- தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் முதல் முறையாக "இன்றைய நிலையில் இந்தியாவின் எதார்த்த முகம்' என்னும் தலைப்பில் ஆலிம்களுக்கான ஊடகப் பயிற்சிப் பட்டறை சென்னை மண்ணடி லஜ்னத்துல் முஹ்சினீன் ட்ரஸ்ட் பள்ளிவாசலில் 02.01.2018 அன்று காலை 9: 30 மணிக்கு தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர் மௌலானா பீ.ஏ. காஜா முயீனுத்தீன் பாகவி தலைமையில் தொடங்கியது. தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் பொதுச் செயலாளர் முனைவர் மௌலானா வி.எஸ். அன்வர் பாதுஷா உலவி அறிமுகவுரை நிகழ்த்தினார்.
- அதன்பின் மௌலானா கே.எம். இல்யாஸ் ரியாஜி "ஆலிம்களும் இதழியலும்' என்ற தலைப்பிலும், இப்போது டாட் காம் நிறுவனத்தின் இயக்குநர் சகோதரர் பீர் முஹம்மது "அச்சு ஊடகம் மற்றும் மின்னணு ஊடகங்களை விஞ்சி நிற்கும் சமூக ஊடகங்கள்' என்ற தலைப்பிலும் உரையாற்றினர். பின்னர் துக்ளக் வார இதழின் துணை ஆசிரியர் சகோதரர் பரகத்அலி "துக்ளக் பரகத்திடம் சில கேள்விகள்' என்ற தலைப்பில் ஆலிம்கள் கேட்ட கேள்விகளுக்கு உரிய முறையில் பதிலளித்துப் பேசினார். தி இந்து நாளிதழ் நடுப்பக்க ஆசிரியர் தோழர் சமஸ் "இன்றைய இந்தியாவின் யதார்த்த முகம்' என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார். அத்தோடு முதல் அமர்வு நிறைவுற்று, லுஹர் தொழுகை, பகலுணவுக்காக இடைவேளை விடப்பட்டது. பின்னர் பகல் 2: 30 மணிக்கு இரண்டாம் அமர்வு தொடங்கியது. அதில் தினமலர் நாளிதழின் முன்னாள் தலைமை நிருபர் சகோதரர் நூருல்லாஹ் "இதழியலில் இந்துத்துவாவும் முஸ்லிம்களும்' எனும் தலைப்பில் உரையாற்றினார்.
- ஒவ்வொரு பயிற்சியாளரும் ஆலிம்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் சடைவடையாமல் பதிலுரைத்தார்கள். அதன்பின் கோவை அ. அப்துல் அஸீஸ் பாகவி தொகுப்புரை வழங்கி, பயிலரங்கை முடித்துவைத்தார். கலந்துகொண்டோர் அனைவருக்கும் கருத்துக் கேட்புப் படிவம் வழங்கப்பட்டு, கேள்வி வடிவில் பதிவுசெய்யப்பட்டிருந்தவற்றிற்கு உரியமுறையில் பதிலளித்து, சிறந்த கருத்துகளை வழங்கிய நால்வருக்கு, தினமலர் நாளிதழின் முன்னாள் தலைமை நிருபர் நூருல்லாஹ் "நயம்பட உரை' எனும் தமது நூலை நினைவுப் பரிசாக வழங்கினார். இப்பயிலரங்கில் கலந்துகொள்ள தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலிருந்து 150 ஆலிம்கள் வருகைதந்திருந்தனர். ஆலிம்களுக்கும் ஊடகத்துறைக்கும் இடையே இருந்த இடைவெளியைக் குறைத்துள்ளதாகக் கலந்துகொண்டோர் கூறிச் சென்றனர்.
- இறுதியில் லஜ்னத்துல் முஹ்சினீன் பள்ளியின் தலைமை இமாம் மௌலானா ஃபக்ருத்தீன் ஃபாஸில் பாகவியின் துஆவுடன் பயிலரங்கு இனிதே நிறைவுற்றது.
-பாகவியார்
===============================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக