சனி, 10 பிப்ரவரி, 2018

முஹம்மது வசீம் அவர்களுடன் ஒரு நேர்காணல்



மனை வணிகம் செய்யும்
முஹம்மது வசீம் அவர்களுடன் ஒரு நேர்காணல்

இவர் பெயர் முஹம்மது வசீம். இவர் பர்மாவில் 1973ஆம் ஆண்டு பிறந்தவர். 1978ஆம் ஆண்டு தம் பெற்றோருடன் சென்னைக்கு வந்து இங்கே வளர்ந்து, பர்மா பஜாரில் சின்னச் சின்ன வேலைகள் செய்து, செல்போன் கடை வைத்து நடத்தி, தற்போது சென்னை, முத்தமிழ் நகரில் மனை வணிகத் தொழில் செய்து வருகிறார். இப்போது இவர் இத்தொழிலில் நன்கு வெற்றிபெற்றுள்ளார். அவர் ஜொர்னலிஸ்ட் வாய்ஸ் மாத இதழுக்கு மனமுவந்து அளித்த பேட்டி. அவரது பேட்டி வாசகர்களுக்கு மிகுந்த பயனளிக்கும் என்று நம்புகிறோம்.

நாம்: நீங்கள் இந்தத் தொழிலுக்கு எப்படி வந்தீர்கள்?

அவர்: எதையாவது செய்து நல்ல நிலையை அடைய  வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. நான் 2008ஆம் ஆண்டு பர்மா பஜாரில் வேலை செய்து கொண்டிருந்தபோது ஒருவர் என்னிடம், “எனக்கொரு வீடு பார்த்துக் கொடுங்களேன்” என்று கேட்டார். அதற்கு நான், “எனக்கு அது பற்றியெல்லாம் தெரியாது” என்று சொன்னேன். அதன் பிறகு அவருடைய மேலாளர் என்னிடம், “இந்தத் தொழில் செய்பவரிடம் சென்று சொல்லுங்கள். அவர் பார்த்துக் கொடுப்பார். அப்படியே நீங்களும் அதற்கான கமிஷன் தொகையை வாங்கிக்கொள்ளலாம்” என்று சொன்னார். அவருடைய யோசனை எனக்கு நல்லதாகப் பட்டது. எனவே என்னால் இயன்ற முயற்சி செய்தேன். இறைவனின் நாட்டப்படி ஐந்து மாதத்தில் ஒரு வியாபாரத்தை முடித்தேன். அப்போதிருந்துதான் நான் இந்தத் தொழிலைச் செய்து வருகிறேன்.

நாம்: நீங்கள் மனை வணிகம் செய்யும் நிலப் பகுதி வீடு கட்டிக் குடியேறும் பகுதியா? அல்லது நீண்ட காலம் கழித்துதான் அப்பகுதியெல்லாம் முன்னேற்றமடையுமா? 

அவர்: சில ஆண்டுகளில் வீடு கட்டிக் குடியேறும் பகுதிதான். செங்குன்றம் பகுதியில் நான் விற்பனை செய்த நிலப் பகுதியில் பலர் வீடு கட்டிக் குடியேறிவிட்டார்கள். சோழவரத்தில் விற்பனை செய்த நிலப்பகுதியிலும் பாதிப்பேர் வீடு கட்டிக் குடியேறிவிட்டார்கள். அதுதான் எனக்கு இந்தத் தொழிலில் கிடைத்த மிகப்பெரிய திருப்தி.

நாம்: எத்தனை ஆண்டுகளாக இந்தத் தொழிலைச் செய்கிறீர்கள்?

அவர்: பத்தாண்டுகளாகச் செய்து வருகிறேன். அப்போது செங்குன்றம் பகுதியில் ஒரு சதுரடி முந்நூறு ரூபாய்க்கு விற்றேன். இப்போது அங்கு ஒரு சதுரடி ஐந்நூறு, அறுநூறுக்கு மேல் விலை போகிறது.

நாம்: இதுவரை உங்களிடம் நிலம் வாங்கிய யாராவது ‘நிலத்தில் பிரச்சனை’ என்று உங்களிடம் வந்துள்ளாரா?

அவர்: அப்படி யாரும் இதுவரை வந்ததில்லை. எந்தப் பிரச்சனையும் இல்லாத நிலப்பகுதியைத்தான் விற்பனை செய்து வருகிறேன். ஒருவருக்கு விற்பனை செய்த நிலத்தை வேறு யாருக்கும் விற்பனை செய்து மோசடி  செய்யும் பழக்கம் என்னிடம் இல்லை. இறைவனுக்குப் பயந்துதான் இந்தத் தொழிலைச் செய்து வருகிறேன்.

நாம்: விவசாய நிலத்தை விற்பனை செய்யக் கூடாது என்று தடை இருந்ததே! இப்போது அது நீக்கப்பட்டுவிட்டதா?

அவர்: அந்த வழக்கு நீதிமன்றத்தில்தான் உள்ளது. அதன் இறுதித் தீர்ப்பு விரைவில் வரும். கிட்டத்தட்ட அது முடிந்த மாதிரிதான்.

நாம்: அந்தத் தீர்ப்புக்குப்பின் மனைகளின் விலை குறைய வாய்ப்புண்டு என்று சொல்லப்படுகிறதே! அது பற்றி உங்களின் கருத்தென்ன?

அவர்: மனைகளின் விலை குறையும் என்று சொல்வது தண்ணீரில் எழுதுவதற்கு ஒப்பாகும். காலம் செல்லச் செல்ல விலைவாசி உயருமே தவிர குறைய வாய்ப்பில்லை. இது வீட்டு மனைகளுக்கு மட்டுமில்லை. எல்லாப் பொருள்களுக்கும் பொருந்தும். இது என்னுடைய பத்தாண்டு அனுபவம் ஆகும்.

நாம்: ஒருவர் வாங்கி வைத்துள்ள நிலத்தை அரசாங்கம் கையகப்படுத்த முடியுமா?

அவர்: தேசிய நெடுஞ்சாலை, மேம்பாலம், இரயில்வே தண்டவாளம் போன்றவை அமைப்பதற்காக அரசாங்கம் ஒருவரின் நிலத்தைக் கேட்டால் நில உரிமையாளர் தமது நிலத்தை அரசாங்கத்திற்குக் கொடுக்க வேண்டியதுதான். உதாரணமாக, கோயம்பேட்டில் மேம்பாலம் கட்டுவதற்காக நடிகர் விஜயகாந்தின் கல்யாண மண்டபம் அமைந்துள்ள இடத்தை அவர் அரசாங்கத்திடம் ஒப்படைக்க நேரிட்டது. ஆனால் அரசாங்கம் அதற்கான நிலமதிப்பு எவ்வளவோ அதைக் கொடுத்துவிடும். இதுதான் பொதுச் சட்டம். 
 
