இப்ராஹீம் (அலை) அவர்களின் பிரார்த்தனை
மிகச் சிறந்த இடத்தில் சிறப்பான ஓர் இறையாலயத்தை இப்ராஹீம் (அலை) கட்டினார். அது வேளாண்மையோ பசுமையோ இல்லாத ஒரு பள்ளத்தாக்காக இருந்தது. எனவே, அங்குள்ளவர்களுக்கு அருள்புரியுமாறு அல்லாஹ்விடம் அவர் கோரினார். அங்கு தண்ணீர் குறைவு; மரங்கள் இல்லை; பயிர்களும் பழங்களும் இல்லை. அவ்வாறு இருப்பதுடனே அங்குள்ளவர்களுக்கு அதிகமான பழங்கள் கிடைக்கச் செய்யும்படி அவர் அல்லாஹ்விடம் கோரினார். மேலும், அவ்வூரைக் கண்ணியமான இடமாகவும் பாதுகாப்பளிக்கும் இடமாகவும் ஆக்கும்படி கோரினார்.
அல்லாஹ் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டான்; அவருடைய பிரார்த்தனையைப் பூர்த்திசெய்தான்; அவருடைய வேண்டுதலை அவருக்கு வழங்கினான். அல்லாஹ் கூறுகின்றான்: (மக்காவாசிகளாகிய) அவர்களைச் சுற்றியுள்ள மனிதர்கள், (பகைவர்களால்) சூறையாடப்படும் நிலையில், (இதை) நாம் அபயமளிக்கின்ற புனிதத்தலமாக ஆக்கியிருப்பதை அவர்கள் பார்க்கவில்லையா? (29: 67)
அபயமளிக்கின்ற கண்ணியமான இடத்தில் அவர்களுக்கு நாம் இடமளிக்கவில்லையா? அ(வ்விடத்)தின் பக்கம் ஒவ்வொரு வகைக் கனிவர்க்கமும் நம்மிடமிருந்து உணவாகக் கொண்டுவரப்படுகிறது. (28: 57)
இம்மை-மறுமை அருளால் மார்க்கம் மற்றும் உலகம் சார்ந்த அருட்கொடைகளையும் அம்மக்கள் நிறைவாகப் பெறும் பொருட்டு, அவர்களுக்கு அவர்கள் இனத்திலிருந்தே, அவர்களின் தாய்மொழியைச் சார்ந்த ஒரு தூதரை அனுப்பிவைக்குமாறு அவர் அல்லாஹ்விடம் கேட்டார்.
பிரார்த்தனையை ஏற்ற அல்லாஹ்
இப்ராஹீம் (அலை) அவர்களின் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக்கொண்டு, அம்மக்களுக்கு ஒரு தூதரை அனுப்பிவைத்தான். அவர் என்னே தூதர்! அவன் அவர் மூலமே தன்னுடைய நபிமார்களுக்கும் இறைத்தூதர்களுக்கும் முத்திரையிட்டான்; அவருக்கு முன்பு யாருக்கும் கொடுக்காத மார்க்கத்தை அவர் மூலம் அவன் பூர்த்திசெய்தான்; புவிவாழ் மக்கள் தம் மொழியாலும் இனத்தாலும் பண்புகளாலும் வேறுபட்டிருந்தாலும், அவர்கள் பல்வேறு ஊர்களிலும் நகரங்களிலும் வாழ்ந்தாலும், மறுமைநாள் வரை வரவிருக்கின்ற மக்கள் அனைவருக்கும் அவருடைய அழைப்பைப் பொதுவாக்கினான்.
மற்ற இறைத்தூதர்களைவிட இவையே அவருடைய தனிப்பெரும் சிறப்புகள் ஆகும். இவை அனைத்தும் அவருடைய சிறந்த உள்ளத்தாலும் அவர் கொண்டுவந்த மார்க்கத்தின் நிறைவாலும், அவருடைய ஊரின் சிறப்பாலும், அவருடைய மொழியின் தெளிவாலும், அவர்தம் சமுதாயத்தின்மீது கொண்ட ஆழிய அன்பாலும் கருணையாலும், அவருடைய பிறப்பின் சிறப்பாலும், அவர் தோன்றி வந்துள்ள இடத்தின் தூய்மையாலும் கிடைத்தவை ஆகும்.
