செவ்வாய், 9 பிப்ரவரி, 2016

நபிகளார் நவின்ற நான்குகள் (தொடர்-3)


முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி எம்.ஏ., எம்.ஃபில்., பிஎச்.டி.

நான்கு விஷயங்களை நம்பிக்கைகொள்ளாத வரை எந்த அடியாரும் இறைநம்பிக்கைகொண்டவராக மாட்டார். 1. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. நான் அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஆவேன். என்னை  அவன் சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பி வைத்தான் என உறுதிமொழிதல். 2. மரணம் உண்டு என நம்புதல். 3. (அனைவரும்) இறந்தபின் (உயிர்கொடுத்து) எழுப்பப்படும் என்பதை நம்புதல், 4. விதியை நம்புதல் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அலீ (ரளி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல்: திர்மிதீ: 2071)

மேற்கூறப்பட்ட நான்கும் இறைநம்பிக்கையின் அடிப்படைவிதிகளுள் அடங்கும். இந்த நம்பிக்கைகளுள் ஒன்று இல்லாவிட்டாலும் முஸ்லிமாக இருக்க முடியாது. இவற்றுள் முதலாவது ஏகத்துவக் கலிமா ஆகும். அதைச் சொன்னால்தான் எவரும் இஸ்லாமிய வட்டத்திற்குள் வர முடியும். இதை ஏற்றுக்கொண்டோருக்கு இதில் ஏதும் ஐயமில்லை. அல்லாஹ்தான் இறைவன்; அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை; முஹம்மது நபியவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதர்; அவர்களுக்கு அவன் சத்திய மார்க்கத்தைக் கொடுத்து அனுப்பினான்; அத்தோடு இருபத்து மூன்றாண்டுகளில் சிறிது சிறிதாக வேதவசனங்களை வழங்கினான் என்றெல்லாம் நம்பிக்கைகொண்டுள்ள நம்முள் பலர் அந்தச் சத்திய மார்க்கத்தை முழுமையாகப் பின்பற்றாததே அவர்கள் அதில் சந்தேகம் கொண்டுள்ளார்களோ என்ற ஐயத்தை நமக்கு ஏற்படுத்துகிறது.

இல்லையென்றால் இதுதான் சத்திய மார்க்கம் எனத் தெரிந்தும் ஏன் பிற மதக் கலாச்சாரங்களை விடமுடியாமல் கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருக்க வேண்டும்? இஸ்லாமிய மார்க்கத்தைச் சத்தியம் என்று ஏற்றுக்கொண்ட பின்னர் எந்த மதத்தில் ஏற்கெனவே இருந்தார்களோ அதையெல்லாம் அப்படியே விட்டுவிட வேண்டியதுதானே? ஏன் முன்னோர்கள் செய்தவற்றை விட முடியவில்லை? அப்படியென்றால் அவர்கள் இன்னும் முழுமையாக நம்பவில்லை. அவர்களால் இன்னும் முழுமையாக இஸ்லாத்திற்குள் நுழைய முடியவில்லை என்றுதான் பொருள். இதனால்தான் அல்லாஹ் ஒரு வசனத்தில் கூறுகின்றான்: இறைநம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (தயங்காமல்) இஸ்லாமிய மார்க்கத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள். (2: 208) நம்பிக்கை கொண்டவர் எவ்வாறு மீண்டும் நம்பிக்கை கொள்வது என்றால், அவர் முழுமையாக இஸ்லாமிய மார்க்கத்திற்குள் நுழைய வேண்டும் என்பதே இவ்வசனத்தின் கருத்தாகும். அந்த அடிப்படையில் மேற்கண்ட நபிமொழி நமக்குக் கூறுவது என்னவென்றால், இறைநம்பிக்கை கொண்டவருக்கு, தாம் கொண்ட நம்பிக்கை உண்மைதான் என்ற உறுதியிருந்தால் அந்த நபி என்ன கூறினாரோ அதை முற்றிலுமாகப் பின்பற்ற வேண்டும். அவர் காட்டித்தந்த வழிமுறைகளைப் பின்பற்றுவதில் பெருமிதம் கொள்ள வேண்டுமே தவிர, அதைப் பின்பற்றுவதில் தயக்கமோ வெட்கமோ ஏற்படக் கூடாது. அதுதான் அந்த நம்பிக்கையின் வெளிப்பாடாக இருக்க முடியும். எவர் நபிவழியைப் பின்பற்ற வெட்கப்படுகின்றாரோ அவர் இன்னும் முழுமையாக நம்பிக்கை கொள்ளவில்லை என்பதை உறுதிசெய்துகொள்ளட்டும்.

இரண்டாவது மரணம் உண்டு என நம்புதல். இதுதான் எல்லோருக்கும் தெரியுமே! இதை எல்லோரும் அறிந்திருக்கின்றார்கள். முஸ்லிம் அல்லாதோரும் மரணம் உண்டென நம்புகின்றார்கள். இங்கு நபி (ஸல்) அவர்களின் நோக்கம் என்னவென்றால், மரணம் உண்டென நம்பியுள்ளவர்களின் செயல்பாடுகளில் வித்தியாசம் இருக்க வேண்டும் என்பதேயாகும். மரணத்தை நம்பியுள்ளவன் எல்லா மரணத்தையும் அல்லாஹ்வே ஏற்படுத்துகிறான்; அவனுடைய ஆற்றலால்தான் அது ஏற்படுகிறது; அவனைத் தவிர வேறு யாரும் அதை இயக்குவதில்லை என்று  நம்ப வேண்டும். அது மட்டுமின்றி, மரணிக்கப் போகின்ற ஒருவன் எவ்வாறு வாழ வேண்டும் என்ற நியதியும் உண்டு.  நிரந்தரமாக இந்த உலகத்திலேயே தங்கிவிடுவதைப் போன்ற உணர்வோடு மனிதனுடைய செயல்பாடுகள் உள்ளன. ஆடம்பரமாக வீட்டைக் கட்டுதல், ஆடம்பரமாக வாழ்தல், எளியோரை அவமதித்தல், பிறரை ஏளனமாகக் கருதுதல், பெருமையாக நடத்தல், இறைக் கட்டளைகளை நிராகரித்தல் அல்லது மீறுதல், அல்லாஹ்வை முறைப்படி வணங்காதிருத்தல் இப்படி எத்தனையெத்தனையோ மனிதன் செய்துகொண்டிருக்கிறான். மரணத்தை நம்பியவனின்  செயல்பாடுகளா இவை? அப்படியென்றால் அவன் மரணத்தை இன்னும் முழுமையாக நம்பவில்லை என்றுதான் பொருள். எவனுடைய செயல்பாடுகள் மரணத்தை நினைவுகூர்ந்த வண்ணம் உள்ளனவோ அவன்தான் மரணத்தை நம்பியவன். எவனுடைய செயல்பாடுகள் உலக ஆசையைத் தூண்டுபவையாக உள்ளனவோ அவன் இன்னும் முழுமையாக மரணத்தை நம்பவில்லை என்றே பொருள்.

மூன்றாவது, அனைவரும் இறந்தபின் உயிர்கொடுத்து எழுப்பப்படும் என்பதை நம்புதல் ஆகும். இதை முஸ்லிம்கள் மட்டுமே நம்பிக்கைகொண்டுள்ளனர். இறந்த பின் சொர்க்கம் நரகம் உண்டென முஸ்லிம்கள் அல்லாத வேறு மக்களும் நம்பியுள்ளனர்.  இறந்தோர் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதையும் அதன் பின் விசாரணை நடைபெறும் என்பதையும் நம்பியோரின்  செயல்பாடுகள் முற்றிலும் வித்தியாசமானவையாக இருக்கும். ஏனெனில் அத்தகைய மனிதனுடைய செயல்பாடுகளில் மிகுந்த கவனம் இருக்கும். நாம் யாருக்கும் அநியாயம் செய்துவிடக்கூடாது; அப்படிச் செய்துவிட்டால் அது நாளை மறுமையில் விசாரணைக்கு வரும் என்பதை நம்பியுள்ளவன் பிறருக்குத் தீங்கு விளைவித்துவிடக் கூடாது என்பதில் கவனமாகவே இருப்பான். அந்த அச்சம் இல்லாதவன்தான் தன் விருப்பத்திற்கேற்பச் செயல்பட்டுக் கொண்டிருப்பான். இவ்வுலகில் எவன் என்ன செய்தாலும் நாளை அல்லாஹ்விடம் நடைபெறவிருக்கின்ற விசாரணையில் மாட்டிக்கொள்வான். இறந்தபின் உயிர்கொடுத்து எழுப்பப்படும் என நம்பிக்கை கொண்டவன் நிச்சயமாகப் பிறருக்குத் தொல்லைகொடுப்பவனாகவோ அநியாயம் செய்பவனாகவோ தீங்குகள் செய்பவனாகவோ இருக்க மாட்டான். அத்தகைய நற்பண்பை எவன் கொண்டிருக்கின்றானோ அவனே, இறந்தபின் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை முற்றிலுமாக நம்பியவன்.

நான்காவது விதியை நம்புதல் ஆகும். இதை முஸ்லிம்களும் மற்றவர்களும் நம்பியே உள்ளனர். முஸ்லிம்கள் நம்புவதற்கும் மற்றவர்கள் நம்பியுள்ளதற்கும் இடையே வித்தியாசம் இருக்க வேண்டும். தீதும் நன்றும் பிறர் தர வாராஎன்ற கூற்றின்படி நன்மையும் தீமையும் இறைவனின் ஏற்பட்டால் நடைபெறுகின்றன. அவன் விதித்தபடி நமக்கு அது கிடைக்கிறது என்ற நம்பிக்கை வேண்டும். நன்மைகள் கிடைக்கும்போதெல்லாம் மகிழ்வோடு ஏற்றுக்கொள்கின்ற நாம், சோதனைகள் ஏற்பட்டால் மட்டும் இறைவனைத் திட்டுகின்றோம். அல்லது அவனை நினைத்து நொந்துகொள்கிறோம். இந்த இறைவன் ஏன்தான் என்னை மட்டும் இப்படிச் சோதிக்கிறானோஎன்றெல்லாம் நாம் பிதற்றுகிறோம். விதியை முற்றிலுமாக நம்பியவன் இவ்வாறு கூற மாட்டான். இன்பம் வரும்போது இனிதாக ஏற்றுக்கொள்கின்ற நாம்  துன்பம் வரும்போதும் அதைப் பொறுமையோடு ஏற்றுக்கொள்கின்ற பக்குவம் பெற வேண்டும். அதுதான் விதியை நம்புவதாக அமையும். இன்பம்-துன்பம் இரண்டையும் சமமாக ஏற்றுக்கொள்ளக்கூடிய பக்குவம் வந்துவிட்டால் அவனே இறைவிதியையும் நியதியையும் முழுமையாக நம்பியவன் ஆவான்.

மனிதன் ஏழையாக இருப்பதும், செல்வனாக இருப்பதும், சோதிக்கப்படுவதும், துன்பத்திற்கு உள்ளாக்கப்படுவதும்பிள்ளைப்பேறு கிடைப்பதும் கிடைக்காதிருப்பதும், வியாபாரத்தில் வளம் ஏற்படுவதும் ஏற்படாதிருப்பதும் எல்லாம் அவனது விதியே. அவனது விதிப்படி எல்லாம் செவ்வனே நடைபெறும். விதியை நம்பிவிட்டு நாம் ஒன்றுமே செய்யாதிருக்கக்கூடாது. நாம் செய்ய வேண்டியதைச் செய்துவிட்டு, அதனால் கிடைக்கின்ற பலன்களை அனுபவித்துக்கொண்டு இதுவே இறைவனின் நியதி என்று எண்ணிக்கொள்ள வேண்டும். நோயைத் தருவதும் அதற்காக நாம் மருந்து உண்பதும் அதன்பின் அது நீங்குவதும் இறைவனின் நியதிதான். நான் மருந்து உண்டதால்தான் நோய் நீங்கியது என்று கூறக்கூடாது. நோயைக் கொடுத்தவன் அதை நீக்குவதற்கான வழியைக் காண்பித்தான். நாம் செய்தோம். அவ்வளவே. மருந்து சாப்பிட்டும் எத்தனையோ பேருக்கு நோய் தீரவில்லையே? இங்கு மருந்து முக்கியமில்லை. இறைவனின் மீதுள்ள நம்பிக்கையும் இறைநியதியின் மீதுள்ள நம்பிக்கையும் மட்டுமே முக்கியம். இறைநம்பிக்கை இருந்தால் நடப்பவை யாவும் சீராக நடப்பதாகவே உணர்வோம். நோயைக் கொடுத்தவனே அந்நோயை எடுத்தான் என்று நம்ப வேண்டும். அதுதான் விதியை நம்புவதாக அமையும்.

நான் இப்படிச் செய்திருந்தால் இப்படியெல்லாம் ஆகியிருப்பேன்என்று கூறுவதைக் கேள்விப்பட்டிருக்கலாம். அவன் அப்படிச் செய்யக்கூடாது என்பதும் அவன் இப்படித்தான் செயல்பட வேண்டும் என்பதே இறைநியதி. அதற்கேற்பவே செயல்பட்டான். இறைவன் நினைத்ததை அடைந்தான். ஆகவே இப்படிச் செய்திருந்தால் என்று கூறுவதே விதியை நம்புவதில் ஏற்பட்டுள்ள குறைபாடு என்றுதான் சொல்ல வேண்டும். சற்றுத் தாமதித்திருந்தால்  இந்த விபத்திலிருந்து தப்பித்திருக்கலாம். சற்றுப் பொறுத்திருந்தால் இதைவிட அழகான பெண்ணை மணந்திருக்கலாம் என்றெல்லாம் பலர் பேசுவதைக் கேட்க முடிகிறது. அந்தந்தக் கட்டங்களில் அதையதை நடத்தி முடிப்பவன் இறைவன். அவனுடைய நியதியைத் தாண்டிச் சென்று நாம் ஒன்றும் செய்துவிட முடியாது. எல்லாம் அவனால் ஏற்கெனவே திட்டமிட்ட விதிப்படியே நடைபெறுகிறது.

ஆகவே மேற்கண்ட நான்கையும் நம்பிக்கைகொண்டோரின் செயல்பாடுகளில் மாற்றம் தெரிய வேண்டும். பிறரின் செயல்பாடுகளுக்கும் நபிகளாரின் கூற்றை நம்பிக்கைகொண்டோருக்கும் இடையே ஒரு வித்தியாசம் இருக்க வேண்டும். நம் செயல்பாடுகள் நபிகளாரைப் பின்பற்றுமாறு பிறரைத் தூண்ட வேண்டும். அத்தகைய மாற்றங்களை நம் செயல்பாடுகள் ஏற்படுத்தும்வண்ணம் நம் நம்பிக்கை வளரவும் வலுப்பெறவும் முயல்வோம்.

=========================





கருத்துகள் இல்லை: