புதன், 17 ஜனவரி, 2018

மறைந்தும் வாழும் மதீனத்து நபி (ஸல்)


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.
(இமாம் மஸ்ஜித் ஜாமிஉல் அன்வார், மணலி, சென்னை)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மற்ற மனிதர்களைப்போலவே தமது 63ஆம் அகவையில் மரணத்தைத் தழுவினார்கள். "ஆலமுல் பர்ஸக்' எனும் மறைமுக உலகில் மரணித்த ஆன்மாக்களெல்லாம் வாழ்ந்துகொண்டிருக்கின்றன. அதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உயிரும் அடக்கம். பொதுவாக இறந்தவர்கள் நல்லவர்களாக இருப்பின் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு அதன் சுகந்தத்தைச் சுவாசித்தவாறு புதுமாப்பிள்ளைபோல் துயில்கொண்டிருப்பார்கள். பாவிகளாக இருப்பின் நரகவாசல் திறக்கப்பட்டு அதன் வெப்பக்காற்றால் வேதனை செய்யப்பட்டுக்கொண்டே இருப்பார்கள். இறுதி விசாரணை நாள் வரை இதே நிலைதான் நீடிக்கும்.

ஈருலகத் தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிமுறைகள் அவர்களின் சமுதாய மக்களால் பின்பற்றப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. அதன்மூலம் அவர்கள் நினைவுகூரப்படுவதால் அவர்கள் எல்லோரின் மனங்களிலும் வாழ்ந்துகொண்டே இருக்கின்றார்கள். இது ஒரு பொதுவான நிலைப்பாடு.  

அதேநேரத்தில் மற்றவர்களுக்கு இல்லாத சிறப்பு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு உண்டு. உலகில் வாழும் மக்களெல்லாம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்மீது ஸலவாத் சொல்கின்றார்கள்; ஸலாம்-முகமன் கூறுகின்றார்கள். இவை அனைத்தும் அவர்களுக்குக் கொண்டு சேர்க்கப்படுகின்றன. அப்போது  அவர்களுக்கு உயிர்கொடுக்கப்படுகின்றது. உலகில் வாழும் மக்களுள் யாரேனும் ஒருவர் ஸலவாத்தும் ஸலாமும் சொல்லிக்கொண்டே இருக்கின்றார். எனவே அவர்களுக்கு உயிர்கொடுக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றது. அதனால் அவர்கள் மரணித்த பின்னரும் உயிரோடு வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள் என்பதை நாம் உணரலாம்.

"(உலகைச்) சுற்றிவரும் வானவர்கள் அல்லாஹ்வுக்கு உள்ளார்கள். அவர்கள் என் சமுதாயத்தினர் சொல்கின்ற ஸலாமை என்னிடம் கொண்டு வந்து சேர்க்கின்றார்கள். நான் உயிரோடிருப்பது உங்களுக்கு நல்லது. நீங்கள் (என்னிடம்) பேசுகின்றீர்கள். நாம் உங்களோடு பேசுகிறோம். என் மரணமும் உங்களுக்கு நல்லதுதான். (ஏனென்றால்) உங்களின் செயல்பாடுகள் எனக்கு எடுத்துக்காட்டப்படுகின்றன. (என் சமுதாயத்தாராகிய உங்களின்) நன்மைகளைப் பார்த்தால் அதற்காக அல்லாஹ்வைப் புகழ்வேன். தீமைகளைப் பார்த்தால் உங்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுவேன்'' என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்னதுல் பஸ்ஸார்: 1925)
உலகிலுள்ள கோடானு கோடி மக்களுள் யாரேனும் ஒருவர் ஒவ்வொரு விநாடியும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முகமன் கூறிக்கொண்டேதான் இருப்பார். ஒவ்வொரு கணப்பொழுதும் அதை அவர்களின் முன்னிலையில் வானவர்கள் சமர்ப்பித்துக்கொண்டேதான் இருப்பார்கள். இதனால் அவர்கள் எப்போதும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களல்லாத, இறந்துபோன மற்றவர்களைப் பொறுத்த வரை, அவர்களின் முன்னிலையில் நின்று முகமன் கூறினால்தான் அது அவர்களுக்குக் கேட்கும். அதற்கு அவர்கள் பதிலளிப்பார்கள். இறந்தோர் கூறும் பதிலை முகமன் கூறியவர் செவியுற முடியாது என்பது வேறு விஷயம்.

