ஞாயிறு, 8 அக்டோபர், 2017

அறியாமை ஆட்டம் போடுகிறது!


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

உலகில் விஞ்ஞானம் வளர்ந்துகொண்டே சென்றாலும் மனிதன் விண்ணை நோக்கிப் பயணம் மேற்கொள்ளும் அளவிற்கு அறிவுப் புரட்சி செய்தாலும் விண்ணுலகிலேயே வீடு கட்டிக் குடியேற முயலும் நிலைக்கு உயர்ந்தாலும் உலகை வியக்க வைக்கும் அரிய சாதனைகள் பலவற்றைச் செய்தாலும் பற்பல புதிய கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்தினாலும் அறியாமை எனும் நோய் மனித சமுதாயத்தில் ஆட்டம் போட்டுக்கொண்டேதான் இருக்கிறது. காலம் செல்லச் செல்ல, அறிவுப் புரட்சி பெருகப் பெருக, மனிதன் மாபெரும் சிந்தனையாற்றலும் செயல்திறனும் பகுத்தறிவும் பெற்றுத் திகழ்வான் எனும் எண்ணம் தோன்றுவதற்குப் பதிலாக அவனிடம் அறியாமை  தனது காலை அகல விரிக்கிறதோ என எண்ணத் தோன்றுகிறது.

இருண்ட காலம் எனும் அறியாமைக் காலத்தில் வாழ்ந்த நாகரிகமற்ற மனிதர்களைப்போல் மனிதன் மாறிக்கொண்டிருக்கிறான். காட்டு விலங்குகளைப் போல் ஒருவனை ஒருவன் அடித்துக்கொண்டும் அழித்துக்கொண்டும் இருக்கின்றான். தானே உயர்ந்தவன் எனக் கருதி, தனக்குப் போட்டியாக யாரும் வந்துவிடக் கூடாது எனும் எண்ணத்தில் எந்தவித ஈவிரக்கமும் இன்றிக் கொலை செய்கிறான். இது அவனுடைய அறியாமையன்றி வேறென்ன?

மார்க்கம் பற்றிய அறியாமை, மனித ஆற்றல் பற்றிய அறியாமை, தன்னைப் பற்றிய அறியாமை, கல்வியைப் பற்றிய அறியாமை, இறைவனைப் பற்றிய அறியாமை, இறைத்தூதர் போதனைகள் குறித்த அறியாமை, ஏகத்துவம் குறித்த அறியாமை உள்ளிட்ட பலவகை அறியாமைகள் பாரினில் உண்டு. ஒரு மனிதன் தனது அறியாமையால் அவன் மட்டும் துன்பப்படவில்லை. பிறரையும் துன்பப்படுத்திக்கொண்டிருக்கிறான்.

பள்ளிவாசல்களில் இமாம்களாகப் பணியாற்றுவோர் மேற்கொள்கின்ற சட்ட நடைமுறைகளில் சாதாரண மனிதர்கள் குறுக்கிட்டுப் பிரச்சனையை ஏற்படுத்துகின்றனர். மார்க்கத்தைக் கற்பிப்பதற்காகவே படித்துப் பட்டம் பெற்று வருகின்ற ஆலிம்களின் செயல்பாடுகளைச் சாதாரண மக்கள் எந்த முன்யோசனையுமின்றி எதிர்ப்பது அவர்களின் அறியாமையை வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது. சிலர் தமக்குத் தெரியாதுஎன்பதையே தெரியாமல் இருப்பதால்தான் பிரச்சனையே உருவாகிறது. பெரும்பாலான இடங்களில் இதுதான் பிரச்சனையின் மூலவேர் ஆகும்.

வணக்க வழிபாடுகளில் மக்களிடம் மிகப்பெரும் அளவில் அறியாமை தாண்டவமாடுகிறது. ஏக இறைவனை வணங்கி அவனிடமே தம் தேவையைக் கேட்டுப் பெற வேண்டிய முஸ்லிம்கள், குறிப்பிட்ட தர்ஹாக்களுக்குச் சென்று அங்கு துயில்கொள்கின்ற இறைநேசர்களிடம் தம் தேவைகளைக் கேட்பது அல்லது அல்லாஹ்விடம் பரிந்துரை செய்யுமாறு அவர்களிடம் கேட்பது முஸ்லிம்களின் அறியாமையாகும். இறைநேசர்களாக இருந்து இறந்துபோனவர்களிடம் சென்று தமது தேவைகளுக்காகப் பரிந்துரை தேடுமாறுஎந்த இறைக்கட்டளையும் நபிக்கட்டளையும் இல்லாதபோது அவ்வாறு செய்வது அறியாமையன்றி வேறென்ன?

தர்ஹா உள்ளதால் இவன் அங்கு சென்று, அங்கு துயில்கொள்கிற இறைநேசரிடம் தனக்காக அல்லாஹ்விடம் பரிந்துரை செய்யுமாறு கேட்டு, அவரும் அல்லாஹ்விடம் அவனுக்காகப் பரிந்துரை செய்து, அதன் காரணமாக அவனது தேவையை அல்லது வேண்டுகோளை அல்லாஹ் நிறைவேற்றிவிட்டான் என்றால், தனது ஊரிலோ, நாட்டிலோ தர்ஹா இல்லாதவன் என்ன செய்வான்? அவன் எப்படித் தனது தேவையை நிறைவேற்றிக்கொள்வான்.  யாரிடம் சென்று பரிந்துரை செய்யுமாறு வேண்டுகோள் விடுப்பான்? ஆக, உலகின் எல்லா இடங்களிலும்  வாழுகின்ற மானிடர்க்கு அவரவரின் தேவையை அறிந்து நிறைவேற்றுபவன் அல்லாஹ்வைத் தவிர யாருமுண்டோ?

அத்தோடு ஆண்டுக்கொரு முறை உரூஸ்என்ற பெயரில் ஒரு கோலாகலமான கண்கவர் விழா நடத்தப்படுகிறது.  இஸ்லாமிய மார்க்கத்திற்கெதிரான எல்லாச் செயல்களும் அரங்கேற்றப்படுகின்றன. ஆடல், பாடல், மேளம், வானவேடிக்கை உள்ளிட்ட எல்லாம் உண்டு. ஆணும் பெண்ணும் ஒருவடோருவர் கலந்து, கலைந்து செல்லும் விழாக்கோலம் அறியாமையின் உச்சம்தானே?

ஆந்திர மாநிலத்தில் ஓர் ஊரில் இறைநேசர் என்ற போர்வையில் ஒருவர் உள்ளார். மக்களை முட்டாளாக்கித் தமது பேச்சுக்கு இணங்க வைத்து, ஐம்பதாயிரம் செலுத்தித் தம்மிடம் சொர்க்கத்திற்கான நுழைவுச்சீட்டைப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிப்புச் செய்தார். அவர்மீது கொண்டுள்ள கண்மூடித்தனமான நம்பிக்கையால் சுற்றியுள்ள ஊர்மக்கள் மிகுந்த நம்பிக்கையோடு சொர்க்கத்திற்கான நுழைவுச்சீட்டைவாங்கிச் செல்கின்றார்கள். இது தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட செய்தி. அதை வாங்கிச் சென்றவர் இறந்துவிடும்போது, அவருடைய பிரேதத்தோடு (ஜனாஸா) அந்த நுழைவுச் சீட்டையும் சேர்த்துவைத்துப் புதைத்துவிட வேண்டும்.  அதைப் பார்க்கும் மலக்கு-வானவர் அவரைச் சொர்க்கத்தில் நுழைய அனுமதித்துவிடுவார் என்று போதித்து வருகிறார். பகுத்தறிவை இழந்த மக்கள் அதையும் பணம் செலுத்தி வாங்கிச் செல்கின்றனர். இது அவர்களுடைய அறியாமையின் உச்சம் அல்லவா?

சிறப்பிற்குரிய முஹர்ரம் மாதத்தின் முதல் பத்து நாள்களில் மக்கள் மத்தியில் பரவியுள்ள மூடநம்பிக்கைகளும் அறியாமையும் வேறுவிதமானவை. பஞ்சா தூக்குதல், தீ மிதித்தல் உள்ளிட்ட மூடப்பழக்கங்களைக் கடைப்பிடிக்கின்றார்கள். ஷீஆ பிரிவினர் தம்மைத்தாமே வருத்திக்கொள்ளும்பொருட்டு தம் உடலைக் கத்தியால் குத்திக் காயப்படுத்திக்கொள்கின்றார்கள். தம் முன்னோர் ஹுஸைன் (ரளி) அவர்களுக்குக் கர்பலா களத்தில் செய்த நம்பிக்கைத் துரோகத்திற்குப் பாவமன்னிப்பாக அதைக் கருதுகின்றார்கள். மற்றொரு விதத்தில், ஹுஸைன்  (ரளி) அவர்கள்மீது கொண்டுள்ள அன்பின்மிகுதியால் அவர்கள் பட்ட துன்பத்தைப்போன்று தாமும் அனுபவித்து துக்கம் மேற்கொள்கின்றார்கள். இவையெல்லாம் அறியாமையின் ஆட்டம் இல்லையா?

ஸஃபர் ஒரு பீடை மாதம் என முஸ்லிம்கள் சிலர் கருதி வருகின்றார்கள். ஏனென்றால் நபி (ஸல்) அவர்கள் அம்மாதத்தில்தான் நோய்வாய்ப்பட்டார்கள். அதன்பின் அந்நோயின் காரணமாகவே அவர்கள் மரணத்தைத் தழுவினார்கள். எனவே அம்மாதம் பீடை என்ற மூடப்பழக்கத்தைக் கடைப்பிடிக்கின்றார்கள். அம்மாதத்தில் திருமணம் உள்ளிட்ட மங்கலமான நிகழ்வுகளை நடத்த மாட்டார்கள். இது ஒரு வகை அறியாமைதானே?

ரஜப் மாதத்தில் முஸ்லிம்கள் சிலர் சில சடங்குகளைப் பின்பற்றுகின்றார்கள். இமாம் ஜஅஃபர் ஸாதிக் (ரளி) அவர்களின் நினைவாக கீர்-பூரி ஃபாத்திஹா ஓதப்படுகிறது. ஃபாத்திஹா மட்டும் ஓதினாலும் பரவாயில்லை. ஆனால் விறகு வெட்டியின் கதைபடிக்கப்படுவதுதான் அதில் முக்கியமானது. மண் சட்டிகளுக்குச் சந்தனம் தடவி அதில் கீர் எனும் இனிப்புப் பானத்தை ஊற்றி வைத்து, பயபக்தியோடும் புனிதமாகவும் மேற்கொள்ளப்படுகிறது. வீட்டிற்கு வந்துதான் அதை உண்ண வேண்டும். வெளியில் யாருக்கும் அதைக் கொடுத்தனுப்பக்கூடாது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளும் அதில் உண்டு. இதுவும் ஒரு வகை அறியாமைதானே?

நல்ல நேரம், கெட்ட நேரம் பார்த்துச் செயலைத் தொடங்குதல், கைரேகை பார்த்து எதிர்காலத்தைக் கணித்தல், பிறந்த நேரத்தையும் நட்சத்திரத்தையும் குறித்து வைத்துக்கொண்டு திருமணப் பொருத்தம் பார்த்தல் உள்ளிட்ட ஏராளமான மூடப்பழக்கங்களும் அறியாமைகளும் முஸ்லிம்களிடமும் மண்டிக் கிடக்கின்றன. ஏக இறைவனை ஏற்றுக்கொண்டுள்ள இஸ்லாமியச் சமுதாயத்தில் சடங்கு சம்பிரதாயங்களும் மூடநம்பிக்கைகளும் கோலோச்சி நிற்பது அவர்களின் அறியாமையைப் படம்பிடித்துக் காட்டுகிறது. அவர்கள் திருக்குர்ஆனையும் நபிமொழிகளையும் தொட்டுக்கூடப் பார்க்கவில்லை என்று தெரிகிறது.

பிற மதச் சகோதரர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ வேண்டிய முஸ்லிம் சமுதாயத்தினர், அவர்களே முஸ்லிம்களைக் கேலி செய்யும் விதத்திலான மூடநம்பிக்கைகளைப் பின்பற்றிச் செல்வது எவ்வளவு பெரிய அறியாமை! நம்முடைய நடைமுறைகளையும் பழக்க வழக்கங்களையும் இறைவழிபாட்டு முறையையும் பார்த்து, மூடப்பழக்கங்களையும் தவறான கடவுள் கொள்கைகளையும் பின்பற்றி வாழ்வோர் ஈர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நிலைமை தலைகீழாக உள்ளது. பிற சமுதாய மக்களை மிஞ்சும் அளவிற்கு நம் சமுதாய மக்களிடம் மூடப்பழக்கங்களும் அறியாமைகளும் மேலோங்கி இருப்பதால் பிற சமுதாய மக்கள் நம்மால் ஈர்க்கப்படவில்லை.

ஏகத்துவச் சிந்தனையை முறியடிக்கும்விதமாக ஷைத்தானின் சூழ்ச்சி வலையில் சிக்குண்டு கிடக்கின்ற முஸ்லிம்களை மீட்பதும் அவர்களைச் சொர்க்கப் பாதையை நோக்கி அழைத்துச் செல்வதும் மார்க்க அறிஞர்களின்  தலையாய கடமையாகும். ஆனால் அது குறித்து வருத்தப்படாத அறிஞர்கள் சிலர் முஸ்லிம்களின் அறியாமைச் செயல்களுக்குச் சில வியாக்கியானங்களையும் விளக்கங்களையும் கூறி, அவற்றைச் சரியென வாதிக்கின்றனர். ஆதலால் அறியாமை எல்லா இடங்களிலும் ஆட்டம் போட்டுக்கொண்டே இருக்கிறது.
=======================================    








கருத்துகள் இல்லை: