செவ்வாய், 10 மே, 2011

மார்க்கக் கல்வி மகத்தானதே!


பள்ளிகளில் தேர்வுகள் முடிந்து கோடைவிடுமுறை விட்டாயிற்று. தமிழக அரசியல்வாதிகள் தேர்தல் முடிவை எதிர்பார்த்துக் காத்திருப் பதைப்போல் பள்ளி மாணவர்கள் அனைவரும் தம்முடைய தேர்வு முடிவுகளை எதிர்பார்த்திருக்கின்றனர். பன்னிரண்டாம் வகுப்பை முடித்தவர்கள் கல்லூரிக் கனவோடு இருக்கின்றார்கள்; பத்தாம் வகுப்பை முடித்தவர்கள் மேனிலைப் பள்ளியை நோக்கிச் செல்ல இருக்கின்றார்கள்; நடுநிலைப் பள்ளிப் படிப்பை முடித்தவர்கள் உயர்நிலைப் பள்ளியில் சேர இருக்கின்றார்கள். ஆக மாணவர்கள் யாவரும், மேற்படிப்பு என்ன படிக்கலாம்; எங்கு படிக்கலாம் என்ற முனைப்பில் உள்ளார்கள்.

இன்று, இஸ்லாமியச் சமுதாயத்தில் கல்வி பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. ஆகவே, ஏற்கெனவே நம் சமுதாயத்தில் இருந்த படித்தவர்களின் விழுக்காடு தற்போது உயர்ந்துள்ளது. ஆனால் இஸ்லாமிய மார்க்கக் கல்வியைப் பொறுத்தவரை, நம் சமுதாயத்தில் கடந்த காலங்களில் இருந்த ஆர்வமும் மதிப்பும் இன்று வெகுவாகக் குறைந்து காணப்படுகிறது. மார்க்கக் கல்வியைக் கற்றுக்கொண்டு சமுதாயச் சேவை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் குன்றிப்போய் விட்டது. படித்து முடித்தபின் பணி; கை நிறையச் சம்பளம்; வசதியான வாழ்க்கை-இதையே குறிக்கோளாகக் கொண்டு பலர் கல்வியை நாடுகின்றனர். ஆனால், மார்க்கக் கல்வியைப் போதிக்கின்ற அரபிக் கல்லூரிகளில் தம் பிள்ளைகளைச் சேர்த்து அவர்களை ஓர் ஆலிமாக-இஸ்லாமிய அறிஞராக- உருவாக்க வேண்டும் என்ற எண்ணமே பலருக்குத் தோன்றுவதில்லையே ஏன்?

பொதுவாக, பெற்றோர்கள் யாவரும் தம் பிள்ளைகள் தலைசிறந்த கல்லூரிகளில் படித்துப் பட்டம் பெற்று, கைநிறையச் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ண ஓட்டத்திலேயே படிப்பை அணுகுகின்றார்கள். எதைப் படித்தால் எளிதில் பணி வாய்ப்புக் கிட்டும்; நிறைய சம்பாதிக்கலாம் என்ற கோணத்தில்தான் பலர் சிந்திக்கின்றார்கள். படிப்பு என்பதே பணம் சம்பாதிப்பதற்கான ஒரு துணைக்கோல் என்று எண்ணிக்கொண்டுள்ளார்கள். ஆனால் படிப்பு என்பது ஒரு மனிதனின் அறிவு வளர்ச்சிக்குத்தான் என்பதைப் பலர் அறிவதில்லை. ஒருவன் தன் கல்வியால் அறிவை வளர்த்துக்கொண்டான்; பண்பாட்டைக் கற்றுக்கொண்டான்; சமூகச் சிந்தனையை வளர்த்துக் கொண்டான் என்றால் அதுதான் கல்வியின் மிகப்பெரும் பயன். அதுவன்றி, ஒருவன் ஏதோ படித்தான்; பட்டத்தைப் பெற்றான் என்றால், அந்தக் கல்வியால் எந்தப் பயனும் இல்லை.

என் மகன் ஒரு பொறியாளர்; என் மகன் ஒரு கணினிப் பொறியாளர்; என் மகன் ஒரு கணக்காளர்; என் மகன் ஒரு மருத்துவர்; என் மகன் ஒரு வழக்கறிஞர் என்று சொல்லிக்கொள்வதில்தான் ஒவ்வொருவரும் பெருமைகொள்கின்றனரே தவிர என் மகன் ஒரு ஹாஃபிழ் (திருக்குர்ஆனை மனனம் செய்தவர்); என் மகன் ஓர் ஆலிம் (இஸ்லாமிய மார்க்க அறிஞர்) என்று சொல்லிக்கொள்வதை யாரும் பெருமையாகக் கருதுவதில்லை. இன்று, அனைவரும் தத்தம் மகன்களை எந்தக் கல்லூரியில் சேர்க்கலாம் என்று ஒவ்வொரு கல்லூரியாகத் தேடி அலைகின்றார்கள்; எந்தக் கல்லூரி சிறந்த கல்லூரி என்று பிறரிடம் கேட்டுத் தெரிந்துகொள்கிறார்கள்; அறிந்தவர்களிடம் விசாரிக்கின்றார்கள். ஆனால் எந்த இஸ்லாமியக் கல்லூரியில் சேர்க்கலாம்; எங்குள்ள அரபுக் கல்லூரியில் சேர்க்கலாம் என்று யாரும் யாரிடமும் விசாரிப்பதில்லை. ஒருவர் தம் பிள்ளையை ஆலிமாகவோ, ஹாஃபிழாகவோ உருவாக்குவதால் அவருக்கு என்ன நட்டம் வந்துவிட்டது? அவர் தம் மகனுக்குத் துரோகம் இழைத்துவிட்டாரா? அல்லது அவனைப் பாதாளத்தில் தள்ளிவிட்டுவிட்டாரா? இல்லவே இல்லை. மாறாக, அவர் தம் மகனுக்குச் சீரான கல்வியையே கொடுத்துள்ளார். ஈருலகிலும் வெற்றிபெறத்தக்க கல்வியை வழங்கியுள்ளார். அப்படிப்பட்ட மார்க்கக் கல்வியைத் தம் பிள்ளைகளுக்கு வழங்குவதில் உங்களுக்கு என்ன தயக்கம்? மார்க்கக் கல்வியைக் கற்பதற்காக உங்கள் பிள்ளைகளை ஏன் அரபிக்கல்லூரியில் சேர்க்க முன்வருவதில்லை?

அவர்களெல்லாம் சமுதாயத்தில் தாழ்ந்த நிலையில் இருக்கின்றார்களா? சமுதாயத்தில் மதிப்பு மரியாதை இல்லாமல் இருக்கின்றார்களா? பணி இல்லாமல் இருக்கின்றார்களா? திறமையற்றவர்களாக இருக்கின்றார்களா? பிறகேன் நம்மவர்கள் தம் பிள்ளைகளை அரபுக் கல்லூரியில் சேர்க்க முன்வருவதில்லை?

அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்: இறைநம்பிக்கை யாளர்கள் ஒட்டுமொத்தமாக(ப் போருக்கு)ப் புறப்படுவது உசிதமன்று. அவர்களுள் ஒவ்வொரு பிரிவினரிலிருந்தும் ஒரு குழுவினர் (மட்டும்) புறப்பட்டால் போதாதா? அப்போதுதான் (நபியுடன்) இருப்பவர்கள் மார்க்கத்தைக் கற்கவும் (புறப்பட்டுச் சென்ற) தம் சமுதாயத்தார் தம்மிடம் திரும்பிவரும்போது அவர்களுக்கு எச்சரிக்கையூட்டவும் முடியும். (இதன் மூலம்) அவர்கள் (தம்மைத்) தற்காத்துக் கொள்ளலாம். (9: 122)

நபித்தோழர் இப்னு அப்பாஸ் (ரளி) அவர்கள் கூறியுள்ள விளக்கம்: நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் தங்கிக்கொண்டு, போருக்காகப் படைப் பிரிவுகளை வெளியூருக்கு அனுப்பினார்கள். அப்போது படைப்பிரிவில் சேர்வதற்கு நான், நீ என்று நபித்தோழர்கள் போட்டியிடுவார்கள். இவ்வாறு அனைவரும் வெளியூர் சென்றுவிட்டால், ஊரில் தங்கியுள்ள நபியவர்கள் அப்போது சொல்லும் மார்க்க விசயங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ள ஆளில்லாமல் போய்விடும்.
எனவே ஒவ்வொரு பிரிவினரிலிருந்தும் ஒரு குழுவினர் படைப்பிரிவில் சேர்ந்தால் போதும். மற்றவர்கள் ஊரில் தங்கியிருந்து நபியவர்களிடம் மார்க்க விசயங்களை அறிந்துகொண்டு அந்தப் படைப்பிரிவினர் ஊர் திரும்பியவுடன் அவர்களுக்குத் தாம் கற்றதை ஊரில் தங்கியிருந்தோர் எடுத்துச்சொல்ல வழியேற்படும் என்பதற் காகவே அல்லாஹ் இவ்வாறு கூறியுள்ளான். (தஃப்சீர் இப்னு கஸீர்)

ஒரு சமுதாயத்திலுள்ள அனைவரும் உலகியல் சார்ந்த கல்வியை மட்டுமே கற்றால், மார்க்கக் கல்வியை யார்தாம் கற்பார்? ஒரு சாரார் பொறியியல், மருத்துவம், கணிப்பொறியாளர் உள்ளிட்ட பற்பல உலகியல் சார்ந்த கல்வியைக் கற்கச் செல்லட்டும்; அதே நேரத்தில் மற்றொரு சாரார் மார்க்கக் கல்வியைக் கற்கச் செல்லட்டும். அப்போதுதான் நம்முடைய சமுதாயம் கல்வியிலும் மார்க்கத்தைப் பேணுவதிலும் சமநிலை வகிக்க முடியும். இல்லையேல் சமநிலை இழந்து ஒரு பகுதி தொய்வு ஏற்பட்டதாகத் தோன்றும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு தந்தை தன் பிள்ளைக்குக் கொடுக்கும் வெகுமதிகளுள் நல்லொழுக்கத்தைவிடச் சிறந்தது வேறு எதுவும் இல்லை. (நூல்: திர்மிதீ)

இந்த நல்லொழுக்கம் அரபுக் கல்லூரிகளில்தான் போதிக்கப் படுகிறது. பெற்றோரை மதித்தல், அவர்களைக் கண்ணியப்படுத்துதல், அவர்களிடம் அன்போடு நடந்துகொள்ளுதல், அவர்கள் முதுமை நிலையில் இருந்தால் அவர்களிடம் கனிவாகப் பேசுதல் உள்ளிட்ட அனைத்தும் அங்கேதான் போதிக்கப்படுகின்றன.

ஆலிம்களின் பிள்ளைகள்

ஆலிம்களின் பிள்ளைகள்தாம் ஆலிம்களாக உருவாக வேண்டும் என்றும், இது ஒரு பரம்பரைக் கல்வி என்றும் பலர் தவறாக எண்ணிக்கொண்டிருக்கின்றார்கள். மாறாக, இந்தக் கல்வியை யார் வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம்; கற்றுக்கொண்டு மக்கள் மத்தியில் இஸ்லாமியச் சட்டங்களை எடுத்துரைக்கலாம். இது அனைவருக்கும் பொதுவான கல்வி. குறிப்பிட்ட சிலரின் பரம்பரைச் சொத்தில்லை என்பதை நாம் உணர வேண்டும். இன்றைய ஆலிம்கள் பலர், தாங்கள் ஆலிம்களாக இருந்துகொண்டே தம் பிள்ளைகளை அரபுக் கல்லூரிகளில் சேர்ப்பதில்லை. அவர்கள் கற்ற கல்விமீது அவர்களுக்கே விருப்பமில்லையா? ஒரு மருத்துவரின் பிள்ளை மருத்துவர் ஆகிறான்; ஒரு பொறியாளரின் பிள்ளை பொறியாளர் ஆகிறான்; ஒரு வழக்கறிஞரின் பிள்ளை வழக்கறிஞர் ஆகிறான்; ஆனால் ஓர் ஆலிமின் பிள்ளை ஆலிமாக ஆகக் கூடாதா? அந்தக் கல்வியில் அப்படியென்ன ஆர்வமின்மை இவர்களுக்கு?

காலத்துக்கேற்ற கல்லூரிகள்

கடந்த காலங்களில் அரபுக் கல்லூரிகளில் இஸ்லாமியக் கல்வியை மட்டும் போதித்து வந்தனர். அரபு இலக்கணம், திருக்குர்ஆன் விரிவுரை, நபிமொழிகளின் விளக்கவுரை, இஸ்லாமிய வரலாறு, இஸ்லாமியச் சட்டவியல் உள்ளிட்டவை அதில் அடங்கும். ஆனால், இன்று அவற்றோடு சேர்த்து, கணினி, தட்டச்சு, தொழிற்கல்விகள், ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு கல்விகள் காலத்தின் அவசியம் கருதி இணைக்கப்பட்டுள்ளன. அது மட்டுமின்றி, 8 ஆம் வகுப்பு படித்துள்ள ஒருவர், ஓர் அரபிக் கல்லூரியில் சேர்ந்தால், அவர் ஐந்தாண்டுகளில் அல்லது ஏழாண்டுகளில் ஓர் ஆலிமாகவும் எம்.காம். முதுகலைப் பட்டம் பெற்ற ஒரு பட்டதாரியாகவும் வெளிவருகிறார்.

தற்போதைய கணினி யுகத்துக்கேற்ப, இஸ்லாமிய மார்க்கக் கல்வியோடு உலகியல் கல்வியையும் இணைத்தே வழங்குவதால் அவர்கள் பள்ளிவாசல்கள், அரபிக் கல்லூரிகளை மட்டும் நம்பியில்லாமல் பல்வேறு துறைகளில் பணியாற்றக்கூடிய வாய்ப்பும், யாருக்கும் அஞ்சாமல் மார்க்கத்தை எடுத்துரைக்கின்ற வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது. தயக்கம் ஏன்?

பெரும்பாலும் இஸ்லாமியச் சமுதாய மக்கள் தம் பிள்ளைகளை அரபுக் கல்லூரியில் படிக்க வைத்து ஆலிம்களாக உருவாக்கத் தயங்குவது ஏன்? குறைவான சம்பளம், ஏழ்மையான வாழ்க்கை நிலை, பிறரிடம் தேவையாகுதல்-இவையே முதல்நிலைக் காரணங்களாகும். அவைபோக, அழைத்த வீட்டுக்கு துஆ ஓதச் செல்லுதல், அவர்கள் தரும் சிறு அன்பளிப்புகளைப் பெற்றுக் கொள்ளுதல்- இதுபோன்ற அவர்களின் செயல்பாடுகளைப் பார்க்கின்ற நாங்கள் எப்படி எங்கள் பிள்ளைகளை ஆலிம்களாக ஆக்க முன்வர முடியும்? என்று வினவுகின்றனர். அப்படியென்றால், நீங்கள் ஏன் ஆலிம்களை உங்கள் வீட்டுக்கு அழைக்கின்றீர்கள்? நீங்களே உங்கள் வீட்டில் துஆ ஓதிக்கொள்ள வேண்டியதுதானே? என்று மறுவினாத் தொடுத்தால், அதற்கு அவர்களிடம் பதில் இல்லை. ஆக, ஆலிம்களை மதிக்கிறோம் என்று சொல்பவர்கள் தம் பிள்ளைகளை ஆலிம்களாக உருவாக்க முன்வரட்டும். அப்படிச் செய்தால் சமுதாயத்தில் ஆலிம்களைப் பற்றிய கண்ணோட்டம் மாறும். அவர்களும் படித்தவர்கள்தாம் என்ற எண்ணம் உருவாகும்.
மாற்றமடைந்துள்ள மதரசாக்கள்

பாரம்பரிய முறையில் இஸ்லாமியக் கல்வியை மட்டும் போதித்து வந்த அரபி மதரசாக்கள், தற்காலச் சூழலுக்கேற்ப தமது பாடத்திட்டத்தில் மாற்றம் செய்துகொள்ள முன்வந்துள்ளன. திருச்சி அன்வாருல் உலூம் கல்லூரி 1963இல் தொடங்கப்பட்டது. அரபிப் பாடங்கள் மட்டுமே போதிக்கப்பட்டு வந்த அக்கல்லூரி தற்போது ஆங்கிலம், கணினி, தட்டச்சு, தொழிற்கல்விகள் உள்ளிட்ட பாடங்களையும் இணைத்துள்ளது பாராட்டுக்குரியது. இதுபோன்ற பல்வேறு அரபுக் கல்லூரிகளை இன்று நாம் அடையாளம் காட்டலாம். இன்று சென்னையில் மட்டும் ஏழுக்கும் மேற்பட்ட `இரட்டைக் கல்வி முறை அரபுக் கல்லூரிகள் உள்ளன. அது மட்டுமின்றி, கல்லூரியில் சேர்க்கும் காலத்தையும் மாற்றியமைத்துள்ளன. அன்று ஷவ்வாலில் தொடங்கி ஷஅபான் மாதத்தில் முடித்த கல்லூரிகள் தற்போது ஜூனில் மாணவர்களைச் சேர்க்கத் தொடங்கியுள்ளன. காரணம், பள்ளியில் 8 அல்லது 10ஆம் வகுப்பை முடித்துவிட்டு வருகின்ற மாணவர்கள் அரபுக்கல்லூரிகளில் சேர்ந்து பயில அதுவே அவர்களுக்கு வசதியாக இருக்கிறது.

இப்படிப் பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்டுள்ள அரபுக் கல்லூரிகளின் பக்கம் நம் சமுதாய மக்களின் பார்வை படாதது ஏன்? அது பற்றிய மதிப்பை உணர்வது எப்போது? வீட்டுக்கு ஓர் ஆலிமைப் பார்க்கும் காலம் எப்போது உருவாகும்?

முனைவர் பட்டம் பெற்றவர்கள்

அரபுக் கல்லூரியில் பயிலும்போதே `அஃப்ஜலுல் உலமா' எனும் தேர்வை எழுதிவிடுகின்றார்கள். இது இளங்கலை B.A. அரபிப் பட்டத்துக்கு இணையான தேர்வாகும். இது சென்னைப் பல்கலைக் கழகம், பாரதிதாசனார் பல்கலைக் கழகம் உள்ளிட்ட பல்கலைக் கழகங்களில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதனால் அதை வைத்துக் கொண்டு முதுகலை, இளம் முனைவர் ஆய்வு, முனைவர் ஆய்வு வரை தொடர்ந்து முன்னேற வழியை ஏற்படுத்திக்கொடுக்கின்றார்கள். ஆலிம்களாக உள்ள பலர் இன்று அரபுமொழியில் ஆய்வுசெய்து முனைவர் (Ph.D) பட்டம் பெற்றுள்ளனர். இளம் முனைவர் (M.Phil) களாகப் பலர் உள்ளனர். இன்னும் பலர் இளம் முனைவர் ஆய்வு மற்றும் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்வதற்காகக் காத்திருப்போர் பட்டியலில் இருந்துவருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்னர், சென்னைப் பல்கலைக் கழகம் தொலைநிலைக் கல்வி மூலம் அரபு முதுகலைப் படிப்பைத் தொடங்கியுள்ளதால் ஆலிம்கள் பலர் இப்படிப்பைத் தொடர்கின்றனர்.

அரசு அங்கீகாரம்

தேவ்பந்த் அரபுப் பல்கலைக் கழகம், நத்வத்துல் உலமா அரபுக் கல்லூரி உள்ளிட்ட சிலபல கல்லூரிகளில் வழங்கப்படுகின்ற பட்டம் அரபி இளங்கலைப் பட்டத்துக்குச் சமமானதாக அரசுப் பல்கலைக் கழகங்கள் ஏற்றுக்கொண்டு அவர்கள் முதுகலைப் படிப்பைத் தொடர வாய்ப்பளிக்கின்றன. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, ஆலிம்கள் பலர் இன்று சென்னைப் பல்கலைக் கழகத்தில் அரபுத்துறையில் முதுகலைப் படிப்பைத் தொடர்கின்றனர். அது மட்டுமின்றி, வண்டலூரில் அமைந்துள்ள புகாரி ஆலிம் அரபிக் கல்லூரியில் ஐந்தாண்டுகளில் பெறுகின்ற பட்டம் அந்த வளாகத்தினுள் உள்ள B.S. .அப்துர் ரஹ்மான் பல்கலைக் கழகத்தால் இஸ்லாமிக் ஸ்டடீஸ் படிப்பின் கீழ் அங்கீகரிக்கப்படுகிறது. இதுவும் இளங்கலைப் பட்டத்துக்குச் சமமாக அங்கீகரிக்கப்படுகிறது. ஆக, அரசு அங்கீகாரம் பெற்ற கல்வியாக இஸ்லாமியக் கல்வி மாறிவருவது ஓர் ஆரோக்கியமான முன்னேற்றமும் அங்கீகாரமும் ஆகும். இனி, எதிர்காலத்தில் எல்லா அரபுக் கல்லூரிகளின் பட்டமும் அரசு அங்கீகாரம் பெற வாய்ப்புண்டு. ஆகவே, இதுவும் பட்டப் படிப்புதான் என்ற மனநிலை நமக்கு ஏற்பட வேண்டும். அத்துடன், இதில் ஈருலகப் பயன்களையும் நற்பேறுகளையும் நாம் பெறலாம் என்பதே இக்கல்வியின் கூடுதல் சிறப்பாகும்.
 
ஆலிம்களின் பணிகள்

கடந்த காலங்களில் நீங்கள் பார்த்த ஆலிம்கள் வேறு; இன்றைய கணினி யுகத்தில் நீங்கள் காணுகின்ற ஆலிம்கள் வேறு என்பதை நீங்கள் புரிந்துகொள்ளுங்கள். இன்றைய கணினி யுக ஆலிம்கள் அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றம் கண்டுவருகின்றார்கள். அன்று ஆங்கிலமே என்னவென்று தெரியாதவர்கள் இன்று ஆங்கிலத்தில் உரையாற்றுகின்றார்கள்; கணிப்பொறி இயக்குகிறார்கள்; வலைப்பூக்கள் உருவாக்கித் தம் கருத்துகளைப் பதிந்து உலகின் எண்திசையிலும் உள்ள மக்களைப் படிக்கத் தூண்டுகின்றார்கள். அது மட்டுமின்றி, கைநிறையச் சம்பாதிக்கவும் தொடங்கிவிட்டார்கள். ஆம். இன்றைய அரபிக் கல்லூரிகள் மார்க்கக் கல்வியை மட்டும் போதிப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல், ஓர் ஆலிம் தன்னை நிலைப்படுத்திக்கொள்வதற்கான கல்விகளையும் சேர்த்தே போதிக்கத் தொடங்கிவிட்டன. அங்கு அரபு இலக்கணமும், திருக்குர்ஆன் விளக்கவுரையும், நபிமொழிகளின் விளக்கவுரையும் போதிக்கப்படுவதோடு கணினிக் கல்வி, தட்டச்சு, ஆங்கிலம் போன்ற கல்விகளும் போதிக்கப்படுகின்றன. அத்துடன் உலகியல் கல்லூரியின் சார்பாக வழங்கப்படுகின்ற பட்டங்களைப் பெறுவதற்கான ஏற்பாடும் செய்யப்படுகிறது.

உங்கள் பிள்ளை எட்டாம் வகுப்பு முடித்திருந்து, திருக்குர்ஆனைப் பார்த்து வாசிக்கத் தெரிந்திருந்தால் போதும். ஐந்தாண்டுகளில் அவனுடைய வாழ்க்கையே முற்றிலும் மாறிவிடும். ஒரு கையில் அரபுக் கல்லூரியின் பட்டம்; மற்றொரு கையில் உலகியல் கல்விக்கான பட்டம்; அத்தோடு பல்வேறு திறமைகளோடும், ஆற்றல்களோடும் வெளிவருகின்ற உங்கள் பிள்ளை ஈருலகிலும் உங்களுக்கும் இஸ்லாமியச் சமுதாயத்துக்கும் உதவுகின்ற பிள்ளையாக உருவாகும் என்பதை நினைவில் நிறுத்துங்கள். அதை நினைத்துப் பெருமைப்படுங்கள்.

பொதுவாக அரபுக் கல்லூரிகளில் பட்டம் பெற்று வெளிவந்துள்ள ஆலிம்கள் பலர் பல்வேறு துறைகளில் பணியாற்றுகின்றார்கள். புதிதாக அரபிக் கல்லூரிகளை உருவாக்கி நிர்வகித்தல், பத்திரிகை நடத்துதல், மொழியாக்கம் செய்தல், கணினித் துறையில் பணியாற்றுதல், பல்கலைக் கழகங்களில் பேராசிரியர்களாகப் பணியாற்றுதல், அரசியல் கட்சிக்குத் தலைமையேற்று நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் பணியாற்றுகின்றார்கள். இத்தகைய உயர்ந்த நிலைகளில் மேலோங்கியிருக்கின்ற ஆலிம்களைப் பார்த்துச் சமுதாயம் பெருமைகொள்ள வேண்டாமா? எந்த வகையில் அவர்கள் தாழ்ந்துபோய்விட்டார்கள்?

அரபு மதரசாவில் படித்த மாணவர்களின் திறமையை அறிய மௌலவி வஸீமுர் ரஹ்மான் ஒரு சான்று. உ.பி.யில் உள்ள புகழ் பெற்ற தாருல் உலூம் தேவ்பந்த் அரபுப் பல்கலைக் கழகத்தில் பயின்று பட்டம் பெற்ற இவர், தமது முயற்சியை அத்தோடு முடித்துக்கொள் ளாமல் தொடர்ந்து முயன்று இன்று ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். இவருடைய முயற்சி பலருக்குப் படிப்பினையாகும். அரபு மதரசாக்களில் என்ன படித்துக்கொடுக்கின்றார்கள் என்ற ஏளனமான வினாவுக்கு விடையாக இவர் திகழ்கிறார் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.


தொடர்- 2

அரபுமொழி

திருக்குர்ஆனின் மொழியான அரபுமொழி போதிக்கப்படுவது அரபுக் கல்லூரிகளில்தான் என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும். இந்த அரபுமொழியின் முக்கியத்துவத்தையாவது நாம் உணர்ந்துள்ளோமா? அதன் வளர்ச்சிக்காக நாம் பாடுபட்டுள்ளோமா? ஐக்கிய நாடுகளின் சபையில் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் ஆறு. அவற்றுள் ஒன்று அரபிமொழி. நம் நாட்டின் தேசிய மொழிகள் 22 ஆகும். அவற்றுள் அரபியும் ஒன்று. பத்து, பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் மொழிப் பாடங்கள் உள்ளன. அதில் மாணவர்கள் தாம் விரும்பும் ஏதேனும் ஒரு மொழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஆக, அங்கும் அரபிமொழிக்கு ஓர் இடமுண்டு. அது மட்டுமின்றி, ஐ.ஏ.எஸ்., ஐ.பீ.எஸ். போன்ற போட்டித் தேர்வுகளிலும் அரபியை ஒரு விருப்பப் பாடமாகத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். இவ்வளவு வாய்ப்புகள் இருந்தும் மிகச் சிலரைத் தவிர யாரும் அரபிமொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லையே ஏன்?
"மூன்று காரணங்களுக்காக அரபிமொழியைக் கற்றுக்கொள்ளுங்கள்; குர்ஆன் அரபி; என்னுடைய அறவுரைகள் அரபி; சொர்க்கத்தின் மொழி அரபி" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: பைஹகீ)

உலகப் பொதுமறையான திருக்குர்ஆனும் இறுதி இறைத்தூதரின் பொய்யாமொழிகளும் அரபி மொழிக்குள் அடங்கியுள்ளன. எனவே அவற்றின் விளக்கவுரைகளும் அரபிமொழியிலேயே எழுதப்பட்டுள்ளன. ஆகவே, அரபிமொழி தெரியாதவர்கள் தம்முடைய இஸ்லாமிய மார்க்கத்தின் பெரும்பகுதியை அறியாமலேயே இருந்துவருகின்றனர்.
நாம் நாள்தோறும் ஐவேளைத் தொழுகையில் ஓதுகின்ற திருக்குர்ஆன் வசனங்கள் அரபிமொழிதான். நாம் நாள்தோறும் ஓதுகின்ற வேதம் அரபிமொழிதான். ஆக, இவ்வுலகில் எங்கெல்லாம் முஸ்லிம்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்களோ அங்கெல்லாம் அரபிமொழி வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால், வாசிக்க மட்டுமே கற்றுள்ள பலர் அதன் அர்த்தங்கள் பற்றி யோசிக்கவே இல்லை. அதனால்தான் அரபிமொழியின் தேடலில் தொய்வு ஏற்பட்டுவிட்டது.

கால் நூற்றாண்டுக்கு முன்னர் வாழ்ந்த முஸ்லிம்கள் பலர், அரபி எழுத்தில் எழுதப்பட்ட எதையும் வாசிக்கத் தெரிந்திருந்தார்கள். தமிழைக்கூட அரபியில் எழுதி செய்திப் பரிமாற்றம்செய்து கொண்டார்கள்; இஸ்லாமியச் சட்டங்களைத் தெரிந்துகொண்டார்கள். இதனால் நூல் எழுதியவர்களும் அரபுத் தமிழில் எழுதினார்கள். அது சங்கேத மொழியாகவும் பயன்பட்டிருக்கிறது. இதனால்தான் `அரபுத் தமிழ்' எனும் சொல்வழக்கு பயன்பாட்டில் இருந்தது. ஆனால், இன்று அது தலைகீழாக மாறி, அரபியையும் தமிழில் எழுதி வாசிக்க வேண்டிய நிர்ப்பந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அரபியைப் பார்த்து வாசிக்கத் தெரியாத நிலையில் பலர் இருப்பது வேதனையிலும் வேதனையாகும்.

