வியாழன், 7 செப்டம்பர், 2017

நடைப்பயிற்சி மேற்கொள்வோம்!

   -முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

உயர்ந்தோன் அல்லாஹ் வழங்கியுள்ள உடலுறுப்புகளைப் பயன்படுத்தி அதனதன் வேலைகளைச் செவ்வனே செய்யாமல் அவற்றைச் சோம்பேறியாக்குகின்றோம். பற்களால் உணவை நன்றாக மென்று உண்பதில்லை; நாவால் உணவைச் சுவைத்து விழுங்குவதில்லை; காதால் நல்ல அறிவுரைகளைக் கேட்பதில்லை; கண்களால் நல்லவற்றைப் பார்ப்பதில்லை; கைகளால் முறையாக உழைப்பதில்லை; கால்களால் நடந்துசெல்ல வேண்டிய இடங்களுக்கு நடப்பதில்லை.

இவ்வாறு நம் உடலுறுப்புகளை அதனதன் பணியில் ஈடுபடுத்தாமல் அவற்றைச் சோம்பேறியாக்குகின்றோம். அதன்மூலம் நாம் சோம்பேறி ஆகின்றோம். அந்த அடிப்படையில்தான் அல்லாஹ் நமக்கு வழங்கிய காலை நாம் நடப்பதற்குப் பயன்படுத்தாமல் வாகனங்களில் செல்வதையே வழக்கமாகக் கொண்டுள்ளோம். அதற்குப் பிராயச்சித்தமாக அதிகாலை எழுந்து, அருகிலுள்ள மைதானத்திற்குச் சென்று, அதைப் பத்துத் தடவை சுற்றி வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் இன்றைய நவநாகரிக மனிதர்கள்.

நடக்க வேண்டியதற்கு நடக்காமல் வாகனங்களில் மட்டுமே பயணம் செய்துகொண்டிருப்பதால் நடையையே ஒரு பயிற்சியாக மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. அன்றாடம் நாம் இயல்பாக நடந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு நடந்தே செல்ல வேண்டும். இப்பழக்கத்தை நாம் மேற்கொண்டால் நம் உடலிலுள்ள கொழுப்பு முறையாக எரிக்கப்பட்டு, நமக்குத் தேவையான ஆற்றலாக மாறும்.

குளிரூட்டப்பட்ட அறையில் நீண்ட நேரம் இருத்தல், குறைந்தபட்ச அளவிற்குக்கூட நடக்காமல் இருத்தல், ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருத்தல் உள்ளிட்ட காரணங்களால் வியர்வைமூலம் வெளியேற வேண்டிய கழிவுகள் வெளியேறாமல் உடலினுள் தங்கிவிடுகின்றன. கொழுப்பு எரிக்கப்பட்டு, ஆற்றலாக மாற வழியில்லாமல் உடலினுள் தங்கி, கெட்ட கொழுப்பாக மாறிவிடுகின்றது. நாளடைவில் பல்வேறு நோய்கள் ஏற்பட அதுவே காரணமாக அமைகிறது.

இஸ்லாமிய மார்க்கத்தில் நடைக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. தொழுகைக்காகப் பள்ளிவாசலை நோக்கி நடந்து வருவது நன்மைக்குரிய செயல் என்று வலியுறுத்தி, நடப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஒரு மனிதர் அங்கத்தூய்மை (உளூ) செய்து, அதைச் செம்மையாகச் செய்து தொழுகையைத் தவிர வேறு நோக்கத்துடன் வெளியேறாமல் தொழுகைக்குப் புறப்பட்டு வந்தால் அவர் எடுத்து வைக்கும் ஒவ்வோர் எட்டுக்காகவும் அவருக்கு ஒரு தகுதியை அல்லாஹ் உயர்த்துகிறான். அவருடைய தவறுகளில் ஒன்றை அவரிடமிருந்து மன்னித்துவிடுகின்றான்என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: திர்மிதீ: 548)

தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டால் தொழுகைக்கு நீங்கள் ஓடிச் செல்லாதீர்கள். நடந்தே செல்லுங்கள்...என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: திர்மிதீ: 301)

தொழுகைக்காகப் பள்ளிவாசலுக்கு நடந்து வருவதும் தொழுகையில் நின்று வணங்குவதும் கால்களுக்கான உடற்பயிற்சியாகும். மக்கள் அனைவரும் பள்ளிவாசலில் ஒன்றிணைந்து கூட்டாகத் தொழுவதன்மூலம் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக்கொள்வதுடன் கால்களுக்கான பயிற்சியையும் மேற்கொள்வதாகவே அமைகிறது கூட்டுத்தொழுகை. ஆகவே கூட்டுத்தொழுகையில் கலந்துகொள்வதன்மூலம் இறைவனை வணங்குவதோடு கால்களுக்கான பயிற்சியும் கிடைத்துவிடுகின்றது.

சிறு பிராயத்திலேயே நடைப்பயிற்சியை நாம் பிள்ளைகளுக்குப் பயிற்றுவிக்க வேண்டும். பள்ளிக்கூடம், பள்ளிவாசல், மருத்துவமனை, கடைவீதி, சந்தை உள்ளிட்ட இடங்களுக்கு நடக்க வைத்து அழைத்துச் செல்ல  வேண்டும். இவ்வாறு வளரும் பருவத்திலேயே அவர்களுக்கு நடைப்பயிற்சியைக் கொடுத்துவிட்டால் அருகருகே உள்ள இடங்களுக்கு அவர்கள் நடந்துசெல்லப் பழகிக்கொள்வார்கள். பின்னர் நடப்பது அவர்களுக்குச் சிரமமாக இருக்காது. அத்தோடு பள்ளிவாசலுக்கு நடந்து செல்வதால் ஒவ்வோர் எட்டுக்கும் ஒரு நன்மை வழங்கப்பட்டு, ஒரு பாவம் மன்னிக்கப்படுகிறது என்ற தகவலையும் அவர்களுக்குச் சொல்லிக்கொடுக்க வேண்டும். இதனால் அவர்கள் பள்ளிவாசலுக்கு ஆர்வத்துடன் நடந்து செல்லத்  தொடங்கிவிடுவார்கள். அதன் காரணமாக அவர்களின் ஆரோக்கியம் காக்கப்படுவதோடு தொழுகையைப் பேணக்கூடியவர்களாகவும் மாறிவிடுவார்கள்.

மக்கா நகரில் அமைந்துள்ள கஅபாவை நோக்கி உலகின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் மக்கள் ஹஜ்ஜுக்காகச் சென்று கொண்டிருக்கின்றார்கள். ஹஜ்ஜும் உம்ராவும் செய்யப் பொருளாதார வசதி இருப்பதோடு உடலில் சக்தியும் ஆற்றலும் இருக்க வேண்டும். அப்போதுதான் அவ்விரண்டு வணக்கங்களையும் செவ்வனே செய்ய முடியும். ஹஜ் ஓர் இறுதிக் கடமையே தவிர இறுதிக் காலத்தில் செய்ய வேண்டிய கடமை இல்லை. எனவே ஆரோக்கியமாக இருக்கின்றபோதே ஹஜ்ஜுக்குச் சென்று வந்துவிட வேண்டும். ஹஜ், உம்ரா ஆகிய இரண்டு வழிபாடுகளிலும் நடத்தல் முக்கியப் பங்கு வகிக்கிறது. இன்றைய காலத்தில் அதுதான் மிகப் பெரிய பிரச்சனையே. இயல்பாகவே நம்முள் பலர் நடந்து பழக்கமில்லாததால் சின்னச் சின்னத் தூரங்களைக்கூடக் கால்நடையாகக் கடக்கமுடிவதில்லை. வெகுதூரம் என்றால் அறவே முடிவதில்லை. ஹஜ்ஜுக்குச் சென்று திரும்புகின்ற பலர் இதனால் பாதிக்கப்படுகின்றார்கள்; சிரமப்படுகின்றார்கள். ஆகவே இளவயதிலேயே ஹஜ் செய்வதோடு, நடைப்பயிற்சியை மேற்கொள்வது ஹஜ், உம்ரா போன்ற வழிபாடுகளை எளிமையாகவும் சோர்வில்லாமலும் செய்ய உதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

பொதுவாக நடைப்பயிற்சி இல்லாததால் வெளியே செல்வதற்கே இயலாமல் போய்விடுகிறது. அரை கிலோமீட்டர் தூரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு அடிக்கடி செல்ல மனம் நாடுவதில்லை. அவ்வளவு தூரம் நடக்க வேண்டுமா? என்ற கேள்வி நம்முள் பலருக்கு முன்னால் வந்து நிற்கிறது. ஓர் ஆட்டோ பிடித்துச் செல்ல வேண்டுமென்றால் அதற்கொரு செலவு செய்ய வேண்டுமே, பிறகு போய்க்கொள்ளலாம் என்று மனம் ஒத்திப்போட்டு விடுகிறது. இதனால் பக்கத்துத் தெருவிலுள்ள அல்லது இரண்டு தெருக்களுக்கு அப்பாலுள்ள உறவினர் வீட்டிற்குச் செல்ல முடிவதில்லை. இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் நடக்க இயலாமைதான். எனவே நடைப்பயிற்சி மிகவும் இன்றியமையாதது என்பதை விளங்கிக்கொள்ளலாம்.

அதேநேரத்தில் இன்று பலர் மூட்டுவலியால் பாதிக்கப்பட்டுள்ளனர். கால்களை முறையாகப் பராமரிக்காததால்தான் பலர் மூட்டுவலியால் பாதிக்கப்படுகின்றனர். வேறு சிலர் ஆணிக்கால், வெரிகோஸ் எனும் நரம்பு முடிச்சு நோய் உள்ளிட்ட நோய்களுக்கு ஆட்பட்டுள்ளனர். ஒரே இடத்தில் நீண்ட நேரம் நின்றுகொண்டே இருப்பதால் நரம்புகளில் முடிச்சுகள் ஏற்பட்டுவிடுகின்றன. அதன்பின் இரத்த ஓட்டம் சீராக அமையாது. அதனால் அது ஒரு நோயாக மாறிவிடுகின்றது. எனவே நடப்பது எவ்வளவு முக்கியம் என்பதை இதன்மூலமும் தெரிந்துகொள்ளலாம்.

எனவே உயர்ந்தோன் அல்லாஹ் வழங்கியுள்ள உடலுறுப்புகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள அவ்வுறுப்புகளை அந்தந்த பணிக்கு முறையாகப் பயன்படுத்த வேண்டும். ஆகவே நாம் அனைவரும் நடைப்பயிற்சியை மேற்கொண்டு நம் கால்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முயல்வோமாக.     

======================================
கருத்துகள் இல்லை: