சனி, 17 மார்ச், 2018

ஏழைக்குப் பெண் தரமாட்டீரா?



                                                -முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி

"திருமணம் எனது வழிமுறை'' என்றும் "யார் என் வழிமுறையைப் புறக்கணிக்கிறாரோ அவர் என்னைச் சார்ந்தவர் இல்லை'' என்றும் வெவ்வேறு தருணங்களில் நபி (ஸல்) அவர்கள் கூறிய செய்தியைத் திருமண மேடைகளில் ஆலிம்கள் அரபியில் "குத்பா' நிகழ்த்தும்போது நீங்கள் செவியுற்றிருக்கலாம்.

நபியவர்களின் வழிமுறையான திருமணம் செய்துகொள்வதற்கு ஒவ்வோர் இளைஞனும் இளைஞியும் பெரும் போராட்டத்தை மேற்கொள்ள வேண்டியுள்ளது. முற்றிலும் பொருளாதாரத்தை முன்வைத்தே திருமணப் பேச்சு நடைபெறுகிறது. இதனால் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளவர்களுக்குப் பெண் கிடைப்பதும் மாப்பிள்ளை கிடைப்பதும் மிகுந்த சிரமமாக உள்ளது.

அதாவது பொருளாதாரச் சிந்தனையை ஒருபுறம் ஒதுக்கிவிட்டு, மணாள, மணாளிகளின் மார்க்கப்பற்று, நற்குணம் ஆகியவற்றை மட்டுமே முன்வைத்துத் திருமணப் பேச்சு நடைபெற வேண்டும் என்ற கருத்தையே நான் முன்வைக்க விரும்புகிறேன்.

ஓர் ஆணைப் பொறுத்த வரை, மார்க்கப்பற்றும்  நற்குணமும்கொண்ட ஆண்மையுள்ள இளைஞனாக இருக்க வேண்டும் என்பதே இல்வாழ்வில் இணைவதற்கான முக்கிய நிபந்தனை. பெண்ணைப் பொறுத்த வரை, மார்க்கப்பற்றும் நற்குணமும் கொண்ட, இல்லறத்தில் ஈடுபடுவதற்கான தகுதியுள்ளவளாக இருக்க வேண்டும் என்பதே நிபந்தனை. இதற்கிடையே பொருளாதாரம் எங்கிருந்து உள்ளே நுழைந்தது?

திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள்! "உங்களுள் வாழ்க்கைத் துணையின்றி இருப்போருக்கும் உங்களுடைய ஆண், பெண் அடிமைகளுள் நல்லோருக்கும் நீங்கள் மணமுடித்து வையுங்கள். அவர்கள் ஏழைகளாக இருந்தால் அல்லாஹ் அவர்களைத் தன் அருளால் தன்னிறைவு பெறச் செய்வான். அல்லாஹ் தாராளமானவனும் நன்கறிந்தோனும் ஆவான்.'' (24: 32)

ஆண்-பெண் இருவரும் ஒன்றாக இணையும்போது அவர்களுக்குத் தேவையான பொருளாதாரத்தையும் வாழ்க்கைத் தேவைகளையும் ஈட்டிக்கொள்வதற்கான வாய்ப்புகளையும்  வழிகளையும் உயர்ந்தோன் அல்லாஹ் ஏற்படுத்திக் கொடுப்பான். அது குறித்துப் பெற்றோரோ மற்றோரோ கவலைப்படத் தேவையில்லை. அல்லாஹ்வே பொறுப்பேற்றுக்கொண்டபின் கவலைப்பட  என்ன இருக்கிறது?

ஆனால் இன்றைய அவசரமான சூழ்நிலையில் சிக்குண்டு கிடக்கிற மக்களுக்கு இதைக் குறித்தெல்லாம் சிந்திக்க நேரமில்லை. சமூக மக்களின் ஓட்டத்திற்கேற்ப ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் இன்றையச் சூழலில் ஒரு திருமணத்தை அவ்வளவு எளிதாக நடத்த முடிவதில்லை.  நூற்றுக்கணக்கான சடங்குகளை நிறைவேற்றித்தான் ஒருவர் தம் மகளுக்கோ  மகனுக்கோ திருமணம்  செய்ய முடியும்.
ஓர் ஆணுக்குப் பெண்பேசப் புறப்பட்டால் பெண்வீட்டில் கேட்கப்படுகின்ற கேள்வி, "மாப்பிள்ளை என்ன செய்கிறார்?, அவருக்கு எவ்வளவு சம்பளம்?'' என்பதுதான். மாப்பிள்ளையின் சம்பளத்தை முன்வைத்துத்தான் பெண்கொடுக்க முன்வருகிறார்கள். அந்த அடிப்படையில் தற்போது பத்தாயிரம் சம்பாதிக்கின்ற மாப்பிள்ளைக்கெல்லாம் பெண்தர மறுத்துவிடுகின்றனர். "இருபதாயிரம், முப்பதாயிரம் சம்பாதிக்கிற மாப்பிள்ளையைப் பாருங்கள்'' என்று மிக எளிதாகப் பேசுகின்றார்கள். இதனால் இளைஞர்கள் பலர் உரிய வயதில் திருமணம் முடித்துக்கொள்ள முடியாமல் சிரமப்படுகின்றனர்.  இப்போதுதான் அந்த நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்துள்ள அந்த இளைஞருக்கு எப்படி உடனடியாக அவ்வளவு சம்பளம் கிடைக்கும்? காலம் செல்லச் செல்ல அவனுடைய சம்பளம் உயரவே செய்யும். வாழ்க்கை மேம்பாடு அடையவே செய்யும் என்ற யதார்த்தமான நம்பிக்கைகூட இருப்பதில்லை.

ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் தம்மை (அர்ப்பணித்து) அன்பளிப்புச் செய்துவிட்டதாகக் கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(இனி) எனக்கு எந்தப் பெண்ணும் தேவையில்லை'' என்று சொன்னார்கள். அப்போது அங்கிருந்த ஒரு மனிதர் "இந்தப் பெண்ணை எனக்கு மணமுடித்து வையுங்கள்!'' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், "ஏதேனும் ஆடையொன்றை அவளுக்கு ("மஹ்ர்' எனும் விவாகக் கொடையாக)க் கொடு!'' என்று (அந்த மனிதரிடம்) சொன்னார்கள். அவர், "என்னிடம் இல்லை'' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், "அவளுக்கு (எதையேனும் மஹ்ராக)க் கொடு! அது இரும்பாலான மோதிரமாக இருந்தாலும் சரியே'' என்று சொன்னார்கள். இதைக் கேட்டு அந்த மனிதர் கலங்கினார். எனவே, நபி (ஸல்) அவர்கள், "குர்ஆனிலிருந்து உன்னிடம் என்ன (அத்தியாயம் மனனமாக) இருக்கிறது?'' என்று கேட்டார்கள். அவர் இன்ன இன்ன அத்தியாயங்கள் (எனக்கு மனப்பாடமாக) உள்ளன'' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள்,  "உம்முடன் இருக்கும் குர்ஆன் அத்தியாயங்களுக்காக இவளை உமக்கு மணமுடித்து வைத்துவிட்டேன்'' என்று சொன்னதாக சஹ்ல் பின் சஅத் (ரளி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல்: புகாரீ: 5029)

அடுத்த வேளை உணவுக்கு உத்தரவாதம் இல்லாத ஒருவருக்கு, மேலும் ஒரு சுமையாக ஒரு பெண்ணை நபி (ஸல்) அவர்கள் மணமுடித்துக் கொடுத்தார்கள் என்றால் இறைவனின் மீதுள்ள நம்பிக்கைதான். "வாழ்க்கைத் துணையின்றி இருப்போருக்கு நீங்கள் மணமுடித்து வையுங்கள்'' என்று அல்லாஹ் கூறுகின்றான். எனவே அதன்மீது நம்பிக்கை வைத்து மணமுடித்துவைத்துவிட்டார்கள்.
நபி (ஸல்) அவர்கள் மணமுடித்து வைத்த அவரைவிட ஏழையாகவா உங்களுடைய மாப்பிள்ளை இருக்கிறார்? பிறகேன் ஏழைக்குப் பெண் கொடுக்க மறுக்கின்றீர்?

"யாருடைய மார்க்கப்பற்று, நற்குணம் ஆகியவை குறித்து நீங்கள் திருப்தி அடைவீர்களோ அவர் உங்களிடம் பெண்கேட்டால் அவருக்கு மணமுடித்து வையுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யாவிட்டால் இந்தப் பூமியில் கலகமும் பெருமளவு குழப்பங்களும் ஏற்படும்'' என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (நூல்: திர்மிதீ: 1004)      

"கலகமும் பெருமளவு குழப்பங்களும் ஏற்படும்'' என நபி (ஸல்) அவர்கள் எச்சரித்த நிகழ்வுகள் இன்று நடைபெறுகின்றனவா, இல்லையா? முஸ்லிமாக வளர்ந்த உங்கள் வீட்டுப்பெண் இறைமறுப்பாளன் ஒருவனின் கரம் பற்றிக்கொண்டு இல்லம்விட்டுப் புறப்பட்டுச் செல்வதைக் கண்டுகொண்டுதானே இருக்கிறீர்கள்?

இன்று நம் சமுதாய மக்களின் திருமணச் செலவைச் சற்றுத் திரும்பிப் பாருங்கள். சாதாரண வருவாய் உள்ளோரும் குறைந்தபட்சம் இரண்டு முதல் ஐந்து இலட்சம் வரை செலவு செய்கிறார்கள். பத்திரிகை முதல் வீடியோ வரை வீண்விரயத்தின் வாசல்கள் தாராளமாகத் திறக்கப்பட்டுள்ளன. மாப்பிள்ளை வீட்டார் ஐநூறு பேர், பெண்வீட்டார் முன்னூறு முதல் ஐநூறு பேர் என ஒரு பெருவிருந்து நடத்தினால்தான் திருமணமா? ஒவ்வொருவரும் தத்தமது கௌரவத்தை நிலைநாட்டும் நிகழ்வாகத் திருமணம் ஆகிவிட்டது. பள்ளிவாசலில் வைத்து, மிகக் குறைந்த செலவில் செய்துமுடிக்க வேண்டிய திருமணத்தை மாபெரும் மாநாட்டைப்போல ஆக்கிவைத்துள்ளோம்.

குறைவான வருவாய் ஈட்டுகின்ற மணாளனை நீங்கள் தேர்வு செய்யத் தொடங்கிவிட்டால், பெண்களின் திருமணத்திற்குத் தடையாகவும் முட்டுக்கட்டையாகவும் இருக்கின்ற வரதட்சிணை தானாக விடைபெறத் தொடங்கிவிடும். குறைந்த வருவாய்க்குள் குடும்பம் நடத்தப் பழகிவிட்டால்  அதன்பின் மிகுதியாக வருவாய் கிடைக்கின்றபோது, அதைச் சேமித்து, குடும்பத்திற்குத் தேவையான பொருள்களை வாங்கிக்கொள்ளலாம். பிறரிடம் கடன் வாங்க வேண்டிய தேவை ஏற்படாது.

நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ள செய்தியை இவ்விடத்தில் நினைவுகூர்வது முற்றிலும் பொருத்தமாகும். "மூவருக்கு உதவி செய்வது அல்லாஹ்வின் பொறுப்பாகும். 1. இறைவழியில் போர்புரியும் போர்வீரர், 2. விடுதலைக்கான தொகையைச் செலுத்திவிட வேண்டும் என்று நினைக்கிற விடுதலை ஆவணம் எழுதிக் கொடுக்கப்பட்ட அடிமை, 3. கற்பொழுக்கம் பேண வேண்டும் என்ற எண்ணத்தில் திருமணம் செய்துகொண்டவர்'' என அல்லாஹ்வின் தூதர்  (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: திர்மிதீ: 1579)

ஆகவே ஒருவர் தம் கற்பைக் காத்துக்கொள்வதற்காகத் திருமணம் செய்துகொண்டுவிட்டால் அவர் தம் குடும்பத்தை நடத்துவதற்கான பொருளாதாரத்தை வழங்கி உதவி செய்வது இறைவனின்  பொறுப்பாகும். எனவே அல்லாஹ்வே பொறுப்பேற்றுக்கொண்டபின் நீங்கள் எதற்காக வருவாய்ப் பின்னணி குறித்து யோசிக்க வேண்டும்? வருவாய்க்கான வாய்ப்பை வழங்குவது வல்லோன் அல்லாஹ்வின் பொறுப்பாகும். அதனால் அது குறித்து யோசிக்காமல் பெண்கொடுக்க முன்வாருங்கள்.
"ஏங்க உங்க பையனுக்கு இன்னும் திருமணம் முடிக்கலையா?'' என்று கேட்டால், "பையனுக்கு இருப்பதஞ்சு வயசுதானே ஆகுது, இப்ப என்ன அவசரம்?'' என்று சிலர் சொல்வார்கள். "இன்னும் ரெண்டு வருஷம் ஆகட்டும்!'' என்று சிலர் சொல்வார்கள். "வாழ்க்கையில செட்டில் ஆகட்டும்!'' என்று சிலர் சொல்வார்கள்.

திருமணத்திற்குப் பிறகுதானே வாழ்க்கையில் "செட்டில்' ஆக முடியும்? திருமணம் செய்யாமலே எப்படி வாழ்க்கையில் "செட்டில்' ஆவது? பொறுப்பற்ற நிலையில் பதிலளிக்கும் பெற்றோர் இவ்விடத்தில் மிகக் கவனமாகப் படிக்க வேண்டிய நபிமொழியைப் பாரீர்!

"பருவ வயதடைந்தும் ஒருவர் தம் பிள்ளைக்கு மணமுடித்து வைக்காமல், அதனால் அவன் தவறான  வழி(யான விபச்சாரத்து)க்குச் சென்றால் அதன் பாவம் அவனுடைய தந்தையையே சாரும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: பைஹகீ: 8299)

ஆகவே பிள்ளைகளை வளர்த்து ஆளாக்குவதோடு அவர்களின் பருவ வயதில் உரிய துணைதேடி மணமுடித்து வைப்பதும் ஒரு தந்தையின் கடமையே என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒரு தந்தை தம் கடமையைப் புறக்கணிக்கின்றபோதோ ஒத்திப்போடுகின்றபோதோ பிள்ளைகள் தம் விருப்பத்திற்கேற்பச் செல்லத் துணிவதைத் தடுக்க முடியாது என்பதையும் நினைவில்கொள்க!
=====================================================








கருத்துகள் இல்லை: