(நிலத்தை அபகரிக்காதே)
முனைவர் மௌலவி நூ.
அப்துல் ஹாதி பாகவி எம்.ஏ., எம்.ஃபில்., பிஎச்.டி.
நான் (கலீஃபா) அலீ
பின் அபீதாலிப் (ரளி) அவர்களிடம் இருந்தபோது அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, "உங்களிடம் நபி (ஸல்) அவர்கள் எதை இரகசியமாகக் கூறிவந்தார்கள்?'' என்று கேட்டார். இதைக் கேட்டு அலீ (ரளி) அவர்கள்
சினமடைந்தார்கள். மேலும், "நபி (ஸல்) அவர்கள் மக்களிடம் மூடி மறைக்கும் விதமாக
எதையும் என்னிடம் இரகசியமாகக் கூறவில்லை. எனினும், நான்கு செய்திகளை என்னிடம்
கூறினார்கள்'' என்றுரைத்தார்கள். நான், "அவை யாவை, இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே?'' என்று கேட்டேன். அலீ (ரளி) அவர்கள், "தன் தந்தையைச் சபித்தவனை அல்லாஹ் சபிக்கின்றான்.
அல்லாஹ் அல்லாத மற்றவர் பெயரில் (பிராணிகளை) அறுத்தவனை அல்லாஹ் சபிக்கின்றான். (மார்க்கத்தில்
இல்லாத) புதிய விஷயங்களை (மார்க்கத்தின் பெயரால்) உருவாக்கியவனுக்கு அடைக்கலம் அளித்தவனை
அல்லாஹ் சபிக்கின்றான். நிலத்தின் (எல்லைக் கல், மைல் கல், வரப்பு உள்ளிட்ட) அடையாளங்களை மாற்றியமை(த்து, பிறர் நிலத்தை அபகரி)ப்பவனை அல்லாஹ் சபிக்கின்றான்'' என்று கூறினார்கள் என அபுத்துஃபைல் ஆமிர் பின் வாஸிலா
(ரளி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல்:
முஸ்லிம்: 4001)
நபி (ஸல்) அவர்கள்
எல்லா விஷயங்களையும் மக்கள் அனைவருக்கும் பொதுவாகத்தான் கூறினார்கள்.
சில நேரங்களில் தனிப்பட்ட நபருக்கு ஒரு செய்தியைச் சொல்லியிருந்தாலும் அது, அச்செய்தியின் தன்மையைப் பொறுத்து, அனைவருக்கும் பொதுவானதுதான். அந்த வகையில் அலீ
(ரளி) அவர்களைத் தம் மருமகன் எனக் கருதி எதையும் இரகசியமாக அவர்களுக்குக் கூறவில்லை.
அதற்கு அப்பால், அலீ (ரளி) அவர்களோடு ஏதேனும் தருணத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, இந்நான்கு விஷயங்களை அவர்களிடம் கூறியிருக்கலாம்.
அது இரகசியம் கிடையாது என்பதற்காகத்தான் அலீ (ரளி) அவர்கள் அந்த விஷயங்களை மக்களுக்குக்
கூறிவிட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறிய
செய்தி எதையும் மறைத்துவிடக் கூடாது என்பதையும் இதில் உள்ளூர உணரலாம்.
இந்நபிமொழியில் கூறப்பட்டுள்ள
நான்கு விஷயங்களும் அல்லாஹ்வின் சாபத்திற்குரியவை ஆகும். அவற்றுள் முதலாவது, ‘தன் தந்தையைச் சபித்தவனை அல்லாஹ் சபிக்கின்றான்’ என்பதாகும். ஒருவன் தன் தந்தையை எவ்வாறு சபிப்பான்? என்று எண்ணத் தோன்றலாம். ஒருவன் தன் தந்தையை நேரடியாகச்
சபிக்கமாட்டான். ஆனால் ஒருவன் கோபத்தின்போது தன்னிலை மறந்து, பிறரின் தந்தையைத் திட்டுவான். அவன் இவன் தந்தையைத்
திட்டுவான். இவ்வாறுதான் ஒருவன் தன் தந்தையைத் திட்டுகின்றான்; சபிக்கின்றான்.
இது குறித்த நபிமொழி
ஒன்றைக் காணலாம். “பாவங்களில் பெரும்பாவம் ஒருவன் தன் பெற்றோரைத்
திட்டுவதாகும்” என நபி (ஸல்) அவர்கள் கூறியபோது, “ஒருவன் எவ்வாறு தன் பெற்றோரைத் திட்டுவான்?” என்று நபித்தோழர்கள் கேட்டார்கள். அதற்கு நபி
(ஸல்) அவர்கள், “அவன் ஒருவனின் தந்தையைத் திட்டுவான்; அவன் இவனுடைய தந்தையைத் திட்டுவான். அவனுடைய தாயைத்
திட்டுவான்; அவன் இவனுடைய தாயைத் திட்டுவான் எனக் கூறினார்கள்.
(நூல்: முஸ்னத் அஹ்மத்: 6545) நேரடியாகத் திட்டாவிட்டாலும் மறைமுகமாகப் பெற்றோரைத்
திட்டுவதை இந்நபிமொழி சுட்டிக்காட்டுகிறது.
மேற்கண்ட நபிமொழிக்கு
மாற்றமாக, ஒருவன் தன் தந்தையை நேரடியாகவே சபிப்பதும் திட்டுவதும்
இன்றைய கலியுகத்தில் ஆங்காங்கே காணப்படுகிறது. இது ஒருவரின் திருமணத்திற்குப் பிறகு
பரவலாக நடைபெறுகிறது. மார்க்க அறிவில்லாத, பெற்றோரின் சிறப்பை அறியாத சிலர் தம் மனைவியோடு
சேர்ந்துகொண்டு, தம் பெற்றோரைத் திட்டுவதும் சபிப்பதும் அரங்கேறுகின்றன.
ஈன்றெடுத்து, வளர்த்து, ஆளாக்கிய பெற்றோரைச் சொத்திற்காகவும் சுகத்திற்காகவும்
உதாசீனப்படுத்துவதும் இழிவாகக் கருதுவதும் அவர்களின் முதுமையைக்கூடப் பொருட்படுத்தாமல்
சுடுசொற்களால் உள்ளத்தைக் காயப்படுத்துவதும் நிகழத்தான் செய்கின்றன. வீட்டைவிட்டு
வெளியேற்றுவதும், முதியோர் இல்லத்தில் சேர்ப்பதும், கவனிக்காமல் விட்டுவிடுவதும், செலவுக்குப் பணம் கொடுக்காதிருப்பதும் பிள்ளைகளின்
வாடிக்கையாக உள்ளன. இவை போன்ற செயல்பாடுகள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். இல்லையேல்
அவன் அல்லாஹ்வால் சபிக்கப்படுவான் என்பது திண்ணம்.
அல்லாஹ் அல்லாதவற்றிற்காக
அறுத்துப் பலியிடுபவரை அவன் சபிக்கின்றான். அறுத்துப் பலியிடுவதும் ஒரு வகை வழிபாடே
ஆகும். அதை அல்லாஹ் ஒருவனுக்காகவே செய்ய வேண்டும். “உம் இறைவனைத் தொழுவீராக!
(அவனுக்காக) அறுத்துப் பலியிடுவீராக!” (108: 2) என்று அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்.
இது நபிகளார் காலத்தைக் கவனித்துச் சொல்லப்பட்ட ஒரு கூற்றாகும். நபிகளார் காலத்தில், அறியாமையில் ஊறித்திளைத்த மக்கள் தாம் வழிபட்டுவந்த
சிலைகளுக்காக அறுத்துப் பலியிட்டு வந்தார்கள். இஸ்லாத்தை ஏற்ற பின்னரும் அறியாத சிலர்
அவ்வாறு செய்து வந்தனர். அவர்களை எச்சரிக்கை செய்யுமுகமாகக் கூறப்பட்டதே இந்த அறிவுரை. தற்காலத்தில் சிலர் தம் அறியாமையால் அவ்வாறு செய்தால்
அது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். இல்லையேல்
அவர்கள்மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகும் என்பதை அறிந்துகொள்ளட்டும்.
மூன்றாவது “(மார்க்கத்தில் இல்லாத) புதிய விஷயங்களை (மார்க்கத்தின்
பெயரால்) உருவாக்கியவனுக்கு அடைக்கலம் அளித்தவனை அல்லாஹ் சபிக்கின்றான்” என்பதாகும். இஸ்லாமிய மார்க்கத்தில் ஏவப்படாத, சொல்லப்படாத, புதிய புதிய செயல்பாடுகளைத்
தோற்றுவித்து அவற்றை ஒரு கடமையைப்போல் மாற்ற நினைப்பதுதான் பித்அத் ஆகும். அத்தகைய
பல்வேறு செயல்பாடுகள் இன்றைய மக்கள் மத்தியில் பரவியிருக்கின்றன. மார்க்கக் கட்டளைகளை
நிறைவேற்றுவதில்கூடச் செலுத்தப்படாத கவனம் மார்க்கத்தின் பெயரால் புதிதுபுதிதாக ஏற்படுத்தப்பட்ட
மூடப்பழக்கங்களைப் பின்பற்றுவதில் அதீத கவனம் செலுத்தப்படுகிறது. அவற்றைச் செய்யாமல்
விட்டுவிட்டால் தெய்வக் குற்றம் என்பதைப்போல் கருதிக்கொண்டிருக்கின்றார்கள். இத்தகைய பொய்யான, புதிய புதிய செயல்பாடுகளைத் தோற்றுவிப்போருக்கு அடைக்கலம்
கொடுப்பது அவற்றை அங்கீகரிப்பதற்குச் சமமாகும். எனவே அவர்கள் அல்லாஹ்வின் சாபத்திற்குரியோராக
மாறிவிடுகின்றார்கள்.
அதேநேரத்தில் மக்கள்
அனைவருக்கும் பயனுள்ள ஒரு புதிய செயல்பாட்டைத் தோற்றுவிப்பதில் தவறில்லை. ஆனால் அது ஒரு நல்ல செயல்பாடு என்ற எண்ணத்தில் செயல்படுத்த
வேண்டுமே தவிர அது ஒரு கடமை என்று கருதக்கூடாது. “எவர் ஒரு நற்செயலைத்
தோற்றுவித்து, அவருக்குப் பிறகும் அது செயல்படுத்தப்படுகிறதோ
அவருக்கு அதற்கான நற்கூலியும், அதைச் செயல்படுத்துவோரின் கூலிகளிலிருந்து எதுவும்
குறைந்துவிடாமல் அவர்களின் கூலிகளைப் போன்றும் உள்ளது.
எவர் ஒரு தீயசெயலைத்
தோற்றுவித்து, அவருக்குப் பிறகும் அது செயல்படுத்தப் படுகிறதோ
அவருக்கு அதற்கான தீமையும், அதைச் செயல்படுத்துவோரின் தீமைகளிலிருந்து எதுவும்
குறைந்துவிடாமல் அவர்களின் தீமைகளைப் போன்றும் அவருக்கு உள்ளது” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை அபூஜுஹைஃபா
(ரளி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல்: இப்னுமாஜா: 203)
ஆக இன்றைய காலக்கட்டத்தில்
எத்தனையோ நற்செயல்கள் தோற்றுவிக்கப்படுகின்றன. அவை நன்னோக்கத்திலும் நல்லெண்ணத்திலும்
தோற்றுவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டால் அதற்கான நற்கூலி அதைத் தோற்றுவித்தவருக்குக்
கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. அதேநேரத்தில் நன்மைக்கு முரணாகத் தீமையைத் தோற்றுவித்து, தீய வழியைக் காண்பித்து, அதை மக்கள் பின்பற்றுமாறு செய்தால், யார் யாரெல்லாம் அத்தீமையைப் பின்பற்றினார்களோ
அவர்களின் தீமையும் அதைத் தோற்றுவித்தவருக்கே கிடைக்கும். எனவே நாம் நல்லவற்றைப் பரப்புவோராகவும்
தீயவற்றைத் தடுப்போராகவும் இருக்க வேண்டும் என்பதை அறிவோம்.
நான்காவது, “நிலத்தின் (எல்லைக் கல், மைல் கல், வரப்பு உள்ளிட்ட) அடையாளங்களை மாற்றியமை(த்து, பிறர் நிலத்தை அபகரி)ப்பவனை அல்லாஹ் சபிக்கின்றான்'' என்பதாகும். இன்று பெரும்பாலான பிரச்சனைகள் நிலத்தைச்
சார்ந்த மோசடிகள்தாம். “எவர் மோசடி செய்தாரோ அவர் நம்மைச் சார்ந்தவர்
இல்லை” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம்
126)
“எவர் ஒரு சாண் அளவு நிலத்தை அநியாயமாக அபகரித்துக்கொள்கிறாரோ
அது ஏழு பூமிகளாக மறுமை நாளில் அவரது கழுத்தில்
(வளையமாக) மாட்டப்படும்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(நூல்: புகாரீ: 3198)
அந்த வகையில் எவரது நிலத்தையும் அநியாயமாக அபகரித்துக்கொள்ள
யாருக்கும் உரிமையில்லை என்பதைப் பல்வேறு நபிமொழிகள் உறுதிப்படுத்துகின்றன. இன்றைய
கலியுகத்தில் மனிதன் ஒரு சாண், ஓர் அடி என்பதையெல்லாம் தாண்டி ஏக்கர் கணக்கில்
பிறரின் சொத்தை அபகரித்துக்கொள்கிறான். ஆசையின் வலையில் சிக்குண்ட, அறியாமையில் உழல்கின்ற, மறுமையின் தண்டனையை அறியாதோர் பலர் இவ்வாறான மோசடிகளில்
ஈடுபட்டுவருகின்றனர். அவர்கள் மறுமையின் தண்டனையை உணர்ந்தால் இவ்வாறு செய்ய மாட்டார்கள்.
நாம் எவரது நிலத்தையும் சிறிதளவும் ஆக்கிரமித்துக்கொள்ளாமல், அபகரித்துக்கொள்ளாமல் இருக்க ஏக இறைவன் அருள்புரிவானாக!
-நான்குகள் தொடரும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக