புதன், 22 செப்டம்பர், 2010

நபிமார்கள் வரலாறு (முதல் பாகம்)


தமிழாக்கம்:  காரீ நூ அப்துல் ஹாதி பாகவி M.A., M.Phil.
                         ஆலங்குடி 

வியாழன், 16 செப்டம்பர், 2010

புதன், 15 செப்டம்பர், 2010

விரைவில் வெளிவருகிறது!



முஹம்மது முஸ்தபா அல்ஜிபாலீ ஆங்கிலத்தில் எழுதிய முஸ்லிம் பேமிலி எனும் நூலை மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி தமிழாக்கம் செய்துள்ளார். இஸ்லாமிய இல்லறம் எனும் தலைப்பில் விரைவில் வெளிவருகிறது. சென்னையில் உள்ள சாஜிதா பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது.  இந்நூலில் கணவன் மனைவி ஒருவருக்கொருவர் செய்ய வேண்டிய கடமைகள், திருமணம் தொடர்பான அனைத்துத் தகவல்களும் திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் ஆதாரங்களோடு கூறப்பட்டுள்ளன.
தம்பதிகள் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய அரிய நூல்.  பக்கங்கள்:  448  விலை:  ரூ. 175/-    அலைபேசி : 9840977758

சனி, 11 செப்டம்பர், 2010

இப்ராஹீம் நபியின் வரலாறு (தொடர் 7)

சான்றைச் சமர்ப்பித்தல்

* அவர்கள் கூறினார்கள்: இவருக்காக(ப் பெரியதொரு நெருப்புக்) கிடங்கை அமைத்து எரிநெருப்பில் அவரை எறிந்துவிடுங்கள். (இவ்வாறாக) அவர்கள் அவருக்குச் சதிசெய்ய நாடினார்கள். ஆனால், நாம் அவர்களை இழிவானவர்களாக ஆக்கிவிட்டோம்.  (37: 97-98)  போதிய ஆதாரங்கள்  இல்லாமல் தோல்வி கண்டபோது அம்மக்கள் வாதம் செய்ய முன்வரவில்லை.  எனவே, அவர்கள் தம் ஆற்றலையும் அதிகாரத்தையும் பயன்படுத்துவதைத் தவிர அவர்களுக்குச் சாதகமாக எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. அவர்கள் தம் அறியாமையாலும் வரம்புமீறுதலாலும், தம் தெய்வங்களுக்கு உதவி செய்ய நாடினார்கள். அந்நேரத்தில் அல்லாஹ் தன்னுடைய மார்க்கத்தை நிலைநாட்டவும் அதை உயர்த்தவும் நாடினான்.

 * (இதற்கு) அவர்கள், நீங்கள் (இவரை ஏதாவது) செய்ய நாடினால் இவரை (நெருப்பிலிட்டு) எரியுங்கள். (இவ்வாறு செய்து) உங்கள் தெய்வங்களுக்கு உதவி செய்யுங்கள் என்று கூறினார்கள். (இப்ராஹீமை தீக்கிடங்கில் எறிந்தபோது) நெருப்பே! இப்ராஹீம் மீது நீ குளிர்ச்சியாகவும், சுகமளிக்கக் கூடியதாகவும் ஆகிவிடு என்று நாம் கூறினோம். மேலும், அவர்கள் அவருக்குச் சதிசெய்ய நாடினார்கள். ஆனால், நாம் அவர்களையே இழப்புக்குரியவர்களாக ஆக்கினோம்.  (21: 68- 70)

அவர்களால் இயன்ற இடமெல்லாம் விறகுகளைச் சேகரிக்கத் தொடங்கினார்கள். அவ்வாறு விறகைச் சேகரிப்பதிலேயே நீண்ட காலம் கழிந்தது. அவர்களுள் ஒரு பெண் நோய்வாய்ப்பட்டு விடுகின்றபோது, நான் சுகம்பெற்றுவிட்டால், இப்ராஹீமை எரிக்க விறகுகளைச் சுமந்துவருவேன் என்று நேர்ச்சை செய்துகொள்வாள். பின்னர், ஒரு நாள் அவர்கள் ஒரு பெரிய பாதாளக் குழியைத் தோண்டினார்கள். அதனுள் அவர்கள் விறகுகளைப் போட்டு எரியவைத்தார்கள்.

அந்நெருப்பு கொழுந்துவிட்டு எரிந்தது. அதன் மேல் தீப்பொறிகள் பறந்தன. அதைப் போன்ற நெருப்பை யாரும் பார்த்ததில்லை. பின்னர், பீரங்கி போன்ற ஒரு கருவியில் இப்ராஹீம் நபியை வைத்தார்கள். ஹைஸன் என்பவன்தான் அந்தக் கருவியைச் செய்தான். அவன்தான் முதன் முதலில் அந்தப் பீரங்கியைச்  செய்தான். எனவே, அல்லாஹ் அவனைப் பூமிக்குள் செருகி விட்டான். அவன் அதனுள் மறுமைநாள் வரை சப்தமிட்டுக் கொண்டே இருப்பான்.  (நூல்: தஃப்சீர் தப்ரீ) பிறகு, அவர்கள் அவரைக் கட்டினார்கள்; அவருடைய கைகளைப் பின்புறமாக்கி, தோளோடு சேர்த்துக்  கட்டி விட்டார்கள். அந்நேரத்தில், இப்ராஹீம் (அலை) அவர்கள், உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. நீ தூயவன்; அகிலத்தாரின் இறைவன்; உனக்கே புகழ் யாவும்; உனக்கே அரசாட்சி; உனக்கு இணையாக எதுவும் இல்லை என்று ஓதினார்.  (நூல்: தஃப்சீர் தப்ரீ)

இப்ராஹீம் நபி ஓதிய துஆ

இப்ராஹீம் (அலை) அவர்களை பீரங்கி போன்ற ஒரு கருவியில் வைத்து, கைகளைப் பின்புறமாக்கி, தோளோடு சேர்த்துக் கட்டி அதிலிருந்து தூக்கி எறிந்தார்கள். அப்போது அவர், நமக்கு அல்லாஹ்வே போதுமானவன்; அவனே பொறுப்பாளர்களில் நல்லவன் என்று ஓதினார்கள். இப்னு அப்பாஸ்  (ரளி) அறிவித்துள்ள நபிமொழியை புகாரீ (ரஹ்) அவர்கள் பதிவுசெய்துள்ளார்.

இப்ராஹீம் நபி நெருப்பில் போடப்பட்டபோது, நமக்கு அல்லாஹ்வே போதுமானவன்; அவனே பொறுப்பாளர்களில் நல்லவன் என்று ஓதினார். பின்வருகின்ற வசனம் முஹம்மது நபிக்குக் கூறப்பட்டபோது, அவர்களும் இந்த துஆவை ஓதினார்கள். அந்த வசனம்: அவர்களிடம் மக்கள் (சிலர்), உங்களுக்கு எதிராக (யுத்தம் புரிய) மனிதர்கள் ஒன்று திரண்டுவிட்டார்கள். எனவே, அவர்களை அஞ்சுங்கள் என்று கூறினர். ஆனால், அது அவர்களுக்கு இறைநம்பிக்கையை மேலும் அதிகமாக்கியது. (அதனால்) அவர்கள், எங்களுக்கு அல்லாஹ்வே போதுமானவன்; அவனே பொறுப்பாளர்களில் நல்லவன் என்று  கூறினார்கள். இதனால் அவர்கள் அல்லாஹ்வின் அருளுடனும் வளத்துடனும் திரும்பினார்கள்.  அவர்களுக்கு எத்தகைய தீங்கும் நேரவில்லை.  (3: 173-174, நூல்: புகாரீ)

இப்ராஹீம் நபி நெருப்பில் போடப்பட்ட போது, இறைவா! நீ வானத்தில் ஒருவன்;  பூமியில்  உன்னை வணங்குபவன் நான் ஒருவனே என்று கூறினார் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரளி) அறிவித்துள்ளார்கள். இதை அபூயஅலா (ரஹ்) பதிவு செய்துள்ளார்.

அல்லாஹ் காப்பாற்றுதல்

முந்தைய அறிஞர்கள் சிலர் கூறியுள்ளனர்: ஜிப்ரீல் (அலை) அவர்கள், இப்ராஹீம் (அலை) அவர்களின்முன் தோன்றி, இப்ராஹீமே! உமக்கு எதுவும் தேவை இருக்கிறதா? என்று கேட்டார். உம்மிடம் இல்லை  என்று இப்ராஹீம் நபி பதிலளித்தார்.

இப்னு அப்பாஸ்  (ரளி) மற்றும் சயீத் பின் ஜுபைர் (ரளி)- இருவரிடமிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. மழையின் வானவர், நான் எப்போது ஏவப்படுவேன். (என்னை ஏவினால்) நான் மழையைப் பொழிய வைத்துவிடுவேன் என்று கூறலானார். ஆனால், அதற்குள் அல்லாஹ்வின் கட்டளை விரைந்து விட்டது. நெருப்பே! நீ இப்ராஹீமுக்குக் குளிர்ச்சியாகவும் இதமாகவும் ஆகிவிடு! என்று நாம் கூறினோம் (21: 69) என்று அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அலீ (ரளி) அவர்கள் கூறியுள்ளார்கள்: அதாவது அவருக்கு  நீ துன்பமிழைக்காதே! என்பதுதான் அவ்வசனத்தின் பொருள். இப்னு அப்பாஸ்  (ரளி) மற்றும் அபுல்ஆலியா (ரளி) இருவரும் கூறியுள்ளார்கள்: அல்லாஹ் `சலாமன் (இதமாக) என்று சொல்லியிருக்காவிட்டால், அதன் குளிர்ச்சி இப்ராஹீமுக்கு நோவினை கொடுத்திருக்கும். கஅபுல் அஹ்பார் (ரளி) கூறியுள்ளார்கள்: அன்றைய நாளில் இப்புவியில் யாரும் நெருப்பின் மூலம் பயன்பெற முடிய வில்லை. அவரைக் கட்டப்பட்டிருந்த கயிறுகளைத் தவிர எதுவும் கரியவில்லை.  ளஹ்ஹாக் (ரஹ்) கூறியுள்ளார்: ஜிப்ரீல் (அலை) இப்ராஹீம் நபியுடன் இருந்தார். அப்போது அவர், இப்ராஹீம் நபியின் முகத்திலிருந்த வியர்வையைத் துடைத்தார். அதைத் தவிர அந்நெருப்பிலிருந்து அவரை எதுவும் தீண்டவில்லை.

சுத்தீ (ரஹ்) கூறியுள்ளார்: இப்ராஹீம் நபியுடன் நிழலின் வானவரும் இருந்தார். அவர் கரிக்குள் இருப்பதைப் போன்று இருந்தார். அவரைச் சுற்றி  நெருப்பு இருந்தது. அவர் பசுமையான தோட்டத்திற்குள் இருந்தார். அம்மக்கள் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், அவர்கள் அவரை அடைய முடியவில்லை. அவரும் அவர்களிடம்  வர முடியவில்லை.
அபூஹுரைரா (ரளி) அறிவித்துள்ளார்கள்: இப்ராஹீம் நபியின் தந்தை மிக அழகிய வார்த்தையைக் கூறினார். அந்த நிலையில்  அவர் தம் மகனைப் பார்த்தபோது, இப்ராஹீமே! உம்முடைய இறைவன் சிறந்த இறைவன் என்று கூறினார்.

இக்ரிமா (ரளி) அவர்களிடமிருந்து இப்னு அசாகிர் (ரஹ்) அறிவித்துள்ளார்: திண்ணமாக இப்ராஹீம் நபியின் தாய்  தம்முடைய மகனைப் பார்த்தார். என்னருமை மகனே! நான் உன்னிடம் வர விரும்புகிறேன். எனவே, உன்னைச் சுற்றியுள்ள தீக்கனலிலிருந்து என்னைப் பாதுகாக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்! என்று கூறினார். அவரும் பிரார்த்தனை செய்தார். அவர் தம் மகனை முன்னோக்கிச் சென்றார். நெருப்பின் சூடு அவரின் அன்னையைத் தீண்டவில்லை. அவர் அவரிடம் சென்றடைந்தபோது, தம் மகனைக் கட்டியணைத்து அவரை முத்தமிட்டார்; பின்னர், திரும்பி வந்தார். (நூல்: தாரீக் திமஷ்க்)

மின்ஹால் பின் அம்ர் (ரஹ்) கூறியுள்ளார்: திண்ணமாக இப்ராஹீம் நபி அங்கு நாற்பது அல்லது ஐம்பது நாட்கள் தங்கினார். நான் அதனுள் இருந்தபோது வாழ்ந்த இரவுகளையும் பகல்களையும் போன்ற இனிய வாழ்க்கையை (வேறெங்கும்) அனுபவிக்கவில்லை. மேலும், நான் அதனுள் இருந்தபோது, என் வாழ்க்கை முழுவதும் இதே போன்று இருக்க வேண்டும் என்று விரும்பினேன் என இப்ராஹீம் நபி கூறியதாக எனக்கு அறிவிக்கப்பட்டது.       (நூல்: தஃப்சீர் இப்னு கஸீர்) அவர்கள் பழிவாங்க  நாடினார்கள்; ஆனால், அவர்கள் இழிவுபடுத்தப்பட்டார்கள்; அவர்கள் உயர்வடைய நாடினார்கள்; ஆனால், இழிவடைந்தார்கள்; அவர்கள் மேலோங்க நினைத்தார்கள்; ஆனால், அவர்கள் தாழ்த்தப்பட்டார்கள். அல்லாஹ் கூறுகின்றான்:  அவர்கள் அவருக்கு எதிராகச் சதிசெய்ய நாடினார்கள். ஆனால், நாம் அவர்களையே இழப்புக்குரியவர்களாக ஆக்கினோம்! (21: 70) மற்றொரு வசனத்தில், இழிவானவர்களாக ஆக்கிவிட்டோம் (37: 98) என்று கூறியுள்ளான். 

எனவே, அவர்கள் நட்டத்தையும் இழிவையுமே பெற்றார்கள். இது இவ்வுலகில்தான். மறுமையில், நிச்சயமாக அவர்களுடைய நெருப்பில் குளிர்ச்சியோ இதமோ இருக்காது. அவர்கள் அங்கே எந்த வாழ்த்துரையையும் பெறமாட்டார்கள். மாறாக, அவர்கள் தங்குமிடம் பின்வருகின்ற வசனத்தில் அல்லாஹ் கூறுவதைப் போல் இருக்கும்: திண்ணமாக அது வாழ்வதற்கும் வசிப்பதற்கும் மிகக்கெட்ட இடமாகும். (25: 66)

மூலம்: அல்பிதாயா வந்நிஹாயா (அரபி)
தமிழாக்கம்:நூ. அப்துல் ஹாதி பாகவி
  

புதன், 8 செப்டம்பர், 2010

நூல் மதிப்புரை (தினமணி)

செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

இப்ராஹீம் நபியின் வரலாறு (தொடர் 6)

உண்மையை உணர வைத்தல்

அவர்களிடம் பண்டிகை கொண்டாடுகின்ற பழக்கம் இருந்தது. ஒவ்வோராண்டும் அவர்கள் தம்  பண்டிகையைக் கொண்டாட ஊரின் எல்லைக்குச் சென்றுவிடுவார்கள்.  அவ்விழாவில் கலந்துகொள்ள  அவருடைய தந்தை தம் மகன் இப்ராஹீமை அழைத்தார். அப்போது அவர், நான் நோயுற்றிருக்கிறேன் என்று பதிலளித்தார்.  அல்லாஹ் கூறுகின்றான்: பின்னர், அவர் நட்சத்திரங்களை ஒரு பார்வை பார்த்தார். திண்ணமாக நான் நோயாளியாக இருக்கிறேன் என்று கூறினார்.  (37: 88-89)
 அதாவது அவர்களுடைய சிலைகளை இழிவுபடுத்துவது, அல்லாஹ்வுடைய மார்க்கத்திற்கு உதவி செய்வது  மேலும் அவர்கள் வணங்கிக் கொண்டிருந்த சிலைகளை- அவை உடைக்கப்படுவதற்கும் இழிவுபடுத்தப்படுவதற்கும் தகுதியானவை- பொய்யெனத் தெரிவிப்பது இவையே அவரின் நோக்கமாக இருந்தன. அவற்றை அவர்தம் பேச்சிலேயே அம்மக்களுக்கு எடுத்துக் காட்டினார்.
அவர்களெல்லாம் தம்முடைய விழாவைக் கொண்டாடச் சென்றுவிட்டபோது, அவர் மட்டும் ஊரிலேயே தங்கிவிட்டார். அவர்களுடைய தெய்வங்களிடம் அவர்  சென்றார். (37: 91)

  அதாவது வேகமாகவும் மறைந்தும் சென்றார். அவர் மிகப்பெரும் முற்றத்தில் அவற்றைக் கண்டார்.  அந்தச் சிலைகளுக்கு முன்பாக வகை வகையான உணவுகளை காணிக்கையாக அவர்கள் படைத்திருந்தார்கள். அவர் அச்சிலைகளைப் பார்த்து, (உங்களுக்குமுன் படைக்கப்பட்டுள்ள உணவுகளை) நீங்கள் உண்ண மாட்டீர்களா? என்று கேட்டார். உங்களுக்கு என்ன (நேர்ந்தது)? நீங்கள் ஏன் பேசுவதில்லை? (என்றும் கேட்டார்). பின் அவர் அவற்றின் பக்கம் திரும்பி தம் வலக்கையால் அவற்றை அடித்து(உடைத்து)விட்டார்.  (37: 91-93)

ஏனென்றால், அவை மிக வலுவானவை; வேகமானவை; அடக்கிஆள்பவை. எனவே அவற்றை அவர் தம்முடைய கையிலிருந்த சுத்தியலால் உடைத்தெறிந்தார். அல்லாஹ் கூறுகின்றான்:  அவர் அவற்றைத் துண்டு துண்டாக்கிவிட்டார். (21: 58) அதாவது அவர் அவை அனைத்தையும் உடைத்துவிட்டார். அவர் அவற்றுள் பெரியதைத் தவிர (மற்ற) எல்லாவற்றையும் துண்டு துண்டாக்கினார். அவர்கள் அதன்பால் திரும்புவதற்காக (அதை விட்டுவிட்டார்).(21: 58)

அதன் பின்னர், அவர் தம்முடைய சுத்தியலை அங்கிருந்த பெரிய சிலையின் கையில் வைத்துவிட்டார். தன்னோடு சமமாக இச்சிறிய சிலைகளும் வழிபடப்படுவதைப் பொறுக்காத அந்தப் பெரிய சிலை அச்சிறிய சிலைகளை உடைத்துவிட்டது என்று சுட்டிக்காட்டவே என்று கூறப்பட்டுள்ளது.

அவர்கள் தம் விழாவைக் கொண்டாடிவிட்டு ஊருக்குள் திரும்பியபோது, அவர்களுடைய தெய்வங்களுக்கு நேர்ந்ததைக் கண்டு திடுக்கிட்டு, எங்கள் தெய்வங்களுக்கு இவ்வாறு (தீங்கு) செய்தது யார்? திண்ணமாக அவன் அநியாயக்காரர்களுள் ஒருவனாக இருப்பான் என்று கூறினார்கள். (21: 59)

அவர்கள் அறிவுடையவர்களாக இருந்தால் அவர்களுக்கு இதில் தெளிவான ஆதாரம் இருக்கிறது. அதாவது அவர்கள் வழிபட்டுக்கொண்டிருந்த தெய்வங்களுக்கு நிகழ்ந்ததே அதுவே ஆதாரமாகும். ஏனென்றால், அவை உண்மையிலேயே தெய்வங்களாக இருந்திருந்தால் எவன் தமக்குத் தீங்கு செய்ய முற்பட்டானோ அவனைத் தடுத்திருக்க வேண்டும். ஆனால், அவை அப்படிச் செய்யவில்லை. இருப்பினும் அம்மக்கள் தம் அறிவின்மையாலும்  வழிகேட்டினாலும் இவ்வாறு கூறுகின்றார்கள்:   எங்கள் தெய்வங்களுக்கு இவ்வாறு (தீங்கு) செய்தது யார்? நிச்சயமாக அவன் அநியாயக்காரர்களுள் ஒருவனாக இருப்பான் என்று கூறினார்கள். அதற்கு (அவர்களுள் சிலர்), இளைஞர் ஒருவர் இவற்றைப் பற்றிக் (குறை) கூறிக் கொண்டிருந்ததை நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம்; அவருக்கு `இப்ராஹீம் என்று சொல்லப்படுகிறது என்று கூறினார்கள். (21: 59-60)


அவர் நம் தெய்வங்களைக் குறைகூறுகிறார்; அவற்றை அவர் கேலி செய்கிறார்; அவரே ஊரில் தங்கியிருந்தார். அவர்தான் நம் தெய்வங்களை உடைத்திருக்க வேண்டும் என்று கூறினர். இப்னு மஸ்ஊத்  (ரளி) அவர்கள், இப்ராஹீம்  நபி சொன்ன- (இன்னும், நீங்கள் புறங்காட்டித் திரும்பிச்சென்ற பின்னர் அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உங்கள் சிலைகளுக்கு ஒரு சதி செய்வேன்) -என்ற  வார்த்தைகளையும் அவர்கள் நினைவூட்டினார்கள் என்று கூறியுள்ளார்கள்.

அதனைக் கேட்ட அவர்கள், அப்படியானால், அவரை மக்கள் கண்முன்னே கொண்டு வாருங்கள். அவர்கள் (அவரை) நேரடியாகக் காணலாம் என்று கூறினார்கள். (21: 61) அதாவது பெரும் திரள் முன்னிலையில் அவரைக் கொண்டு வந்தால், அவரை எல்லோரும் நேரடியாகக் காண்பார்கள்; அவர் பேசுவதை எல்லோரும் கேட்பார்கள் என்ற எண்ணத்தில்தான் அவரை மக்கள் முன்னிலையில் கொண்டு வர வேண்டும் என்று கூறினார்கள். 


இப்ராஹீம் நபியின் உயர் நோக்கம்

மக்கள் யாவரையும் ஒன்றிணைய வைப்பதே இப்ராஹீம் நபியின் உயர் நோக்கமாக இருந்தது. அவர்கள் அவ்வாறு ஒன்றிணைந்தால்தான் அவர்கள் வழிபட்டுவருகின்ற சிலைக ளுக்கு எதிரான ஆதாரத்தை அவர்கள் முன்னிலையிலேயே நிலைநாட்ட முடியும். எனவேதான், அந்த வாய்ப்பை  அவர் எதிர்பார்த்துக் காத்திருந்தார். இது, மூசா (அலை) அவர்கள் பிர்அவ்னுக்குக் கூறியதைப் போன்று உள்ளது. பண்டிகை நாளே உங்களுடைய தவணையாகும். மேலும், மனிதர்கள் யாவரும் முற்பகலி லேயே ஒன்று திரட்டப்பட வேண்டும் என்று அவர் கூறினார். (20: 59)

மக்களெல்லாம் ஒன்றுகூடிய பின்னர், அவ்விடத்திற்கு இப்ராஹீம் நபி கொண்டுவரப்பட்டார். அல்லாஹ் கூறுகின்றான்: இப்ராஹீமே! எங்கள் தெய்வங்களை இவ்வாறு செய்தவர் நீர்தாமே? என்று (அவர் வந்ததும்) அவர்கள் கேட்டனர். அதற்கு அவர், அப்படியல்ல! இவற்றுள் பெரிய சிலை இதோ இருக்கிறதே, இதுதான் செய்திருக்கும் என்று கூறினார். (21: 62-63) அதாவது அந்தப் பெரிய சிலைதான் அவற்றை உடைக்க என்னைத் தூண்டியது. அதனால்தான் பின்வருமாறு அவர் கூறினார்: இவை பேசக்கூடியவையாக இருப்பின், இவற்றையே  நீங்கள் கேளுங்கள்.  (21: 63)


இதை அவர் சொன்ன காரணம், அவற்றால் பேச முடியாது என்று அவர்கள் சொல்ல வேண்டும் என்பதற்காகத்தான். ஆக அவர் நினைத்தபடியே, மற்ற ஜடங்களைப் போன்று அவையும் உயிரற்ற ஜடங்களே என்பதை அம்மக்கள் ஒத்துக்கொண்டார்கள். அதன் பின்னர், அவர்கள் தங்களுக்குள் திரும்பி, (ஒருவருக்கொருவர்) திண்ணமாக நீங்களே (இவற்றைத் தெய்வங்களாக நம்பிய) அநியாயக்காரர்கள் என்று பேசிக்கொண்டார்கள்.(21: 64) அவர்கள் தமக்குள்ளாகவே ஒருவரையொருவர் குறைகூறிக் கொள்ளத் தொடங்கினார்கள். நீங்களே அநியாயக்காரர்கள் என்று கூறினார்கள். அதாவது அந்தச் சிலைகளுக்கு எந்தப் பாதுகாவலரும் ஏற்பாடு செய்யாமல் தனியாக விட்டுவிட்டுச் சென்றது நம் தவறுதான் என்று கூறினார்கள்.

பிறகு, அவர்கள் (அவமானத்துடன்) தங்கள் தலைகளைத் தொங்கப்போட்டுக் கொண்டார்கள். (21: 65) சுத்தீ (ரஹ்) கூறியுள்ளார்: பின்னர், அவர்கள் தமக்குத்தாமே கருத்து வேறுபாடு கொண்டார்கள். இதன்படி அவர்கள், நிச்சயமாக நீங்களே அநியாயக்காரர்கள் என்று கூறியதன் பொருள், அதை அவர்கள் வணங்குவதில் அநியாயக்காரர்கள் என்பதாகும்.

கத்தாதா (ரஹ்) கூறியுள்ளார்: அச்சமூக மக்களை ஒரு தீய எண்ணம் ஆட்கொண்டது. அவர்கள் தம் தலைகளைத் தொங்கப் போட்டுக்கொண்டார்கள். பின்னர் அவர்கள், இவை பேசமாட்டா என்பதைத்தான் நீர் நிச்சயமாக அறிவீரே! என்று கேட்டனர். (21: 65) இப்ராஹீமே! இச்சிலைகளால் பேச முடியாது என்பதைத்தான் நீர் அறிவீரே! பின்னர், எப்படி அவற்றுடன் பேச எங்களை ஏவுகின்றீர்? என்று அவர்கள் கேட்டார்கள். அந்நேரத்தில்தான் இப்ராஹீம் நபியவர்கள், (அப்படியாயின்) அல்லாஹ்வையன்றி உங்களுக்கு எந்த நன்மையும் செய்யாத உங்களுக்குத் தீங்கும் அளிக்காதவற்றையா வழிபடுகிறீர்கள்? என்று கேட்டார். சீச்சீ! உங்களுக்கும் நீங்கள் வழிபடுகின்ற அல்லாஹ் அல்லாதவற்றிற்கும் (கேடுதான்); நீங்கள் இதனை அறிந்து  கொள்ளமாட்டீர்களா? (என்று இப்ராஹீம் கூறினார்). (21: 66-67)

* (அவற்றை வழிபடுபவர்கள்) அவரிடம் விரைந்துவந்தார்கள்.  நீங்களே    செதுக்கியவற்றையா வழிபடுகிறீர்கள்? என்று கேட்டார். (37: 94-95) அதாவது மரக்கட்டைகளிலிருந்தும் கற்களிலிருந்தும் நீங்களே செதுக்கிய சிலைகளை நீங்கள் எப்படி வழிபடுகின்றீர்கள்? மேலும், நீங்கள் விரும்பியவாறு  உருவம் கொடுக்கின்ற அவற்றையா நீங்கள் வழிபடுகின்றீர்கள்? என்று கேட்டார். மேலும் அவர், உங்களையும் நீங்கள் செய்த(இ)வற்றையும் அல்லாஹ்வே படைத்திருக்கின்றான் என்று கூறினார். (37: 96)

 அதாவது, அச்சிலைகள் யாவும் படைக்கப்பட்டவை; உங்களால் உருவாக்கப்பட்டவையாகும். எனவே படைக்கப்பட்ட ஒருவன் தன்னைப்போல் படைக்கப்பட்ட மற்றொன்றை எப்படி வழிபடலாம்? அவற்றை நீங்கள் வழிபடுவதைவிட உங்களை அவை வழிபடுவது ஒன்றும் பெரிதில்லை. அவை உங்களை வழிபடுவது தவறானது என்றால்,  நீங்கள் அவற்றை வழிபடுவதும் தவறானதே! ஏனென்றால், வழிபடுதல் என்பது படைத்த இறைவனுக்கு மட்டும்தான் தகும்; அவனை வணங்குவதே கடமையாகும்; அவன் தனித்தவன்; அவனுக்கு யாதோர் இணையுமில்லை.


மூலம்: அல்பிதாயா வந்நிஹாயா (அரபி)
தமிழாக்கம்:நூ. அப்துல் ஹாதி பாகவி


புதன், 25 ஆகஸ்ட், 2010

சனி, 21 ஆகஸ்ட், 2010

இப்ராஹீம் நபியின் வரலாறு (தொடர் 5)

சிலைவழிபாட்டை எதிர்த்தல்

அல்லாஹ் இப்ராஹீம் (அலை) அவர்கள் பற்றி பல விசயங்களைத் தெரிவிக்கிறான். இப்ராஹீம் நபி சிலைகளை வழிபடக்கூடிய சமுதாயத்தினரை மறுத்தார்; அவற்றை அவர்களிடம் இழிவுபடுத்தினார்; அவற்றைச் சிறுமைப்படுத்தினார்; அவற்றின் மதிப்பைக் குறைத்தார்.
* நீங்கள் வழிபடுகின்ற இந்த உருவங்கள் என்ன? என்று கேட்டார்.(21: 52)
அதாவது அவர்கள் அவற்றை வழிபடுகின்றார்கள்; அவற்றுக்குப் பணிகின்றார்கள். அப்போது அவர்கள், எங்கள் முன்னோர்கள் இவற்றை வணங்கிக் கொண்டிருந்ததை நாங்கள் கண்டோம் என்று கூறினார்கள்.(21: 53) 

அதாவது அவர்களுடைய ஆதாரமே, அவர்களின் பெற்றோரும் முன்னோரும் அவற்றை வணங்கினார்கள் என்பதும் அந்தச் சிலை வணக்கத்திலேயே அவர்கள் நீடித்திருந்தார்கள் என்பதுமே ஆகும்.
* அதற்கு அவர், திண்ணமாக நீங்களும், உங்களுடைய முன்னோரும் பகிரங்கமான வழிகேட்டில்தான் இருக்கிறீர்கள் என்று கூறினார்.  (21: 54)

 * அவர் தம் தந்தையிடமும்  சமூகத்தாரிடமும், நீங்கள் எதனை வழிபடுகிறீர்கள்? எனக் கேட்டதையும், அல்லாஹ்வையன்றி பொய்யான தெய்வங்களையா நீங்கள் விரும்புகின்றீர்கள்? அவ்வாறாயின், அகிலங்களின் இறைவனைப் பற்றி உங்கள் எண்ணம்தான் என்ன? என்று கேட்டதையும் எண்ணிப்பாருங்கள்.  (37: 85-87) 

  கத்தாதா (ரளி) கூறியுள்ளார்கள்:  மறுமையில், அல்லாஹ் அல்லாதவற்றை வழிபட்ட நீங்கள் அல்லாஹ்வைச் சந்திக்கின்றபோது அவன் என்ன செய்வான் என்பதைப் பற்றி, உங்கள் எண்ணம்தான் என்னஎன்று கேட்டார்.

* இப்ராஹீம் நபி அம்மக்களிடம்நீங்கள் அவற்றை அழைக்கும்போது, (அவை காது கொடுத்துக்) கேட்கின்றனவா?;   அல்லது அவை உங்களுக்கு நன்மை செய்கின்றனவா?; அல்லது தீமை செய்கின்றனவா? என்று கேட்டார். (அப்போது அவர்கள்) இல்லை. நாங்கள் எங்கள் முன்னோர் இவ்வாறே (வழிபாடு) செய்யக் கண்டோம் என்று கூறினார்கள்.  (26: 72-74)  அதாவது இப்ராஹீம் (அலை) அவர்களின் கூற்றை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். திண்ணமாக அவற்றால் அழைப்பாளரின் அழைப்பைக் கேட்க முடியாது; அவை எந்தப் பயனும் கொடுக்கா; அவை எந்தத் தீங்கும் செய்யா. பிறகேன் அவர்கள் அவற்றை வணங்கினார்கள் என்றால், மூடர்களான அவர்களின் முன்னோர்களும்  அவர்களைப் போன்றோரும்  அவற்றையே வழிபட்டுக் கொண்டிருந்தார்கள். அதை அப்படியே அவர்கள் பின்பற்றி வந்தார்கள். அவ்வளவுதான்.

* இதனால்தான் அல்லாஹ் அவர்களிடம் கூறுகின்றான்: அவ்வாறாயின், நீங்கள் எவற்றை வழிபட்டுக் கொண்டிருந்தீர்கள் என்பதை நீங்கள் பார்த்தீர்களா? என்று கேட்டார். நீங்களும், உங்கள் முன்னோர்களும் (எவற்றை வழிபட்டீர்கள் என்பதைக் கவனியுங்கள்!) நிச்சயமாக இவை எனக்கு விரோதி களே; அகிலங்களின் இறைவனைத் தவிர (அவனே காப்பவன்). (26: 75-77)

அவர்கள் எவற்றைத் தெய்வங்கள் என்று வாதிட்டார்களோ அந்தச் சிலைகளுக்கு எதிராகத் தெளிவான ஆதாரமாக மேற்கண்ட வசனங்கள் அமைந்துள்ளன. ஏனென்றால், அவற்றிலிருந்து அவர் ஒதுங்கிக்கொண்டதோடு அவற்றை அவர் மதிப்பிழக்கவும் செய்தார். அச்சிலைகள் ஏதேனும் தீங்கு செய்யும் என்றிருந்தால், அவை அவருக்கு ஏதேனும் தீங்கு செய்திருக்க வேண்டும்; அவை ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றிருந்தால், அவை அவருக்கு ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறெல்லாம் எதுவும் ஏற்படவில்லை.

பிடிவாதம்

நீர் எங்களிடம் உண்மையைக் கொண்டுவந்திருக்கிறீரா? அல்லது (எங்களுடன்) விளையாடுகின்றீரா? என்று கேட்டார்கள். (21: 55) அதாவது எங்களைப் பற்றி நீர் என்ன கூறுகின்றீரோ, எங்கள் கடவுள்களைப் பற்றி குறைத்து மதிப்பிடுகின்றீரோ, மேலும் அதன் காரணமாக எங்கள் முன்னோரைப் பழிக்கின்றீரோ இவற்றையெல்லாம் நீர் உண்மையாகத்தான் சொல்கின்றீரா? அல்லது எங்களோடு விளையாடுகின்றீரா? என்று கேட்டார்கள்.

*அப்போது அவர்அப்படியல்ல! உங்களுடைய இறைவன் வானங்களுக்கும் பூமிக்கும் இறைவனாவான். அவனே அவற்றைப் படைத்தவன். இதற்கு சாட்சி கூறுபவர்களுள் நானும் ஒருவனாக இருக்கின்றேன் என்று (இப்ராஹீம்) கூறினார்.  (21: 56)

அதாவது நான் அதையெல்லாம் உண்மையாகத்தான் கூறுகின்றேன்.  உங்கள் இறைவன் அல்லாஹ்தான்; அவனைத் தவிர வணங்கப்படுவதற்குத் தகுதியானவன் வேறு யாருமில்லை; அவனே உங்கள் இறைவனும் உலகிலுள்ள ஒவ்வொரு பொருளின் இறைவனும் ஆவான்; அவன் வானங்களையும் பூமியையும் படைத்தவன்; முன்னுதாரணமின்றி அவற்றை அவன் படைத்தான்; எனவே, அவனே வணங்கப்படத் தகுதியானவன்; அவன் தனித்தவன்; அவனுக்கு யாதோர் இணையுமில்லை; நான் அதற்குச்  சாட்சிசொல்பவன்.

 * அல்லாஹ் கூறுகின்றான்: இன்னும், நீங்கள் புறங்காட்டித் திரும்பிச்சென்ற பின்னர் அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உங்கள் சிலைகளுக்கு ஒரு சதி செய்வேன்! (என்று கூறினார்). (21: 57)
 அம்மக்கள் தம்முடைய பண்டிகையைக் கொண்டாட ஊரின் எல்லைப் பகுதிக்குச் சென்றுவிட்ட பிறகுஅவர்கள் வழிபட்டுக் கொண்டிருந்த சிலைகளுக்கு எதிராக ஒரு சூழ்ச்சி செய்வேன் என்று இப்ராஹீம் (அலை) சத்தியம் செய்து கொண்டார். அவர் இதைத்  தம் மனதுக்குள் சொல்லிக்கொண்டார் என்று கூறப்படுகிறது. அவருடைய கூற்றைச் சிலர் செவியுற்றனர் என்று இப்னு மஸ்ஊத் (ரளி) கூறியுள்ளார்கள்.


மூலம்: அல்பிதாயா வந்நிஹாயா (அரபி)
தமிழாக்கம்:நூ. அப்துல் ஹாதி பாகவி M.A., M.Phil.

வியாழன், 19 ஆகஸ்ட், 2010

இறைநம்பிக்கையாளரின் இனிய பண்புகள்


செயல்களைத் தூய்மையான எண்ணத்துடன் செய்தல்


அல்லாஹ்வைத் தூய்மையான எண்ணத்துடன் வணங்க வேண்டுமென அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. (98: 5)

அல்லாஹ்வுக்காக மட்டும் செய்த செயலையும், அவனுடைய திருப்தியை நாடிச் செய்த செயலையுமே அல்லாஹ் ஏற்றுக்கொள்கின்றான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஉமாமா (ரலி), நூல்: நசயீ

செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே (கூலி கொடுக்கப்படும்) என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஉமாமா (ரலி), நூற்கள்: புகாரீ, முஸ்லிம்

நிச்சயமாக அல்லாஹ் உங்களின் உடலையோ தோற்றத்தையோ பார்ப்பதில்லை. உங்களின் உள்ளங்களையும் செயல்பாடுகளையுமே பார்க்கிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்

துன்ப நேரங்களில் பொறுமையைக் கடைப்பிடித்தல்


இறைநம்பிக்கைகொண்டவர்களே! பொறுமையுடன் இருங்கள்; (இன்னல்களைச்) சகித்துக்கொள்ளுங்கள்! (ஒருவரையொருவர்) பலப்படுத்திக்கொள்ளுங்கள்! அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்; (இம்மையிலும் மறுமையிலும்) வெற்றியடைவீர்கள்! (3: 200)

