- முனைவர் மௌலவி நூ.
அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.
ஏழைகள்-செல்வர்கள் ஆகிய இருவகையாக மனிதர்களை உயர்ந்தோன் அல்லாஹ்
தோற்றுவித்துள்ளான். செல்வர்கள் தன்னிறைவு பெற்றவர்கள். அல்லாஹ்வின் அருட்கொடைகளை
முழுமையாக அனுபவிப்பவர்கள். ஏழைகளோ இறைவனிடம் கையேந்துபவர்கள். அவர்களுள் சிலர் தம் பசியைப் போக்க மனிதர்களிடம்
கையேந்துகின்றார்கள். மனிதர்களாகிய நம்மிடம் ஏழைகள் கையேந்தும்போது நம்மால் இயன்றதை
ஈய வேண்டும். முரணாக, அவர்களை வெறுப்பதோ விரட்டுவதோ, சுடுசொல் உதிர்ப்பதோ கூடாது. வாங்கும் நிலையில்
அவர்களை வைத்து, கொடுக்கும் நிலையில் நம்மை உயர்த்திய தூயோன் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துமுகமாக
அவர்களுக்கு வழங்குவதே நமக்குச் சிறப்பு.
"தொல்லுலகில் நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும்
பெய்யும் மழை'' எனும் மூதுரைப் பாடலுக்கிணங்க ஏழைகளாகிய பலவீனர்களின் சார்பாகத்தான் நாம் இவ்வுலகில்
மகிழ்ச்சியோடும் நிம்மதியோடும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ள
வேண்டும். அது குறித்து உணர்த்தும் நபிமொழிகளைக் காணீர்!
நபி (ஸல்) அவர்கள், "(உங்களிடையேயுள்ள) பலவீனர்களின் (சாமானிய மக்களின்)
பொருட்டால்தான் -அவர்களின் பிரார்த்தனை, தொழுகை, மனத்தூய்மை ஆகியவற்றால்தான்- இந்தச் சமுதாயத்திற்கு
அல்லாஹ் உதவிசெய்கிறான்'' என்று கூறினார்கள். (நூல்: நஸாயீ: 3127)
"உங்களில் நலிந்த மக்களிடையே என்னைத் தேடுங்கள். ஏனென்றால்
உங்களில் நலிந்தவர்களால்தான் நீங்கள் வாழ்வாதாரம் வழங்கப்பெறுகின்றீர்கள்; (பகைவர்களுக்கெதிராக) உதவியும்
வழங்கப் பெறுகின்றீர்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுற்றேன் என அபுத்தர்தா (ரளி) அவர்கள்
அறிவிக்கின்றார்கள். (நூல்: திர்மிதீ: 1624)
நாம் கொடுப்பதால்தான் ஏழைகள் வாழ்கின்றார்கள் என்று நினைப்பதைவிட, அவர்கள்மூலம்தான் அல்லாஹ்
நமக்கு வாழ்வளிக்கிறான் என்பதை மீண்டும் மீண்டும் எண்ணிப்பார்க்கத் தவறக்கூடாது. இருக்கும்
செல்வமனைத்தும் நமக்கே சொந்தம் என்று கருதினால் அது மடமைத்தனம். நம்மூலம் ஏழைகள் பயன்பெறவே
அல்லாஹ் நம்மிடம் மிதமிஞ்சிய செல்வத்தை வழங்கியுள்ளான் என்று எண்ணி, நம் செல்வத்திலிருந்து
ஏழைகளுக்கு ஈந்தால் உயர்ந்தோன் அல்லாஹ் மேன்மேலும் நமக்கு அபிவிருத்தி செய்வான்.
பள்ளிவாசல்களின் முற்றங்களில் நின்றுகொண்டு, திருமணத்திற்காகவோ, தீராத நோய்க்கான சிகிச்சைக்காகவோ
இன்னபிற தேவைகளைக் கூறியோ தர்மம் கேட்டால், நாம் நம்மால் இயன்றதை மனதார ஈந்துவிட்டுச் செல்ல
வேண்டுமே தவிர, இது உண்மையாக இருக்குமா, பொய் சொல்லித் தர்மம் கேட்கின்றாரா என்ற ஆராய்ச்சி நமக்குத் தேவையில்லை. அல்லாஹ்
நம் எண்ணத்தைத்தான் பார்க்கிறான். அதற்கேற்ற நற்கூலியைத் தயாளன் அல்லாஹ் நமக்குப் பரிபூரணமாக
வழங்கியே தீருவான். வாங்கியவர் ஏமாற்றுக்காரரா, மோசடிக்காரரா என்பதெல்லாம் நமக்குத் தேவையில்லை. அதனை உணர்த்தும் நபிமொழியைப் பாரீர்!
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “(முன்னொரு காலத்தில்) ஒருவர் நான் தர்மம் செய்யப் போகிறேன் எனக் கூறிக் கொண்டு
(இரவில்) தர்மத்துடன் வெளியே வந்து (தெரியாமல்), ஒரு திருடனிடம் கொடுத்துவிட்டார். காலையில்
மக்கள், "இன்றிரவு ஒரு திருடனுக்குத் தர்மம் வழங்கப்பட்டுள்ளது'' எனப் பேசிக்கொண்டனர்.
(இதைக் கேட்ட) அவர் "அல்லாஹ்வே! உனக்கே எல்லாப் புகழும் (நாளை) நான் தர்மம் செய்வேன்'' என்று கூறினார். மறுநாள் அவர் தர்மத்துடன் (இரவில்) வெளிவந்து அதை ஒரு விபச்சாரியிடம்
கொடுத்துவிட்டார். மறுநாள் காலை மக்கள், "இன்றிரவு ஒரு விபச்சாரிக்குத் தர்மம் கொடுக்கப்பட்டுள்ளது'' எனப் பேசிக் கொண்டார்கள்.
(இதைக் கேட்ட) அவர் "அல்லாஹ்வே! விபச்சாரிக்குத் தர்மம் செய்ததற்காக உனக்கே எல்லாப்
புகழும்! (நாளையும்) நான் தர்மம் செய்வேன்!'' எனக்
கூறினார்.
(மூன்றாம் நாள்) அவர் தர்மத்துடன் வெளிவந்து ஒரு பணக்காரரின்
கையில் கொடுத்துவிட்டார். காலையில் மக்கள், "ஒரு பணக்காரருக்குத் தர்மம் கொடுக்கப்பட்டுள்ளது'' எனப் பேசிக்கொண்டனர்.
உடனே அவர் "அல்லாஹ்வே! திருடனிடமும் விபச்சாரியிடமும் பணக்காரரிடமும் தர்மம் கொடுத்ததற்காக
உனக்கே எல்லாப் புகழும்'' எனக் கூறினார். அப்போது ஒரு(வான)வர் அவரிடம் வந்து, "நீர்
திருடனுக்குக் கொடுத்த தர்மம் அவன் திருடுவதைவிட்டுத் திருந்தக் காரணமாகலாம். விபச்சாரிக்கு
நீ கொடுத்த தர்மம் அவள் விபச்சாரத்திலிருந்து விடுபடக் காரணமாகக் கூடும். பணக்காரனுக்குக்
கொடுக்கப்பட்ட தர்மத்தினால் அவன் படிப்பினை பெற்று அதனால் அவன் தனக்கு அல்லாஹ் வழங்கியதிலிருந்து
தர்மம் செய்யக்கூடும்'' எனக் கூறினார். (நூல்: புகாரீ: 1421) இதை அபூஹுரைரா (ரளி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
அல்லாஹ்,
கொடுப்பவரின் உள்ளத்தைத்தான் பார்க்கிறான். வாங்குபவர் எப்படி
வேண்டுமானாலும் இருக்கலாம். அது குறித்து நாம் கவலைப்படத் தேவையில்லை என்பதை மேற்கண்ட
நபிமொழிமூலம் அறிகின்றோம். வாழும் காலத்தில் ஏழைகளுக்கு வழங்கும் வாய்ப்புக் கிடைக்கப்பெற்றால்
அதை அல்லாஹ்வின் அருட்கொடையாகக் கருதிக்கொள்ள வேண்டும். ஏனெனில் எத்தனையோ பேருக்கு
அத்தகைய வாய்ப்பே கிட்டாமல் உள்ளது. மரணத்திற்கு முன்னர் நம் செல்வத்தை ஏழைகளுக்கு
ஈந்து நம்முடைய வினைச்சுவடியில் நன்மைகளைப் பதிவு செய்துகொள்ள வேண்டும். மரணம் நெருங்கிவிட்டால்
நாம் நினைத்தவாறு தர்மம் செய்ய இயலாது. மரணித்த பின்னரோ அறவே செய்ய இயலாது. தர்மம்
செய்ய வாய்ப்புக் கிடைத்தும் அதைப் பயன்படுத்திக்கொள்ளவில்லையானால் இழப்பு நமக்குத்தானே? அதை முன்னரே உணர்த்துமுகமாக
அல்லாஹ் கூறியுள்ள வசனத்தைக் காணுங்கள்:
உங்களுக்கு மரணம் வருவதற்கு முன்பாகவே, நாம் உங்களுக்குக் கொடுத்தவற்றிலிருந்து
தானம் செய்யுங்கள். (அவ்வாறு செய்யாதவன் மரணிக்கும் சமயத்தில்,) "என்
இறைவா! ஒரு சொற்பக் காலத்திற்கு என்னை விட்டுவைக்க வேண்டாமா? (அவ்வாறு விட்டால்,) நான் தானமும் செய்வேன்; (நன்மைகளைச் செய்து) நல்லோர்களிலும் ஆகிவிடுவேனே'' என்று கூறுவான். (எனினும்) யாதொரு ஆத்மாவுடைய (மரணத்தின்) தவணை
வந்துவிடும் பட்சத்தில் அதனை அல்லாஹ் பிற்படுத்தவே மாட்டான். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ்
நன்கறிந்தே இருக்கின்றான். (63: 10-11)
மரணப்படுக்கையில் இருந்துகொண்டு, தானம் செய்வதற்குத் தருணம்
கேட்டால் எப்படிக் கிடைக்கும்?
எனவே மரணத்திற்கு முன்பே அறிவாளித்தனமாகத் தானம் வழங்கி நம்
வினைச்சுவடியில் நன்மைகளைப் பதிவு செய்துகொள்வோம்.
இன்னும் சொல்லப்போனால், ஏழைகள் வாழும் நாட்டில், ஊரில், பகுதியில் நாம் வாழ்வதே
அல்லாஹ் நமக்கு வழங்கிய ஓர் அருட்கொடைதான். ஏனென்றால் நாம் எஞ்சிய செல்வத்தை ஏழைகளுக்கு
ஈந்து நன்மையை ஈட்டிக்கொள்ளலாம் அல்லவா? அதேநேரத்தில் நாம் ஒரு பணக்கார நாட்டில், ஊரில், பகுதியில் வாழ்ந்தால், நம்முடைய எஞ்சிய செல்வத்தைத்
தானமாக வழங்க முன்வந்தாலும் அதைப் பெறுவார் இருக்கமாட்டார். பிறகெப்படி நாம் நன்மையை
ஈட்டிக்கொள்ள முடியும்? அது நமக்கு ஒரு பேரிழப்புதானே? எனவேதான் அண்ணல் நபி
(ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்: தர்மம் செய்யுங்கள்! ஏனெனில் உங்களிடையே ஒரு காலம்
வரும். அக்காலத்தில் ஒருவன் தனது தர்மப் பொருளை எடுத்துக்கொண்டு அலைவான். அப்போது
ஒருவன், நேற்றே
இதை நீ கொண்டு வந்திருந்தாலாவது நான் வாங்கியிருப்பேன்; இன்றோ அது எனக்குத் தேவையில்லையே
என்று கூறுவான். (நூல்: புகாரீ: 1424)
ஆக ஏழைகளை அல்லாஹ் நம்மிடையே வாழ வைத்திருப்பது நாம் நன்மைகளை
ஈட்டிக் கொள்வதற்காகத்தான் என்பதை விரைவாக விளங்கிக்கொண்டு, துரிதமாகத் தர்மம் செய்ய
முனைய வேண்டும். ஏனென்றால் நாம் கொடுக்கும் தர்மத்தை வேண்டாம் என நிராகரிக்கும் காலம் வந்தாலும் வந்துவிடலாம். ஏழைகள் நமக்கு நன்மையைப்
பெற்றுத் தருபவர்கள். ஆதலால் அவர்களை நன்றாகப் பயன்படுத்திக்கொள்வதோடு அவர்களை நாம்
மதிக்கவும் வேண்டும். ஏழைகளுக்கு ஈவதையும் அவர்களோடு வாழ்வதையும் ஒரு நற்பேறாகக் கருத
வேண்டும்.
உங்களுள் யாருக்கேனும் வாழ்க்கைத் துணை இல்லாவிட்டால், அவர்களுக்கு(ம் விதவைகளுக்கும்)
திருமணம் செய்து வையுங்கள். (அவ்வாறே) உங்கள் அடிமையிலுள்ள நல்லோர்கள் ஆணாயினும் பெண்ணாயினும்
சரி (வாழ்க்கைத் துணைவரில்லாத) அவர்களுக்கும் திருமணம் செய்து வையுங்கள். அவர்கள் ஏழைகளாயிருந்தாலும்
அல்லாஹ் தன்னுடைய அருளால் அவர்களுடைய வறுமையை நீக்கிவிடுவான். (கொடை கொடுப்பதில்)
அல்லாஹ் மிக்க விசாலமானவனும் (மனிதர்களின்
நிலையை) நன்கறிந்தவனும் ஆவான். (24: 32)
இவ்வசனத்தின் கட்டளைக்கேற்ப நம்முள் உள்ள செல்வர்கள் ஒவ்வொருவரும்
தம் பிள்ளைகளுக்குத் திருமணம் செய்கின்றபோது யாரேனும் ஓர் ஏழைக் குமருக்குத் திருமணம்
செய்து வைத்தால் எத்தனையோ ஏழைப் பெண்களின் ஏக்கப் பெருமூச்சைத் தணிக்க முடியும். அவர்களின்
திருமணக் கனவை நனவாக்க முடியும். அவர்கள் வாழும் காலமெல்லாம் அந்தச் செல்வருக்காகப்
பிரார்த்தனை செய்வார்கள். திருமண உதவி, கல்வியுதவி, மருத்துவ உதவி உள்ளிட்ட அவசியமான உதவிகளை ஏழைகளுக்குச்
செய்வதன்மூலம் அவர்களின் துஆவைப் பெறுவதோடு உயர்ந்தோன் அல்லாஹ்வின் அன்பையும் உவப்பையும்
பெறலாம். அத்தகைய பொன்னான வாய்ப்பு நமக்குக் கிட்டும்போதெல்லாம் நாம் அதை விருப்பத்தோடு
பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதுதான் நம் செல்வ வளர்ச்சிக்குக் காரணமாக அமையும்.
ஏழைகள் கீழானவர்கள் இல்லை. அவர்கள் அல்லாஹ்வின், அவனுடைய தூதரின் பார்வையில்
மேலானவர்கள். அவர்கள் தம் ஏழ்மையின் காரணமாகச் சொர்க்கத்தில் நிறைந்து இருப்பவர்கள்.
அதை மெய்ப்பிக்கும் வண்ணம் நபி (ஸல்) அவர்கள் கூறிய தெள்ளுரையைக் காணுங்கள்: நான்
(மிஅராஜ்-விண்ணுலகப் பயணத்தின்போது) சொர்க்கத்தை எட்டிப் பார்த்தேன். அங்கு குடியிருப்போரில் பெரும்பான்மையினராக ஏழைகளையே கண்டேன். நரகத்தையும் எட்டிப் பார்த்தேன். அதில்
குடியிருப்போரில் பெரும்பான்மையினராகப் பெண்களைக் கண்டேன். (நூல்: புகாரீ: 3241)
அது மட்டுமல்ல, "ஏழைகளைவிடப் பணக்காரர்கள் அரை நாள் (ஐந்நூறு
ஆண்டுகள்) தாமதமாகத்தான் சொர்க்கத்தில் நுழைவார்கள்'' (திர்மிதீ: 2276) என அண்ணல்
நபி (ஸல்) அவர்கள் கூறியதை எண்ணி,
நாம் வெட்கப்படத்தான் வேண்டும். ஏழைகளுக்கு ஈயாமல் சேர்த்துச்
சேர்த்து வைத்த பொருள்களுக்கெல்லாம் கணக்குக் கொடுத்துவிட்டுத்தான் சொர்க்கத்தை
நோக்கிச் செல்ல முடியும். ஆனால் ஏழைகளோ அதற்குள் சொர்க்கத்திற்குள் நுழைந்துவிடுவார்கள்.
இது அவர்களுக்குள்ள உயர் சிறப்புதானே? எனவே நாம் ஏழைகளுக்கு ஈவதில் மகிழ்ச்சியடைவோம்.
அவர்களைக் கண்ணியத்தோடும் மரியாதையோடும் பார்ப்போம்.
================
முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி எம்.ஏ., எம்.ஃபில்., பிஎச்.டி.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் சமுதாயத்தாரிடையே நிலவுகின்ற
நான்கு நடைமுறைகள் அறியாமைக் கால வழக்கங்களாகும். (பெரும்பாலான) மக்கள் அவற்றைக் கைவிடமாட்டார்கள்.
(அவையாவன:) 1. குலப்பெருமை பாராட்டுதல், 2. (அடுத்தவரின்) பாரம்பரியத்தைக் குறைகூறுதல், 3. கிரகங்களால் மழை பொழியும்
என எதிர்பார்த்தல், 4. ஒப்பாரிவைத்து அழுதல். (நூல்: முஸ்லிம்: 1700) இதை அபூமாலிக் கஅப் பின் ஆஸிம்
அல்அஷ்அரீ (ரளி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
அறியாமைக் காலச் செயல்பாடுகளாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
குறிப்பிட்டுக் கூறியுள்ளவை இன்று வரை சமுதாய மக்களிடம் எஞ்சியிருக்கத்தான் செய்கின்றன.
அந்தப் பழக்கத்தால் மக்கள் இன்றும் பாதிப்புக்கு உள்ளாகின்றார்கள் என்பதே உண்மை.
குலப்பெருமை பாராட்டுதல் எனும் போக்கு முஸ்லிம்களிடம் இன்றும்
புரையோடிப்போய்க் கிடக்கிறது. முஸ்லிம்கள் அடர்த்தியாக வாழ்கின்ற குறிப்பிட்ட சில
ஊர்களில், அவர்கள் தமக்குள்ளேயே பெண்கொடுத்தல், பெண் எடுத்தல் உள்ளிட்டவற்றைச் செய்துகொள்கின்றார்கள்.
அடுத்த ஊர்க்காரர்களுக்கு அறவே பெண்கொடுக்க மாட்டார்கள். வெளியூரிலிருந்து வந்து அங்கேயே நீண்ட காலம் குடியிருந்தாலும்
அவர்களுக்குக்கூடப் பெண் கொடுக்க மாட்டார்கள். தாங்கள் மட்டுமே உயர்குலத்தவராகவும்
உயர்குடி மக்களாகவும் கருதிக்கொள்கின்ற அறியாமக்கள் இன்றும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றார்கள்.
நாங்கள் ‘சையது வமிசம்’, நாங்கள் ‘ஷேகு’ வமிசம் என்று கூறிக்கொண்டு குலப்பெருமையடிப்பவர்களும் இருக்கின்றார்கள். இப்படி
எந்த வமிசத்திற்கும் எந்த உயர்மதிப்பும் கிடையாது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே கூறியுள்ளார்கள்.
ஆக, இஸ்லாமிய
மார்க்கத்தைப் பொறுத்த வரை குலப்பெருமை அறவே கூடாது.
அடுத்தவரின் பாரம்பரியத்தைக் குறை கூறுதல் எனும் போக்கு ஆங்காங்கே
காணப்படுகிறது. “நம்முடைய குடும்பத்திற்கென ஒரு பாரம்பரியம் இருக்கு. அதனால நாம் அவங்க குடும்பத்துல
பெண் எடுக்கக் கூடாது” என்று பேசும் பெண்களும் ஆண்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். மேலும் அவரவர்
செய்யும் தொழிலை வைத்து, அவரவர் குடும்பத்தை மதிப்பிடுவதும்
நடைமுறையில் இருக்கத்தான் செய்கிறது. சில விஜயங்களை வெளிப்படையாகச் சொல்லாமல் அந்தரங்கமாகவே
வைத்துக்கொண்டு, பெண் கொடுக்க மறுப்பதற்கான காரணம் உயர்குலம், உயர்குடி என்றும் தாழ்நிலை மனிதர்கள் என்றும்
பாகுபடுத்துவதுதான். இந்தப் பாகுபாடு மறையுமா?
முஸ்லிம்கள் அல்லாதோர் கிரகங்களின் ஓட்டத்தாலும் அவற்றில் ஏற்படுகின்ற
மாற்றத்தாலும்தான் மழைபொழிகிறது என்று கூறுவதைக் காண்கிறோம். அறிவியல் வளர்ச்சியடைந்த
இக்காலத்தில், அறிவியல்அறிஞர்கள் வேறொரு கோணத்தில் ஆய்வுசெய்து, “காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்
ஏற்பட்டிருப்பதால் இன்று மழைபொழியலாம்” என்று கூறுகின்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக அல்லாஹ்
நாடினால்தான் மழைபொழியும் என்பதே ஒரு முஸ்லிமின் இறைநம்பிக்கையாகும். அதற்கப்பால்
மனிதன் எது சொன்னாலும் அதுவெல்லாம் பொய்த்துப்போக நூறு சதவிகித வாய்ப்புண்டு. மழை
பொழியப் போவதைப்போன்ற சூழல் ஏற்பட்டும் எத்தனையோ தடவை மழை பெய்யாமல் போனதை நாம்
பார்த்திருக்கிறோம். அதுபோலவே மழைபெய்யும் எந்த அறிகுறியும் தென்படாமலேயே திடீரென
மழை பொழிந்ததையும் நாம் எத்தனையோ தடவை கண்ணாறக் கண்டு அனுபவித்திருக்கிறோம். ஆக
மழைபொழிதல், பொழியாமல் இருத்தல் எதுவும் அல்லாஹ்வின் விருப்பத்திற்கேற்ப நடைபெறுகின்ற செயலாகும். அதில் மனிதர்கள் தம் குற்றறிவால் கூறுவதெல்லாம்
குலைந்துபோய்விடும்.
பொழிகின்ற மழைநீரில் எவ்வளவு மனிதனுக்குரியது; எவ்வளவு நிலத்திற்குரியது; எவ்வளவு கடலில் கலக்க
வேண்டியது என்ற கணக்கை அல்லாஹ்வே நிர்ணயிக்கின்றான். அதன்படியே செயலாற்றுகின்றான்.
அல்லாஹ்வின் திட்டத்திற்கு எதிராக மனிதனின் எண்ணமும் செயலும் ஒருபோதும் நடந்தேறப்
போவதில்லை என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.
நான்காவது அறியாமைக்காலச் செயலாக ‘ஒப்பாரி வைத்து அழுதல்’ என்பதை நபிகள் நாயகம்
(ஸல்) அவர்கள் குறிப்பிட்டுக் கூறியுள்ளார்கள். பிறந்த ஒவ்வொரு மனிதனும் இறந்தே ஆக
வேண்டும் என்ற நியதியை அல்லாஹ் விதித்துள்ளான். இதை மனித சமுதாயமும் ஏற்றுக்கொண்டுதான்
உள்ளது. ஆனாலும் இறந்தவரின் அருமை பெருமைகளைச் சொல்லிச் சொல்லி ஒப்பாரி வைத்து அழும்
பழக்கம் அறியா மக்களிடம் அண்டிக்கொண்டிருக்கிறது. இறந்தவனை நினைத்து அழுகவும் ஒப்பாரி
வைத்து ஓலமிடவும் பெண்கள் நியமிக்கப்படுகின்றார்கள். அவர்கள் இறந்தவனின் முன்னிலையில்
அமர்ந்துகொண்டு ஒப்பாரி வைத்து ஓலமிட்டு அழுவார்கள். அதாவது அழுவதைப் போன்று நடிப்பார்கள்.
அழுது முடிந்ததும் அதற்கான தொகையும் கொடுக்கப்படும். இந்த அறியாமைச் செயல்பாடு இன்றும்
எத்தனையோ கிராமங்களில் நடைமுறையில் உள்ளது.
ஆனால் முஸ்லிம்கள், இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக்கொண்டுவிட்டதால் அதுபோன்ற
செயல்பாடுகளிலிருந்து தவிர்ந்து வாழ்கின்றார்கள். இருப்பினும் யாரேனும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட
பின்பும் இதுபோன்ற அறியாமைக்காலச் செயலைத் தெரியாமல் செய்துவந்தால், அவள் தன் மரணத்திற்குமுன்பே
அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி அச்செயலிலிருந்து மீள வேண்டும். இல்லையேல் “மறுமை நாளில் தாரால் ஆன
நீளங்கியும் சொறிசிரங்குச் சட்டையும் அணிந்தவளாக அவள் நிறுத்தப்படுவாள்” (நூல்: முஸ்லிம்:
1700) என்று மேற்கண்ட நபிமொழியின் தொடரில் இடம்பெற்றுள்ளது. எனவே மேற்கண்ட அறியாமைக்காலச்
செயல்பாடுகளையும் அவைபோன்ற வேறு மூடப்பழக்கங்களையும் விட்டு ஒதுங்கி அறிவுப்பூர்வமான
மார்க்கத்தைப் பின்பற்றி வாழ்வோமாக!
-இன் ஷாஅல்லாஹ் தொடரும்.
================
==========
-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.
மறதி என்பது மனித இயல்பாகும்.
அதனால்தான், "மக்களுள் முதலாமவர் மறதியில் முதல்வர்'' என்று ஓர் அரபுப் பழமொழி உண்டு. முதல் மனிதர்
ஆதம் (அலை) அவர்கள்தாம் அல்லாஹ்வின் கட்டளையை
மறந்து,
தடை செய்யப்பட்ட மரத்திலிருந்து
உண்டுவிட்டார். அதனால்தான் அவர் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டார் என்பது வரலாறு.
ஆக, மறதி என்பது முதல் மனிதரிடமிருந்தே தொடங்குகிறது
என்பதை அறியும்போது மறதி மனித இயல்புதான் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
மறதி மனித இயல்பாக இருப்பதால்தான்
அவ்வப்போது மனிதன் மறந்துவிடுகின்றான். அதன் காரணமாக அவன் அல்லாஹ்விடம் தண்டனை பெற்றுவிடக்
கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் விரும்பினார்கள். எனவே அது குறித்து அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் கூறியதாவது: "திண்ணமாக அல்லாஹ் என்னுடைய சமுதாய மக்கள் தவறுதலாகச்
செய்துவிடுதல், மறதியாகச்
செய்துவிடுதல், நிர்ப்பந்திக்கப்பட்டுச்
செய்தல் ஆகியவற்றை எனக்காக மன்னித்துவிட்டான்.'' (நூல்: இப்னுமாஜா: 2033)
மேலும் நபி (ஸல்) அவர்கள், "உங்களுள் ஒருவர் உணவுண்டால் பிஸ்மில்லாஹ்
சொல்லட்டும்; தொடக்கத்தில் (பிஸ்மில்லாஹ் சொல்ல) மறந்துவிட்டால், பிஸ்மில்லாஹி ஃபீ அவ்வலிஹி வஆகிரிஹி என்று
சொல்லட்டும்'' (பொருள்: முதலிலும் கடைசியிலும் அல்லாஹ்வின்
பெயரால் உண்கிறேன்) எனக் கூறினார்கள். (நூல்: திர்மிதீ: 1781)
ஒரு துஆவைக் கற்றுத் தருகின்றபோதே, அதைச் சொல்ல மறந்துவிட்டால் இவ்வாறு சொல்லட்டும்
எனச் சொல்லித் தருகின்றார்கள் என்றால் மறதி மனித இயல்பு என்பதை எந்த அளவிற்கு உணர்ந்துள்ளார்கள்
என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.
ஒரு தடவை அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். அது ஓர் அந்தி நேரத் தொழுகை. அது நான்கு ரக்அத்களைக்
கொண்டது. ஆனால் மறதியால் இரண்டு ரக்அத்கள் மட்டும் தொழுது, தொழுகையை முடித்துவிட்டார்கள். அதன்பின்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சாய்ந்து அமர்ந்திருந்தார்கள். அவர்களிடம் அது குறித்துப்
பேச எல்லோருக்கும் தயக்கம். அப்போது துல்யதைன் எனும் நபித்தோழர், "அல்லாஹ்வின் தூதரே! தொழுகை(யின் ரக்அத்கள்)
குறைக்கப்பட்டுவிட்டதா? அல்லது
தாங்கள் மறந்துவிட்டீர்களா?'' என்று
வினவினார். "இவர் சொல்வது உண்மைதானா?'' என்று சூழ இருந்த நபித்தோழர்களிடம் கேட்டார்கள்.
"ஆம்! இவர் சொல்வது உண்மைதான். தாங்கள் இரண்டு ரக்அத்கள்தாம் தொழுவித்தீர்கள்'' என்று மறுமொழி பகன்றனர். அப்போது அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள், "நானும் உங்களைப் போன்ற மனிதர்தாம். நீங்கள்
மறப்பதைப் போலவே நானும் மறந்துவிடுகிறேன். எனவே நான் (எதையேனும்) மறந்துவிட்டால் எனக்கு
நீங்கள் நினைவூட்டுங்கள்'' என்று
கூறினார்கள். (நூல்: புகாரீ: 401)
இந்நபிமொழியில், "நானும் உங்களைப் போன்ற மனிதர்தாம்'' என்று கூறி, "நீங்கள் மறப்பதைப் போலவே நானும் மறந்துவிடுகிறேன்'' என்று கூறியுள்ளதன்மூலம் மறதி மனித இயல்பு
என்பதை மெய்ப்பிக்கின்றார்கள். மறதி என்பது சாதாரண மனிதர்கள் முதல் இறைத்தூதர்கள் வரை
அனைவருக்கும் சமமானது என்பதை உணர முடிகிறது. இருப்பினும் இறைத்தூதர்கள் நம்மைப்போன்ற
மறதியாளர்கள் கிடையாது என்பதையும் நாம் மனதில் நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும்.
இறைத்தூதர் மூஸா (அலை) அவர்களுக்கும்
மறதி ஏற்பட்டுள்ளது என்பதைத் திருக்குர்ஆன் வாயிலாக அறிகிறோம். களிர் (அலை) அவர்களோடு
மூஸா (அலை) அவர்கள் கடற்பயணம் மேற்கொண்டபோது, தாங்கள் என்னிடம் எது குறித்தும் வினா எழுப்பக்கூடாது; பொறுமையாக இருக்க வேண்டுமென நிபந்தனை விதித்தார்கள்.
அந்நிபந்தனையை மறந்துவிட்ட மூஸா (அலை) அவர்கள், களிர் (அலை) அவர்கள் தாம் பயணம் செய்து சென்றுகொண்டிருந்த
மரக்கலத்தைத் துவாரமிட்டதைக் கண்டபோது, "தாங்கள் ஏன் இந்த மரக்கலத்தில் துவாரமிடுகின்றீர்?'' என்று வினவினார்கள். அது குறித்துத் திருக்குர்ஆன்
கூறுவதைப் பாருங்கள்:
அவ்விருவரும் (கடலோரமாக) நடந்தனர்.
இறுதியில் அவ்விருவரும் மரக்கலம் ஒன்றில் ஏறியதும் அவர் அதில் துளையிட்டார். மூஸா, "இதிலுள்ளோரை மூழ்கடிக்கவா நீங்கள் துளையிட்டீர்கள்? நிச்சயமாக நீங்கள் மோசமான செயலைச் செய்துவிட்டீர்கள்'' என்று கூறினார். அதற்கு, "என்னுடன் பொறுமையாக இருக்க உங்களால் ஒருபோதும்
இயலாது என்று நான் (முன்பே) சொல்லவில்லையா?'' என அவர் (களிர்) கேட்டார். அப்போது அவர்
(மூஸா),
"நான்
மறந்துவிட்டதற்காக என்னைத் தண்டித்துவிடாதீர். என் விஷயத்தில் என்னைச் சிரமத்திற்குள்ளாக்கிவிடாதீர்'' என்று கூறினார். (18: 71-73)
மறதி மனித இயல்பாக இருந்தாலும்
சில வேளைகளில் ஷைத்தான் மனிதனுக்கு மறதியை ஏற்படுத்துகின்றான். அவன் ஒரு மனித விரோதி
என்பதை மெய்ப்பிக்கும் வண்ணம் அவ்வப்போது அவன் மனிதனுக்கு எதிராகச் செயல்பட்டுக்கொண்டே
இருப்பான். நல்லறங்களைச் செய்ய முனையும் போது
அதில் மறதியை ஏற்படுத்திக் குழப்பத்தை உண்டுபண்ண முனைந்து செயல்படுவான். அது குறித்து
நபி (ஸல்) அவர்கள் நமக்கு முன்னெச்சரிக்கை செய்துள்ளார்கள்.
"உங்களுள் யாரேனும் தொழுதுகொண்டிருக்கும்போது
அவரிடம் ஷைத்தான் வருவான். அவர் எத்தனை ரக்அத்கள்
தொழுதார் என்பதை அறியாத அளவுக்கு (மறதியை ஏற்படுத்தி)க் குழப்பத்தை உண்டாக்குவான்.
எனவே இந்த நிலையை உங்களுள் யாரேனும் அடைந்தால், (தொழுகையின் இறுதியில்) அமர்ந்தவாறு அவர்
இரண்டு சஜ்தாக்கள் (சலாம் கொடுக்குமுன்) செய்துகொள்ளட்டும்'' என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(நூல்: திர்மிதீ: 363)
மற்றொரு வரலாற்றுச் சான்றைக்
காணலாம். மூஸா (அலை) அவர்கள் இறைநேசர் களிர் (அலை) அவர்களைச் சந்திக்கச் சென்றபோது
தம்முடன் ஓர் இளம் பணியாளரையும் அழைத்துச் சென்றார்கள். அவர் பெயர் யூஷஉ பின் நூன்
ஆகும். அல்லாஹ்வின் கட்டளைப்படி, உப்புத்
தோய்க்கப்பட்ட மீனைச் சுமந்து வருமாறு தம் பணியாளரிடம் கேட்டுக்கொள்ள, அதை அவர் சுமந்து சென்றார். அந்த மீன் உயிர்பெற்று, கடலுக்குள் நழுவிச் செல்லும் இடமே களிர்
(அலை) அவர்களைச் சந்திக்கும் இடம் என்று மூஸா (அலை) அவர்களுக்கு அல்லாஹ் அடையாளம் சொல்லியிருந்தான்.
அந்தத் தகவலை மூஸா (அலை) அவர்கள் தம் பணியாளரிடம் சொல்லி, தமக்கு அதைத் தெரிவிக்குமாறு உத்தரவிட்டிருந்தார்கள்.
பின்னர் இருவரும் அவரைச் சந்திக்கப் புறப்பட்டுச் சென்றார்கள். கடற்கரை வழியாகச் சென்று
கொண்டிருந்தபோது ஓரிடத்தில் ஓய்வெடுத்தார்கள். அப்போது அந்த மீன் உயிர்பெற்று, கடலுக்குள் சென்றுவிட்டது. சட்டென விழித்த
அந்தப் பணியாளர் அந்த மீன் உயிர்பெற்றுச் சென்றதைப் பார்த்துவிட்டார். ஆனால் மூஸா
(அலை) அவர்கள் தம் உறக்கத்திலிருந்து எழுந்ததும்
அந்தத் தகவலை அவர் தெரிவிக்க மறந்துவிட்டார். அது குறித்துத் திருக்குர்ஆன்
பின்வருமாறு கூறுகிறது.
"பார்த்தீர்களா? நாம் அந்தப் பாறையில் ஒதுங்கியபோது அந்த
மீனை நான் நிச்சயமாக மறந்துவிட்டேன். அதைப் பற்றி (உங்களிடம்) சொல்லவிடாமல் ஷைத்தான்தான்
என்னை மறக்கச் செய்துவிட்டான். அது கடலில் விந்தையான முறையில் தனது பாதையை அமைத்துக்கொண்டது'' என்று கூறினார். (18: 63) ஒரு நல்வினையைச் செய்ய மனிதன் முயலும்போது
மனித விரோதியான ஷைத்தான் அதை மறக்கச் செய்கிறான் என்பதை இந்நிகழ்வின் மூலம் விளங்கிக்கொள்ள
முடிகிறது.
மறதி மனித இயல்பாக இருந்தாலும்
நாம் மறக்காமல் எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய எத்தனையோ விஷயங்கள் உள்ளன.
முதலில் நம்மையெல்லாம் படைத்த இறைவனை நாம் ஒருபோதும் மறக்கக் கூடாது; மறுமை நாள், மரணம், நம் அன்றாடக் கடமைகள் முதலியவற்றை மறக்கவே
கூடாது. இன்று கடமையை மறந்த பலர் நம் அன்றாட வாழ்வில் வலம் வருகின்றார்கள். ஐவேளைத்
தொழுகை ஒவ்வொரு முஸ்லிம் ஆண்-பெண்மீதும் கடமை; அதைப் பெரும்பாலோர் அலட்சியமாகக் கருதி விட்டுவிடுவது
தொடர்ந்துகொண்டே உள்ளது. கணவன் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகளை மறந்துவிடுகின்றான்; மனைவி தன் கணவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை மறந்துவிடுகின்றாள்; முதலாளி-தொழிலாளி, தாய்-தனயன், தந்தை-மகன், மகள்-தந்தை, பெரியவர்-சிறியவர் இப்படி ஒருவருக்கொருவர்
செய்ய வேண்டிய கடமைகளை மறந்து, பொறுப்பற்ற
முறையில் நடந்து கொள்கின்றனர். இப்பழக்கத்தை முற்றிலும் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
கடமையை நிறைவேற்றுதல் குறித்து நாம் மீண்டும் மீண்டும் நினைவு படுத்திக்கொண்டே இருக்க
வேண்டும். அப்போதுதான் நாம் கடமை தவறாமல் செயலாற்ற முடியும்.
நன்றி மறப்பது நன்றன்று-நன்றல்லது
அன்றே மறப்பது நன்று- என்று வள்ளுவர்
கூறியுள்ளார்.
மறதி மனித இயல்பாக இருந்தாலும்
நாம் மறக்காமல் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியது பிறர் நமக்குச் செய்த உதவியைத்தான்.
அதை நாம் ஒருபோதும் மறவாமல் அவர் செய்த அந்த உதவிக்குக் கைம்மாறு செய்வது நம் கடமையாகும்.
எனவே பிறர் நமக்குச் செய்த உதவியை மறக்காமல் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய அதே நேரத்தில், பிறர் நமக்குச் செய்த தீவினைகளையோ துன்பங்களையோ
இடர்களையோ நாம் அவ்வப்போது மறந்துவிட வேண்டும். அதுதான் நம் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு
உகந்ததாகும்.
மற்றொரு கோணத்தில் பார்த்தால், சில வகை மறதி அல்லாஹ்வின் அருட்கொடையும்
வெகுமதியும் ஆகும் என்றே சொல்லலாம். ஆம்!
நாம் பார்க்கின்ற, செய்கின்ற, சொல்கின்ற எத்தனையோ விஷயங்களை அவ்வப்போது
மறந்துவிடுகின்றோம். அந்த மறதி இயல்பாகவே நமக்குள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அவற்றையெல்லாம் அவ்வப்போது
மறந்துவிடும் இயல்புநிலையை மட்டும் இறைவன் வைக்காதிருந்தால் நாம் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியிருப்போம். எனவே இது இறைவனின் வெகுமதி என்றே சொல்ல வேண்டும்.
ஒரு கணவன் செய்கின்ற சின்னச்
சின்ன தவறுகளை மனைவி மறந்துவிடுகின்றாள்; அவன் தன்னைத் திட்டுவதையும் அடிப்பதையும்
தொல்லை கொடுப்பதையும் அவ்வப்போது மறந்துவிடுகின்றாள். அதனால்தான் காலையில் சண்டையிட்டு, திட்டிவிட்டுச் சென்ற கணவனை மாலையில் மகிழ்ச்சியோடும்
இன்முகத்தோடும் வரவேற்கிறாள். அதுபோலவே மனைவி அவ்வப்போது செய்துவிடுகின்ற சின்னச்சின்ன தவறுகளையும் குறைபாடுகளையும்
கணவன் மன்னித்து, மறந்துவிடுகின்றான்.
அதனால்தான் காலையில் மனைவி செய்த ஏதோ ஒரு தவறுக்காக அவளைத் திட்டிவிட்டுச் சென்றவன்
இரவில் இல்லம் திரும்பும்போது அவளுக்குத் தேவையானதை வாங்கிவந்து அன்போடு கொடுக்கின்றான்.
இப்படித் தம்பதியர் ஒருவருக்கொருவர்
மறந்துவிடுவதால்தான் இல்லறமே நல்லறமாய் நடைபெறுகிறது; அதுபோன்றே ஒரு தொழிலாளி செய்யும் தவற்றை
முதலாளி மறந்துவிடுவதால்தான் அந்தத் தொழிலாளி தொடர்ந்து அங்கேயே பணியாற்ற முடிகிறது.
சிறியவர்கள் செய்யும் தவறுகளைப் பெரியவர்கள் மறந்துவிடுவதால்தான் சமூக வாழ்க்கை சீராக
நடைபெறுகிறது. ஆக மறதி என்பது ஒரு கோணத்தில் இறைவனின் வெகுமதி என்றே சொல்லலாம்.
"எங்கள் இறைவா! நாங்கள் (எங்கள் கடமைகளைச்
செய்ய) மறந்துவிட்டாலும் அல்லது அதில் தவறிழைத்துவிட்டாலும் அதற்காக நீ எங்களை(க் குற்றம்)
பிடித்துவிடாதே!'' (2: 286) என்ற பிரார்த்தனையை நாம் நாள்தோறும் மறக்காமல் செய்துவருவோம்.
=====================
மௌலவி முனைவர் நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி. (மொழிபெயர்ப்பாளர், பத்திரிகையாளர்)
இமாம், மஸ்ஜித் ஜாமிஉல் அன்வார், மணலி, சென்னை-68
இஸ்லாம் பெண்களை ஒடுக்குகிறது; அடிமைப்படுத்துகிறது என்று பல்வேறு சமுதாயத்தினர்
கூறுவதற்குக் காரணம் இஸ்லாமியப் பெண்கள் அணிகின்ற புர்காதான். இஸ்லாம் பெண்களைப் பர்தாவுக்குள்
அடைத்து வைக்கிறது; சிறைப்படுத்துகிறது என்று வெற்று முழக்கமிடுகின்றார்கள். அவர்கள் வெளியிலிருந்து
பார்ப்பதால் உள்ளுக்குள் இஸ்லாமியப் பெண்களுக்கு உள்ள உரிமைகளும் சலுகைகளும் குறித்து
அவர்களுக்குத் தெரியவில்லை. அது குறித்து ஓர் இஸ்லாமியப் பெண்ணிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள
முன்வந்தால் அவர்கள் இப்படிப் பேச மாட்டார்கள். உலகின் முதலாவதாக விமானம் செலுத்திய
பெண் விமானியும் கின்னஸ் உலகச் சாதனையாளருமான பாகிஸ்தானின் ஜஹனாஸ் லஹோரி பர்தாவுக்குள்
பாதுகாப்பாக இருக்கின்ற ஒரு முஸ்லிம் பெண்தான் என்பதை பெண்ணியவாதிகள் உணர வேண்டும்.
இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகிறதா என்று இப்போது அவர்கள் சொல்லட்டும்.
சகோதரச் சமுதாயத்தில் கணவன் இறந்துவிட்டால் மறுமணம் உண்டா? வாழ்க்கைப்பட்ட கணவன்
பிடிக்கவில்லையெனில் உடனடியாக அவனிடமிருந்து விடுதலை பெற முடியுமா? சொத்துரிமை முழுமையாக
உண்டா? திருமணத்தில்
விருப்ப உரிமை உண்டா? கைம்பெண்கள் திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளில் முன்னிலை வகிக்க முடியுமா? இவையெல்லாம் இஸ்லாமியப்
பெண்களுக்கு உண்டு; முடியும். இவை தவிர பிறப்புரிமை, பேச்சுரிமை, ஆலோசனை சொல்லும் உரிமை, வாக்குரிமை உள்ளிட்டவை
உண்டு.
கணவன் இறந்துவிட்டால் அவனுடைய சொத்தில் பங்குண்டு; அதே நேரத்தில் மறுமணமும்
செய்துகொள்ளலாம்; மணமுடிக்கப்பட்ட கணவன் பிடிக்கவில்லையானால், உரிய காரணங்கள் இருந்தால் அவள் அவனிடமிருந்து
(குலஉ) விடுதலை பெற்று, மனதிற்குப் பிடித்த மற்றொருவனை மணந்துகொள்ள இஸ்லாம் அனுமதிக்கிறது; சொத்துரிமை முழுமையாக
உண்டு; அதாவது
கணவன் இறந்துவிட்டால், தந்தை இறந்துவிட்டால், தாய் இறந்துவிட்டால் அவளுக்குச் சொத்தில் பங்குண்டு; திருமணத்தில் தனக்குப்
பிடித்த மாப்பிள்ளையைத் தேர்வு செய்யலாம்; தனக்கு விருப்பமில்லாத ஒருவரைத் தன் தந்தை மணமுடித்து
வைத்துவிட்டால் அதை இரத்துச் செய்யவும் அவளுக்கு உரிமை உண்டு (புகாரீ: 5138); ஒரு
கைம்பெண் திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளில் எவ்விதத் தங்கு தடையின்றி முன்னிலை வகிக்கலாம்; மற்ற பெண்களைப்போல் கலந்துகொள்ளலாம்.
இப்படி எல்லாவித உரிமைகளையும் இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ளது.
மேலும் ஒரு பெண் ஆண்களைப்போல் உயர்கல்வி வரை கற்க இஸ்லாம் அனுமதிக்கிறது. “கல்வியைத் தேடுவது ஒவ்வொரு
முஸ்லிமின் மீதும் கடமை” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (நூல்: இப்னுமாஜா) இந்த நபிமொழியின்
அடிப்படையில் கல்வியைக் கற்பதில் எவ்விதத் தடையுமில்லை. அதேநேரத்தில் உரிய பாதுகாப்பு
ஏற்பாடுகளைச் செய்துகொள்ளுமாறு கட்டளையிடுகின்றது.
ஆண்-பெண் உடலமைப்பு வெவ்வேறு விதத்தில் படைக்கப்பட்டுள்ளது. ஆணைவிடப் பெண்ணின்
உடலமைப்பு பார்த்த பார்வையில் கவரும் விதத்தில் அல்லாஹ் படைத்துள்ளான். எனவே படைத்த
இறைவனே பெண்களை ஆடையிட்டு மறைத்துக்கொள்ளுமாறும்
அந்நிய ஆண்களின் பார்வைக்குப் படாதவாறு திரையிட்டு மறைத்துக்கொள்ளுமாறும் கட்டளையிடுகின்றான்.
எனவே அவர்கள் அந்நிய ஆண்களின் பார்வையிலிருந்து தங்கள் அழகை மறைத்துக்கொள்ளவும் தங்கள்
அழகைத் தம் கணவன் மட்டுமே காண வேண்டும் என்று
விரும்புவது எப்படி அடிமைத்தனமாகும்?
இன்றைய ஆடைக்கலாச்சாரம்தானே மிகுதியான வன்புணர்வுக்குக் காரணம்? யாராவது மறுக்க முடியுமா? குட்டை ஆடைகளும் இறுக்கமான
ஆடைகளும் பெண்களின் அந்தரங்க உறுப்புகளின் வடிவங்களை வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளன.
அதுவும் மெல்லிய ஆடைகள் உள்ளே இருப்பதைப் படம் பிடித்துக் காட்டுவதைப்போல் உள்ளன.
எனவேதான் உணர்ச்சியின் தூண்டுதலுக்கு ஆட்பட்ட ஆடவர் சிலர் பெண்களின் கற்புகளைச் சூறையாடுகின்றனர்.
பெண்களை இந்த அளவிற்குப் போகப் பொருளாகக் காட்டுவதுதான் சுதந்திரமா?
எல்லாப் பொருள்களின் விளம்பரங்களுக்கும் பெண்கள்தாம் காட்சி தருகின்றார்கள். ஆண்கள்
பயன்படுத்துகின்ற பொருள்களுக்கும் பெண்கள்தாம் காட்சி தருகின்றார்கள். ஆண்கள் விளையாடுகின்றபோது
நன்றாக மறைக்கின்ற ஆடைகளையும் பெண்கள் விளையாடுகின்றபோது குட்டையான ஆடைகளையும் அணியச்
செய்வது ஏன்? பெண்களின் அழகைக் காட்டி ஆண்களைக் கவர்வதற்குத்தானே? அதன்மூலம் சம்பாதிப்பதற்குத்தானே? இப்படிப்பட்ட விளையாட்டுகள்
தேவையா? அதேநேரத்தில்
ஈரான் போன்ற நாடுகளில் முஸ்லிம் பெண்கள் தம் உடலை முற்றிலுமாக மறைக்கின்ற விதத்தில்
ஆடைகள் அணிந்துகொண்டு விளையாடுகின்றார்கள். போட்டியில் வெற்றிபெறுகின்றார்கள். அது
எப்படி முடிகிறது?
“உங்கள் இஸ்லாமிய மார்க்கத்தில், மனைவியைப் பிடிக்கவில்லையானால் தலாக், தலாக், தலாக் என்று மூன்று தடவை
கூறி மணவிலக்குச் செய்துவிடுகின்றனர். இதனால் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர்” என்ற வாதம் பரவலாக உள்ளது.
இதில் அடங்கியுள்ள உண்மை அவர்களுக்குத் தெரியவில்லை. ஒரு பெண் குடும்ப வாழ்க்கையில்
எல்லை தாண்டுகின்றபோதும் வரம்புமீறுகின்றபோதும்தான் சினத்தின் உச்சத்தில் ஓர் ஆணின்
வாயிலிருந்து அவ்வார்த்தை வெளிப்படுகின்றது.
விளையாட்டுக்காகவோ வேண்டுமென்றோ யாரும்
அவ்வாறு செய்வதில்லை. தனக்குப் பிடிக்கவில்லை என்றால் அவளை முறைப்படி மணவிலக்குச் செய்துவிட்டு
மற்றொருத்தியை மணந்துகொள்ள இஸ்லாம் காட்டுகின்ற எளிய வழிமுறைதான் தலாக் ஆகும். இது இருபாலருக்கும் நன்மையைத்தான் நல்குகிறது.
இந்த எளிய வழிமுறை ஏனைய மதங்களில் இல்லாததால்தான் மருமகளைத் தீயிட்டுக் கொளுத்துகின்றார்கள்; ஸ்டவ் வெடிக்கின்றது; கேஸ் அடுப்பு பற்றிக்கொள்கின்றது; கொலை செய்யப்படுகின்றாள்; அல்லது தற்கொலை செய்துகொள்ளுமாறு தூண்டப்படுகின்றாள். இவற்றைத்
தவிர்ப்பதற்காகத்தான் இஸ்லாம் ஓர் எளிய முறையிலான தலாக்கை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது பெண்களின் உயிரைப் பாதுகாக்கிறது.
“இஸ்லாத்தில் ஆண்கள் நான்கு பெண்களை மணந்துகொண்டு பெண்களுக்குத் துரோகமிழைக்கின்றார்கள்; அவர்களை அடிமைத்தனமாக
நடத்துகின்றார்கள்” என்ற வாதமும் முன்வைக்கப்படுகின்றது. ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்பது மாற்றுமதக் கலாச்சாரம்; இஸ்லாமிய மார்க்கத்தில்
‘ஒருத்திக்கு
ஒருவன்’ என்பதே
கோட்பாடு; அதேநேரத்தில் ஆணைப் பொறுத்தமட்டில் நான்கு வரை மணந்துகொள்ள உரிமம் வழங்கப்பட்டுள்ளதே
தவிர கட்டாயம் இல்லை; எத்தனை முஸ்லிம் ஆண்கள் நான்கு பெண்களை மணந்துகொண்டுள்ளனர்? அதேநேரத்தில் சகோதரச்
சமுதாயத்தில் உள்ள ஒருவர் ஒரு பெண்ணையே மணந்துகொள்ள வேண்டும்; திருமணமின்றிச் ‘சின்னவீடு’ என்று எத்தனை வேண்டுமானாலும்
வைத்துக்கொள்ளலாம்; தவறில்லை. இதுதான் உண்மையில் பெண்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதியாகும். இஸ்லாத்தைப்
பொறுத்தமட்டில், ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணமுடிக்க வேண்டுமானால் அதற்குக் கடுமையான நிபந்தனைகள்
இருக்கின்றன, பொருளாதார ரீதியாகவும் உடல் ரீதியாகவும் ஆணுக்கு ஆற்றல் வேண்டும்; உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றை வாழ்நாள்
முழுவதும் கொடுக்க வேண்டும். அத்தகையவர்தாம் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை
மணந்துகொள்ளலாம். இல்லையேல் முடியாது.
மேலும் இந்த அனுமதியை யார் கொடுத்தார்? படைத்த இறைவன் கொடுத்தான். மனிதனுக்கு என்னென்ன, எப்படியெப்படிக் கொடுக்க
வேண்டும் என்பது படைத்த இறைவனுக்கு நன்றாகத் தெரியும். ஏனெனில் அவன்தான் ஆண்களின் ஹார்மோன்களையும்
பெண்களின் ஹார்மோன்களையும் மாற்றியமைத்தான். பெண்களைவிட ஆண்களுடைய ஹார்மோன்களின்
எண்ணிக்கை அதிகம். எனவே தாம்பத்திய உறவில் பெண்களைவிட ஆண்களுக்கு அதிகமான நாட்டமும்
தேவையும் ஏற்படும். ஆகவேதான் படைத்த இறைவன் ஆணுக்கு நான்கு மனைவியர் வரை அனுமதி கொடுத்துள்ளான்.
இது குறித்த உண்மையை மருத்துவர் ஷாலினி தமது, ‘அர்த்தமுள்ள அந்தரங்கம்’ எனும் நூலில் கூறியுள்ளார்.
ஆதலால் ஆண்களின் தேவையைக் கருதி அவன் வழங்கியுள்ள அனுமதியைத் தடுக்க யாருக்கும் எந்த
அதிகாரமும் கிடையாது. இஸ்லாமிய மார்க்கத்தைப் பின்பற்றுவோரே இவ்வனுமதியை மறுக்கின்றனர்; கொச்சைப்படுத்துகின்றனர்.
இது அவர்களின் அறியாமையைத்தான் வெளிச்சம்போட்டுக் காட்டுகின்றது.
இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகிறது என்ற வாதம் முற்றிலும் பொய்யானது. உண்மைக்கு
முரணானது. இஸ்லாமியப் பெண்கள் பல்வேறு வழிகளில்
முன்னேறி வருவதை இதற்குச் சான்றாகக் காட்டலாம். ஓர் இஸ்லாமியச் சமுதாயத்தைச் சார்ந்த
ஃபாத்திமா பீவி தமிழ்நாட்டின் ஆளுநராகப் பதவி வகித்துள்ளார்; ஹைதராபாத்தைச் சார்ந்த
சய்யிதா சல்மா ஃபாத்திமா, பெங்களூருவைச் சார்ந்த சாரா ஹமீது அஹ்மத் ஆகியோர் விமானத்தைச் செலுத்துகிறார்கள்; சானியா மிர்ஸா இந்தியாவுக்காக
டென்னிஸ் விளையாடுகிறார். இவர்கள் வெளியில் தெரிந்தவர்கள்.
அதேநேரத்தில் புர்கா அணிந்துகொண்டு படித்துப் பட்டம் பெற்றுப் பல்வேறு பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் ஆகியவற்றில்
ஆசிரியைகளாக, பேராசிரியைகளாகப் பணிபுரிகின்றார்கள் இஸ்லாமியப் பெண்கள்; தொழில்நுட்பப் பணிகளை
மேற்கொள்கின்றார்கள்; எழுத்துப் பணியில் பல்வேறு பெண்கள் மிளிர்கின்றார்கள்; இப்படி எதற்கும் இஸ்லாம்
தடைவிதிக்கவில்லை. ஆனால் எதைச் செய்தாலும் புர்காவை அணிந்து அழகை மறைத்துக்கொள்ளுங்கள்
என்றே இஸ்லாம் கூறுகிறது.
இதைத்தாண்டி மார்க்கச் செயல்பாடுகளில் பெண்களுக்கான சலுகையைப் பார்த்தால் அதுவும்
ஏராளம். ஒவ்வொரு மாதமும் பெண்களுக்கு ஏற்படுகின்ற மாதாந்திர உதிரப்போக்கு இயல்பானது.
அந்நாள்களில் அவர்கள் தொழுகத் தேவையில்லை; அது கடமையான நோன்பு நோற்கின்ற ரமளான் மாதமாக இருந்தால்
நோன்பு நோற்கத் தேவையில்லை; பிள்ளையைப் பெற்ற பெண்கள் நாற்பது நாள்கள் தொழுகத் தேவையில்லை; பாலூட்டும் பெண்டிர் கடமையான
ரமளான் நோன்பை நோற்கத் தேவையில்லை. பிறந்த பிள்ளை ஆணாக இருந்தால் ஈராடுகள் அறுத்துப்
பலியிட வேண்டிய அதேநேரத்தில் பெண்ணாக இருந்தால் ஓர் ஆடே போதுமானது என்பதும் அவர்களுக்கான
சலுகையே என்பதை நாம் உணர வேண்டும். இப்படிப் பெண்களுக்கான சலுகைகள் இஸ்லாமிய மார்க்கத்தில்
ஏராளம் உள்ளன.
அதேநேரத்தில் மாதாந்திர உதிரப்போக்கு ஏற்படும் காலங்களில் பெண்களைத் தனியாக ஒதுக்கிவிடுவதோ
அவர்களுக்கெனத் தனியாகப் பாத்திரங்களை ஒதுக்குவதோ இஸ்லாத்தில் இல்லை. தாம்பத்திய உறவு
மேற்கொள்வதைத் தவிர மற்றெல்லாச் செயல்பாடுகளும் ஏனைய காலங்களில் எவ்வாறு உள்ளனவோ
அவ்வாறே தொடரும். வாழ்க்கைப்பட்ட கணவனோடு
ஒரே படுக்கையில் ஒன்றாகத் துயில்கொள்ளவும் தடையில்லை. ஆக மனதளவில்கூடப் பெண்களைச்
சங்கடப்படுத்த இஸ்லாமிய மார்க்கம் விரும்பவில்லை.
கிறிஸ்தவ மதத்தில் கன்னிப்பெண்கள் திருமணம் செய்துகொள்ளாமல் தம் வாழ்க்கையைக்
கடவுளுக்காக அர்ப்பணிக்கின்றனர். அவர்கள் ‘கன்னியாஸ்திரிகள்’ என்று அழைக்கப்படுகின்றனர்.
அதேபோல் இந்து மதத்தில் உள்ள கன்னிப்பெண்களும் திருமணம் செய்துகொள்ளாமல் தம் வாழ்க்கையைக்
கடவுளுக்காக அர்ப்பணிக்கின்றனர். அவர்கள் ‘இந்திரகுமாரிகள்’ என்று அழைக்கப்படுகின்றனர். ஆனால் இஸ்லாம்
ஆண்களின் உணர்வுகளைப்போலவே பெண்களின் உள்ளுணர்வுகளுக்கு உரிய முறையில் மதிப்பளிக்கிறது.
எனவே அல்லாஹ்விற்காகத் தம் இல்வாழ்க்கையைத் துறக்கவோ அர்ப்பணிக்கவோ வேண்டிய எந்த
அவசியமுமில்லை. மாறாக ஆண்களைப்போலவே இல்வாழ்வில் ஈடுபட்டு, தம் கணவருக்கு உரியமுறையில்
பணிவிடை செய்வதன்மூலமும் ஐவேளைத் தொழுகை உள்ளிட்ட இறைக்கடமைகளை நிறைவேற்றுவதன் மூலமுமே
அவர்கள் சொர்க்கத்தில் நுழைய முடியும். அதுவே அல்லாஹ்விற்காக அவர்கள் செய்யும் அர்ப்பணிப்பு
ஆகும்.
அப்பெண்களுக்குக் கடமைகள் இருப்பதைப்போலவே நல்லமுறையில் உரிமைகளும் உள்ளன. ஆயினும், ஆண்களுக்குப் பெண்களைவிட
(ஓர்) உயர்பதவி உண்டு. (2:
228) இந்த இறைவசனத்தை முன்வைத்து இஸ்லாம் பெண்களைத் தாழ்த்துகிறது
என்று வாதம் செய்கின்றனர். குடும்பத்தை நிர்வகிக்கின்ற பொறுப்பு ஆண்களைச் சார்ந்தது
என்று இஸ்லாம் கூறுகிறது. இது பெண்களைத் தாழ்த்துவதோ அடிமைப்படுத்துவதோ கிடையாது.
ஒரு குடும்பத்திற்குத் தேவையான வாழ்வாதாரத்திற்காகப் பொருளீட்டுவதும் மனைவி, பிள்ளைகளுக்காகச் செலவழிப்பதும்
ஆண்களின் பொறுப்பேயன்றிப் பெண்களின் பொறுப்பில்லை. இஸ்லாமிய மார்க்கத்தைப் பொறுத்தமட்டில்
ஒரு பெண் தன் கணவனைக் காப்பாற்ற வேண்டும் என்ற எந்த அவசியமுமில்லை. ஆண்தான் சம்பாதித்துப்
பொருளீட்டி, தன் மனைவி, பிள்ளைகள் ஆகியோருக்கு உணவு,
உடை, உறைவிடம் முதலானவற்றை வழங்க வேண்டும். அதனால்தான் அவனுக்கு ஒருபடி உயர்வுண்டு என்று
திருக்குர்ஆன் கூறுகின்றதே தவிர பெண்களைத் தாழ்த்துவதாகக் கருதக்கூடாது. ஒரு மின்விளக்கு
எரிய வேண்டுமெனில் நேர் மின்னோட்டம் எதிர் மின்னோட்டம் (பிளஸ், மைனஸ்) ஆகிய இரண்டும்
இணைய வேண்டும். அதுபோல் ஒரு குடும்பம் சீராக நடைபெற ஆண்-பெண் இருவரும் இணைய வேண்டும்.
அந்த நேர் மின்னோட்டம் இடத்தில் ஆணும் எதிர் மின்னோட்டம் இடத்தில் பெண்ணும் இருக்கின்றனரேயன்றி
அவர்களுக்கிடையே எந்த ஏற்றத்தாழ்வும் இல்லை.
“கர்ப்பமான பெண்களுக்குக் காத்திருப்புக் கால (இத்தாவின்) தவணை அவர்கள் பிரசவிக்கும்
வரை இருக்கின்றது” (65: 4) எனும் இறைவசனத்திற்கேற்ப அவர்கள் பிரசவித்தபின் பிரசவ உதிரப்போக்கு முடிவடைந்த
உடனேயே மறுமணம் செய்துகொண்டு இல்வாழ்க்கையைத் தொடர எளிய வழி காட்டுகிறது இஸ்லாம்.
மாறாக கணவன் இறந்தபின் உடன்கட்டை ஏறவோ கைம்பெண்ணாகவே எஞ்சிய காலத்தை வெறுமனே கழிக்கவோ
வேண்டிய நிர்ப்பந்தம் இஸ்லாத்தில் இல்லை.
“(மணவிலக்குச் செய்யப்பட்ட) அவர்களுக்கு ஆடையும் உணவும் முறைப்படி கொடுத்து வருவது
குழந்தையின் தந்தைமீது கடமை”
(2: 233) எனும் இறைவசனத்தின் அடிப்படையில் ஒரு பெண் மணவிலக்குச்
செய்யப்பட்டுவிட்டால் அவளுடைய காத்திருப்புக் காலத்திற்குப்பின், அவள் தன் கணவனுக்காகப்
பெற்றெடுத்த பிள்ளைகளை அவனிடமே விட்டுவிட்டுச் சென்றுவிடலாம். அப்பிள்ளைகளை வளர்க்க
வேண்டிய பொறுப்பு கணவனைச் சார்ந்ததுதானே தவிர, மனைவியைச் சார்ந்தது இல்லை என்று கூறி இஸ்லாம் பெண்களின்
சுமையை இலகுவாக்குகிறது. ஆக இது பெண்களுக்கான சலுகையாகும். இதனால் அவள் எளிய முறையில்
மறுமணம் புரிந்துகொண்டு இல்வாழ்வைத் தொடரலாம்.
தற்கால முஸ்லிம் பெண்கள் இவ்விசயத்தை அறியாமல் மணவிலக்கிற்குப்பின் பிள்ளைகளையும்
சுமந்துகொண்டு மறுமணம் புரிய முடியாமல் தவிப்பது அவர்களின் அறியாமையாகும்.
ஆக, இப்படி
ஏராளமான சலுகைகளும் உரிமைகளும் இஸ்லாமிய மார்க்கத்தில் மகளிர்க்கு உண்டு என்பதை பெண்ணியவாதிகள் உணர வேண்டும். படைத்த இறைவன் ஆண்-பெண்
என்று ஈரினத்தைப் படைத்திருப்பது இருவரும் இணைந்து மகிழ்ச்சியாக வாழ்வதற்காகத்தானே
தவிர ஏற்றத்தாழ்வு காண்பதற்காக அன்று. இஸ்லாம் ஒருபோதும் பெண்களை அடிமைப்படுத்தவில்லை.
இஸ்லாமிய மார்க்கச் சட்டங்களையும் திருக்குர்ஆனையும் திறந்த மனதோடு படிப்போர் இதை
உணர்ந்துகொள்ளலாம்.
==========================