"முஸ்லிம் ஒருவர் தம் சகோதரர் ஒருவரின் மண்ணறையைக் கடந்து செல்கிறார். அந்த மண்ணறைவாசி உலகில் அவரைத் தெரிந்துவைத்திருந்தார். அவர் அந்த மண்ணறைவாசிக்கு ஸலாம் கூறுகிறார். அப்போது அவருடைய முகமனுக்குப் பதிலளிப்பதற்காக (கைப்பற்றப்பட்ட) அவரது உயிரை அல்லாஹ் அவருக்குத் திருப்பிக் கொடுக்காமல் இருப்பதில்லை'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
இந்நபிமொழியில் மண்ணறை அருகே கடந்து செல்பவர் முகமன் கூறுகிறார் என்ற வாக்கியம் மிகுந்த கவனத்திற்கு உள்ளாகின்றது. ஆம்! மற்றவர்களின் மண்ணறை அருகே சென்று, நேரடியாக முகமன் கூறினால்தான் அவர் நமக்குப் பதிலளிப்பார். தூரத்தில் இருந்துகொண்டு சொன்னால் அதை எடுத்துரைக்கும் வசதி, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தவிர வேறு யாருக்கும் வழங்கப்படவில்லை. அந்த அடிப்படையில்தான் மண்ணறை தரிசனத்திற்காகச் செல்லும்போது, அங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ள மண்ணறைவாசிகளைப் பார்த்து, அஸ்ஸலாமு அலைக்கும் தார கவ்மின் முஃமினீன்...(இறைநம்பிக்கைகொண்ட மண்ணறைவாசிகளே, உங்கள்மீது அல்லாஹ்வின் சாந்தி உண்டாவதாக...)   (அபூதாவூத்: 2818) எனக் கூறுகின்றோம். 
 
அதேநேரத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஒருவர் எங்கிருந்து வேண்டுமானாலும் ஸலாம் சொல்லலாம். அவர்களின் முன்னிலையில் செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. அந்தச் சிரமத்தை அல்லாஹ் யார்மீதும் சுமத்தவில்லை. காரணம், பலதரப்பட்ட வாழ்வியல் நிலைகளில் மனிதர்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். எல்லோரும் மதீனா சென்று அவர்களின் அடக்கத்தலத்தை அடைந்து நேரடியாக முகமன் கூறும் வாய்ப்புக் கிடைக்காது. சூழ்நிலை காரணமாகச் சிலர் பணமிருந்தும் பயணம் மேற்கொள்ள முடியாமல் போகலாம். இதையெல்லாம் கருத்தில்கொண்டுதான் அல்லாஹ்  தன்னுடைய தூதருக்கு மட்டும் இத்தகைய ஏற்பாட்டைச் செய்துள்ளான். எனவே மக்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் அவர்களுக்கு ஸலாமோ ஸலவாத்தோ சொல்லலாம். அது நபி (ஸல்) அவர்களை அடைந்துவிடும். 

ஒவ்வொரு நொடிப்பொழுதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஸலாம் சொல்லப்படுகின்றது.  அதற்கு அவர்கள் பதிலளிக்குமுகமாக அவர்கள்தம் உயிர் அவர்களுக்குத் திரும்பக் கொடுக்கப்படுகின்றது என்பதையும் அவர்கள் ஏற்கெனவே சொல்லிச் சென்றுள்ளார்கள்.
"யாரொருவர் எனக்கு முகமன் கூறுகின்றாரோ அவருடைய முகமனுக்குப் பதிலளிப்பதற்காக (கைப்பற்றப்பட்ட) எனது உயிரை அல்லாஹ் எனக்குத் திருப்பிக் கொடுக்காமல் இருப்பதில்லை'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: அபூதாவூத்: 1745) இந்த நபிமொழியின் அடிப்படையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முகமன் கூறுவதால் முகமன் சொன்னவருக்கு அவர்கள் பதிலளிக்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது.
மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்மீது ஸலவாத் சொல்லுமாறும், நீங்கள் எங்கிருந்து அதைச் சொன்னாலும் அது தம்மை வந்தடைவதாகக் கூறியுள்ளார்கள்.

"உங்கள் வீடுகளை அடக்கத்தலங்களைப் போல் ஆக்காதீர்கள். என்னுடைய அடக்கத்தலத்தை கொண்டாடும் இடமாக ஆக்காதீர்கள். என்மீது ஸலவாத் கூறுங்கள். திண்ணமாக உங்கள் ஸலவாத்-நீங்கள் எங்கிருந்தாலும்-(வானவர்கள்மூலம்) என்னை வந்தடைகிறது'' என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: அபூதாவூத்: 1746)
இந்நபிமொழியின் அடிப்படையில், நாம் எங்கிருந்து ஸலவாத்  ஓதினாலும் அது வானவர்கள்மூலம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அடைந்துவிடுகிறது என்பதை உறுதியாக நம்ப முடிகிறது. ஏனென்றால் தற்போது நாம் கணினி யுகத்தில் இருக்கிறோம். ஒரு நாட்டின் ஏதோ ஒரு மூலையில் இருந்துகொண்டு எங்கோ ஒரு மூலையில் இருக்கின்ற நம் உறவினரோடு பேசுகிறோம். இருவருக்குமிடையே காற்றைத் தவிர எந்தத் தொடர்பும் இல்லை. இருப்பினும் நாம் பேசுவது அவருக்கும் அவர் பேசுவது நமக்கும் கேட்கிறது. இது சாத்தியம் என்றால், அகில உலகத்தையே படைத்தாளும் வல்லமைமிக்க அல்லாஹ், மனிதர்கள் கூறும் ஸலவாத்தை நபியவர்களுக்கு வானவர்கள்மூலம் கொண்டுபோய்ச் சமர்ப்பிக்க முடியாதா? எனவே நாம் ஒவ்வொரு தடவை ஸலவாத் கூறும்போதும் அது அவர்களுக்கு அவ்வப்போது கொண்டுபோய்ச் சேர்க்கப்படுவதால் அவர்கள் எப்போதும் உயிருடனேயே இருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது என்பதையும் நாம் விளங்கிக்கொள்ள முடிகிறது.

அது மட்டுமல்ல, ஒவ்வொருவரும் தொழுகின்றபோது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்மீது முகமன்  சொல்லுமுகமாகவே அல்லாஹ் தொழுகையை அமைத்துள்ளான். அத்தஹிய்யாத் இருப்பில் அமர்ந்து அத்தஹிய்யாத்து லில்லாஹி... என்று தொடங்கி ஓதும்போது "அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன் நபிய்யு (நபியே, உங்கள்மீது அல்லாஹ்வின் சாந்தி உண்டாவதாக)'' என ஓதுகிறோம். அதன்பின் நபிமீது ஸலவாத் ஓதுகிறோம். இந்த இரண்டையும் ஓதாமல் தொழுகை முடிவடைவதில்லை.  இவ்விரண்டின் மூலம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் மிகுந்த மரியாதை கொடுத்துள்ளான் என்பதை அறிகிறோம். அத்தோடு ஒவ்வொரு கணப்பொழுதும் உலகின் ஏதாவது மூலையில் யாரேனும் தொழுதுகொண்டுதான் இருப்பார்; அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்மீது ஸலாமும் ஸலவாத்தும் சொல்லிக்கொண்டுதான் இருப்பார். அதன்மூலம் மறுமைநாள் வரை அவர்கள் உயிரோடிருக்குமாறு அல்லாஹ் ஏற்பாடு செய்துள்ளான் என்பதை உணர முடிகிறது.

ஆகவே நாம் நாள்தோறும் அவர்கள்மீது ஸலவாத் ஓதுவதற்கும் அவர்களுக்கு முகமன் கூறுவதற்கும் ஏக இறைவன் நல்வாய்ப்பை நல்குவானாக.
=============================================




கருத்துகள் இல்லை: