செவ்வாய், 10 ஏப்ரல், 2018

மறைவான ஞானம் குறித்து மறை கூறுவதென்ன?


  -முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

மறைவான ஞானம் மாநபிக்கு உண்டா? எனும் வினாவிற்கு இருசாரார் இருவிதமாகப் பதிலளிக்கின்றனர். எல்லா ஞானமும் ஏந்தல் நபிக்கு உண்டு. அவ்வகையில் மறைவான ஞானமும் மாநபிக்கு உண்டு. இருப்பினும் அதற்கு நிபந்தனையுண்டுஎன்பதே ஒரு சாராரின் பதில். மறைவான ஞானம் மாநபிக்கு இல்லை. அல்லாஹ் எதைத் தூதுமூலம் தெரிவிக்கின்றானோ அது மட்டுமே நபி (ஸல்) அவர்களுக்குத் தெரியும். மற்றவை குறித்து அவர்கள் அறியமாட்டார்கள். மறைவான ஞானம் இறைவனுக்கே சொந்தம்என்பது மற்றொரு சாராரின் பதில்.

இவ்விரண்டு கூற்றுகளையும் ஆழ்ந்து சிந்தித்தால் ஒரு புள்ளியில்தான் இரண்டும் வந்து இணைகின்றன. ஆனால் அவர்கள் சொல்லும்விதம்தான் வேறுவேறாக உள்ளது. அல்லாஹ் ஒருவன்தான்என்று கூறுவதும் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லைஎன்பதும் ஒரே கருத்தா? வெவ்வேறு கருத்தா? இந்த வித்தியாசம்தான் அவர்கள் கூறும் கூற்றில் உள்ளது. ஆனால் அதை அவர்கள் புரிந்துகொள்ளாமல் மறைவான ஞானம் மாநபிக்கு உண்டுஎன்பதிலேயே பிடிவாதமாக உள்ளனர். அதுதான் மார்க்க அறிஞர்கள் இருசாராராகப் பிரிந்தமைக்குக் காரணம்.

இவ்வுலகில் ஓர் இறைத்தூதர் எவ்வளவுதான் ஞானம் கொடுக்கப்பட்டிருந்தாலும் அது ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் அடங்கிவிடும். அல்லாஹ்வின் ஞானமோ வரையறைக்கு உட்படாதது. இதுதான் இஸ்லாமிய அடிப்படைக்கொள்கை. இதற்கு முரணாகச் சிலர் பேசுவதும் வாதிடுவதும் வியப்பாக உள்ளது.

அவன்தான் மறைவான விஷயங்களையெல்லாம் நன்கறிந்தவன். மறைவாக உள்ள இவ்விஷயங்களை அவன் ஒருவருக்கும் வெளிப்படுத்துவதும் இல்லை. ஆயினும், (தன்னுடைய) தூதர்களுள் யாரைத் தேர்ந்தெடுத்தானோ அவர்களுக்குத் தவிர. (அவர்களுக்கு அதனை அறிவிப்பான்.) (72: 26-27) இவ்வசனமே மறைவான ஞானம் மாநபிக்கு உண்டுஎன்று கூறுவோர் முன்வைக்கும் ஆதாரமாகும். உண்மையில் இந்த வசனம் கூறுவதென்ன?

இறைத்தூதும் ஒரு மறைவான ஞானமே. அதை அல்லாஹ், தான் விரும்பித் தேர்ந்தெடுக்கும் இறைத்தூதர்களுக்கு மட்டும் தெரிவிக்கிறான் என்பதே இவ்வசனம் கூறும் கருத்தாகும். அதை விடுத்து மறைவான ஞானம் முழுவதையும் அல்லாஹ் தன் தூதர்களுக்குத் தெரிவித்துவிடுவான் என்பதையோ, முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு மறைவான ஞானம் முழுவதையும் எடுத்துரைத்துவிட்டான் என்பதையோ இவ்வசனம் தெரிவிக்கவில்லையே! மற்ற தூதர்களுக்கு வழங்கப்பட்ட கல்வி-ஞானத்தைவிட முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட ஞானம் மிகுதியானது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அந்த அடிப்படையில்தான் நபி (ஸல்) அவர்கள் இவ்வுலக அழிவு நாள் வரை நடக்கப்போகும் அனைத்தையும் தெரிவித்துவிட்டுச் சென்றார்கள். இது அல்லாஹ் தன் தூதர்மீதும் அவருடைய சமுதாயத்தார்மீதும் கொண்டுள்ள அளவிலா அன்பையும் கருணையையுமே காட்டுகின்றது.
மறைவான ஞானம் மாநபிக்கு உண்டுஎன்று கூறுவோர் திருக்குர்ஆனின் பல்வேறு வசனங்களையும் நபி (ஸல்) அவர்களின் வாக்குமூலத்தையும் கவனிக்கத் தவறிவிட்டனர் என்றே கூறலாம்.

பின்வரும் இறைவனின் கூற்றுகளைக் கூர்ந்து படித்தால் நன்கு விளங்கும்.
மறைவானவற்றின் சாவிகள் அவனிடமே இருக்கின்றன. அவற்(றில் உள்ளவற்)றை அவனையன்றி வேறெவரும் அறியமாட்டார். நிலத்திலும், நீரிலும் உள்ளவற்றையும் அவன் நன்கறிவான். அவன் அறியாமல் ஓர் இலையும் உதிர்வதில்லை. பூமியின் (ஆழத்தில்) அடர்ந்த இருளில் (புதைந்து) கிடக்கும் (கடுகு போன்ற சிறிய) வித்தும், பசுமையானதும், உலர்ந்ததும் அவனுடைய தெளிவான (பதிவுப்) புத்தகத்தில் இல்லாமலில்லை. (6: 59)

அல்லாஹ் நாடினாலன்றி நான் எனக்கு யாதொரு நன்மையையோ தீமையையோ செய்துகொள்ள எனக்கு இயலாது. நான் மறைவானவற்றை அறிந்திருந்தால் நன்மைகளையே அதிகமாகத் தேடிக்கொண்டிருந்திருப்பேன்; யாதொரு தீங்குமே என்னை அணுகி இருக்காது. நான் (பாவிகளுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனும், நம்பிக்கை கொள்பவர்களுக்கு நற்செய்தி கூறுபவனுமே அன்றி வேறில்லை'' என்று (நபியே) நீங்கள் கூறுங்கள். (7: 188)

அல்லாஹ்வின் பொக்கிஷங்கள் என்னிடம் இருக்கின்றன என்றோ, மறைவானவற்றை நான் அறிகிறேன் என்றோ உங்களிடம் கூற மாட்டேன்என்று நபியே இவர்களிடம் கூறுங்கள். (6:50,  11:31) இன்னும் நீர் கூறுவீராக! அல்லாஹ்வைத் தவிர வானங்களிலும் பூமியிலும் இருப்பவர் எவரும் மறைவாக இருப்பதை அறியமாட்டார்கள். (27: 65) 

இந்த இறைவசனங்களைக் கூர்ந்து படிப்போருக்கு எந்தக் குழப்பமும் ஏற்படாது. ஏனெனில் இறைவசனங்கள் மிகத் தெளிவாக உள்ளன. அல்லாஹ் தன் தூதரை மக்களிடம் வாக்குமூலம் கொடுக்கச் செய்கின்றான். தமக்கு மறைவான ஞானம் இல்லை என்பதை அவர்களே தெளிவாக எடுத்துரைத்துள்ளார்கள். இதற்குப் பிறகும் இறைத்தூதருக்கு மறைவான ஞானம் உண்டு என வாதிட்டால் அது வீண்வாதமும் பிடிவாதமும் ஆகும்.

நபி (ஸல்) அவர்கள் தம்மைப் பற்றித் தாமாகவே வாக்குமூலம் கொடுக்கின்ற செய்தி நபிமொழித் தொகுப்பு நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றுள் ஒன்றைக் கீழே காணலாம்:
ஒரு தடவை சிறுமிகள் ஒன்றுகூடி பத்ருப் போர்க்களத்தில் தம் இன்னுயிரை ஈந்த உயிர்த்தியாகிகளின் வீரத்தைப் புகழ்ந்து பாடிக்கொண்டிருந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அங்கு சென்றார்கள். அச்சமயத்தில் அவர்கள், “எங்களில் ஒரு நபி இருக்கிறார். அவர் நாளை நடப்பதை அறிவார்என்று பாடினார்கள். அதனைச் செவியுற்ற நபி (ஸல்) அவர்கள்,  அ(வ்வாறு பாடுவ)தனை விட்டுவிடுவீர். ஏற்கெனவே பாடிக்கொண்டிருந்ததையே-தியாகிகளின் புகழையே-பாடுவீர்என்று கூறினார்கள். (நூல்: அபூதாவூத்: 4922) 

மறைவானவற்றை அறியும் ஞானம் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மட்டுமல்ல, மற்ற எந்த இறைத்தூதருக்கும் இல்லை என்பதைத் திருக்குர்ஆனை வாசிப்போர் புரிந்துகொள்ளலாம். 

நபி சுலைமான் (அலை) அவர்களுடன் ஹுத்ஹுத் (கொண்டைலாத்தி) பறவை எப்போதும் இருக்கும். ஒரு சமயம் அதைக் காணவில்லை. சுலைமான் (அலை) அவர்கள் கோபமுற்றார்கள். ஹுத்ஹுத் எங்கே சென்றுவிட்டது; அதைப் பார்க்க முடியவில்லையே! மறைந்து விட்டதா? சரியான ஆதாரத்தைக் கொண்டு வரவில்லையென்றால் அதை அறுத்து விடுவேன் அல்லது கடுமையான வேதனை செய்வேன் என்று சுலைமான் (அலை) சொன்னார்கள். சிறிது நேரத்திற்குள் ஹுத்ஹுத் வந்துவிட்டது. தாங்கள் அறிந்திராத ஒரு விஷயத்தை அறிந்து வந்துள்ளேன்; சபா என்ற நாட்டிலிருந்து உறுதியான ஒரு செய்தியை உம்மிடம் கொண்டு வந்திருக்கிறேன்என்று கூறிற்று.  (27: 22)

சுலைமான் நபியைப் பார்த்து, “உங்களுக்குத் தெரியாத ஒன்று எனக்குத் தெரியும்என்று ஒரு பறவை கூறுகிறது. அருகில் இருக்கும் சபாநாட்டைப் பற்றி சுலைமான் நபிக்குத் தெரியாமல் இருந்துள்ளது.  இதனால் நபியின் மதிப்பில் எந்தவிதக் குறையோ பாதிப்போ ஏற்படவில்லை. ஏனென்றால் நபியாக இருப்பதற்கு எல்லாவற்றையும் அறிந்து வைத்திருப்பது அவசியமில்லை என விளங்க முடிகிறது.
நபி ஆதம் (அலை) அவர்களுக்கு மறைவானவற்றை அறியும் ஆற்றல் இருந்திருந்தால் தடுக்கப்பட்ட அக்கனியைச் சாப்பிட்டிருக்க மாட்டார்கள்; ஷைத்தானிடம் ஏமாந்துபோயிருக்க மாட்டார்கள்.

நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் வீட்டிற்கு விருந்தினர்கள் சிலர் வந்தார்கள். வந்தவர்கள் இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு அறிமுகமில்லாதவர்களாகவும் இதுவரை பார்க்காத முகங்களாகவும் இருந்தார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள் மிக வேகமாகச் சென்று கன்றுக் குட்டியை அறுத்து அதன் இறைச்சியைப் பொரித்து விருந்தினர்களுக்கு முன் வைத்தார்கள். (வீட்டிற்கு வரும் விருந்தினர்கள் விருந்தில் வைக்கப்படும் உணவைச் சாப்பிடுவது அன்றைய வழக்கம். அப்படி முன்வைக்கும் உண்பொருளை விருந்தினர்கள் சாப்பிட மறுப்பது அவ்வீட்டாரைக் கேவலப்படுத்துவதாகக் கருதப்படும்.) விருந்தினர்களுக்கு முன்வைத்த இறைச்சியை வந்தவர்கள் சாப்பிட மறுப்பதைக் கண்ட இப்ராஹீம் (அலை) பயந்தார்கள்; வந்தவர்கள் தங்களுக்கு விரோதியாக இருப்பார்களோ எனச் சந்தேகப்பட்டார்கள். மேற்கண்ட நிகழ்ச்சி திருக்குர்ஆனில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

நிச்சயமாக நம்முடைய தூதர்கள் (மலக்குகள்) இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு நற்செய்தி கொண்டு வந்து, “உங்களுக்குச் சாந்தி உண்டாகுகஎன்று கூறினார்கள். (அதற்கு பதிலில்) உங்களுக்கும் சாந்தி உண்டாகட்டும் என இப்ராஹீம் (அலை) கூறினார்கள். சிறிதும் தாமதிக்காமல் (அறுத்து) பொரித்த கன்றுக் குட்டியின் இறைச்சியை அவர்களுக்கு முன்வைத்தார்கள். விருந்தினர்களின் கைகள் அதன் பக்கம் செல்லாததைக் கண்டதும் வந்தவர்களைப் பற்றிச் சந்தேகம் கொண்டார்கள். மேலும் அவர்களைப் பற்றி (விரோதியாக இருக்கலாம் என்ற) பயமும் மனதில் ஊசலாடியது. வந்தவர்கள் இப்ராஹீம் (அலை) அவர்களை நோக்கி, “நீங்கள் பயப்படாதீர்கள். நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதர்கள் (மலக்குகள்)எனக் கூறினார்கள். (11: 69-70)

இப்ராஹீம் (அலை) இறைத்தூதர்களுள் உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவர்கள். அவர்களுக்கு முன்னால் வானவர்கள் (மனிதத் தோற்றத்தில் தோன்றி) அமர்ந்து இருக்கிறார்கள். தம் முன்னால் அமர்ந்துள்ளவர்களைப் பற்றி அவர்கள் அறியவில்லை. வந்தவர்கள் தங்களைப் பற்றிச் சொல்லிய பிறகுதான் அவர்கள் தெரிந்து கொண்டார்கள். மனதளவில் பயந்தும் விட்டார்கள்; பயப்பட வேண்டாம் என்று வானவர்கள் சொல்லும் அளவுக்கு நிலைமை ஏற்பட்டது. இதனால் நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் அந்தஸ்து எந்த வகையிலும் குறையவில்லை.

யஅகூப் (அலை) அவர்கள் உயர்ந்த நபிமார்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார்கள். பிரியமான மகன் யூசுஃப் (அலை) அவர்கள் எங்கே இருக்கிறார்; எந்த நிலைமையில் இருக்கிறார் என்று பல வருடங்களாகத் தெரியாமல் இருந்தார்கள்.

யூசுஃப் (அலை) அவர்களின் பிரிவால் வருத்தப்பட்டு, அழுதழுது அவர்களின் இரண்டு கண்கள் கருப்பு நீங்கி வெளுத்து விட்டனஎன்று திருக்குர்ஆன் கூறுகிறது. (12:84) அல்லாஹ்வின் தூதராக இருந்தும் தம் குடும்பத்தாரின் நிலைமை தெரியாமல் இருந்திருக்கிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது அறையின் கதவிற்குப் பக்கத்தில் நபித்தோழர்கள் சிலர் சத்தமாகப் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டுவிட்டுத் தம் அறையிலிருந்து வெளியே வந்து அவர்களிடம், “நான் ஒரு மனிதனே; என்னிடம் வழக்காடுபவர்கள் வருகின்றார்கள்; (இருவருள்) ஒருவர் மற்றவரைவிட இலக்கிய நயமிக்கவராகவும் இனிமையாகப் பேசுபவராகவும் இருக்கலாம்; அவர் உண்மையைப் பேசுகிறார் என்று நினைத்து (உண்மை நிலை அறியாமல்) அவருக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்து விடுகிறேன்; அவருக்கு ஒரு முஸ்லிமின் உரிமையை எடுத்துக் கொள்ளும்படி நான் தீர்ப்பளித்தால் (அவருக்கு) அது நரக நெருப்பின் ஒரு துண்டேயாகும்; (விரும்பினால்) அதை அவர் எடுத்துக் கொள்ளட்டும்; (மறுமையில் தண்டிக்கப்படுவார்;) அல்லது அதை விட்டு விடட்டும் (உரியவரிடம் கொடுத்து விடட்டும்)என்று கூறினார்கள் என உம்மு சலமா (ரளி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல்: புகாரீ: 2458) 

இவ்வாறு இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களே சொல்லியபின்னரும் சிலர் நபி (ஸல்) அவர்களுக்கு மறைவான ஞானம் உண்டுஎன்று வாதிப்பதில் அர்த்தம் உள்ளதா?

மறைவான ஞானம் உண்டென்றால் பின்வரும் நிகழ்வுகள் நடந்ததேன்?
1. தம் சமுதாயத்தாருக்குக் குர்ஆனைக் கற்பிக்க என்னோடு ஆள்களை அனுப்பிவையுங்கள் என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டபோது, நபியவர்கள் எழுபது பேரை அனுப்பிவைத்தார்கள். அழைத்துச் சென்றவன் தன்னோடு தன் குலத்தாரையும் சேர்த்துக்கொண்டு பிஃரு மஊனா எனும் இடத்தில் அவர்களைச் சூழ்ந்துகொண்டு அந்த எழுபது பேரையும் கொன்றுவிட்டார்கள்.

2. நபியவர்கள் ஸஃபிய்யா வீட்டில் தேன் பருகிவிட்டு வரும்போது, “ஒரு கெட்ட வாடை தங்கள் வாயிலிருந்து வருகிறதே?” என்று கேட்க வேண்டும் என ஆயிஷா-ஹஃப்ஸா (ரளியல்லாஹு அன்ஹுமா) இருவரும் திட்டமிட்டார்கள். அதன்படிச் செயல்பட்டார்கள். அப்போதுதான், “நான் இனி தேன் பருக மாட்டேன்என்று சத்தியம் செய்தார்கள். அதன்பின்னர்தான் அத்தஹ்ரீம் அத்தியாயத்தின் வசனங்கள் இறங்கின.

3. அன்னை ஆயிஷா (ரளி) அவர்கள்மீது அவதூறு சொல்லப்பட்டபோது ஒரு மாதக் காலம் வரை நபியவர்கள் சஞ்சலத்தோடுதான் இருந்தார்கள். இறுதியில், அந்நூர் அத்தியாயத்தின் வசனங்கள் இறங்கி, அதன்மூலம்தான் அன்னை ஆயிஷா (ரளி) தூய்மையானவர் என நிரூபணமானது.

4. யூதப் பெண்ணொருத்தி ஆட்டிறைச்சியில் நஞ்சைத் தடவி, நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வந்து கொடுக்க, அதைத் தம் அருகில் இருந்த ஒரு தோழருக்குக் கொடுத்துவிட்டுத் தாமும் உண்டார்கள். அதனை உண்ட அத்தோழர் இறந்துபோய்விட்டார். நபி (ஸல்) அவர்கள் ஒரு கவளத்தை விழுங்கிவிட்டார்கள். அதன்பின் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து, நஞ்சு கலந்துள்ள செய்தியைச் சொன்னதும் அதைக் கீழே துப்பிவிட்டார்கள்.  
இவைபோலவே பல்வேறு நிகழ்வுகள் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றில் உள்ளன. இவையெல்லாம் நடப்பதற்கு முன்னரே, மறைவான ஞானம் கொண்ட இறைத்தூதர் நிகழாமல் தடுத்திருக்கலாமே? எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டாலும், பிஃரு மஊனா எனும் இடத்தில் கொல்லப்பட்ட எழுபது பேரையாவது மறைவான ஞானத்தால் காப்பாற்றியிருக்கலாமே? நஞ்சு தோய்க்கப்பட்ட இறைச்சியை உண்ணாமல் தவிர்த்திருக்கலாமே? தம் தோழரையும் காப்பாற்றியிருக்கலாமே? ஏன் செய்யவில்லை. மறைவான ஞானம் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரிய பண்பாகும் என்பதை இனியும் மறுக்க முடியுமா? அல்லது நபியவர்கள் தெரிந்துகொண்டேதான் அமைதியாக இருந்தார்கள்என்று  சொல்லப் போகிறார்களா?       

மறுமை நாளின் அடையாளங்கள், சொர்க்கத்தின் தன்மைகள், நரகத்தின் தன்மைகள், தஜ்ஜாலின் வருகை, இறைத்தூதர் ஈஸா (அலை) அவர்களின் வருகை, யஃஜூஜ்-மஃஜூஜ் வருகை, கஅபா இடிக்கப்படுதல் உள்ளிட்ட ஏராளமான முன்னறிவிப்புகளைச் சொல்லியுள்ளார்கள். இவையெல்லாம் மறைவான ஞானங்கள்தாம். ஆனால் இவையெல்லாம் நபியவர்களுக்கு இறைவன் அறிவித்தவையே தவிர அவர்கள் சொந்தமாகச் சொன்னவை அல்ல. எனவே அல்லாஹ் அவர்களுக்கு எதை அறிவித்தானோ அதைத் தவிர மற்ற எதையும் சொல்லுமாறு அவன் அவர்களுக்குக் கட்டளையிடவுமில்லை; அவர்கள் சொல்லவுமில்லை. இதையெல்லாம் சற்று நிதானித்துப் புரிந்துகொண்டால், இது குறித்துக் கருத்து வேறுபாடு கொள்ளாமல் அனைவரும் ஒரே புள்ளியில் இணைந்துவிடலாம். மார்க்க அறிஞர்கள் இரு சாராராகப் பிரிந்து செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது.

இல்லைஎன்று சொல்வதைவிட, ‘உண்டுஎன்று சொல்வதுதானே நபியவர்களுக்குச் சிறப்பு என்று வாதம் செய்வோரும் உண்டு. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே, தமக்குச் சூட்டிக்கொள்ளாத அல்லாஹ்வின் தன்மையை நாம் சுயமாக எவ்வாறு இறைத்தூதருக்கு இணைக்க முடியும்? எவையெவை அல்லாஹ்வின் பண்புகள், எவையெவை இறைத்தூதரின் பண்புகள் என்று திருக்குர்ஆனும் திருநபி வாக்குகளும் நமக்குத் தெளிவாக எடுத்துரைக்கும்போது நாம் எதற்காக வீண்விவாதம் செய்துகொண்டிருக்க வேண்டும்? அல்லாஹ்வுக்குச் சொந்தமான தன்மையை நாம் ஏன் அவனுடைய தூதருக்குரியது என்று உண்மைக்கு முரணாகப் பேச வேண்டும்? எது உண்மை, எது பொய் என்பதை நடுநிலையோடு சிந்திக்கக்கூடியோர் புரிந்துகொள்வர். உயர்ந்தோன் அல்லாஹ் சரியான புரிதலை நம் அனைவருக்கும் தருவானாக!
================================================================











கருத்துகள் இல்லை: