சனி, 14 அக்டோபர், 2017

முனைவர் பட்டம் பெற்ற ஆலிம்கள்!


தற்காலத்தில் ஆலிம்கள் பலர் அரபிக் கல்லூரிகளில் மார்க்கக் கல்வியை முடித்ததோடு நின்றுவிடாமல் அரசுக் கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் சென்று அரபித்துறையில் பட்ட மேற்படிப்பைத் தொடரவும் செய்கின்றார்கள். அவர்களுள் பலர் இளம் முனைவர் (எம்.ஃபில்) பட்டமும் பலர் முனைவர் (பிஎச்.டி.) பட்டமும் பெற்று இன்றைய இளம் ஆலிம்களுக்கும் இஸ்லாமியச் சமுதாயத்திற்கும் ஒரு முன்னோடியாகத் திகழ்கின்றார்கள். அவர்கள் பிஎச்.டி. வரை சென்று முனைவர் பட்டம் பெற்றிருப்பது கல்விக்கு எல்லையில்லை என்பதைக் காட்டுவதோடு அவர்களின் விடாமுயற்சியையும் பறைசாற்றுகிறது. நம் சமுதாய மக்களுக்குக் கல்வி விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டும், பட்டம் பெற்ற ஆலிம்களை மனதாரப் பாராட்டும் பொருட்டும் ஆலிம் பட்டம் பெற்றுமுனைவர் பட்டம் பெற்றவர்களின் பட்டியலை மட்டும் கீழே தருகின்றோம். அவர்களின் பெயர், முனைவர் பட்டம் பெற்ற ஆண்டு, அவர்கள் ஆய்வுமேற்கொண்ட தலைப்பு, தற்போதைய பணியிடம், தொடர்பு எண் ஆகியவை மட்டும் சுருக்கமாகத் தொகுக்கப்பட்டுள்ளன.        
1. பெயர்: முனைவர் மௌலவி பி.எஸ். சையது மஸ்வூத் ஜமாலி
பட்டம் பெற்ற ஆண்டு: 2006
ஆய்வுத் தலைப்பு: இஸ்லாமிய மார்க்கச் சட்டத்தின் பரிணாம வளர்ச்சி
பணி: தலைவர் இஸ்லாமியியல் துறை, பி.எஸ். அப்துர் ரஹ்மான் கிரசண்ட் பல்கலைக் கழகம், வண்டலூர் சென்னை. 
செல்பேசி: 94442 22875

2. பெயர்: முனைவர் மௌலவி அப்துஸ் ஸமத் நத்வி
பட்டம் பெற்ற ஆண்டு: 2017
ஆய்வுத் தலைப்பு: சங்கைமிகு குர்ஆனின் அழகிய இலக்கிய உரைநடை
பணி: பேராசிரியர் இஸ்லாமியியல் துறை, பி.எஸ். அப்துர் ரஹ்மான் கிரசண்ட் பல்கலைக் கழகம், வண்டலூர் சென்னை.
செல்பேசி: 98406 99131

3. பெயர்: முனைவர் மௌலவி அ. ஜாகிர் ஹுஸைன் பாகவி
பட்டம் பெற்ற ஆண்டு: 2005
ஆய்வுத் தலைப்பு: முதல் மூன்று நூற்றாண்டுகளில் ஹதீஸ் கலையின் வளர்ச்சி
பணி: அரபுத் துறைத் தலைவர், சென்னைப் பல்கலைக் கழகம், சென்னை.  
செல்பேசி: 94444 27086 

4. பெயர்: முனைவர் மௌலவி  அல்ஹாஃபிழ் அன்வர் பாஷா உலவி
பட்டம் பெற்ற ஆண்டு: 2008
ஆய்வுத் தலைப்பு: இந்தியாவில் ஹதீஸ் கலை அறிஞர்களும் அவர்களின் சேவைகளும்
பணி: கௌரவப் பேராசிரியர் சென்னைப் பல்கலைக் கழகம், இமாம் ரஹ்மானிய்யா மஸ்ஜித் பெரம்பூர், சென்னை. 
செல்பேசி: 73588 88768

5. பெயர்: முனைவர் மௌலவி நூ.  அப்துல் ஹாதி பாகவி, ஃபாஸில் தேவ்பந்தி
பட்டம் பெற்ற ஆண்டு: 2015
ஆய்வுத் தலைப்பு: முஹம்மது பின் இஸ்ஹாக் பின் குஸைமா (ரஹ்) அவர்களின் ஹதீஸ் பணிகள்
பணி:  இமாம், மஸ்ஜித் ஜாமிஉல் அன்வார் மணலி, துணையாசிரியர் இனிய திசைகள் மாதஇதழ்
செல்பேசி: 94443 54429

6. பெயர்: முனைவர் மௌலவி அல்ஹாஃபிழ் ஷம்சுத்தீன் ஜமாலி
பட்டம் பெற்ற ஆண்டு: 2008
ஆய்வுத் தலைப்பு: ஷாஃபிகளின் அரபு இலக்கியம் 
பணி:  இமாம், மஸ்ஜிதுல் ஹிதாயா, வியாசர்பாடி, சென்னை.
செல்பேசி: 98842 13220

7. பெயர்: முனைவர் மௌலவி எம். ஹபீபுல்லாஹ் ஜமாலி
பட்டம் பெற்ற ஆண்டு: 2012
ஆய்வுத் தலைப்பு: இந்திய நாட்டின் ஹதீஸ் கலை அறிஞர்கள்
பணி: பேராசிரியர், அரபுத்துறை, புதுக்கல்லூரி. இமாம்-ஷாஃபிய்யா மஸ்ஜித், இராயபுரம், சென்னை
செல்பேசி: 97898 81988

8. பெயர்: முனைவர் மௌலவி முஜீபுர் ரஹ்மான் உமரி
பணி:  பேராசிரியர் இஸ்லாமியியல் துறை, பிரிஸ்டன் கல்லூரி, ஆழ்வார்பேட்டை, சென்னை.  

9. பெயர்: முனைவர் மௌலவி அல்ஹாஃபிழ் எஸ். முஹிப்புல்லாஹ் பாகவி
பட்டம் பெற்ற ஆண்டு: 2017
ஆய்வுத் தலைப்பு: அரபுமொழியின் அடிப்படை இலக்கணத்தைப் பயிற்றுவிக்கின்ற குர்ஆனிய எளிமையான உதாரணங்கள் 
பணி: அரபு ஆசிரியர், சதக் மெட்ரிக்குலேஷன் பள்ளி, அரும்பாக்கம். இமாம்-மஸ்ஜித் நூர்  பள்ளிவாசல், சாந்தி காலனி அண்ணா நகர், சென்னை.
செல்பேசி: 98847 79094 

10. பெயர்: முனைவர் மௌலவி  முஹம்மது ரஃபீக் ஹஸனி
பட்டம் பெற்ற ஆண்டு: 2013
ஆய்வுத் தலைப்பு: தமிழ்நாட்டில் அரபுமொழியின் வளர்ச்சியும் அரபியர்களின் கலாச்சாரத் தாக்கமும்
பணி: அரபுப் பேராசிரியர், கருத்த ராவுத்தர் கல்லூரி, திருநெல்வேலி.
செல்பேசி: 99525 99678

11. பெயர்: முனைவர் மௌலவி சையது ஃபஸ்லுல்லாஹ் பக்தியாரி உமரி நத்வி,
பட்டம் பெற்ற ஆண்டு: 2016
ஆய்வுத் தலைப்பு: நபிமார்களின் வரலாறு சார்ந்த இலக்கியத்தில் இந்திய உலமாக்களின் பங்கு
பணி:  உதவிப் பேராசிரியர், அரபுத்துறை, புதுக்கல்லூரி, சென்னை. 
செல்பேசி: 98940 83097 

12. பெயர்: முனைவர் மௌலவி அல்ஹாஃபிழ் சயீதுத்தீன் ஜமாலி
பட்டம் பெற்ற ஆண்டு: 2016
பணி:  இமாம், தலைமை காஜி அலுவலக மஸ்ஜித், இராயப்பேட்டை, சென்னை.  

13. பெயர்: முனைவர் மௌலவி முஹம்மது யூசுஃப் ஜமாலி
பணி:  பேராசிரியர் இஸ்லாமியியல் துறை, பி.எஸ். அப்துர் ரஹ்மான் கிரசண்ட் பல்கலைக் கழகம், வண்டலூர் சென்னை.
செல்பேசி: 72994 79842

14. பெயர்: முனைவர் மௌலவி ஏ. அப்துல் ரஷீத் ஹஸனி
பட்டம் பெற்ற ஆண்டு: 2014
ஆய்வுத் தலைப்பு: தஃப்சீர் கலையைப் பரப்பியதில் தற்காலச் சிறப்பு விரிவுரையாளர்களின் பங்கு
பணி: உதவிப் பேராசிரியர், ஜமால் முஹம்மது கல்லூரி, திருச்சி.  
செல்பேசி: 97866 03663

15. பெயர்: முனைவர் மௌலவி அப்துர் ரஹீம் ஹஸனி
பட்டம் பெற்ற ஆண்டு: 2016
ஆய்வுத் தலைப்பு: தமிழ்நாட்டில் அரசு-அரசுசாரா நிறுவனங்களில் அரபுமொழிச் சட்டங்களைப் பயிற்றுவிக்கும் முறைகளில் மேற்கொள்ளப்பட்ட புரட்சிகள் 
பணி: பேராசிரியர்இன்ஸ்டிட்யூட் ஆஃப் அரபிக் அன்ட் கல்ச்சர், ஹைதராபாத்.  
செல்பேசி: 99520 43773

16. பெயர்: முனைவர் மௌலவி ஸலாஹுத்தீன் முஹம்மது அய்யூப்
பணி: தலைமை காஜி, இராயப்பேட்டை, சென்னை.  

17. பெயர்: முனைவர் மௌலவி அல்ஹாஃபிழ் ஸஃபியுல்லாஹ் அன்வாரி
பட்டம் பெற்ற ஆண்டு: 2013
ஆய்வுத் தலைப்பு: யமன் நாட்டு ஹதீஸ்கலை, இஸ்லாமியச் சட்டத்துறை அறிஞர்களும் அவர்களின் சேவைகளும்
பணி: இமாம், அரபு ஆசிரியர்-ஆயிஷா மகளிர் அரபுக்கல்லூரி, செங்குன்றம், சென்னை. 
செல்பேசி: 99403 78783

18. பெயர்: முனைவர் மௌலவி ஷேக் இப்ராஹீம் ஹஸனி
பட்டம் பெற்ற ஆண்டு: 2012
ஆய்வுத் தலைப்பு: கவிதை, இலக்கியத்தைப் பரப்பியதில் ஷேக் அப்துல் அஸீஸ் சுவூத் பாப்தீன் அவர்களின் பங்களிப்பு
பணி: அரபிக் சீனியர் எக்ஸிக்யூட்டிவ், ஃபார்மாசெட்டிகல் கம்பெனி, சென்னை.  
செல்பேசி: 99860 53553

19. பெயர்: முனைவர் மௌலவி அபூசுலைம் முஹம்மது அஸ்லம் ஹஸனி
பட்டம் பெற்ற ஆண்டு: 2017
ஆய்வுத் தலைப்பு: இஸ்லாமிக் பாலியோகிராஃபி அன்ட் கோடிகாலஜி
பணி: அகாடமிக் எடிட்டர், இன்டர்நேஷனல் இஸ்லாமிக் யூனிவர்சிட்டி, மலேசியா.
செல்பேசி: 60 16 2244923

20. பெயர்: முனைவர் மௌலவி முஹம்மது சுலைமான் உமரி
பணி: பேராசிரியர் இஸ்லாமியியல் துறை, பிரிஸ்டன் கல்லூரி, ஆழ்வார்பேட்டை, சென்னை.

21. பெயர்: முனைவர் மௌலவி சையது கமாலுல்லாஹ் பக்தியாரி நத்வி
பட்டம் பெற்ற ஆண்டு: 2011
பணி: உதவிப் பேராசிரியர், அரபுத்துறை, புதுக்கல்லூரி, சென்னை.

                                                                    -தொகுப்பு:  நூ.  அப்துல் ஹாதி பாகவி

==========================================




ஞாயிறு, 8 அக்டோபர், 2017

அறியாமை ஆட்டம் போடுகிறது!


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

உலகில் விஞ்ஞானம் வளர்ந்துகொண்டே சென்றாலும் மனிதன் விண்ணை நோக்கிப் பயணம் மேற்கொள்ளும் அளவிற்கு அறிவுப் புரட்சி செய்தாலும் விண்ணுலகிலேயே வீடு கட்டிக் குடியேற முயலும் நிலைக்கு உயர்ந்தாலும் உலகை வியக்க வைக்கும் அரிய சாதனைகள் பலவற்றைச் செய்தாலும் பற்பல புதிய கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்தினாலும் அறியாமை எனும் நோய் மனித சமுதாயத்தில் ஆட்டம் போட்டுக்கொண்டேதான் இருக்கிறது. காலம் செல்லச் செல்ல, அறிவுப் புரட்சி பெருகப் பெருக, மனிதன் மாபெரும் சிந்தனையாற்றலும் செயல்திறனும் பகுத்தறிவும் பெற்றுத் திகழ்வான் எனும் எண்ணம் தோன்றுவதற்குப் பதிலாக அவனிடம் அறியாமை  தனது காலை அகல விரிக்கிறதோ என எண்ணத் தோன்றுகிறது.

இருண்ட காலம் எனும் அறியாமைக் காலத்தில் வாழ்ந்த நாகரிகமற்ற மனிதர்களைப்போல் மனிதன் மாறிக்கொண்டிருக்கிறான். காட்டு விலங்குகளைப் போல் ஒருவனை ஒருவன் அடித்துக்கொண்டும் அழித்துக்கொண்டும் இருக்கின்றான். தானே உயர்ந்தவன் எனக் கருதி, தனக்குப் போட்டியாக யாரும் வந்துவிடக் கூடாது எனும் எண்ணத்தில் எந்தவித ஈவிரக்கமும் இன்றிக் கொலை செய்கிறான். இது அவனுடைய அறியாமையன்றி வேறென்ன?

மார்க்கம் பற்றிய அறியாமை, மனித ஆற்றல் பற்றிய அறியாமை, தன்னைப் பற்றிய அறியாமை, கல்வியைப் பற்றிய அறியாமை, இறைவனைப் பற்றிய அறியாமை, இறைத்தூதர் போதனைகள் குறித்த அறியாமை, ஏகத்துவம் குறித்த அறியாமை உள்ளிட்ட பலவகை அறியாமைகள் பாரினில் உண்டு. ஒரு மனிதன் தனது அறியாமையால் அவன் மட்டும் துன்பப்படவில்லை. பிறரையும் துன்பப்படுத்திக்கொண்டிருக்கிறான்.

பள்ளிவாசல்களில் இமாம்களாகப் பணியாற்றுவோர் மேற்கொள்கின்ற சட்ட நடைமுறைகளில் சாதாரண மனிதர்கள் குறுக்கிட்டுப் பிரச்சனையை ஏற்படுத்துகின்றனர். மார்க்கத்தைக் கற்பிப்பதற்காகவே படித்துப் பட்டம் பெற்று வருகின்ற ஆலிம்களின் செயல்பாடுகளைச் சாதாரண மக்கள் எந்த முன்யோசனையுமின்றி எதிர்ப்பது அவர்களின் அறியாமையை வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது. சிலர் தமக்குத் தெரியாதுஎன்பதையே தெரியாமல் இருப்பதால்தான் பிரச்சனையே உருவாகிறது. பெரும்பாலான இடங்களில் இதுதான் பிரச்சனையின் மூலவேர் ஆகும்.

வணக்க வழிபாடுகளில் மக்களிடம் மிகப்பெரும் அளவில் அறியாமை தாண்டவமாடுகிறது. ஏக இறைவனை வணங்கி அவனிடமே தம் தேவையைக் கேட்டுப் பெற வேண்டிய முஸ்லிம்கள், குறிப்பிட்ட தர்ஹாக்களுக்குச் சென்று அங்கு துயில்கொள்கின்ற இறைநேசர்களிடம் தம் தேவைகளைக் கேட்பது அல்லது அல்லாஹ்விடம் பரிந்துரை செய்யுமாறு அவர்களிடம் கேட்பது முஸ்லிம்களின் அறியாமையாகும். இறைநேசர்களாக இருந்து இறந்துபோனவர்களிடம் சென்று தமது தேவைகளுக்காகப் பரிந்துரை தேடுமாறுஎந்த இறைக்கட்டளையும் நபிக்கட்டளையும் இல்லாதபோது அவ்வாறு செய்வது அறியாமையன்றி வேறென்ன?

தர்ஹா உள்ளதால் இவன் அங்கு சென்று, அங்கு துயில்கொள்கிற இறைநேசரிடம் தனக்காக அல்லாஹ்விடம் பரிந்துரை செய்யுமாறு கேட்டு, அவரும் அல்லாஹ்விடம் அவனுக்காகப் பரிந்துரை செய்து, அதன் காரணமாக அவனது தேவையை அல்லது வேண்டுகோளை அல்லாஹ் நிறைவேற்றிவிட்டான் என்றால், தனது ஊரிலோ, நாட்டிலோ தர்ஹா இல்லாதவன் என்ன செய்வான்? அவன் எப்படித் தனது தேவையை நிறைவேற்றிக்கொள்வான்.  யாரிடம் சென்று பரிந்துரை செய்யுமாறு வேண்டுகோள் விடுப்பான்? ஆக, உலகின் எல்லா இடங்களிலும்  வாழுகின்ற மானிடர்க்கு அவரவரின் தேவையை அறிந்து நிறைவேற்றுபவன் அல்லாஹ்வைத் தவிர யாருமுண்டோ?

அத்தோடு ஆண்டுக்கொரு முறை உரூஸ்என்ற பெயரில் ஒரு கோலாகலமான கண்கவர் விழா நடத்தப்படுகிறது.  இஸ்லாமிய மார்க்கத்திற்கெதிரான எல்லாச் செயல்களும் அரங்கேற்றப்படுகின்றன. ஆடல், பாடல், மேளம், வானவேடிக்கை உள்ளிட்ட எல்லாம் உண்டு. ஆணும் பெண்ணும் ஒருவடோருவர் கலந்து, கலைந்து செல்லும் விழாக்கோலம் அறியாமையின் உச்சம்தானே?

ஆந்திர மாநிலத்தில் ஓர் ஊரில் இறைநேசர் என்ற போர்வையில் ஒருவர் உள்ளார். மக்களை முட்டாளாக்கித் தமது பேச்சுக்கு இணங்க வைத்து, ஐம்பதாயிரம் செலுத்தித் தம்மிடம் சொர்க்கத்திற்கான நுழைவுச்சீட்டைப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிப்புச் செய்தார். அவர்மீது கொண்டுள்ள கண்மூடித்தனமான நம்பிக்கையால் சுற்றியுள்ள ஊர்மக்கள் மிகுந்த நம்பிக்கையோடு சொர்க்கத்திற்கான நுழைவுச்சீட்டைவாங்கிச் செல்கின்றார்கள். இது தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட செய்தி. அதை வாங்கிச் சென்றவர் இறந்துவிடும்போது, அவருடைய பிரேதத்தோடு (ஜனாஸா) அந்த நுழைவுச் சீட்டையும் சேர்த்துவைத்துப் புதைத்துவிட வேண்டும்.  அதைப் பார்க்கும் மலக்கு-வானவர் அவரைச் சொர்க்கத்தில் நுழைய அனுமதித்துவிடுவார் என்று போதித்து வருகிறார். பகுத்தறிவை இழந்த மக்கள் அதையும் பணம் செலுத்தி வாங்கிச் செல்கின்றனர். இது அவர்களுடைய அறியாமையின் உச்சம் அல்லவா?

சிறப்பிற்குரிய முஹர்ரம் மாதத்தின் முதல் பத்து நாள்களில் மக்கள் மத்தியில் பரவியுள்ள மூடநம்பிக்கைகளும் அறியாமையும் வேறுவிதமானவை. பஞ்சா தூக்குதல், தீ மிதித்தல் உள்ளிட்ட மூடப்பழக்கங்களைக் கடைப்பிடிக்கின்றார்கள். ஷீஆ பிரிவினர் தம்மைத்தாமே வருத்திக்கொள்ளும்பொருட்டு தம் உடலைக் கத்தியால் குத்திக் காயப்படுத்திக்கொள்கின்றார்கள். தம் முன்னோர் ஹுஸைன் (ரளி) அவர்களுக்குக் கர்பலா களத்தில் செய்த நம்பிக்கைத் துரோகத்திற்குப் பாவமன்னிப்பாக அதைக் கருதுகின்றார்கள். மற்றொரு விதத்தில், ஹுஸைன்  (ரளி) அவர்கள்மீது கொண்டுள்ள அன்பின்மிகுதியால் அவர்கள் பட்ட துன்பத்தைப்போன்று தாமும் அனுபவித்து துக்கம் மேற்கொள்கின்றார்கள். இவையெல்லாம் அறியாமையின் ஆட்டம் இல்லையா?

ஸஃபர் ஒரு பீடை மாதம் என முஸ்லிம்கள் சிலர் கருதி வருகின்றார்கள். ஏனென்றால் நபி (ஸல்) அவர்கள் அம்மாதத்தில்தான் நோய்வாய்ப்பட்டார்கள். அதன்பின் அந்நோயின் காரணமாகவே அவர்கள் மரணத்தைத் தழுவினார்கள். எனவே அம்மாதம் பீடை என்ற மூடப்பழக்கத்தைக் கடைப்பிடிக்கின்றார்கள். அம்மாதத்தில் திருமணம் உள்ளிட்ட மங்கலமான நிகழ்வுகளை நடத்த மாட்டார்கள். இது ஒரு வகை அறியாமைதானே?

ரஜப் மாதத்தில் முஸ்லிம்கள் சிலர் சில சடங்குகளைப் பின்பற்றுகின்றார்கள். இமாம் ஜஅஃபர் ஸாதிக் (ரளி) அவர்களின் நினைவாக கீர்-பூரி ஃபாத்திஹா ஓதப்படுகிறது. ஃபாத்திஹா மட்டும் ஓதினாலும் பரவாயில்லை. ஆனால் விறகு வெட்டியின் கதைபடிக்கப்படுவதுதான் அதில் முக்கியமானது. மண் சட்டிகளுக்குச் சந்தனம் தடவி அதில் கீர் எனும் இனிப்புப் பானத்தை ஊற்றி வைத்து, பயபக்தியோடும் புனிதமாகவும் மேற்கொள்ளப்படுகிறது. வீட்டிற்கு வந்துதான் அதை உண்ண வேண்டும். வெளியில் யாருக்கும் அதைக் கொடுத்தனுப்பக்கூடாது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளும் அதில் உண்டு. இதுவும் ஒரு வகை அறியாமைதானே?

நல்ல நேரம், கெட்ட நேரம் பார்த்துச் செயலைத் தொடங்குதல், கைரேகை பார்த்து எதிர்காலத்தைக் கணித்தல், பிறந்த நேரத்தையும் நட்சத்திரத்தையும் குறித்து வைத்துக்கொண்டு திருமணப் பொருத்தம் பார்த்தல் உள்ளிட்ட ஏராளமான மூடப்பழக்கங்களும் அறியாமைகளும் முஸ்லிம்களிடமும் மண்டிக் கிடக்கின்றன. ஏக இறைவனை ஏற்றுக்கொண்டுள்ள இஸ்லாமியச் சமுதாயத்தில் சடங்கு சம்பிரதாயங்களும் மூடநம்பிக்கைகளும் கோலோச்சி நிற்பது அவர்களின் அறியாமையைப் படம்பிடித்துக் காட்டுகிறது. அவர்கள் திருக்குர்ஆனையும் நபிமொழிகளையும் தொட்டுக்கூடப் பார்க்கவில்லை என்று தெரிகிறது.

பிற மதச் சகோதரர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ வேண்டிய முஸ்லிம் சமுதாயத்தினர், அவர்களே முஸ்லிம்களைக் கேலி செய்யும் விதத்திலான மூடநம்பிக்கைகளைப் பின்பற்றிச் செல்வது எவ்வளவு பெரிய அறியாமை! நம்முடைய நடைமுறைகளையும் பழக்க வழக்கங்களையும் இறைவழிபாட்டு முறையையும் பார்த்து, மூடப்பழக்கங்களையும் தவறான கடவுள் கொள்கைகளையும் பின்பற்றி வாழ்வோர் ஈர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நிலைமை தலைகீழாக உள்ளது. பிற சமுதாய மக்களை மிஞ்சும் அளவிற்கு நம் சமுதாய மக்களிடம் மூடப்பழக்கங்களும் அறியாமைகளும் மேலோங்கி இருப்பதால் பிற சமுதாய மக்கள் நம்மால் ஈர்க்கப்படவில்லை.

ஏகத்துவச் சிந்தனையை முறியடிக்கும்விதமாக ஷைத்தானின் சூழ்ச்சி வலையில் சிக்குண்டு கிடக்கின்ற முஸ்லிம்களை மீட்பதும் அவர்களைச் சொர்க்கப் பாதையை நோக்கி அழைத்துச் செல்வதும் மார்க்க அறிஞர்களின்  தலையாய கடமையாகும். ஆனால் அது குறித்து வருத்தப்படாத அறிஞர்கள் சிலர் முஸ்லிம்களின் அறியாமைச் செயல்களுக்குச் சில வியாக்கியானங்களையும் விளக்கங்களையும் கூறி, அவற்றைச் சரியென வாதிக்கின்றனர். ஆதலால் அறியாமை எல்லா இடங்களிலும் ஆட்டம் போட்டுக்கொண்டே இருக்கிறது.
=======================================    








வெள்ளி, 6 அக்டோபர், 2017

இஸ்லாமிய இலக்கியக் கழகப் பொதுக்குழுக் கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பெற்ற ஆலிம்கள்!


 30.09.2017 சனிக்கிழமை காலை 11 மணிக்குச் சென்னை கவிக்கோ மன்றத்தில் இஸ்லாமிய இலக்கியக் கழகப் பொதுக்குழு கூடியது. தமிழகமெங்கிலுமிருந்தும் ஏறக்குறைய 130 உறுப்பினர்கள் பங்கேற்றனர்.  மூத்த ஊடகவியலாளர் அல்ஹாஜ் நூருல்லாஹ் தேர்தல் அதிகாரியாக இருந்து புதிய நிர்வாகிகள் தேர்தலை நடத்துவாரென்று சேமுமு. அறிவிக்க நூருல்லாஹ் தேர்தலை நடத்தினார்.

பேராசிரியர் டாக்டர் சேமுமு. முகமதலி பெயரைத் தலைவர் பதவிக்குப் பேராசிரியர் ஹாஜா கனி, கவிஞர் இ. பதுருத்தீன் உள்ளிட்ட பலரும் முன்மொழிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் எழுத்தாளருமான நிஜாமுத்தீன், கவிஞர் ஷேக்மதார் உள்ளிட்ட பலரும் வழிமொழிந்தனர். வேறு எவரது பெயரும் குறிப்பிடப்படாததால் சேமுமு. முகமதலி ஏகமனதாகத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாகத் தேர்தல் அதிகாரி அறிவித்தார். பொதுச் செயலாளர் பதவிக்குப் பேராசிரியர் அப்துல் சமது பெயரை முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி அல்ஹாஜ் அலாவுதீன் உள்படப் பலரும் முன்மொழிய, பேராசிரியர் ஹாஜாகனி உள்படப் பலரும் வழிமொழிய ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆளூர் ஷாநவாஸ் உள்படப் பலரும் முன்மொழிய, சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் உள்படப் பலரும் வழிமொழிய எஸ்.எஸ். ஷாஜஹான் பொருளாளராக ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதன்பின்னர் நெறியாளர்கள், புரவலர்கள், துணைத் தலைவர்கள், செயலாளர், துணைச் செயலாளர்கள், ஊடகத்துறை ஒருங்கிணைப்பாளர்கள், சட்ட ஆலோசகர், செயற்குழு உறுப்பினர்கள் முதலியோரது பெயர்களைக் கழகத் தலைவர் எடுத்துரைக்கப் பொதுக் குழு உறுப்பினர்கள் ஏகமனதாக அனைவரையும் ஏற்று அங்கீகரித்துத் தேர்ந்தெடுத்தார்கள். பின்னர் அயலக ஒருங்கிணைப்பாளர்களும் அறிவிக்கப்பெற்றார்கள்.

அவர்களுள் தேர்ந்தெடுக்கப்பெற்ற ஆலிம்களின் விவரம் தங்களின் பார்வைக்கு:

துணைத் தலைவர்கள் வரிசையில்.... 
-----------------------
மௌலவி அ. முஹம்மது கான் பாகவி
மௌலவி தேங்கை ஷரபுத்தீன்

துணைச் செயலாளர்கள்  வரிசையில்.... 
 --- --- --- --- --- ---
மௌலவி எஸ்.என். ஜாபர் சாதிக் பாகவி

அயலக ஒருங்கிணைப்பாளர்கள் வரிசையில்.... 
 --- --- --- --- --- --- --- ---
குவைத்: மௌலவி அ.பா. கலீல் அஹமது பாகவி

செயற்குழு உறுப்பினர்கள் வரிசையில்.... 
 --- --- --- --- --- --- ---
டாக்டர் பி.எஸ். சையது மஸ்வூது ஜமாலி
மௌலவி பீர் முஹம்மது பாகவி
மௌலவி முஹம்மது இல்யாஸ் ரியாஜி
பேராசிரியர் டாக்டர் அ. ஜாஹிர் ஹுஸைன் பாகவி (சென்னைப் பல்கலைக் கழகம்)
டாக்டர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி (துணையாசிரியர் இனிய திசைகள்)
மௌலவி அ.அப்துல் அஜீஸ் பாகவி (கோவை)
மௌலவி காஞ்சி அப்துர் ரவூஃப் பாகவி
மௌலவி பி.எம். கலீலுர் ரஹ்மான் மன்பயீ
மௌலவி பஹாவுத்தீன் காஸிமி

ஆலிம்களுக்குத் தமிழ் தெரியாது என்பது மறைந்து இஸ்லாமிய இலக்கியக் கழகத்தில் இடம்பெறுகின்ற அளவிற்கு அவர்கள் உயர்ந்துள்ளார்கள் என்பதை நினைக்கும்போது எல்லா ஆலிம்களுக்கும் இது பெருமிதம்தானே?

=================================


வியாழன், 21 செப்டம்பர், 2017

சாத்தியமா? இது சாத்தியமா?



03 10 2017 அன்று நடைபெறவுள்ள  ஜமாஅத்துல் உலமா நிர்வாகிகள் தேர்தலை முன்னிட்டு, சுயேச்சை வேட்பாளர்களாகப் பலர் அறிக்கைகளையும் வாக்குறுதிகளையும் தாராளமாக அள்ளிவீசிக்கொண்டிருக்கின்றார்கள். ஆனால் அவற்றுள் பல சாத்தியமில்லாதவை. அதற்கான காரணம் உண்டு. ஏனென்றால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பொறுப்பில் இருக்கின்றார்கள். அவரவர்க்கு அவரவர் பொறுப்பு முக்கியமானது. இமாம், உஸ்தாத் உள்ளிட்ட பணிகளில் இருப்பவர்களுக்கு அதைச் செவ்வனே நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு உள்ளது. அதில்தான் அவர்களுடைய வாழ்வாதாரம் அமைந்துள்ளது. அப்படியிருக்கும்போது எப்படி இவ்வளவு பெரிய வாக்குறுதிகளை அவர்கள் நிறைவேற்ற முடியும்?

வாக்குறுதியை அள்ளி வீசுவது எளிது. அவற்றை நிறைவேற்ற முடியுமா என்பதை  அவர்களே யோசிக்க வேண்டாமா? நிச்சயமாக முடியாது. அவர்கள் தத்தம் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டே   ஜமாஅத்துல் உலமா பொறுப்பை ஏற்கும் வரை இது இயலாது.

இதற்கான தீர்வு ஒன்று உண்டு. ஜமாஅத்துல் உலமா மாநிலத் தலைவர், செயலாளர், பொருளாளர், துணைத்தலைவர், துணைச் செயலாளர், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட 15 பேருக்கு  ஜமாஅத்துல் உலமா மாநிலத் தலைமையக அலுவலகமே சம்பளம் கொடுத்து அவர்களை முழுநேரச் சமுதாயத் தொண்டர்களாக ஆக்கினால்தான் அவர்கள் தம் பொறுப்பைச் செவ்வனே நிறைவேற்ற முடியும்.

எனவே  ஜமாஅத்துல் உலமா தலைமைப் பொறுப்பு உள்ளிட்ட பிற பதவிகளுக்குப் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் வெற்றிபெற்ற பின் தத்தம் பொறுப்பை இராஜினாமா செய்துவிடுவோம் என்ற நிபந்தனையை ஏற்றுக்கொள்வோர் மட்டுமே இத்தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்பட வேண்டும். இவ்வாறு செய்தால்தான்  ஜமாஅத்துல் உலமாவின் பொறுப்பாளர்கள் மக்களுக்குப் பயனுள்ள ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்ள முடியும். இல்லையேல் எவ்வளவு பெரிய தலைவராலும் ஜமாஅத்துல் உலமா வீரியமாகச் செயல்படச் சாத்தியமே இல்லை.

- முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி, மணலி, சென்னை.
 21 09 2017

புதன், 20 செப்டம்பர், 2017

பாவம் பலவீனப்படுத்தும்!

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

மனித இனத்தைப் படைத்த இறைவன் அவன் இப்பரந்த நிலத்தில் வாழ்வதற்கெனச் சட்டதிட்டங்களை வகுத்தான்; கடமைகளையும் உரிமைகளையும் கட்டமைத்தான்; எல்லைகளை நிர்ணயித்தான்; குறிப்பிட்ட எல்லையை அவன் தாண்டக்கூடாதெனக் கட்டளையிட்டான். இத்தனையும் ஏன் செய்தான்? அவன் இந்நிலத்தில் சுயமரியாதையோடு தலைநிமிர்ந்து வாழ வேண்டும் என்பதற்காகத்தான். பிறர் மத்தியில் செல்கின்றபோது அவனுடைய மானத்திற்கும் மரியாதைக்கும் இழுக்கு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே சட்டவரையறைகளை நிர்ணயித்தான். அவனுடைய மரியாதைக்குக் களங்கம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே அவன் செய்துவருகின்ற சின்னச் சின்னப் பாவங்களையும் தவறுகளையும் மறைத்துவிடுகின்றான்.

இறைவன் மனிதனுக்கு விதித்த எல்லைகளை மீறாத வரை அவன் தலைநிமிர்ந்து கம்பீரமாக நடைபோடுகிறான். இறைவன் விதித்த எல்லைகளை அவன் மீறத் தொடங்கிவிட்டால் மனதளவில் தளர்வடைந்துவிடுகிறான். மனத்தில் தளர்வு ஏற்பட்டுவிட்டால் நடையில் கம்பீரம் காணாமல் போய்விடும்.

மனிதன் பாவம் செய்யத் தொடங்கிவிட்டால் அவன் தனது மனத்துணிவை இழந்துவிடுவான்.  எப்போதும் பயமும் அச்சமும் அவனைக் கவ்விக் கொள்ளும். எதையும் தீர்மானமாகப் பேசவோ செய்யவோ துணிவு ஏற்படாது. பிறர்மீது கொண்டுள்ள நம்பிக்கையை இழந்துவிடுவான்; யாரையும் எளிதில் நம்பமாட்டான். காரணம் தன்னைப் போலவேதான் பிறரும் என்ற எண்ணமே மேலோங்கி நிற்கும்.

எனவேதான் படைத்தோன் இறைவன் உள்ளத்தைத் தூய்மைப்படுத்திக்கொள்ளுமாறு பகர்கின்றான். மனித உள்ளத்தில் நன்மையைச் செய்யத் தூண்டும் ஓர் உந்துதல் உள்ளதைப் போலவே தீமை செய்யத் தூண்டுவதற்கான ஓர் உந்துதலும் உள்ளது. அது அவனைத் தீமை செய்யத் தூண்டிக்கொண்டே இருக்கும். அதை அடக்கித் தன் கட்டுப்பாட்டில் வைத்தால்தான் நன்மையைச் செய்ய முடியும்; அதன்மூலம் தன் உள்ளத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ள முடியும்.

இக் கருப்பொருளைப் பொதிந்துள்ள திருவசனத்தை உயர்ந்தோன் அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்: நன்மை தீமைகளை அந்த ஆன்மாவுக்கு அறிவித்தவன்மீது சத்தியமாக! யார் (பாவங்களி-ருந்து தன் ஆன்மாவைப்) பரிசுத்தமாக்கிக் கொண்டானோ அவன், நிச்சயமாக வெற்றி அடைந்துவிட்டான். (91: 8-9) நன்மை எது, தீமை எதுவெனப் படைத்தோன் இறைவன் தெளிவுபடத் திருக்குர்ஆனில் கூறி, சீரான வழியைக் காட்டிவிட்டான். அதன்பின்னர் சீரான பாதையில் நடைபோடுவது ஒவ்வொரு தனிமனிதனின் கடமையாகும்.

"ஷைத்தான் மனிதனின் பகிரங்க எதிரி'' என்று படைத்தோன் இறைவன் திருக்குர்ஆனில் தெளிவாக எடுத்துரைத்துள்ளான். ஆகவே அவன் மனிதனை வீழ்த்துவதற்கான எல்லாச் சூழ்ச்சிகளையும் முயற்சிகளையும் செவ்வனே செய்துகொண்டே இருப்பான். அவனுடைய மிகப்பெரும் வேலை மனிதனைப் பாவம் செய்யத் தூண்டுவதுதான்.
மனிதன் பலவீனனாகவே படைக்கப்பட்டுள்ளான். அந்தப் பலவீனத்தைப் பயன்படுத்தி மிக எளிதில் ஷைத்தான் தன் வலையில் அவனைச் சிக்க வைத்து மேன்மேலும் அவனைப் பலவீனனாக ஆக்கிவிடுகின்றான். தவறு செய்த மனிதன் அது வெளியே தெரிந்துவிடுமோ என்ற அச்சத்திலேயே இருந்துகொண்டிருக்கிறான். அதன் காரணமாக அவனால் துணிச்சலாக எதையும் செயலாற்ற முடியாது; கம்பீரமாக நடைபோட முடியாது.

அதே உத்தியை இன்றைய யூதர்கள் கையாளுகின்றார்கள். உலகம் முழுவதும் தம்முடைய ஆட்சியே ஓங்கி இருக்க வேண்டுமென்ற நப்பாசையில் அவர்கள் இருந்துகொண்டிருப்பதால் ஆங்காங்கே தவறு செய்யக்கூடியவர்களைக் கண்காணித்து வருகின்றார்கள். அரசுப் பதவியில் உள்ளோர் செய்கின்ற பஞ்சமாபாதகச் செயல்களையெல்லாம் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு, தக்க தருணம் வரும்போது  அவர்கள் செய்த மாபாதகத் தவறுகளை மக்களுக்கு வெளிச்சம்போட்டுக் காட்டிவிடுவதாகக் கூறி  மிரட்டி அவர்களைத் தமக்கு அடிமையாக்கிக்கொள்கின்றார்கள். பின்னர் தம்முடைய திட்டங்களையெல்லாம் அவர்களை வைத்தே நிறைவேற்றிக்கொள்கின்றார்கள்.

அந்தக் கண்ணோட்டத்தோடு இன்றைய தமிழகத்தை ஒரு கணம் திரும்பிப் பார்த்தால் உண்மை புலப்படும். ஆளும் கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் ஒரே திசையில்தான் பயணிக்கின்றார்கள். ஆளும் கட்சியினர் மத்திய அரசை எதிர்த்து எதுவும் செய்யத் திராணியற்றவர்களாக உள்ளனர். தமிழக ஆளும் கட்சியினர் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்துப் போராட்டம் நடத்த எதிர்க்கட்சிகளுக்குத் துணிவில்லை. ஏனென்றால் எதிர்ப்போர் அனைவரும் கடந்த காலங்களில் மாபாதகச் செயல்களைச் செய்தவர்கள்தாம். ஆளும் கட்சியின் கொள்கை முடிவுகளைத் துணிவோடு எதிர்க்கத் தயாராகிவிட்டால் சிறைக்கூடம் தயாராக இருக்கிறது என்பது அவர்களுக்கே நன்றாகத் தெரியும். அதனால்தான் வீரியமாக யாரும் எதிர்ப்புத் தெரிவிப்பதில்லை. மக்களின் மனத்தைச் சமாதானப்படுத்தும் விதமாக மேலோட்டமான எதிர்ப்பு வார்த்தைகளை மட்டும் அவ்வப்போது உதட்டளவில் உதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இன்று இந்த உத்தியை உலக அளவில் யூதர்கள் பரவலாகக் கையாண்டு வருகின்றார்கள். ஒரு நாட்டில் அவர்கள் தம் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டுமென்றால், அந்நாட்டின் ஜனாதிபதி,  பிரதமர், முதல்வர் போன்றோர் செய்கின்ற தவறுகளைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு அவர்கள்மூலம் அந்நாட்டிற்குள் நுழைந்துவிடுகின்றார்கள். அல்லது அந்நாட்டின் முக்கியப்புள்ளிகளை விலைகொடுத்து வாங்கிவிடுகின்றார்கள். பின்னர் அவர்கள் தம் விருப்பம்போல்  அதில் செயல்படுகின்றார்கள்.  ஆக, ஆள்வதோ அந்தந்த நாட்டின் குடிப்பிறந்தவர்கள். ஆனால் அவர்கள் தம் விருப்பப்படி ஆட்சி செய்ய முடியாது; குடிமக்களுக்கு நன்மை செய்ய நினைத்தாலும் முடியாது. அவர்களின் ஆட்சியும் காட்சியும் யூதர்களின் கட்டளைப்படியே இருக்கும்.

நேர்மையான அலுவலர்களும் அதிகாரிகளும் எதிரிகளின் திட்டங்களுக்குத் தடையாக இருப்பார்கள். அவர்களை எப்படியாவது தவறு செய்யவைத்து, அதைப் பதிவுசெய்து வைத்துக்கொண்டு மிரட்டத் தொடங்குவார்கள். பின்னர் அவர்களின் தடை உடைபட்டு புதிய மடை திறந்துவிடும். அதன்பின்னர் அவர்கள் தம் விருப்பம்போல் திட்டங்களைச் செயல்படுத்துவார்கள். இதுவே இன்றைய நடைமுறை.

இறைவன் விதித்த கட்டளைகளையோ அரசு விதித்துள்ள சட்டங்களையோ மீறும்போது மனது படபடக்கிறது; துடிதுடிக்கிறது; துணிவை இழக்கிறது. இதனால்தான் அல்லாஹ் ஷைத்தான் குறித்து எச்சரித்துக்கொண்டே இருக்கிறான். அவனுடைய வலையில் மாட்டிக்கொள்ளாமல் இறைவன் விதித்த கட்டளைகளை நிறைவேற்றி, தடுத்தவற்றை அறவே செய்யாமல் முற்றிலும் தவிர்ந்துகொண்டு வாழ்வதே மன உறுதியையும் மன நிம்மதியையும் பெற்றுத் தரும். ஆகவே ஷைத்தானுடைய மாய வலையில் விழாமல் நம்மைத் தற்காத்துக்கொள்ள கடுமுயற்சி செய்வதைப்போலவே அரசு விதித்துள்ள சட்டங்களை மீறாமல் நடைபோட்டால் நம்முடைய நன்மையான செயலுக்கு யாரும் தடைபோட முடியாது. அத்தகைய முயற்சியிலேயே தொடர்ந்து ஈடுபட்டு வெற்றிவாகை சூட வல்லோன் அல்லாஹ் நல்வாய்ப்பை நல்குவானாக.      
 =======================


வியாழன், 7 செப்டம்பர், 2017

நடைப்பயிற்சி மேற்கொள்வோம்!

   -முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

உயர்ந்தோன் அல்லாஹ் வழங்கியுள்ள உடலுறுப்புகளைப் பயன்படுத்தி அதனதன் வேலைகளைச் செவ்வனே செய்யாமல் அவற்றைச் சோம்பேறியாக்குகின்றோம். பற்களால் உணவை நன்றாக மென்று உண்பதில்லை; நாவால் உணவைச் சுவைத்து விழுங்குவதில்லை; காதால் நல்ல அறிவுரைகளைக் கேட்பதில்லை; கண்களால் நல்லவற்றைப் பார்ப்பதில்லை; கைகளால் முறையாக உழைப்பதில்லை; கால்களால் நடந்துசெல்ல வேண்டிய இடங்களுக்கு நடப்பதில்லை.

இவ்வாறு நம் உடலுறுப்புகளை அதனதன் பணியில் ஈடுபடுத்தாமல் அவற்றைச் சோம்பேறியாக்குகின்றோம். அதன்மூலம் நாம் சோம்பேறி ஆகின்றோம். அந்த அடிப்படையில்தான் அல்லாஹ் நமக்கு வழங்கிய காலை நாம் நடப்பதற்குப் பயன்படுத்தாமல் வாகனங்களில் செல்வதையே வழக்கமாகக் கொண்டுள்ளோம். அதற்குப் பிராயச்சித்தமாக அதிகாலை எழுந்து, அருகிலுள்ள மைதானத்திற்குச் சென்று, அதைப் பத்துத் தடவை சுற்றி வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் இன்றைய நவநாகரிக மனிதர்கள்.

நடக்க வேண்டியதற்கு நடக்காமல் வாகனங்களில் மட்டுமே பயணம் செய்துகொண்டிருப்பதால் நடையையே ஒரு பயிற்சியாக மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. அன்றாடம் நாம் இயல்பாக நடந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு நடந்தே செல்ல வேண்டும். இப்பழக்கத்தை நாம் மேற்கொண்டால் நம் உடலிலுள்ள கொழுப்பு முறையாக எரிக்கப்பட்டு, நமக்குத் தேவையான ஆற்றலாக மாறும்.

குளிரூட்டப்பட்ட அறையில் நீண்ட நேரம் இருத்தல், குறைந்தபட்ச அளவிற்குக்கூட நடக்காமல் இருத்தல், ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருத்தல் உள்ளிட்ட காரணங்களால் வியர்வைமூலம் வெளியேற வேண்டிய கழிவுகள் வெளியேறாமல் உடலினுள் தங்கிவிடுகின்றன. கொழுப்பு எரிக்கப்பட்டு, ஆற்றலாக மாற வழியில்லாமல் உடலினுள் தங்கி, கெட்ட கொழுப்பாக மாறிவிடுகின்றது. நாளடைவில் பல்வேறு நோய்கள் ஏற்பட அதுவே காரணமாக அமைகிறது.

இஸ்லாமிய மார்க்கத்தில் நடைக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. தொழுகைக்காகப் பள்ளிவாசலை நோக்கி நடந்து வருவது நன்மைக்குரிய செயல் என்று வலியுறுத்தி, நடப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஒரு மனிதர் அங்கத்தூய்மை (உளூ) செய்து, அதைச் செம்மையாகச் செய்து தொழுகையைத் தவிர வேறு நோக்கத்துடன் வெளியேறாமல் தொழுகைக்குப் புறப்பட்டு வந்தால் அவர் எடுத்து வைக்கும் ஒவ்வோர் எட்டுக்காகவும் அவருக்கு ஒரு தகுதியை அல்லாஹ் உயர்த்துகிறான். அவருடைய தவறுகளில் ஒன்றை அவரிடமிருந்து மன்னித்துவிடுகின்றான்என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: திர்மிதீ: 548)

தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டால் தொழுகைக்கு நீங்கள் ஓடிச் செல்லாதீர்கள். நடந்தே செல்லுங்கள்...என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: திர்மிதீ: 301)

தொழுகைக்காகப் பள்ளிவாசலுக்கு நடந்து வருவதும் தொழுகையில் நின்று வணங்குவதும் கால்களுக்கான உடற்பயிற்சியாகும். மக்கள் அனைவரும் பள்ளிவாசலில் ஒன்றிணைந்து கூட்டாகத் தொழுவதன்மூலம் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக்கொள்வதுடன் கால்களுக்கான பயிற்சியையும் மேற்கொள்வதாகவே அமைகிறது கூட்டுத்தொழுகை. ஆகவே கூட்டுத்தொழுகையில் கலந்துகொள்வதன்மூலம் இறைவனை வணங்குவதோடு கால்களுக்கான பயிற்சியும் கிடைத்துவிடுகின்றது.

சிறு பிராயத்திலேயே நடைப்பயிற்சியை நாம் பிள்ளைகளுக்குப் பயிற்றுவிக்க வேண்டும். பள்ளிக்கூடம், பள்ளிவாசல், மருத்துவமனை, கடைவீதி, சந்தை உள்ளிட்ட இடங்களுக்கு நடக்க வைத்து அழைத்துச் செல்ல  வேண்டும். இவ்வாறு வளரும் பருவத்திலேயே அவர்களுக்கு நடைப்பயிற்சியைக் கொடுத்துவிட்டால் அருகருகே உள்ள இடங்களுக்கு அவர்கள் நடந்துசெல்லப் பழகிக்கொள்வார்கள். பின்னர் நடப்பது அவர்களுக்குச் சிரமமாக இருக்காது. அத்தோடு பள்ளிவாசலுக்கு நடந்து செல்வதால் ஒவ்வோர் எட்டுக்கும் ஒரு நன்மை வழங்கப்பட்டு, ஒரு பாவம் மன்னிக்கப்படுகிறது என்ற தகவலையும் அவர்களுக்குச் சொல்லிக்கொடுக்க வேண்டும். இதனால் அவர்கள் பள்ளிவாசலுக்கு ஆர்வத்துடன் நடந்து செல்லத்  தொடங்கிவிடுவார்கள். அதன் காரணமாக அவர்களின் ஆரோக்கியம் காக்கப்படுவதோடு தொழுகையைப் பேணக்கூடியவர்களாகவும் மாறிவிடுவார்கள்.

மக்கா நகரில் அமைந்துள்ள கஅபாவை நோக்கி உலகின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் மக்கள் ஹஜ்ஜுக்காகச் சென்று கொண்டிருக்கின்றார்கள். ஹஜ்ஜும் உம்ராவும் செய்யப் பொருளாதார வசதி இருப்பதோடு உடலில் சக்தியும் ஆற்றலும் இருக்க வேண்டும். அப்போதுதான் அவ்விரண்டு வணக்கங்களையும் செவ்வனே செய்ய முடியும். ஹஜ் ஓர் இறுதிக் கடமையே தவிர இறுதிக் காலத்தில் செய்ய வேண்டிய கடமை இல்லை. எனவே ஆரோக்கியமாக இருக்கின்றபோதே ஹஜ்ஜுக்குச் சென்று வந்துவிட வேண்டும். ஹஜ், உம்ரா ஆகிய இரண்டு வழிபாடுகளிலும் நடத்தல் முக்கியப் பங்கு வகிக்கிறது. இன்றைய காலத்தில் அதுதான் மிகப் பெரிய பிரச்சனையே. இயல்பாகவே நம்முள் பலர் நடந்து பழக்கமில்லாததால் சின்னச் சின்னத் தூரங்களைக்கூடக் கால்நடையாகக் கடக்கமுடிவதில்லை. வெகுதூரம் என்றால் அறவே முடிவதில்லை. ஹஜ்ஜுக்குச் சென்று திரும்புகின்ற பலர் இதனால் பாதிக்கப்படுகின்றார்கள்; சிரமப்படுகின்றார்கள். ஆகவே இளவயதிலேயே ஹஜ் செய்வதோடு, நடைப்பயிற்சியை மேற்கொள்வது ஹஜ், உம்ரா போன்ற வழிபாடுகளை எளிமையாகவும் சோர்வில்லாமலும் செய்ய உதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

பொதுவாக நடைப்பயிற்சி இல்லாததால் வெளியே செல்வதற்கே இயலாமல் போய்விடுகிறது. அரை கிலோமீட்டர் தூரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு அடிக்கடி செல்ல மனம் நாடுவதில்லை. அவ்வளவு தூரம் நடக்க வேண்டுமா? என்ற கேள்வி நம்முள் பலருக்கு முன்னால் வந்து நிற்கிறது. ஓர் ஆட்டோ பிடித்துச் செல்ல வேண்டுமென்றால் அதற்கொரு செலவு செய்ய வேண்டுமே, பிறகு போய்க்கொள்ளலாம் என்று மனம் ஒத்திப்போட்டு விடுகிறது. இதனால் பக்கத்துத் தெருவிலுள்ள அல்லது இரண்டு தெருக்களுக்கு அப்பாலுள்ள உறவினர் வீட்டிற்குச் செல்ல முடிவதில்லை. இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் நடக்க இயலாமைதான். எனவே நடைப்பயிற்சி மிகவும் இன்றியமையாதது என்பதை விளங்கிக்கொள்ளலாம்.

அதேநேரத்தில் இன்று பலர் மூட்டுவலியால் பாதிக்கப்பட்டுள்ளனர். கால்களை முறையாகப் பராமரிக்காததால்தான் பலர் மூட்டுவலியால் பாதிக்கப்படுகின்றனர். வேறு சிலர் ஆணிக்கால், வெரிகோஸ் எனும் நரம்பு முடிச்சு நோய் உள்ளிட்ட நோய்களுக்கு ஆட்பட்டுள்ளனர். ஒரே இடத்தில் நீண்ட நேரம் நின்றுகொண்டே இருப்பதால் நரம்புகளில் முடிச்சுகள் ஏற்பட்டுவிடுகின்றன. அதன்பின் இரத்த ஓட்டம் சீராக அமையாது. அதனால் அது ஒரு நோயாக மாறிவிடுகின்றது. எனவே நடப்பது எவ்வளவு முக்கியம் என்பதை இதன்மூலமும் தெரிந்துகொள்ளலாம்.

எனவே உயர்ந்தோன் அல்லாஹ் வழங்கியுள்ள உடலுறுப்புகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள அவ்வுறுப்புகளை அந்தந்த பணிக்கு முறையாகப் பயன்படுத்த வேண்டும். ஆகவே நாம் அனைவரும் நடைப்பயிற்சியை மேற்கொண்டு நம் கால்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முயல்வோமாக.     

======================================




புதன், 6 செப்டம்பர், 2017

“கலாம் சாட்” உருவாக்கிய இளைஞருக்குத் தமிழக அரசு 10 இலட்சம் பரிசு!


கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்த 18 வயது இளைஞரான ரிபாத் சாருக் தலைமையிலான ஆறு மாணவர்கள் கொண்ட குழு உருவாக்கிய 64 கிராம் எடை கொண்ட மிகச் சிறிய செயற்கைக்கோள் சமீபத்தில், அமெரிக்காவில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான “நாசா” நடத்திய போட்டியில் கலந்துகொண்டு, உலகத்தின் 57 நாடுகளிலிருந்து சமர்ப்பிக்கப்பட்ட 80,000 மாதிரிகளில் முதல் பரிசு பெற்றது.

இந்தச் செயற்கைக்கோள் கடந்த 22.6.2017 அன்று விண்ணில் “கலாம் சாட்” என்ற பெயரில் “நாசா” ஏவு தளத்திலிருந்து ஏவப்பட்டது. முப்பரிமாண அச்சுத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இந்தச் செயற்கைக்கோள் வானிலை, வான்வெளியில் உள்ள கதிர்வீச்சு, வெப்பம் ஆகியவற்றை ஆராயும் திறன் கொண்டது.

சென்னையிலிருந்து செயல்படும் “ஸ்பேஸ்கிட்ஸ்” என்ற அமைப்பு இந்த மாணவர்களுக்கு ஆக்கமும், ஊக்கமும் அளித்து உதவியது. இந்தச் சாதனையை நிகழ்த்திய மாணவர்கள் ரிபாத் சாருக், யக்னா சாய், வினய் பரத்வாஜ், தனிஷ்க் திவேதி, கோபிநாத், முகம்மது அப்துல் காசிப் ஆகியோருக்கும், குறிப்பாக அந்தக் குழுவின் தலைமை விஞ்ஞானியாகச் செயல்பட்ட ரிபாத் சாருக்கிற்கும் தமிழகச் சட்டசபையில் 110-ஆவது விதியின்கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துகளைத் தெரிவித்து அறிக்கை வாசித்தார்.

மேலும் இந்தச் சாதனையைப் படைத்து, இந்தியாவிற்கு, குறிப்பாகத் தமிழகத்திற்குப் பெருமை தேடித் தந்த மாணவர் ரிபாத் சாருக் தலைமையிலான மாணவர் குழுவினை மேலும் இதுபோன்ற பல சாதனைகள் செய்ய ஊக்கப்படுத்தும் விதமாகத் தமிழக அரசின் சார்பில் 10 இலட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அவர் தமது அறிக்கையில் தெரிவித்தார்.

-தகவல்: நூ. அப்துல் ஹாதி பாகவி-துணைஆசிரியர்


ஈந்து மகிழ்வதால் ‘ஈகைத் திருநாள்’


உலகில் வாழுகின்ற ஒவ்வொரு சமயத்தாருக்கும் ஒவ்வொரு பண்டிகை உண்டு. அந்நாளில் அவர்கள் உற்சாகத் துள்ளலோடு மகிழ்ச்சி பொங்க அதைக் கொண்டாடுவர்; ஆடிப்பாடி மகிழ்வர்; இன்னபிற மகிழ்ச்சிக்குரிய செயல்பாடுகளை மேற்கொள்வர். ஆனால் முஸ்லிம்கள் கொண்டாடுகின்ற பண்டிகை சற்றே வித்தியாசமானது. ஒவ்வோர் ஆண்டும் ரமளான் மாதம் முழுவதும் இறைவனுக்காக நோன்பு நோற்று அது செவ்வனே முடிந்ததும் அதற்கு நன்றி செலுத்தும் முகமாக மறுநாள் காலை ஏழை, எளியோருக்கு ஈகை குணத்தோடு ஒரு குறிப்பிட்ட பணஉதவியைச் செய்து அவர்களும் அந்நன்னாளில் மகிழ்ச்சியோடு இருப்பதற்காக வழிவகையைச் செய்துவிட்டுத்தான் பள்ளிவாசலுக்குத் தொழுகச் செல்வார்கள். அங்கு தம்மைப் படைத்த இறைவனை வழிபட்டு, அவனிடம் பிரார்த்தனை செய்வார்கள். அதன் பின்னர் பகல் வேளையில் பிரியாணி உள்ளிட்ட சிறப்பான உணவுகளைத் தயாரித்துத் தம்மைச் சுற்றியுள்ளோர் அல்லது தமக்குப் பழக்கமானோருக்கு வழங்கி, தாமும் உண்பார்கள். இதுதான் அவர்களின் பெருநாள் பண்டிகை.

மேலும் தற்போது செப்டம்பர் மாதம் 2ஆம் நாள் கொண்டாட இருக்கின்ற பெருநாளும் அவ்வாறுதான். அன்றைய நாள் காலையில் குறிப்பிட்ட நேரத்தில் முஸ்லிம்கள் அனைவரும் பள்ளிவாசலில்  ஒன்றுகூடி ஏக இறைவனான அல்லாஹ்வைத் தொழுதுவிட்டு, அவர்களுள் வசதியுடையவர்கள் தம்மால் இயன்ற வசதிக்கேற்ப ஆட்டையோ மாட்டையோ அறுத்து இறைவனுக்காகப் பலியிடுகின்றார்கள். அதன் இறைச்சியை மூன்று பங்காகப் பிரித்து, தமக்கொரு பங்கை வைத்துக்கொண்டு ஒரு பங்கை தம் உறவினர்களுக்கும் மற்றொரு பங்கை ஏழைகளுக்கும் வழங்குகின்றார்கள். ஏழைகளுக்கு வழங்கும்போது அவர்கள் சாதி, மதம் பார்ப்பதில்லை. மனிதர்கள் அனைவரையும் சமமாக மதிக்கின்றார்கள். சிலர் பிரியாணியாகவே தயாரித்து அண்டைவீட்டாருக்கும் நண்பர்களுக்கும் பரிமாறுவது வழக்கம்.  

அவர்கள் தம் பண்டிகைகளில் வெடிபொருள்களை வெடிப்பதோ பிறருக்குத் துன்பம் தரும் விதத்தில் செயல்படுவதோ அவர்களின் மார்க்கத்தில் தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும்  அவர்கள் தம் பொருளையும் பணத்தையும் வீணாகச் செலவழிப்பதும் விரையம் செய்வதும் அறவே கூடாது. அவற்றையெல்லாம் அவர்கள் அப்படியே ஏற்று நடக்கின்றார்கள்.

அனைவருக்கும் ஈந்து மகிழ்வதால் ‘ஈகைத் திருநாள்’ என்றும் பலிப்பிராணிகளை அறுத்துப் பலியிடுவதால் ‘தியாகத் திருநாள்’ என்றும் அவர்களின் பண்டிகைகள்  அழைக்கப்படுகின்றன. முஸ்லிம்களோடு நெருங்கிய தொடர்புகொண்டவர்கள் அவர்களின் தயாளத்தையும், ஈகைக் குணத்தையும் நன்கு அறிவார்கள். ஓடோடி உதவி செய்யும் மனப்பான்மையையும் நேரடியாகக் கண்டிருப்பார்கள்.

எனவே ஊடகங்களின் தவறான பிம்பத்தால் ‘தீவிரவாதிகள்’ என்று சித்திரிக்கப்பட்டுள்ள அவர்களைக் கண்டு ஒதுங்காமல் அவர்களோடு இணக்கமாக வாழ்ந்து, ‘அனைவரும் தமிழர்கள்’ என்ற எண்ணத்தில் நிலைத்து, வளமாக வாழ வழிகாணுவோம் என்று இந்த நன்னாளில் உறுதி ஏற்போமாக‏.