நாம்: தங்கத்தில் முதலீடு செய்வது நல்லதா? நிலத்தில் முதலீடு செய்வது நல்லதா? 

அவர்: தங்கத்தில் முதலீடு செய்வதற்கும் நிலத்தில் முதலீடு செய்வதற்கும் இடையே சிறிய வித்தியாசம் உள்ளது. தங்கத்தை விற்றால் உடனடியாகப் பணம் கிடைத்துவிடும். எனவே விற்பது எளிது. நிலத்தை விற்பது அவ்வளவு எளிதல்ல. பட்டா, சிட்டா, சட்ட ஆலோசனை எல்லாம் பெற்றபின்னர்தான் ஒரு நிலத்தை விற்க முடியும். அதனால் என்ன நன்மையென்றால் நிலம் நீண்டகாலம் ஒரு சொத்தாக நம்மிடம் நிலைத்திருக்கும். அது மட்டுமில்லை, காலப்போக்கில் அந்நில மதிப்பு நாம் போட்ட முதலீட்டைவிடப் பன்மடங்கு பெருகிவிடும்.

நாம்: ரியல் எஸ்டேட் என்றாலே பெரும்பாலும் மக்கள் பயப்படுகின்றார்கள். பணத்தைக் கொடுத்து நிலத்தை வாங்க அஞ்சுகிறார்களே! ஏமாந்துபோகாமல் இருக்க ஏதேனும் வழியுண்டா?

அவர்: பொதுவாகச் சமுதாயத்தில் நிலவும் எல்லாச் செயல்களிலும் பெரும்பான்மை, சிறுபான்மை என்று உள்ளது. நன்மை செய்பவர்கள் அதிகம். தீமை செய்பவர்கள் குறைவுதான். திருடாமல் இருப்போர் அதிகம். திருடர்கள் குறைவுதான். இப்படித்தான் இந்த ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஏமாற்றுபவர்கள் இருக்கிறார்கள். அதேநேரத்தில் நேர்மையாக வியாபாரம் செய்வோர் நிறையப் பேர் இருக்கின்றார்கள். அவர்களைக் கண்டறிந்து நிலத்தை வாங்க வேண்டும். மற்றொரு விஷயம், நிலத்தை வாங்குவதற்குமுன், முன்பணம் கொடுத்த பிறகு, அவர்களிடம் அந்நிலத்திற்கான ஆவணங்களை வாங்கி, ஒரு வழக்கறிஞரிடம் காண்பித்து, “சார், நான் இந்த நிலத்தை வாங்கப்போறேன். இதன் ஆவணங்களெல்லாம் சரியா இருக்கா என்று பார்த்துச் சொல்லுங்க” என்று கேட்டுக்கொண்டால், அவர் சார்பதிவாளர் அலுவலகத்தில் இ.சி. (வில்லங்கச் சான்றிதழ்) போட்டுப் பார்ப்பார். தாய்ப்பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள பெயரில் அந்நிலம் இருந்தால், அது சரியானது என்று அர்த்தம். சரியாக இருந்தால், வாங்குங்கள் என்று சொல்லப்போகிறார். சரியாக இல்லையென்றால் வாங்க வேண்டாம் என்று சொல்வார். இதன்மூலம் நாம் ஏமாறுவதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம்.

நாம்: வழக்கறிஞர் துணையின்றி, இ.சி. (வில்லங்கச் சான்றிதழுக்கு) நாமே சுயமாக விண்ணப்பம் செய்யலாமா?

அவர்: தாராளமாகச் செய்யலாம். ஆனால் அந்த ஆவணங்கள் அனைத்தையும் பொறுமையாகப் படித்துப் பார்த்துச் சரிபார்ப்பது சிரமம். அதன் நுணுக்கங்கள் தெரிந்தவர்கள் வழக்கறிஞர்கள்தாம். எனவே அந்தந்தத் தொழிலுக்கு உரியவர்கள் அதையதைப் பார்த்தால்தான் சரியாக இருக்கும்; நமக்கும் திருப்தியாக இருக்கும். அது மட்டுமில்லை. “இந்நிலத்தின் ஆவணங்கள் அனைத்தும் சரியாகத்தான் உள்ளன” என்று குறிப்பிட்டு, ‘லீகல் ஒப்பீனியன்’ எனும் பெயரில் அவருடைய ‘லெட்டர் பேடில்’ அவரிடமே நாம் ஒரு கடிதமும் வாங்கிக்கொள்ளலாம். ‘பிற்காலத்தில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் அதற்கு நான் பொறுப்பு’ என்று அதற்கு அர்த்தம். அப்படி ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் அவரை நாம் அணுகலாம். மேலும் நாம் அந்நிலத்தை யாருக்கேனும் விற்பதாக இருந்தாலும் அந்த ‘லீகல் ஒப்பீனியன்’ கடிதம் ஒருபடி மதிப்பையும் நம்பிக்கையையும் அதிகரித்துக்காட்டும்.   

நாம்: தற்போது நீங்கள் எங்கே நில விற்பனை வரைவுத் திட்டம் போட்டிருக்கிறீர்கள்?

அவர்: திருநின்றவூர் குடியிருப்புப் பகுதியின் அருகிலுள்ள நிலப்பகுதியில் போட்டுள்ளோம். அதனைத் தொடர்ந்து அத்திப்பட்டு அருகில் போடவுள்ளோம். மனை தேவைப்படுவோர் என்னை நேரடியாகத் தொடர்புகொள்ளலாம்: 86819 21999. மிக்க நன்றி.


-நேர்காணல்: நூ. அப்துல் ஹாதி பாகவி, துணை ஆசிரியர்
 (நான்கு  மாதங்களுக்கு முன்னர் எடுத்த பேட்டி)
========================== 



வியாழன், 8 பிப்ரவரி, 2018

சோம்பலை விரட்டுவோம்!


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

ஒவ்வொரு மனிதனின் தோல்விக்கும் முதற்காரணம் சோம்பல்தான். அதேநேரத்தில் அதற்கு எதிர்க்குணமான சுறுசுறுப்பே ஒரு மனிதனின் வெற்றிக்குத் தலையாய காரணமாகும். மனித வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் இன்பமாகவும் அமைய அவனது சுறுசுறுப்பே துணைபுரிகிறது.

ஒருவன் நாள் முழுக்கச் சுறுசுறுப்போடு இருக்க வேண்டுமெனில் அவன் இறைக்கடமைகளைச் செவ்வனே நிறைவேற்ற வேண்டும். நேரத்தை முறையாக மேலாண்மை செய்பவனாக இருக்க வேண்டும். அவனே வெற்றியாளன். அதிகாலை துயிலெழுவதும் அதன்பின் படைத்த இறைவனைப் போற்றிப் புகழ்வதும் அவனைத் தொழுவதும் அவனிடமே பிரார்த்தனையின் மூலம் கோரிக்கைகளை முன்வைப்பதும் வெற்றியின் முதற்படியாகும்.

அல்லும் பகலும் பாடுபட்டு உழைப்பவன் அதிகாலை துயிலெழுந்து படைத்த இறைவனை வணங்கவில்லையானால் அவர் எவ்வளவுதான் உழைத்தாலும் முன்னேற்றம் காண முடியாது. ஒருக்கால் முன்னேற்றம் கண்டாலும் அது நீடித்து நிலைக்காது. அவன் சோம்பேறியாகவே தன் வாழ்நாளைக் கழிப்பான். அதற்கான காரணம் நபிமொழியில் உள்ளது.

“நீங்கள் உறங்கிக் கொண்டிருக்கும் போது உங்கள் தலையின் பின்பக்கத்தில் ஷைத்தான் மூன்று முடிச்சுகளைப் போட்டு விடுகிறான். ஒவ்வொரு முடிச்சிலும், “இன்னும் உனக்கு நீண்ட இரவு  (ஓய்வெடுப்பதற்காக எஞ்சி) இருக்கின்றது. ஆகவே, நீ தூங்கிக் கொண்டேயிரு” என்று போதித்து (அவனை விழிக்க விடாமல் உறங்க வைத்து) விடுகின்றான். அவர் (அவனது போதனையைக் கேட்காமல் அதிகாலையில்) கண் விழித்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால் ஒரு முடிச்சு அவிழ்ந்து விடுகின்றது. அவர் உளூ செய்தால் மற்றொரு முடிச்சு அவிழ்ந்து விடுகின்றது. அவர் (தஹஜ்ஜுத் அல்லது ஃபஜ்ர்) தொழுதுவிட்டால் முடிச்சுகள் முழுவதுமாக அவிழ்ந்து விடுகின்றது. அவர் சுறுசுறுப்புடனும் உற்சாகமான மனநிலையுடனும் காலைப் பொழுதை அடைவார். இல்லையென்றால் மந்தமான மனநிலையுடனும் சோம்பலுடனும் காலைப் பொழுதை அடைவார்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரீ: 3269) இதை அபூஹுரைரா (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அதிகாலை எழுந்து தொழுதவன் சுறுசுறுப்போடும் மனநிம்மதியோடும் இருக்கிறான்; தொழாதவன்  சோம்பேறியாகவும் மனநிம்மதியிழந்தவனாகவும் இருக்கிறான் என்பதை மேற்கண்ட நபிமொழி மூலம் அறிகிறோம். ஆக, சோம்பலை விரட்ட ஐவேளைத் தொழுகை அவசியம் என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.

சோம்பேறிகள் உழைப்பதில்லை. உழைக்காமல் ஊரைச் சுற்றிவிட்டு, தண்டமாக உணவுண்டு கொண்டிருப்பார்கள். குடும்பத்தார் திட்டுவதையும் காதில் வாங்கிக்கொள்ள மாட்டார்கள். சிலர் வேலைக்குச் சென்றாலும் குறிப்பிட்ட வேலையை நிரந்தரமாகச் செய்ய மாட்டார்கள். ஒரு வாரம் வேலைக்குச் செல்வதும் மறுவாரம் ஊரைச் சுற்றுவதும் பிறகு வேறு ஏதாவது வேலை தேடுவதும் அவர்களின் வாடிக்கை. இன்னொரு வகையினர் தம் சோம்பேறித்தனத்தால் உழைக்கச் செல்லாமல் பிச்சையெடுப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பார்கள். கையை நீட்டினால் காசு வந்துவிழும்; வாய்விட்டுக் கேட்டால் உணவு கிடைத்துவிடும். இத்தகையோர் இப்படியே பழகிவிடுவதால் நல்ல வேலை கிடைத்தாலும் போக மாட்டார்கள். இறுதி வரை பிச்சையெடுப்பதையே தம் தொழிலாக ஆக்கிக்கொண்டுவிடுவார்கள்.

ஆனால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு முஸ்லிம் பிச்சையெடுப்பதை விரும்பவில்லை.  ஒரு முஸ்லிம் தன்மானத்தோடும் சுய மரியாதையோடும் வாழ வேண்டும் என்றே விரும்பினார்கள்.  எனவேதான், “தாழ்ந்த கையைவிட உயர்ந்த கையே மேலானது” என்று கூறி, சுயமரியாதையோடு வாழ வழிகாட்டினார்கள்.

ஒரு தடவை ஓர் இளைஞர் பிச்சையெடுப்பதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் அவரை அழைத்து,  அவரது வீட்டிலிருந்ததை எடுத்து வரச் சொல்லி, அதை ஏலமிட்டு இரண்டு வெள்ளிக்காசுகளைப் பெற்று, ஒன்றைக் குடும்பச் செலவுக்காக அவரிடம் கொடுத்துவிட்டு, மற்றொன்றில் கோடரி வாங்கிவரச் செய்து, அதற்குத் தம் கையால் கைப்பிடி போட்டுக்கொடுத்து விறகு வெட்டி விற்று உழைத்துச் சம்பாதிக்கக் கட்டளையிட்டார்கள். பின்னர் அவர் விறகு வெட்டி உழைத்துண்ணத் தொடங்கிவிட்டார். இதுவே சோம்பல் நீக்கிய சுயமரியாதையான வாழ்க்கையாகும்.

இன்று சோம்பேறிகள் மிகுந்துவிட்டனர். மனிதர்களின் இரக்கக் குணத்தைத் தவறாகப் பயன்படுத்திக்கொண்டு பலர் பிச்சையெடுக்கப் புறப்பட்டுவிட்டனர். சிலர் மனிதர்களை ஏமாற்றிப் பிழைக்கத் தொடங்கிவிட்டனர். இதுவும் சோம்பேறித்தனத்தின் ஒரு கிளைதான். ஏனென்றால் நேர்மையாகச் சம்பாதித்துப் பொருளீட்டச் சோம்பல்பட்டுத்தான் மனிதர்களை ஏமாற்றுகின்றார்கள்.  சிலர் திருடுகின்றார்கள்; சிலர் பொய் சொல்லிச் சம்பாதிக்கின்றார்கள். இப்படிச் சோம்பலின் கிளைகள் விரிந்துகொண்டே செல்கின்றன.

மக்காவைத் துறந்து மதீனா சென்றிருந்த நேரத்தில், ஓடியோடி உதவி செய்ய வந்த தோழர்களின் உதவியைப் பெற்றுக்கொள்ளாமல், சோம்பேறித்தனத்தை உதறித் தள்ளிவிட்டு, உழைப்பு ஒன்றையே நம்பி, கடைத்தெரு சென்று, வியாபாரம் செய்து செல்வச்  செழிப்பில் வாழ்ந்து, இறுதியில் ஏராளமான  செல்வங்களைத் தம் மனைவியருக்கும் பிள்ளைகளுக்கும் விட்டுச் சென்ற அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரளி) அவர்களை நினைவுகூர வேண்டும். பிறர் கொடுக்க வந்த உதவிப்பொருள்களை வாங்கி உண்டு, தம் வாழ்க்கைக் காலத்தைக் கழித்துக் கொண்டிருந்திருந்தால், அவர் மிகப்பெரும் வணிகராக உயர்ந்திருக்க முடியுமா?

பனூஇஸ்ரவேலர்கள் தம் சோம்பேறித்தனத்தால் நாற்பதாண்டுகள் பாலைவனத்தில் சுற்றிச்சுற்றி அலைந்ததைத் திருக்குர்ஆன் கூறுகிறது:   “மூஸாவே! அவர்கள் அதில் இருக்கும் வரை ஒருக்காலும் நாங்கள் அதில் நுழையவே மாட்டோம். (வேண்டுமானால்) நீரும் உம்முடைய இறைவனும் (அங்கு) சென்று (அவர்களுடன்) போர் புரியுங்கள். நிச்சயமாக நாங்கள் இங்கேயே உட்கார்ந்து (கவனித்துக்) கொண்டிருப்போம்'' என்று கூறினார்கள். (5: 24) அதன்பின் மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து, தம் சமூகத்தார் தமக்குக் கட்டுப்பட மறுப்பதைத் தெரிவித்தார்கள். அதற்கு இறைவன் அளித்த பதில்:  “(அவ்வாறாயின் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட) அந்த இடம் நாற்பது வருடங்கள் வரை அவர்களுக்கு நிச்சயமாகத் தடுக்கப்பட்டு விட்டது. (அதுவரை) அவர்கள் பூமியில் (நாடோடிகளாகச்) சுற்றித் திரிவார்கள்.” (5: 26)

இஸ்ரவேலர்கள் மூஸா நபியுடன் செங்கடலைக் கடந்து எகிப்திலிருந்து வெளியேறினர். அப்போது  பைத்துல் முகத்தஸ் புனித பூமியை அமலேக்கியர் (அமாலிக்கா) வமிசத்து அடக்குமுறையாளர்கள் ஆக்கிரமித்து, தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதைக் கண்டனர். ஆகவேதான் அங்கு சென்று எதிரிகளான அந்த அடக்குமுறையாளர்களுடன் போரிடுமாறு இறைத்தூதர் மூஸா (அலை) அவர்கள் தம் சமுதாய மக்களுக்குக் கட்டளையிட்டார்கள். அந்தக் கட்டளையை ஏற்க மறுத்ததால்தான் அதற்குரிய தண்டனையாக இஸ்ரவேலர்களை அத்தீவிலேயே நாற்பதாண்டுகள் நாடோடிகளாகச் சுற்றித் திரிய வைத்தான். இதுவே சோம்பேறிகளுக்கான முடிவாகும்.

அல்லாஹ்வின் கட்டளையை மீறினால் ஆற்றல் குறையும்; சோம்பேறித்தனம் மிகும். இது குறித்துத் திருக்குர்ஆன் கூறுவதை நாம் நோக்கலாம்.
பின்னர், தாலூத் படைகளைத் திரட்டிக் கொண்டு புறப்பட்டபொழுது அவர் (தம் இராணுவத்தை நோக்கி) “நிச்சயமாக (நீங்கள் செல்லும் வழியில்) அல்லாஹ் ஓர் ஆற்றின்மூலம் உங்களைச் சோதிப்பான். (உங்களுள்) யார் அதிலிருந்து தம் ஒரு கையளவு நீரைவிட அதிகமாகக் குடிக்கவில்லையோ அவர்தாம் என்னைச் சார்ந்தவர். யார் அதிலிருந்து (அதற்கதிகமாகக்) குடிக்கின்றாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்'' எனக் கூறினார். ஆனால், அவர்களுள் சிலரைத் தவிர (பெரும்பாலோர்) அதிலிருந்து (அதிகமாகக்) குடித்துவிட்டார்கள். பின்னர்,  அவர் (தம்முடன் இருந்த) நம்பிக்கையாளர்களுடன் அதனைக் கடந்து சென்ற பொழுது, (அதிகமாகக் குடித்த அவர்கள்) ஜாலூத்துடனும் அவனுடைய இராணுவத்துடனும் இன்று (போர் புரிய) எங்களுக்குச் சக்தியில்லை என்று கூறி (விலகி) விட்டார்கள்... (2: 249)

இறைத்தூதர் ஷம்ஊன் (அலை) அவர்களின் கட்டளைப்படி அரசராக நியமிக்கப்பட்ட தாலூத் என்பார் தம் படையினருடன் புறப்பட்டுச் சென்றபோது, ஜோர்டானுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே ஓடும் ‘ஷரீஆ’ எனும் பிரபலமான ஆற்றைக் கடக்க வேண்டி ஏற்பட்டது. அந்த ஆற்றின்மூலம் அல்லாஹ் அப்படையினரைச் சோதிக்க முற்பட்டான். அதில் ஒரு கையளவுக்கு மேல் அருந்தக் கூடாது என்பதே அச்சோதனை. அச்சோதனையில் சிலரைத் தவிர மற்றோர் மிகுதியாக அருந்தி, இறைக்கட்டளைக்கு மாறு செய்துவிட்டதால் அவர்களின் ஆற்றல் குறைந்து, கோழைகளாகவும் சோம்பேறிகளாகவும் ஆகிவிட்டனர். ஆக இறைக்கட்டளைக்கு மாறு செய்வதால் சோம்பேறித்தனம் உண்டாகிறது என்பதை இந்நிகழ்வின்மூலம் நாம் அறிந்துகொள்ளலாம்.

சோம்பேறித்தனத்தை விரட்ட வேண்டுமெனில் எப்போதும் சுறுசுறுப்போடு செயல்பட்டுக்கொண்டே இருக்க வேண்டும். ஒரு வேலை முடிந்ததும் அடுத்த  வேலையை முன்னரே திட்டமிட்டுக்கொள்ள வேண்டும். அதற்கு நேர மேலாண்மையைக் கடைப்பிடிக்க வேண்டும். முன்முடிவுகளும் திட்டமிடலுமே அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி நகரும் வழியை ஏற்படுத்தும். இதுவே சோம்பேறித்தனத்தை விரட்டி, சுறுசுறுப்போடு இயங்குவதற்கான இரகசியம் ஆகும். செயல்களைத் திட்டமிடாமல் செய்துகொண்டிருந்தால் நாம் நம் பொன்னான நேரத்தை இழக்க வேண்டிய நிலை ஏற்படும்.

இறைக்கட்டளையை நிறைவேற்ற, படிக்க, ஓத, மனனம் செய்ய, நடக்க, எடுக்க என எதிலும் சோம்பேறித்தனம் இருக்கக் கூடாது. எதிலும் பிறரின் உதவியை நாடாமல் நாமே தன்னெழுச்சியுடன் மனமுவந்து செய்ய முற்பட்டுவிட்டால் சுறுசுறுப்பு தானாகவே வந்து நம்மை ஒட்டிக்கொள்ளும். அதன்பின் சுயமாக  இயங்குவது பழக்கமாகிவிடும்.
“பிறரிடம் உதவி தேடாதீர்கள்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதைச் செவியுற்ற தோழர்கள், தம் ஒட்டகத்தில் அமர்ந்த பின்னர் சாட்டை கீழே விழுந்து விட்டாலும் பிறரிடம் அதை எடுத்துத் தருமாறு கூறாமல் தாமே கீழே இறங்கி அதை எடுத்துக்கொள்ளும் வழக்கமுடையோராக மாறிவிட்டனர். இதுதான் அவர்களை எத்துறையிலும் வெற்றிவாகை சூடச் செய்தது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சோம்பேறித்தனத்திலிருந்தும் கோழைத்தனத்திலிருந்தும் பாதுகாப்புத் தேடியுள்ளார்கள். எனவே அந்தப் பிரார்த்தனையை நாமும் இறைவனிடம் கேட்டு, சோம்பேறித்தனத்தை நம்மைவிட்டுத் துரத்தி சுறுசுறுப்போடும் துடிப்போடும் இறைக்கட்டளைகளை நிறைவேற்றி வருவோம்.

“இறைவா! துக்கம், கவலை, ஆற்றாமை, சோம்பல், கஞ்சத்தனம், கோழைத்தனம், கடன்சுமை, மனிதர்களின் அடக்குமுறை ஆகியவற்றிலிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன்.'' (புகாரீ: 5425)
 =======================================








ஞாயிறு, 21 ஜனவரி, 2018

மொழிபெயர்ப்பாளர் உரை! (சுனனுன் நஸாயீ மூன்றாம் பாகம்)

   
 20-01-2018 அன்று மாலை கவிக்கோ அரங்கில் மூன்று நூல்கள் வெளியிடப்பட்டன. அவற்றுள் ஒன்றான சுனனுன் நஸாயீ மூன்றாம் பாகத்தை நான் தமிழாக்கம் செய்துள்ளேன். (அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்)

அந்நூலில் நான் பதிவு செய்துள்ள மொழிபெயர்ப்பாளர் உரை
---------------------------------------------------------------------------------------------------------------- 


எழுதுகோலால் எழுதக் கற்பித்த ஏக இறைவனுக்கே எல்லாப் புகழும். ஏகனின் இறுதித் தூதராய் இவ்வவனியில் தோன்றி எல்லா மக்களுக்கும் ஏகத்துவக்கொள்கையை ஏகமாய் எடுத்துரைத்த ஏந்தல் நபி (ஸல்) அவர்கள்மீதும் அவர்கள்தம் பரிசுத்தக் குடும்பத்தார், உற்ற தோழர்கள் அனைவர்மீதும் இறையருளும் கருணையும் பொழிவதாக!

வரலாற்று நூலையும் வேறு சில நூல்களையும் தமிழாக்கம் செய்துவந்த நான் முதன் முதலாகத் தமிழாக்கம் செய்த நபிமொழித் தொகுப்பு நூல் இப்னுமாஜா ஆகும். அதனைத் தொடர்ந்து நான்  சுனனுன் நஸாயீ எனும் இந்நூலைத் தமிழாக்கம் செய்யத் தொடங்கினேன். இந்நூலை நான் தாருல் உலூம் தேவ்பந்தில் பயின்றுள்ளேன். அங்கு இந்நூல் தவ்ரத்துல் ஹதீஸ் எனும் மேற்படிப்புப் பாடத்திட்டத்தில் உள்ளது. அப்பிரிவில் பயிற்றுவிக்கப்படுகின்ற பத்து ஹதீஸ் நூல்களுள் இதுவும் ஒன்று.

சுனனுன் நஸாயீ எனும் நபிமொழித் தொகுப்பைக் கோவை செய்த இமாம் அவர்களின் இயற்பெயர் அஹ்மது பின் ஷுஐப் ஆகும். இவரது குறிப்புப்பெயர் அபூஅப்திர் ரஹ்மான் ஆகும். இவர்  நஸா எனும் ஊரில் பிறந்ததால் அந்த ஊரோடு இணைக்கப்பட்டு "சுனனுன் நஸாயீ" எனும் பெயரில் இந்நூல் அறியப்படுகிறது.  இவர் ஹிஜ்ரீ 215-இல் பிறந்து, ஹிஜ்ரீ 303-ஆம் ஆண்டு இறந்தார்.



இதில் அகில உலக எண்ணியல் கணக்குப்படி 5662 நபிமொழிகள் உள்ளன. அந்த எண்ணைத்தான் இந்நூலில் பயன்படுத்தியுள்ளோம். இதில் புகாரீ, முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத், இப்னுமாஜா ஆகிய நூல்களில் பதிவுசெய்யப்பட்டுள்ள நபிமொழிகளும் ஆங்காங்கே இடம்பெற்றுள்ளன. அவற்றுள் சில அந்நூல்களுள் இடம்பெற்ற அதே வார்த்தைகளைக் கொண்டவையாகவும் வேறு சில நபிமொழிகள் சிற்சில வார்த்தை மாற்றங்களுடனும் பதிவுசெய்யப்பட்டுள்ளன. ஆகவே புகாரீ, முஸ்லிம் ஆகிய நூல்களுள் வார்த்தை மாற்றமின்றிப் பதிவுசெய்யப்பட்டுள்ள நபிமொழிகளுக்கான தமிழாக்கத்தை ஏற்கெனவே ரஹ்மத் பதிப்பகம் வெளியிட்டுள்ள புகாரீ, முஸ்லிம் தமிழாக்க நூல்களில் உள்ளதை அப்படியே எடுத்துப் பயன்படுத்தியுள்ளேன். மேலும் இப்னுமாஜா நூலில் இடம்பெற்றுள்ள நபிமொழிகள் சில இதில் இடம்பெற்றுள்ளன. அந்த நபிமொழிகளை ஏற்கெனவே நானே தமிழாக்கம் செய்துள்ளதால் அவற்றை அந்நூலிலிருந்து அப்படியே எடுத்துப் பயன்படுத்தியுள்ளேன். அவை தவிர மற்ற நபிமொழிகளையே நான் இந்நூலில் புதிதாகத் தமிழாக்கம் செய்துள்ளேன் என்பதைத் திறந்த மனத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

நஸாயீ எனும் இந்நூலை ஏன் படிக்க வேண்டும்? மற்ற நபிமொழித் தொகுப்பு நூல்களுள் உள்ள நபிமொழிகள்தாமே இதில் இடம்பெற்றுள்ளன? என்று கேட்போர் இருக்கலாம். புகாரீ, முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத், இப்னுமாஜா ஆகிய நூல்களுள் இடம்பெறாத நபிமொழிகளும் இந்த நூலில் பதிவுசெய்யப்பட்டுள்ளன என்பதை அவர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். அது தவிர, மற்ற நூல்களுள் இல்லாத கூடுதல் தகவல்களும் இதில் இடம்பெற்றுள்ளன என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். எனவே இந்நூலைப் படிக்கின்றபோது, மற்ற நூல்களில் கிடைக்காத கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொள்வதோடு மேற்கண்ட நூல்களுள் உள்ள தகவல்களையும் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.   

 

நீண்ட காலமாகத் தமிழில் தலைகாட்டாத அரபி நூல்களெல்லாம் ஒவ்வொன்றாகத் தமிழில் வெளிவருவது தமிழறிந்த மக்கள் யாவருக்கும் உயர்ந்தோன் அல்லாஹ் அறிவூற்றைத் திறந்துவிடத் தொடங்கிவிட்டான் என்பதையே காட்டுகின்றது. ஞான மழை பொழியும்போது அதைப் பிடித்துப் பத்திரப்படுத்திக்கொள்வது அறிவாளிகளின் அடிப்படைப் பண்பாகும். அரபி மூலத்தோடு இணைந்த இது போன்ற தமிழாக்க நூல்களை வாங்கி வைத்துக்கொண்டு வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் வாசித்துப் பயன்பெறுவது வாசகர்களின் வழக்கமாக மாற வேண்டும். கோடைக்கால வெப்பத்தில் வாடியவன் தண்ணீர்மீது கொள்ளும் மோகத்தைப்போல அறிவுத்தாகம் கொண்டு இந்நூலை வாசிக்கும்போது அளவிலா நற்கருத்துகளைத் தேனாகச் சுவைக்கலாம்.

ஒரு செடியை நட்டு, அதன் வளர்ச்சியை நாடி அவ்வப்போது தண்ணீர் விட்டு, உரமிட்டு வளர்த்து அதைப் பெருமரமாக உருவாக்குவதைப்போல ரஹ்மத் பதிப்பகம் எனும் நிறுவனத்தைத் தொடங்கி அதைச் சிறுகச் சிறுக வளர்த்துப் பெருமரமாக்கும் முயற்சியில் ஈடுபட்டார் தமிழார்வலர் முஸ்தஃபா அவர்கள். இன்று அது ஆல்போல் தழைத்து தன்னிலிருந்து நூல்கள் எனும் கனிகளைத் தந்துகொண்டிருக்கிறது. அவர்தம் பணிகள் யாவும் பரந்துவிரிந்துள்ள இப்பாரெங்கும் பரவி, மக்கள் யாவரும் பயன்பெற ஏகன் அல்லாஹ் அருள்புரிவானாக. அவர் எண்ணிய பணிகளையெல்லாம் செய்து முடிக்கும் வரை அவரது ஆயுளை நீட்டிப்பானாக.

ஏகன் அல்லாஹ் அடியேனுக்கும் இந்நூல் நேர்த்தியாக வெளிவர உறுதுணையாகப் பணியாற்றிய அத்தனை பேருக்கும் ஈருலகப் பயன்களை வழங்குவதோடு தொடர்ந்து இதுபோன்ற பயனுள்ள பணிகளைச் செய்யும் நற்பேற்றை நல்குவானாக.

அன்புடன்
முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.
சென்னை 68








புதன், 17 ஜனவரி, 2018

மறைந்தும் வாழும் மதீனத்து நபி (ஸல்)


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.
(இமாம் மஸ்ஜித் ஜாமிஉல் அன்வார், மணலி, சென்னை)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மற்ற மனிதர்களைப்போலவே தமது 63ஆம் அகவையில் மரணத்தைத் தழுவினார்கள். "ஆலமுல் பர்ஸக்' எனும் மறைமுக உலகில் மரணித்த ஆன்மாக்களெல்லாம் வாழ்ந்துகொண்டிருக்கின்றன. அதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உயிரும் அடக்கம். பொதுவாக இறந்தவர்கள் நல்லவர்களாக இருப்பின் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு அதன் சுகந்தத்தைச் சுவாசித்தவாறு புதுமாப்பிள்ளைபோல் துயில்கொண்டிருப்பார்கள். பாவிகளாக இருப்பின் நரகவாசல் திறக்கப்பட்டு அதன் வெப்பக்காற்றால் வேதனை செய்யப்பட்டுக்கொண்டே இருப்பார்கள். இறுதி விசாரணை நாள் வரை இதே நிலைதான் நீடிக்கும்.

ஈருலகத் தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிமுறைகள் அவர்களின் சமுதாய மக்களால் பின்பற்றப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. அதன்மூலம் அவர்கள் நினைவுகூரப்படுவதால் அவர்கள் எல்லோரின் மனங்களிலும் வாழ்ந்துகொண்டே இருக்கின்றார்கள். இது ஒரு பொதுவான நிலைப்பாடு.  

அதேநேரத்தில் மற்றவர்களுக்கு இல்லாத சிறப்பு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு உண்டு. உலகில் வாழும் மக்களெல்லாம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்மீது ஸலவாத் சொல்கின்றார்கள்; ஸலாம்-முகமன் கூறுகின்றார்கள். இவை அனைத்தும் அவர்களுக்குக் கொண்டு சேர்க்கப்படுகின்றன. அப்போது  அவர்களுக்கு உயிர்கொடுக்கப்படுகின்றது. உலகில் வாழும் மக்களுள் யாரேனும் ஒருவர் ஸலவாத்தும் ஸலாமும் சொல்லிக்கொண்டே இருக்கின்றார். எனவே அவர்களுக்கு உயிர்கொடுக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றது. அதனால் அவர்கள் மரணித்த பின்னரும் உயிரோடு வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள் என்பதை நாம் உணரலாம்.

"(உலகைச்) சுற்றிவரும் வானவர்கள் அல்லாஹ்வுக்கு உள்ளார்கள். அவர்கள் என் சமுதாயத்தினர் சொல்கின்ற ஸலாமை என்னிடம் கொண்டு வந்து சேர்க்கின்றார்கள். நான் உயிரோடிருப்பது உங்களுக்கு நல்லது. நீங்கள் (என்னிடம்) பேசுகின்றீர்கள். நாம் உங்களோடு பேசுகிறோம். என் மரணமும் உங்களுக்கு நல்லதுதான். (ஏனென்றால்) உங்களின் செயல்பாடுகள் எனக்கு எடுத்துக்காட்டப்படுகின்றன. (என் சமுதாயத்தாராகிய உங்களின்) நன்மைகளைப் பார்த்தால் அதற்காக அல்லாஹ்வைப் புகழ்வேன். தீமைகளைப் பார்த்தால் உங்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுவேன்'' என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்னதுல் பஸ்ஸார்: 1925)
உலகிலுள்ள கோடானு கோடி மக்களுள் யாரேனும் ஒருவர் ஒவ்வொரு விநாடியும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முகமன் கூறிக்கொண்டேதான் இருப்பார். ஒவ்வொரு கணப்பொழுதும் அதை அவர்களின் முன்னிலையில் வானவர்கள் சமர்ப்பித்துக்கொண்டேதான் இருப்பார்கள். இதனால் அவர்கள் எப்போதும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களல்லாத, இறந்துபோன மற்றவர்களைப் பொறுத்த வரை, அவர்களின் முன்னிலையில் நின்று முகமன் கூறினால்தான் அது அவர்களுக்குக் கேட்கும். அதற்கு அவர்கள் பதிலளிப்பார்கள். இறந்தோர் கூறும் பதிலை முகமன் கூறியவர் செவியுற முடியாது என்பது வேறு விஷயம்.

"முஸ்லிம் ஒருவர் தம் சகோதரர் ஒருவரின் மண்ணறையைக் கடந்து செல்கிறார். அந்த மண்ணறைவாசி உலகில் அவரைத் தெரிந்துவைத்திருந்தார். அவர் அந்த மண்ணறைவாசிக்கு ஸலாம் கூறுகிறார். அப்போது அவருடைய முகமனுக்குப் பதிலளிப்பதற்காக (கைப்பற்றப்பட்ட) அவரது உயிரை அல்லாஹ் அவருக்குத் திருப்பிக் கொடுக்காமல் இருப்பதில்லை'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
இந்நபிமொழியில் மண்ணறை அருகே கடந்து செல்பவர் முகமன் கூறுகிறார் என்ற வாக்கியம் மிகுந்த கவனத்திற்கு உள்ளாகின்றது. ஆம்! மற்றவர்களின் மண்ணறை அருகே சென்று, நேரடியாக முகமன் கூறினால்தான் அவர் நமக்குப் பதிலளிப்பார். தூரத்தில் இருந்துகொண்டு சொன்னால் அதை எடுத்துரைக்கும் வசதி, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தவிர வேறு யாருக்கும் வழங்கப்படவில்லை. அந்த அடிப்படையில்தான் மண்ணறை தரிசனத்திற்காகச் செல்லும்போது, அங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ள மண்ணறைவாசிகளைப் பார்த்து, அஸ்ஸலாமு அலைக்கும் தார கவ்மின் முஃமினீன்...(இறைநம்பிக்கைகொண்ட மண்ணறைவாசிகளே, உங்கள்மீது அல்லாஹ்வின் சாந்தி உண்டாவதாக...)   (அபூதாவூத்: 2818) எனக் கூறுகின்றோம். 
 
அதேநேரத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஒருவர் எங்கிருந்து வேண்டுமானாலும் ஸலாம் சொல்லலாம். அவர்களின் முன்னிலையில் செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. அந்தச் சிரமத்தை அல்லாஹ் யார்மீதும் சுமத்தவில்லை. காரணம், பலதரப்பட்ட வாழ்வியல் நிலைகளில் மனிதர்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். எல்லோரும் மதீனா சென்று அவர்களின் அடக்கத்தலத்தை அடைந்து நேரடியாக முகமன் கூறும் வாய்ப்புக் கிடைக்காது. சூழ்நிலை காரணமாகச் சிலர் பணமிருந்தும் பயணம் மேற்கொள்ள முடியாமல் போகலாம். இதையெல்லாம் கருத்தில்கொண்டுதான் அல்லாஹ்  தன்னுடைய தூதருக்கு மட்டும் இத்தகைய ஏற்பாட்டைச் செய்துள்ளான். எனவே மக்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் அவர்களுக்கு ஸலாமோ ஸலவாத்தோ சொல்லலாம். அது நபி (ஸல்) அவர்களை அடைந்துவிடும். 

ஒவ்வொரு நொடிப்பொழுதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஸலாம் சொல்லப்படுகின்றது.  அதற்கு அவர்கள் பதிலளிக்குமுகமாக அவர்கள்தம் உயிர் அவர்களுக்குத் திரும்பக் கொடுக்கப்படுகின்றது என்பதையும் அவர்கள் ஏற்கெனவே சொல்லிச் சென்றுள்ளார்கள்.
"யாரொருவர் எனக்கு முகமன் கூறுகின்றாரோ அவருடைய முகமனுக்குப் பதிலளிப்பதற்காக (கைப்பற்றப்பட்ட) எனது உயிரை அல்லாஹ் எனக்குத் திருப்பிக் கொடுக்காமல் இருப்பதில்லை'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: அபூதாவூத்: 1745) இந்த நபிமொழியின் அடிப்படையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முகமன் கூறுவதால் முகமன் சொன்னவருக்கு அவர்கள் பதிலளிக்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது.
மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்மீது ஸலவாத் சொல்லுமாறும், நீங்கள் எங்கிருந்து அதைச் சொன்னாலும் அது தம்மை வந்தடைவதாகக் கூறியுள்ளார்கள்.

"உங்கள் வீடுகளை அடக்கத்தலங்களைப் போல் ஆக்காதீர்கள். என்னுடைய அடக்கத்தலத்தை கொண்டாடும் இடமாக ஆக்காதீர்கள். என்மீது ஸலவாத் கூறுங்கள். திண்ணமாக உங்கள் ஸலவாத்-நீங்கள் எங்கிருந்தாலும்-(வானவர்கள்மூலம்) என்னை வந்தடைகிறது'' என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: அபூதாவூத்: 1746)
இந்நபிமொழியின் அடிப்படையில், நாம் எங்கிருந்து ஸலவாத்  ஓதினாலும் அது வானவர்கள்மூலம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அடைந்துவிடுகிறது என்பதை உறுதியாக நம்ப முடிகிறது. ஏனென்றால் தற்போது நாம் கணினி யுகத்தில் இருக்கிறோம். ஒரு நாட்டின் ஏதோ ஒரு மூலையில் இருந்துகொண்டு எங்கோ ஒரு மூலையில் இருக்கின்ற நம் உறவினரோடு பேசுகிறோம். இருவருக்குமிடையே காற்றைத் தவிர எந்தத் தொடர்பும் இல்லை. இருப்பினும் நாம் பேசுவது அவருக்கும் அவர் பேசுவது நமக்கும் கேட்கிறது. இது சாத்தியம் என்றால், அகில உலகத்தையே படைத்தாளும் வல்லமைமிக்க அல்லாஹ், மனிதர்கள் கூறும் ஸலவாத்தை நபியவர்களுக்கு வானவர்கள்மூலம் கொண்டுபோய்ச் சமர்ப்பிக்க முடியாதா? எனவே நாம் ஒவ்வொரு தடவை ஸலவாத் கூறும்போதும் அது அவர்களுக்கு அவ்வப்போது கொண்டுபோய்ச் சேர்க்கப்படுவதால் அவர்கள் எப்போதும் உயிருடனேயே இருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது என்பதையும் நாம் விளங்கிக்கொள்ள முடிகிறது.

அது மட்டுமல்ல, ஒவ்வொருவரும் தொழுகின்றபோது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்மீது முகமன்  சொல்லுமுகமாகவே அல்லாஹ் தொழுகையை அமைத்துள்ளான். அத்தஹிய்யாத் இருப்பில் அமர்ந்து அத்தஹிய்யாத்து லில்லாஹி... என்று தொடங்கி ஓதும்போது "அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன் நபிய்யு (நபியே, உங்கள்மீது அல்லாஹ்வின் சாந்தி உண்டாவதாக)'' என ஓதுகிறோம். அதன்பின் நபிமீது ஸலவாத் ஓதுகிறோம். இந்த இரண்டையும் ஓதாமல் தொழுகை முடிவடைவதில்லை.  இவ்விரண்டின் மூலம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் மிகுந்த மரியாதை கொடுத்துள்ளான் என்பதை அறிகிறோம். அத்தோடு ஒவ்வொரு கணப்பொழுதும் உலகின் ஏதாவது மூலையில் யாரேனும் தொழுதுகொண்டுதான் இருப்பார்; அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்மீது ஸலாமும் ஸலவாத்தும் சொல்லிக்கொண்டுதான் இருப்பார். அதன்மூலம் மறுமைநாள் வரை அவர்கள் உயிரோடிருக்குமாறு அல்லாஹ் ஏற்பாடு செய்துள்ளான் என்பதை உணர முடிகிறது.

ஆகவே நாம் நாள்தோறும் அவர்கள்மீது ஸலவாத் ஓதுவதற்கும் அவர்களுக்கு முகமன் கூறுவதற்கும் ஏக இறைவன் நல்வாய்ப்பை நல்குவானாக.
=============================================




வியாழன், 11 ஜனவரி, 2018

தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் ஆலிம்களுக்கான ஊடகப் பயிலரங்கு


  • தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் முதல் முறையாக "இன்றைய நிலையில் இந்தியாவின் எதார்த்த முகம்' என்னும் தலைப்பில் ஆலிம்களுக்கான ஊடகப் பயிற்சிப் பட்டறை சென்னை மண்ணடி லஜ்னத்துல் முஹ்சினீன் ட்ரஸ்ட் பள்ளிவாசலில் 02.01.2018 அன்று காலை 9: 30 மணிக்கு தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர் மௌலானா பீ.ஏ. காஜா முயீனுத்தீன் பாகவி தலைமையில் தொடங்கியது. தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் பொதுச் செயலாளர் முனைவர் மௌலானா வி.எஸ். அன்வர் பாதுஷா உலவி அறிமுகவுரை நிகழ்த்தினார். 

  • அதன்பின் மௌலானா கே.எம். இல்யாஸ் ரியாஜி "ஆலிம்களும் இதழியலும்' என்ற தலைப்பிலும், இப்போது டாட் காம் நிறுவனத்தின் இயக்குநர் சகோதரர் பீர் முஹம்மது "அச்சு ஊடகம் மற்றும் மின்னணு ஊடகங்களை விஞ்சி நிற்கும் சமூக ஊடகங்கள்' என்ற தலைப்பிலும் உரையாற்றினர். பின்னர் துக்ளக் வார இதழின் துணை ஆசிரியர் சகோதரர் பரகத்அலி "துக்ளக் பரகத்திடம் சில கேள்விகள்' என்ற தலைப்பில் ஆலிம்கள் கேட்ட கேள்விகளுக்கு உரிய முறையில் பதிலளித்துப் பேசினார். தி இந்து நாளிதழ் நடுப்பக்க ஆசிரியர் தோழர் சமஸ் "இன்றைய இந்தியாவின் யதார்த்த முகம்' என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார். அத்தோடு முதல் அமர்வு நிறைவுற்று, லுஹர் தொழுகை, பகலுணவுக்காக இடைவேளை விடப்பட்டது. பின்னர் பகல் 2: 30 மணிக்கு  இரண்டாம் அமர்வு தொடங்கியது. அதில் தினமலர் நாளிதழின் முன்னாள் தலைமை நிருபர் சகோதரர் நூருல்லாஹ் "இதழியலில் இந்துத்துவாவும் முஸ்லிம்களும்' எனும் தலைப்பில் உரையாற்றினார்.

  • ஒவ்வொரு பயிற்சியாளரும் ஆலிம்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் சடைவடையாமல் பதிலுரைத்தார்கள். அதன்பின் கோவை அ. அப்துல் அஸீஸ் பாகவி தொகுப்புரை வழங்கி, பயிலரங்கை முடித்துவைத்தார். கலந்துகொண்டோர் அனைவருக்கும் கருத்துக் கேட்புப் படிவம் வழங்கப்பட்டு, கேள்வி வடிவில் பதிவுசெய்யப்பட்டிருந்தவற்றிற்கு உரியமுறையில் பதிலளித்து, சிறந்த கருத்துகளை வழங்கிய நால்வருக்கு, தினமலர் நாளிதழின் முன்னாள் தலைமை நிருபர் நூருல்லாஹ் "நயம்பட உரை' எனும் தமது நூலை நினைவுப் பரிசாக வழங்கினார். இப்பயிலரங்கில் கலந்துகொள்ள தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலிருந்து 150 ஆலிம்கள் வருகைதந்திருந்தனர். ஆலிம்களுக்கும் ஊடகத்துறைக்கும் இடையே இருந்த இடைவெளியைக் குறைத்துள்ளதாகக் கலந்துகொண்டோர் கூறிச் சென்றனர். 

  •  இறுதியில் லஜ்னத்துல் முஹ்சினீன் பள்ளியின் தலைமை இமாம் மௌலானா ஃபக்ருத்தீன் ஃபாஸில் பாகவியின் துஆவுடன் பயிலரங்கு இனிதே நிறைவுற்றது.    


    -பாகவியார்

===============================