-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.
இமாம் மதீனா பள்ளிவாசல், பட்டினம்பாக்கம் சென்னை-28
இன்று எல்லாமே காட்சி ஊடக மயமாகிவிட்டது. நம்முள் பெரும்பாலோர் காட்சி ஊடக வலைக்குள்
சிக்குண்டு கிடக்கின்றார்கள். அவ்வலைக்குள் சிக்காதோர் அரிதிலும் அரிதாகச் சிலர் இருக்கலாம்
என்று நம்புவோம். ஏனெனில் கடந்த காலங்களில் திரையரங்குகளில் சென்றுதான் திரைப்படத்தைப்
பார்த்து இரசிக்கும் நிலை இருந்தது. பின்னர் வீட்டுக்கு வீடு தொலைக்காட்சிப் பெட்டி
வந்தது. அதன்மூலம் அவ்வப்போது திரையிடப்படுகிற திரைப்படங்களை மட்டும் மக்கள் கண்டு
இரசித்தார்கள். ஆனால் தற்காலத்தில் ஒவ்வொருவரின் கையிலும் அறிதிறன்பேசி உள்ளது;
அதனுள் எல்லாக் காட்சிகளும்
உள்ளன. எனவே விரல்நுனியில் எதனையும் பார்க்க முடியும் என்ற நிலை உள்ளது.
மது, சூதாட்டம் ஆகிய இரண்டைக் குறித்து இறைவன் கூறுகிறபோது, “அவ்விரண்டிலும் பெரும்பாவம் உள்ளது;
மக்களுக்கு(ச் சில) நன்மைகளும்
உள்ளன. (இருப்பினும்) அவ்விரண்டின் நன்மைகளைவிடத் தீமைகளே மிக அதிகம்” (2: 219) என்று கூறுகின்றான். மது, சூதாட்டம் ஆகியவற்றைப் போலவே திரைப்படத்திலும் நன்மைகளும் தீமைகளும் கலந்தே உள்ளன.
இருப்பினும் நன்மைகளைவிடத் தீமைகளே மிக அதிகம் என்பதை யாரும் மறுக்க முடியாது.
காட்சி ஊடகம் என்றதும் எல்லோருக்கும் திரைப்படம் (சினிமா) மட்டுமே நினைவுக்கு
வரும். ஆனால் அது ‘திரைப்படம்’ என்ற ஒற்றை வார்த்தைக்குள் முடிந்துவிடுவதில்லை. அதனுள் அதன்
காட்சிகள், வசனங்கள், பாடல்கள், நையாண்டிகள், கேலிகள் அனைத்தும் உள்ளன. அவை மக்களின் மனங்களில் ஆழமாகப் பதிந்துவிட்டன. இருவர்
அல்லது மூவர் உரையாடிக்கொண்டிருக்கும்போது, அவர்களின் பேச்சில் வெளிப்படுவது
திரைப்பட வசனங்கள்தாம். அந்த அளவிற்குத் திரைப்படக் காட்சிகளும் வசனங்களும் பாடல் வரிகளும்
மக்கள் மனங்களில் வேரூன்றிப் பதிந்துபோய்விட்டன. குறிப்பாக இளவயதுப் பிள்ளைகளின் பிஞ்சு
நெஞ்சங்களில் அவை மஞ்சமிட்டு அமர்ந்துள்ளன.
திரைப்படம் பாவங்களின் தாய் என்றால், பாடல்கள், மிமிக்ரி, நையாண்டி, கேலி கிண்டல், உருமாற்றம் செய்தல் உள்ளிட்டவை அதன் குழந்தைகள் எனலாம். திரைப்படங்களைப் பார்க்கின்ற
நம் பிள்ளைகள் அதில் நடிக்கின்ற நடிகர்கள்-நடிகைகள் போல் தாமும் நடிக்க, அவன் குடித்ததைப் போல் குடிக்க,
அவன் புகைபிடித்ததைப்
போல் புகைபிடிக்க, அவன் பேசியதைப்போல் பேச, உடுத்தியதைப் போல் உடுத்த விரும்புகின்றனர். இதுதான் திரைப்படத்தின் தாக்கம்.
இன்னும் சற்றுக் கூடுதலாகச் சொல்ல வேண்டுமானால் அதில் அந்த நடிகன் கொலை செய்ததைப்போல்
கொலை செய்யவும் கொள்ளையடித்ததைப் போல் கொள்ளையடிக்கவும் முயல்கின்றனர்;
அதைச் செயல்படுத்தி, காவல்துறையில் மாட்டிக்கொண்டபின், விசாரணையில், நான் அந்தப் படத்தைப் பார்த்துத்தான் இவ்வாறு செய்தேன் என்று
வாக்குமூலம் கொடுப்பதைப் படித்திருப்பீர்கள்.
பிஞ்சு நெஞ்சங்களில் புகுந்துகொண்ட பாடல்கள்: திரைப்படப் பாடல்களின் இசையால் ஈர்க்கப்பட்ட
இள நெஞ்சங்கள் சின்னதிரையில் பாடல்கள் பாடிக் கொண்டிருக்கின்றார்கள். திருக்குர்ஆனை
ஓத வேண்டிய இளவயதில் இசைமேடைகளில் நின்றுகொண்டு காதல் பாடல்களை அதன் பொருள் புரியாமல்
பாடிக்கொண்டிருக்கின்றனர். அவர்கள் பாடும் அழகைக் கண்டு அவர்களின் பெற்றோர் ஆனந்தக்
கூத்தாடுகின்றனர்; அடைய முடியாத சிகரத்தை அடைந்துவிட்டதாக மகிழ்கின்றார்கள்; தம் பிள்ளைகள் இந்த மேடையில்
மட்டுமின்றி, அடுத்தடுத்த கட்டத்திற்கு முன்னேறி, பல மேடைகளில் ஏற வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர். இதெல்லாம்
எதனால் என்றால், திரைப்படப் பாடல்களின் இசையால் ஈர்க்கப்பட்டது மட்டுமின்றி, அது ஒரு கலைத்திறன் என்று நம்புவதால்தான்.
பாடல்கள், வீண்வேடிக்கைகள் குறித்து அல்லாஹ் திருக்குர்ஆனில் எச்சரிக்கை செய்திருக்கின்றான். “வீண் வேடிக்கைகளை விலைக்கு வாங்குவோரும் மனிதர்களில் உள்ளனர். அறிவின்றி, இறைவழியிலிருந்து (மக்களை) வழிபிறழச் செய்வதற்காகவும் அதை ஒரு கேலிப் பொருளாக எடுத்துக்காட்டுவதற்காகவும் (இவ்வாறு செய்கின்றனர்). இத்தகையோருக்கு இழிவு தரும் வேதனை நிச்சயமாக உண்டு.” (31: 6)
“என் சமுதாயத்தாரில் சில கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் விபச்சாரம் (செய்தல்), (ஆண்கள்) பட்டுத் துணி (அணிதல்), மது (அருந்துதல்), இசைக் கருவிகள் (இசைத்தல்) ஆகியவற்றை அனுமதிக்கப்பட்டவையாகக் கருதுவார்கள்.,,” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (புகாரீ: 5590)
பிறரைப் போல் பேசுதல் (மிமிக்ரி): திரைப்படத்தின் மற்றொரு குழந்தைதான் பிறரைப் போல் பேசுதல் ஆகும். இதை இன்றைய மக்கள், ஒரு திறமை என்று கூறுகின்றார்கள். அதனால்தான் பிற நடிகர்களைப் போல், பிற நடிகைகளைப் போல் பேசுவோரை வரவேற்கின்றார்கள்; பாராட்டுகின்றார்கள். இதையும் ஒரு கலைத்திறனாக அங்கீகரிக்கின்றார்கள். ஆனால் இஸ்லாம் இது குறித்து என்ன சொல்கிறது?
அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறியதாவது: நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒரு மனிதரைப் போல (ஏளனமாக) நடித்துக் காட்டிப் பேசினேன். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “எனக்கு இன்னின்ன (செல்வங்கள்) கிடைக்கும் என்றிருந்தாலும் ஒரு மனிதரைப் போல (ஏளனமாக) நடித்துக் காட்டிப் பேசுவதை நான் விரும்பமாட்டேன்” என்று கூறினார்கள். (அபூதாவூத்: 4875/ 4232)
ஒருவரை நெட்டை, குட்டை என்று சொல்லி, அவரது மனத்தைப் புண்படுத்துவதோ, ஒருவரைப் போன்று பேசி கிண்டல் செய்வதோ இஸ்லாமிய மார்க்கத்தில்
கூடாது. ஆகவே பிறரின் குரலில் பேசக்கூடியவன், ஆண்குரலில் பேசக்கூடிய பெண்,
பெண் குரலில் பேசக்கூடிய
ஆண் அனைவரும் அல்லாஹ்வின் பார்வையில் சபிக்கப்பட்டவர்கள் ஆவர். மிமிக்ரி செய்பவன் காலப்போக்கில்
மக்களை ஏமாற்றும் வேலையையும் செய்யத் தலைப்படுவான். அதன் காரணமாகவும் அது தடைசெய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொருவரின் குரலும் அவரவருக்கான தனித்த அடையாளமாகும். அதைச் சிதைக்கும் வண்ணம் அமைகிறது
மிமிக்ரி. ஆகவே மிமிக்ரி செய்வதை முஸ்லிம்கள் முற்றிலும் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
ஒருவரின் பேச்சு ஒலி வடிவில் பதிவு செய்யப்படுகிறது. அவரது குரலைக் கேட்டவுடன்
இது இன்னாருடைய குரல் என்று நாம் அடையாளம் கண்டுகொள்கிறோம். மிமிக்ரி செய்வோர் குறிப்பிட்ட
ஒருவரின் குரலில் எதையாவது தவறாகப் பேசிப் பதிவுசெய்து, பொதுத்தளங்களில் வெளியிட்டுவிட்டால்
அது அக்குறிப்பிட்ட மனிதருக்கு எதிராக அமைந்துவிடும் ஆபத்து இதில் உள்ளதால் இஸ்லாமிய
மார்க்கத்தில் இது தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும் ஒருவரின் குரல் இனிமையாக இருக்கலாம்;
மற்றொருவரின் குரல்
சற்றுக் கரடுமுரடாக இருக்கலாம். கரடுமுரடான, தடிமனான குரலைக்கொண்ட மனிதரின்
குரலில் பேசி, அது பொதுத்தளங்களில் உலா வந்தால் அதைக் கேட்கின்ற அவர் நிச்சயம் வருத்தப்படுவார்.
அதன் காரணத்தால்தான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மிமிக்ரி செய்வதைத்
தடைசெய்தார்கள்.
நையாண்டிப் பேச்சு: பிறரைச் சிரிக்க வைப்பதற்காக ‘ஜோக்’ சொல்லப்படுகிறது. அதுவும் இன்று ஒரு ‘கலை’யாகப் பார்க்கப்படுகிறது. நீண்ட
நேரம் ‘ஜோக்’ சொல்பவர் திறமையாளராகப் பார்க்கப்படுகிறார்.
நீண்ட நேரம் ‘ஜோக்’ சொல்பவர் மக்களைச் சிரிக்க வைப்பதற்காகப் பொய்களையும் கற்பனைகளையுமே பேசுகிறார். அவ்வாறு கற்பனைப் பொய்களைப் பேசுபவர் உலக வழக்கில்
திறமையாளராகப் பார்க்கப்பட்டாலும் இஸ்லாத்தின் பார்வையில் இது முற்றிலும் தடைசெய்யப்பட்டதாகும்.
“மக்களைச் சிரிக்க வைப்பதற்காகப் பொய்சொல்பவனுக்குக் கேடுதான்; அவனுக்குக் கேடுதான்; அவனுக்குக் கேடுதான்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (திர்மிதீ: 2315)
மக்களைச் சிந்திக்கத் தூண்டும் வகையில் விகடமாகப் பேசுவது குற்றமில்லை. ஆனால் இன்று
‘ஜோக்’ என்ற பெயரில் மக்களைச் சிரிக்க வைப்பதற்காகப் பொய்களும் கற்பனைகளுமே சொல்லப்படுகின்றன.
மேடையில் உள்ளோரையும் பார்வையாளர்களையும் வம்புக்கு இழுத்து, அவர்களின் உடல் குறைகளை,
நிறத்தை, இன்னபிற வேறுபாடுகளைப் பேசிச்
சிரிக்க வைக்கின்றனர். கணவன்-மனைவி குறித்தும், ஆசிரியர்கள் குறித்தும்,
தந்தை-மகன் குறித்தும்,
மாமியார்-மருமகள் குறித்தும்
திரைப்படங்களில் காட்டப்படுகின்ற ஜோக்குகள் அவர்களின் உறவைக் கொச்சைப்படுத்திவிடுகின்றன.
அதைப் பார்க்கின்ற இளநெஞ்சங்களில் அந்த உறவுகள் குறித்துத் தவறான அல்லது மரியாதையற்ற
மனநிலை பதிந்துபோய்விடுகின்றது. அதையே அவர்கள் தம் அன்றாட வாழ்க்கையில் வெளிப்படுத்துகின்றார்கள்.
குறிப்பாக, கணவன்-மனைவி குறித்தும் மாமியார்-மருமகள் குறித்தும் திரைப்படங்களில் காட்டப்படுகின்ற
காட்சிகள் இளைஞர்கள்-இளைஞிகளின் மனங்களில் எதிர்மறையான கருத்துகளைப் பதிவுசெய்துவிடுகின்றன.
அதன்பின் திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கின்ற புதுமணத் தம்பதிகள் தமக்கிடையே
சரியான புரிதல் இல்லாமல், சில மாதங்களிலேயே பிரிந்துவிட எண்ணுவதும், ‘இவள் அல்லது இவன் சரிவர மாட்டான்’ என்று எண்ணுவதும் மனதில் அவ்வப்போது தோன்றி மறைகின்றன; இறுதியில் அவ்விருவரும் பிரிந்துவிடுகின்றார்கள்.
அல்லது புதிதாக வந்த மருமகள் தன் மாமியாரோடு
சண்டைக்கு நிற்பதும் அவரைவிட்டு விலகி வாழ எண்ணுவதும், பின்னர் தன் கணவனைத் தனிக் குடித்தனம்
வருமாறு நச்சரிப்பதும் நடைபெறுகின்றன. அல்லது தாய்-மகன் உறவைப் பிரித்து, அவனைத் தனக்கு மட்டும் உரியவனாக
மாற்றிவிடுகின்றாள். அதனால் அந்த மகன் தன்னை ஈன்றெடுத்த தாயையே ஒதுக்கும் சூழ்நிலை
ஆங்காங்கே நிலவுகிறது. இவையனைத்தும் இல்வாழ்வு குறித்த திரைப்படக் காட்சிகள்,
தொலைக்காட்சி நெடுந்தொடர்க்
காட்சிகளின் விளைவுகளே என்றால் மிகையில்லை.
பள்ளிகளில் ஆட்டம்-பாட்டம்: திரைப்படங்களின் தாக்கம் எல்லா இடங்களிலும் பரவி இருக்கிறது.
அதில் நம் பிள்ளைகள் படிக்கின்ற பள்ளிக்கூடங்களும் கல்லூரிகளும் விதிவிலக்கல்ல. பள்ளிகளிலும்
கல்லூரிகளிலும் ஆண்டுதோறும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். கடந்த காலங்களில்
நடைபெற்ற ஆண்டு விழாக்களில் மாணவ-மாணவியரின் திறன்களை வெளிப்படுத்தும் விதமாக,
கையெழுத்துப் போட்டி,
கட்டுரைப் போட்டி,
கவிதைப் போட்டி,
பேச்சுப் போட்டி,
திருக்குறள் ஒப்புவித்தல்
போட்டி முதலானவை நடைபெறும். மாணவ-மாணவியர் தம் திறன்களை மேம்படுத்திக்கொள்ள அவை உதவியாக
இருந்தன. ஆனால் தற்காலத்தில் அவற்றுள் சில இருந்தாலும், மாணவ-மாணவியரின் நடனப் போட்டி,
பாட்டுப்போட்டி,
மிமிக்ரி, ஜோக்ஸ் முதலானவை ஆக்கிரமித்துக்கொண்டன.
ஆக திரைப்படத்தின் தாக்கம் எல்லா இடங்களிலும் குறைவின்றி நிறைவாகப் பரவியுள்ளன.
கூடவே கூடாதா?: காட்சி ஊடகங்களில் முஸ்லிம்கள் யாரும் காலடி வைக்கவே கூடாதா? அது முற்றிலும் தடைசெய்யப்பட்டதா?
என்று வினவுவோர் உண்டு.
நாம் எதைச் செய்தாலும் இஸ்லாமிய வரையறைக்குள் நின்றுதான் செய்ய வேண்டும். அந்த வகையில்
காட்சி ஊடகங்கள் குறித்து மார்க்க அறிஞர்களின் கருத்து, வெளியில் இயல்பாக நாம் எதையெல்லாம்
பார்ப்பது கூடுமோ அதையெல்லாம் திரைக்காட்சியில் பார்ப்பதும் கூடும். வெளியில் இயல்பாக
நாம் எதையெல்லாம் பார்ப்பது கூடாதோ அதையெல்லாம் திரைக்காட்சியில் பார்ப்பதும் கூடாது.
இதுதான் திரைப்படம், தொலைக்காட்சி உள்ளிட்ட காட்சி ஊடகங்கள் குறித்து மார்க்க அறிஞர்கள் பலரின் பொதுவான
பார்வை.
இதன் அடிப்படையில் ஒருவர் இஸ்லாமிய வரையறையைப் பேணி இசையின்றித் திரைப்படம் எடுத்தால், பெண்களைப் பர்தாவுடன் காட்டினால் அதைப் பார்ப்பதில் எந்தக் குற்றமும் இல்லை. அதேநேரத்தில்
இஸ்லாமிய வரையறையை மீறி ஒருவர் திரைப்படம் எடுத்தால், அதனை எப்படி மார்க்க அறிஞர்கள்
வரவேற்க முடியும்? இன்று காட்சி ஊடகங்களை மார்க்க அறிஞர்களும் பயன்படுத்தவே செய்கின்றார்கள். இஸ்லாமிய
மார்க்கச் செய்திகளை மக்கள் மன்றத்தில் சேர்ப்பதற்கு அவர்கள் காட்சி ஊடகத்தைப் பயன்படுத்தியே
ஆகவேண்டும் என்ற நிர்ப்பந்த சூழ்நிலை நிலவுவதால் அதனை அவர்கள் பயன்படுத்தி வருகின்றார்கள்.
ஆன்லைன் வகுப்பு நடத்தவும் தொலைதூரத்தில் உள்ளவர்களுக்குச் சொற்பொழிவாற்றவும் காணொலிக்
காட்சி ஊடகத்தையே பயன்படுத்துகின்றார்கள். வரலாற்றுத் தகவல்களை ஆவணப்படுத்தவும் மூத்தவர்களின்
உரைகளைச் சேகரித்து வைக்கவும் காட்சி ஊடகம் பயன்படவே செய்கிறது. இதற்கெல்லாம் யாரும்
தடைவிதிக்கவில்லை; ஹராம் என்று சொல்லவில்லை.
ஆகவே நாம் காட்சி ஊடகத்தைப் பயனுள்ள வழியில் பயன்படுத்த முயல்வோம். தவறான காட்சிகளையோ, எதிர்மறையான கருத்துகளை விதைக்கும் காட்சிகளையோ காணாமல் ஒதுங்கிக்கொள்வோம். நம் சந்ததிகளையும் ஒதுங்கியிருக்கப் பழக்குவோம். எதையும் இஸ்லாமிய மார்க்கச் சட்ட வரைமுறைகளுக்கு உட்பட்டுப் பயன்படுத்த நம்மால் இயன்றவரை பாடுபடுவோம்.
==========================================
1 கருத்து:
மாஷா அல்லாஹ்
கருத்துரையிடுக