செவ்வாய், 10 மே, 2011

மார்க்கக் கல்வி மகத்தானதே!


பள்ளிகளில் தேர்வுகள் முடிந்து கோடைவிடுமுறை விட்டாயிற்று. தமிழக அரசியல்வாதிகள் தேர்தல் முடிவை எதிர்பார்த்துக் காத்திருப் பதைப்போல் பள்ளி மாணவர்கள் அனைவரும் தம்முடைய தேர்வு முடிவுகளை எதிர்பார்த்திருக்கின்றனர். பன்னிரண்டாம் வகுப்பை முடித்தவர்கள் கல்லூரிக் கனவோடு இருக்கின்றார்கள்; பத்தாம் வகுப்பை முடித்தவர்கள் மேனிலைப் பள்ளியை நோக்கிச் செல்ல இருக்கின்றார்கள்; நடுநிலைப் பள்ளிப் படிப்பை முடித்தவர்கள் உயர்நிலைப் பள்ளியில் சேர இருக்கின்றார்கள். ஆக மாணவர்கள் யாவரும், மேற்படிப்பு என்ன படிக்கலாம்; எங்கு படிக்கலாம் என்ற முனைப்பில் உள்ளார்கள்.

இன்று, இஸ்லாமியச் சமுதாயத்தில் கல்வி பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. ஆகவே, ஏற்கெனவே நம் சமுதாயத்தில் இருந்த படித்தவர்களின் விழுக்காடு தற்போது உயர்ந்துள்ளது. ஆனால் இஸ்லாமிய மார்க்கக் கல்வியைப் பொறுத்தவரை, நம் சமுதாயத்தில் கடந்த காலங்களில் இருந்த ஆர்வமும் மதிப்பும் இன்று வெகுவாகக் குறைந்து காணப்படுகிறது. மார்க்கக் கல்வியைக் கற்றுக்கொண்டு சமுதாயச் சேவை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் குன்றிப்போய் விட்டது. படித்து முடித்தபின் பணி; கை நிறையச் சம்பளம்; வசதியான வாழ்க்கை-இதையே குறிக்கோளாகக் கொண்டு பலர் கல்வியை நாடுகின்றனர். ஆனால், மார்க்கக் கல்வியைப் போதிக்கின்ற அரபிக் கல்லூரிகளில் தம் பிள்ளைகளைச் சேர்த்து அவர்களை ஓர் ஆலிமாக-இஸ்லாமிய அறிஞராக- உருவாக்க வேண்டும் என்ற எண்ணமே பலருக்குத் தோன்றுவதில்லையே ஏன்?

பொதுவாக, பெற்றோர்கள் யாவரும் தம் பிள்ளைகள் தலைசிறந்த கல்லூரிகளில் படித்துப் பட்டம் பெற்று, கைநிறையச் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ண ஓட்டத்திலேயே படிப்பை அணுகுகின்றார்கள். எதைப் படித்தால் எளிதில் பணி வாய்ப்புக் கிட்டும்; நிறைய சம்பாதிக்கலாம் என்ற கோணத்தில்தான் பலர் சிந்திக்கின்றார்கள். படிப்பு என்பதே பணம் சம்பாதிப்பதற்கான ஒரு துணைக்கோல் என்று எண்ணிக்கொண்டுள்ளார்கள். ஆனால் படிப்பு என்பது ஒரு மனிதனின் அறிவு வளர்ச்சிக்குத்தான் என்பதைப் பலர் அறிவதில்லை. ஒருவன் தன் கல்வியால் அறிவை வளர்த்துக்கொண்டான்; பண்பாட்டைக் கற்றுக்கொண்டான்; சமூகச் சிந்தனையை வளர்த்துக் கொண்டான் என்றால் அதுதான் கல்வியின் மிகப்பெரும் பயன். அதுவன்றி, ஒருவன் ஏதோ படித்தான்; பட்டத்தைப் பெற்றான் என்றால், அந்தக் கல்வியால் எந்தப் பயனும் இல்லை.

என் மகன் ஒரு பொறியாளர்; என் மகன் ஒரு கணினிப் பொறியாளர்; என் மகன் ஒரு கணக்காளர்; என் மகன் ஒரு மருத்துவர்; என் மகன் ஒரு வழக்கறிஞர் என்று சொல்லிக்கொள்வதில்தான் ஒவ்வொருவரும் பெருமைகொள்கின்றனரே தவிர என் மகன் ஒரு ஹாஃபிழ் (திருக்குர்ஆனை மனனம் செய்தவர்); என் மகன் ஓர் ஆலிம் (இஸ்லாமிய மார்க்க அறிஞர்) என்று சொல்லிக்கொள்வதை யாரும் பெருமையாகக் கருதுவதில்லை. இன்று, அனைவரும் தத்தம் மகன்களை எந்தக் கல்லூரியில் சேர்க்கலாம் என்று ஒவ்வொரு கல்லூரியாகத் தேடி அலைகின்றார்கள்; எந்தக் கல்லூரி சிறந்த கல்லூரி என்று பிறரிடம் கேட்டுத் தெரிந்துகொள்கிறார்கள்; அறிந்தவர்களிடம் விசாரிக்கின்றார்கள். ஆனால் எந்த இஸ்லாமியக் கல்லூரியில் சேர்க்கலாம்; எங்குள்ள அரபுக் கல்லூரியில் சேர்க்கலாம் என்று யாரும் யாரிடமும் விசாரிப்பதில்லை. ஒருவர் தம் பிள்ளையை ஆலிமாகவோ, ஹாஃபிழாகவோ உருவாக்குவதால் அவருக்கு என்ன நட்டம் வந்துவிட்டது? அவர் தம் மகனுக்குத் துரோகம் இழைத்துவிட்டாரா? அல்லது அவனைப் பாதாளத்தில் தள்ளிவிட்டுவிட்டாரா? இல்லவே இல்லை. மாறாக, அவர் தம் மகனுக்குச் சீரான கல்வியையே கொடுத்துள்ளார். ஈருலகிலும் வெற்றிபெறத்தக்க கல்வியை வழங்கியுள்ளார். அப்படிப்பட்ட மார்க்கக் கல்வியைத் தம் பிள்ளைகளுக்கு வழங்குவதில் உங்களுக்கு என்ன தயக்கம்? மார்க்கக் கல்வியைக் கற்பதற்காக உங்கள் பிள்ளைகளை ஏன் அரபிக்கல்லூரியில் சேர்க்க முன்வருவதில்லை?

அவர்களெல்லாம் சமுதாயத்தில் தாழ்ந்த நிலையில் இருக்கின்றார்களா? சமுதாயத்தில் மதிப்பு மரியாதை இல்லாமல் இருக்கின்றார்களா? பணி இல்லாமல் இருக்கின்றார்களா? திறமையற்றவர்களாக இருக்கின்றார்களா? பிறகேன் நம்மவர்கள் தம் பிள்ளைகளை அரபுக் கல்லூரியில் சேர்க்க முன்வருவதில்லை?

அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்: இறைநம்பிக்கை யாளர்கள் ஒட்டுமொத்தமாக(ப் போருக்கு)ப் புறப்படுவது உசிதமன்று. அவர்களுள் ஒவ்வொரு பிரிவினரிலிருந்தும் ஒரு குழுவினர் (மட்டும்) புறப்பட்டால் போதாதா? அப்போதுதான் (நபியுடன்) இருப்பவர்கள் மார்க்கத்தைக் கற்கவும் (புறப்பட்டுச் சென்ற) தம் சமுதாயத்தார் தம்மிடம் திரும்பிவரும்போது அவர்களுக்கு எச்சரிக்கையூட்டவும் முடியும். (இதன் மூலம்) அவர்கள் (தம்மைத்) தற்காத்துக் கொள்ளலாம். (9: 122)

நபித்தோழர் இப்னு அப்பாஸ் (ரளி) அவர்கள் கூறியுள்ள விளக்கம்: நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் தங்கிக்கொண்டு, போருக்காகப் படைப் பிரிவுகளை வெளியூருக்கு அனுப்பினார்கள். அப்போது படைப்பிரிவில் சேர்வதற்கு நான், நீ என்று நபித்தோழர்கள் போட்டியிடுவார்கள். இவ்வாறு அனைவரும் வெளியூர் சென்றுவிட்டால், ஊரில் தங்கியுள்ள நபியவர்கள் அப்போது சொல்லும் மார்க்க விசயங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ள ஆளில்லாமல் போய்விடும்.
எனவே ஒவ்வொரு பிரிவினரிலிருந்தும் ஒரு குழுவினர் படைப்பிரிவில் சேர்ந்தால் போதும். மற்றவர்கள் ஊரில் தங்கியிருந்து நபியவர்களிடம் மார்க்க விசயங்களை அறிந்துகொண்டு அந்தப் படைப்பிரிவினர் ஊர் திரும்பியவுடன் அவர்களுக்குத் தாம் கற்றதை ஊரில் தங்கியிருந்தோர் எடுத்துச்சொல்ல வழியேற்படும் என்பதற் காகவே அல்லாஹ் இவ்வாறு கூறியுள்ளான். (தஃப்சீர் இப்னு கஸீர்)

ஒரு சமுதாயத்திலுள்ள அனைவரும் உலகியல் சார்ந்த கல்வியை மட்டுமே கற்றால், மார்க்கக் கல்வியை யார்தாம் கற்பார்? ஒரு சாரார் பொறியியல், மருத்துவம், கணிப்பொறியாளர் உள்ளிட்ட பற்பல உலகியல் சார்ந்த கல்வியைக் கற்கச் செல்லட்டும்; அதே நேரத்தில் மற்றொரு சாரார் மார்க்கக் கல்வியைக் கற்கச் செல்லட்டும். அப்போதுதான் நம்முடைய சமுதாயம் கல்வியிலும் மார்க்கத்தைப் பேணுவதிலும் சமநிலை வகிக்க முடியும். இல்லையேல் சமநிலை இழந்து ஒரு பகுதி தொய்வு ஏற்பட்டதாகத் தோன்றும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு தந்தை தன் பிள்ளைக்குக் கொடுக்கும் வெகுமதிகளுள் நல்லொழுக்கத்தைவிடச் சிறந்தது வேறு எதுவும் இல்லை. (நூல்: திர்மிதீ)

இந்த நல்லொழுக்கம் அரபுக் கல்லூரிகளில்தான் போதிக்கப் படுகிறது. பெற்றோரை மதித்தல், அவர்களைக் கண்ணியப்படுத்துதல், அவர்களிடம் அன்போடு நடந்துகொள்ளுதல், அவர்கள் முதுமை நிலையில் இருந்தால் அவர்களிடம் கனிவாகப் பேசுதல் உள்ளிட்ட அனைத்தும் அங்கேதான் போதிக்கப்படுகின்றன.

ஆலிம்களின் பிள்ளைகள்

ஆலிம்களின் பிள்ளைகள்தாம் ஆலிம்களாக உருவாக வேண்டும் என்றும், இது ஒரு பரம்பரைக் கல்வி என்றும் பலர் தவறாக எண்ணிக்கொண்டிருக்கின்றார்கள். மாறாக, இந்தக் கல்வியை யார் வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம்; கற்றுக்கொண்டு மக்கள் மத்தியில் இஸ்லாமியச் சட்டங்களை எடுத்துரைக்கலாம். இது அனைவருக்கும் பொதுவான கல்வி. குறிப்பிட்ட சிலரின் பரம்பரைச் சொத்தில்லை என்பதை நாம் உணர வேண்டும். இன்றைய ஆலிம்கள் பலர், தாங்கள் ஆலிம்களாக இருந்துகொண்டே தம் பிள்ளைகளை அரபுக் கல்லூரிகளில் சேர்ப்பதில்லை. அவர்கள் கற்ற கல்விமீது அவர்களுக்கே விருப்பமில்லையா? ஒரு மருத்துவரின் பிள்ளை மருத்துவர் ஆகிறான்; ஒரு பொறியாளரின் பிள்ளை பொறியாளர் ஆகிறான்; ஒரு வழக்கறிஞரின் பிள்ளை வழக்கறிஞர் ஆகிறான்; ஆனால் ஓர் ஆலிமின் பிள்ளை ஆலிமாக ஆகக் கூடாதா? அந்தக் கல்வியில் அப்படியென்ன ஆர்வமின்மை இவர்களுக்கு?

காலத்துக்கேற்ற கல்லூரிகள்

கடந்த காலங்களில் அரபுக் கல்லூரிகளில் இஸ்லாமியக் கல்வியை மட்டும் போதித்து வந்தனர். அரபு இலக்கணம், திருக்குர்ஆன் விரிவுரை, நபிமொழிகளின் விளக்கவுரை, இஸ்லாமிய வரலாறு, இஸ்லாமியச் சட்டவியல் உள்ளிட்டவை அதில் அடங்கும். ஆனால், இன்று அவற்றோடு சேர்த்து, கணினி, தட்டச்சு, தொழிற்கல்விகள், ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு கல்விகள் காலத்தின் அவசியம் கருதி இணைக்கப்பட்டுள்ளன. அது மட்டுமின்றி, 8 ஆம் வகுப்பு படித்துள்ள ஒருவர், ஓர் அரபிக் கல்லூரியில் சேர்ந்தால், அவர் ஐந்தாண்டுகளில் அல்லது ஏழாண்டுகளில் ஓர் ஆலிமாகவும் எம்.காம். முதுகலைப் பட்டம் பெற்ற ஒரு பட்டதாரியாகவும் வெளிவருகிறார்.