நிச்சயமாக உங்களை ஓரளவு அச்சத்தாலும் பசியாலும், பொருள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பாலும் சோதிப்போம். (எவர் இச்சோதனையில்) பொறுமையைக் கடைப்பிடிப்பாரோ அவருக்கு (சுவர்க்கம் உண்டு என்ற) நற்செய்தியை (நபியே நீர்) கூறுவீராக! (2: 155)

இறைநம்பிக்கையாளரின் அனைத்துச் செயல்பாடுகளும் நன்மையாக அமைவது வியப்பாக உள்ளது. இந்நிலையை இறைநம்பிக்கையாளரைத் தவிர வேறு எவரும் அடைய முடியாது. அவருக்கு மகிழ்ச்சி ஏற்பட்டால் அதற்காக (இறைவனுக்கு) நன்றி செலுத்துகிறார். இது அவருக்கு நன்மையாக அமைந்துவிடுகிறது. அவருக்குத் துன்பம் ஏற்பட்டால் அதைச் சகித்துக்கொள்கிறார். அதுவும் அவருக்கு நன்மையாக அமைந்துவிடுகிறது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸுஹைப் இப்னு சினான் (ரலி), நூல்: முஸ்லிம்

அல்லாஹ் யாருக்கு நன்மையை நாடுகின்றானோ அவரைச் சோதிப்பான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரீ

உண்மையும் பொய்யும்


இறைநம்பிக்கைகொண்டவர்களே! அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள். உண்மையாளர்களுடன் நீங்களும் ஆகிவிடுங்கள். (9: 179)

எவன் பொய்யனாகவும் இறைமறுப்பாளனாகவும் இருக்கின்றானோ அவனை அல்லாஹ் நல்வழியில் செலுத்துவதில்லை. (39: 3)

நிச்சயமாக உண்மை நல்ல விசயங்களின்பால் கொண்டுசெல்கிறது. நல்ல விசயங்கள் சொர்க்கத்தின்பால் கொண்டு செல்கிறது. மனிதன் உண்மை பேசிக்கொண்டே இருக்கிறான். இறுதியில் அவன் அல்லாஹ்விடம் ஸித்தீக் (அதிகம் உண்மை பேசுபவன்) என்று எழுதப்பட்டு விடுகிறான். நிச்சயமாகப் பொய் கெட்ட விசயத்தின்பால் கொண்டு செல்கிறது. கெட்ட விசயம் நரகத்தின்பால் கொண்டு செல்கிறது. மனிதன் பொய் பேசிக்கொண்டே இருக்கிறான். இறுதியில் அல்லாஹ்விடம் அவன் மாபெரும் பொய்யன் என எழுதப்பட்டுவிடுகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி), நூற்கள்: புகாரீ, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ

சந்தேகமானதை விட்டுவிட்டு உறுதியான விசயத்தை நீ எடுத்துக்கொள். (ஏனெனில்) உண்மை மன நிம்மதி தரக்கூடியது; பொய் சந்தேகமானது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஹசன் (ரலி), நூற்கள்: அஹ்மது, நசயீ, திர்மிதீ, இப்னு ஹிப்பான்

நாவைப் பேணுதல்

அவன் (பேசக்கூடிய) எந்தச் சொல்லையும், அவனிடம் கண்காணித்து எழுதக்கூடிய (வானவர்கள் அதைப் பதியாமல்) மொழிவதில்லை. (50: 18)

தமது இரண்டு தாடைகளுக்கு இடையிலுள்ள (நாவையும்) இரண்டு தொடைகளுக்கு இடையிலுள்ள அந்தரங்க உறுப்பையும் (சரியான முறையில் பயன்படுத்துவேன் என) எவர் பொறுப்பேற்றுக் கொள்வாரோ அவருக்கு நான் சொர்க்கத்தைப் பொறுப்பேற்றுக்கொள்கிறேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: சஹ்ல் இப்னு சஅத் (ரலி), நூல்: புகாரீ

எவருடைய நாவிலிருந்தும் கையிலிருந்தும் முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவரே முஸ்லிம்களுள் சிறந்தவர் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூமூசா (ரலி), நூற்கள்: புகாரீ, முஸ்லிம்

ஓர் அடியான் எதையும் சிந்திக்காமல் (சில) வார்த்தைகளைப் பேசுகிறான். (இதனால்) கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையே உள்ள தூரமளவுக்கு நரகத்தின் உள்ளே விழுந்துவிடுகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூற்கள்: புகாரீ, முஸ்லிம், திர்மிதீ, முஅத்தா

ஓர் அடியான் எதையும் பொருட்படுத்தாமல் அல்லாஹ்வுக்குத் திருப்தியளிக்கும் பேச்சைப் பேசுகிறான். அதன் மூலம் அல்லாஹ் அவனைப் பல அந்தஸ்துகளுக்கு உயர்த்துகிறான். மற்றோர் அடியான் எதையும் பொருட்படுத்தாமல் அல்லாஹ்வுக்குக் கோபம் ஏற்படுத்தும் வார்த்தைகளைப் பேசுகிறான். அதனால் அவனை நரகத்தில் அல்லாஹ் வீசுகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரீ

அல்லாஹ்வையும் மறுமைநாளையும் நம்பிக்கைகொண்டோர் நல்லதைச் சொல்லட்டும் அல்லது மவுனமாக இருக்கட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூற்கள்: புகாரீ, முஸ்லிம், அபூதாவூத்

கெட்ட வார்த்தைகளைப் பேசுபவன்மீது அல்லாஹ் கோபம்கொள்கிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி), நூற்கள்: அஹ்மத், இப்னு ஹிப்பான்

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010