-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.
கடந்த காலங்களில் இல்லாத வளர்ச்சியைத் தற்காலத்தில் நாம் அடைந்துள்ளோம். அயல் நாட்டிலுள்ள கணவனிடம் பேசுவதற்குத் தவித்த மனைவி, மகனிடம் பேசுவதற்குச் சிரமப்பட்ட பெற்றோர், தற்போது ஒருவருக்கொருவர் முகம் பார்த்துப் பேசிக்கொள்கின்றனர். பொருள்களைச் சந்தைக்குச் சென்று பேரம்பேசி வாங்கி வந்த காலம் படிப்படியாகக் குறைந்துவருகிறது. வீட்டிலிருந்தபடியே கைப்பேசியில் அழைத்து, வேண்டிய பொருள்களை வாங்கிக்கொள்கிறோம். கடைகளுக்கே செல்லாமல் நமக்குத் தேவையான பொருள்களை ஆர்டர் செய்து வாங்கிக்கொள்கிறோம். காய்கறிகள் வாங்கிச் சமைக்கச் சிரமப்படுவோர் வீட்டிலிருந்தபடியே ஆர்டர் செய்து உணவை வாங்கி, உண்டுவருகின்றனர். இவ்வாறான தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்த யுகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்த இந்தக் காலத்தில், இதைப் பயன்படுத்தத் தெரியாதோரும் இருக்கவே செய்கின்றார்கள். இந்தத் தொழில்நுட்பத்தைக் கல்வி ரீதியாகப் பயன்படுத்தினால் இன்னும் அதிகமான வளர்ச்சியை நாம் அடையலாம். குறிப்பாக கல்வியில் சற்றே முன்னேறிவருகின்ற இன்றைய முஸ்லிம்கள் இது விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அன்று காகிதத்தில் அச்சிடப்பட்ட புத்தகங்களை வைத்துக்கொண்டு மாணவ-மாணவியருக்கு ஆசிரியர்கள் கற்பித்தார்கள். இன்று அப்புத்தகங்களை மின்னூலாக மாற்றி, காட்சி வடிவில் திரையில் காண்பித்து, அத்தோடு விளக்கப்படங்களையும் நேரடியாகக் காட்டி மாணவர்களுக்குக் கற்பிக்கின்றார்கள். ஆக இன்றைய மாணவர்கள் எல்லாவற்றையும் காட்சி வடிவில் நேரடியாகக் கண்டு தெளிவாகக் கற்றுக்கொள்கின்றார்கள்.
தொலைவழி காணொலிக் காட்சி: ஒரு கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றக்கூடிய ஒருவர், தாம் நடத்தும் பாடத்தை வேறு சில கல்லூரிகளில் பயில்கின்ற மாணவர்களும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கின்றார். எனவே அவர், தாம் நடத்துகின்ற பாடத்தை நேரலையில் முகநூல் வழியாக அல்லது யூடியூப் வழியாக ஒளிபரப்புகிறார். அதன் இணைப்பை வாட்ஸ்ஆப் வழியாக அனுப்புகிறார். அந்த இணைப்பைச் சொடுக்கி உள்ளே வருகின்ற அனைவரும் அந்தப் பேராசிரியர் நடத்துகின்ற பாடத்தைத் தொலைதூரத்திலிருந்தே கற்றுக்கொள்கின்றனர். ஆக ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயன்பெறும் வாய்ப்பு இன்று சாத்தியமாகியுள்ளது.
மற்றொரு முறையானது, முகநூல் வழியாக அல்லது யூடியூப் வழியாக ஒளிபரப்பப்படுகின்ற அந்தப் பாடத்தை பிராஜெக்டர் மூலம் திரையில் ஒளிபரப்புச் செய்து, ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பார்த்துப் பயன்பெறும் வாய்ப்பையும் உருவாக்கலாம். ஆகவே ஒரு கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர், எங்கும் பயணம் செய்யாமலே பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்குப் பாடம் நடத்த முடியும் என்ற அளவில் இன்றைய தொழில்நுட்பவியல் வளர்ந்துள்ளது.
குற்றம் சாட்டப்பெற்ற ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அவர்மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவர் தமிழ்நாட்டின் ஏதோ ஓர் ஊரில் இருக்கிறார். சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெறுகிறது. இப்போது அவரை உயர்நீதி மன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். பன்னூறு கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து அவரைக் காவலர்கள் அழைத்துச் சென்றுதான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். இதுதான் பழைய நடைமுறை. இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியால், அது மிக மிக எளிதாகியுள்ளது. அவ்வளவு தூரம் பயணித்து, பண விரயம், நேர விரயம் எதுவும் செய்யத் தேவையில்லை. மாறாக குற்றம் சாட்டப்பட்டவரை அவ்வூரின் மாவட்ட நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்று, அங்கு தொலைவழி காணொலிக் காட்சி (Video teleconference) மூலம் முகத்துக்கு முகம் பார்த்து, நீதிபதி கேட்கின்ற கேள்விகளுக்கும் வக்கீல் செய்கின்ற குறுக்கு விசாரணைக்கும் பதிலளித்தால் போதுமானது. ஆக இதுபோன்ற தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்துவதால் மக்களின் சிரமங்கள் குறையும்; எளிதில் பல்வேறு வழக்குகளுக்குத் தீர்வு காண முடியும்.
கூகுள் மீட்: ஒரு பெரிய அரசியல் கட்சி அது. பல்வேறு ஊர்களிலும் அதன் முக்கியப் பொறுப்பாளர்கள் இருக்கின்றார்கள். இப்போது அவர்களுடன் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்த வேண்டும். எனவே உடனடியாகத் தலைமையகத்திலிருந்து அனைவருக்கும் வாட்ஸ்ஆப் மூலம் செய்தி அனுப்பப்படுகிறது. பின்னர் குறிப்பிட்ட நேரத்தில் கூகுள் மீட் வழியாக ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. முக்கியப் பொறுப்பாளர்கள் தம் ஆலோசனைகளை வழங்குகின்றார்கள். ஆக அவர்கள் அனைவரும் தத்தம் இருப்பிடத்திலிருந்தவாறே நிர்வாகக் கூட்டத்தில் கலந்துகொண்டுவிட்டனர். அக்கூட்டமும் இனிதே நடைபெற்று முடிவடைந்துவிட்டது. கூகுள் மீட். கூகுள் கிளாஸ்ரூம் ஆகிய இணையவழிச் செயலிகள் மூலம் ஒரே நேரத்தில் 100 முதல் 1000 பேர் வரை இணைந்து வகுப்புகளை அல்லது ஆலோசனைக் கூட்டங்களை நடத்தலாம் என்ற புதிய வசதி தற்காலத்தின் தொழில்நுட்ப வளர்ச்சியாகும்.
துரித நூல்கள்: கடந்த காலங்களில் எழுத்தாளர் உள்ளிட்ட படைப்பாளர்கள் தம் புத்தகங்களை அச்சுக்குக் கொண்டுவர மிகுந்த சிரமப்பட வேண்டும். மிகுதியான பணத்தைச் செலவழிக்க வேண்டும்; நீண்ட நாள்கள் காத்திருக்க வேண்டும். ஆனால் தற்காலத் தொழில்நுட்ப வளர்ச்சியால், படைப்பாளர்கள் எழுதுவதை அவர்களே தட்டச்சு செய்து விடுகின்றார்கள். புத்தக வடிவமைப்புக்கு மட்டும் பிறரை நாடுகின்றார்கள். புத்தக வடிவமைப்புக்குப்பின் அதனை அப்படியே அச்சுக்குக் கொடுத்துத் தமக்குத் தேவையான பிரதிகளை அச்சில் பெற்றுக்கொள்கின்றார்கள். கடந்த காலங்களைப்போல் நூல்களை அச்சிட நிறையப் பணத்தைச் செலவிட்டு, அதில் முடக்க வேண்டிய அவசியமில்லை. மாறாக எத்தனைப் பிரதிகள் தேவையோ அத்தனைப் பிரதிகளை மட்டும் அச்சிட்டுப் பெற்றுக் கொள்ளலாம். குறைந்த பட்சம் எட்டுப் பிரதிகள் முதல் அதிகபட்சம் எத்தனைப் பிரதிகள் வேண்டுமானாலும் அச்சிட்டு, வாங்கி வைத்துக்கொண்டு, இருப்பிடத்திலிருந்தே விற்பனை செய்துகொள்ளலாம். இந்த முறைக்கு ஓடிபீ (On Demand Print) என்று சொல்லப்படுகிறது.
காகிதமில்லா நூல்கள்: படைப்பாளர்கள் தாங்கள் எழுதிய நூல்களை, அறவே செலவின்றி வெளியிட முடியும்;
விற்பனை செய்து இலாபமும்
ஈட்ட முடியும். அதற்கான சாத்தியக்கூறு இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏற்பட்டுள்ளது.
படைப்பாளர் ஒருவர் தமது நூலை எழுதியவுடன் அதை எம்எஸ் வேர்ட்-இல் தட்டச்சு செய்து, பிழைகளைக் களைந்து அதை அப்படியே அமேசான் வலைதளத்தில் கேடிபீ பகுதியில் பதிவேற்றம்
செய்துவிட்டால் அவருடைய நூல் விற்பனைக்குச்
சென்றுவிடும்.
காகித நூல் விற்பனையில், அதனை அனுப்பக் குறிப்பிட்ட இடம், தூரம் என்ற எல்லை உண்டு; அனுப்புவதற்கான செலவும் உண்டு. ஆனால் காகிதமில்லா இந்த மின்னூல் உலகெல்லாம் பரவியுள்ள தமிழர்கள் மத்தியில் பரவி அதைப் பற்பலர் வாங்கிப் படிக்கும் வாய்ப்பு உருவாக்கப்படுகிறது. இதனால் படைப்பாளரின் வாசகர்கள் வட்டம் விசாலமாகின்றது. இதனை ‘கிண்டில் நூல்’ என்று அழைக்கின்றார்கள். அதற்கெனத் தனிக் கருவியும் உண்டு; அதில் வாசிக்கலாம். அல்லது அவரவர் தத்தம் அறிதிறன் பேசியில் அதற்கான செயலியைத் தரவிறக்கம் செய்தும் வாசிக்கலாம்.
நூல்களை ஆவணப்படுத்துதல்: அழியும் நிலையில் உள்ள பழைய நூல்களை ஆவணப்படுத்த புதிய
தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம். எத்தனையோ மூத்த அறிஞர்களின் நூல்கள் மீள்பதிப்பு
செய்யப்படாமல் இங்கொன்றும் அங்கொன்றுமாக
இருக்கின்றன. அந்த நூல்களைத் தேடிப்பிடித்து, அவற்றைத் தட்டச்சு செய்து,
மின்னூல்களாக உருவாக்கிப்
பத்திரப்படுத்தலாம். அத்தோடு அவற்றை மற்றவர்களும் படித்துப் பயன்பெறும் வகையில் சமூக
ஊடகங்களில் பரப்பலாம். மேலும் அவற்றை மின்னூல்களாகப் பத்திரப்படுத்துவதால் எதிர்காலச்
சந்ததிகள் அவற்றின் மூலம் பயனடைவார்கள்.
தற்கால இளைஞர்கள்-இளைஞிகள் காகித நூல்களை வாசிப்பதைவிட மின்னூல்களைக் கணினியில் அல்லது அறிதிறன்பேசியில் அல்லது படிப்பதற்கென்றே உருவாக்கப்பட்டுள்ள கிண்டில் உள்ளிட்ட சாதனங்களில் படிக்கின்றார்கள். ஆகவே படைப்பாளர்களும் கொஞ்சம் கொஞ்சமாகக் கணினி மூலம் தம் நூல்களை மின்னூல்களாக உருவாக்க முன்வந்துள்ளார்கள். தாம் ஏற்கெனவே எழுதிய நூல்களையெல்லாம் மின்னூல்களாக உருவாக்கி, இணையத்தில் பதிவேற்றம் செய்துவருகின்றார்கள். அதனால் அவர்கள் தாம் வாழும் காலத்திலேயே தம் நூல்களைப் பாதுகாப்பாக வைத்துவிட்டுச் செல்லும் வாய்ப்புள்ளது.
செயற்கை நுண்ணறிவு: ஏஐ தொழில்நுட்பம் தற்போது மிகுந்த வளர்ச்சியடைந்துள்ளது. அது பயன்படுத்தப்படாத துறையே இல்லை எனலாம். எல்லாவற்றிலும் அதன் பங்கு உள்ளது. அந்த வகையில் அந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, நமக்குத் தேவையான கருத்துகளைக் கேட்டுப் பெறலாம். தேவையான தகவல்களைத் தேடிப் பெறலாம். ஒரு மொழியிலிருந்து வேறொரு மொழிக்கு மாற்றிக்கொள்ளலாம். இப்படி எண்ணற்ற பயன்கள் இதில் உள்ளன.
இவ்வாறு தொழில்நுட்ப வளர்ச்சியின் மூலம் எண்ணற்ற நன்மைகள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் விட்டுவிட்டு, வெறுமனே செல்ஃபோன் மூலம் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பரப்பப்படுகின்ற காணொலிக் காட்சிகளைக் காண்பதிலேயே தம் நேரத்தை வீணடித்துவிட்டு, வாழ்க்கையில் முன்னேற வழி தெரியாமல் வீதியோரம் நின்று புலம்புவதில் அர்த்தமில்லை. எனவே நாம் அனைவரும் தற்காலத்தில் உள்ள தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்தி, நம்மால் பலர் பயன்பெறும் வகையில் நம் செயல்பாடுகளை அமைத்துக்கொள்வோம்.
==================================0
2 கருத்துகள்:
அல்ஹம்துலில்லாஹ்! தொழில் நுட்ப சாதனங்களின் பயன்பாடுகளை வரிசைப்படுத்தி சொல்லி இருக்கும் விதம் அற்புதம்.
தங்களின் இந்த பதிவு நிச்சயமாக பல இளைஞர்களுக்கு மனமாற்றம் ஏற்படும் இன்ஷா அல்லாஹ்
கருத்துரையிடுக