நம் பிள்ளைகள் மழலை வகுப்புக்குச் சென்று, அங்குக் கற்றுக் கொண்ட ஆங்கில வார்த்தைகளைத் தட்டுத் தடுமாறி, திக்கித் திக்கிப் பேசுவதைக் கண்டு மகிழ்ச்சியடைகின்ற நாம், அருகிலுள்ள பள்ளிவாசலில் போதிக்கப்படுகின்ற அரபிமொழி வகுப்புக்கு அவர்களை அனுப்புவதில்லையே ஏன்?
எனவே, நாம் அரபி மொழிக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்றால், பாலர் வகுப்பு முதல் அதற்கெனத் தனிக்கவனம் செலுத்த வேண்டும். இல்லையேல் நம் பிள்ளைகளும் திருக்குர் ஆனைப் பார்த்து வாசிக்கத் தெரியாத இழிநிலைக்குத் தள்ளப்படு வார்கள் என்பது திண்ணம்.

பெற்றோருக்கு என்ன பயன்?

இஸ்லாமியக் கல்வியைக் கற்றுக்கொள்கின்ற உங்கள் பிள்ளை, அத்துடன் இஸ்லாமியப் பண்பாடுகளையும் ஒழுக்கத்தையும் இறையச்சத்தையும் கற்றுக்கொள்கிறான். இதனால் உங்கள் பிள்ளை பெற்றோரை மதிக்கின்ற பிள்ளையாக, உங்களின் முதுமையில் உங்களைக் கைவிட்டுவிடாத பிள்ளையாக, அனைவராலும் மதிக்கப்படுகின்ற பிள்ளையாக, அல்லாஹ்வின் அன்பைப் பெற்ற பிள்ளையாக உருவாகும். பெற்ற உங்களுக்கு இதைவிட வேறு பெருமை என்ன வேண்டும்? யோசியுங்கள்; பலமுறை யோசியுங்கள். மார்க்கக் கல்வியை உங்கள் பிள்ளைக்குக் கொடுப்பதால் தீமை ஏதும் உண்டா? இனியும் ஏன் தாமதம்? உங்கள் பிள்ளைகளை அரபிக் கல்லூரிகளில் சேர்த்து ஈருலகிலும் பயன்மிக்க பிள்ளைகளாக உருவாக்குங்கள்!

மறுமைப் பயனைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளதாவது: (உங்களுள்) திருக்குர்ஆனைக் கற்று, அதன்படி செயல்பட்டவரின் பெற்றோருக்கு மறுமையில் ஒரு கிரீடம் அணிவிக்கப்படும். அது, உலகில் ஒருவரின் வீட்டில் சூரியன் இருந்தால் எவ்வாறு அவ்வீடு ஒளி இலங்குமோ அதைவிட ஒளிமிக்கதாக இருக்கும். அப்படியென்றால், அதன்படி செயல்பட்டவருக்கு என்ன (கிடைக்கும்) என்பதை நீங்களே முடிவுசெய்து கொள்ளுங்கள். (நூல்: அபூதாவூத்)

இஸ்லாமியச் சகோதரர்களே!

உங்கள் வீட்டில் நான்கு பிள்ளைகள் இருந்தால் ஒருவனை மருத்துவராகவும், மற்றொருவனை வழக்கறிஞராகவும், வேறொரு வனைப் பொறியாளராகவும் ஆக்கிக்கொள்ளுங்கள். அவர்களுள் ஒருவரையாவது ஆலிமாக ஆக்குங்கள். அப்போதுதான் நம் சமுதாயத் தில் இஸ்லாமியக் கல்விமீது ஆர்வமும் அக்கறையும் ஏற்படும். இஸ்லாமியக் கல்வியை எடுத்துச்சொல்ல ஆள் பற்றாக்குறை ஏற் படாது. செல்வந்தர்களும் தம் பிள்ளைகளை அரபிக் கல்லூரிகளில் சேர்க்க முன்வந்துவிட்டால் அக்கல்விமீது பொதுவாக இருக்கின்ற குறுகிய கண்ணோட்டம் மாறும். அதனால் சமுதாயம் மிகப்பெரும் நன்மைகளை அடையும் என்பது திண்ணம். ஒவ்வோர் ஊரிலும் ஆலிம்கள் இருக்க வேண்டும். அதற்கு அவ்வூரிலுள்ள ஜமாஅத்தார்கள் ஒன்றிணைந்து தம் ஊரிலுள்ள தகுதியான மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அரபிக் கல்லூரிகளில் சேர்த்து, அவர்களுக்கான செலவையும் ஏற்றுக்கொண்டால் ஒவ்வோர் ஊரிலும் ஆலிம்கள் உருவாகிவிடுவார்கள்.

புதுமைக் கல்லூரிகள்

உங்கள் பிள்ளைகளை ஆலிம்களாகவும் பட்டதாரிகளாகவும் உருவாக்க, குறிப்பிட்ட சில கல்லூரிகளை மட்டும் இங்குச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். இவை தவிர இன்னும் பல்வேறு கல்லூரிகள் ஆங்காங்கே உள்ளன என்பதையும் நினைவில்கொள்க!

1. பிலாலிய்யா அரபுக் கல்லூரி- நெமிலி, சென்னை. பேச: 98405 38681  
2. புகாரி ஆலிம் அரபுக் கல்லூரி - வண்டலூர், சென்னை.
பேச: 044-22751280/82
3. அல்ஹுதா அரபுக் கல்லூரி, அடையாறு, சென்னை. பேச: 98409 49403
4. நூருல் ஹிதாயா அரபுக் கல்லூரி, பனையூர், சென்னை.
பேச: 9443264097
5. கைராத்துல் இஸ்லாம் அரபுக் கல்லூரி, வீரசோழன். பேச: 6379 774 689   
6. அன்வாருல் உலூம் அரபுக் கல்லூரி, திருச்சி.
7. இர்ஷாதுல் உலூம் அரபுக் கல்லூரி, பெரம்பலூர்.
பேச: 94438 05885
8. ஜாமிஆ அஸ்ஸய்யிதா ஹமீதா, அரபுக் கல்லூரி, கீழக்கரை
பேச: 04567-241957
9. உஸ்வத்துன் ஹசனா அரபுக் கல்லூரி, பள்ளப்பட்டி
பேச: 94860 58551  


இன்னும் நிறைய உள்ளன. (சில கல்லூரிகளில் எட்டாம் வகுப்பும் சில கல்லூரிகளில் பத்தாம் வகுப்பும் தகுதியாக உள்ளது.) 

மரபுவழிக் கல்லூரிகள்:

1. அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபுப் பல்கலைக் கழகம், வேலூர்.
2. காஷிஃபுல் ஹுதா அரபுக் கல்லூரி, சென்னை.
3. ஜமாலிய்யா அரபுக் கல்லூரி, சென்னை.
4. தாவூதிய்யா அரபுக் கல்லூரி, ஈரோடு.
5. மன்பவுல் உலா அரபுக் கல்லூரி, கூத்தாநல்லூர்.
பேச: 04367-234450
6. மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரி, லால்பேட்டை.
பேச: 04144-269079
7. மிஸ்பாஹுல் ஹுதா அரபுக் கல்லூரி, நீடூர்.
பேச: 04364-250173
8. ரியாளுல் ஜினான் அரபுக் கல்லூரி, திருநெல்வேலி-பேட்டை
9.யூசுஃபிய்யா அரபுக் கல்லூரி- திண்டுக்கல்
10. இம்தாதுல் உலூம் அரபுக் கல்லூரி-கோவை
11. மன்பவுஸ் ஸலாஹ் அரபுக் கல்லூரி- தூத்துக்குடி
12. சிராஜுல் முனீர் அரபுக் கல்லூரி- புதுக்கோட்டை
13. ஸலாஹிய்யா அரபுக் கல்லூரி- அதிராம்பட்டினம்

ஆக, ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பான அரபுக் கல்லூரிகள் பல செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. பலரும் அதன் பக்கம் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டால், அரபுக் கல்லூரிகளிலும் சமுதாயத்திலும் இன்னும் பற்பல முன்னேற்றங்களைக் கொண்டுவரலாம். ஒவ்வொரு கல்லூரியிலும் ஒரு Teleconference Hall ஏற்படுத்தி தமிழகத்தி லுள்ள மூத்த அறிஞர்களின் சொற்பொழிவுகளையும் அவர்கள் அரபுக் கல்லூரிகளில் நடத்துகின்ற பாடங்களையும் மாணவர்கள் அனைவரையும் கேட்கச் செய்யும் திட்டம் வருங்காலத்தில் செயல்படுத்தப்படும். இதனால் பல்வேறு பயன்கள் உண்டு. இதைச் செயல்படுத்துவதால் மூத்த அறிஞர்களிடம் பாடம் கற்றுக்கொண்ட திருப்தி மாணவர்களுக்கு ஏற்படுவதோடு, மாணவர்கள் தம் ஐயங்களையும் உடனுக்குடன் தீர்த்துக்கொள்ளலாம்.

ஆக, இந்தக் குறுநூலை உருவாக்கியுள்ள நோக்கம் நீங்கள் உங்கள் குடும்பத்தில் ஒருவரையாவது ஆலிமாக ஆக்க வேண்டும்; வீட்டுக்கு வீடு ஓர் ஆலிம் உருவாக வேண்டும் என்பதேயாகும். எனவே பழைய சிந்தனைகள் மறையட்டும்; மார்க்கக் கல்வியின்பால் புதிய சிந்தனையும் புதிய கண்ணோட்டமும் ஏற்படட்டும். பல்வேறு ஆலிம்களை உருவாக்கி இச்சமுதாயத்துக்கு அர்ப்பணிப்போம்; அவர்கள் எதிர்காலச் சமுதாயத்தைச் சீர்திருத்துவதோடு அவர்களும் நிம்மதியாக வாழப் பாதை அமைத்துக் கொடுப்போம் வாருங்கள்! உயர்ந்த உள்ளத்தையும் உயர்ந்த எண்ணத்தையும் நம் அனைவருக்கும் உயர்ந்தோன் அல்லாஹ் வழங்குவானாக!
*****