செவ்வாய், 10 ஏப்ரல், 2018

மறைவான ஞானம் குறித்து மறை கூறுவதென்ன?


  -முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

மறைவான ஞானம் மாநபிக்கு உண்டா? எனும் வினாவிற்கு இருசாரார் இருவிதமாகப் பதிலளிக்கின்றனர். எல்லா ஞானமும் ஏந்தல் நபிக்கு உண்டு. அவ்வகையில் மறைவான ஞானமும் மாநபிக்கு உண்டு. இருப்பினும் அதற்கு நிபந்தனையுண்டுஎன்பதே ஒரு சாராரின் பதில். மறைவான ஞானம் மாநபிக்கு இல்லை. அல்லாஹ் எதைத் தூதுமூலம் தெரிவிக்கின்றானோ அது மட்டுமே நபி (ஸல்) அவர்களுக்குத் தெரியும். மற்றவை குறித்து அவர்கள் அறியமாட்டார்கள். மறைவான ஞானம் இறைவனுக்கே சொந்தம்என்பது மற்றொரு சாராரின் பதில்.

இவ்விரண்டு கூற்றுகளையும் ஆழ்ந்து சிந்தித்தால் ஒரு புள்ளியில்தான் இரண்டும் வந்து இணைகின்றன. ஆனால் அவர்கள் சொல்லும்விதம்தான் வேறுவேறாக உள்ளது. அல்லாஹ் ஒருவன்தான்என்று கூறுவதும் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லைஎன்பதும் ஒரே கருத்தா? வெவ்வேறு கருத்தா? இந்த வித்தியாசம்தான் அவர்கள் கூறும் கூற்றில் உள்ளது. ஆனால் அதை அவர்கள் புரிந்துகொள்ளாமல் மறைவான ஞானம் மாநபிக்கு உண்டுஎன்பதிலேயே பிடிவாதமாக உள்ளனர். அதுதான் மார்க்க அறிஞர்கள் இருசாராராகப் பிரிந்தமைக்குக் காரணம்.

இவ்வுலகில் ஓர் இறைத்தூதர் எவ்வளவுதான் ஞானம் கொடுக்கப்பட்டிருந்தாலும் அது ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் அடங்கிவிடும். அல்லாஹ்வின் ஞானமோ வரையறைக்கு உட்படாதது. இதுதான் இஸ்லாமிய அடிப்படைக்கொள்கை. இதற்கு முரணாகச் சிலர் பேசுவதும் வாதிடுவதும் வியப்பாக உள்ளது.

அவன்தான் மறைவான விஷயங்களையெல்லாம் நன்கறிந்தவன். மறைவாக உள்ள இவ்விஷயங்களை அவன் ஒருவருக்கும் வெளிப்படுத்துவதும் இல்லை. ஆயினும், (தன்னுடைய) தூதர்களுள் யாரைத் தேர்ந்தெடுத்தானோ அவர்களுக்குத் தவிர. (அவர்களுக்கு அதனை அறிவிப்பான்.) (72: 26-27) இவ்வசனமே மறைவான ஞானம் மாநபிக்கு உண்டுஎன்று கூறுவோர் முன்வைக்கும் ஆதாரமாகும். உண்மையில் இந்த வசனம் கூறுவதென்ன?

இறைத்தூதும் ஒரு மறைவான ஞானமே. அதை அல்லாஹ், தான் விரும்பித் தேர்ந்தெடுக்கும் இறைத்தூதர்களுக்கு மட்டும் தெரிவிக்கிறான் என்பதே இவ்வசனம் கூறும் கருத்தாகும். அதை விடுத்து மறைவான ஞானம் முழுவதையும் அல்லாஹ் தன் தூதர்களுக்குத் தெரிவித்துவிடுவான் என்பதையோ, முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு மறைவான ஞானம் முழுவதையும் எடுத்துரைத்துவிட்டான் என்பதையோ இவ்வசனம் தெரிவிக்கவில்லையே! மற்ற தூதர்களுக்கு வழங்கப்பட்ட கல்வி-ஞானத்தைவிட முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட ஞானம் மிகுதியானது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அந்த அடிப்படையில்தான் நபி (ஸல்) அவர்கள் இவ்வுலக அழிவு நாள் வரை நடக்கப்போகும் அனைத்தையும் தெரிவித்துவிட்டுச் சென்றார்கள். இது அல்லாஹ் தன் தூதர்மீதும் அவருடைய சமுதாயத்தார்மீதும் கொண்டுள்ள அளவிலா அன்பையும் கருணையையுமே காட்டுகின்றது.
மறைவான ஞானம் மாநபிக்கு உண்டுஎன்று கூறுவோர் திருக்குர்ஆனின் பல்வேறு வசனங்களையும் நபி (ஸல்) அவர்களின் வாக்குமூலத்தையும் கவனிக்கத் தவறிவிட்டனர் என்றே கூறலாம்.

பின்வரும் இறைவனின் கூற்றுகளைக் கூர்ந்து படித்தால் நன்கு விளங்கும்.
மறைவானவற்றின் சாவிகள் அவனிடமே இருக்கின்றன. அவற்(றில் உள்ளவற்)றை அவனையன்றி வேறெவரும் அறியமாட்டார். நிலத்திலும், நீரிலும் உள்ளவற்றையும் அவன் நன்கறிவான். அவன் அறியாமல் ஓர் இலையும் உதிர்வதில்லை. பூமியின் (ஆழத்தில்) அடர்ந்த இருளில் (புதைந்து) கிடக்கும் (கடுகு போன்ற சிறிய) வித்தும், பசுமையானதும், உலர்ந்ததும் அவனுடைய தெளிவான (பதிவுப்) புத்தகத்தில் இல்லாமலில்லை. (6: 59)

அல்லாஹ் நாடினாலன்றி நான் எனக்கு யாதொரு நன்மையையோ தீமையையோ செய்துகொள்ள எனக்கு இயலாது. நான் மறைவானவற்றை அறிந்திருந்தால் நன்மைகளையே அதிகமாகத் தேடிக்கொண்டிருந்திருப்பேன்; யாதொரு தீங்குமே என்னை அணுகி இருக்காது. நான் (பாவிகளுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனும், நம்பிக்கை கொள்பவர்களுக்கு நற்செய்தி கூறுபவனுமே அன்றி வேறில்லை'' என்று (நபியே) நீங்கள் கூறுங்கள். (7: 188)

அல்லாஹ்வின் பொக்கிஷங்கள் என்னிடம் இருக்கின்றன என்றோ, மறைவானவற்றை நான் அறிகிறேன் என்றோ உங்களிடம் கூற மாட்டேன்என்று நபியே இவர்களிடம் கூறுங்கள். (6:50,  11:31) இன்னும் நீர் கூறுவீராக! அல்லாஹ்வைத் தவிர வானங்களிலும் பூமியிலும் இருப்பவர் எவரும் மறைவாக இருப்பதை அறியமாட்டார்கள். (27: 65) 

இந்த இறைவசனங்களைக் கூர்ந்து படிப்போருக்கு எந்தக் குழப்பமும் ஏற்படாது. ஏனெனில் இறைவசனங்கள் மிகத் தெளிவாக உள்ளன. அல்லாஹ் தன் தூதரை மக்களிடம் வாக்குமூலம் கொடுக்கச் செய்கின்றான். தமக்கு மறைவான ஞானம் இல்லை என்பதை அவர்களே தெளிவாக எடுத்துரைத்துள்ளார்கள். இதற்குப் பிறகும் இறைத்தூதருக்கு மறைவான ஞானம் உண்டு என வாதிட்டால் அது வீண்வாதமும் பிடிவாதமும் ஆகும்.

நபி (ஸல்) அவர்கள் தம்மைப் பற்றித் தாமாகவே வாக்குமூலம் கொடுக்கின்ற செய்தி நபிமொழித் தொகுப்பு நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றுள் ஒன்றைக் கீழே காணலாம்:
ஒரு தடவை சிறுமிகள் ஒன்றுகூடி பத்ருப் போர்க்களத்தில் தம் இன்னுயிரை ஈந்த உயிர்த்தியாகிகளின் வீரத்தைப் புகழ்ந்து பாடிக்கொண்டிருந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அங்கு சென்றார்கள். அச்சமயத்தில் அவர்கள், “எங்களில் ஒரு நபி இருக்கிறார். அவர் நாளை நடப்பதை அறிவார்என்று பாடினார்கள். அதனைச் செவியுற்ற நபி (ஸல்) அவர்கள்,  அ(வ்வாறு பாடுவ)தனை விட்டுவிடுவீர். ஏற்கெனவே பாடிக்கொண்டிருந்ததையே-தியாகிகளின் புகழையே-பாடுவீர்என்று கூறினார்கள். (நூல்: அபூதாவூத்: 4922) 

மறைவானவற்றை அறியும் ஞானம் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மட்டுமல்ல, மற்ற எந்த இறைத்தூதருக்கும் இல்லை என்பதைத் திருக்குர்ஆனை வாசிப்போர் புரிந்துகொள்ளலாம். 

நபி சுலைமான் (அலை) அவர்களுடன் ஹுத்ஹுத் (கொண்டைலாத்தி) பறவை எப்போதும் இருக்கும். ஒரு சமயம் அதைக் காணவில்லை. சுலைமான் (அலை) அவர்கள் கோபமுற்றார்கள். ஹுத்ஹுத் எங்கே சென்றுவிட்டது; அதைப் பார்க்க முடியவில்லையே! மறைந்து விட்டதா? சரியான ஆதாரத்தைக் கொண்டு வரவில்லையென்றால் அதை அறுத்து விடுவேன் அல்லது கடுமையான வேதனை செய்வேன் என்று சுலைமான் (அலை) சொன்னார்கள். சிறிது நேரத்திற்குள் ஹுத்ஹுத் வந்துவிட்டது. தாங்கள் அறிந்திராத ஒரு விஷயத்தை அறிந்து வந்துள்ளேன்; சபா என்ற நாட்டிலிருந்து உறுதியான ஒரு செய்தியை உம்மிடம் கொண்டு வந்திருக்கிறேன்என்று கூறிற்று.  (27: 22)

சுலைமான் நபியைப் பார்த்து, “உங்களுக்குத் தெரியாத ஒன்று எனக்குத் தெரியும்என்று ஒரு பறவை கூறுகிறது. அருகில் இருக்கும் சபாநாட்டைப் பற்றி சுலைமான் நபிக்குத் தெரியாமல் இருந்துள்ளது.  இதனால் நபியின் மதிப்பில் எந்தவிதக் குறையோ பாதிப்போ ஏற்படவில்லை. ஏனென்றால் நபியாக இருப்பதற்கு எல்லாவற்றையும் அறிந்து வைத்திருப்பது அவசியமில்லை என விளங்க முடிகிறது.
நபி ஆதம் (அலை) அவர்களுக்கு மறைவானவற்றை அறியும் ஆற்றல் இருந்திருந்தால் தடுக்கப்பட்ட அக்கனியைச் சாப்பிட்டிருக்க மாட்டார்கள்; ஷைத்தானிடம் ஏமாந்துபோயிருக்க மாட்டார்கள்.

நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் வீட்டிற்கு விருந்தினர்கள் சிலர் வந்தார்கள். வந்தவர்கள் இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு அறிமுகமில்லாதவர்களாகவும் இதுவரை பார்க்காத முகங்களாகவும் இருந்தார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள் மிக வேகமாகச் சென்று கன்றுக் குட்டியை அறுத்து அதன் இறைச்சியைப் பொரித்து விருந்தினர்களுக்கு முன் வைத்தார்கள். (வீட்டிற்கு வரும் விருந்தினர்கள் விருந்தில் வைக்கப்படும் உணவைச் சாப்பிடுவது அன்றைய வழக்கம். அப்படி முன்வைக்கும் உண்பொருளை விருந்தினர்கள் சாப்பிட மறுப்பது அவ்வீட்டாரைக் கேவலப்படுத்துவதாகக் கருதப்படும்.) விருந்தினர்களுக்கு முன்வைத்த இறைச்சியை வந்தவர்கள் சாப்பிட மறுப்பதைக் கண்ட இப்ராஹீம் (அலை) பயந்தார்கள்; வந்தவர்கள் தங்களுக்கு விரோதியாக இருப்பார்களோ எனச் சந்தேகப்பட்டார்கள். மேற்கண்ட நிகழ்ச்சி திருக்குர்ஆனில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

நிச்சயமாக நம்முடைய தூதர்கள் (மலக்குகள்) இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு நற்செய்தி கொண்டு வந்து, “உங்களுக்குச் சாந்தி உண்டாகுகஎன்று கூறினார்கள். (அதற்கு பதிலில்) உங்களுக்கும் சாந்தி உண்டாகட்டும் என இப்ராஹீம் (அலை) கூறினார்கள். சிறிதும் தாமதிக்காமல் (அறுத்து) பொரித்த கன்றுக் குட்டியின் இறைச்சியை அவர்களுக்கு முன்வைத்தார்கள். விருந்தினர்களின் கைகள் அதன் பக்கம் செல்லாததைக் கண்டதும் வந்தவர்களைப் பற்றிச் சந்தேகம் கொண்டார்கள். மேலும் அவர்களைப் பற்றி (விரோதியாக இருக்கலாம் என்ற) பயமும் மனதில் ஊசலாடியது. வந்தவர்கள் இப்ராஹீம் (அலை) அவர்களை நோக்கி, “நீங்கள் பயப்படாதீர்கள். நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதர்கள் (மலக்குகள்)எனக் கூறினார்கள். (11: 69-70)

இப்ராஹீம் (அலை) இறைத்தூதர்களுள் உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவர்கள். அவர்களுக்கு முன்னால் வானவர்கள் (மனிதத் தோற்றத்தில் தோன்றி) அமர்ந்து இருக்கிறார்கள். தம் முன்னால் அமர்ந்துள்ளவர்களைப் பற்றி அவர்கள் அறியவில்லை. வந்தவர்கள் தங்களைப் பற்றிச் சொல்லிய பிறகுதான் அவர்கள் தெரிந்து கொண்டார்கள். மனதளவில் பயந்தும் விட்டார்கள்; பயப்பட வேண்டாம் என்று வானவர்கள் சொல்லும் அளவுக்கு நிலைமை ஏற்பட்டது. இதனால் நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் அந்தஸ்து எந்த வகையிலும் குறையவில்லை.

யஅகூப் (அலை) அவர்கள் உயர்ந்த நபிமார்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார்கள். பிரியமான மகன் யூசுஃப் (அலை) அவர்கள் எங்கே இருக்கிறார்; எந்த நிலைமையில் இருக்கிறார் என்று பல வருடங்களாகத் தெரியாமல் இருந்தார்கள்.

யூசுஃப் (அலை) அவர்களின் பிரிவால் வருத்தப்பட்டு, அழுதழுது அவர்களின் இரண்டு கண்கள் கருப்பு நீங்கி வெளுத்து விட்டனஎன்று திருக்குர்ஆன் கூறுகிறது. (12:84) அல்லாஹ்வின் தூதராக இருந்தும் தம் குடும்பத்தாரின் நிலைமை தெரியாமல் இருந்திருக்கிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது அறையின் கதவிற்குப் பக்கத்தில் நபித்தோழர்கள் சிலர் சத்தமாகப் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டுவிட்டுத் தம் அறையிலிருந்து வெளியே வந்து அவர்களிடம், “நான் ஒரு மனிதனே; என்னிடம் வழக்காடுபவர்கள் வருகின்றார்கள்; (இருவருள்) ஒருவர் மற்றவரைவிட இலக்கிய நயமிக்கவராகவும் இனிமையாகப் பேசுபவராகவும் இருக்கலாம்; அவர் உண்மையைப் பேசுகிறார் என்று நினைத்து (உண்மை நிலை அறியாமல்) அவருக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்து விடுகிறேன்; அவருக்கு ஒரு முஸ்லிமின் உரிமையை எடுத்துக் கொள்ளும்படி நான் தீர்ப்பளித்தால் (அவருக்கு) அது நரக நெருப்பின் ஒரு துண்டேயாகும்; (விரும்பினால்) அதை அவர் எடுத்துக் கொள்ளட்டும்; (மறுமையில் தண்டிக்கப்படுவார்;) அல்லது அதை விட்டு விடட்டும் (உரியவரிடம் கொடுத்து விடட்டும்)என்று கூறினார்கள் என உம்மு சலமா (ரளி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல்: புகாரீ: 2458) 

இவ்வாறு இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களே சொல்லியபின்னரும் சிலர் நபி (ஸல்) அவர்களுக்கு மறைவான ஞானம் உண்டுஎன்று வாதிப்பதில் அர்த்தம் உள்ளதா?

மறைவான ஞானம் உண்டென்றால் பின்வரும் நிகழ்வுகள் நடந்ததேன்?
1. தம் சமுதாயத்தாருக்குக் குர்ஆனைக் கற்பிக்க என்னோடு ஆள்களை அனுப்பிவையுங்கள் என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டபோது, நபியவர்கள் எழுபது பேரை அனுப்பிவைத்தார்கள். அழைத்துச் சென்றவன் தன்னோடு தன் குலத்தாரையும் சேர்த்துக்கொண்டு பிஃரு மஊனா எனும் இடத்தில் அவர்களைச் சூழ்ந்துகொண்டு அந்த எழுபது பேரையும் கொன்றுவிட்டார்கள்.

2. நபியவர்கள் ஸஃபிய்யா வீட்டில் தேன் பருகிவிட்டு வரும்போது, “ஒரு கெட்ட வாடை தங்கள் வாயிலிருந்து வருகிறதே?” என்று கேட்க வேண்டும் என ஆயிஷா-ஹஃப்ஸா (ரளியல்லாஹு அன்ஹுமா) இருவரும் திட்டமிட்டார்கள். அதன்படிச் செயல்பட்டார்கள். அப்போதுதான், “நான் இனி தேன் பருக மாட்டேன்என்று சத்தியம் செய்தார்கள். அதன்பின்னர்தான் அத்தஹ்ரீம் அத்தியாயத்தின் வசனங்கள் இறங்கின.

3. அன்னை ஆயிஷா (ரளி) அவர்கள்மீது அவதூறு சொல்லப்பட்டபோது ஒரு மாதக் காலம் வரை நபியவர்கள் சஞ்சலத்தோடுதான் இருந்தார்கள். இறுதியில், அந்நூர் அத்தியாயத்தின் வசனங்கள் இறங்கி, அதன்மூலம்தான் அன்னை ஆயிஷா (ரளி) தூய்மையானவர் என நிரூபணமானது.

4. யூதப் பெண்ணொருத்தி ஆட்டிறைச்சியில் நஞ்சைத் தடவி, நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வந்து கொடுக்க, அதைத் தம் அருகில் இருந்த ஒரு தோழருக்குக் கொடுத்துவிட்டுத் தாமும் உண்டார்கள். அதனை உண்ட அத்தோழர் இறந்துபோய்விட்டார். நபி (ஸல்) அவர்கள் ஒரு கவளத்தை விழுங்கிவிட்டார்கள். அதன்பின் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து, நஞ்சு கலந்துள்ள செய்தியைச் சொன்னதும் அதைக் கீழே துப்பிவிட்டார்கள்.  
இவைபோலவே பல்வேறு நிகழ்வுகள் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றில் உள்ளன. இவையெல்லாம் நடப்பதற்கு முன்னரே, மறைவான ஞானம் கொண்ட இறைத்தூதர் நிகழாமல் தடுத்திருக்கலாமே? எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டாலும், பிஃரு மஊனா எனும் இடத்தில் கொல்லப்பட்ட எழுபது பேரையாவது மறைவான ஞானத்தால் காப்பாற்றியிருக்கலாமே? நஞ்சு தோய்க்கப்பட்ட இறைச்சியை உண்ணாமல் தவிர்த்திருக்கலாமே? தம் தோழரையும் காப்பாற்றியிருக்கலாமே? ஏன் செய்யவில்லை. மறைவான ஞானம் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரிய பண்பாகும் என்பதை இனியும் மறுக்க முடியுமா? அல்லது நபியவர்கள் தெரிந்துகொண்டேதான் அமைதியாக இருந்தார்கள்என்று  சொல்லப் போகிறார்களா?       

மறுமை நாளின் அடையாளங்கள், சொர்க்கத்தின் தன்மைகள், நரகத்தின் தன்மைகள், தஜ்ஜாலின் வருகை, இறைத்தூதர் ஈஸா (அலை) அவர்களின் வருகை, யஃஜூஜ்-மஃஜூஜ் வருகை, கஅபா இடிக்கப்படுதல் உள்ளிட்ட ஏராளமான முன்னறிவிப்புகளைச் சொல்லியுள்ளார்கள். இவையெல்லாம் மறைவான ஞானங்கள்தாம். ஆனால் இவையெல்லாம் நபியவர்களுக்கு இறைவன் அறிவித்தவையே தவிர அவர்கள் சொந்தமாகச் சொன்னவை அல்ல. எனவே அல்லாஹ் அவர்களுக்கு எதை அறிவித்தானோ அதைத் தவிர மற்ற எதையும் சொல்லுமாறு அவன் அவர்களுக்குக் கட்டளையிடவுமில்லை; அவர்கள் சொல்லவுமில்லை. இதையெல்லாம் சற்று நிதானித்துப் புரிந்துகொண்டால், இது குறித்துக் கருத்து வேறுபாடு கொள்ளாமல் அனைவரும் ஒரே புள்ளியில் இணைந்துவிடலாம். மார்க்க அறிஞர்கள் இரு சாராராகப் பிரிந்து செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது.

இல்லைஎன்று சொல்வதைவிட, ‘உண்டுஎன்று சொல்வதுதானே நபியவர்களுக்குச் சிறப்பு என்று வாதம் செய்வோரும் உண்டு. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே, தமக்குச் சூட்டிக்கொள்ளாத அல்லாஹ்வின் தன்மையை நாம் சுயமாக எவ்வாறு இறைத்தூதருக்கு இணைக்க முடியும்? எவையெவை அல்லாஹ்வின் பண்புகள், எவையெவை இறைத்தூதரின் பண்புகள் என்று திருக்குர்ஆனும் திருநபி வாக்குகளும் நமக்குத் தெளிவாக எடுத்துரைக்கும்போது நாம் எதற்காக வீண்விவாதம் செய்துகொண்டிருக்க வேண்டும்? அல்லாஹ்வுக்குச் சொந்தமான தன்மையை நாம் ஏன் அவனுடைய தூதருக்குரியது என்று உண்மைக்கு முரணாகப் பேச வேண்டும்? எது உண்மை, எது பொய் என்பதை நடுநிலையோடு சிந்திக்கக்கூடியோர் புரிந்துகொள்வர். உயர்ந்தோன் அல்லாஹ் சரியான புரிதலை நம் அனைவருக்கும் தருவானாக!
================================================================











செவ்வாய், 20 மார்ச், 2018

தர்ஜமதுல் குர்ஆனில் ஹகீம்- புதிய வெளியீடு

ஆசான் தர்ஜமயே குர்ஆன் எனும் உர்தூ மொழியாக்கத்தைத் தழுவி, மௌலவி வலியுல்லாஹ் யூசுபி ஹள்ரத் தமிழாக்கம் செய்த திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பை மேலாய்வு செய்துள்ளேன். திருக்குர்ஆன் தமிழாக்க நடையில் சிலபல மாற்றங்களை அவ்வப்போது செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். அதற்கேற்பவே இந்தத் தமிழாக்கத்தைப் பார்க்க வேண்டும். இன்றைய இளைஞர்களின் தமிழ் மொழியறிவு மங்கி வருவதைக் காணலாம். அவர்களிடம் பழங்காலத் தமிழாக்கத்தைக் கொடுத்துப் படிக்கச் சொன்னால் மலைத்துப்போய் விடுவார்கள்; பழந்தமிழ்ச் சொற்களின் பொருளறியாது திணறுவார்கள். இக்கால இளைஞர்களையும் வாசிக்கத் தூண்டுமுகமாகப் புதிய புதிய தமிழாக்கங்கள் தேவைப்படுகின்றன. ஆகவே இது அவர்களின் வாசிப்புக்கு ஒரு தூண்டுகோலாக அமையும் என்பதில் ஐயமில்லை. அது மட்டுமின்றி அறிவியல் வளர்ச்சிக்கேற்பத் திருக்குர்இன் வசனங்கள் பொருள் விரிந்து கொடுக்கும் தன்மையுடையன. அத்தகைய விசாலமான பொருட்செறிவோடுதான் திருக்குர்ஆன் அமைந்துள்ளது. எனவே காலத்திற்கேற்ற வகையில் தமிழாக்கத்தைச் சீர்செய்வதும் செம்மைப்படுத்துவதும் அவசியமாகும். ஒரு பக்கம் தமிழ்- மறு பக்கம் அரபி, பெரிய எழுத்து ஆகியவை இதன் சிறப்பு. இதனை வாங்கிப் படித்துப் பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். சலாமத் பதிப்பகத்தார் வெளியீடு விலை : 470 Rs தொடர்புக்கு: 044 252 11 981 இப்படிக்கு மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி





சனி, 17 மார்ச், 2018

ஏழைக்குப் பெண் தரமாட்டீரா?



                                                -முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி

"திருமணம் எனது வழிமுறை'' என்றும் "யார் என் வழிமுறையைப் புறக்கணிக்கிறாரோ அவர் என்னைச் சார்ந்தவர் இல்லை'' என்றும் வெவ்வேறு தருணங்களில் நபி (ஸல்) அவர்கள் கூறிய செய்தியைத் திருமண மேடைகளில் ஆலிம்கள் அரபியில் "குத்பா' நிகழ்த்தும்போது நீங்கள் செவியுற்றிருக்கலாம்.

நபியவர்களின் வழிமுறையான திருமணம் செய்துகொள்வதற்கு ஒவ்வோர் இளைஞனும் இளைஞியும் பெரும் போராட்டத்தை மேற்கொள்ள வேண்டியுள்ளது. முற்றிலும் பொருளாதாரத்தை முன்வைத்தே திருமணப் பேச்சு நடைபெறுகிறது. இதனால் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளவர்களுக்குப் பெண் கிடைப்பதும் மாப்பிள்ளை கிடைப்பதும் மிகுந்த சிரமமாக உள்ளது.

அதாவது பொருளாதாரச் சிந்தனையை ஒருபுறம் ஒதுக்கிவிட்டு, மணாள, மணாளிகளின் மார்க்கப்பற்று, நற்குணம் ஆகியவற்றை மட்டுமே முன்வைத்துத் திருமணப் பேச்சு நடைபெற வேண்டும் என்ற கருத்தையே நான் முன்வைக்க விரும்புகிறேன்.

ஓர் ஆணைப் பொறுத்த வரை, மார்க்கப்பற்றும்  நற்குணமும்கொண்ட ஆண்மையுள்ள இளைஞனாக இருக்க வேண்டும் என்பதே இல்வாழ்வில் இணைவதற்கான முக்கிய நிபந்தனை. பெண்ணைப் பொறுத்த வரை, மார்க்கப்பற்றும் நற்குணமும் கொண்ட, இல்லறத்தில் ஈடுபடுவதற்கான தகுதியுள்ளவளாக இருக்க வேண்டும் என்பதே நிபந்தனை. இதற்கிடையே பொருளாதாரம் எங்கிருந்து உள்ளே நுழைந்தது?

திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள்! "உங்களுள் வாழ்க்கைத் துணையின்றி இருப்போருக்கும் உங்களுடைய ஆண், பெண் அடிமைகளுள் நல்லோருக்கும் நீங்கள் மணமுடித்து வையுங்கள். அவர்கள் ஏழைகளாக இருந்தால் அல்லாஹ் அவர்களைத் தன் அருளால் தன்னிறைவு பெறச் செய்வான். அல்லாஹ் தாராளமானவனும் நன்கறிந்தோனும் ஆவான்.'' (24: 32)

ஆண்-பெண் இருவரும் ஒன்றாக இணையும்போது அவர்களுக்குத் தேவையான பொருளாதாரத்தையும் வாழ்க்கைத் தேவைகளையும் ஈட்டிக்கொள்வதற்கான வாய்ப்புகளையும்  வழிகளையும் உயர்ந்தோன் அல்லாஹ் ஏற்படுத்திக் கொடுப்பான். அது குறித்துப் பெற்றோரோ மற்றோரோ கவலைப்படத் தேவையில்லை. அல்லாஹ்வே பொறுப்பேற்றுக்கொண்டபின் கவலைப்பட  என்ன இருக்கிறது?

ஆனால் இன்றைய அவசரமான சூழ்நிலையில் சிக்குண்டு கிடக்கிற மக்களுக்கு இதைக் குறித்தெல்லாம் சிந்திக்க நேரமில்லை. சமூக மக்களின் ஓட்டத்திற்கேற்ப ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் இன்றையச் சூழலில் ஒரு திருமணத்தை அவ்வளவு எளிதாக நடத்த முடிவதில்லை.  நூற்றுக்கணக்கான சடங்குகளை நிறைவேற்றித்தான் ஒருவர் தம் மகளுக்கோ  மகனுக்கோ திருமணம்  செய்ய முடியும்.
ஓர் ஆணுக்குப் பெண்பேசப் புறப்பட்டால் பெண்வீட்டில் கேட்கப்படுகின்ற கேள்வி, "மாப்பிள்ளை என்ன செய்கிறார்?, அவருக்கு எவ்வளவு சம்பளம்?'' என்பதுதான். மாப்பிள்ளையின் சம்பளத்தை முன்வைத்துத்தான் பெண்கொடுக்க முன்வருகிறார்கள். அந்த அடிப்படையில் தற்போது பத்தாயிரம் சம்பாதிக்கின்ற மாப்பிள்ளைக்கெல்லாம் பெண்தர மறுத்துவிடுகின்றனர். "இருபதாயிரம், முப்பதாயிரம் சம்பாதிக்கிற மாப்பிள்ளையைப் பாருங்கள்'' என்று மிக எளிதாகப் பேசுகின்றார்கள். இதனால் இளைஞர்கள் பலர் உரிய வயதில் திருமணம் முடித்துக்கொள்ள முடியாமல் சிரமப்படுகின்றனர்.  இப்போதுதான் அந்த நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்துள்ள அந்த இளைஞருக்கு எப்படி உடனடியாக அவ்வளவு சம்பளம் கிடைக்கும்? காலம் செல்லச் செல்ல அவனுடைய சம்பளம் உயரவே செய்யும். வாழ்க்கை மேம்பாடு அடையவே செய்யும் என்ற யதார்த்தமான நம்பிக்கைகூட இருப்பதில்லை.

ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் தம்மை (அர்ப்பணித்து) அன்பளிப்புச் செய்துவிட்டதாகக் கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(இனி) எனக்கு எந்தப் பெண்ணும் தேவையில்லை'' என்று சொன்னார்கள். அப்போது அங்கிருந்த ஒரு மனிதர் "இந்தப் பெண்ணை எனக்கு மணமுடித்து வையுங்கள்!'' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், "ஏதேனும் ஆடையொன்றை அவளுக்கு ("மஹ்ர்' எனும் விவாகக் கொடையாக)க் கொடு!'' என்று (அந்த மனிதரிடம்) சொன்னார்கள். அவர், "என்னிடம் இல்லை'' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், "அவளுக்கு (எதையேனும் மஹ்ராக)க் கொடு! அது இரும்பாலான மோதிரமாக இருந்தாலும் சரியே'' என்று சொன்னார்கள். இதைக் கேட்டு அந்த மனிதர் கலங்கினார். எனவே, நபி (ஸல்) அவர்கள், "குர்ஆனிலிருந்து உன்னிடம் என்ன (அத்தியாயம் மனனமாக) இருக்கிறது?'' என்று கேட்டார்கள். அவர் இன்ன இன்ன அத்தியாயங்கள் (எனக்கு மனப்பாடமாக) உள்ளன'' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள்,  "உம்முடன் இருக்கும் குர்ஆன் அத்தியாயங்களுக்காக இவளை உமக்கு மணமுடித்து வைத்துவிட்டேன்'' என்று சொன்னதாக சஹ்ல் பின் சஅத் (ரளி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல்: புகாரீ: 5029)

அடுத்த வேளை உணவுக்கு உத்தரவாதம் இல்லாத ஒருவருக்கு, மேலும் ஒரு சுமையாக ஒரு பெண்ணை நபி (ஸல்) அவர்கள் மணமுடித்துக் கொடுத்தார்கள் என்றால் இறைவனின் மீதுள்ள நம்பிக்கைதான். "வாழ்க்கைத் துணையின்றி இருப்போருக்கு நீங்கள் மணமுடித்து வையுங்கள்'' என்று அல்லாஹ் கூறுகின்றான். எனவே அதன்மீது நம்பிக்கை வைத்து மணமுடித்துவைத்துவிட்டார்கள்.
நபி (ஸல்) அவர்கள் மணமுடித்து வைத்த அவரைவிட ஏழையாகவா உங்களுடைய மாப்பிள்ளை இருக்கிறார்? பிறகேன் ஏழைக்குப் பெண் கொடுக்க மறுக்கின்றீர்?

"யாருடைய மார்க்கப்பற்று, நற்குணம் ஆகியவை குறித்து நீங்கள் திருப்தி அடைவீர்களோ அவர் உங்களிடம் பெண்கேட்டால் அவருக்கு மணமுடித்து வையுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யாவிட்டால் இந்தப் பூமியில் கலகமும் பெருமளவு குழப்பங்களும் ஏற்படும்'' என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (நூல்: திர்மிதீ: 1004)      

"கலகமும் பெருமளவு குழப்பங்களும் ஏற்படும்'' என நபி (ஸல்) அவர்கள் எச்சரித்த நிகழ்வுகள் இன்று நடைபெறுகின்றனவா, இல்லையா? முஸ்லிமாக வளர்ந்த உங்கள் வீட்டுப்பெண் இறைமறுப்பாளன் ஒருவனின் கரம் பற்றிக்கொண்டு இல்லம்விட்டுப் புறப்பட்டுச் செல்வதைக் கண்டுகொண்டுதானே இருக்கிறீர்கள்?

இன்று நம் சமுதாய மக்களின் திருமணச் செலவைச் சற்றுத் திரும்பிப் பாருங்கள். சாதாரண வருவாய் உள்ளோரும் குறைந்தபட்சம் இரண்டு முதல் ஐந்து இலட்சம் வரை செலவு செய்கிறார்கள். பத்திரிகை முதல் வீடியோ வரை வீண்விரயத்தின் வாசல்கள் தாராளமாகத் திறக்கப்பட்டுள்ளன. மாப்பிள்ளை வீட்டார் ஐநூறு பேர், பெண்வீட்டார் முன்னூறு முதல் ஐநூறு பேர் என ஒரு பெருவிருந்து நடத்தினால்தான் திருமணமா? ஒவ்வொருவரும் தத்தமது கௌரவத்தை நிலைநாட்டும் நிகழ்வாகத் திருமணம் ஆகிவிட்டது. பள்ளிவாசலில் வைத்து, மிகக் குறைந்த செலவில் செய்துமுடிக்க வேண்டிய திருமணத்தை மாபெரும் மாநாட்டைப்போல ஆக்கிவைத்துள்ளோம்.

குறைவான வருவாய் ஈட்டுகின்ற மணாளனை நீங்கள் தேர்வு செய்யத் தொடங்கிவிட்டால், பெண்களின் திருமணத்திற்குத் தடையாகவும் முட்டுக்கட்டையாகவும் இருக்கின்ற வரதட்சிணை தானாக விடைபெறத் தொடங்கிவிடும். குறைந்த வருவாய்க்குள் குடும்பம் நடத்தப் பழகிவிட்டால்  அதன்பின் மிகுதியாக வருவாய் கிடைக்கின்றபோது, அதைச் சேமித்து, குடும்பத்திற்குத் தேவையான பொருள்களை வாங்கிக்கொள்ளலாம். பிறரிடம் கடன் வாங்க வேண்டிய தேவை ஏற்படாது.

நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ள செய்தியை இவ்விடத்தில் நினைவுகூர்வது முற்றிலும் பொருத்தமாகும். "மூவருக்கு உதவி செய்வது அல்லாஹ்வின் பொறுப்பாகும். 1. இறைவழியில் போர்புரியும் போர்வீரர், 2. விடுதலைக்கான தொகையைச் செலுத்திவிட வேண்டும் என்று நினைக்கிற விடுதலை ஆவணம் எழுதிக் கொடுக்கப்பட்ட அடிமை, 3. கற்பொழுக்கம் பேண வேண்டும் என்ற எண்ணத்தில் திருமணம் செய்துகொண்டவர்'' என அல்லாஹ்வின் தூதர்  (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: திர்மிதீ: 1579)

ஆகவே ஒருவர் தம் கற்பைக் காத்துக்கொள்வதற்காகத் திருமணம் செய்துகொண்டுவிட்டால் அவர் தம் குடும்பத்தை நடத்துவதற்கான பொருளாதாரத்தை வழங்கி உதவி செய்வது இறைவனின்  பொறுப்பாகும். எனவே அல்லாஹ்வே பொறுப்பேற்றுக்கொண்டபின் நீங்கள் எதற்காக வருவாய்ப் பின்னணி குறித்து யோசிக்க வேண்டும்? வருவாய்க்கான வாய்ப்பை வழங்குவது வல்லோன் அல்லாஹ்வின் பொறுப்பாகும். அதனால் அது குறித்து யோசிக்காமல் பெண்கொடுக்க முன்வாருங்கள்.
"ஏங்க உங்க பையனுக்கு இன்னும் திருமணம் முடிக்கலையா?'' என்று கேட்டால், "பையனுக்கு இருப்பதஞ்சு வயசுதானே ஆகுது, இப்ப என்ன அவசரம்?'' என்று சிலர் சொல்வார்கள். "இன்னும் ரெண்டு வருஷம் ஆகட்டும்!'' என்று சிலர் சொல்வார்கள். "வாழ்க்கையில செட்டில் ஆகட்டும்!'' என்று சிலர் சொல்வார்கள்.

திருமணத்திற்குப் பிறகுதானே வாழ்க்கையில் "செட்டில்' ஆக முடியும்? திருமணம் செய்யாமலே எப்படி வாழ்க்கையில் "செட்டில்' ஆவது? பொறுப்பற்ற நிலையில் பதிலளிக்கும் பெற்றோர் இவ்விடத்தில் மிகக் கவனமாகப் படிக்க வேண்டிய நபிமொழியைப் பாரீர்!

"பருவ வயதடைந்தும் ஒருவர் தம் பிள்ளைக்கு மணமுடித்து வைக்காமல், அதனால் அவன் தவறான  வழி(யான விபச்சாரத்து)க்குச் சென்றால் அதன் பாவம் அவனுடைய தந்தையையே சாரும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: பைஹகீ: 8299)

ஆகவே பிள்ளைகளை வளர்த்து ஆளாக்குவதோடு அவர்களின் பருவ வயதில் உரிய துணைதேடி மணமுடித்து வைப்பதும் ஒரு தந்தையின் கடமையே என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒரு தந்தை தம் கடமையைப் புறக்கணிக்கின்றபோதோ ஒத்திப்போடுகின்றபோதோ பிள்ளைகள் தம் விருப்பத்திற்கேற்பச் செல்லத் துணிவதைத் தடுக்க முடியாது என்பதையும் நினைவில்கொள்க!
=====================================================








புதன், 21 பிப்ரவரி, 2018

அஹ்லுஸ் சுன்னா ஜனவரி 2018- வாசகர் கடிதம்


அஹ்லுஸ் சுன்னா  ஜனவரி 2018 ‘இணைய மாத இதழ்’ கண்டேன். கால மாற்றத்திற்கேற்பவும் வாசகர்களின் எண்ண ஓட்டத்திற்கேற்பவும் புதிய முயற்சியாக இந்த இதழைக் காண்கிறேன். இணைய இதழில் முஸ்லிம் சமுதாயத்திற்கான ஒரு முன்னோடியாக ஓர் ஆலிம் திகழ்வது சாலப் பொருத்தமாகும்.
 
இன்றைய இளைஞர்கள் நேரடியாக உள்ள மனிதர்களிடம் பேசுவதைவிட அலைபேசியில் அழைப்பவரின் பேச்சுக்கே முன்னுரிமை கொடுக்கின்றார்கள். அதுபோலவே காகித எழுத்துகளை வாசிப்பதைவிட கணினித் திரையில் காணப்படுகின்ற எழுத்துகளைத்தான் கண்கொட்டாமல் வாசிக்கின்றார்கள். அவர்களின் எண்ண ஓட்டத்திற்கேற்ப, கால மாற்றத்தை உணர்ந்து ‘இணைய இதழ்’ தொடங்கியுள்ள ஆசிரியரின் துணிவைப் பாராட்டுகிறேன்.

மேலும் ஆழமான கருத்துகளை உட்கொண்டுள்ள சிறந்த ஆக்கங்களைத் தேர்வுசெய்து வெளியிடுவது இதழுக்குப் பெருமை சேர்க்கிறது. வாசகர்களின் சிந்தனை ஓட்டத்தை மடைமாற்றிச் சீரிய கோணத்தில் சிந்திக்கத் தூண்டுகிற விதத்திலான ஆக்கங்களை வெளியிடுவதையே ஆசிரியர் தம் நோக்கமாகக் கொண்டு எழுத்துப் பணியைத் தொடர வேண்டுமாய் அன்புடன் விழைகிறேன். 

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி, இமாம் மஸ்ஜித் ஜாமிஉல் அன்வார், மணலி,சென்னை-68  

==================================================