தற்போதைய கணினி யுகத்துக்கேற்ப, இஸ்லாமிய மார்க்கக் கல்வியோடு உலகியல் கல்வியையும் இணைத்தே வழங்குவதால் அவர்கள் பள்ளிவாசல்கள், அரபிக் கல்லூரிகளை மட்டும் நம்பியில்லாமல் பல்வேறு துறைகளில் பணியாற்றக்கூடிய வாய்ப்பும், யாருக்கும் அஞ்சாமல் மார்க்கத்தை எடுத்துரைக்கின்ற வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது. தயக்கம் ஏன்?

பெரும்பாலும் இஸ்லாமியச் சமுதாய மக்கள் தம் பிள்ளைகளை அரபுக் கல்லூரியில் படிக்க வைத்து ஆலிம்களாக உருவாக்கத் தயங்குவது ஏன்? குறைவான சம்பளம், ஏழ்மையான வாழ்க்கை நிலை, பிறரிடம் தேவையாகுதல்-இவையே முதல்நிலைக் காரணங்களாகும். அவைபோக, அழைத்த வீட்டுக்கு துஆ ஓதச் செல்லுதல், அவர்கள் தரும் சிறு அன்பளிப்புகளைப் பெற்றுக் கொள்ளுதல்- இதுபோன்ற அவர்களின் செயல்பாடுகளைப் பார்க்கின்ற நாங்கள் எப்படி எங்கள் பிள்ளைகளை ஆலிம்களாக ஆக்க முன்வர முடியும்? என்று வினவுகின்றனர். அப்படியென்றால், நீங்கள் ஏன் ஆலிம்களை உங்கள் வீட்டுக்கு அழைக்கின்றீர்கள்? நீங்களே உங்கள் வீட்டில் துஆ ஓதிக்கொள்ள வேண்டியதுதானே? என்று மறுவினாத் தொடுத்தால், அதற்கு அவர்களிடம் பதில் இல்லை. ஆக, ஆலிம்களை மதிக்கிறோம் என்று சொல்பவர்கள் தம் பிள்ளைகளை ஆலிம்களாக உருவாக்க முன்வரட்டும். அப்படிச் செய்தால் சமுதாயத்தில் ஆலிம்களைப் பற்றிய கண்ணோட்டம் மாறும். அவர்களும் படித்தவர்கள்தாம் என்ற எண்ணம் உருவாகும்.
மாற்றமடைந்துள்ள மதரசாக்கள்

பாரம்பரிய முறையில் இஸ்லாமியக் கல்வியை மட்டும் போதித்து வந்த அரபி மதரசாக்கள், தற்காலச் சூழலுக்கேற்ப தமது பாடத்திட்டத்தில் மாற்றம் செய்துகொள்ள முன்வந்துள்ளன. திருச்சி அன்வாருல் உலூம் கல்லூரி 1963இல் தொடங்கப்பட்டது. அரபிப் பாடங்கள் மட்டுமே போதிக்கப்பட்டு வந்த அக்கல்லூரி தற்போது ஆங்கிலம், கணினி, தட்டச்சு, தொழிற்கல்விகள் உள்ளிட்ட பாடங்களையும் இணைத்துள்ளது பாராட்டுக்குரியது. இதுபோன்ற பல்வேறு அரபுக் கல்லூரிகளை இன்று நாம் அடையாளம் காட்டலாம். இன்று சென்னையில் மட்டும் ஏழுக்கும் மேற்பட்ட `இரட்டைக் கல்வி முறை அரபுக் கல்லூரிகள் உள்ளன. அது மட்டுமின்றி, கல்லூரியில் சேர்க்கும் காலத்தையும் மாற்றியமைத்துள்ளன. அன்று ஷவ்வாலில் தொடங்கி ஷஅபான் மாதத்தில் முடித்த கல்லூரிகள் தற்போது ஜூனில் மாணவர்களைச் சேர்க்கத் தொடங்கியுள்ளன. காரணம், பள்ளியில் 8 அல்லது 10ஆம் வகுப்பை முடித்துவிட்டு வருகின்ற மாணவர்கள் அரபுக்கல்லூரிகளில் சேர்ந்து பயில அதுவே அவர்களுக்கு வசதியாக இருக்கிறது.

இப்படிப் பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்டுள்ள அரபுக் கல்லூரிகளின் பக்கம் நம் சமுதாய மக்களின் பார்வை படாதது ஏன்? அது பற்றிய மதிப்பை உணர்வது எப்போது? வீட்டுக்கு ஓர் ஆலிமைப் பார்க்கும் காலம் எப்போது உருவாகும்?

முனைவர் பட்டம் பெற்றவர்கள்

அரபுக் கல்லூரியில் பயிலும்போதே `அஃப்ஜலுல் உலமா' எனும் தேர்வை எழுதிவிடுகின்றார்கள். இது இளங்கலை B.A. அரபிப் பட்டத்துக்கு இணையான தேர்வாகும். இது சென்னைப் பல்கலைக் கழகம், பாரதிதாசனார் பல்கலைக் கழகம் உள்ளிட்ட பல்கலைக் கழகங்களில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதனால் அதை வைத்துக் கொண்டு முதுகலை, இளம் முனைவர் ஆய்வு, முனைவர் ஆய்வு வரை தொடர்ந்து முன்னேற வழியை ஏற்படுத்திக்கொடுக்கின்றார்கள். ஆலிம்களாக உள்ள பலர் இன்று அரபுமொழியில் ஆய்வுசெய்து முனைவர் (Ph.D) பட்டம் பெற்றுள்ளனர். இளம் முனைவர் (M.Phil) களாகப் பலர் உள்ளனர். இன்னும் பலர் இளம் முனைவர் ஆய்வு மற்றும் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்வதற்காகக் காத்திருப்போர் பட்டியலில் இருந்துவருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்னர், சென்னைப் பல்கலைக் கழகம் தொலைநிலைக் கல்வி மூலம் அரபு முதுகலைப் படிப்பைத் தொடங்கியுள்ளதால் ஆலிம்கள் பலர் இப்படிப்பைத் தொடர்கின்றனர்.

அரசு அங்கீகாரம்

தேவ்பந்த் அரபுப் பல்கலைக் கழகம், நத்வத்துல் உலமா அரபுக் கல்லூரி உள்ளிட்ட சிலபல கல்லூரிகளில் வழங்கப்படுகின்ற பட்டம் அரபி இளங்கலைப் பட்டத்துக்குச் சமமானதாக அரசுப் பல்கலைக் கழகங்கள் ஏற்றுக்கொண்டு அவர்கள் முதுகலைப் படிப்பைத் தொடர வாய்ப்பளிக்கின்றன. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, ஆலிம்கள் பலர் இன்று சென்னைப் பல்கலைக் கழகத்தில் அரபுத்துறையில் முதுகலைப் படிப்பைத் தொடர்கின்றனர். அது மட்டுமின்றி, வண்டலூரில் அமைந்துள்ள புகாரி ஆலிம் அரபிக் கல்லூரியில் ஐந்தாண்டுகளில் பெறுகின்ற பட்டம் அந்த வளாகத்தினுள் உள்ள B.S. .அப்துர் ரஹ்மான் பல்கலைக் கழகத்தால் இஸ்லாமிக் ஸ்டடீஸ் படிப்பின் கீழ் அங்கீகரிக்கப்படுகிறது. இதுவும் இளங்கலைப் பட்டத்துக்குச் சமமாக அங்கீகரிக்கப்படுகிறது. ஆக, அரசு அங்கீகாரம் பெற்ற கல்வியாக இஸ்லாமியக் கல்வி மாறிவருவது ஓர் ஆரோக்கியமான முன்னேற்றமும் அங்கீகாரமும் ஆகும். இனி, எதிர்காலத்தில் எல்லா அரபுக் கல்லூரிகளின் பட்டமும் அரசு அங்கீகாரம் பெற வாய்ப்புண்டு. ஆகவே, இதுவும் பட்டப் படிப்புதான் என்ற மனநிலை நமக்கு ஏற்பட வேண்டும். அத்துடன், இதில் ஈருலகப் பயன்களையும் நற்பேறுகளையும் நாம் பெறலாம் என்பதே இக்கல்வியின் கூடுதல் சிறப்பாகும்.
 
ஆலிம்களின் பணிகள்

கடந்த காலங்களில் நீங்கள் பார்த்த ஆலிம்கள் வேறு; இன்றைய கணினி யுகத்தில் நீங்கள் காணுகின்ற ஆலிம்கள் வேறு என்பதை நீங்கள் புரிந்துகொள்ளுங்கள். இன்றைய கணினி யுக ஆலிம்கள் அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றம் கண்டுவருகின்றார்கள். அன்று ஆங்கிலமே என்னவென்று தெரியாதவர்கள் இன்று ஆங்கிலத்தில் உரையாற்றுகின்றார்கள்; கணிப்பொறி இயக்குகிறார்கள்; வலைப்பூக்கள் உருவாக்கித் தம் கருத்துகளைப் பதிந்து உலகின் எண்திசையிலும் உள்ள மக்களைப் படிக்கத் தூண்டுகின்றார்கள். அது மட்டுமின்றி, கைநிறையச் சம்பாதிக்கவும் தொடங்கிவிட்டார்கள். ஆம். இன்றைய அரபிக் கல்லூரிகள் மார்க்கக் கல்வியை மட்டும் போதிப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல், ஓர் ஆலிம் தன்னை நிலைப்படுத்திக்கொள்வதற்கான கல்விகளையும் சேர்த்தே போதிக்கத் தொடங்கிவிட்டன. அங்கு அரபு இலக்கணமும், திருக்குர்ஆன் விளக்கவுரையும், நபிமொழிகளின் விளக்கவுரையும் போதிக்கப்படுவதோடு கணினிக் கல்வி, தட்டச்சு, ஆங்கிலம் போன்ற கல்விகளும் போதிக்கப்படுகின்றன. அத்துடன் உலகியல் கல்லூரியின் சார்பாக வழங்கப்படுகின்ற பட்டங்களைப் பெறுவதற்கான ஏற்பாடும் செய்யப்படுகிறது.

உங்கள் பிள்ளை எட்டாம் வகுப்பு முடித்திருந்து, திருக்குர்ஆனைப் பார்த்து வாசிக்கத் தெரிந்திருந்தால் போதும். ஐந்தாண்டுகளில் அவனுடைய வாழ்க்கையே முற்றிலும் மாறிவிடும். ஒரு கையில் அரபுக் கல்லூரியின் பட்டம்; மற்றொரு கையில் உலகியல் கல்விக்கான பட்டம்; அத்தோடு பல்வேறு திறமைகளோடும், ஆற்றல்களோடும் வெளிவருகின்ற உங்கள் பிள்ளை ஈருலகிலும் உங்களுக்கும் இஸ்லாமியச் சமுதாயத்துக்கும் உதவுகின்ற பிள்ளையாக உருவாகும் என்பதை நினைவில் நிறுத்துங்கள். அதை நினைத்துப் பெருமைப்படுங்கள்.

பொதுவாக அரபுக் கல்லூரிகளில் பட்டம் பெற்று வெளிவந்துள்ள ஆலிம்கள் பலர் பல்வேறு துறைகளில் பணியாற்றுகின்றார்கள். புதிதாக அரபிக் கல்லூரிகளை உருவாக்கி நிர்வகித்தல், பத்திரிகை நடத்துதல், மொழியாக்கம் செய்தல், கணினித் துறையில் பணியாற்றுதல், பல்கலைக் கழகங்களில் பேராசிரியர்களாகப் பணியாற்றுதல், அரசியல் கட்சிக்குத் தலைமையேற்று நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் பணியாற்றுகின்றார்கள். இத்தகைய உயர்ந்த நிலைகளில் மேலோங்கியிருக்கின்ற ஆலிம்களைப் பார்த்துச் சமுதாயம் பெருமைகொள்ள வேண்டாமா? எந்த வகையில் அவர்கள் தாழ்ந்துபோய்விட்டார்கள்?

அரபு மதரசாவில் படித்த மாணவர்களின் திறமையை அறிய மௌலவி வஸீமுர் ரஹ்மான் ஒரு சான்று. உ.பி.யில் உள்ள புகழ் பெற்ற தாருல் உலூம் தேவ்பந்த் அரபுப் பல்கலைக் கழகத்தில் பயின்று பட்டம் பெற்ற இவர், தமது முயற்சியை அத்தோடு முடித்துக்கொள் ளாமல் தொடர்ந்து முயன்று இன்று ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். இவருடைய முயற்சி பலருக்குப் படிப்பினையாகும். அரபு மதரசாக்களில் என்ன படித்துக்கொடுக்கின்றார்கள் என்ற ஏளனமான வினாவுக்கு விடையாக இவர் திகழ்கிறார் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.


தொடர்- 2

அரபுமொழி

திருக்குர்ஆனின் மொழியான அரபுமொழி போதிக்கப்படுவது அரபுக் கல்லூரிகளில்தான் என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும். இந்த அரபுமொழியின் முக்கியத்துவத்தையாவது நாம் உணர்ந்துள்ளோமா? அதன் வளர்ச்சிக்காக நாம் பாடுபட்டுள்ளோமா? ஐக்கிய நாடுகளின் சபையில் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் ஆறு. அவற்றுள் ஒன்று அரபிமொழி. நம் நாட்டின் தேசிய மொழிகள் 22 ஆகும். அவற்றுள் அரபியும் ஒன்று. பத்து, பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் மொழிப் பாடங்கள் உள்ளன. அதில் மாணவர்கள் தாம் விரும்பும் ஏதேனும் ஒரு மொழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஆக, அங்கும் அரபிமொழிக்கு ஓர் இடமுண்டு. அது மட்டுமின்றி, ஐ.ஏ.எஸ்., ஐ.பீ.எஸ். போன்ற போட்டித் தேர்வுகளிலும் அரபியை ஒரு விருப்பப் பாடமாகத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். இவ்வளவு வாய்ப்புகள் இருந்தும் மிகச் சிலரைத் தவிர யாரும் அரபிமொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லையே ஏன்?
"மூன்று காரணங்களுக்காக அரபிமொழியைக் கற்றுக்கொள்ளுங்கள்; குர்ஆன் அரபி; என்னுடைய அறவுரைகள் அரபி; சொர்க்கத்தின் மொழி அரபி" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: பைஹகீ)

உலகப் பொதுமறையான திருக்குர்ஆனும் இறுதி இறைத்தூதரின் பொய்யாமொழிகளும் அரபி மொழிக்குள் அடங்கியுள்ளன. எனவே அவற்றின் விளக்கவுரைகளும் அரபிமொழியிலேயே எழுதப்பட்டுள்ளன. ஆகவே, அரபிமொழி தெரியாதவர்கள் தம்முடைய இஸ்லாமிய மார்க்கத்தின் பெரும்பகுதியை அறியாமலேயே இருந்துவருகின்றனர்.
நாம் நாள்தோறும் ஐவேளைத் தொழுகையில் ஓதுகின்ற திருக்குர்ஆன் வசனங்கள் அரபிமொழிதான். நாம் நாள்தோறும் ஓதுகின்ற வேதம் அரபிமொழிதான். ஆக, இவ்வுலகில் எங்கெல்லாம் முஸ்லிம்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்களோ அங்கெல்லாம் அரபிமொழி வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால், வாசிக்க மட்டுமே கற்றுள்ள பலர் அதன் அர்த்தங்கள் பற்றி யோசிக்கவே இல்லை. அதனால்தான் அரபிமொழியின் தேடலில் தொய்வு ஏற்பட்டுவிட்டது.

கால் நூற்றாண்டுக்கு முன்னர் வாழ்ந்த முஸ்லிம்கள் பலர், அரபி எழுத்தில் எழுதப்பட்ட எதையும் வாசிக்கத் தெரிந்திருந்தார்கள். தமிழைக்கூட அரபியில் எழுதி செய்திப் பரிமாற்றம்செய்து கொண்டார்கள்; இஸ்லாமியச் சட்டங்களைத் தெரிந்துகொண்டார்கள். இதனால் நூல் எழுதியவர்களும் அரபுத் தமிழில் எழுதினார்கள். அது சங்கேத மொழியாகவும் பயன்பட்டிருக்கிறது. இதனால்தான் `அரபுத் தமிழ்' எனும் சொல்வழக்கு பயன்பாட்டில் இருந்தது. ஆனால், இன்று அது தலைகீழாக மாறி, அரபியையும் தமிழில் எழுதி வாசிக்க வேண்டிய நிர்ப்பந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அரபியைப் பார்த்து வாசிக்கத் தெரியாத நிலையில் பலர் இருப்பது வேதனையிலும் வேதனையாகும்.

நம் பிள்ளைகள் மழலை வகுப்புக்குச் சென்று, அங்குக் கற்றுக் கொண்ட ஆங்கில வார்த்தைகளைத் தட்டுத் தடுமாறி, திக்கித் திக்கிப் பேசுவதைக் கண்டு மகிழ்ச்சியடைகின்ற நாம், அருகிலுள்ள பள்ளிவாசலில் போதிக்கப்படுகின்ற அரபிமொழி வகுப்புக்கு அவர்களை அனுப்புவதில்லையே ஏன்?
எனவே, நாம் அரபி மொழிக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்றால், பாலர் வகுப்பு முதல் அதற்கெனத் தனிக்கவனம் செலுத்த வேண்டும். இல்லையேல் நம் பிள்ளைகளும் திருக்குர் ஆனைப் பார்த்து வாசிக்கத் தெரியாத இழிநிலைக்குத் தள்ளப்படு வார்கள் என்பது திண்ணம்.

பெற்றோருக்கு என்ன பயன்?

இஸ்லாமியக் கல்வியைக் கற்றுக்கொள்கின்ற உங்கள் பிள்ளை, அத்துடன் இஸ்லாமியப் பண்பாடுகளையும் ஒழுக்கத்தையும் இறையச்சத்தையும் கற்றுக்கொள்கிறான். இதனால் உங்கள் பிள்ளை பெற்றோரை மதிக்கின்ற பிள்ளையாக, உங்களின் முதுமையில் உங்களைக் கைவிட்டுவிடாத பிள்ளையாக, அனைவராலும் மதிக்கப்படுகின்ற பிள்ளையாக, அல்லாஹ்வின் அன்பைப் பெற்ற பிள்ளையாக உருவாகும். பெற்ற உங்களுக்கு இதைவிட வேறு பெருமை என்ன வேண்டும்? யோசியுங்கள்; பலமுறை யோசியுங்கள். மார்க்கக் கல்வியை உங்கள் பிள்ளைக்குக் கொடுப்பதால் தீமை ஏதும் உண்டா? இனியும் ஏன் தாமதம்? உங்கள் பிள்ளைகளை அரபிக் கல்லூரிகளில் சேர்த்து ஈருலகிலும் பயன்மிக்க பிள்ளைகளாக உருவாக்குங்கள்!

மறுமைப் பயனைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளதாவது: (உங்களுள்) திருக்குர்ஆனைக் கற்று, அதன்படி செயல்பட்டவரின் பெற்றோருக்கு மறுமையில் ஒரு கிரீடம் அணிவிக்கப்படும். அது, உலகில் ஒருவரின் வீட்டில் சூரியன் இருந்தால் எவ்வாறு அவ்வீடு ஒளி இலங்குமோ அதைவிட ஒளிமிக்கதாக இருக்கும். அப்படியென்றால், அதன்படி செயல்பட்டவருக்கு என்ன (கிடைக்கும்) என்பதை நீங்களே முடிவுசெய்து கொள்ளுங்கள். (நூல்: அபூதாவூத்)

இஸ்லாமியச் சகோதரர்களே!

உங்கள் வீட்டில் நான்கு பிள்ளைகள் இருந்தால் ஒருவனை மருத்துவராகவும், மற்றொருவனை வழக்கறிஞராகவும், வேறொரு வனைப் பொறியாளராகவும் ஆக்கிக்கொள்ளுங்கள். அவர்களுள் ஒருவரையாவது ஆலிமாக ஆக்குங்கள். அப்போதுதான் நம் சமுதாயத் தில் இஸ்லாமியக் கல்விமீது ஆர்வமும் அக்கறையும் ஏற்படும். இஸ்லாமியக் கல்வியை எடுத்துச்சொல்ல ஆள் பற்றாக்குறை ஏற் படாது. செல்வந்தர்களும் தம் பிள்ளைகளை அரபிக் கல்லூரிகளில் சேர்க்க முன்வந்துவிட்டால் அக்கல்விமீது பொதுவாக இருக்கின்ற குறுகிய கண்ணோட்டம் மாறும். அதனால் சமுதாயம் மிகப்பெரும் நன்மைகளை அடையும் என்பது திண்ணம். ஒவ்வோர் ஊரிலும் ஆலிம்கள் இருக்க வேண்டும். அதற்கு அவ்வூரிலுள்ள ஜமாஅத்தார்கள் ஒன்றிணைந்து தம் ஊரிலுள்ள தகுதியான மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அரபிக் கல்லூரிகளில் சேர்த்து, அவர்களுக்கான செலவையும் ஏற்றுக்கொண்டால் ஒவ்வோர் ஊரிலும் ஆலிம்கள் உருவாகிவிடுவார்கள்.

புதுமைக் கல்லூரிகள்

உங்கள் பிள்ளைகளை ஆலிம்களாகவும் பட்டதாரிகளாகவும் உருவாக்க, குறிப்பிட்ட சில கல்லூரிகளை மட்டும் இங்குச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். இவை தவிர இன்னும் பல்வேறு கல்லூரிகள் ஆங்காங்கே உள்ளன என்பதையும் நினைவில்கொள்க!

1. பிலாலிய்யா அரபுக் கல்லூரி- நெமிலி, சென்னை. பேச: 98405 38681  
2. புகாரி ஆலிம் அரபுக் கல்லூரி - வண்டலூர், சென்னை.
பேச: 044-22751280/82
3. அல்ஹுதா அரபுக் கல்லூரி, அடையாறு, சென்னை. பேச: 98409 49403
4. நூருல் ஹிதாயா அரபுக் கல்லூரி, பனையூர், சென்னை.
பேச: 9443264097
5. கைராத்துல் இஸ்லாம் அரபுக் கல்லூரி, வீரசோழன். பேச: 6379 774 689   
6. அன்வாருல் உலூம் அரபுக் கல்லூரி, திருச்சி.
7. இர்ஷாதுல் உலூம் அரபுக் கல்லூரி, பெரம்பலூர்.
பேச: 94438 05885
8. ஜாமிஆ அஸ்ஸய்யிதா ஹமீதா, அரபுக் கல்லூரி, கீழக்கரை
பேச: 04567-241957
9. உஸ்வத்துன் ஹசனா அரபுக் கல்லூரி, பள்ளப்பட்டி
பேச: 94860 58551  


இன்னும் நிறைய உள்ளன. (சில கல்லூரிகளில் எட்டாம் வகுப்பும் சில கல்லூரிகளில் பத்தாம் வகுப்பும் தகுதியாக உள்ளது.) 

மரபுவழிக் கல்லூரிகள்:

1. அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபுப் பல்கலைக் கழகம், வேலூர்.
2. காஷிஃபுல் ஹுதா அரபுக் கல்லூரி, சென்னை.
3. ஜமாலிய்யா அரபுக் கல்லூரி, சென்னை.
4. தாவூதிய்யா அரபுக் கல்லூரி, ஈரோடு.
5. மன்பவுல் உலா அரபுக் கல்லூரி, கூத்தாநல்லூர்.
பேச: 04367-234450
6. மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரி, லால்பேட்டை.
பேச: 04144-269079
7. மிஸ்பாஹுல் ஹுதா அரபுக் கல்லூரி, நீடூர்.
பேச: 04364-250173
8. ரியாளுல் ஜினான் அரபுக் கல்லூரி, திருநெல்வேலி-பேட்டை
9.யூசுஃபிய்யா அரபுக் கல்லூரி- திண்டுக்கல்
10. இம்தாதுல் உலூம் அரபுக் கல்லூரி-கோவை
11. மன்பவுஸ் ஸலாஹ் அரபுக் கல்லூரி- தூத்துக்குடி
12. சிராஜுல் முனீர் அரபுக் கல்லூரி- புதுக்கோட்டை
13. ஸலாஹிய்யா அரபுக் கல்லூரி- அதிராம்பட்டினம்

ஆக, ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பான அரபுக் கல்லூரிகள் பல செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. பலரும் அதன் பக்கம் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டால், அரபுக் கல்லூரிகளிலும் சமுதாயத்திலும் இன்னும் பற்பல முன்னேற்றங்களைக் கொண்டுவரலாம். ஒவ்வொரு கல்லூரியிலும் ஒரு Teleconference Hall ஏற்படுத்தி தமிழகத்தி லுள்ள மூத்த அறிஞர்களின் சொற்பொழிவுகளையும் அவர்கள் அரபுக் கல்லூரிகளில் நடத்துகின்ற பாடங்களையும் மாணவர்கள் அனைவரையும் கேட்கச் செய்யும் திட்டம் வருங்காலத்தில் செயல்படுத்தப்படும். இதனால் பல்வேறு பயன்கள் உண்டு. இதைச் செயல்படுத்துவதால் மூத்த அறிஞர்களிடம் பாடம் கற்றுக்கொண்ட திருப்தி மாணவர்களுக்கு ஏற்படுவதோடு, மாணவர்கள் தம் ஐயங்களையும் உடனுக்குடன் தீர்த்துக்கொள்ளலாம்.

ஆக, இந்தக் குறுநூலை உருவாக்கியுள்ள நோக்கம் நீங்கள் உங்கள் குடும்பத்தில் ஒருவரையாவது ஆலிமாக ஆக்க வேண்டும்; வீட்டுக்கு வீடு ஓர் ஆலிம் உருவாக வேண்டும் என்பதேயாகும். எனவே பழைய சிந்தனைகள் மறையட்டும்; மார்க்கக் கல்வியின்பால் புதிய சிந்தனையும் புதிய கண்ணோட்டமும் ஏற்படட்டும். பல்வேறு ஆலிம்களை உருவாக்கி இச்சமுதாயத்துக்கு அர்ப்பணிப்போம்; அவர்கள் எதிர்காலச் சமுதாயத்தைச் சீர்திருத்துவதோடு அவர்களும் நிம்மதியாக வாழப் பாதை அமைத்துக் கொடுப்போம் வாருங்கள்! உயர்ந்த உள்ளத்தையும் உயர்ந்த எண்ணத்தையும் நம் அனைவருக்கும் உயர்ந்தோன் அல்லாஹ் வழங்குவானாக!
*****

திங்கள், 9 மே, 2011

இஸ்லாமிய இல்லறம் (II)



உடலுறவில் இஸ்லாமிய ஒழுக்கங்கள்

தம்பதிகளுக்கிடையே நடைபெறுகின்ற உடலுறவை இஸ்லாம் அனுமதிப்பது மட்டுமின்றி ஊக்கப்படுத்தவும் செய்கிறது. இது அல்லாஹ் நமக்களித்த மிகப்பெரும் அருட்கொடையாகும். எவர்கள் சட்டமுறைப்படி தம் ஆசைகளைத் தீர்த்துக் கொள்கின்றார்களோ அவர்களை அல்லாஹ் இழித்துரைப்பதில்லை. மாறாக, அவன் இதை அனுமதிப்பதோடு இதற்காக நன்மைகளையும் வழங்குகின்றான்.

அல்லாஹ் கூறுகின்றான்: அவர்கள் தம் அந்தரங்க உறுப்பையும் (விபசாரத்திலிருந்து) காப்பாற்றிக் கொள்வார்கள். எனினும், அவர்கள் தம் மனைவிகளிடமோ அல்லது தம் வலக்கரம் சொந்தமாக்கிக்கொண்ட (அடிமைப்) பெண்களிடமோ (சேர்வதில்) நிச்சயமாக (அவர்கள் குற்றவாளிகளாக மாட்டார்கள். ஆகவே, இவ்விசயத்தில்) அவர்கள் நிந்திக்கப்பட மாட்டார்கள். இதற்குப் புறம்பானதை எவரேனும் விரும்பினால் அவர்கள் வரம்பு மீறியவர்களாகி (குற்றவாளியுமாகி) விடுவார்கள். (23: 5-7)

மேலும், அல்லாஹ் கூறுகின்றான்: அவர்கள், தங்கள் அந்தரங்க உறுப்புகளையும் பாதுகாத்துக்   கொள்வார்கள். ஆயினும், தங்கள் மனைவிகளிடமும், தங்கள் அடிமைப் பெண்களிடமும் தவிர. நிச்சயமாக அவர்கள் (இவர்களுடன் சம்பந்தப்படுவதைப் பற்றி) நிந்திக்கப்பட மாட்டார்கள். இதனையன்றி (மற்றெதையும்) எவரேனும் விரும்பினால், அத்தகையவர்கள் வரம்பு மீறியவர்களாவார்கள். (70: 29-31)
இருப்பினும், ஒருவன் தன் மனைவியிடம் உடலுறவு கொள்வதற்காக அவளை நெருங்கும் போது அவன் கவனிக்க வேண்டிய நிறைய வழிகாட்டுதல்கள் இருக்கின்றன. இந்தப் பகுதியில் அவற்றுள் மிக முக்கியமானவற்றை நாம் பரிசீலிக்க உள்ளோம்.

அல்லாஹ்வைப் பற்றிய விழிப்புணர்வு

அல்லாஹ் எப்போதும் தன் அருகில் இருந்து கவனித்துக் கொண்டிருக்கின்றான் என்ற உணர்வு ஒவ்வொருவனுக்கும் இருக்க வேண்டும். இந்த உணர்வு இருக்கின்ற ஒருவன் உடலுறவின் இன்பத்தில் இருக்கின்ற போதும்கூட தன் செயல்களைக் கட்டுப்படுத்திக் கொள்வான். மேலும், தன் விருப்பத்தையும் ஆசையையும் சட்ட முறைப்படி மகிழ்ச்சியாக நிறைவேற்றிக்கொள்ள அல்லாஹ் தனக்கு வசதிசெய்து கொடுத்துள்ளான் என்ற நன்றியுணர்வை வளர்த்துக்கொள்ள வேண்டும். இத்தகைய எண்ணத்தோடு ஒருவன் தன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்கின்றபோது அது அவனுக்கு நன்மையைப் பெற்றுத் தரக்கூடிய வணக்கமாக ஆகிவிடுகின்றது.

உடலுறவைப் பற்றிச் சரியாக விளங்கிக் கொள்ளுதல்

இறைநம்பிக்கையாளர்கள் தம் உச்சக்கட்ட மகிழ்ச்சியிலும் அல்லாஹ்வை மறக்கமாட்டார்கள். அவர்கள் தம் மனைவியரோடு உடலுறவு கொள்வது இச்சையைத் தீர்த்துக்கொள்ள மட்டுமில்லை; அது பற்பல நல்ல நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதாகும் என்பதை நினைவுகூர்வார்கள்.
எனவே, ஒருவர் தம் மனைவியுடன் உடலுறவு கொள்வது அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிவதாகும்; நபி (ஸல்) அவர்களின் வழிமுறையைப் பின்பற்றுவதாகும். முஸ்லிம்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதாகும்; மேலும் தம்மையும் தம் மனைவியையும் பாவத்திலிருந்து பாதுகாப்பதாகும் என்ற தூய்மையான (நிய்யத்) எண்ணம் கொள்ளவேண்டும்.

மகிழ்ச்சிக்கு வழங்கப்படும் நன்மைகள்

ஒருவன், பாவத்திலிருந்து தன்னைத் தற்காத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு தன் மனைவியுடன் உடலுறவு கொண்டால் அவன் அதற்காக நன்மைகளைப் பெறுகிறான்.
அபூதர்ரு (ரளி) அறிவிக்கின்றார்கள்: நபித்தோழர்களுள் சிலர் நபியவர்களிடம் முறையிட்டார்கள். "அல்லாஹ்வின் தூதரே! பணக்காரர்கள் எல்லா நன்மைகளையும் எடுத்துக் கொள்கின்றார்கள். நாங்கள் தொழுவதைப் போல் அவர்களும் தொழுகின்றார்கள்; நாங்கள் நோன்பு வைப்பதைப் போல் அவர்களும் நோன்பு நோற்கின்றார்கள்; மேலும் அவர்கள் தம் பொருட்களிலிருந்து தானம் செய்கின்றார்கள்''. அப்போது நபியவர்கள், நீங்கள் தானம் செய்வதற்கான வழிகளை அல்லாஹ் ஆக்கவில்லையா? நிச்சயமாக ஒவ்வொரு தஸ்பீஹும் (சுப்ஹானல்லாஹ்) தர்மமாகும்; ஒவ்வொரு தக்பீரும் (அல்லாஹு அக்பர்) தர்மமாகும்; ஒவ்வொரு தஹ்லீலும் (லாயிலாஹ இல்லல்லாஹ்) தர்மமாகும்; ஒவ்வொரு தஹ்மீதும் (அல்ஹம்து லில்லாஹ்) தர்மமாகும்; நன்மையை ஏவுவதும் தர்மமாகும்; தீமையைத் தடுப்பதும் தர்மமாகும்; உங்கள் மனைவியோடு உடலுறவு கொள்வதும் தர்மமாகும். (மேற்கண்ட) இவை அனைத்துக்கும் முற்பகல் (ளுஹா) தொழுகை போதுமாகும் என்று பதிலளித்தார்கள். 
       
அல்லாஹ்வின் தூதரே! எங்களுள் ஒருவர் தம் இச்சையைத் தீர்த்துக்கொள்வதற்கும் நன்மை உள்ளதா? என்று நபித்தோழர்கள் கேட்டார்கள். அதற்கு நபியவர்கள், ஒருவன் தன் இச்சையைத் தீர்த்துக்கொள்ளத் தடுக்கப்பட்ட வழியில் சென்றால் அது அவனுக்குத் தீமைதானே? என்று மறுவினாத் தொடுத்தார்கள். அதுபோல்தான் ஒருவன் தன் இச்சையைத் தீர்த்துக்கொள்ள ஆகுமான வழியில் சென்றால் அதில் அவனுக்கு நன்மை உள்ளது.   (நூல்கள்: முஸ்லிம், அஹ்மது) 
  
இதற்கு விளக்கமளித்து அல்அல்பானீ (ரஹ்) கூறுகின்றார்:
சுயூத்தி (ரஹ்) அவர்கள் தமது "இத்காருல் அத்கார்' எனும் நூலில், ஒருவர் தம் மனைவியுடன் உடலுறவு கொள்வது தர்மமாகும். அப்போது அவனுக்கு அது சம்பந்தமாக எந்த எண்ணமும் இல்லாவிட்டாலும் சரியே! ஒவ்வொரு தனித்தனி உடலுறவுக்கும் இவ்வாறு நன்மையுண்டு என்பது என் கருத்தாகும். ஆனால் அவளை முதன் முதலில் திருமணம் செய்த போதாகிலும் அவனுக்கு அந்த எண்ணம் இருந்திருக்க வேண்டும். அல்லாஹ்வே யாவையும் அறிந்தவன் என்று கூறியுள்ளார். (நூல்: ஆதாபுஸ்ஸிஃபாஃப், பக்கம்: 138)

உடலுறவுக்கு முன் பிரார்த்தனை

உடலுறவின் கண்ணியமான நோக்கங்களுள் ஒன்று நல்ல சந்ததிகளை உற்பத்தி செய்வதாகும். எனவே உடலுறவு கொள்ளக்கூடிய தம்பதியர் தம் சந்ததியை ஷைத்தானின் தீங்கி லிருந்து பாதுகாக்குமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து கொள்வது அவசியமாகும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரளி) அறிவிக்கின்றார்கள்: உங்களுள் ஒருவர் தம் மனைவியிடம் (உடலுறவிற்காக) வந்தால் "பிஸ்மில்லாஹி அல்லாஹும்ம ஜன்னிப்னஷ் ஷைத்தான வஜன்னிபிஷ் ஷைத்தான மா ரஸக்த்தனா'' என்று ஓதிக் கொள்ளட்டும். (பொருள்: அல்லாஹ்வின் பெயரால் தொடங்குகின்றேன். இறைவா, எங்களைவிட்டு ஷைத்தானைத் தவிர்ப்பாயாக. நீ எங்களுக்கு வழங்கவுள்ள சந்ததியிலும் ஷைத்தானைத் தவிர்ப்பாயாக.) ஏனென்றால் அதன் மூலம் அவ்விருவருக்கிடையே குழந்தை உண்டானால் அக்குழந்தைக்கு ஷைத்தான் எவ்விதத் தீங்கும் செய்யமாட்டான்.'' (நூல்கள்: புகாரீ, முஸ்லிம்)

உடலுறவுத் தேவையை உடனடியாக நிறைவேற்றிக் கொள்ளுதல்

திருமணத்தின் மிக முக்கியமான நோக்கங்களுள் ஒன்று தம் கற்பைப் பாதுகாத்துக் கொள்வதாகும். எனவே எப்போது ஒருவருக்கு உடலுறவு கொள்வதற்கான உணர்வு ஏற்படுகிறதோ அவர் உடனே தம் மனைவியிடம் வந்து தம் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், அவருக்குத் தீய எண்ணங்கள் ஒன்று சேர்ந்துகொண்டு அது படபடப்புக்குக் காரணமாகின்றது; தவறு செய்யத் தூண்டுகிறது.

ஆசையை நிறைவேற்றிக்கொள்ள தன் மனைவியிடம் விரைதல்

பெண்கள் மீது ஆண்களுக்கும் ஆண்கள் மீது பெண்களுக்கும் இயற்கையாகவே ஆசை இருக்கிறது. ஷைத்தான், ஆண்களைக் கவர இதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றான். அப்பெண்கள் அவர்களை நெருங்கும்போதோ அவர்களைக் கடந்து செல்லும்போதோ அவன் ஆண்களின் ஆசையையும் காம உணர்வையும் தூண்டிவிடுகின்றான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக உசாமா இப்னு ஸைது (ரளி) அறிவிக்கின்றார்கள்: "எனக்குப் பிறகு பெண்களைவிட மிகப்பெரும் துன்பத்தை ஆண்களுக்கு நான் விட்டுச் செல்லவில்லை. '' (நூல்கள்: புகாரீ, முஸ்லிம்)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக ஜாபிர் (ரளி) அறிவிக்கின்றார்கள்: நிச்சயமாக ஒரு பெண் ஷைத்தானுடைய தோற்றத்திலேயே முன்னோக்கி வருகிறாள்; ஷைத்தானுடைய தோற்றத்திலேயே பின்னோக்கிச் செல்கிறாள். உங்களுள் ஒருவர் ஏதேனும் பெண்ணிடம் தமக்கு மகிழ்ச்சியளிக்கின்ற எதையேனும் கண்டால் அவர் உடனடியாகத் தம் மனைவியிடம் வந்து (உடலுறவுகொண்டு) விடட்டும். ஏனென்றால், அவளிடம் உள்ளதுதான் இவளிடமும் உள்ளது. மேலும், இ(வ்வாறுசெய்வ)து அவருடைய மனதில் உள்ள விருப்பத்தை(ச் சட்டமுறைப்படி)த் தீர்த்துக்கொள்ளச் செய்கிறது. (நூல்கள்: முஸ்லிம், அபூதாவூது)

எனவே, மணமான ஆண், ஷைத்தானின் சூழ்ச்சிக்கெதிராகத் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அவனுடைய மனைவி ஏதேனும் ஒரு முக்கியமான வேலையில் ஈடுபட்டிருந்தாலும் அவன் அவளை அழைக்கின்றபோது உடனடியாக அவள் தன் கணவனிடம் செல்ல வேண்டும். ஏனென்றால் அவள் செய்து கொண்டிருக்கிற வேலையைவிட கணவனின் தேவையை நிறைவேற்றுவது மிகவும் முக்கியமானதாகும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக தல்க் இப்னு அலீ (ரளி) அறிவிக்கின்றார்கள்: "உங்களுள் ஒருவர் தம் மனைவியிடம் தம் தேவையை நிறைவேற்றிக்கொள்ள நாடினால் அவள் அடுப்பங்கரையில் வேலை செய்து கொண்டிருந்தாலும் அவளிடம் சென்று தம் தேவையை நிறைவேற்றிக் கொள்ளட்டும்.'' (நூல்கள்: திர்மிதீ, அஹ்மது)

மனைவி தன் கணவனின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும்

தன் கணவனின் விருப்பத்தை நிறைவேற்ற எப்போதும் தயாராக இருப்பது ஒரு மனைவி மீதுள்ள பெருங்கடமையாகும். அவன் அவளிடம் இன்பம் நுகர நாடிவருகின்றபோது அவள் மறுப்பது மிகப்பெரும் பாவமாகும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு அபீஅவ்ஃபா (ரளி) அறிவிக்கின்றார்கள்: முஹம்மதுவின் ஆன்மா எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! ஒரு பெண் தன் கணவனுக்குரிய எல்லாக் கடமைகளையும் நிறைவேற்றாத வரை அவள் தன் இறைவனுக்குரிய கடமைகளை நிறைவேற்றியவளாக ஆகமாட்டாள். அவள் ஒட்டகத்தின் மீதிருந்தாலும் அவன் அவளை (உடலுறவு எனும் தேவைக்காக) அழைத்தால் அதை நிறைவேற்ற மறுக்கக் கூடாது. (நூல்கள்: அஹ்மது, இப்னுமாஜா)

மனைவி, தன் கணவனின் அழைப்புக்குப் பதில் கொடுக்கத் தயங்கக்கூடாது,. அது அவளுக்கு அசௌகரியமாக இருப்பினும் சரியே! அவள் அவனுடைய அழைப்பை மறுப்பது பெரும்பாவமாகும். மேலும் அவள் மறுப்பதால் வானவர்களின் சாபத்திற்கும் அல்லாஹ்வின் கோபத்திற்கும் ஆளாகின்றாள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரளி) அறிவிக்கின்றார்கள்: ஒருவன் தன் மனைவியைப் படுக்கைக்கு அழைத்து (அதற்கு இணங்கி வராமல்) அவள் மறுத்துவிட்டாள்; எனவே கணவன் அவள் மீது கோபத்துடன் இரவைக் கழித்தான் என்றால், காலை வரை வானவர்கள் அவளைச் சபிக்கின்றார்கள். (அல்லது அவன் அவளைத் திருப்திகொள்கின்ற வரை சபிக்கின்றார்கள்). (நூல்கள்: புகாரீ, முஸ்லிம்)
மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரளி) அறிவிக்கின்றார்கள்:  என்னுடைய ஆன்மா எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! ஒருவன் தன் மனைவியைப் படுக்கைக்கு அழைத்து (அதற்கு இணங்கி வராமல்) அவள் மறுத்துவிட்டால், அவ(ளின் கணவ)ன் அவளைத் திருப்திகொள்கின்ற வரை வானிலுள்ளவன் (அல்லாஹ்) அவள் மீது கோபமாகவே இருக்கின்றான். (நூல்: முஸ்லிம்)


ஆங்கிலத்தில் : முஹம்மது முஸ்தபா அல்ஜிபாலி 
தமிழில் : நூ. அப்துல் ஹாதி பாகவி M.A., M.Phil.

வெள்ளி, 29 ஏப்ரல், 2011

இப்ராஹீம் நபியின் வரலாறு (தொடர் 20)


இப்ராஹீம் (அலை) அவர்களின் பிரார்த்தனை

மிகச் சிறந்த இடத்தில் சிறப்பான ஓர் இறையாலயத்தை இப்ராஹீம் (அலை) கட்டினார். அது வேளாண்மையோ பசுமையோ இல்லாத ஒரு பள்ளத்தாக்காக இருந்தது. எனவே, அங்குள்ளவர்களுக்கு அருள்புரியுமாறு அல்லாஹ்விடம் அவர் கோரினார். அங்கு  தண்ணீர் குறைவு; மரங்கள் இல்லை; பயிர்களும் பழங்களும் இல்லை. அவ்வாறு இருப்பதுடனே அங்குள்ளவர்களுக்கு அதிகமான பழங்கள் கிடைக்கச் செய்யும்படி அவர் அல்லாஹ்விடம் கோரினார். மேலும், அவ்வூரைக் கண்ணியமான இடமாகவும்  பாதுகாப்பளிக்கும் இடமாகவும் ஆக்கும்படி கோரினார்.
அல்லாஹ் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டான்; அவருடைய பிரார்த்தனையைப் பூர்த்திசெய்தான்; அவருடைய வேண்டுதலை அவருக்கு வழங்கினான். அல்லாஹ் கூறுகின்றான்:  (மக்காவாசிகளாகிய) அவர்களைச் சுற்றியுள்ள மனிதர்கள், (பகைவர்களால்) சூறையாடப்படும் நிலையில், (இதை) நாம் அபயமளிக்கின்ற புனிதத்தலமாக ஆக்கியிருப்பதை அவர்கள் பார்க்கவில்லையா? (29: 67)  

அபயமளிக்கின்ற கண்ணியமான இடத்தில் அவர்களுக்கு நாம் இடமளிக்கவில்லையா? அ(வ்விடத்)தின் பக்கம் ஒவ்வொரு வகைக் கனிவர்க்கமும் நம்மிடமிருந்து உணவாகக் கொண்டுவரப்படுகிறது.  (28: 57)
இம்மை-மறுமை அருளால் மார்க்கம் மற்றும் உலகம் சார்ந்த அருட்கொடைகளையும் அம்மக்கள் நிறைவாகப் பெறும் பொருட்டு, அவர்களுக்கு அவர்கள் இனத்திலிருந்தே, அவர்களின் தாய்மொழியைச் சார்ந்த ஒரு தூதரை அனுப்பிவைக்குமாறு அவர் அல்லாஹ்விடம் கேட்டார்.

பிரார்த்தனையை ஏற்ற அல்லாஹ்

இப்ராஹீம் (அலை) அவர்களின் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக்கொண்டு, அம்மக்களுக்கு ஒரு தூதரை அனுப்பிவைத்தான். அவர் என்னே தூதர்! அவன் அவர் மூலமே தன்னுடைய நபிமார்களுக்கும் இறைத்தூதர்களுக்கும் முத்திரையிட்டான்; அவருக்கு முன்பு யாருக்கும் கொடுக்காத மார்க்கத்தை அவர் மூலம் அவன் பூர்த்திசெய்தான்; புவிவாழ் மக்கள் தம் மொழியாலும் இனத்தாலும் பண்புகளாலும் வேறுபட்டிருந்தாலும், அவர்கள் பல்வேறு ஊர்களிலும் நகரங்களிலும் வாழ்ந்தாலும், மறுமைநாள் வரை வரவிருக்கின்ற மக்கள் அனைவருக்கும் அவருடைய அழைப்பைப் பொதுவாக்கினான்.

மற்ற இறைத்தூதர்களைவிட இவையே அவருடைய தனிப்பெரும் சிறப்புகள் ஆகும். இவை அனைத்தும் அவருடைய சிறந்த உள்ளத்தாலும் அவர் கொண்டுவந்த மார்க்கத்தின் நிறைவாலும், அவருடைய ஊரின் சிறப்பாலும், அவருடைய மொழியின் தெளிவாலும், அவர்தம் சமுதாயத்தின்மீது கொண்ட ஆழிய அன்பாலும் கருணையாலும், அவருடைய பிறப்பின் சிறப்பாலும், அவர் தோன்றி வந்துள்ள இடத்தின் தூய்மையாலும் கிடைத்தவை ஆகும்.

இதனால்தான், இப்ராஹீம் (அலை) அவர்கள் புவிவாழ் மக்களுக்கு கஅபா எனும் இறையாலயத்தைக் கட்டியதால், அவரின் இருப்பிடமும் அவரின் மதிப்பும் வானங்களில் உயர்ந்த மதிப்புப்பெற்ற பைத்துல் மஅமூருக்கு அருகில் இருக்கிறது. அந்த பைத்துல் மஅமூர்தான் ஏழாம் வானத்தில் உள்ளோருக்கு கஅபா ஆகும். அதில் ஒவ்வொரு நாளும் எழுபதாயிரம் வானவர்கள் வந்து அல்லாஹ்வை வணங்குகின்றார்கள். பின்னர், அவர்கள் மறுமைநாள் வரை ஒருபோதும் அங்கு மீண்டும் வரவே மாட்டார்கள். இமாம் இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள், அல்பகரா அத்தியாயத்தில் கஅபா கட்டப்பட்டுள்ள விதம் பற்றி  வந்துள்ள பல்வேறு நபிமொழிகளைத் தம்முடைய திருக்குர்ஆன் விரிவுரையில் எடுத்துக் கூறியுள்ளார்கள்.1


கஅபாவைக் கட்டுதல்

இது பற்றி சுத்தீ (ரஹ்) கூறியுள்ளார்: இறையாலயத்தைக் கட்ட இப்ராஹீம்- இஸ்மாயீல் (அலைஹிமஸ்ஸலாம்) இருவரையும் அல்லாஹ் ஏவியபோது, அவ்விருவரும் அதற்கான இடத்தை அறியவில்லை. இறுதியில்,  ஹஜூஜ் எனும் ஒரு வகைக் காற்றை அல்லாஹ் அனுப்பினான்.  அதற்கு இரண்டு இறக்கைகளும் பாம்பு வடிவத்தில் ஒரு தலையும் இருந்தன. கஅபாவின் சுற்றுச்சுவரை எந்த அடித்தளத்தில் வைக்கவேண்டும் என்று அது காட்டியது. அவ்விருவரும் மண்வெட்டிகளோடு அதனைப் பின்தொடர்ந்து சென்று அது காட்டிய இடத்தைத் தோண்ட ஆரம்பித்தனர். அதில் அடிக்கல்லை நட்டனர்.

அது பற்றி அல்லாஹ் கூறுகின்றான்: நாம் இப்ராஹீமுக்குப் புனித ஆலயத்தின் இடத்தை நிர்ணயித் ததை(நபியே!) எண்ணிப்பார்ப்பீராக!  (22: 26) அவ்விருவரும் அடித்தளங்களையும்   தூண்களையும் அமைத்துவிட்டபோது,   இப்ராஹீம் (அலை) அவர்கள் தம்முடைய மகனிடம், என்னருமை மகனே! எனக்கு ஓர் அழகான கல்லைத் தேடிக் கொண்டுவா! நான் அதை இவ்விடத்தில் வைக்க வேண்டும் என்று கூறினார். என் தந்தையே! நிச்சயமாக நான் சோர்வாகவும்  களைப்பாகவும் இருக்கிறேன் என்று இஸ்மாயீல் (அலை) பதிலளித்தார். அப்படியே  சென்றுவிடுவீர்! என்று இப்ராஹீம் (அலை) கூறினார்.

அச்சமயத்தில், ஜிப்ரீல் (அலை) அவர்கள், இந்தியாவிலிருந்து கருப்புக் கல்லை (ஹஜ்ருல் அவதை)க் கொண்டுவந்தார். அது ஸஹாமா 2 மரத்தைப் போன்றும் வெண்மையான மரகதத்தைப்போன்றும் வெள்ளையாக இருந்தது. ஆதம் (அலை) அதைச் சொர்க்கத்திலிருந்து கொண்டுவந்தார். மக்களின் பாவங்களால் அது கருமையாகிவிட்டது. பின்னர், ஸ்மாயீல் (அலை) ஒரு கல்லைக் கொண்டுவந்தார். அப்போது அங்கு ஏற்கெனவே ஒரு கல் இருந்ததைக் கண்ட அவர், என் தந்தையே! இதை யார் கொண்டுவந்தார்? என்று கேட்டார்.  உம்மைவிடச் சுறுசுறுப்பானவர் இதைக் கொண்டுவந்தார் என்று பதிலளித்தார். அவ்விருவரும் அக்கட்டடத்தைக் கட்டி, இருவரும் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்கள். எங்கள் இறைவா! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்பாயாக! நீயே நன்கு செவியுறுவோனும் நன்கறிந்தோனும் ஆவாய் (என்று பிரார்த்தனை செய்தனர்).  (2: 127)


திண்ணமாக இப்ராஹீம் (அலை) அவர்கள் அவ்வீட்டை ஐந்து மலைகளால் கட்டினார். அதாவது ஐந்து மலைகளிலிருந்து கற்களை எடுத்துக் கட்டினார். நிச்சயமாக துல்கர்னைன்- அவர்தாம் அச்சமயத்தில் அரசராக இருந்தார்- அவ்விருவரும் அவ்வீட்டைக் கட்டிக்கொண்டிருந்தபோது அவர்களைக் கடந்து சென்றார். அப்போது அவர், யார் இதைக் கட்ட உம்மை ஏவினார்? என்று வினவினார். எங்களை அல்லாஹ்தான் ஏவினான் என்று இப்ராஹீம் (அலை) பதிலளித்தார். நீர் சொல்வது எனக்குப் புரியவில்லை என்று கூறினார். நிச்சயமாக அல்லாஹ்தான் இதைக் கட்ட அவரை ஏவினான் என்று ஐந்து ஆடுகள் சாட்சி கூறின. எனவே, அவர் இறைநம்பிக்கைகொண்டார்; அவரை மெய்ப்படுத்தினார். இதனை இப்னு அபீஹாத்திம் (ரஹ்) கூறியுள்ளார்.

நிச்சயமாக துல்கர்னைன், இப்ராஹீம் (அலை) அவர்களுடன் இறையாலயத்தைச் சுற்றிவந்தார் என்று அஸ்ரக்கீ (ரஹ்) கூறியுள்ளார்.

கஅபாவுக்கு மக்களின் முக்கியத்துவம்

இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) கட்டிய கஅபா நீண்ட காலம் இருந்தது. அதன் பின்னர், குரைஷி குலத்தினர் அதைக் கட்டினர். இன்றுள்ளபடி, இப்ராஹீம் (அலை) கட்டிய அடித்தளத்தில் சிரியாவை நோக்கிய திசையின் வடக்குப் புறத்தில் கொஞ்சம் குறைவு ஏற்பட்டுவிட்டது.

நபி (ஸல்) அவர்கள் (என்னிடம்,) உன்னுடைய சமுதாயத்தார் (குறைஷியர்) கஅபாவை(ப் புதுப்பித்து)க் கட்டி இப்ராஹீம் (அலை) அவர்கள் அமைத்த அடித்தளங்களைவிடச் சுருக்கி(சற்று உள்ளடக்கி)விட்டதை  நீ காணவில்லையா? என வினவினார்கள். அதற்கு நான், அல்லாஹ்வின் தூதரே! இப்ராஹீம் (அலை) அவர்கள் அமைத்த அடித்தளங்களின்மீது அதைத் தாங்கள் மீண்டும் கட்டக்கூடாதா? என்று கேட்டேன். உன் சமுதாயத்தார் புதிதாக இஸ்லாமை ஏற்றவர்களாக இல்லாவிட்டால் (அவ்வாறே) நான் செய்திருப்பேன் என்று பதிலளித்தார்கள்  என ஆயிஷா (ரளி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

மற்றோர் அறிவிப்பில், உன்னுடைய சமுதாயத்தார் புதிதாக இஸ்லாமை ஏற்றவர்களாக இருப்பதால் என்று உள்ளது. மேலும் மற்றோர் அறிவிப்பில், கஅபாவின் கருவூலங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவிட்டிருப்பேன்; `ஹிஜ்ர் எனும் அரைவட்டப் பகுதியை கஅபாவுடன் இணைத்து, கஅபாவின் தலைவாயிலை (கீழிறக்கித் தரையோடு சேர்ந்தாற்போல் ஆக்கியிருப்பேன் என்று வந்துள்ளது. (நூல்கள்: புகாரீ, முஸ்லிம்)

அப்துர் ரஹ்மான் பின் அஸ்ஸுபைர் (ரளி) தம் ஆட்சிக் காலத்தில், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில், அந்த கஅபா எப்படி இருக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டினார்களோ அதைத் தம் சிற்றன்னை ஆயிஷா கூற, அதற்கேற்ப அவர் அதைக் கட்டினார். பின்னர், ஹஜ்ஜாஜ் பின் யூசுஃப், அப்துர் ரஹ்மான் பின் அஸ்ஸுபைர் (ரளி) அவர்களை ஹிஜ்ரீ  73ஆம் ஆண்டு கொன்றுவிட்டபோது, அவர் அப்துல் மலிக் பின் மர்வான் என்பாருக்கு ஒரு கடிதம் எழுதினார். அவர் அந்நேரத்தில் அங்கு கலீஃபாவாக இருந்தார்.

நிச்சயமாக இப்னு அஸ்ஸுபைர்  அதைத் தம் விருப்பப்படியே மாற்றி அமைத்துள்ளார் என்று அவர்கள் கருதினார்கள். எனவே, அது ஏற்கெனவே எவ்வாறு இருந்ததோ அதேபோன்று மீண்டும் கட்ட ஏவினார். ஆகவே, அவர்கள் சிரியா நாட்டை நோக்கி இருந்த சுவரை இடித்து, அதிலிருந்து (கருப்புக்) கல்லை வெளியேற்றினார்கள். பின்னர், அந்தச் சுவரை அடைத்துவிட்டார்கள். கஅபாவின் நடுவே கற்களைப் பதித்தார்கள். ஆகவே, அதன் கிழக்கு வாசல் உயர்ந்துவிட்டது.  இன்று காணப்படுவதைப் போன்று, மேற்கு வாசலை முழுமையாக அடைத்துவிட்டார்கள். இப்னு அஸ்ஸுபைர் (ரளி), அவருடைய சிற்றன்னை இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரளி) அவர்கள் அறிவித்த காரணத்தால்தான் கஅபாவை மாற்றியமைத்தார் என்பதை அவர்கள் அறிந்தபோது,  தாம் செய்ததை எண்ணி அவர்கள் வருந்தினார்கள். அதையும் அதனை அடுத்துள்ள பகுதியையும் அப்படியே நாம் விட்டிருக்கலாமே என்று நினைத்துக் கவலைப்பட்டார்கள்.

அல்மஹ்தீ பின் அல்மன்ஸூர் (ரஹ்) அவர்கள் தம் ஆட்சிக் காலத்தில், இமாம் மாலிக் பின் அனஸ் (ரஹ்) அவர்களிடம், இப்னு அஸ்ஸுபைர் (ரளி) அவர்கள் கட்டியதைப் போல் மீண்டும் நாம் கட்டலாமா என்று ஆலோசனை செய்தார். அதற்கு அவர், அரசர்கள் அதனை விளையாட்டுப் பொருளாக ஆக்கிக்கொள்வதை நான் அஞ்சுகிறேன் என்று பதிலளித்தார்கள்.
அதாவது, புதிதாக ஒவ்வோர் அரசரும் வருகின்றபோது, அவர் தம் விருப்பப்படி அதை மாற்றியமைத்துக் கட்டத் தொடங்குகிறார். எனவே, அவர்களுடைய ஆலோசனைப்படி அம்முடிவை அவர் கைவிட்டதால் இன்று நாம் காணும் தோற்றத்திலேயே அது நீடிக்கின்றது.

----------------அடிக்குறிப்பு------------------------


1. எனவேஅது பற்றித் தெரிந்துகொள்ள விருப்பமுள்ளோர்  `தஃப்சீர் இப்னு கஸீர்-தமிழாக்கத்தைக் காண்க.
2. அது ஒரு மரம். அதன் பழங்களும் பூக்களும் வெண்மையாக இருக்கும். அம்மரம் காய்ந்துவிட்டால் அதன் வெண்மை அதிகரிக்கும்.

அரபி:           அல்பிதாயா வந்நிஹாயா (இமாம் இப்னு கஸீர்- ரஹ்) 
தமிழாக்கம்: நூ. அப்துல் ஹாதி பாகவி M.A., M.Phil.

வியாழன், 28 ஏப்ரல், 2011

மகத்தான மார்க்கக் கல்வி



பள்ளிகளில் தேர்வுகள் முடிந்து கோடைவிடுமுறை விட்டாயிற்று. தமிழக அரசியல்வாதிகள் தேர்தல் முடிவை எதிர்பார்த்துக் காத்திருப்பதைப்போல் பள்ளி மாணவர்கள் அனைவரும் தம்முடைய தேர்வு முடிவுகளை எதிர்பார்த்திருக்கின்றனர். பன்னிரண்டாம் வகுப்பை முடித்தவர்கள் கல்லூரிக் கனவோடு இருக்கின்றார்கள்; பத்தாம் வகுப்பை முடித்தவர்கள் மேனிலைப் பள்ளியை நோக்கிச் செல்ல இருக்கின்றார்கள்; நடுநிலைப் பள்ளிப் படிப்பை முடித்தவர்கள் உயர்நிலைப் பள்ளியில் சேர இருக்கின்றார்கள். ஆக மாணவர்கள் யாவரும், மேற்படிப்பு என்ன படிக்கலாம்; எங்கு படிக்கலாம் என்ற முனைப்பில் உள்ளார்கள். பொதுவாக, பெற்றோர்கள் யாவரும் தம் பிள்ளைகள் தலைசிறந்த கல்லூரிகளில் படித்துப் பட்டம்  பெற்று, கைநிறையச் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ண ஓட்டத்திலே படிப்பை அணுகுகின்றார்கள். எதைப் படித்தால் எளிதில் பணி வாய்ப்புக் கிட்டும்; நிறைய சம்பாதிக்கலாம் என்ற கோணத்தில்தான் பலர் சிந்திக்கின்றார்கள். படிப்பு என்பதே பணம் சம்பாதிப்பதற்கான ஒரு துணைக்கோல் என்று எண்ணிக்கொண்டுள்ளார்கள். ஆனால் படிப்பு என்பது ஒரு மனிதனின் அறிவு வளர்ச்சிக்குத்தான் என்பதை பலர் அறிவதில்லை. ஒருவன் தன் கல்வியால் அறிவை வளர்த்துக்கொண்டான்; பண்பாட்டைக் கற்றுக்கொண்டான்; சமூகச் சிந்தனையை வளர்த்துக்கொண்டான்  என்றால் அதுதான் கல்வியின் மிகப்பெரும் பயன். அதுவன்றி, ஒருவன் ஏதோ படித்தான்; பட்டத்தைப் பெற்றான் என்றால், அந்தக் கல்வியால் எந்தப் பயனும் இல்லை.

என் மகன் ஒரு பொறியாளர்; என் மகன் ஒரு கணினிப் பொறியாளர்; என் மகன் ஒரு கணக்காளர்; என் மகன் ஒரு மருத்துவர்; என் மகன் ஒரு வழக்கறிஞர் என்று சொல்லிக்கொள்வதில்தான் ஒவ்வொருவரும் பெருமைகொள்கின்றனரே தவிர என் மகன் ஒரு ஹாஃபிழ் (திருக்குர்ஆனை மனனம் செய்தவர்); என் மகன் ஓர் ஆலிம் (இஸ்லாமிய மார்க்க அறிஞர்) என்று சொல்லிக்கொள்வதை யாரும் பெருமையாகக் கருதுவதில்லை. இன்று, அனைவரும் தத்தம் மகன்களை எந்தக் கல்லூரியில் சேர்க்கலாம் என்று ஒவ்வொரு கல்லூரியாகத் தேடி அலைகின்றார்கள்; எந்தக் கல்லூரி சிறந்த கல்லூரி என்று பிறரிடம் கேட்டுத் தெரிந்துகொள்கிறார்கள்; அறிந்தவர்களிடம் விசாரிக்கின்றார்கள். ஆனால் எந்த இஸ்லாமியக் கல்லூரியில் சேர்க்கலாம்; எங்குள்ள அரபிக் கல்லூரியில் சேர்க்கலாம் என்று யாரும் யாரிடமும் விசாரிப்பதில்லை. ஒருவர் தம் பிள்ளையை ஆலிமாகவோ, ஹாஃபிழாகவோ உருவாக்குவதால் அவருக்கு என்ன நட்டம் வந்துவிட்டது? அவர் தம் மகனுக்குத் துரோகம் இழைத்துவிட்டாரா? அல்லது அவனைப் பாதாளத்தில் தள்ளிவிட்டுவிட்டாரா? இல்லவே இல்லை. மாறாக, அவர் தம் மகனுக்குச் சீரான கல்வியையே கொடுத்துள்ளார். ஈருலகிலும் வெற்றிபெறத்தக்க கல்வியை வழங்கியுள்ளார். அப்படிப்பட்ட மார்க்கக் கல்வியைத் தம் பிள்ளைகளுக்கு வழங்குவதில் உங்களுக்கு என்ன தயக்கம்? மார்க்கக் கல்வியைக் கற்பதற்காக உங்கள் பிள்ளைகளை ஏன் அரபிக்கல்லூரியில் சேர்க்க முன்வருவதில்லை?

அவர்களெல்லாம் சமுதாயத்தில் தாழ்ந்த நிலையில் இருக்கின்றார்களா? சமுதாயத்தில் மதிப்பு மரியாதை இல்லாமல் இருக்கின்றார்களா? பணி இல்லாமல் இருக்கின்றார்களா? திறமையற்றவர்களாக இருக்கின்றார்களா? ஏன்? கைநிறையக் காசு சம்பாதிப்பதில்லை. ஆம். உண்மைதான். ஆனால் அவர்கள் மனநிறைவோடு வாழ்கிறார்களே அதைப் பார்க்கமாட்டீர்களா?

கடந்த காலங்களில் நீங்கள் பார்த்த ஆலிம்கள் வேறு; இன்றைய கணினி யுகத்தில் நீங்கள் காணுகின்ற ஆலிம்கள் வேறு என்பதை நீங்கள் புரிந்துகொள்ளுங்கள். இன்றைய கணினி யுக ஆலிம்கள் அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றம் கண்டுவருகின்றார்கள். அன்று ஆங்கிலமே என்னவென்று தெரியாதவர்கள் இன்று ஆங்கிலத்தில் உரையாற்றுகின்றார்கள்; கணிப்பொறி இயக்குகிறார்கள்; வலைப்பூக்கள் உருவாக்கித் தம் கருத்துகளைப் பதிந்து உலகின் எண்திசையிலும் உள்ள மக்களைப் படிக்கத் தூண்டுகின்றார்கள். அது மட்டுமின்றி, கைநிறையச் சம்பாதிக்கவும் தொடங்கிவிட்டார்கள். ஆம். இன்றைய அரபிக் கல்லூரிகள் மார்க்கக் கல்வியை மட்டும் போதிப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல், ஓர் ஆலிம் தன்னை நிலைப்படுத்திக்கொள்வதற்கான கல்விகளையும் சேர்த்தே போதிக்கத் தொடங்கிவிட்டன. அங்கு அரபி இலக்கணமும், திருக்குர்ஆன் விளக்கவுரையும், நபிமொழிகளின் விளக்கவுரையும் போதிக்கப்படுவதோடு கணினிக் கல்வி, தட்டச்சு, ஆங்கிலம் போன்ற கல்விகளும் போதிக்கப்படுகின்றன. அத்துடன் உலகியல் கல்லூரியின் சார்பாக வழங்கப்படுகின்ற பட்டங்களைப் பெறுவதற்கான ஏற்பாடும் செய்யப்படுகிறது. உங்கள் பிள்ளை எட்டாம் வகுப்பு முடித்திருந்து, குர்ஆனைப் பார்த்து வாசிக்கத் தெரிந்திருந்தால் போதும். ஐந்தாண்டுகளில் அவனுடைய வாழ்க்கையே முற்றிலும் மாறிவிடும். ஒரு கையில் அரபிக் கல்லூரியின் பட்டம்; மற்றொரு கையில் உலகியல் கல்விக்கான பட்டம்; அத்தோடு பல்வேறு திறமைகளோடும், ஆற்றல்களோடும் வெளிவருகின்ற உங்கள் பிள்ளை ஈருலகிலும் உங்களுக்கும் இஸ்லாமியச் சமுதாயத்துக்கும் உதவுகின்ற பிள்ளையாக உருவாகும் என்பதை நினைவில் நிறுத்துங்கள். அதை நினைத்துப் பெருமைப்படுங்கள்.

பெற்றோரை மதிக்கின்ற பிள்ளையாக, உங்களின் முதுமையில் உங்களைக் கைவிட்டுவிடாத பிள்ளையாக, அனைவராலும் மதிக்கப்படுகின்ற பிள்ளையாக, அல்லாஹ்வின் அன்பைப் பெற்ற பிள்ளையாக உங்கள் பிள்ளை உருவாகும். பெற்ற உங்களுக்கு இதைவிட வேறு பெருமை என்ன வேண்டும்? யோசியுங்கள். பலமுறை யோசியுங்கள். மார்க்கக் கல்வியை உங்கள் பிள்ளைக்குக் கொடுப்பதால் தீமை ஏதும் உண்டா? இனியும் ஏன் தாமதம்? உங்கள் பிள்ளைகளை அரபிக் கல்லூரிகளில் சேர்த்து ஈருலகிலும் பயன்மிக்க பிள்ளைகளாக உருவாக்குங்கள்!






செவ்வாய், 26 ஏப்ரல், 2011

முஸ்லிம் ஆட்சியாளர்கள் சகிப்புத்தன்மையற்றவர்களா?-நீதிபதி மார்க்கண்டேய கட்சு

முஸ்லிம் ஆட்சியாளர்கள் சகிப்புத்தன்மையற்றவர்கள், வைராக்கியமுடையவர்கள் என்று வேண்டுமென்றே வரலாற்று நூல்களை மாற்றி எழுதி, இந்து-முஸ்லிம் இடையே பகைமையை வளர்த்துக்கொண்டே வந்துள்ளனர்; ஆனால், அது பொய் என்பதற்கான பெரும் ஆதாரங்கள் வரலாற்றில் உள்ளன என்று உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்சு ஞாயிற்றுக்கிழமை (18-04-11) தெரிவித்துள்ளார்.

சமஸ்கிருத-உர்தூ கலாச்சாரத்தால் இந்தியர்கள் ஒன்றாக இருந்துவந்தனர்; இந்தியா எப்போதும் ஜனநாயக நாடாகவே இருக்கும் என்பதற்கு அதுவே உத்திரவாதம் தந்தது என்றும் குறிப்பிட்டார்.

1857ஆம் ஆண்டுக்கு முன்பே, முஸ்லிம் ஆட்சியாளர்களுக்கு எதிரான கட்டுக்கதைகளைப் பரப்புவது பிரிட்டிஷ்காரர்களின் திட்டமாக இருந்தது. அதுவே இந்தியாவில் பற்பல ஆண்டுகளாகத் தொடர்ந்துவந்துள்ளது. இந்த அடிப்படையில்தான், மஹ்மூத் கஜினி சோம்நாத் கோயிலை அழித்த செய்தி மக்கள் மத்தியில் பரவலாக அறியப்படுகிறது. ஆனால், அதே நேரத்தில், திப்பு சுல்தான் 156 கோவில்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் நன்கொடை கொடுத்துவந்தார் என்ற உண்மை யாருக்கும் தெரியாது.


திறன்சார் படிப்புகளை வழங்குகின்ற பயிலகம் ஒன்றில் நடைபெற்ற வெள்ளிவிழா மாநாட்டில் நீதிபதி மார்க்கண்டேய கட்சு ஆற்றிய இறுதியுரையில், வரலாற்றாசிரியர் டி.என். பாண்டே எழுதிய `ஹிஸ்டரி இன் த சர்விஸ் ஆஃப் இம்பீரியலிசம்’ எனும் நூலில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள சான்றுகளை எடுத்துரைத்து, தம் வாதங் களை உறுதிப்படுத்தினார்.

1977ஆம் ஆண்டு இராஜ்ய சபா உறுப்பினர்களுக்கு ஆற்றிய உரையில் டாக்டர் பாண்டே சுருக்கமாகக் கூறியுள்ளதாவது: திட்டக் கொள்கையின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள இந்திய வரலாற்றுப் பாடப்புத்தகங்கள் பொய்யாகவும் திரித்தும் கூறப்பட்டுள்ளன. அதாவது, இந்திய வரலாற்றின் மத்திய கால வரலாற்றில் ஓர் ஈர்ப்பை ஏற்படுத்த வேண்டுமென்பதற்காக, முஸ்லிம் ஆட்சியாளர்களால் இந்துக்கள் மிகுந்த கொடுமைகளுக்கும் துன்பங்களுக்கும் ஆளாக்கப்பட்டார்கள் என்றும், இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வாழ்ந்த இந்துக்கள் பல்வேறு தொல்லைகளை அனுபவித்தார்கள் என்றும் திரித்துக் கூறப்பட்டுள்ளன.

1928ஆம் ஆண்டில் திப்புசுல்தான் ஆட்சியில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஒரு வாதத்தை உறுதிப்படுத்துவதற்காக மேற்கொண்ட ஆய்வில்தான் டாக்டர் பாண்டேவுக்கு உண்மை தெரியவந்தது. (டாக்டர் ஹரி பிரசாத் சாஸ்திரி தம்முடைய நூலில் அந்த வாதத்தை முன்வைத்துள்ளார். இவர் கல்கத்தா பல்கலைக் கழகத்தின் அப்போதைய சமஸ்கிருதத் துறைத் தலைவராக இருந்தார்) அதாவது, திப்புசுல்தான் ஆட்சிக்காலத்தில் பிராமணர்கள் 3000 பேர் இஸ்லாத்துக்கு மாறிவிடாமல் இருப்பதற்காகத் தற்கொலை செய்துகொண்டார்கள். இந்தச் செய்திக்கு ஆதாரம், மைசூர் செய்தி ஆவணத் தொகுப்பில் உள்ளது என்று டாக்டர் சாஸ்திரி முன்மொழிந்துள்ளார். ஆனால் அங்கு அத்தகைய செய்தி ஆவணம் ஏதும் இல்லை.


திப்புவைப் பற்றிய ஆராய்ச்சியில் டாக்டர் பாண்டே மேலும் கூறுவதாவது: அவர் 156 கோவில்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் நன்கொடை கொடுத்துவந்தார் என்பது மட்டுமின்றி, ஸ்ரீநகர் மடத்திலுள்ள சங்கராச்சாரியாருடன் உளப்பூர்வமான தொடர்பு வைத்திருந்தார். குறைந்த பட்சம் அவருக்கு 30 கடிதங்களையும் எழுதியுள்ளார். அன்றைய காலத்தில் இந்தியா முழுவதும் உயர்நிலைப் பள்ளிகளில் பாடத்தில் இருந்த டாக்டர் சாஸ்திரி எழுதிய நூலில் இருந்த கருத்தே பிற்காலத்தில் தவறான விளக்கத்தைக் கொடுத்தது. ஆனால், உறுதி செய்யப்படாத அந்தக் குற்றச்சாட்டு பிற்காலத்தில் எழுதப்பட்ட வரலாற்றுப் பாட நூல்களிலும் உண்மை மறைக்கப்பட்டதாகவே தொடர்கிறது.

நீதிபதி கட்சு மேலும் கூறியதாவது: இந்தியாவின் ஜனநாயகப் பன்முகம், இந்திய அரசமைப்பையும் இந்திய மக்கள் தொகையின் ஒப்பற்ற வேற்றுமையையும் கட்டிக்காத்து வந்தது. இந்த வேற்றுமை 10,000 ஆண்டுகளுக்கு முன்பாக ஏற்பட்டதாகும். அதற்குமுன் இது ஒரே நிலமாகவே இருந்து வந்தது. பழைய குடிமக்களின் வருகையால்தான் இந்தியாவில் வேற்றுமையே ஏற்பட்டது.

வேற்றுமையின் காரணமாகப் பல்வேறு மதங்கள், சாதிகள், மொழிகள் மக்கள் மத்தியில் பரவியதோடு அவை சந்ததிகளிடம் தாக்கத்தையும் பிரதிபலிப்பையும் ஏற்படுத்தின. சட்ட வல்லுநர்கள் வலுவான சிறப்பம்சங்களோடு சட்டங்களை வகுத்தார்கள். நிலையான ஜனநாயகத்துக்கு உத்திரவாதமும், நமது சொத்தும் பன்முகக் கலாச்சாரமே ஆகும்.

 முன்னதாக, இந்த மாநாட்டில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உடனடியாக, இராஜிந்தர் சச்சார் குழுவின் பரிந்துரைப்படி, `சம வாய்ப்பு ஆணையத்தை உருவாக்க வேண்டும் என்று அரசை வலியுறுத்தியது. சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினருக்கும், குறிப்பாகச் சிறுபான்மையினருக்கும், ஏனைய தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களுக்கும் சம வாய்ப்பு வழங்கப்படாத வரை இந்தியா முழுமையான வளர்ச்சியை அடைய முடியாது என்றும் அந்தத் தீர்மானம் தெரிவிக்கிறது.

-இந்து நாளிதழ் 18-04-11 தமிழில்: நூ.அப்துல் ஹாதி பாகவி

வெள்ளி, 15 ஏப்ரல், 2011

வாழ்வைத் தொடக்கிவைப்போம்!



இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இனிய இல்வாழ்வுக்கு வழிகாட்டி யுள்ளார்கள். நவீனக் கலாச்சாரச் சீரழிவால் சமுதாயத்தில் தொடர்ந்து கொண்டிருக்கின்ற மார்க்க அடிப்படையிலான இல்வாழ்வு முறையே குலைந்து வருகின்ற நேரத்தில் இது பற்றித் தெரிந்து கொள்வது முற்றி லும் அவசியமாகும். இன்றைக்கு எத்தனையோ சீரழிவுகள் சமுதாயத்தில் புதிது புதிதாகத் தோன்றிவிட்டாலும் இயற்கையான திருமணமுறையே சிதைந்து வருவது ஓர் ஆரோக்கியமான சமுதாய வளர்ச்சிக்கு உகந்ததில்லை.

ஓர் ஆண் மகனுக்குத் தோதுவான பொருத்தமான பெண் பார்த்து, நிச்சயம் பேசி, நாள் குறிப்பிட்டு, குறித்த அந்த நாளில் உறவினர் அனைவரும் ஒன்றிணைந்து மணமுடித்து வைப்பது ஆண்டாண்டு காலமாக நிகழ்ந்து வருகின்ற திருமண முறை. ஆனால் இன்று இதற்கெல்லாம் பிள்ளைகள் தம் பெற்றோருக்கு வாய்ப்பே கொடுப்பதில்லை. தமக்குப் பிரியமானவளைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு காதல் புரிவது, குறிப்பிட்ட நாளில் இருவரும் தம் வீட்டைவிட்டு எங்காவது ஓடிப்போய்த் திருமணம் செய்துகொண்டு வாழத் தொடங்குவது தொடர்கதையாகிவருகிறது.

சின்னஞ்சிறு வயதுமுதல் பார்த்துப் பார்த்து வளர்த்து, தேவையானவற்றை வாங்கிக் கொடுத்து, தாம் பசியோடு இருந் தாலும் தம் பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக நல்லதொரு பள்ளியில் சேர்த்துப் படிக்க வைத்தால் பிள்ளைகளோ இவ்வாறு செய்வது எந்த வகையில் நியாயம்?
அவர்கள் தம் காதலையும் காமத்தையும்தான் முன்னிலைப் படுத்துகிறார்களே தவிர தம் பெற்றோரின் கனவையும் ஆசையையும் நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் சிறிதும் தோன்றவில்லையே ஏன்? இத்துணை காலம் பாடுபட்டு வளர்த்த பெற்றோருக்குப் பிள்ளைகள் கொடுக்கும் பரிசு இதுதானா?

தனக்குப் பிடித்தவனை அழைத்துக்கொண்டு ஒரு பெண் ஓடுவதும், தனக்குப் பிடித்தவளை அழைத்துக்கொண்டு ஓர் ஆண் ஓடிப்போவதும் தொடர்கின்ற இந்நேரத்தில் அது பற்றி இஸ்லாமிய மார்க்கம் என்ன சொல்கிறது என்பதை நாம் தெரிந்து கொள்வது மிக்க அவசியமாகும்.
எப்பெண் தன்னுடைய வலீ (பொறுப்பாளி)யின் அனுமதியின்றித் திருமணம் செய்துகொண்டாளோ அவளுடைய திருமணம் செல்லாது என்று மும்முறை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அன்னை ஆயிஷா (ரளி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (நூல்கள்: அபூதாவூத், திர்மிதீ)

இதனடிப்படையில், ஒரு பெண் தன் பெற்றோருக்குத் தெரியாமல், தன் மனம் விரும்பியவனோடு ஓடிச் சென்றுபதிவு அலுவலகத்தில் பதிவுத் திருமணம் செய்துகொண்டு தன் இல்வாழ்வைத் தொடர முடியாது.  இஸ்லாமிய மார்க்கத்தின்படி அவளுடைய திருமணம் செல்லாது. இதை நாம் ஆழமாகச் சிந்தித்துப் பார்த்தால், ஒரு பெண் தன் மனம்போன போக்கில் செல்ல அனுமதி இல்லை என்பதை விளங்க முடிகிறது.

 அதற்குப் பற்பல காரணங்கள் இருக்கலாம்.  காரணங்கள் பல இருந்தாலும் இறைத்தூதரின்  கூற்றுக்கே நாம் முன்னுரிமை கொடுக்க வேண்டும். ஒரு பெண்ணின் பொறுப்பாளராக (வலீ) அவளுடைய தந்தை, சகோதரன், சிற்றப்பா, பெரியப்பா ஆகியோர் இருப்பார்கள். அவர்களுள் யாரேனும் பொறுப்பாளராக இருந்துதான் ஒரு பெண்ணின் திருமணத்தை நடத்திவைக்க வேண்டும். ஒரு பெண்ணோ, ஆணோ தனக்குப் பிடித்த பெண்ணைக் கூட்டிக்கொண்டு ஓட வேண்டிய நிலை ஏன் ஏற்படுகிறது? அதற்குக் காரணம் யார்?
இந்நிலைக்கு முழு முதற்காரணம் பெற்றோரே ஆவர். இந்நிலை தொடர இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, ஒரு பெண்ணோ ஆணோ அவர்கள் படிக்கின்ற பள்ளி அல்லது கல்லூரி  ஒரு  காரணம்.
நாம்  நம் பிள்ளைகளைப் பள்ளியில் சேர்க்கின்றபோது ஆண் களை ஆண்களுக்கான பள்ளிக்கூடத்திலும் பெண்களைப் பெண்களுக் கான பள்ளிக்கூடத்திலும் சேர்க்க வேண்டும். அப்படிச் செய்தால் அவர்கள் தம் படிப்பில் மட்டுமே  கவனம் செலுத்துவர். அதைவிட்டு அவர்களின் கவனம் சிதறாது. மாறாக, நாம் ஆண்-பெண் கலந்து பயில்கின்ற இருபாலர் பள்ளியில்தான் சேர்க்கிறோம். பள்ளிக்கூடத்தைக் கடந்து வந்துவிட்டால் கல்லூரியில் சேர்க்கிறோம். பெரும்பாலும் இருபாலர் கல்லூரிகளே உள்ளன. எனவே நாம் தூரநோக்கோடு சிந்திக்காமல் நம் பொறுப்பை நிறைவேற்றிவிட வேண்டும் என்ற அடிப்படையில் சேர்த்துவிடுகிறோம். ஆனால் அங்கு அவர்கள் பெறு வதோ கல்வியைவிட அதிகம் பெறுவது காதலைத்தான்.

இறுதியில் கல்வியா, காதலா என்ற மனப்போராட்டத்தில் கல்வி தோற்றுப்போய்விடுகிறது. காதல் வெற்றிகொள்கிறது. எனவே இதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டுமாயின் கல்லூரியில் சேர்க்கும்போதே நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். குறிப்பாக, பெண்களுக்கான கல்லூரியில் மட்டுமே பெண்களைச் சேர்க்க வேண்டும். ஆண்களுக்குப் போட்டியாகப் பெண்களைப் படிக்க வைக்க வேண்டும் என்ற போட்டி மனப்பான்மை நம் பிள்ளைகளின் வாழ்க்கையையே திசைதிருப்பிவிடுகின்றது. அதனால் அந்தோ பரிதாபம்!  மாற்றுச் சமுதாய ஆண்களோடு வாழ்க்கையைத் தொடர வேண்டிய கட்டாய நிலைக்கு ஆளாகிவிடுகின்றனர்.

பருவ வயதடைந்தவுடன் திருமணம் செய்து வைக்காதிருத்தல் மற்றொரு காரணமாகும். ஒவ்வொரு பெண்ணும் தன் பருவ வயதை அடைந்தவுடன் அவளை மணமுடித்துக்கொடுத்து விடுவது  ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும். இதை எத்தனை பெற்றோர் மிகச் சரியாகச் செய்துவருகின்றனர்? பெற்றோர் தம் பெண்பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும்; பணிக்கு அனுப்ப வேண்டும் என்று எண்ணுகின்ற அதேநேரத்தில் உரிய நேரத்தில் அவளுக்கு வாழ்க்கையை அமைத்துக்கொடுக்க வேண்டும்  என்று எண்ணுவதில்லை. காலம் கடந்த பின்பே அது பற்றி யோசிக்கின்றனர். இதுவே அவர்களின் வாழ்க்கை திசைதிரும்பிவிட முக்கியக் காரணமாகும். இது பெற்றோரின் பொறுப்பின்மையால் விளைந்த கேடே தவிர பிள்ளைகளின் தவற்றினால் ஏற்பட்டதில்லை.

ஆனால், படிக்க வைப்பதே தவறு என்று விளங்கிக்கொள்ளக்கூடாது. இரண்டிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றுதான் கூறுகிறோம். படிப்பும் அவசியம்; திருமணமும் அவசியம். இரண்டில் முன்னுரிமை, பருவ வயதை அடைந்தவுடன் திருமணம். இதுவே இறைத்தூதரின் பொன்மொழி. பெண்களுக்கு ஆண்களைப் போன்ற கல்வியைக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. பெண்களுக்கேற்ற துறைகளில் படிக்க வைத்து, அத்துறைகளில் பெண்கள் தாராளமாகப் பணியாற்றலாம்.

இன்னும், உங்களுள் வாழ்க்கைத் துணையில்லாதவர்களுக்கும் உங்கள் அடிமைகளாக(ப் பணியாற்றுகின்ற) ஆண்-பெண்களுள் உள்ள நல்லோர்களுக்கும் திருமணம் செய்துவையுங்கள். அவர்கள் ஏழைகளாக இருந்தாலும் அவர்களை அல்லாஹ் தன் கருணையால் செல்வந்தர்களாக ஆக்கிவைப்பான். (24: 32)

இன்றைய மக்கள் பலர், திருமணம் செய்கின்றபோதே ஆண் எவ்வளவு சம்பாதிக்கிறான் என்றுதான் பார்க்கின்றார்கள். வேலை இல்லாத ஆண்களுக்குப் பெண் கொடுக்க முன்வருவதில்லை. இத்தகைய போக்கு ஆரோக்கியமான சமுதாயத்துக்கு வழிவகுக்காது. இஸ்லாமியப் பார்வையிலும் இது தவறானதே. எனவே பருவ வயதை அடைந்துள்ள ஆரோக்கியமான ஓர் ஆண்மகனுக்கு உங்கள் பெண்களைத் தாராளமாக இறைவனை நம்பித் திருமணம் செய்துவையுங்கள். அல்லாஹ் அவர்களுடைய தேவைகளை நிறைவேற்றப்போதுமான செல்வத்தைக் கொடுப்பான். திருமண வாழ்க்கையைத் தொடங்க, செல்வம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதை இனியாகிலும் நாம் விளங்க முற்படுவோம். 

நபியவர்களின் முன்னிலையில் வந்து நின்றுகொண்டு என்னைத் தங்களுக்கு ஒப்படைக்கிறேன் என்று கூறிய பெண்ணை, ஓர் இளைஞருக்குத்தான் நபியவர்கள் மணமுடித்துவைத்தார்கள். அந்த இளைஞரிடம் ஓர் இரும்பு மோதிரம்கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியில் அவர் மனனம் செய்திருந்த திருக்குர்ஆன் அத்தியாயங்களுக்குப் பகரமாக மண முடித்துவைத்தார்கள். அவர்கள் வாழவில்லையா? புகாரீயில் பதிவுசெய்யப்பட்டுள்ள (5121) இத்தகவலை நீங்கள் படித்துப் பாருங்கள் புரியும்.

பதின்ம வயதினர் தம் விருப்பப்படி ஒருத்தியை அல்லது ஒரு வனை அழைத்துக்கொண்டு வீட்டைவிட்டு ஓடுவதைத் தடுக்க இஸ்லாமிய மார்க்கத்தில் மற்றொரு தீர்வும் உள்ளது.

நம் பிள்ளைகள் ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்தவுடன் திருமண உறவை நிச்சயம் செய்துவிடுவது; பின்னர் திருமண உறவுக்கான முதிர்ச்சியடைந்தவுடன் அவர்களை இணைத்து வைப்பது. இது ஒன்றும் புதிதன்று. சில பல ஊர்களில் இன்றும் நடைமுறையில் உள்ளதுதான். இதே நடைமுறையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் பின்பற்றியிருக்கின்றார்கள். நபியவர்களுக்கும் அன்னை ஆயிஷா (ரளி) அவர்களுக்கும் திருமண ஒப்பந்தம் நடைபெற்றது. அப்போது அன்னை ஆயிஷா (ரளி) அவர்களுக்கு ஆறு வயது. பின்னர் மூன்றாண்டுகள் கழித்து அவர்களின் ஒன்பதாம் வயதில்தான் நபியவர்களும் அன்னை ஆயிஷா அவர்களும் ஒன்றாக இணைந்தார்கள். இது பற்றி அன்னை ஆயிஷா (ரளி) அவர்கள் அறிவிக்கின்ற நபிமொழி புகாரீ உள்ளிட்ட பல்வேறு நபிமொழித் தொகுப்புகளில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. "நான் ஆறு வயதுடையவளாக இருந்தபோது என்னை நபி (ஸல்) அவர்கள் மணந்துகொண்டார்கள். எனக்கு ஒன்பது வயதானபோது என்னுடன் தாம்பத்திய உறவைத் தொடங்கினார்கள். நான் அவர்களுடன் ஒன்பது ஆண்டுகள் (மனைவியாக) வாழ்ந்தேன். (புகாரீ-5158)

ஆக, ஒரு கோணத்தில் நாம் இன்றைய தலைமுறையினரைச் சிந்தித்துப் பார்க்கும்போது, அவர்கள் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறார்கள் என்பதை நாம் ஒத்துக்கொண்டுதான் ஆக வேண்டும். ஏனெனில் ஓர் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தோரை எடுத்துக்கொண்டால் அவர்கள் தம்முடைய பதினைந்து வயதில் அறிந்து கொண்டதை இன்றைய நான்கு அல்லது ஐந்து வயதுள்ள சிறுவர்கள் தெரிந்துகொண்டு விடுகின்றார்கள். பாலியல் பற்றி திருமணத்தின்போதுதான் அன்றையவர்களுக்குத் தெரியவரும். ஆனால் இன்று பத்து வயது முதலே அது பற்றி முழுமையாக அறியத் தொடங்கி விடுகின்றார்கள்.

ஏனென்றால் அதற்கான எல்லாவிதச் சாத்தியங்களும் இன் றைக்கு உள்ளன. தொலைக்காட்சி முதல் இணையதளம் வரை மிக எளிதாகப் பயன்படுத்தும் விதத்தில் உள்ளன. தொலைக்காட்சியில் ஆண்-பெண் கலந்த நிகழ்ச்சிகளையும் ஒன்றாகக் கட்டியணைத்து நடிக் கின்ற காட்சிகளையுமே ஒளிபரப்புகின்றனர்; அக்காட்சிகளை நாள் தோறும் காண்கின்ற இளவயதினர் அதைத் தாமும் செய்ய வேண்டும் என்ற ஆவல்கொள்கின்றனர். இணையதளத்தில் அமர்ந்தால் அ முதல் ஃ வரை உடற்கூறு சார்ந்த அத்துணை தகவல்களும் படங்களுடன் கிடைக்கின்றன. ஆகவே அனைத்தையும் மிக விரைவிலேயே தெரிந்து கொண்டுவிடுகின்றனர். அது மட்டுமல்லாமல்  அதையெல்லாம் செயல்படுத்திப் பார்க்க வேண்டுமென்ற மனநிலைக்கும் வந்துவிடுகின்றனர்.

இவையெல்லாம் போதாதென்று, இன்று கைப்பேசி அனைவரின் கைகளிலும் தவழத் தொடங்கிவிட்டது. அதில் தாம் விரும்பியபடி எங்கிருந்தாலும் யாருடனும் பேசிக்கொள்கின்ற வசதி; குறுஞ்செய்திகளை உடனுக்குடன் பரிமாறிக்கொள்ளும் வசதி. இத்தனையையும் மீறித்தான் நாம் நம்முடைய பிள்ளைகளை ஒழுக்கமாக வளர்க்க வேண்டியுள்ளது. எனவே சிறுவர்களுக்கு ஒன்றும் தெரியாதுஒன்றும் புரியாது என்பதெல்லாம் பழைய வாதம். ஆகவே இஸ்லாமியக் கண்ணோட்டத்தின்படி ஒருவன் சிற்றிளைஞனாக ஆகின்றபோதே திருமணத்துக்கான ஒப்பந்தத்தை நிறைவேற்றலாம். `இவளுக்கு இவன்தான்' என்று முன்னரே முடிவாகிவிடுகின்றபோது அவன் மற்றவளை நோக்க வேண்டிய அவசியம் ஏற்படாது.

அவர்கள் எப்போது வேண்டுமானாலும் சேர்ந்துகொள்ளலாம்; அவர்கள் இருவரும் ஒன்றாகப் படிக்கலாம்; ஒன்றாகச் சேர்ந்து விளை யாடலாம்; தம்முடைய வாழ்க்கையை அவர்களே தீர்மானித்துக் கொள்ளலாம். ஆக இது ஒரு புதுமையான கருத்தாகத் தோன்றினாலும் இன்றைய தலைமுறை அவ்வளவு வேகமாக வளர்ந்துவருகிறது என்பதைத்தான் நான் சொல்ல வருகிறேன். அதே நேரத்தில் அதற்கான தீர்வையும் இஸ்லாம் சொல்லாமல் விட்டு வைக்கவில்லை என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஆக, நம்முடைய தலைமுறையினர் கெட்டுப்போகாமல் பாதுகாக்க வேண்டுமாயின் அதற்கு என்னென்ன வழிமுறைகள் இருக்கின்றனவோ, அதற்கு இஸ்லாம் என்னென்ன முன்னேற்பாடுகளைக் கையாளச் சொல்கிறதோ அவற்றை உரிய நேரத்தில் முறைப்படி நடைமுறைப்படுத்தி அவர்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டுவது ஒவ்வொரு பெற்றோரின் கடமை. ஆகவே நாம் நம் பிள்ளைகளின் படிப்பு, திருமணம், பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றில் கவனம் செலுத்துவோம். அவர்களின் எதிர்காலம் சிறக்கவும், அவர்கள் தம் வாழ்க்கையை இறைவேதத்தின்படியும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வாக்குப்படியும் அமைத்துக்கொள்ள நாம் துணைபுரிவோம். அவர்களின் இல்வாழ்வை மிக விரைவாகவே தொடங்கிவைப்போம்!    ***