புதன், 6 செப்டம்பர், 2017

ஈந்து மகிழ்வதால் ‘ஈகைத் திருநாள்’


உலகில் வாழுகின்ற ஒவ்வொரு சமயத்தாருக்கும் ஒவ்வொரு பண்டிகை உண்டு. அந்நாளில் அவர்கள் உற்சாகத் துள்ளலோடு மகிழ்ச்சி பொங்க அதைக் கொண்டாடுவர்; ஆடிப்பாடி மகிழ்வர்; இன்னபிற மகிழ்ச்சிக்குரிய செயல்பாடுகளை மேற்கொள்வர். ஆனால் முஸ்லிம்கள் கொண்டாடுகின்ற பண்டிகை சற்றே வித்தியாசமானது. ஒவ்வோர் ஆண்டும் ரமளான் மாதம் முழுவதும் இறைவனுக்காக நோன்பு நோற்று அது செவ்வனே முடிந்ததும் அதற்கு நன்றி செலுத்தும் முகமாக மறுநாள் காலை ஏழை, எளியோருக்கு ஈகை குணத்தோடு ஒரு குறிப்பிட்ட பணஉதவியைச் செய்து அவர்களும் அந்நன்னாளில் மகிழ்ச்சியோடு இருப்பதற்காக வழிவகையைச் செய்துவிட்டுத்தான் பள்ளிவாசலுக்குத் தொழுகச் செல்வார்கள். அங்கு தம்மைப் படைத்த இறைவனை வழிபட்டு, அவனிடம் பிரார்த்தனை செய்வார்கள். அதன் பின்னர் பகல் வேளையில் பிரியாணி உள்ளிட்ட சிறப்பான உணவுகளைத் தயாரித்துத் தம்மைச் சுற்றியுள்ளோர் அல்லது தமக்குப் பழக்கமானோருக்கு வழங்கி, தாமும் உண்பார்கள். இதுதான் அவர்களின் பெருநாள் பண்டிகை.

மேலும் தற்போது செப்டம்பர் மாதம் 2ஆம் நாள் கொண்டாட இருக்கின்ற பெருநாளும் அவ்வாறுதான். அன்றைய நாள் காலையில் குறிப்பிட்ட நேரத்தில் முஸ்லிம்கள் அனைவரும் பள்ளிவாசலில்  ஒன்றுகூடி ஏக இறைவனான அல்லாஹ்வைத் தொழுதுவிட்டு, அவர்களுள் வசதியுடையவர்கள் தம்மால் இயன்ற வசதிக்கேற்ப ஆட்டையோ மாட்டையோ அறுத்து இறைவனுக்காகப் பலியிடுகின்றார்கள். அதன் இறைச்சியை மூன்று பங்காகப் பிரித்து, தமக்கொரு பங்கை வைத்துக்கொண்டு ஒரு பங்கை தம் உறவினர்களுக்கும் மற்றொரு பங்கை ஏழைகளுக்கும் வழங்குகின்றார்கள். ஏழைகளுக்கு வழங்கும்போது அவர்கள் சாதி, மதம் பார்ப்பதில்லை. மனிதர்கள் அனைவரையும் சமமாக மதிக்கின்றார்கள். சிலர் பிரியாணியாகவே தயாரித்து அண்டைவீட்டாருக்கும் நண்பர்களுக்கும் பரிமாறுவது வழக்கம்.  

அவர்கள் தம் பண்டிகைகளில் வெடிபொருள்களை வெடிப்பதோ பிறருக்குத் துன்பம் தரும் விதத்தில் செயல்படுவதோ அவர்களின் மார்க்கத்தில் தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும்  அவர்கள் தம் பொருளையும் பணத்தையும் வீணாகச் செலவழிப்பதும் விரையம் செய்வதும் அறவே கூடாது. அவற்றையெல்லாம் அவர்கள் அப்படியே ஏற்று நடக்கின்றார்கள்.

அனைவருக்கும் ஈந்து மகிழ்வதால் ‘ஈகைத் திருநாள்’ என்றும் பலிப்பிராணிகளை அறுத்துப் பலியிடுவதால் ‘தியாகத் திருநாள்’ என்றும் அவர்களின் பண்டிகைகள்  அழைக்கப்படுகின்றன. முஸ்லிம்களோடு நெருங்கிய தொடர்புகொண்டவர்கள் அவர்களின் தயாளத்தையும், ஈகைக் குணத்தையும் நன்கு அறிவார்கள். ஓடோடி உதவி செய்யும் மனப்பான்மையையும் நேரடியாகக் கண்டிருப்பார்கள்.

எனவே ஊடகங்களின் தவறான பிம்பத்தால் ‘தீவிரவாதிகள்’ என்று சித்திரிக்கப்பட்டுள்ள அவர்களைக் கண்டு ஒதுங்காமல் அவர்களோடு இணக்கமாக வாழ்ந்து, ‘அனைவரும் தமிழர்கள்’ என்ற எண்ணத்தில் நிலைத்து, வளமாக வாழ வழிகாணுவோம் என்று இந்த நன்னாளில் உறுதி ஏற்போமாக‏.



கருத்துகள் இல்லை: