுகின்ற காணொலிக் காட்சிகளைக் காண்பதிலேயே தம் நேரத்தை வீணடித்துவிட்டு, வாழ்க்கையில் முன்னேற வழி தெரியாமல்  வீதியோரம் நின்று புலம்புவதில் அர்த்தமில்லை. எனவே நாம் அனைவரும் தற்காலத்தில் உள்ள தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்தி, நம்மால் பலர் பயன்பெறும் வகையில் நம் செயல்பாடுகளை அமைத்துக்கொள்வோம்.

==================================0



புதன், 18 டிசம்பர், 2024

உலக அரபு மொழி தினம்


_________


இன்று (18.12.2024) உலகம் முழுவதும் #அரபுமொழிநாள் மேற்கொள்ளப்படுகிறது. 

ஐ நா வில் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளுள் ஒன்று அரபி ஆகும். இது 1973 ஆம் ஆண்டு #டிசம்பர்18 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டதால் அந்த நாளையே #உலகஅரபுமொழி நாளாகக் கொண்டாடப்படுகிறது.

இஸ்லாமிய மார்க்கத்தின் மூலங்களான குர்ஆனும் நபிமொழிகளும் அரபியில் இருப்பதால் நாம் ஒவ்வொருவரும் அரபியைக் கற்க வேண்டும்.

'ஓரெழுத்துக்குப் பத்து நன்மை' என்பதால் திருக்குர்ஆனை அரபியில் ஓதக் கற்றுக் கொள்ள வேண்டும்.

இன்று வரை அம்மொழி பயன்பாட்டில் இருக்கிறதென்றால், திருக்குர்ஆன்தான் காரணம். அது அரபியில் இருப்பதால், பிற மொழி பேசும் மக்களும்  அதைக் கற்றுக்கொண்டு ஓதி வருகின்றார்கள்; பலர் அதை மனனம் செய்துள்ளார்கள்.

பள்ளிக்கூடங்களில் கல்லூரிகளில் பயில்கின்ற மாணவர்கள் விருப்பப் பாடமாக அரபியைத் தேர்ந்தெடுக்கலாம். தடை இல்லை.

சிவில் எக்ஸாம் - #குடிமைத்தேர்வுகள் எழுதுவோரும் தம் விருப்பப் பாடமாக அரபியைத் தேர்ந்தெடுக்கலாம் என்பது பலருக்குத் தெரியாது.

அரபி மொழியை எளிதாகக் கற்க இன்று பல்வேறு உத்திகள் கையாளப்படுகின்றன. எளிமையான விதத்தில் கற்றுக்கொள்ள ஏராளமான நூல்கள் வெளிவந்துள்ளன. அத்தோடு வலையொளி -யூ டியூபில் ஏராளமான காணொலிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அவற்றைப் பார்த்தும் எளிதாகக் கற்றுக் கொள்ளலாம்.

ஆக இன்று அரபியைக் கற்றுக்கொள்ள ஏராளமான வழிகள் இருந்தும் நம்முள் பலர் திருக்குர்ஆனை அரபியில் ஓதத் தெரியாமல் இருக்கலாமா?

இதோ இப்போதே இதைச் சொடுக்குங்கள்; திருக்குர்ஆனை மூல மொழியான அரபியில் ஓதக் கற்றுக் கொள்ளுங்கள்:

https://youtu.be/LKBGmL6bXGM?feature=shared

அன்புடன்
நூ.அப்துல் ஹாதி பாகவி
18.12.2024

ஞாயிறு, 15 டிசம்பர், 2024

காட்சி ஊடக வலைக்குள் மாட்டிக் கொண்டவர்கள்

     

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

இமாம் மதீனா பள்ளிவாசல், பட்டினம்பாக்கம் சென்னை-28   

 

இன்று எல்லாமே காட்சி ஊடக மயமாகிவிட்டது. நம்முள் பெரும்பாலோர் காட்சி ஊடக வலைக்குள் சிக்குண்டு கிடக்கின்றார்கள். அவ்வலைக்குள் சிக்காதோர் அரிதிலும் அரிதாகச் சிலர் இருக்கலாம் என்று நம்புவோம். ஏனெனில் கடந்த காலங்களில் திரையரங்குகளில் சென்றுதான் திரைப்படத்தைப் பார்த்து இரசிக்கும் நிலை இருந்தது. பின்னர் வீட்டுக்கு வீடு தொலைக்காட்சிப் பெட்டி வந்தது. அதன்மூலம் அவ்வப்போது திரையிடப்படுகிற திரைப்படங்களை மட்டும் மக்கள் கண்டு இரசித்தார்கள். ஆனால் தற்காலத்தில் ஒவ்வொருவரின் கையிலும் அறிதிறன்பேசி உள்ளது; அதனுள் எல்லாக் காட்சிகளும் உள்ளன. எனவே விரல்நுனியில் எதனையும் பார்க்க முடியும் என்ற நிலை உள்ளது.

 

மது, சூதாட்டம் ஆகிய இரண்டைக் குறித்து இறைவன் கூறுகிறபோது, “அவ்விரண்டிலும் பெரும்பாவம் உள்ளது; மக்களுக்கு(ச் சில) நன்மைகளும் உள்ளன. (இருப்பினும்) அவ்விரண்டின் நன்மைகளைவிடத் தீமைகளே மிக அதிகம் (2: 219) என்று கூறுகின்றான். மது, சூதாட்டம் ஆகியவற்றைப் போலவே திரைப்படத்திலும் நன்மைகளும் தீமைகளும் கலந்தே உள்ளன. இருப்பினும் நன்மைகளைவிடத் தீமைகளே மிக அதிகம் என்பதை யாரும் மறுக்க முடியாது.

 

காட்சி ஊடகம் என்றதும் எல்லோருக்கும் திரைப்படம் (சினிமா) மட்டுமே நினைவுக்கு வரும். ஆனால் அது திரைப்படம்என்ற ஒற்றை வார்த்தைக்குள் முடிந்துவிடுவதில்லை. அதனுள் அதன் காட்சிகள், வசனங்கள், பாடல்கள், நையாண்டிகள், கேலிகள் அனைத்தும் உள்ளன. அவை மக்களின் மனங்களில் ஆழமாகப் பதிந்துவிட்டன. இருவர் அல்லது மூவர் உரையாடிக்கொண்டிருக்கும்போது, அவர்களின் பேச்சில் வெளிப்படுவது திரைப்பட வசனங்கள்தாம். அந்த அளவிற்குத் திரைப்படக் காட்சிகளும் வசனங்களும் பாடல் வரிகளும் மக்கள் மனங்களில் வேரூன்றிப் பதிந்துபோய்விட்டன. குறிப்பாக இளவயதுப் பிள்ளைகளின் பிஞ்சு நெஞ்சங்களில் அவை மஞ்சமிட்டு அமர்ந்துள்ளன.

 

திரைப்படம் பாவங்களின் தாய் என்றால், பாடல்கள், மிமிக்ரி, நையாண்டி, கேலி கிண்டல், உருமாற்றம் செய்தல் உள்ளிட்டவை அதன் குழந்தைகள் எனலாம். திரைப்படங்களைப் பார்க்கின்ற நம் பிள்ளைகள் அதில் நடிக்கின்ற நடிகர்கள்-நடிகைகள் போல் தாமும் நடிக்க, அவன் குடித்ததைப் போல் குடிக்க, அவன் புகைபிடித்ததைப் போல் புகைபிடிக்க, அவன் பேசியதைப்போல் பேச, உடுத்தியதைப் போல் உடுத்த விரும்புகின்றனர். இதுதான் திரைப்படத்தின் தாக்கம்.

 

இன்னும் சற்றுக் கூடுதலாகச் சொல்ல வேண்டுமானால் அதில் அந்த நடிகன் கொலை செய்ததைப்போல் கொலை செய்யவும் கொள்ளையடித்ததைப் போல் கொள்ளையடிக்கவும் முயல்கின்றனர்; அதைச் செயல்படுத்திகாவல்துறையில் மாட்டிக்கொண்டபின், விசாரணையில், நான் அந்தப் படத்தைப் பார்த்துத்தான் இவ்வாறு செய்தேன் என்று வாக்குமூலம் கொடுப்பதைப் படித்திருப்பீர்கள்.

 

பிஞ்சு நெஞ்சங்களில் புகுந்துகொண்ட பாடல்கள்: திரைப்படப் பாடல்களின் இசையால் ஈர்க்கப்பட்ட இள நெஞ்சங்கள் சின்னதிரையில் பாடல்கள் பாடிக் கொண்டிருக்கின்றார்கள். திருக்குர்ஆனை ஓத வேண்டிய இளவயதில் இசைமேடைகளில் நின்றுகொண்டு காதல் பாடல்களை அதன் பொருள் புரியாமல் பாடிக்கொண்டிருக்கின்றனர். அவர்கள் பாடும் அழகைக் கண்டு அவர்களின் பெற்றோர் ஆனந்தக் கூத்தாடுகின்றனர்; அடைய முடியாத சிகரத்தை அடைந்துவிட்டதாக மகிழ்கின்றார்கள்; தம் பிள்ளைகள் இந்த மேடையில் மட்டுமின்றி, அடுத்தடுத்த கட்டத்திற்கு முன்னேறி, பல மேடைகளில் ஏற வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர். இதெல்லாம் எதனால் என்றால், திரைப்படப் பாடல்களின் இசையால் ஈர்க்கப்பட்டது மட்டுமின்றி, அது ஒரு கலைத்திறன் என்று நம்புவதால்தான்.

 

பாடல்கள், வீண்வேடிக்கைகள் குறித்து அல்லாஹ் திருக்குர்ஆனில் எச்சரிக்கை செய்திருக்கின்றான். வீண் வேடிக்கைகளை விலைக்கு வாங்குவோரும் மனிதர்களில் உள்ளனர். அறிவின்றி, இறைவழியிலிருந்து (மக்களை) வழிபிறழச் செய்வதற்காகவும் அதை ஒரு கேலிப் பொருளாக எடுத்துக்காட்டுவதற்காகவும் (இவ்வாறு செய்கின்றனர்). இத்தகையோருக்கு இழிவு தரும் வேதனை நிச்சயமாக உண்டு.” (31: 6)

 

என் சமுதாயத்தாரில் சில கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் விபச்சாரம் (செய்தல்), (ஆண்கள்) பட்டுத் துணி (அணிதல்), மது (அருந்துதல்), இசைக் கருவிகள் (இசைத்தல்) ஆகியவற்றை அனுமதிக்கப்பட்டவையாகக் கருதுவார்கள்.,,” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (புகாரீ: 5590)

 

பிறரைப் போல் பேசுதல் (மிமிக்ரி): திரைப்படத்தின் மற்றொரு குழந்தைதான் பிறரைப் போல் பேசுதல் ஆகும்.  இதை இன்றைய மக்கள், ஒரு திறமை என்று கூறுகின்றார்கள். அதனால்தான் பிற நடிகர்களைப் போல், பிற நடிகைகளைப் போல் பேசுவோரை வரவேற்கின்றார்கள்; பாராட்டுகின்றார்கள். இதையும் ஒரு கலைத்திறனாக அங்கீகரிக்கின்றார்கள். ஆனால் இஸ்லாம் இது குறித்து என்ன சொல்கிறது?

 

அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறியதாவது: நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களிடம் ஒரு மனிதரைப் போல (ஏளனமாக) நடித்துக் காட்டிப் பேசினேன். அப்போது நபி  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “எனக்கு இன்னின்ன (செல்வங்கள்) கிடைக்கும் என்றிருந்தாலும் ஒரு மனிதரைப் போல (ஏளனமாக) நடித்துக் காட்டிப் பேசுவதை நான் விரும்பமாட்டேன்என்று கூறினார்கள். (அபூதாவூத்: 4875/ 4232)

 

ஒருவரை நெட்டை, குட்டை என்று சொல்லி, அவரது மனத்தைப் புண்படுத்துவதோ, ஒருவரைப் போன்று பேசி கிண்டல் செய்வதோ இஸ்லாமிய மார்க்கத்தில் கூடாது. ஆகவே பிறரின் குரலில் பேசக்கூடியவன், ஆண்குரலில் பேசக்கூடிய பெண், பெண் குரலில் பேசக்கூடிய ஆண் அனைவரும் அல்லாஹ்வின் பார்வையில் சபிக்கப்பட்டவர்கள் ஆவர். மிமிக்ரி செய்பவன் காலப்போக்கில் மக்களை ஏமாற்றும் வேலையையும் செய்யத் தலைப்படுவான். அதன் காரணமாகவும் அது தடைசெய்யப்பட்டுள்ளது. ஒவ்வொருவரின் குரலும் அவரவருக்கான தனித்த அடையாளமாகும். அதைச் சிதைக்கும் வண்ணம் அமைகிறது மிமிக்ரி. ஆகவே மிமிக்ரி செய்வதை முஸ்லிம்கள் முற்றிலும் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

 

ஒருவரின் பேச்சு ஒலி வடிவில் பதிவு செய்யப்படுகிறது. அவரது குரலைக் கேட்டவுடன் இது இன்னாருடைய குரல் என்று நாம் அடையாளம் கண்டுகொள்கிறோம். மிமிக்ரி செய்வோர் குறிப்பிட்ட ஒருவரின் குரலில் எதையாவது தவறாகப் பேசிப் பதிவுசெய்து, பொதுத்தளங்களில் வெளியிட்டுவிட்டால் அது அக்குறிப்பிட்ட மனிதருக்கு எதிராக அமைந்துவிடும் ஆபத்து இதில் உள்ளதால் இஸ்லாமிய மார்க்கத்தில் இது தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும் ஒருவரின் குரல் இனிமையாக இருக்கலாம்; மற்றொருவரின் குரல் சற்றுக் கரடுமுரடாக இருக்கலாம். கரடுமுரடான, தடிமனான குரலைக்கொண்ட மனிதரின் குரலில் பேசி, அது பொதுத்தளங்களில் உலா வந்தால் அதைக் கேட்கின்ற அவர் நிச்சயம் வருத்தப்படுவார். அதன் காரணத்தால்தான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மிமிக்ரி செய்வதைத் தடைசெய்தார்கள்.

 

நையாண்டிப் பேச்சு: பிறரைச் சிரிக்க வைப்பதற்காக ஜோக்சொல்லப்படுகிறது. அதுவும் இன்று ஒரு கலையாகப் பார்க்கப்படுகிறது. நீண்ட நேரம் ஜோக்சொல்பவர் திறமையாளராகப் பார்க்கப்படுகிறார்.  நீண்ட நேரம் ஜோக்சொல்பவர் மக்களைச் சிரிக்க வைப்பதற்காகப் பொய்களையும் கற்பனைகளையுமே பேசுகிறார்.  அவ்வாறு கற்பனைப் பொய்களைப் பேசுபவர் உலக வழக்கில் திறமையாளராகப் பார்க்கப்பட்டாலும் இஸ்லாத்தின் பார்வையில் இது முற்றிலும் தடைசெய்யப்பட்டதாகும்.

 

மக்களைச் சிரிக்க வைப்பதற்காகப் பொய்சொல்பவனுக்குக் கேடுதான்; அவனுக்குக் கேடுதான்அவனுக்குக் கேடுதான்என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (திர்மிதீ: 2315)

 

மக்களைச் சிந்திக்கத் தூண்டும் வகையில் விகடமாகப் பேசுவது குற்றமில்லை. ஆனால் இன்று ஜோக்என்ற பெயரில் மக்களைச் சிரிக்க வைப்பதற்காகப் பொய்களும் கற்பனைகளுமே சொல்லப்படுகின்றன. மேடையில் உள்ளோரையும் பார்வையாளர்களையும் வம்புக்கு இழுத்து, அவர்களின் உடல் குறைகளை, நிறத்தை, இன்னபிற வேறுபாடுகளைப் பேசிச் சிரிக்க வைக்கின்றனர். கணவன்-மனைவி குறித்தும், ஆசிரியர்கள் குறித்தும், தந்தை-மகன் குறித்தும், மாமியார்-மருமகள் குறித்தும் திரைப்படங்களில் காட்டப்படுகின்ற ஜோக்குகள் அவர்களின் உறவைக் கொச்சைப்படுத்திவிடுகின்றன. அதைப் பார்க்கின்ற இளநெஞ்சங்களில் அந்த உறவுகள் குறித்துத் தவறான அல்லது மரியாதையற்ற மனநிலை பதிந்துபோய்விடுகின்றது. அதையே அவர்கள் தம் அன்றாட வாழ்க்கையில் வெளிப்படுத்துகின்றார்கள்.

 

குறிப்பாக, கணவன்-மனைவி குறித்தும் மாமியார்-மருமகள் குறித்தும் திரைப்படங்களில் காட்டப்படுகின்ற காட்சிகள் இளைஞர்கள்-இளைஞிகளின் மனங்களில் எதிர்மறையான கருத்துகளைப் பதிவுசெய்துவிடுகின்றன. அதன்பின் திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கின்ற புதுமணத் தம்பதிகள் தமக்கிடையே சரியான புரிதல் இல்லாமல், சில மாதங்களிலேயே பிரிந்துவிட எண்ணுவதும், ‘இவள் அல்லது இவன் சரிவர மாட்டான்என்று எண்ணுவதும் மனதில் அவ்வப்போது தோன்றி மறைகின்றன; இறுதியில் அவ்விருவரும் பிரிந்துவிடுகின்றார்கள். அல்லது புதிதாக வந்த மருமகள் தன் மாமியாரோடு  சண்டைக்கு நிற்பதும் அவரைவிட்டு விலகி வாழ எண்ணுவதும், பின்னர் தன் கணவனைத் தனிக் குடித்தனம் வருமாறு நச்சரிப்பதும் நடைபெறுகின்றன. அல்லது தாய்-மகன் உறவைப் பிரித்து, அவனைத் தனக்கு மட்டும் உரியவனாக மாற்றிவிடுகின்றாள். அதனால் அந்த மகன் தன்னை ஈன்றெடுத்த தாயையே ஒதுக்கும் சூழ்நிலை ஆங்காங்கே நிலவுகிறது. இவையனைத்தும் இல்வாழ்வு குறித்த திரைப்படக் காட்சிகள், தொலைக்காட்சி நெடுந்தொடர்க் காட்சிகளின் விளைவுகளே என்றால் மிகையில்லை.

 

பள்ளிகளில் ஆட்டம்-பாட்டம்: திரைப்படங்களின் தாக்கம் எல்லா இடங்களிலும் பரவி இருக்கிறது. அதில் நம் பிள்ளைகள் படிக்கின்ற பள்ளிக்கூடங்களும் கல்லூரிகளும் விதிவிலக்கல்ல. பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ஆண்டுதோறும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். கடந்த காலங்களில் நடைபெற்ற ஆண்டு விழாக்களில் மாணவ-மாணவியரின் திறன்களை வெளிப்படுத்தும் விதமாக, கையெழுத்துப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, பேச்சுப் போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி முதலானவை நடைபெறும். மாணவ-மாணவியர் தம் திறன்களை மேம்படுத்திக்கொள்ள அவை உதவியாக இருந்தன. ஆனால் தற்காலத்தில் அவற்றுள் சில இருந்தாலும், மாணவ-மாணவியரின் நடனப் போட்டி, பாட்டுப்போட்டி, மிமிக்ரி, ஜோக்ஸ் முதலானவை ஆக்கிரமித்துக்கொண்டன. ஆக திரைப்படத்தின் தாக்கம் எல்லா இடங்களிலும் குறைவின்றி நிறைவாகப் பரவியுள்ளன.

 

கூடவே கூடாதா?: காட்சி ஊடகங்களில் முஸ்லிம்கள் யாரும் காலடி வைக்கவே கூடாதா? அது முற்றிலும் தடைசெய்யப்பட்டதா? என்று வினவுவோர் உண்டு. நாம் எதைச் செய்தாலும் இஸ்லாமிய வரையறைக்குள் நின்றுதான் செய்ய வேண்டும். அந்த வகையில் காட்சி ஊடகங்கள் குறித்து மார்க்க அறிஞர்களின் கருத்து, வெளியில் இயல்பாக நாம் எதையெல்லாம் பார்ப்பது கூடுமோ அதையெல்லாம் திரைக்காட்சியில் பார்ப்பதும் கூடும். வெளியில் இயல்பாக நாம் எதையெல்லாம் பார்ப்பது கூடாதோ அதையெல்லாம் திரைக்காட்சியில் பார்ப்பதும் கூடாது. இதுதான் திரைப்படம், தொலைக்காட்சி உள்ளிட்ட காட்சி ஊடகங்கள் குறித்து மார்க்க அறிஞர்கள் பலரின் பொதுவான பார்வை.

 

இதன் அடிப்படையில் ஒருவர் இஸ்லாமிய வரையறையைப் பேணி இசையின்றித் திரைப்படம் எடுத்தால்பெண்களைப் பர்தாவுடன் காட்டினால் அதைப் பார்ப்பதில் எந்தக் குற்றமும் இல்லை. அதேநேரத்தில் இஸ்லாமிய வரையறையை மீறி ஒருவர் திரைப்படம் எடுத்தால், அதனை எப்படி மார்க்க அறிஞர்கள் வரவேற்க முடியும்? இன்று காட்சி ஊடகங்களை மார்க்க அறிஞர்களும் பயன்படுத்தவே செய்கின்றார்கள். இஸ்லாமிய மார்க்கச் செய்திகளை மக்கள் மன்றத்தில் சேர்ப்பதற்கு அவர்கள் காட்சி ஊடகத்தைப் பயன்படுத்தியே ஆகவேண்டும் என்ற நிர்ப்பந்த சூழ்நிலை நிலவுவதால் அதனை அவர்கள் பயன்படுத்தி வருகின்றார்கள். ஆன்லைன் வகுப்பு நடத்தவும் தொலைதூரத்தில் உள்ளவர்களுக்குச் சொற்பொழிவாற்றவும் காணொலிக் காட்சி ஊடகத்தையே பயன்படுத்துகின்றார்கள். வரலாற்றுத் தகவல்களை ஆவணப்படுத்தவும் மூத்தவர்களின் உரைகளைச் சேகரித்து வைக்கவும் காட்சி ஊடகம் பயன்படவே செய்கிறது. இதற்கெல்லாம் யாரும் தடைவிதிக்கவில்லை; ஹராம் என்று சொல்லவில்லை.

 

ஆகவே நாம் காட்சி ஊடகத்தைப் பயனுள்ள வழியில் பயன்படுத்த முயல்வோம். தவறான காட்சிகளையோ, எதிர்மறையான கருத்துகளை விதைக்கும் காட்சிகளையோ காணாமல் ஒதுங்கிக்கொள்வோம். நம் சந்ததிகளையும் ஒதுங்கியிருக்கப் பழக்குவோம். எதையும் இஸ்லாமிய மார்க்கச் சட்ட வரைமுறைகளுக்கு உட்பட்டுப் பயன்படுத்த நம்மால் இயன்றவரை பாடுபடுவோம்.

==========================================