இதனால்தான், இப்ராஹீம் (அலை) அவர்கள் புவிவாழ் மக்களுக்கு கஅபா எனும் இறையாலயத்தைக் கட்டியதால், அவரின் இருப்பிடமும் அவரின் மதிப்பும் வானங்களில் உயர்ந்த மதிப்புப்பெற்ற பைத்துல் மஅமூருக்கு அருகில் இருக்கிறது. அந்த பைத்துல் மஅமூர்தான் ஏழாம் வானத்தில் உள்ளோருக்கு கஅபா ஆகும். அதில் ஒவ்வொரு நாளும் எழுபதாயிரம் வானவர்கள் வந்து அல்லாஹ்வை வணங்குகின்றார்கள். பின்னர், அவர்கள் மறுமைநாள் வரை ஒருபோதும் அங்கு மீண்டும் வரவே மாட்டார்கள். இமாம் இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள், அல்பகரா அத்தியாயத்தில் கஅபா கட்டப்பட்டுள்ள விதம் பற்றி வந்துள்ள பல்வேறு நபிமொழிகளைத் தம்முடைய திருக்குர்ஆன் விரிவுரையில் எடுத்துக் கூறியுள்ளார்கள்.1
கஅபாவைக் கட்டுதல்
இது பற்றி சுத்தீ (ரஹ்) கூறியுள்ளார்: இறையாலயத்தைக் கட்ட இப்ராஹீம்- இஸ்மாயீல் (அலைஹிமஸ்ஸலாம்) இருவரையும் அல்லாஹ் ஏவியபோது, அவ்விருவரும் அதற்கான இடத்தை அறியவில்லை. இறுதியில், ஹஜூஜ் எனும் ஒரு வகைக் காற்றை அல்லாஹ் அனுப்பினான். அதற்கு இரண்டு இறக்கைகளும் பாம்பு வடிவத்தில் ஒரு தலையும் இருந்தன. கஅபாவின் சுற்றுச்சுவரை எந்த அடித்தளத்தில் வைக்கவேண்டும் என்று அது காட்டியது. அவ்விருவரும் மண்வெட்டிகளோடு அதனைப் பின்தொடர்ந்து சென்று அது காட்டிய இடத்தைத் தோண்ட ஆரம்பித்தனர். அதில் அடிக்கல்லை நட்டனர்.
அது பற்றி அல்லாஹ் கூறுகின்றான்: நாம் இப்ராஹீமுக்குப் புனித ஆலயத்தின் இடத்தை நிர்ணயித் ததை(நபியே!) எண்ணிப்பார்ப்பீராக! (22: 26) அவ்விருவரும் அடித்தளங்களையும் தூண்களையும் அமைத்துவிட்டபோது, இப்ராஹீம் (அலை) அவர்கள் தம்முடைய மகனிடம், என்னருமை மகனே! எனக்கு ஓர் அழகான கல்லைத் தேடிக் கொண்டுவா! நான் அதை இவ்விடத்தில் வைக்க வேண்டும் என்று கூறினார். என் தந்தையே! நிச்சயமாக நான் சோர்வாகவும் களைப்பாகவும் இருக்கிறேன் என்று இஸ்மாயீல் (அலை) பதிலளித்தார். அப்படியே சென்றுவிடுவீர்! என்று இப்ராஹீம் (அலை) கூறினார்.
அச்சமயத்தில், ஜிப்ரீல் (அலை) அவர்கள், இந்தியாவிலிருந்து கருப்புக் கல்லை (ஹஜ்ருல் அவதை)க் கொண்டுவந்தார். அது ஸஹாமா 2 மரத்தைப் போன்றும் வெண்மையான மரகதத்தைப்போன்றும் வெள்ளையாக இருந்தது. ஆதம் (அலை) அதைச் சொர்க்கத்திலிருந்து கொண்டுவந்தார். மக்களின் பாவங்களால் அது கருமையாகிவிட்டது. பின்னர், இஸ்மாயீல் (அலை) ஒரு கல்லைக் கொண்டுவந்தார். அப்போது அங்கு ஏற்கெனவே ஒரு கல் இருந்ததைக் கண்ட அவர், என் தந்தையே! இதை யார் கொண்டுவந்தார்? என்று கேட்டார். உம்மைவிடச் சுறுசுறுப்பானவர் இதைக் கொண்டுவந்தார் என்று பதிலளித்தார். அவ்விருவரும் அக்கட்டடத்தைக் கட்டி, இருவரும் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்கள். எங்கள் இறைவா! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்பாயாக! நீயே நன்கு செவியுறுவோனும் நன்கறிந்தோனும் ஆவாய் (என்று பிரார்த்தனை செய்தனர்). (2: 127)
திண்ணமாக இப்ராஹீம் (அலை) அவர்கள் அவ்வீட்டை ஐந்து மலைகளால் கட்டினார். அதாவது ஐந்து மலைகளிலிருந்து கற்களை எடுத்துக் கட்டினார். நிச்சயமாக துல்கர்னைன்- அவர்தாம் அச்சமயத்தில் அரசராக இருந்தார்- அவ்விருவரும் அவ்வீட்டைக் கட்டிக்கொண்டிருந்தபோது அவர்களைக் கடந்து சென்றார். அப்போது அவர், யார் இதைக் கட்ட உம்மை ஏவினார்? என்று வினவினார். எங்களை அல்லாஹ்தான் ஏவினான் என்று இப்ராஹீம் (அலை) பதிலளித்தார். நீர் சொல்வது எனக்குப் புரியவில்லை என்று கூறினார். நிச்சயமாக அல்லாஹ்தான் இதைக் கட்ட அவரை ஏவினான் என்று ஐந்து ஆடுகள் சாட்சி கூறின. எனவே, அவர் இறைநம்பிக்கைகொண்டார்; அவரை மெய்ப்படுத்தினார். இதனை இப்னு அபீஹாத்திம் (ரஹ்) கூறியுள்ளார்.
நிச்சயமாக துல்கர்னைன், இப்ராஹீம் (அலை) அவர்களுடன் இறையாலயத்தைச் சுற்றிவந்தார் என்று அஸ்ரக்கீ (ரஹ்) கூறியுள்ளார்.
கஅபாவுக்கு மக்களின் முக்கியத்துவம்
இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) கட்டிய கஅபா நீண்ட காலம் இருந்தது. அதன் பின்னர், குரைஷி குலத்தினர் அதைக் கட்டினர். இன்றுள்ளபடி, இப்ராஹீம் (அலை) கட்டிய அடித்தளத்தில் சிரியாவை நோக்கிய திசையின் வடக்குப் புறத்தில் கொஞ்சம் குறைவு ஏற்பட்டுவிட்டது.
நபி (ஸல்) அவர்கள் (என்னிடம்,) உன்னுடைய சமுதாயத்தார் (குறைஷியர்) கஅபாவை(ப் புதுப்பித்து)க் கட்டி இப்ராஹீம் (அலை) அவர்கள் அமைத்த அடித்தளங்களைவிடச் சுருக்கி(சற்று உள்ளடக்கி)விட்டதை நீ காணவில்லையா? என வினவினார்கள். அதற்கு நான், அல்லாஹ்வின் தூதரே! இப்ராஹீம் (அலை) அவர்கள் அமைத்த அடித்தளங்களின்மீது அதைத் தாங்கள் மீண்டும் கட்டக்கூடாதா? என்று கேட்டேன். உன் சமுதாயத்தார் புதிதாக இஸ்லாமை ஏற்றவர்களாக இல்லாவிட்டால் (அவ்வாறே) நான் செய்திருப்பேன் என்று பதிலளித்தார்கள் என ஆயிஷா (ரளி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
மற்றோர் அறிவிப்பில், உன்னுடைய சமுதாயத்தார் புதிதாக இஸ்லாமை ஏற்றவர்களாக இருப்பதால் என்று உள்ளது. மேலும் மற்றோர் அறிவிப்பில், கஅபாவின் கருவூலங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவிட்டிருப்பேன்; `ஹிஜ்ர் எனும் அரைவட்டப் பகுதியை கஅபாவுடன் இணைத்து, கஅபாவின் தலைவாயிலை (கீழிறக்கித் தரையோடு சேர்ந்தாற்போல் ஆக்கியிருப்பேன் என்று வந்துள்ளது. (நூல்கள்: புகாரீ, முஸ்லிம்)
அப்துர் ரஹ்மான் பின் அஸ்ஸுபைர் (ரளி) தம் ஆட்சிக் காலத்தில், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில், அந்த கஅபா எப்படி இருக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டினார்களோ அதைத் தம் சிற்றன்னை ஆயிஷா கூற, அதற்கேற்ப அவர் அதைக் கட்டினார். பின்னர், ஹஜ்ஜாஜ் பின் யூசுஃப், அப்துர் ரஹ்மான் பின் அஸ்ஸுபைர் (ரளி) அவர்களை ஹிஜ்ரீ 73ஆம் ஆண்டு கொன்றுவிட்டபோது, அவர் அப்துல் மலிக் பின் மர்வான் என்பாருக்கு ஒரு கடிதம் எழுதினார். அவர் அந்நேரத்தில் அங்கு கலீஃபாவாக இருந்தார்.
நிச்சயமாக இப்னு அஸ்ஸுபைர் அதைத் தம் விருப்பப்படியே மாற்றி அமைத்துள்ளார் என்று அவர்கள் கருதினார்கள். எனவே, அது ஏற்கெனவே எவ்வாறு இருந்ததோ அதேபோன்று மீண்டும் கட்ட ஏவினார். ஆகவே, அவர்கள் சிரியா நாட்டை நோக்கி இருந்த சுவரை இடித்து, அதிலிருந்து (கருப்புக்) கல்லை வெளியேற்றினார்கள். பின்னர், அந்தச் சுவரை அடைத்துவிட்டார்கள். கஅபாவின் நடுவே கற்களைப் பதித்தார்கள். ஆகவே, அதன் கிழக்கு வாசல் உயர்ந்துவிட்டது. இன்று காணப்படுவதைப் போன்று, மேற்கு வாசலை முழுமையாக அடைத்துவிட்டார்கள். இப்னு அஸ்ஸுபைர் (ரளி), அவருடைய சிற்றன்னை இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரளி) அவர்கள் அறிவித்த காரணத்தால்தான் கஅபாவை மாற்றியமைத்தார் என்பதை அவர்கள் அறிந்தபோது, தாம் செய்ததை எண்ணி அவர்கள் வருந்தினார்கள். அதையும் அதனை அடுத்துள்ள பகுதியையும் அப்படியே நாம் விட்டிருக்கலாமே என்று நினைத்துக் கவலைப்பட்டார்கள்.
அல்மஹ்தீ பின் அல்மன்ஸூர் (ரஹ்) அவர்கள் தம் ஆட்சிக் காலத்தில், இமாம் மாலிக் பின் அனஸ் (ரஹ்) அவர்களிடம், இப்னு அஸ்ஸுபைர் (ரளி) அவர்கள் கட்டியதைப் போல் மீண்டும் நாம் கட்டலாமா என்று ஆலோசனை செய்தார். அதற்கு அவர், அரசர்கள் அதனை விளையாட்டுப் பொருளாக ஆக்கிக்கொள்வதை நான் அஞ்சுகிறேன் என்று பதிலளித்தார்கள்.
அதாவது, புதிதாக ஒவ்வோர் அரசரும் வருகின்றபோது, அவர் தம் விருப்பப்படி அதை மாற்றியமைத்துக் கட்டத் தொடங்குகிறார். எனவே, அவர்களுடைய ஆலோசனைப்படி அம்முடிவை அவர் கைவிட்டதால் இன்று நாம் காணும் தோற்றத்திலேயே அது நீடிக்கின்றது.
----------------அடிக்குறிப்பு------------------------
1. எனவே, அது பற்றித் தெரிந்துகொள்ள விருப்பமுள்ளோர் `தஃப்சீர் இப்னு கஸீர்-தமிழாக்கத்தைக் காண்க.
2. அது ஒரு மரம். அதன் பழங்களும் பூக்களும் வெண்மையாக இருக்கும். அம்மரம் காய்ந்துவிட்டால் அதன் வெண்மை அதிகரிக்கும்.
அரபி: அல்பிதாயா வந்நிஹாயா (இமாம் இப்னு கஸீர்- ரஹ்)
தமிழாக்கம்: நூ. அப்துல் ஹாதி பாகவி M.A., M.Phil.
தமிழாக்கம்: நூ. அப்துல் ஹாதி பாகவி M.A., M.Phil.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக