வியாழன், 8 பிப்ரவரி, 2018

சோம்பலை விரட்டுவோம்!


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

ஒவ்வொரு மனிதனின் தோல்விக்கும் முதற்காரணம் சோம்பல்தான். அதேநேரத்தில் அதற்கு எதிர்க்குணமான சுறுசுறுப்பே ஒரு மனிதனின் வெற்றிக்குத் தலையாய காரணமாகும். மனித வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் இன்பமாகவும் அமைய அவனது சுறுசுறுப்பே துணைபுரிகிறது.

ஒருவன் நாள் முழுக்கச் சுறுசுறுப்போடு இருக்க வேண்டுமெனில் அவன் இறைக்கடமைகளைச் செவ்வனே நிறைவேற்ற வேண்டும். நேரத்தை முறையாக மேலாண்மை செய்பவனாக இருக்க வேண்டும். அவனே வெற்றியாளன். அதிகாலை துயிலெழுவதும் அதன்பின் படைத்த இறைவனைப் போற்றிப் புகழ்வதும் அவனைத் தொழுவதும் அவனிடமே பிரார்த்தனையின் மூலம் கோரிக்கைகளை முன்வைப்பதும் வெற்றியின் முதற்படியாகும்.

அல்லும் பகலும் பாடுபட்டு உழைப்பவன் அதிகாலை துயிலெழுந்து படைத்த இறைவனை வணங்கவில்லையானால் அவர் எவ்வளவுதான் உழைத்தாலும் முன்னேற்றம் காண முடியாது. ஒருக்கால் முன்னேற்றம் கண்டாலும் அது நீடித்து நிலைக்காது. அவன் சோம்பேறியாகவே தன் வாழ்நாளைக் கழிப்பான். அதற்கான காரணம் நபிமொழியில் உள்ளது.

“நீங்கள் உறங்கிக் கொண்டிருக்கும் போது உங்கள் தலையின் பின்பக்கத்தில் ஷைத்தான் மூன்று முடிச்சுகளைப் போட்டு விடுகிறான். ஒவ்வொரு முடிச்சிலும், “இன்னும் உனக்கு நீண்ட இரவு  (ஓய்வெடுப்பதற்காக எஞ்சி) இருக்கின்றது. ஆகவே, நீ தூங்கிக் கொண்டேயிரு” என்று போதித்து (அவனை விழிக்க விடாமல் உறங்க வைத்து) விடுகின்றான். அவர் (அவனது போதனையைக் கேட்காமல் அதிகாலையில்) கண் விழித்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால் ஒரு முடிச்சு அவிழ்ந்து விடுகின்றது. அவர் உளூ செய்தால் மற்றொரு முடிச்சு அவிழ்ந்து விடுகின்றது. அவர் (தஹஜ்ஜுத் அல்லது ஃபஜ்ர்) தொழுதுவிட்டால் முடிச்சுகள் முழுவதுமாக அவிழ்ந்து விடுகின்றது. அவர் சுறுசுறுப்புடனும் உற்சாகமான மனநிலையுடனும் காலைப் பொழுதை அடைவார். இல்லையென்றால் மந்தமான மனநிலையுடனும் சோம்பலுடனும் காலைப் பொழுதை அடைவார்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரீ: 3269) இதை அபூஹுரைரா (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அதிகாலை எழுந்து தொழுதவன் சுறுசுறுப்போடும் மனநிம்மதியோடும் இருக்கிறான்; தொழாதவன்  சோம்பேறியாகவும் மனநிம்மதியிழந்தவனாகவும் இருக்கிறான் என்பதை மேற்கண்ட நபிமொழி மூலம் அறிகிறோம். ஆக, சோம்பலை விரட்ட ஐவேளைத் தொழுகை அவசியம் என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.

சோம்பேறிகள் உழைப்பதில்லை. உழைக்காமல் ஊரைச் சுற்றிவிட்டு, தண்டமாக உணவுண்டு கொண்டிருப்பார்கள். குடும்பத்தார் திட்டுவதையும் காதில் வாங்கிக்கொள்ள மாட்டார்கள். சிலர் வேலைக்குச் சென்றாலும் குறிப்பிட்ட வேலையை நிரந்தரமாகச் செய்ய மாட்டார்கள். ஒரு வாரம் வேலைக்குச் செல்வதும் மறுவாரம் ஊரைச் சுற்றுவதும் பிறகு வேறு ஏதாவது வேலை தேடுவதும் அவர்களின் வாடிக்கை. இன்னொரு வகையினர் தம் சோம்பேறித்தனத்தால் உழைக்கச் செல்லாமல் பிச்சையெடுப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பார்கள். கையை நீட்டினால் காசு வந்துவிழும்; வாய்விட்டுக் கேட்டால் உணவு கிடைத்துவிடும். இத்தகையோர் இப்படியே பழகிவிடுவதால் நல்ல வேலை கிடைத்தாலும் போக மாட்டார்கள். இறுதி வரை பிச்சையெடுப்பதையே தம் தொழிலாக ஆக்கிக்கொண்டுவிடுவார்கள்.

ஆனால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு முஸ்லிம் பிச்சையெடுப்பதை விரும்பவில்லை.  ஒரு முஸ்லிம் தன்மானத்தோடும் சுய மரியாதையோடும் வாழ வேண்டும் என்றே விரும்பினார்கள்.  எனவேதான், “தாழ்ந்த கையைவிட உயர்ந்த கையே மேலானது” என்று கூறி, சுயமரியாதையோடு வாழ வழிகாட்டினார்கள்.

ஒரு தடவை ஓர் இளைஞர் பிச்சையெடுப்பதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் அவரை அழைத்து,  அவரது வீட்டிலிருந்ததை எடுத்து வரச் சொல்லி, அதை ஏலமிட்டு இரண்டு வெள்ளிக்காசுகளைப் பெற்று, ஒன்றைக் குடும்பச் செலவுக்காக அவரிடம் கொடுத்துவிட்டு, மற்றொன்றில் கோடரி வாங்கிவரச் செய்து, அதற்குத் தம் கையால் கைப்பிடி போட்டுக்கொடுத்து விறகு வெட்டி விற்று உழைத்துச் சம்பாதிக்கக் கட்டளையிட்டார்கள். பின்னர் அவர் விறகு வெட்டி உழைத்துண்ணத் தொடங்கிவிட்டார். இதுவே சோம்பல் நீக்கிய சுயமரியாதையான வாழ்க்கையாகும்.

இன்று சோம்பேறிகள் மிகுந்துவிட்டனர். மனிதர்களின் இரக்கக் குணத்தைத் தவறாகப் பயன்படுத்திக்கொண்டு பலர் பிச்சையெடுக்கப் புறப்பட்டுவிட்டனர். சிலர் மனிதர்களை ஏமாற்றிப் பிழைக்கத் தொடங்கிவிட்டனர். இதுவும் சோம்பேறித்தனத்தின் ஒரு கிளைதான். ஏனென்றால் நேர்மையாகச் சம்பாதித்துப் பொருளீட்டச் சோம்பல்பட்டுத்தான் மனிதர்களை ஏமாற்றுகின்றார்கள்.  சிலர் திருடுகின்றார்கள்; சிலர் பொய் சொல்லிச் சம்பாதிக்கின்றார்கள். இப்படிச் சோம்பலின் கிளைகள் விரிந்துகொண்டே செல்கின்றன.

மக்காவைத் துறந்து மதீனா சென்றிருந்த நேரத்தில், ஓடியோடி உதவி செய்ய வந்த தோழர்களின் உதவியைப் பெற்றுக்கொள்ளாமல், சோம்பேறித்தனத்தை உதறித் தள்ளிவிட்டு, உழைப்பு ஒன்றையே நம்பி, கடைத்தெரு சென்று, வியாபாரம் செய்து செல்வச்  செழிப்பில் வாழ்ந்து, இறுதியில் ஏராளமான  செல்வங்களைத் தம் மனைவியருக்கும் பிள்ளைகளுக்கும் விட்டுச் சென்ற அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரளி) அவர்களை நினைவுகூர வேண்டும். பிறர் கொடுக்க வந்த உதவிப்பொருள்களை வாங்கி உண்டு, தம் வாழ்க்கைக் காலத்தைக் கழித்துக் கொண்டிருந்திருந்தால், அவர் மிகப்பெரும் வணிகராக உயர்ந்திருக்க முடியுமா?

பனூஇஸ்ரவேலர்கள் தம் சோம்பேறித்தனத்தால் நாற்பதாண்டுகள் பாலைவனத்தில் சுற்றிச்சுற்றி அலைந்ததைத் திருக்குர்ஆன் கூறுகிறது:   “மூஸாவே! அவர்கள் அதில் இருக்கும் வரை ஒருக்காலும் நாங்கள் அதில் நுழையவே மாட்டோம். (வேண்டுமானால்) நீரும் உம்முடைய இறைவனும் (அங்கு) சென்று (அவர்களுடன்) போர் புரியுங்கள். நிச்சயமாக நாங்கள் இங்கேயே உட்கார்ந்து (கவனித்துக்) கொண்டிருப்போம்'' என்று கூறினார்கள். (5: 24) அதன்பின் மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து, தம் சமூகத்தார் தமக்குக் கட்டுப்பட மறுப்பதைத் தெரிவித்தார்கள். அதற்கு இறைவன் அளித்த பதில்:  “(அவ்வாறாயின் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட) அந்த இடம் நாற்பது வருடங்கள் வரை அவர்களுக்கு நிச்சயமாகத் தடுக்கப்பட்டு விட்டது. (அதுவரை) அவர்கள் பூமியில் (நாடோடிகளாகச்) சுற்றித் திரிவார்கள்.” (5: 26)

இஸ்ரவேலர்கள் மூஸா நபியுடன் செங்கடலைக் கடந்து எகிப்திலிருந்து வெளியேறினர். அப்போது  பைத்துல் முகத்தஸ் புனித பூமியை அமலேக்கியர் (அமாலிக்கா) வமிசத்து அடக்குமுறையாளர்கள் ஆக்கிரமித்து, தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதைக் கண்டனர். ஆகவேதான் அங்கு சென்று எதிரிகளான அந்த அடக்குமுறையாளர்களுடன் போரிடுமாறு இறைத்தூதர் மூஸா (அலை) அவர்கள் தம் சமுதாய மக்களுக்குக் கட்டளையிட்டார்கள். அந்தக் கட்டளையை ஏற்க மறுத்ததால்தான் அதற்குரிய தண்டனையாக இஸ்ரவேலர்களை அத்தீவிலேயே நாற்பதாண்டுகள் நாடோடிகளாகச் சுற்றித் திரிய வைத்தான். இதுவே சோம்பேறிகளுக்கான முடிவாகும்.

அல்லாஹ்வின் கட்டளையை மீறினால் ஆற்றல் குறையும்; சோம்பேறித்தனம் மிகும். இது குறித்துத் திருக்குர்ஆன் கூறுவதை நாம் நோக்கலாம்.
பின்னர், தாலூத் படைகளைத் திரட்டிக் கொண்டு புறப்பட்டபொழுது அவர் (தம் இராணுவத்தை நோக்கி) “நிச்சயமாக (நீங்கள் செல்லும் வழியில்) அல்லாஹ் ஓர் ஆற்றின்மூலம் உங்களைச் சோதிப்பான். (உங்களுள்) யார் அதிலிருந்து தம் ஒரு கையளவு நீரைவிட அதிகமாகக் குடிக்கவில்லையோ அவர்தாம் என்னைச் சார்ந்தவர். யார் அதிலிருந்து (அதற்கதிகமாகக்) குடிக்கின்றாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்'' எனக் கூறினார். ஆனால், அவர்களுள் சிலரைத் தவிர (பெரும்பாலோர்) அதிலிருந்து (அதிகமாகக்) குடித்துவிட்டார்கள். பின்னர்,  அவர் (தம்முடன் இருந்த) நம்பிக்கையாளர்களுடன் அதனைக் கடந்து சென்ற பொழுது, (அதிகமாகக் குடித்த அவர்கள்) ஜாலூத்துடனும் அவனுடைய இராணுவத்துடனும் இன்று (போர் புரிய) எங்களுக்குச் சக்தியில்லை என்று கூறி (விலகி) விட்டார்கள்... (2: 249)

இறைத்தூதர் ஷம்ஊன் (அலை) அவர்களின் கட்டளைப்படி அரசராக நியமிக்கப்பட்ட தாலூத் என்பார் தம் படையினருடன் புறப்பட்டுச் சென்றபோது, ஜோர்டானுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே ஓடும் ‘ஷரீஆ’ எனும் பிரபலமான ஆற்றைக் கடக்க வேண்டி ஏற்பட்டது. அந்த ஆற்றின்மூலம் அல்லாஹ் அப்படையினரைச் சோதிக்க முற்பட்டான். அதில் ஒரு கையளவுக்கு மேல் அருந்தக் கூடாது என்பதே அச்சோதனை. அச்சோதனையில் சிலரைத் தவிர மற்றோர் மிகுதியாக அருந்தி, இறைக்கட்டளைக்கு மாறு செய்துவிட்டதால் அவர்களின் ஆற்றல் குறைந்து, கோழைகளாகவும் சோம்பேறிகளாகவும் ஆகிவிட்டனர். ஆக இறைக்கட்டளைக்கு மாறு செய்வதால் சோம்பேறித்தனம் உண்டாகிறது என்பதை இந்நிகழ்வின்மூலம் நாம் அறிந்துகொள்ளலாம்.

சோம்பேறித்தனத்தை விரட்ட வேண்டுமெனில் எப்போதும் சுறுசுறுப்போடு செயல்பட்டுக்கொண்டே இருக்க வேண்டும். ஒரு வேலை முடிந்ததும் அடுத்த  வேலையை முன்னரே திட்டமிட்டுக்கொள்ள வேண்டும். அதற்கு நேர மேலாண்மையைக் கடைப்பிடிக்க வேண்டும். முன்முடிவுகளும் திட்டமிடலுமே அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி நகரும் வழியை ஏற்படுத்தும். இதுவே சோம்பேறித்தனத்தை விரட்டி, சுறுசுறுப்போடு இயங்குவதற்கான இரகசியம் ஆகும். செயல்களைத் திட்டமிடாமல் செய்துகொண்டிருந்தால் நாம் நம் பொன்னான நேரத்தை இழக்க வேண்டிய நிலை ஏற்படும்.

இறைக்கட்டளையை நிறைவேற்ற, படிக்க, ஓத, மனனம் செய்ய, நடக்க, எடுக்க என எதிலும் சோம்பேறித்தனம் இருக்கக் கூடாது. எதிலும் பிறரின் உதவியை நாடாமல் நாமே தன்னெழுச்சியுடன் மனமுவந்து செய்ய முற்பட்டுவிட்டால் சுறுசுறுப்பு தானாகவே வந்து நம்மை ஒட்டிக்கொள்ளும். அதன்பின் சுயமாக  இயங்குவது பழக்கமாகிவிடும்.
“பிறரிடம் உதவி தேடாதீர்கள்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதைச் செவியுற்ற தோழர்கள், தம் ஒட்டகத்தில் அமர்ந்த பின்னர் சாட்டை கீழே விழுந்து விட்டாலும் பிறரிடம் அதை எடுத்துத் தருமாறு கூறாமல் தாமே கீழே இறங்கி அதை எடுத்துக்கொள்ளும் வழக்கமுடையோராக மாறிவிட்டனர். இதுதான் அவர்களை எத்துறையிலும் வெற்றிவாகை சூடச் செய்தது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சோம்பேறித்தனத்திலிருந்தும் கோழைத்தனத்திலிருந்தும் பாதுகாப்புத் தேடியுள்ளார்கள். எனவே அந்தப் பிரார்த்தனையை நாமும் இறைவனிடம் கேட்டு, சோம்பேறித்தனத்தை நம்மைவிட்டுத் துரத்தி சுறுசுறுப்போடும் துடிப்போடும் இறைக்கட்டளைகளை நிறைவேற்றி வருவோம்.

“இறைவா! துக்கம், கவலை, ஆற்றாமை, சோம்பல், கஞ்சத்தனம், கோழைத்தனம், கடன்சுமை, மனிதர்களின் அடக்குமுறை ஆகியவற்றிலிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன்.'' (புகாரீ: 5425)
 =======================================








கருத்துகள் இல்லை: