வியாழன், 28 ஏப்ரல், 2011

மகத்தான மார்க்கக் கல்வி



பள்ளிகளில் தேர்வுகள் முடிந்து கோடைவிடுமுறை விட்டாயிற்று. தமிழக அரசியல்வாதிகள் தேர்தல் முடிவை எதிர்பார்த்துக் காத்திருப்பதைப்போல் பள்ளி மாணவர்கள் அனைவரும் தம்முடைய தேர்வு முடிவுகளை எதிர்பார்த்திருக்கின்றனர். பன்னிரண்டாம் வகுப்பை முடித்தவர்கள் கல்லூரிக் கனவோடு இருக்கின்றார்கள்; பத்தாம் வகுப்பை முடித்தவர்கள் மேனிலைப் பள்ளியை நோக்கிச் செல்ல இருக்கின்றார்கள்; நடுநிலைப் பள்ளிப் படிப்பை முடித்தவர்கள் உயர்நிலைப் பள்ளியில் சேர இருக்கின்றார்கள். ஆக மாணவர்கள் யாவரும், மேற்படிப்பு என்ன படிக்கலாம்; எங்கு படிக்கலாம் என்ற முனைப்பில் உள்ளார்கள். பொதுவாக, பெற்றோர்கள் யாவரும் தம் பிள்ளைகள் தலைசிறந்த கல்லூரிகளில் படித்துப் பட்டம்  பெற்று, கைநிறையச் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ண ஓட்டத்திலே படிப்பை அணுகுகின்றார்கள். எதைப் படித்தால் எளிதில் பணி வாய்ப்புக் கிட்டும்; நிறைய சம்பாதிக்கலாம் என்ற கோணத்தில்தான் பலர் சிந்திக்கின்றார்கள். படிப்பு என்பதே பணம் சம்பாதிப்பதற்கான ஒரு துணைக்கோல் என்று எண்ணிக்கொண்டுள்ளார்கள். ஆனால் படிப்பு என்பது ஒரு மனிதனின் அறிவு வளர்ச்சிக்குத்தான் என்பதை பலர் அறிவதில்லை. ஒருவன் தன் கல்வியால் அறிவை வளர்த்துக்கொண்டான்; பண்பாட்டைக் கற்றுக்கொண்டான்; சமூகச் சிந்தனையை வளர்த்துக்கொண்டான்  என்றால் அதுதான் கல்வியின் மிகப்பெரும் பயன். அதுவன்றி, ஒருவன் ஏதோ படித்தான்; பட்டத்தைப் பெற்றான் என்றால், அந்தக் கல்வியால் எந்தப் பயனும் இல்லை.

என் மகன் ஒரு பொறியாளர்; என் மகன் ஒரு கணினிப் பொறியாளர்; என் மகன் ஒரு கணக்காளர்; என் மகன் ஒரு மருத்துவர்; என் மகன் ஒரு வழக்கறிஞர் என்று சொல்லிக்கொள்வதில்தான் ஒவ்வொருவரும் பெருமைகொள்கின்றனரே தவிர என் மகன் ஒரு ஹாஃபிழ் (திருக்குர்ஆனை மனனம் செய்தவர்); என் மகன் ஓர் ஆலிம் (இஸ்லாமிய மார்க்க அறிஞர்) என்று சொல்லிக்கொள்வதை யாரும் பெருமையாகக் கருதுவதில்லை. இன்று, அனைவரும் தத்தம் மகன்களை எந்தக் கல்லூரியில் சேர்க்கலாம் என்று ஒவ்வொரு கல்லூரியாகத் தேடி அலைகின்றார்கள்; எந்தக் கல்லூரி சிறந்த கல்லூரி என்று பிறரிடம் கேட்டுத் தெரிந்துகொள்கிறார்கள்; அறிந்தவர்களிடம் விசாரிக்கின்றார்கள். ஆனால் எந்த இஸ்லாமியக் கல்லூரியில் சேர்க்கலாம்; எங்குள்ள அரபிக் கல்லூரியில் சேர்க்கலாம் என்று யாரும் யாரிடமும் விசாரிப்பதில்லை. ஒருவர் தம் பிள்ளையை ஆலிமாகவோ, ஹாஃபிழாகவோ உருவாக்குவதால் அவருக்கு என்ன நட்டம் வந்துவிட்டது? அவர் தம் மகனுக்குத் துரோகம் இழைத்துவிட்டாரா? அல்லது அவனைப் பாதாளத்தில் தள்ளிவிட்டுவிட்டாரா? இல்லவே இல்லை. மாறாக, அவர் தம் மகனுக்குச் சீரான கல்வியையே கொடுத்துள்ளார். ஈருலகிலும் வெற்றிபெறத்தக்க கல்வியை வழங்கியுள்ளார். அப்படிப்பட்ட மார்க்கக் கல்வியைத் தம் பிள்ளைகளுக்கு வழங்குவதில் உங்களுக்கு என்ன தயக்கம்? மார்க்கக் கல்வியைக் கற்பதற்காக உங்கள் பிள்ளைகளை ஏன் அரபிக்கல்லூரியில் சேர்க்க முன்வருவதில்லை?

அவர்களெல்லாம் சமுதாயத்தில் தாழ்ந்த நிலையில் இருக்கின்றார்களா? சமுதாயத்தில் மதிப்பு மரியாதை இல்லாமல் இருக்கின்றார்களா? பணி இல்லாமல் இருக்கின்றார்களா? திறமையற்றவர்களாக இருக்கின்றார்களா? ஏன்? கைநிறையக் காசு சம்பாதிப்பதில்லை. ஆம். உண்மைதான். ஆனால் அவர்கள் மனநிறைவோடு வாழ்கிறார்களே அதைப் பார்க்கமாட்டீர்களா?

கடந்த காலங்களில் நீங்கள் பார்த்த ஆலிம்கள் வேறு; இன்றைய கணினி யுகத்தில் நீங்கள் காணுகின்ற ஆலிம்கள் வேறு என்பதை நீங்கள் புரிந்துகொள்ளுங்கள். இன்றைய கணினி யுக ஆலிம்கள் அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றம் கண்டுவருகின்றார்கள். அன்று ஆங்கிலமே என்னவென்று தெரியாதவர்கள் இன்று ஆங்கிலத்தில் உரையாற்றுகின்றார்கள்; கணிப்பொறி இயக்குகிறார்கள்; வலைப்பூக்கள் உருவாக்கித் தம் கருத்துகளைப் பதிந்து உலகின் எண்திசையிலும் உள்ள மக்களைப் படிக்கத் தூண்டுகின்றார்கள். அது மட்டுமின்றி, கைநிறையச் சம்பாதிக்கவும் தொடங்கிவிட்டார்கள். ஆம். இன்றைய அரபிக் கல்லூரிகள் மார்க்கக் கல்வியை மட்டும் போதிப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல், ஓர் ஆலிம் தன்னை நிலைப்படுத்திக்கொள்வதற்கான கல்விகளையும் சேர்த்தே போதிக்கத் தொடங்கிவிட்டன. அங்கு அரபி இலக்கணமும், திருக்குர்ஆன் விளக்கவுரையும், நபிமொழிகளின் விளக்கவுரையும் போதிக்கப்படுவதோடு கணினிக் கல்வி, தட்டச்சு, ஆங்கிலம் போன்ற கல்விகளும் போதிக்கப்படுகின்றன. அத்துடன் உலகியல் கல்லூரியின் சார்பாக வழங்கப்படுகின்ற பட்டங்களைப் பெறுவதற்கான ஏற்பாடும் செய்யப்படுகிறது. உங்கள் பிள்ளை எட்டாம் வகுப்பு முடித்திருந்து, குர்ஆனைப் பார்த்து வாசிக்கத் தெரிந்திருந்தால் போதும். ஐந்தாண்டுகளில் அவனுடைய வாழ்க்கையே முற்றிலும் மாறிவிடும். ஒரு கையில் அரபிக் கல்லூரியின் பட்டம்; மற்றொரு கையில் உலகியல் கல்விக்கான பட்டம்; அத்தோடு பல்வேறு திறமைகளோடும், ஆற்றல்களோடும் வெளிவருகின்ற உங்கள் பிள்ளை ஈருலகிலும் உங்களுக்கும் இஸ்லாமியச் சமுதாயத்துக்கும் உதவுகின்ற பிள்ளையாக உருவாகும் என்பதை நினைவில் நிறுத்துங்கள். அதை நினைத்துப் பெருமைப்படுங்கள்.

பெற்றோரை மதிக்கின்ற பிள்ளையாக, உங்களின் முதுமையில் உங்களைக் கைவிட்டுவிடாத பிள்ளையாக, அனைவராலும் மதிக்கப்படுகின்ற பிள்ளையாக, அல்லாஹ்வின் அன்பைப் பெற்ற பிள்ளையாக உங்கள் பிள்ளை உருவாகும். பெற்ற உங்களுக்கு இதைவிட வேறு பெருமை என்ன வேண்டும்? யோசியுங்கள். பலமுறை யோசியுங்கள். மார்க்கக் கல்வியை உங்கள் பிள்ளைக்குக் கொடுப்பதால் தீமை ஏதும் உண்டா? இனியும் ஏன் தாமதம்? உங்கள் பிள்ளைகளை அரபிக் கல்லூரிகளில் சேர்த்து ஈருலகிலும் பயன்மிக்க பிள்ளைகளாக உருவாக்குங்கள்!






கருத்துகள் இல்லை: