செவ்வாய், 24 டிசம்பர், 2024

தொடர்: 4 விடாமுயற்சியின் வெற்றிக்கனி (குறுநாவல்)

 


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி

 

இவ்வாறு நற்பணிகள் பலவும் செய்துகொண்டிருந்த அஹத் இமாமிடம் ஒருவர், “நீங்க பிஎச்.டி. பட்டம் பெற்றிருந்தும் ஏன் கல்லூரிப் பேராசிரியராகச் செல்லவில்லை?” என்று கேட்டார். நான் இமாமாகவும் மொழிபெயர்ப்பாளராகவுமே நீண்ட காலம் இருந்துட்டேன்; அதனால் அது பற்றி யோசிக்கல. இருந்தாலும் புதுக் கல்லூரிக்கு இரண்டு தடவை நேர்காணலுக்குச் சென்றிருக்கிறேன். அப்போது என்னைவிட வயதில் மூத்தவங்களெ தேர்வு செய்துட்டாங்க; அதன்பிறகு நான் அதற்காக எந்த முயற்சியும் எடுக்கலஎன்றார்.

 

இப்ப போங்க இமாம் ஸாப். இப்போது புதிதாக அறிவிப்பு வந்திருக்கு. அரபுப் பேராசிரியர் பணிக்கு ஆள் தேவைப்படுகிறதாம்என்று அவர்மீது அன்புகொண்ட ஒருவர் சொன்னார். அச்சமயத்தில் கொரோனா தீநுண்மி பரவி, அடங்கியிருந்த காலம். அதனால் பள்ளிவாசல் பணியிலிருந்து விடைபெற்றுச் சென்றுவிட்டார். குறிப்பிட்ட நாளில் இன்டர்வியூ செல்லத் தயாரானார். தமது இரு சக்கர வாகனத்தை ஓங்கி உதைத்து, ஓடச் செய்ய முயன்றார். அச்சமயம் பார்த்து அது ஓட மறுத்துவிட்டது. அதனால் ஆட்டோ ஒன்றில் ஏறி, புதுக்கல்லூரியை அடைய சற்றுத் தாமதமாகிவிட்டது. முதலில் வந்தோர் தம் வருகையைப் பதிவுசெய்துவிட்டனர். பின்னர் இவர் சென்று, தம் வருகையைப் பதிவுசெய்துகொள்ளும்படி கூறினார்.

 

அதெல்லாம் தேவையில்லை; இதோ அவர்களோடு சேர்ந்து அமருங்கள்; ஒவ்வொருவராக அழைப்பார்கள்என்றார் அங்கிருந்த அலுவலகப் பணியாளர். சரியென அவர்களோடு அமர்ந்துவிட்டார். அவர்களுள் ஒவ்வொருவரும் முறைப்படி அழைக்கப்பட்டார்கள். ஆனால் வெகுநேரமாகியும் அவரது பெயர் மட்டும் அழைக்கப்படவே இல்லை.

 

என்னங்க, வெகுநேரமாகியும் எனது பெயர் மட்டும் அழைக்கப்படவே இல்லை?” என்று எழுந்து சென்று அந்த அலுவலகப் பணியாளரிடம் கேட்டபோது, அவர் உள்ளே சென்று, “இன்னும் ஒரு கேண்டிடேட் இருக்கிறார்என்று சொன்னார். சரி அவரை உடனடியாக உள்ளே வரச்சொல்லுங்கஎன்று சொல்ல, அதன்பின் உள்ளே சென்றார். இன்டர்வியூ நடைபெற்றது. அவர்கள் கேட்ட வினாக்களுக்கு விடையளித்தார். இறுதியில் வழமையாகக் கேட்பதுபோல், “உங்களுக்குப் பாடம் நடத்திய அனுபவம் இருக்கா?” என்று இப்ராஹீம் சார் கேட்டார்.

 

அந்தக் கேள்வியைக் கேட்டாலே அஹதுக்குக் கோபம் வந்துவிடும். இதுவரை இரண்டு தடவை எந்த வாய்ப்பும் கொடுக்கவில்லை. வாய்ப்பே கொடுக்காமல் முன்அனுபவம் இருக்கா என்று கேட்பது என்ன நியாயம்?

 

ஆனால் அவர்கள் கேட்பதோ இதற்குமுன் வேறு எங்கேனும் பள்ளிக்கூடத்தில் அல்லது கல்லூரியில் பாடம் நடத்திய அனுபவம் இருக்கா என்பதுதான். அது அஹதுக்குத் தெரியாமல் இல்லை. இருப்பினும் அந்தக் கேள்வி அவருக்குக் கோபத்தை ஏற்படுத்தும்.

 

அவர்களின் அந்தக் கேள்விக்கு, “மகளிர் அரபுக் கல்லூரியில் மூன்றாண்டுகள் பாடம் நடத்தியுள்ளேன்என்று சொன்னார். அதனை அவர்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. ஸ்கூல் அல்லது காலேஜில் அனுபவம் இருக்கா?” என்று மீண்டும் கேட்க, “இல்லைஎன்று சொன்னார். சரி, நீங்க போகலாம்என்றனர். சரி, நாம் தேர்வாகவில்லை என்று முடிவுசெய்துகொண்டு வெளியே வந்துவிட்டார். வீட்டிற்கு வந்து தம்முடைய மொழிபெயர்ப்புப் பணியைத் தொடர்ந்தார்.

 

அதன்பின் ஒரு மாதத்தில், சென்னையிலிருந்து நானூறு கிலோமீட்டர் தூரத்திலுள்ள ஒரு முஸ்லிம் கல்லூரியில் அரபுத்துறைப் பேராசிரியர் பணியிடம் காலியாக இருப்பதாகச் செய்தி கேள்விப்பட்டு, அதற்காக விண்ணப்பித்தார். குறிப்பிட்ட தேதியில் நேர்காணலுக்கு வரச் சொல்லி கடிதம் வந்தது.

 

அங்கு புறப்பட்டுச் சென்றார். நீண்ட தூர இரயில் பயணம். காலையில் அங்கு சென்று எங்கு குளிப்பது, ஆடை மாற்றுவது என்று யோசித்துக்கொண்டே சென்றார். அப்போது அந்தப் பெட்டியிலேயே பயணம் செய்த ஒரு முஸ்லிம் குடும்பத்தினர், இவரிடம் பேச்சுக் கொடுத்தனர். ஹஜ்ரத், என் மனைவிக்கு மிடில் பெர்த்-தான் கிடைச்சிருக்கு. அவங்களால மேலே ஏற முடியாது. நீங்கள் உங்களோடு லோயர் பெர்த்-தை விட்டுக்கொடுத்தீங்கன்னா அதுல அவங்க படுத்துக்குவாங்க, நீங்க மிடில் பெர்த்ல படுத்துக்குங்கஎன்று அன்போடு கோரிக்கை வைத்தார் ஷாகுல் ஹமீது.

 

சரியென அந்த லோயர் பெர்த்தை அவருடைய மனைவிக்கு விட்டுக்கொடுக்கச் சம்மதித்தார். அதன்பின்  அவர்களிடையே பேச்சு தொடர்ந்தது. எங்கெ போறீங்க ஹஜ்ரத்?” என்று ஷாகுல் ஹமீது கேட்க, அவர் தாம் செல்லும் ஊர்ப் பெயரைச் சொல்ல, “நாங்களும் அங்கெதான் போறோம்; எங்க சொந்த ஊரே அதுதான் ஹஜ்ரத்என்றார்.

 

அப்படியா?” என்று சொல்லி முடித்துக்கொண்டார். அதன்பின் அவர், “என்ன விஷயமா அங்கெ போறீங்க?” என்று கேட்க, “நான் அங்குள்ள கல்லூரியில் அரபி உஸ்தாத் போஸ்ட்டுக்காக இன்டர்வியூ போறேன்என்றார்.  அப்படியே அவர்களின் பேச்சு தொடர்ந்தது. பின்னர் இரவு உணவைப் பரிமாறிக்கொண்டார்கள். அவர்களிடையே நட்பு வளர்ந்தது.

 

நீங்க கவலைப்படாதீங்க ஹஜ்ரத், நீங்க எங்க வீட்டுக்கு வந்து, குளிச்சுட்டு, ட்ரெஸ் மாத்திக்கிட்டு இன்டர்வியூ போகலாம். எந்தப் பிரச்சனையும் இல்லை; உங்களுக்கு அந்த வேலை கண்டிப்பா கிடைக்கும்என்று சகோதர வாஞ்சையோடு நேர்மறையான வார்த்தைகளைக் கூறினார்.

 

காலையில் இரயிலைவிட்டு இறங்கினார்கள்; அவரும் இறங்கினார். அவர்களோடு ஆட்டோ ஒன்றில் ஏறி,  சில பல தெருக்களைக் கடந்து அவருடைய வீட்டை அடைந்தார். அங்கு சென்றதும் குளித்து, புத்துணர்வடைந்து கொண்டார். ஆடைகளை மாற்றிக்கொண்டு, அவர்கள் கொடுத்த தேநீரைப் பருகிவிட்டு, அவர்களுக்கு நன்றி கூறிப் புறப்பட்டார். வெளியில் சென்று இங்குமங்கும் சற்றுநேரம் ஊரைச் சுற்றிப் பார்த்துவிட்டு, பிறகு ஓர் ஓட்டலில் காலைச் சிற்றுண்டியை முடித்துவிட்டு, காலார நடந்து கல்லூரி நோக்கிச் சென்றார்.

 

அங்கு சென்று தம் வருகையைப் பதிவு செய்துகொண்டார். அரபுத் துறைக்கு இவரைச் சேர்த்து இருவர் மட்டுமே வந்திருந்தனர். தமிழ், ஆங்கிலம், வரலாறு உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள் நேர்காணலுக்கு வந்திருந்தார்கள்.

 

நேர்காணலுக்கு வந்திருந்தோர் நீண்ட நேரம் காத்திருந்தார்கள். அவர்களோடு அஹதும் காத்திருந்தார். பின்னர் அக்கல்லூரியின் தாளாளர் (கரஸ்பாண்டென்ட்) வந்தார். அவர் வந்தபிறகுதான் நேர்காணல் தொடங்கியது.  எல்லாமே நேரடியான பேச்சுவார்த்தைதான் என்பது அப்போதுதான் புரிந்தது. ஒவ்வொருவராக அவருடைய அறைக்குள் செல்கிறார்கள்; முகத்தில் சோகத்தோடு திரும்பி வருகின்றார்கள். இக்காட்சியை அஹத் பார்த்துக் கொண்டே இருக்கிறார். என்னதான் நடக்கிறது என்று யூகிக்க முடியவில்லை. பிறகு அரபுத்துறைக்கான அழைப்பு.  அப்போது அஹதுக்கு முன்னரே கேரளாவிலிருந்து வருகை புரிந்திருந்த கேண்டிடேட் ஒருவர் தம் தந்தையுடன் உள்ளே சென்றார். அவர் கையில் ஒரு சூட்கேஸ் இருந்தது. நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடந்தது.

 

அவர் பிஎச்.டி. முடிக்கவில்லை என்பது பிறகுதான் தெரிந்தது. எம்.ஃபில். மட்டுமே முடித்திருந்தார்.  பிஎச்.டி. தொடர்கிறார். அவ்வளவுதான். பிறகு அஹதை அழைத்தனர்.

 

எவ்வளவு தருவீங்க?” என்று தாளாளர் கேட்டார். உடனடியாகப் பணமெல்லாம் என்னால் தர இயலாது; வேண்டுமானால் என்னுடைய சம்பளத்திலிருந்து மாதந்தோறும் ஒரு தொகையைப் பிடித்துக்கொள்ளுங்கள்என்றார்.

 

அதெல்லாம் முடியாது ஹஜ்ரத். மற்றவர்களுக்கு 30 இலட்சம்; உங்களுக்காக 25 இலட்சம். ஏற்பாடு செய்ய முடியுமா?” என்றார்.

 

என்னால் இயலாது சார்; அவ்வளவு பணத்திற்கு நான் எங்கெ போவேன்?” என்று அப்பாவியாகக் கேட்டார். சரி நீங்க போகலாம்என்று சொல்லிவிட்டார். பின்னர் அந்தக் கேரளக்கார கேண்டிடேட்டை அழைத்தார். சூட்கேஸ் கைமாறியது. அந்த போஸ்ட் அவருக்கு வழங்கப்பட்டது.

 

அதுபோலவே தமிழ்த்துறைக்கு ஆமினா என்ற பெண்மணி வந்திருந்தார். அவருக்குக் கிடைக்க வேண்டிய போஸ்ட், அவரிடம் பணம் இல்லாததால் சகோதர சமுதாயத்தைச் சார்ந்த ஒருவர் பணத்தைக் கொடுத்துப் பெற்றுக்கொண்டார். பணம்தான் இன்டர்வியூ என்று அப்போதுதான் அஹதுக்குப் புரிந்தது.

 

எல்லோரும் மதியம் சாப்பிட்டுவிட்டுப் போங்க; எல்லோருக்கும் சாப்பாடு தயார் செய்யப்பட்டுள்ளதுஎன்று தாளாளர் அறிவிப்புச் செய்தார். பிறகு லுஹர் தொழுதுவிட்டு, அங்கு சாப்பிட்டுவிட்டு, சென்னையை நோக்கித் திரும்பினார். இனி எந்த இன்டர்வியூ-க்கும் போகக் கூடாது என்று முடிவெடுத்தார். பேராசிரியர் பணி நமக்குக் கிடைக்க வாய்ப்பில்லை. ஏதேனும் பள்ளியில் இமாமாக இருந்துகொண்டு, எழுத்துப் பணியையே கவனிப்போம்; அல்லாஹ் அதற்காகவே நம்மைத் தேர்வு செய்துள்ளான் எனத் தீர்மானித்துவிட்டார்.

 

***

அதன்பிறகு மத்தியச் சென்னையின் ஒரு மஹல்லாவில் ஓர் இமாம் தேவைப்படுகிறார் என்ற தகவல் நண்பர் கஃபூர் ஆலிம் மூலம் அஹதுக்குக் கிடைத்தது. அவர் கொடுத்த செல்பேசி எண்ணில் தொடர்புகொண்டு பேசினார். குறிப்பிட்ட நேரத் தொழுகைக்கு வரச் சொன்னார்கள். அங்கு சென்று தொழுகை நடத்தினார். அவர் தொழுகை நடத்திய விதமும் தஜ்வீத் முறைப்படி ஓதியதும் அவர்களுக்குப் பிடித்திருந்தது.

 

பின்னர் ஜும்ஆ தொழுகைக்கு வரச் சொன்னார்கள். பயான் செய்யும் விதத்தையும் குத்பா ஓதும் விதத்தையும் நேரடியாகப் பார்த்துக்கொண்டார்கள். தொழுகைக்குப் பிறகு கூடிப் பேசிய நிர்வாகிகள், அஹத் இமாமை அழைத்து, “பொயிட்டு வாங்க, தகவல் தெரிவிக்கிறோம்என்று கூறி, செலவுக்குப் பணம் கொடுத்து அனுப்பிவைத்தார்கள். அதன்பின் ஒவ்வொரு வாரமும் ஒவ்வோர் ஆலிமை வரவழைத்துச் சோதனை செய்துகொண்டே இருந்தார்கள்.  ஒன்று இருந்தால், மற்றொன்று இல்லை என்ற நிலையே நீடித்ததால் அவர்களுக்குத் திருப்தி இல்லை. இரண்டு மாதங்களுக்குப் பிறகு, அஹத் இமாமைத் தொடர்புகொண்ட அப்பள்ளியின் நிர்வாகி ரஸீன் என்பவர், “நீங்க இந்த ஜும்ஆவுக்கு வந்துடுங்க இமாம் ஸாப்என்று கூறி, தகவல் தெரிவித்தார். அதைக் கேட்ட அவர், “அல்ஹம்து லில்லாஹ்என்று அல்லாஹ்வைப் புகழ்ந்தார்.

 

குறிப்பிட்ட நாளில் ஜும்ஆ தொழுகைக்கு வந்து, பயான் செய்து, குத்பா ஓதி, தொழுகையும் நடத்தினார். அவரின் ஓதல், பயான், குத்பா அனைத்தும் நிர்வாகிகளுக்குப் பிடித்திருந்தன. தொழுகைக்குப்பின் இமாமை அமர வைத்து, தங்குவதற்கான வீடு, சம்பளம், விடுமுறை உள்ளிட்ட அனைத்தைப் பற்றியும் தெளிவாகப் பேசிக் கொண்டார்கள். மாதத்தில் மூன்று நாள்கள் விடுப்பு என்பதை 15 வக்துகளாக நான் எடுத்துக்கொள்கிறேன்என்று அஹத் இமாம் கூறியதை அப்பள்ளியின் செயலாளர் ஆமோதித்து ஏற்றுக்கொண்டார்.

 

அதன்பின், “நீங்க பிஎச்.டி. வரை படிச்சவரா இருப்பதால், உங்க தலைமையில்தான் ஓர் அரபுக்கல்லூரி இங்கு தொடங்கத் திட்டமிட்டுள்ளோம். அதற்கு நீங்க ஒத்துழைக்கணும்என்று தலைவர் கூறினார்.

 

இன் ஷாஅல்லாஹ் தொடங்கலாம் ஹாஜியார். நிச்சயமாக ஒத்துழைக்கிறேன்என்றார் இமாம்.

 

ஒவ்வொரு நாளும் அஸர் தொழுகைக்குப் பிறகு, சிறுமியர் சிறுமியருக்கான குர்ஆன் வகுப்பை நடத்தினார்.  பருவ வயதடைந்த பெண்களுக்குத் தனியாக வகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த வகுப்பை அவருடைய மனைவி சுல்தானா பார்த்துக்கொண்டார். வாரந்தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை வகுப்பு. சனி, ஞாயிறு இரண்டு நாள்கள் விடுமுறை என்ற நடைமுறையைக் கொண்டுவந்தார்.

 

வாரத்தில் இரண்டு நாள்கள் ஏன் விடுமுறை விடுறீங்க? மற்ற மத்ரஸாக்களெல்லாம் ஒரு நாள்தானே விடுமுறை?” என்று நிர்வாகிகள் கேட்டனர்.

 

பாய், நான் ஏற்கெனவே அனுபவப்பட்டிருக்கேன். மற்ற மத்ரஸாக்களில் வெள்ளிக்கிழமை மட்டும் விடுமுறை விட்டுட்டு, சனி, ஞாயிறு மத்ரஸா நடத்துவாங்க. ஆனால் மாணவர்களுக்கு சனி, ஞாயிறுதான் ஸ்கூல் லீவு.  அந்த நாள்களில் அவர்கள் உறவினர்கள் வீடுகளுக்கோ, தாத்தா-பாட்டி வீடுகளுக்கோ, திருமண வீடுகளுக்கோ சென்றுவிடுவார்கள். அதனால் அவர்களுக்கு வாரத்தில் மூன்று நாள்கள் லீவு ஆகிடுது. அதைத் தவிர்க்கவே நான் இவ்வாறான நடைமுறையை வச்சிருக்கேன்என்று தெளிவாக விளக்கிச் சொன்னார்.

 

அவருடைய நியாயமான விளக்கத்தை நிர்வாகிகள் ஏற்றுக்கொண்டனர். மாணவர்களும் உஸ்தாதின் கட்டளைக்கேற்ப சனி, ஞாயிறுகளில் மட்டுமே தம் உறவினர்கள் வீடுகளுக்கோ, தாத்தா-பாட்டி வீடுகளுக்கோ, திருமண வீடுகளுக்கோ செல்வதை வழக்கமாகக் கொண்டார்கள். ஆனால் ஒரே ஒரு குடும்பத்தில் மட்டும் அந்த மாணவனின் அம்மா, தம்முடைய தாய் வீட்டிற்குப் பிள்ளையைக் கூட்டிச்சென்றுவிடுவதால் வெள்ளிக்கிழமை விடுப்பு எடுத்துக்கொண்டே இருந்தான்.

 

ஏம்பா, நீ மட்டும் சொன்ன பேச்சைக் கேட்க மாட்டாயா?” என்று கேட்டார், “நான் என்ன உஸ்தாத் செய்வது? எங்க அம்மா என்னோட பாட்டி வீட்டுக்குக் கூட்டிட்டுப் போயிடுறாங்கஎன்றான். சரி, ஒரு பையன்தானே, என்று அவனை மட்டும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்.

 

அந்த மஹல்லாவில் பல்வேறு புதிய புதிய திட்டங்களை நிர்வாகிகளோடு சேர்ந்து செய்துவந்தார். நிர்வாகிகள் அஹத் இமாமின் செயல்பாடுகளைப் பாராட்டியதோடு, உரிய ஒத்துழைப்பும் வழங்கினார்கள். இமாமின்  யோசனைகளையும் கருத்துகளையும் ஏற்றுக்கொண்டு ஒவ்வொன்றாகச் செயல்படுத்தினார்கள்.

 

பள்ளியைச் சுற்றி அந்த மஹல்லா மக்கள் எத்தனை பேர் வசிக்கின்றார்கள்; அவர்களுள் படித்த பட்டதாரிகள் எத்தனை பேர், குர்ஆன் ஓதத் தெரிந்தோர் எத்தனை பேர், அரசுப் பணியில் இருப்போர் எத்தனை பேர், ஸகாத்  கடமையானவர்கள் எத்தனை பேர், ஸகாத் பெறத் தகுதியுடையோர் எத்தனை பேர் என எல்லா விவரங்களும் அடங்கிய விண்ணப்பப் படிவத்தின் மூலம் மஹல்லா கணக்கெடுப்புஎடுக்கப்பட்டது. அதன்பின் அவை அனைத்தும் பள்ளிவாசலின் அலுவலக அறையிலுள்ள கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டது. குடும்பத்தலைவர், குடும்பத் தலைவி ஆகியோரின் செல்பேசி எண்களும் பதிவு செய்யப்பட்டன.

 

ஒவ்வொரு குடும்பத்தாருக்கும், சந்தா எண் இடப்பெற்ற ஐடி கார்டு வழங்கப்பட்டது. திருமணத்திற்கான என்ஓசி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், இறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட என்ன தேவை இருந்தாலும் அதைப் பெறுவதற்காகப் பள்ளிவாசலுக்கு வரும்போது, அந்த அடையாள அட்டையைக் காட்டினால் போதுமானது. வேறு எந்த ஆவணமும் தேவையில்லை என்ற எளிய நடைமுறையை நிர்வாகத்தினர் கடைப்பிடிக்கத் தொடங்கினர்.

 

நாளடைவில் இந்த நடைமுறை மிக எளிதாக இருப்பதாக மக்கள் நிர்வாகத்தினரையும் இமாமையும் பாராட்டினர். ஏதாவது அவசரத் தேவையெனில், பள்ளி அலுவலகத்தை மஹல்லா மக்கள் தொடர்புகொண்டு பேசுவதற்காக அலுவலகத்தில் ஓரு தொலைபேசி இணைப்பு வைக்கப்பட்டு, அதன் எண் நோட்டிஸ் போர்டில்  ஒட்டப்பட்டது. அலுவலகப் பணியைக் கவனித்துக்கொள்ளவும், தொலைபேசி அழைப்பை ஏற்கவும் ஒரு பணியாளர் நியமிக்கப்பட்டார்.

 

பின்னர் அப்பள்ளியில் கன்ஸுல் மால்எனும் பெயரில் பொதுநிதியகம்ஒன்று தொடங்கப்பட்டது.  தர்மப் பொருள்களையும் ஸகாத் பொருள்களையும் பணத்தையும் வசூல்செய்து, ஏற்கெனவே தயார் செய்துள்ள பட்டியலிலுள்ள தகுதியானவர்களுக்கு வழங்கப்பட்டது. அந்த மஹல்லாவில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கும் கைம்பெண்களுக்கும் மாதாந்திர உதவித்தொகை வழங்கப்பட்டது. அத்தோடு தேவைப்படுவோருக்கு வட்டியில்லாக் கடன் வழங்கும் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளனர். தொழில் செய்வதற்கான கடனும் கொடுக்கப்பட்டது.

 

இவ்வாறு மிகச் சிறப்பாக இவையெல்லாம் நடைபெறக் காரணம், அஹத் இமாம் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக் கிழமை பயானில் பிறருக்கு உதவ வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்ததும் அதனை ஆழமாக உள்வாங்கிய  மக்களுமே ஆவர். அத்தோடு அன்றொரு நாள் ரமளான் மாதத்தின் வெள்ளிக்கிழமையன்று மக்கள் மத்தியில் ஸகாத் பற்றி உரையாற்றியபோது, “அன்பான மக்களே! உங்கள் ஸகாத்தை இமாமாகிய  எனக்குக் கொடுக்காதீர்கள்.  அதேநேரத்தில் நீங்கள் அன்போடு கொடுக்கும் அன்பளிப்புகளை நான் பெற்றுக்கொள்வேன். ஏனெனில் நபியவர்கள் அன்பளிப்புகளை ஏற்றுக்கொண்டுள்ளார்கள்என்று கூறினார்.

 

அதைக் கேட்ட மக்கள் அஹத் இமாமை வெகுவாகப் பாராட்டினார்கள். அவர்மீது மிகுந்த மரியாதை செலுத்தினார்கள். இதுவரை எந்த இமாமும் இத்தகைய அறிவிப்பைச் செய்ததில்லை என்றார்கள். அதன்பின் அம்மக்கள் கொடுத்த ஸகாத் அனைத்தும் கன்ஸுல் மால்-இல் சேர்க்கப்பட்டது. ஏழை மக்களுக்கு உதவும் மஹல்லாவாக அது மாறிவிட்டது. இந்த மஹல்லாவின் செயல்பாடுகளைப் பார்த்து பிற மஹல்லாக்களிலும் இதுபோன்ற சேவைகளைத் தொடங்கிவிட்டார்கள். ஆக இப்பள்ளியை முன்மாதிரிப் பள்ளியாக மாற்றியதில் அஹத் இமாமுக்குப் பெரும் பங்குண்டு. இதை நிர்வாகிகளே ஒப்புக்கொண்டார்கள்.   

***

 

காணாமற்போன பொருளைப் பள்ளிவாசலுக்குள் தேடிக்கொண்டிருப்பவரின் குரலைச் செவியுறுபவர் அல்லாஹ் அதை உனக்குத் திரும்பக் கிடைக்காமல் செய்வானாக!என்று கூறட்டும். ஏனெனில், பள்ளிவாசல்கள் இதற்காகக் கட்டப்படவில்லைஎன அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ள ஹதீஸை நிர்வாகிகளிடம் எடுத்துச் சொல்லி, உள்பள்ளிக்குள் வசூலுக்கான எந்த அறிவிப்பையும் நாம் அனுமதிக்கக்கூடாது. பொதுமக்களுக்கான அவசியமான அறிவிப்பு மட்டுமே செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.

 

அப்படியெனில் பள்ளிவாசல், மத்ரஸா வசூலுக்காக வருவோரை என்ன செய்வது?” என்று செயலாளர் கேட்டார்.

 

அதற்கென ஓர் இடத்தை முடிவுசெய்து, ‘நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்டவர்என்று அவ்விடத்தில் எழுதிவைத்துவிட்டால், அங்கு நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்டவர் நின்று வசூல் செய்துகொள்ளட்டும். இதனால் தொழுகையாளிகள் எந்தத் தொல்லையும் இல்லாமல் நிம்மதியாகத் தொழுவார்கள் அல்லவா?” என்றார்.

 

அதைக் கேட்ட நிர்வாகிகள் இமாமின் யோசனையை ஏற்றுக்கொண்டார்கள். அவர் பணியாற்றுகிற பள்ளிவாசலில் ஒவ்வோராண்டும் ரமளான் கடைசிப் பத்தில் ஸஹர் உணவு எல்லோருக்கும் ஏற்பாடு செய்து வழங்கி வந்தனர். பக்கத்து மஹல்லா பள்ளிவாசலில் ரமளான் மாதம் முழுவதும் ஸஹர் உணவு ஏற்பாடு செய்து வழங்கி வந்தார்கள். இதைப் பார்த்து மனவேதனையடைந்த அஹத் இமாம், வெள்ளிக்கிழமை பயானில் இது குறித்துப் பேசினார்.

 

இளைஞர்களே! நீங்கள் யாருக்காக ஸஹர் உணவு ஏற்பாடு செய்கிறீர்கள்? அவர்களுள் யாரும் சாப்பாட்டிற்கு வழி இல்லாதவர்களா? ஏழைகளா? பயணிகளா? எல்லோரும் நன்றாகச் சம்பாதிப்பவர்கள்; மற்றவர்களுக்கு உணவு வழங்கும் தகுதியுடையவர்கள். அத்தகையோருக்கு ஸஹர் உணவு ஏற்பாடு தேவையா? அதற்காகப் பல இலட்சங்கள் வசூல் செய்கிறீர்களே இது தகுமா?

 

பயணிகளுக்கும் வெளியூரிலிருந்து வந்து தங்கியுள்ள மாணவர்களுக்கும், தொழிலாளிகளுக்கும் வேண்டுமானால் ஸஹர் உணவு ஏற்பாடு செய்துகொடுக்கலாம். ஆனால் மஹல்லா மக்கள் அனைவருக்கும் உணவு ஏற்பாடு செய்வது தவறு. பணம் கொடுப்போருள் பலர் தம் ஸகாத் பணத்தைத்தான் கொடுக்கின்றார்கள்.  ஸகாத் என்பது ஏழைகளுக்கு மட்டும் போய்ச் சேர வேண்டும். ஆனால் இந்த உணவைச் சாப்பிடுபவர்களுள் பணக்காரர்களும் இருக்கின்றார்கள். எனவே இதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.

 

நம் சமுதாயம் கல்வியில் எவ்வளவோ பின்தங்கியிருக்கிறது; நீங்கள் ஏன் கல்விக்காக அதைச் செலவிடக்கூடாது? நீங்கள் வசூல் செய்கிற பணத்தைக் கல்வி உதவித்தொகையாக வழங்கலாமே? நம் மஹல்லாவில் நன்றாகப் படிக்கின்ற மாணவ-மாணவிகளுள் பத்துப் பேரைத் தேர்ந்தெடுத்து, ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் சிறந்து விளங்கும் வகையில் மருத்துவம், பொறியியல், கணினித் துறை, பத்திரிகைத்துறை, மனோதத்துவம் முதலான துறைகளில் பிஎச்.டி வரை படிப்பதற்கு உதவி செய்யுங்கள் இவ்வாறே ஒவ்வொரு மஹல்லாவும் செயல்படத் தொடங்கிவிட்டால் எதிர்வரும் பத்தாண்டுகளில் நம் சமுதாய இளைஞர்கள் பலர் உயர்பதவிகளில் இருப்பதைக் காணலாம் இன் ஷாஅல்லாஹ்என்று காரசாரமாக உரையாற்றினார்.

 

உரையைக் கேட்டுச் சிலிர்த்துப்போன இளைஞர்கள் மனங்களில் மாற்றம் ஏற்பட்டது. நாம் செய்யும் செயலை மறுபரிசீலனை செய்யத்தான் வேண்டும் என்பதை உணர்ந்தார்கள்.

இது மாதிரி பல்வேறு சீர்திருத்தக் கருத்துகளைப் பேசியுள்ளார். அந்தக் கருத்துகள் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுச் செயல்பாட்டுக்கு வந்தன.

                                                                      -தொடரும்





கருத்துகள் இல்லை: