ஞாயிறு, 21 பிப்ரவரி, 2016

இடைத்தரகர்களும் இடைஞ்சல்களும்


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

நுகர்வோருக்கும் வணிகருக்கும் இடையே நேரடியான தொடர்பின்றி, இடைத்தரகர்களின் தலையீட்டின் மூலமே பல்வேறு வேலைகள் நடைபெற்றுவருகின்றன. வாடகைக்கு வீடு பார்த்தல்,    வேலைக்கு ஆள் அனுப்புதல், திருமணத்திற்கு வரன்கள் பார்த்தல், வியாபாரப் பொருள்களை கைமாற்றிவிடுதல் எனத் தொடங்கி அரசியல் கட்சிகளுக்கு இடையே கூட்டணி அமைத்தல்,   கட்சிகளில் பதவியைப் பெற்றுத் தருதல் வரை பல்வேறு பணிகள் தரகர்களின் தலையீட்டால் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

அரசியலுக்குள் நுழையாமல், சமூகத்திற்கு அவர்களால் ஏற்படுகின்ற தொல்லைகள் எத்தனையெத்தனை என்பதைப் பார்ப்போம்!

தரகர்களின் தலையீட்டால் சமூக சேவை, ஒருவருக்கொருவர் உதவிசெய்தல் முதலிய வார்த்தைகள் பொருளிழந்துவிட்டன. ஒருவருக்கொருவர் உதவுதல் என்ற அடிப்படையில் நடைபெற்று வந்தவை இன்றைய அவசர உலகில் தரகு வேலையாக மாறிப் போய்விட்டன. 

வாடகைக்கு ஒரு வீடு பிடித்துக் குடியேறுவதற்குக்கூட நான்கு தெரு சுற்றி அலைந்து தேடிப் பார்க்க நேரமில்லை. நாம் யாரிடமாவது, "வீடு இருந்தால் சொல்லுங்களேன்'' என்று சொன்னால் போதும், "புரோக்கரிடம் சொல்லி வையுங்களேன்'' என்று உடனடியாக ஒரு பதிலை உதிர்த்துவிட்டுச் சென்றுவிடுகின்றார்கள். "என் மகளுக்கு ஒரு மாப்பிள்ளை இருந்தால் பார்த்துச் சொல்லுக்கா'' என்று சொன்னால், "புரோக்கரிடம் சொல்லுங்கள்'' என்று சொல்லிவிட்டு வேகமாக நகர்ந்துவிடுகின்றார்கள். மனிதர்களின் இந்த அவசரச்சூழல்தான் சமூக சேவையாக இருந்தவை தரகுச் சேவைகளாக மாறிப்போய்விட்டன.

இதனால் ஒரு வீட்டில் வாடகைக்குக் குடியேற எவ்வளவு சிரமப்பட வேண்டியுள்ளது. வீட்டு உரிமையாளர்கள் தம் வீடுகளை வாடகைக்கு விட, To let (வாடகைக்கு) என்ற பலகையை வைக்கவிடாமல் தடுத்துவிடுகின்றார்கள் இடைத்தரகர்கள். அவ்வாறு அவர்கள் வைத்துவிட்டால் இவர்களுடைய தொழில் பாதிக்கப்படுமாம். வீட்டு உரிமையாளரிடம், "நீங்கள் எதிர்பார்ப்பதைவிட ஒரு மடங்கு அதிகமாகவே நான் உங்களுக்கு ஆள் கொண்டு வாறேன்! எனக்கு ஒரு மாத வாடகை மட்டும் கொடுத்துடுங்க'' என்று பேசிக்கொண்டு "வீடு வாடகைக்கு'' என்ற பலகையை எடுக்கச் செய்துவிடுகின்றார்கள். வீட்டு உரிமையாளரிடம் ஒரு மாத வாடகையும் புதிதாகக் குடியேறுபவரிடம் ஒரு மாத வாடகையும் இடையில் நுழைகின்ற இடைத்தரகர்கள் பெற்றுக்கொள்கிறார்கள்.

இதனால் வீட்டு வாடகை கிடுகிடுவென உயர்ந்துவிட்டது. சாதாரண நபர்களுக்கு அவ்வளவு எளிதாக வீடு கிடைத்துவிடுவதில்லை. சுயமாகத் தேடுவோருக்கும் வீடு கிடைப்பதில்லை. இடைத்தரகர்களுக்குத் தரகு கொடுக்க முடியாததால், சாதாரண மக்கள் மிகவும் பாதிப்படைகின்றனர்.  

"என் மகளுக்கு ஒரு மாப்பிள்ளை பாருங்கள்'' என்று யாரேனும் தரகரிடம் தகவல் கொடுத்தால் போதும். உடனடியாக அவர்களிடமிருந்து செலவுக்குப் பணம் வாங்கிக்கொள்கின்றார்கள். அதன்பின் பெண்ணுக்கு எத்தனை பவுன் நகை போடுகின்றார்களோ அத்தனை பவுனுக்கு, ஒவ்வொரு பவுனுக்கும் இவ்வளவு தொகை என  நிர்ணயம் செய்து, எத்தனை பவுன் போடுகின்றார்களோ அத்தனை பவுனுக்குரிய தரகுத் தொகையை இருவீட்டாரிடமிருந்தும் வசூல் செய்துவிடுகின்றார்கள். இவர்களின் சுய இலாபத்திற்காக வரதட்சணை மறைமுகமாக ஊக்குவிக்கப்படுகிறது. 
 
பவுனுக்கேற்பத் தரகுத் தொகை என்பதால், தொகையைக் கூடுதலாகப் பெற விரும்பி, "இத்தனை பவுன் போட்டால்தான் உங்க பொண்ணு நிகாஹ் நடக்கும்'' என்று சொல்லி பவுன் எண்ணிக்கையை உயர்த்திவிடுகின்றார்கள். மாப்பிள்ளை வீட்டாரிடம் சென்று, "இத்தனை பவுன் வாங்கித்தாறேன். எனக்கு இவ்வளவு கொடுத்துவிடுங்கள்'' என்று ஆசைகாட்டி, தம் நிபந்தனைக்குப் பணிய வைக்கின்றார்கள். எனவே எங்கிருந்து அதிகமாக வருகிறதோ அங்குதான் மாப்பிள்ளை வீட்டார் சம்பந்தம் பேசுகின்றார்கள். இதனால் நடுத்தர மற்றும் ஏழைப்பெண்களின் திருமணம் வெகுவாகப் பாதிக்கப்படுகின்றது; பவுன்களின் கணக்கீட்டின்படி தரகுத்தொகை  கிடைப்பதால் குறைந்த அளவு பவுன் போடுகின்ற வீடுகளில் திருமணம் மிகவும் தள்ளிப்போகின்றது; ஏழை வீட்டுக் கன்னிப் பெண்கள் முதிர் கன்னிகளாகும் சூழ்நிலை பரவலாக உள்ளது; தன் திருமணத்திற்குத் தானே சென்று சம்பாதிக்கும் துர்பாக்கிய நிலைக்குப் பெண்சமூகம் தள்ளப்பட்டிருக்கிறது. 

"நீங்கள் (திருமணம் செய்துகொள்கின்ற) பெண்களுக்கு அவர்களுடைய "மஹரை' (திருமணக் கொடையை)க் கண்ணியமான முறையில் கொடுத்து விடுங்கள்'' (4: 4) என்ற திருக்குர்ஆன் கட்டளையை ஏற்றுள்ள இஸ்லாமியச் சமுதாயத்தின் நிலையைப் பாரீர்!

"பெண்பார்த்தல்' என்பது பெண்கள் சார்ந்த விஷயமாக இருப்பதால் "பெண் தரகர்கள்' இக்களத்தில் மிகுதியாக ஊடுருவியுள்ளார்கள். அவர்கள் எல்லா வீடுகளிலும் எளிதாக  நுழைந்து கொள்கின்றார்கள். பெண் தரகர்கள் சிலர் ஊர்விட்டு ஊர் சென்று, அங்கு பெண் பார்க்கச் சொன்ன வீடுகளில் இலவசமாகத் தங்கிக்கொண்டு, உணவுண்டு இளைப்பாறுகின்றார்கள். பெண்களுக்குள் இது நடைபெறுவதால், ஏழை வீட்டுப் பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கச் சொன்ன உடனேயே, "இந்தப் பெண்ணுக்கெல்லாம் மாப்பிள்ளை கிடைப்பது மிகவும் சிரமம்'' என்று முகத்தில் அடித்தாற்போல் கூறி, மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தி விடுகின்றார்கள் பெண் இடைத்தரகர்கள். திருமணம் என்பது பொருளாதாரப் பின்னணியை முன்னிலைப்படுத்தியே பெரும்பாலும் நடைபெறுவதால் "தீன்' எனும் நற்பண்பு ஒதுக்கப்படுகின்றது. உலகுசார் பண்புகளும் நிறைகளுமே முதன்மைப்படுத்தப்படுகின்றன. இத்தனை இடைஞ்சல்களுக்கும் இன்னல்களுக்கும் இடைத்தரகர்களே காரணம். 
   
"(சந்தைக்கு வரும்) வணிகர்களை இடைமறித்து வாங்காதீர்கள்! கிராமத்திலிருந்து (சரக்கு கொண்டு) வருபவர்களுக்காக உள்ளூர்வாசி விற்றுக் கொடுக்க வேண்டாம்!'' என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். (நூல்: புகாரீ: 2158) இதை இப்னு அப்பாஸ் (ரளி) அறிவிக்கிறார்கள்.

"கிராமத்திலிருந்து வருபவருக்காக உள்ளூர்வாசி விற்றுக்கொடுக்க வேண்டாம்! என்பதன் பொருள் என்ன?'' என்று இப்னு அப்பாஸ் (ரளி) அவர்களிடம் நான் கேட்டேன்; அதற்கு அவர்கள் "இடைத்தரகராக ஆகக் கூடாது! (என்பதுதான் அதன் பொருள்!)'' என பதிலளித்தார்கள் என்று தாவூஸ் (ரஹ்) கூறுகிறார்கள்.

புகாரீ நபிமொழித் தொகுப்பு நூலில் இடம்பெற்றுள்ள இந்த நபிமொழியின் அடிப்படையில், இடைத்தரகராக இருந்து செயல்படக் கூடாது என்று தடைசெய்யப்படுகின்றது. திருமணம், வியாபாரம், வாடகை வீடு, நிலம் விற்பனை உள்ளிட்ட எத்தனையெத்தனையோ இதனுள் அடக்கம்.  நுகர்வோரும் வியாபாரியும் நேரடியாகத் தொடர்புகொண்டு ஒருவருக்கொருவர் விலைபேசி வாங்கிக்கொள்கிறார்கள்; விற்றுக்கொள்கிறார்கள். அவ்விருவருக்கும் இடையே இடைத்தரகர் எதற்கு? இடைத்தரகர்களின் தலையீட்டால் விலைவாசி உயர்வதைப்போல் வரதட்சணையாக வழங்கும் பவுன்களின் அளவும் உயர்ந்துவிட்டது.

கிராமத்திலிருந்து சரக்குகளைக் கொண்டு வருகின்ற வியாபாரி, ஊரின் பொதுச் சந்தையில் வைத்து மக்களுக்கு விற்பனை செய்வார்; அவர் தமக்குக் கட்டுபடியான விலையில் சரக்குகளை விற்பார். நுகர்வோர் அவற்றை விலைபேசி வாங்கிக்கொள்வர். இதில் நுகர்வோருக்கும் வணிகருக்கும் எந்த இழப்பும் இல்லை. இதேபோல் திருமணத்தில் பெண்வீட்டாரும் மாப்பிள்ளை வீட்டாரும் நேரடியாகப் பேசிக்கொண்டால் எளிய முறையில் திருமணம் நடைபெறும். அவரவர் தகுதிக்கேற்பப் பெண்ணையோ, மாப்பிள்ளையையோ பார்த்து அவரவர் வீட்டார் திருமணம் செய்து வைக்கப்போகிறார்கள். இதில் இடைத்தரகர்களுக்கு என்ன வேலை? அவர்கள் ஏன் இதில் தேவையின்றி நுழைய வேண்டும்? அவர்கள் வேறு வேலையைப் பார்க்கட்டும்!

 "...ஒருவர் தம் (முஸ்லிம்) சகோதரர் பெண் பேசிக்கொண்டிருக்கும்போது, இடையில் குறுக்கிட்டுப் பெண் பேச வேண்டாம்!...'' என்று நபி (ஸல்) அவர்கள் தடைவிதித்தார்கள் என அபூஹுரைரா (ரளி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல்: புகாரீ: 2140)

மாப்பிள்ளைவீட்டார் ஏதேனும் ஒரு பெண்ணை மணம் பேசி வைத்திருக்கும் நேரத்தில் இடைத்தரகர்கள் இடையில் புகுந்து, "இதைவிடச் சிறந்த வரனை நான் கொண்டுவந்துள்ளேன்'' என்று கூறி, அதிகமான தட்சணை கிடைக்கின்ற பெண்ணை அடையாளம் காட்டுவதால், ஏற்கெனவே பேசி வைத்த இடத்தின் சம்பந்தத்தை இடையிலேயே முறித்துவிட்டு, அதிகமான தட்சணை தரக் காத்திருக்கின்ற வேறு பெண்ணைப் பார்க்க ஆசையோடு செல்கின்றார்கள். முந்தைய திருமணச் சம்பந்தம் இடையிலேயே முறிந்துபோவதில் இடைத்தரகர்களின் பங்கு முக்கியமானது.  இவை போன்ற எண்ணற்ற இடைஞ்சல்கள் இடைத்தரகர்களால் ஏற்படுகின்றன.

வாடகைக்கு வீடு பார்த்தல், பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்தல், மாப்பிள்ளைக்குப் பெண் பார்த்தல், நிலம் வாங்குதல், நிலம் விற்பனை செய்தல் ஆகியவை ஒருவருக்கொருவர் செய்துகொள்ள வேண்டிய உதவியும் சமூக சேவையும் ஆகும். அதில் இடைத்தரகர்களுக்கு என்ன வேலை? இடைத்தரகர்கள் தம் சுய இலாபத்திற்காக ஏழைகள், நடுத்தர மக்களின் பொருளாதாரத்தோடு விளையாடுவதும், அப்பெண்களின் மணவாழ்க்கை தள்ளிப்போவதற்குக் காரணமாக இருப்பதும் முற்றிலும் தடை செய்யப்பட வேண்டும். எனவே பொதுமக்கள் இத்தகைய பணிகளில் இடைத்தரகர்களுக்கு வாய்ப்பளிக்காமல் ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்ளும் மனப்பான்மையை வளர்த்துக்கொண்டால் நம் சமுதாயமும் நாமும் பாதிக்கப்படுவதிலிருந்து காத்துக்கொள்ளலாம்.

மேலும் தற்காலத்தில் தகவல் தொடர்பு மிக எளிதாக இருப்பதால், உங்கள் பெண்ணுக்கு மாப்பிள்ளை வேண்டுமென்றாலும் மாப்பிள்ளைக்குப் பெண் வேண்டுமென்றாலும் நிலம் வாங்க, விற்க வேண்டுமென்றாலும், வாடகைக்கு வீடு வேண்டுமென்றாலும் அனைத்திற்கும் சமூக வலைதளங்கள் உள்ளன. சுட்டுரை, முகநூல், கட்செவி முதலிய சமூக வலைதளங்களில் உங்களின் செய்தியைப் பதிவு செய்தால் தேவைப்படுவோர் உங்களை எளிதாக, நேரடியாகத் தொடர்பு கொள்வார்கள். நீங்கள் மிக எளிதாகவே உங்கள் தேவையை நிவர்த்தி செய்துகொள்ளலாம். ஆக, இடைத்தரகர்களுக்கு இவற்றில் வாய்ப்பளிக்காமல் தவிர்த்தால் அவர்கள் தாமாகவே இக்களத்திலிருந்து வெளியேறிவிடுவார்கள் என்பது திண்ணம். 

===========





செவ்வாய், 9 பிப்ரவரி, 2016

நபிகளார் நவின்ற நான்குகள் (தொடர்-3)


முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி எம்.ஏ., எம்.ஃபில்., பிஎச்.டி.

நான்கு விஷயங்களை நம்பிக்கைகொள்ளாத வரை எந்த அடியாரும் இறைநம்பிக்கைகொண்டவராக மாட்டார். 1. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. நான் அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஆவேன். என்னை  அவன் சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பி வைத்தான் என உறுதிமொழிதல். 2. மரணம் உண்டு என நம்புதல். 3. (அனைவரும்) இறந்தபின் (உயிர்கொடுத்து) எழுப்பப்படும் என்பதை நம்புதல், 4. விதியை நம்புதல் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அலீ (ரளி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல்: திர்மிதீ: 2071)

மேற்கூறப்பட்ட நான்கும் இறைநம்பிக்கையின் அடிப்படைவிதிகளுள் அடங்கும். இந்த நம்பிக்கைகளுள் ஒன்று இல்லாவிட்டாலும் முஸ்லிமாக இருக்க முடியாது. இவற்றுள் முதலாவது ஏகத்துவக் கலிமா ஆகும். அதைச் சொன்னால்தான் எவரும் இஸ்லாமிய வட்டத்திற்குள் வர முடியும். இதை ஏற்றுக்கொண்டோருக்கு இதில் ஏதும் ஐயமில்லை. அல்லாஹ்தான் இறைவன்; அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை; முஹம்மது நபியவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதர்; அவர்களுக்கு அவன் சத்திய மார்க்கத்தைக் கொடுத்து அனுப்பினான்; அத்தோடு இருபத்து மூன்றாண்டுகளில் சிறிது சிறிதாக வேதவசனங்களை வழங்கினான் என்றெல்லாம் நம்பிக்கைகொண்டுள்ள நம்முள் பலர் அந்தச் சத்திய மார்க்கத்தை முழுமையாகப் பின்பற்றாததே அவர்கள் அதில் சந்தேகம் கொண்டுள்ளார்களோ என்ற ஐயத்தை நமக்கு ஏற்படுத்துகிறது.

இல்லையென்றால் இதுதான் சத்திய மார்க்கம் எனத் தெரிந்தும் ஏன் பிற மதக் கலாச்சாரங்களை விடமுடியாமல் கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருக்க வேண்டும்? இஸ்லாமிய மார்க்கத்தைச் சத்தியம் என்று ஏற்றுக்கொண்ட பின்னர் எந்த மதத்தில் ஏற்கெனவே இருந்தார்களோ அதையெல்லாம் அப்படியே விட்டுவிட வேண்டியதுதானே? ஏன் முன்னோர்கள் செய்தவற்றை விட முடியவில்லை? அப்படியென்றால் அவர்கள் இன்னும் முழுமையாக நம்பவில்லை. அவர்களால் இன்னும் முழுமையாக இஸ்லாத்திற்குள் நுழைய முடியவில்லை என்றுதான் பொருள். இதனால்தான் அல்லாஹ் ஒரு வசனத்தில் கூறுகின்றான்: இறைநம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (தயங்காமல்) இஸ்லாமிய மார்க்கத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள். (2: 208) நம்பிக்கை கொண்டவர் எவ்வாறு மீண்டும் நம்பிக்கை கொள்வது என்றால், அவர் முழுமையாக இஸ்லாமிய மார்க்கத்திற்குள் நுழைய வேண்டும் என்பதே இவ்வசனத்தின் கருத்தாகும். அந்த அடிப்படையில் மேற்கண்ட நபிமொழி நமக்குக் கூறுவது என்னவென்றால், இறைநம்பிக்கை கொண்டவருக்கு, தாம் கொண்ட நம்பிக்கை உண்மைதான் என்ற உறுதியிருந்தால் அந்த நபி என்ன கூறினாரோ அதை முற்றிலுமாகப் பின்பற்ற வேண்டும். அவர் காட்டித்தந்த வழிமுறைகளைப் பின்பற்றுவதில் பெருமிதம் கொள்ள வேண்டுமே தவிர, அதைப் பின்பற்றுவதில் தயக்கமோ வெட்கமோ ஏற்படக் கூடாது. அதுதான் அந்த நம்பிக்கையின் வெளிப்பாடாக இருக்க முடியும். எவர் நபிவழியைப் பின்பற்ற வெட்கப்படுகின்றாரோ அவர் இன்னும் முழுமையாக நம்பிக்கை கொள்ளவில்லை என்பதை உறுதிசெய்துகொள்ளட்டும்.

இரண்டாவது மரணம் உண்டு என நம்புதல். இதுதான் எல்லோருக்கும் தெரியுமே! இதை எல்லோரும் அறிந்திருக்கின்றார்கள். முஸ்லிம் அல்லாதோரும் மரணம் உண்டென நம்புகின்றார்கள். இங்கு நபி (ஸல்) அவர்களின் நோக்கம் என்னவென்றால், மரணம் உண்டென நம்பியுள்ளவர்களின் செயல்பாடுகளில் வித்தியாசம் இருக்க வேண்டும் என்பதேயாகும். மரணத்தை நம்பியுள்ளவன் எல்லா மரணத்தையும் அல்லாஹ்வே ஏற்படுத்துகிறான்; அவனுடைய ஆற்றலால்தான் அது ஏற்படுகிறது; அவனைத் தவிர வேறு யாரும் அதை இயக்குவதில்லை என்று  நம்ப வேண்டும். அது மட்டுமின்றி, மரணிக்கப் போகின்ற ஒருவன் எவ்வாறு வாழ வேண்டும் என்ற நியதியும் உண்டு.  நிரந்தரமாக இந்த உலகத்திலேயே தங்கிவிடுவதைப் போன்ற உணர்வோடு மனிதனுடைய செயல்பாடுகள் உள்ளன. ஆடம்பரமாக வீட்டைக் கட்டுதல், ஆடம்பரமாக வாழ்தல், எளியோரை அவமதித்தல், பிறரை ஏளனமாகக் கருதுதல், பெருமையாக நடத்தல், இறைக் கட்டளைகளை நிராகரித்தல் அல்லது மீறுதல், அல்லாஹ்வை முறைப்படி வணங்காதிருத்தல் இப்படி எத்தனையெத்தனையோ மனிதன் செய்துகொண்டிருக்கிறான். மரணத்தை நம்பியவனின்  செயல்பாடுகளா இவை? அப்படியென்றால் அவன் மரணத்தை இன்னும் முழுமையாக நம்பவில்லை என்றுதான் பொருள். எவனுடைய செயல்பாடுகள் மரணத்தை நினைவுகூர்ந்த வண்ணம் உள்ளனவோ அவன்தான் மரணத்தை நம்பியவன். எவனுடைய செயல்பாடுகள் உலக ஆசையைத் தூண்டுபவையாக உள்ளனவோ அவன் இன்னும் முழுமையாக மரணத்தை நம்பவில்லை என்றே பொருள்.

மூன்றாவது, அனைவரும் இறந்தபின் உயிர்கொடுத்து எழுப்பப்படும் என்பதை நம்புதல் ஆகும். இதை முஸ்லிம்கள் மட்டுமே நம்பிக்கைகொண்டுள்ளனர். இறந்த பின் சொர்க்கம் நரகம் உண்டென முஸ்லிம்கள் அல்லாத வேறு மக்களும் நம்பியுள்ளனர்.  இறந்தோர் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதையும் அதன் பின் விசாரணை நடைபெறும் என்பதையும் நம்பியோரின்  செயல்பாடுகள் முற்றிலும் வித்தியாசமானவையாக இருக்கும். ஏனெனில் அத்தகைய மனிதனுடைய செயல்பாடுகளில் மிகுந்த கவனம் இருக்கும். நாம் யாருக்கும் அநியாயம் செய்துவிடக்கூடாது; அப்படிச் செய்துவிட்டால் அது நாளை மறுமையில் விசாரணைக்கு வரும் என்பதை நம்பியுள்ளவன் பிறருக்குத் தீங்கு விளைவித்துவிடக் கூடாது என்பதில் கவனமாகவே இருப்பான். அந்த அச்சம் இல்லாதவன்தான் தன் விருப்பத்திற்கேற்பச் செயல்பட்டுக் கொண்டிருப்பான். இவ்வுலகில் எவன் என்ன செய்தாலும் நாளை அல்லாஹ்விடம் நடைபெறவிருக்கின்ற விசாரணையில் மாட்டிக்கொள்வான். இறந்தபின் உயிர்கொடுத்து எழுப்பப்படும் என நம்பிக்கை கொண்டவன் நிச்சயமாகப் பிறருக்குத் தொல்லைகொடுப்பவனாகவோ அநியாயம் செய்பவனாகவோ தீங்குகள் செய்பவனாகவோ இருக்க மாட்டான். அத்தகைய நற்பண்பை எவன் கொண்டிருக்கின்றானோ அவனே, இறந்தபின் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை முற்றிலுமாக நம்பியவன்.

நான்காவது விதியை நம்புதல் ஆகும். இதை முஸ்லிம்களும் மற்றவர்களும் நம்பியே உள்ளனர். முஸ்லிம்கள் நம்புவதற்கும் மற்றவர்கள் நம்பியுள்ளதற்கும் இடையே வித்தியாசம் இருக்க வேண்டும். தீதும் நன்றும் பிறர் தர வாராஎன்ற கூற்றின்படி நன்மையும் தீமையும் இறைவனின் ஏற்பட்டால் நடைபெறுகின்றன. அவன் விதித்தபடி நமக்கு அது கிடைக்கிறது என்ற நம்பிக்கை வேண்டும். நன்மைகள் கிடைக்கும்போதெல்லாம் மகிழ்வோடு ஏற்றுக்கொள்கின்ற நாம், சோதனைகள் ஏற்பட்டால் மட்டும் இறைவனைத் திட்டுகின்றோம். அல்லது அவனை நினைத்து நொந்துகொள்கிறோம். இந்த இறைவன் ஏன்தான் என்னை மட்டும் இப்படிச் சோதிக்கிறானோஎன்றெல்லாம் நாம் பிதற்றுகிறோம். விதியை முற்றிலுமாக நம்பியவன் இவ்வாறு கூற மாட்டான். இன்பம் வரும்போது இனிதாக ஏற்றுக்கொள்கின்ற நாம்  துன்பம் வரும்போதும் அதைப் பொறுமையோடு ஏற்றுக்கொள்கின்ற பக்குவம் பெற வேண்டும். அதுதான் விதியை நம்புவதாக அமையும். இன்பம்-துன்பம் இரண்டையும் சமமாக ஏற்றுக்கொள்ளக்கூடிய பக்குவம் வந்துவிட்டால் அவனே இறைவிதியையும் நியதியையும் முழுமையாக நம்பியவன் ஆவான்.

மனிதன் ஏழையாக இருப்பதும், செல்வனாக இருப்பதும், சோதிக்கப்படுவதும், துன்பத்திற்கு உள்ளாக்கப்படுவதும்பிள்ளைப்பேறு கிடைப்பதும் கிடைக்காதிருப்பதும், வியாபாரத்தில் வளம் ஏற்படுவதும் ஏற்படாதிருப்பதும் எல்லாம் அவனது விதியே. அவனது விதிப்படி எல்லாம் செவ்வனே நடைபெறும். விதியை நம்பிவிட்டு நாம் ஒன்றுமே செய்யாதிருக்கக்கூடாது. நாம் செய்ய வேண்டியதைச் செய்துவிட்டு, அதனால் கிடைக்கின்ற பலன்களை அனுபவித்துக்கொண்டு இதுவே இறைவனின் நியதி என்று எண்ணிக்கொள்ள வேண்டும். நோயைத் தருவதும் அதற்காக நாம் மருந்து உண்பதும் அதன்பின் அது நீங்குவதும் இறைவனின் நியதிதான். நான் மருந்து உண்டதால்தான் நோய் நீங்கியது என்று கூறக்கூடாது. நோயைக் கொடுத்தவன் அதை நீக்குவதற்கான வழியைக் காண்பித்தான். நாம் செய்தோம். அவ்வளவே. மருந்து சாப்பிட்டும் எத்தனையோ பேருக்கு நோய் தீரவில்லையே? இங்கு மருந்து முக்கியமில்லை. இறைவனின் மீதுள்ள நம்பிக்கையும் இறைநியதியின் மீதுள்ள நம்பிக்கையும் மட்டுமே முக்கியம். இறைநம்பிக்கை இருந்தால் நடப்பவை யாவும் சீராக நடப்பதாகவே உணர்வோம். நோயைக் கொடுத்தவனே அந்நோயை எடுத்தான் என்று நம்ப வேண்டும். அதுதான் விதியை நம்புவதாக அமையும்.

நான் இப்படிச் செய்திருந்தால் இப்படியெல்லாம் ஆகியிருப்பேன்என்று கூறுவதைக் கேள்விப்பட்டிருக்கலாம். அவன் அப்படிச் செய்யக்கூடாது என்பதும் அவன் இப்படித்தான் செயல்பட வேண்டும் என்பதே இறைநியதி. அதற்கேற்பவே செயல்பட்டான். இறைவன் நினைத்ததை அடைந்தான். ஆகவே இப்படிச் செய்திருந்தால் என்று கூறுவதே விதியை நம்புவதில் ஏற்பட்டுள்ள குறைபாடு என்றுதான் சொல்ல வேண்டும். சற்றுத் தாமதித்திருந்தால்  இந்த விபத்திலிருந்து தப்பித்திருக்கலாம். சற்றுப் பொறுத்திருந்தால் இதைவிட அழகான பெண்ணை மணந்திருக்கலாம் என்றெல்லாம் பலர் பேசுவதைக் கேட்க முடிகிறது. அந்தந்தக் கட்டங்களில் அதையதை நடத்தி முடிப்பவன் இறைவன். அவனுடைய நியதியைத் தாண்டிச் சென்று நாம் ஒன்றும் செய்துவிட முடியாது. எல்லாம் அவனால் ஏற்கெனவே திட்டமிட்ட விதிப்படியே நடைபெறுகிறது.

ஆகவே மேற்கண்ட நான்கையும் நம்பிக்கைகொண்டோரின் செயல்பாடுகளில் மாற்றம் தெரிய வேண்டும். பிறரின் செயல்பாடுகளுக்கும் நபிகளாரின் கூற்றை நம்பிக்கைகொண்டோருக்கும் இடையே ஒரு வித்தியாசம் இருக்க வேண்டும். நம் செயல்பாடுகள் நபிகளாரைப் பின்பற்றுமாறு பிறரைத் தூண்ட வேண்டும். அத்தகைய மாற்றங்களை நம் செயல்பாடுகள் ஏற்படுத்தும்வண்ணம் நம் நம்பிக்கை வளரவும் வலுப்பெறவும் முயல்வோம்.

=========================





ஞாயிறு, 17 ஜனவரி, 2016

ஓரணியில் இணைவோம்!


முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.,

ஒரு கொடி தன்னை நிலைநிறுத்திக்கொள்ள ஒரு மரத்தைத் தேடுவதைப்போல் முஸ்லிம் கட்சிகள் தம்மை நிலைநிறுத்திக்கொள்ள ஏதேனும் ஒரு திராவிடக் கட்சியைச் சார்ந்து நின்றே பழகிவிட்டன. எப்போது சுயமாக வளர்வது? இன்னும் நடைவண்டியைப் பிடித்துக்கொண்டே நடந்தால் சுயமாகத் தம் கால்களால் நடப்பது எப்போது?

முஸ்லிம் சமுதாயக் கட்சிகளே! நீங்கள் ஓரணியில் திரள மாட்டீர்களா? உங்களைப் பற்றிய பலம் உங்களுக்கே எப்போது தெரிய வரும்? யானை தன் பலமறியாமல் பிணைக்கப்பட்ட சங்கிலியில் சிக்குண்டு கிடப்பதைப்போல், திராவிட கட்சிகளைப் பற்றிக்கொண்டே எத்தனைக் காலம்தான்  கடத்தப்போகின்றீர்கள்?

சமுதாய மக்களுக்கு ஒரு பாதிப்பு என்றவுடன் சாதி, சமயம் பாராமல் நேரத்தையும் காலத்தையும் பாராமல் ஓடி ஓடி உழைத்தீர்களே? ஏன்? கட்சி பேதம்கூடப் பார்க்காமல் எல்லா முஸ்லிம் கட்சிகளும் ஒருங்கிணைந்து களப்பணியாற்றினீர்களே, தேர்தல் என்றால் மட்டும் ஓரணியில் ஒருங்கிணையாமல் காத தூரம் வெருண்டோடுவதேன்? தயங்கித் தயங்கிப் பதுங்குவதேன்?

ஒரே இறைவனான அல்லாஹ்வையும் ஒரே தூதரையும் பின்பற்றுகின்ற நீங்கள் ஓரணியில் இணையாமல் திராவிடக் கட்சிகளையே சார்ந்து நிற்க போட்டிபோடுவதேன்? உங்களின் இருப்பைக் காட்ட முனையக்கூடாதா? அதற்காக ஓர் ஒத்திகைகூடப் பார்க்கக்கூடாதா?

இதோ இப்போது நல்லதொரு வாய்ப்பு கனிந்து இருக்கிறது. உயர்ந்தோன் அல்லாஹ் அத்தகைய வாய்ப்பை முஸ்லிம்களுக்கு முன்வந்து தந்திருக்கிறான். ஆம். கடந்த ஆண்டின் ஆழிப்பேரலை போன்ற வெள்ளப் பெருக்கில் சிக்குண்டு, நிர்க்கதியாய் நின்ற மக்களுக்கு நாம் ஓடியோடி உழைத்துள்ளோம். உண்ண உணவும், அருந்த நீரும், படுக்கப் பாயும்  இன்னபிற பொருள்களையும் வழங்கியுள்ளோம். இது முஸ்லிம்கள்மீது ஓர் உயர்ந்த எண்ணத்தையும் நல்ல அடையாளத்தையும் பிறமதச் சகோதரர்கள் உள்ளங்களில் பதித்துள்ளது. எனவே இதைப் பொன்னான வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு தனித்துக் களம் நின்று பார்க்க நீங்கள் எத்தனிக்கக்கூடாதா? அல்லாஹ்வின்மீது நம்பிக்கை வைத்து ஓரணியில் இணையக்கூடாதா? முஸ்லிம் சமுதாயமும் பிற மதச் சகோதரர்களும் இதைத்தான் எதிர்பார்க்கின்றார்கள்.

உள்ளங்களைப் புரட்டிப்போடக்கூடியவன் ஏகன் அல்லாஹ். எனவே கருத்துக் கணிப்புகளையோ பிறர்கூறும் கற்பனை வார்த்தைகளையோ நம்பவேண்டாம். வெற்றி கிடைப்பதற்கான பொன்னான வாய்ப்பு நம் கண்முன் இருக்கிறது. அல்லாஹ்வின்மீது நம்பிக்கை வைத்துத் துணிந்து களம் காணுங்கள். 

முஸ்லிம் லீக், ம.ம.க., எஸ்.டி.பி.ஐ., உள்ளிட்ட முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டு  களம் கண்டால் -அல்லாஹ்வின் உதவியால்- வெற்றி நிச்சயம். நீங்கள் அனைவரும் ஓரணியில் திரண்டுவிட்டால் ஓடோடி உழைப்பதற்காக நம் இளைஞர்கள் காத்திருக்கிறார்கள். அது மட்டுமல்ல, ஒரு வெள்ளிக்கிழமை (ஜும்ஆ) போதுமே! ஒரே நேரத்தில் தமிழகம் முழுவதும் வாக்குச் சேகரித்து விடலாமே? அதைத் தவிர்த்து, பிற மதச் சகோதரர்களிடம் சென்று அன்போடு கேட்டால் நிச்சயம் அவர்களின் உள்ளங்கள் மாற்றமடையும் என்பது திண்ணம்.

முஸ்லிம்கள் அதிகம் வாழும் தொகுதிகளிலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது நாம் ஓடோடி உதவி செய்த தொகுதிகளிலும் நமக்குத்தான் வெற்றி. முஸ்லிம் கட்சிகள் ஓரணியாக ஒன்றிணைந்து  உலமாக்களிடம் சென்று ஆதரவு கேட்டால், அதன்பின் ஜமாஅத்துல் உலமா சபையிலிருந்து ஓர் அறிவிப்பு மட்டும் அவர்களுக்கு வந்துவிட்டால், அதைக் கட்டளையாக ஏற்று ஒவ்வோர் ஆலிமும் தத்தம் பள்ளிகளில் ஜும்ஆ உரை நிகழ்த்தத் தயாராக இருக்கின்றார்கள். எந்தெந்தத் தொகுதிகள் என நீங்கள் முடிவெடுங்கள். ஆலிம்களும் தேர்தல் பணியாற்றத் தயார்நிலையில் இருக்கின்றார்கள். விடுதலைப் போராட்டத்தில் மும்முரமாக ஈடுபட்டுத் தம் இன்னுயிரையும் நாட்டிற்காக ஈந்தவர்கள் உலமாக்கள் என்பதை நினைவில் நிறுத்துங்கள். முஸ்லிம்கள், பிற மதச் சகோதரர்கள் மட்டுமன்றி, உலமாக்களும் தங்களுடைய பங்களிப்பை வழங்கத் தயாராகவே இருக்கின்றார்கள் என்பது உங்களுக்குக் கிடைத்துள்ள குதிரை பலம்.  

காலம் கனிந்து வந்துள்ள இப்போது நீங்கள் ஒன்றிணைந்து ஒத்திகை பார்க்காமல் பிறகு எப்போதுதான் ஒத்திகை பார்க்கப்போகின்றீர்கள்? பிறருக்கு உதவிசெய்ய மட்டும்தான் ஒன்றிணைவீர்களா? இந்தத் தமிழக மக்களின் அரசியல் புனரமைப்பிற்காகவும் அரசியல் மறுவாழ்விற்காகவும், மறுமலர்ச்சிக்காகவும் ஒன்றிணைய மாட்டீர்களா? அரசியல் புரட்சிக்கு வித்திட வேண்டிய தக்க தருணம் கனிந்து வந்திருக்கிறது. முஸ்லிம் சமுதாயக் கட்சிகளே இன்னுமா உறக்கம்? இன்னுமா தயக்கம்? வெவ்வேறு கூட்டணிகளில் பிரிந்து நின்று வாக்குகள் சிதறிப்போகக் காரணமாக இருக்காதீர்கள். ஒருங்கிணைந்து ஒன்றிணைந்து அதிக இடங்கள் பெற்று வெற்றிகாணும் வழிகாணுங்கள். 

========== 




சனி, 16 ஜனவரி, 2016

விரைவில் எதிர்பார்க்கலாம்!

விரைவில் எதிர்பார்க்கலாம்!  

2011  ஜூலை முதல் 2015 டிசம்பர் வரை இப்னுமாஜா, நசாயீ ஆகிய இரண்டு நபிமொழித் தொகுப்புகளை ரஹ்மத் பதிப்பகத்திற்காகத் தமிழாக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தேன். அல்லாஹ்வின் அருளால் அவ்விரண்டு நூல்களின் தமிழாக்கப்பணி முடிவடைந்ததையடுத்து என் சொந்த நூல்களை வெளியிடுவதில் கவனம் செலுத்த உள்ளேன். அதன்படி இன்ஷா அல்லாஹ் 1. பூபாள இராகங்கள் (கவிதை), 2. இறைநம்பிக்கை கொண்டோரே! 3. நபிகளார் நவின்ற மூன்றுகள் ஆகிய நூல்களை விரைவில் எதிர்பார்க்கலாம்.

இப்னுமாஜா, நசாயீ ஆகிய இரண்டு நபிமொழித் தொகுப்புகளையும் ஆறு பாகங்களாகத் தமிழாக்கம் செய்துள்ளேன். இன்ஷா அல்லாஹ் ரஹ்மத் பதிப்பகம் அவற்றை விரைவில் வெளியிடும் என உங்களோடு சேர்ந்து நானும் ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

இன்ஷா அல்லாஹ் 2018ஆம் ஆண்டில் ஸிஹாஹ் சித்தா எனப்படும் ஆதாரப்பூர்வமான ஆறு நபிமொழித் தொகுப்பு நூல்களும் தமிழில் கிடைப்பதற்கான ஏற்பாட்டை ரஹ்மத் பதிப்பகம் செய்து வருகின்றது. அப்பதிப்பகத்தாரின் எண்ணம் குறித்த காலத்தில் நிறைவேற அல்லாஹ் அருள்புரிவானாக!    

சனி, 9 ஜனவரி, 2016

நபிகளார் நவின்ற நான்குகள் (தொடர் 2)


(நிலத்தை அபகரிக்காதே)

முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி எம்.ஏ., எம்.ஃபில்., பிஎச்.டி.

நான் (கலீஃபா) அலீ பின் அபீதாலிப் (ரளி) அவர்களிடம் இருந்தபோது அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, "உங்களிடம் நபி (ஸல்) அவர்கள் எதை இரகசியமாகக் கூறிவந்தார்கள்?'' என்று கேட்டார். இதைக் கேட்டு அலீ (ரளி) அவர்கள் சினமடைந்தார்கள். மேலும், "நபி (ஸல்) அவர்கள் மக்களிடம் மூடி மறைக்கும் விதமாக எதையும் என்னிடம் இரகசியமாகக் கூறவில்லை. எனினும், நான்கு செய்திகளை என்னிடம் கூறினார்கள்'' என்றுரைத்தார்கள். நான், "அவை யாவை, இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே?'' என்று கேட்டேன். அலீ (ரளி) அவர்கள், "தன் தந்தையைச் சபித்தவனை அல்லாஹ் சபிக்கின்றான். அல்லாஹ் அல்லாத மற்றவர் பெயரில் (பிராணிகளை) அறுத்தவனை அல்லாஹ் சபிக்கின்றான். (மார்க்கத்தில் இல்லாத) புதிய விஷயங்களை (மார்க்கத்தின் பெயரால்) உருவாக்கியவனுக்கு அடைக்கலம் அளித்தவனை அல்லாஹ் சபிக்கின்றான். நிலத்தின் (எல்லைக் கல், மைல் கல், வரப்பு உள்ளிட்ட) அடையாளங்களை மாற்றியமை(த்து, பிறர் நிலத்தை அபகரி)ப்பவனை அல்லாஹ் சபிக்கின்றான்'' என்று கூறினார்கள் என அபுத்துஃபைல் ஆமிர் பின் வாஸிலா (ரளி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.  (நூல்: முஸ்லிம்: 4001)

நபி (ஸல்) அவர்கள் எல்லா விஷயங்களையும் மக்கள் அனைவருக்கும் பொதுவாகத்தான்  கூறினார்கள்.  சில நேரங்களில் தனிப்பட்ட நபருக்கு ஒரு செய்தியைச் சொல்லியிருந்தாலும் அது, அச்செய்தியின் தன்மையைப் பொறுத்து, அனைவருக்கும் பொதுவானதுதான். அந்த வகையில் அலீ (ரளி) அவர்களைத் தம் மருமகன் எனக் கருதி எதையும் இரகசியமாக அவர்களுக்குக் கூறவில்லை. அதற்கு அப்பால், அலீ (ரளி) அவர்களோடு ஏதேனும் தருணத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, இந்நான்கு விஷயங்களை அவர்களிடம் கூறியிருக்கலாம். அது இரகசியம் கிடையாது என்பதற்காகத்தான் அலீ (ரளி) அவர்கள் அந்த விஷயங்களை மக்களுக்குக் கூறிவிட்டார்கள்.  நபி (ஸல்) அவர்கள் கூறிய செய்தி எதையும் மறைத்துவிடக் கூடாது என்பதையும் இதில் உள்ளூர உணரலாம்.

இந்நபிமொழியில் கூறப்பட்டுள்ள நான்கு விஷயங்களும் அல்லாஹ்வின் சாபத்திற்குரியவை ஆகும். அவற்றுள் முதலாவது, ‘தன் தந்தையைச் சபித்தவனை அல்லாஹ் சபிக்கின்றான்என்பதாகும். ஒருவன் தன் தந்தையை எவ்வாறு சபிப்பான்? என்று எண்ணத் தோன்றலாம். ஒருவன் தன் தந்தையை நேரடியாகச் சபிக்கமாட்டான். ஆனால் ஒருவன் கோபத்தின்போது தன்னிலை மறந்து, பிறரின் தந்தையைத் திட்டுவான். அவன் இவன் தந்தையைத் திட்டுவான். இவ்வாறுதான் ஒருவன் தன் தந்தையைத் திட்டுகின்றான்; சபிக்கின்றான்.

இது குறித்த நபிமொழி ஒன்றைக் காணலாம். பாவங்களில் பெரும்பாவம் ஒருவன் தன் பெற்றோரைத் திட்டுவதாகும்என நபி (ஸல்) அவர்கள் கூறியபோது, “ஒருவன் எவ்வாறு தன்  பெற்றோரைத் திட்டுவான்?” என்று நபித்தோழர்கள் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவன் ஒருவனின் தந்தையைத் திட்டுவான்; அவன் இவனுடைய தந்தையைத் திட்டுவான். அவனுடைய தாயைத் திட்டுவான்; அவன் இவனுடைய தாயைத் திட்டுவான் எனக் கூறினார்கள். (நூல்: முஸ்னத் அஹ்மத்: 6545) நேரடியாகத் திட்டாவிட்டாலும் மறைமுகமாகப் பெற்றோரைத் திட்டுவதை இந்நபிமொழி சுட்டிக்காட்டுகிறது.

மேற்கண்ட நபிமொழிக்கு மாற்றமாக, ஒருவன் தன் தந்தையை நேரடியாகவே சபிப்பதும் திட்டுவதும் இன்றைய கலியுகத்தில் ஆங்காங்கே காணப்படுகிறது. இது ஒருவரின் திருமணத்திற்குப் பிறகு பரவலாக நடைபெறுகிறது. மார்க்க அறிவில்லாத, பெற்றோரின் சிறப்பை அறியாத சிலர் தம் மனைவியோடு சேர்ந்துகொண்டு, தம் பெற்றோரைத் திட்டுவதும் சபிப்பதும் அரங்கேறுகின்றன. ஈன்றெடுத்து, வளர்த்து, ஆளாக்கிய பெற்றோரைச் சொத்திற்காகவும் சுகத்திற்காகவும் உதாசீனப்படுத்துவதும் இழிவாகக் கருதுவதும் அவர்களின் முதுமையைக்கூடப் பொருட்படுத்தாமல் சுடுசொற்களால் உள்ளத்தைக் காயப்படுத்துவதும் நிகழத்தான் செய்கின்றன. வீட்டைவிட்டு வெளியேற்றுவதும், முதியோர் இல்லத்தில் சேர்ப்பதும், கவனிக்காமல் விட்டுவிடுவதும், செலவுக்குப் பணம் கொடுக்காதிருப்பதும் பிள்ளைகளின் வாடிக்கையாக உள்ளன. இவை போன்ற செயல்பாடுகள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். இல்லையேல் அவன் அல்லாஹ்வால் சபிக்கப்படுவான் என்பது திண்ணம்.

அல்லாஹ் அல்லாதவற்றிற்காக அறுத்துப் பலியிடுபவரை அவன் சபிக்கின்றான். அறுத்துப் பலியிடுவதும் ஒரு வகை வழிபாடே ஆகும். அதை அல்லாஹ் ஒருவனுக்காகவே செய்ய வேண்டும். உம் இறைவனைத் தொழுவீராக! (அவனுக்காக) அறுத்துப் பலியிடுவீராக!” (108: 2) என்று அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான். இது நபிகளார் காலத்தைக் கவனித்துச் சொல்லப்பட்ட ஒரு கூற்றாகும். நபிகளார் காலத்தில், அறியாமையில் ஊறித்திளைத்த மக்கள் தாம் வழிபட்டுவந்த சிலைகளுக்காக அறுத்துப் பலியிட்டு வந்தார்கள். இஸ்லாத்தை ஏற்ற பின்னரும் அறியாத சிலர் அவ்வாறு செய்து வந்தனர். அவர்களை எச்சரிக்கை செய்யுமுகமாகக் கூறப்பட்டதே இந்த அறிவுரை.  தற்காலத்தில் சிலர் தம் அறியாமையால் அவ்வாறு செய்தால் அது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.  இல்லையேல் அவர்கள்மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகும் என்பதை அறிந்துகொள்ளட்டும்.

மூன்றாவது “(மார்க்கத்தில் இல்லாத) புதிய விஷயங்களை (மார்க்கத்தின் பெயரால்) உருவாக்கியவனுக்கு அடைக்கலம் அளித்தவனை அல்லாஹ் சபிக்கின்றான்என்பதாகும். இஸ்லாமிய மார்க்கத்தில் ஏவப்படாத, சொல்லப்படாத, புதிய புதிய செயல்பாடுகளைத் தோற்றுவித்து அவற்றை ஒரு கடமையைப்போல் மாற்ற நினைப்பதுதான் பித்அத் ஆகும். அத்தகைய பல்வேறு செயல்பாடுகள் இன்றைய மக்கள் மத்தியில் பரவியிருக்கின்றன. மார்க்கக் கட்டளைகளை நிறைவேற்றுவதில்கூடச் செலுத்தப்படாத கவனம் மார்க்கத்தின் பெயரால் புதிதுபுதிதாக ஏற்படுத்தப்பட்ட மூடப்பழக்கங்களைப் பின்பற்றுவதில் அதீத கவனம் செலுத்தப்படுகிறது. அவற்றைச் செய்யாமல் விட்டுவிட்டால் தெய்வக் குற்றம் என்பதைப்போல் கருதிக்கொண்டிருக்கின்றார்கள்.  இத்தகைய பொய்யான, புதிய புதிய செயல்பாடுகளைத் தோற்றுவிப்போருக்கு அடைக்கலம் கொடுப்பது அவற்றை அங்கீகரிப்பதற்குச் சமமாகும். எனவே அவர்கள் அல்லாஹ்வின் சாபத்திற்குரியோராக மாறிவிடுகின்றார்கள்.

அதேநேரத்தில் மக்கள் அனைவருக்கும் பயனுள்ள ஒரு புதிய செயல்பாட்டைத் தோற்றுவிப்பதில் தவறில்லை.  ஆனால் அது ஒரு நல்ல செயல்பாடு என்ற எண்ணத்தில் செயல்படுத்த வேண்டுமே தவிர அது ஒரு கடமை என்று கருதக்கூடாது. எவர் ஒரு நற்செயலைத் தோற்றுவித்து, அவருக்குப் பிறகும் அது செயல்படுத்தப்படுகிறதோ அவருக்கு அதற்கான நற்கூலியும், அதைச் செயல்படுத்துவோரின் கூலிகளிலிருந்து எதுவும் குறைந்துவிடாமல் அவர்களின் கூலிகளைப் போன்றும் உள்ளது.

எவர் ஒரு தீயசெயலைத் தோற்றுவித்து, அவருக்குப் பிறகும் அது செயல்படுத்தப் படுகிறதோ அவருக்கு அதற்கான தீமையும், அதைச் செயல்படுத்துவோரின் தீமைகளிலிருந்து எதுவும் குறைந்துவிடாமல் அவர்களின் தீமைகளைப் போன்றும் அவருக்கு உள்ளதுஎன அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை அபூஜுஹைஃபா (ரளி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல்: இப்னுமாஜா: 203)

ஆக இன்றைய காலக்கட்டத்தில் எத்தனையோ நற்செயல்கள் தோற்றுவிக்கப்படுகின்றன. அவை நன்னோக்கத்திலும் நல்லெண்ணத்திலும் தோற்றுவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டால் அதற்கான நற்கூலி அதைத் தோற்றுவித்தவருக்குக் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. அதேநேரத்தில் நன்மைக்கு முரணாகத் தீமையைத் தோற்றுவித்து, தீய வழியைக் காண்பித்து, அதை மக்கள் பின்பற்றுமாறு செய்தால், யார் யாரெல்லாம் அத்தீமையைப் பின்பற்றினார்களோ அவர்களின் தீமையும் அதைத் தோற்றுவித்தவருக்கே கிடைக்கும். எனவே நாம் நல்லவற்றைப் பரப்புவோராகவும் தீயவற்றைத் தடுப்போராகவும் இருக்க வேண்டும் என்பதை அறிவோம்.

நான்காவது, “நிலத்தின் (எல்லைக் கல், மைல் கல், வரப்பு உள்ளிட்ட) அடையாளங்களை மாற்றியமை(த்து, பிறர் நிலத்தை அபகரி)ப்பவனை அல்லாஹ் சபிக்கின்றான்'' என்பதாகும். இன்று பெரும்பாலான பிரச்சனைகள் நிலத்தைச் சார்ந்த மோசடிகள்தாம். எவர் மோசடி செய்தாரோ அவர் நம்மைச் சார்ந்தவர் இல்லைஎன்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம் 126)

எவர் ஒரு சாண் அளவு நிலத்தை அநியாயமாக அபகரித்துக்கொள்கிறாரோ அது ஏழு பூமிகளாக மறுமை  நாளில் அவரது கழுத்தில் (வளையமாக) மாட்டப்படும்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரீ: 3198) 

அந்த வகையில் எவரது நிலத்தையும் அநியாயமாக அபகரித்துக்கொள்ள யாருக்கும் உரிமையில்லை என்பதைப் பல்வேறு நபிமொழிகள் உறுதிப்படுத்துகின்றன. இன்றைய கலியுகத்தில் மனிதன் ஒரு சாண், ஓர் அடி என்பதையெல்லாம் தாண்டி ஏக்கர் கணக்கில் பிறரின் சொத்தை அபகரித்துக்கொள்கிறான். ஆசையின் வலையில் சிக்குண்ட, அறியாமையில் உழல்கின்ற, மறுமையின் தண்டனையை அறியாதோர் பலர் இவ்வாறான மோசடிகளில் ஈடுபட்டுவருகின்றனர். அவர்கள் மறுமையின் தண்டனையை உணர்ந்தால் இவ்வாறு செய்ய மாட்டார்கள். நாம் எவரது நிலத்தையும் சிறிதளவும் ஆக்கிரமித்துக்கொள்ளாமல், அபகரித்துக்கொள்ளாமல் இருக்க ஏக இறைவன் அருள்புரிவானாக!

-நான்குகள் தொடரும்










சனி, 19 டிசம்பர், 2015

எங்கள் பள்ளியில் மீலாது நிகழ்வு

எங்கள் பள்ளியில் மீலாது நிகழ்வு.

மழையும் மனிதனும்


           -மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி எம்.ஏ., எம்.ஃபில்.,

மனிதனின் அறிவுக்கும் ஆற்றலுக்கும் அப்பாற்பட்டவன்தான் இறைவன். அவனுடைய நுண்ணறிவுக்கும் ஆற்றலுக்கும் எதிரே மனிதன் என்னதான் போட்டிபோட்டாலும் இறுதியில் இறைவனின் ஆற்றல்தான் மிகைத்து நிற்கும். மனிதன் என்னதான் புதிய புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டறிந்தாலும் இறைவனின் நியதிக்கும் ஆற்றலுக்கும் எதிரே அவன் ஒன்றுமே இல்லை எனலாம்.

கடந்த காலங்களைவிட, அறிவியல் முன்னேற்றத்தின் உச்சாணியில் இருப்பதாகக் கூறிக்கொள்ளும் மனிதன், வருமுன் உரைக்கின்ற பல கருத்துகள் பொய்த்துப்போகின்றன என்பதை நாம்  இன்றும் கண்டுவருகிறோம். அவன் கூறுவது ஓரளவு ஒத்துவரும் என்பதுதான் உண்மை. மழை பொழியப்போகிறது என்று மனிதன் தன் விஞ்ஞான அறிவால் கூறுகின்றான். ஆனால் அதன் அளவு எவ்வளவு, எத்தனை பேர் அதன்மூலம் அழியப்போகின்றார்கள், எத்தனை பேர் அதன்மூலம் பயன்பெறப்போகின்றார்கள், எத்தனைபேரை அது அநாதையாக்கப்போகிறது, எத்தனைபேரை நாசமாக்கப்போகிறது-ஆகிய அனைத்தும் இறைவனின் அறிவுக்கும் ஆற்றலுக்கும் உரியது. இவையெல்லாம் மனித அறிவுக்கு அப்பாற்பட்டது. மனிதன் கணித்துக் கூறுவது ஓரளவு ஒத்துப் போகிறது என்று வேண்டுமானால் கூறலாம்.

இதைத்தான் பின்வரும் வசனத்தில் இறைவன் கூறுகின்றான்: நிச்சயமாக (உலக முடிவு) காலத்தைப் பற்றிய ஞானம் அல்லாஹ்விடத்தில் (மட்டும்)தான் இருக்கிறது. அவனே மழையை இறக்கி வைக்கிறான். அவனே கர்ப்பங்கüல் தரிப்பதையும் அறிவான். (அவனைத் தவிர) எவரும் நாளைக்கு அவர் என்ன செய்வார் என்பதை அறியமாட்டார். புவியின் எந்தப் பகுதியில் இறப்பார் என்பதையும் (அவனைத் தவிர) எவரும் அறியமாட்டார். நிச்சயமாக அல்லாஹ்தான் (இவற்றை) நன்கறிந்தவனாகவும் தெரிந்தவனாகவும் இருக்கிறான். (31: 34)


தண்ணீரால் அழிக்கப்பட்ட சமுதாய மக்களும் இப்புவியில் வாழ்ந்திருக்கின்றார்கள். தொள்ளாயிரத்து ஐம்பது ஆண்டுகள் ஏகத்துவப் பிரச்சாரம் செய்து நம்பிக்கை இழந்துபோன இறைத்தூதர் நூஹ் (அலை) அவர்கள் இறுதியில் இம்மக்களை அழித்துவிடு என்று அல்லாஹ்விடம் வேண்டியபோது, கடும் மழைப்பொழிவால் ஏற்பட்ட வெள்ளத்தால்தான் அவர்கள் அழிக்கப்பட்டனர். அது குறித்தும் திருக்குர்ஆன் பேசுகிறது.

இவ்வுலகில் உள்ள அனைத்தையுமே அல்லாஹ் தண்ணீரிலிருந்து படைத்ததாகக் கூறுகின்றான். ஊர்வன, பறப்பன, நடப்பன யாவும் தண்ணீரால்தான் படைக்கப்பட்டன. தண்ணீர்தான் படைப்புகள் அனைத்திற்கும் மூலப்பொருள் என்பதைப் பின்வரும் இறைவசனம் எடுத்தோதுகிறது:  "(மனிதர்களே!) ஊர்ந்து செல்லக்கூடிய (உயிர்ப் பிராணிகள்) அனைத்தையும் அல்லாஹ் ஒரேவித தண்ணீரைக் கொண்டு படைத்திருந்தபோதிலும் (அவை யாவும் ஒரே வகையாக இருக்கவில்லை.) அவற்றுள் சில தம் வயிற்றால் (



பாம்புகளைப் போல்) ஊர்ந்து செல்கின்றன. அவற்றுள் சில இரு கால்களால் நடக்கின்றன. அவற்றுள் சில நான்கு கால்களால் நடக்கின்றன. (இவ்வாறு) அல்லாஹ் தான் விரும்பியவற்றை (விரும்பியவாறு) படைப்பான். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தின்மீதும் மிக்க ஆற்றலுடையவன்.
'' (24: 45)

அந்தத் தண்ணீரையே மனிதர்கள் பருகுகின்றார்கள். அந்தத் தண்ணீரையே எல்லாவற்றிற்கும் பயன்படுத்துகின்றார்கள். அதை இறைவன் உப்புநீராக மாற்றிவிட்டால் பருக இயலுமா என்று அல்லாஹ் மனிதர்களைப் பார்த்து வினாத் தொடுக்கின்றான்: "நீங்கள் குடிக்கின்ற தண்ணீரைக் கவனித்தீர்களா? மேகத்திலிருந்து அதனை நீங்கள் பொழிய வைக்கின்றீர்களா? அல்லது நாம் பொழிய வைக்கின்றோமா? நாம் விரும்பினால் அதனை (நீங்கள் குடிக்க முடியாத) உப்புநீராக ஆக்கியிருப்போம். (இதற்கு) நீங்கள் நன்றி செலுத்த வேண்டாமா?''  (56: 68-70)


ஒரே பொருள், ஆக்கவும், அழிக்கவும் உயிர் வாழவும் பயன்படுவது விந்தையிலும் விந்தை. தண்ணீர் இறைவனின் மகத்தான அருட்கொடைகளுள் ஒன்று. அதை உரிய முறையில் பயன்படுத்துவதும் அதை வழங்கியமைக்காக அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவதும் மனிதனின் கடமையாகும். அதைப் பாதுகாப்பதும் அதற்கான ஓடுபாதைகளைத் தடுக்காமல் இருப்பதும் அதற்கு நாம் கொடுக்கும் மரியாதையாகும். அதனுடைய ஓடுபாதையை நாம் தடுத்துக்கொண்டால், அது தேங்கிநிற்குமிடத்தை நாம் ஆக்கிரமித்துக்கொண்டால் அது நம் வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கிவிடும், ஏன், உயிரையே பறித்துக்கொள்ளும் என்பதை நாம் இந்த மழைக்காலத்தில் நேரடியாகப் பார்த்துப் புரிந்துகொண்டோம். அவரவர்க்குச் சேர வேண்டிய உரிமையை எவ்வாறு பறிக்கக்கூடாதோ அதேபோல் தண்ணீர் தேங்குமிடத்தை நாம் ஆக்கிரமித்துக்கொள்ளக்கூடாது. அல்லது ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட வீடுகளை நாம் வாங்கிக் குடியிருக்கக் கூடாது. அப்படி நாம் முறையாகச் செயல்பட்டால் ஆக்கிரமிப்பாளர்கள் அடங்குவார்கள். அவர்களின் பேராசையும் அடங்கும்.


இவை எல்லாவற்றையும் தாண்டி, மற்றொரு கோணத்தில் பார்க்கும்போது மனிதர்களிடம் பாவங்கள் ம-ந்துபோய்விட்டன. எங்கு நோக்கினும் பாவங்கள் மிகுந்து காணப்படுகின்றன. சில பாவங்களை அரசாங்கமே அனுமதிக்கிறது. இறைவன் தடுத்தவற்றை மீறி மனிதனும் அரசும் செயல்படுவதால் அந்த இறைவனின் கோபப் பார்வை மனிதர்கள்மீது அவ்வப்போது ஏற்படுகிறது. அதன் ஒரு பகுதிதான் கடுமையான இந்த அடைமழையும் அதனால் ஏற்பட்ட பெருவெள்ளமும் ஆகும். இதைப் பார்த்த பிறகாவது மனிதர்கள் பாவங்கள் செய்வதைவிட்டு விலகிக்கொள்ள முனைய வேண்டும். இல்லையேல் இதைவிடக் கடுமையான ஒரு பெருவெள்ளத்தை அனுப்புவது அல்லாஹ்வுக்கு அவ்வளவு சிரமமில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

எங்கு நோக்கினும் மது குடித்தலும் மாதுவை அனுபவித்தலும் தங்கு தடையின்றி நடைபெறுகின்றது. இந்த இரட்டைப் பாவங்கள்தாம் மனித சமுதாயத்தையே சீரழிக்கக்கூடியவை. சமுதாயத்தைக் கட்டமைத்துள்ள ஒழுக்கத்தையும் பண்பாட்டையும் சிதைக்கக்கூடியவை. மது குடிப்பவனுக்கு எண்பது கசையடியும் விபச்சாரம் செய்பவனுக்கு நூறு கசையடியும் வழங்க வேண்டுமென்பது இறைவனின் ஆணை. விபச்சாரம் செய்வோர் மணமானவர்களாக இருந்தால் அவர்களைக் கல்லெறிந்து கொல்ல வேண்டும் என்பது இறைக்கட்டளை. இவ்வளவு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தும் அப்பாவங்கள் அரசு அங்கீகாரத்துடன் நடப்பது எவ்வளவு வேதனையான விஷயம் என்பதை நாம் உள்ளூர உணர வேண்டும்.


ஏகத்துவக் கலிமாவை மொழியாதவர்கள் அப்பாவங்களைச் செய்தால், ஏகத்துவக் கலிமாவை  மொழிந்தவர்கள் தம் மனத்தால் அப்பாவங்களை வெறுக்க வேண்டும். ஏகத்துவக் கலிமாவை மொழிந்தவர்கள் யாரேனும் மது குடிப்பதையோ விபச்சாரம் செய்வதையோ கண்டால் நேரடியாகச் சென்று தடுக்க வேண்டும். அதற்கான சூழ்நிலை இல்லையென்றால், அது மிகப் பெரும் பாவம் என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். இன்றைய சூழ்நிலையில் மது இல்லாத இடமே இல்லை. இத்தகைய  சூழலில் வாழ்கின்ற முஸ்லிம்கள்கூட மதுவுக்கு அடிமையாகும் அபாயகரமான நிலை உள்ளது. 


எனவே நாம் நம்மைச் சார்ந்தவர்களைப் பாதுகாக்க மது, விபச்சாரம் ஆகியவற்றின் தீமையை அவ்வப்போது உணர்த்திக்கொண்டே இருக்க வேண்டும். மதுவைத் தொட்டவன் அந்நிய மாதுவைத் தொடுவான் அல்லது கொலை செய்யத் துணிவான். இது மதியை மயக்கும் மதுவின் தீய தூண்டலால் ஏற்படுவதாகும். எனவே நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.


இறைவனின் கோபப்பார்வையால் கொட்டித் தீர்த்த மழை இனி ஒருபோதும் நமக்கு வரக்கூடாது. இறைவனின் அருளாக மட்டுமே மழை வரவேண்டும். அதற்கு நாம் அனைவரும்  செய்த பாவங்களை எண்ணி வருந்தி, இறைவனிடம் பாவமீட்சி பெற இரு கைகளை அவனை நோக்கி உயர்த்த வேண்டும். நாம் செய்த குற்றங்களை நம் உள்ளங்கள் இசைவோடு ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை நம் அனைவருக்கும் நல்குவானாக!


==========================

என் செய்தியை வெளியிட்ட பத்திரிகைகளுக்கு நன்றி!

இனிய திசைகள், மரபு வழி, மணிச்சுடர் (நாளிதழ்), சமஉரிமை, மனாருல் ஹுதா ஆகிய பத்திரிகைகளுக்கு என் மனமார்ந்த நன்றி!







முகப்பு அட்டையில் என் செய்தியை வெளியிட்ட சமவுரிமை இதழுக்கு நன்றி.


என் செய்தியை வெளியிட்ட சமவுரிமை இதழுக்கு நன்றி.
வாழ்த்தியமைக்கு நன்றி