சனி, 21 ஆகஸ்ட், 2010

இப்ராஹீம் நபியின் வரலாறு (தொடர் 5)

சிலைவழிபாட்டை எதிர்த்தல்

அல்லாஹ் இப்ராஹீம் (அலை) அவர்கள் பற்றி பல விசயங்களைத் தெரிவிக்கிறான். இப்ராஹீம் நபி சிலைகளை வழிபடக்கூடிய சமுதாயத்தினரை மறுத்தார்; அவற்றை அவர்களிடம் இழிவுபடுத்தினார்; அவற்றைச் சிறுமைப்படுத்தினார்; அவற்றின் மதிப்பைக் குறைத்தார்.
* நீங்கள் வழிபடுகின்ற இந்த உருவங்கள் என்ன? என்று கேட்டார்.(21: 52)
அதாவது அவர்கள் அவற்றை வழிபடுகின்றார்கள்; அவற்றுக்குப் பணிகின்றார்கள். அப்போது அவர்கள், எங்கள் முன்னோர்கள் இவற்றை வணங்கிக் கொண்டிருந்ததை நாங்கள் கண்டோம் என்று கூறினார்கள்.(21: 53) 

அதாவது அவர்களுடைய ஆதாரமே, அவர்களின் பெற்றோரும் முன்னோரும் அவற்றை வணங்கினார்கள் என்பதும் அந்தச் சிலை வணக்கத்திலேயே அவர்கள் நீடித்திருந்தார்கள் என்பதுமே ஆகும்.
* அதற்கு அவர், திண்ணமாக நீங்களும், உங்களுடைய முன்னோரும் பகிரங்கமான வழிகேட்டில்தான் இருக்கிறீர்கள் என்று கூறினார்.  (21: 54)

 * அவர் தம் தந்தையிடமும்  சமூகத்தாரிடமும், நீங்கள் எதனை வழிபடுகிறீர்கள்? எனக் கேட்டதையும், அல்லாஹ்வையன்றி பொய்யான தெய்வங்களையா நீங்கள் விரும்புகின்றீர்கள்? அவ்வாறாயின், அகிலங்களின் இறைவனைப் பற்றி உங்கள் எண்ணம்தான் என்ன? என்று கேட்டதையும் எண்ணிப்பாருங்கள்.  (37: 85-87) 

  கத்தாதா (ரளி) கூறியுள்ளார்கள்:  மறுமையில், அல்லாஹ் அல்லாதவற்றை வழிபட்ட நீங்கள் அல்லாஹ்வைச் சந்திக்கின்றபோது அவன் என்ன செய்வான் என்பதைப் பற்றி, உங்கள் எண்ணம்தான் என்னஎன்று கேட்டார்.

* இப்ராஹீம் நபி அம்மக்களிடம்நீங்கள் அவற்றை அழைக்கும்போது, (அவை காது கொடுத்துக்) கேட்கின்றனவா?;   அல்லது அவை உங்களுக்கு நன்மை செய்கின்றனவா?; அல்லது தீமை செய்கின்றனவா? என்று கேட்டார். (அப்போது அவர்கள்) இல்லை. நாங்கள் எங்கள் முன்னோர் இவ்வாறே (வழிபாடு) செய்யக் கண்டோம் என்று கூறினார்கள்.  (26: 72-74)  அதாவது இப்ராஹீம் (அலை) அவர்களின் கூற்றை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். திண்ணமாக அவற்றால் அழைப்பாளரின் அழைப்பைக் கேட்க முடியாது; அவை எந்தப் பயனும் கொடுக்கா; அவை எந்தத் தீங்கும் செய்யா. பிறகேன் அவர்கள் அவற்றை வணங்கினார்கள் என்றால், மூடர்களான அவர்களின் முன்னோர்களும்  அவர்களைப் போன்றோரும்  அவற்றையே வழிபட்டுக் கொண்டிருந்தார்கள். அதை அப்படியே அவர்கள் பின்பற்றி வந்தார்கள். அவ்வளவுதான்.

* இதனால்தான் அல்லாஹ் அவர்களிடம் கூறுகின்றான்: அவ்வாறாயின், நீங்கள் எவற்றை வழிபட்டுக் கொண்டிருந்தீர்கள் என்பதை நீங்கள் பார்த்தீர்களா? என்று கேட்டார். நீங்களும், உங்கள் முன்னோர்களும் (எவற்றை வழிபட்டீர்கள் என்பதைக் கவனியுங்கள்!) நிச்சயமாக இவை எனக்கு விரோதி களே; அகிலங்களின் இறைவனைத் தவிர (அவனே காப்பவன்). (26: 75-77)

அவர்கள் எவற்றைத் தெய்வங்கள் என்று வாதிட்டார்களோ அந்தச் சிலைகளுக்கு எதிராகத் தெளிவான ஆதாரமாக மேற்கண்ட வசனங்கள் அமைந்துள்ளன. ஏனென்றால், அவற்றிலிருந்து அவர் ஒதுங்கிக்கொண்டதோடு அவற்றை அவர் மதிப்பிழக்கவும் செய்தார். அச்சிலைகள் ஏதேனும் தீங்கு செய்யும் என்றிருந்தால், அவை அவருக்கு ஏதேனும் தீங்கு செய்திருக்க வேண்டும்; அவை ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றிருந்தால், அவை அவருக்கு ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறெல்லாம் எதுவும் ஏற்படவில்லை.

பிடிவாதம்

நீர் எங்களிடம் உண்மையைக் கொண்டுவந்திருக்கிறீரா? அல்லது (எங்களுடன்) விளையாடுகின்றீரா? என்று கேட்டார்கள். (21: 55) அதாவது எங்களைப் பற்றி நீர் என்ன கூறுகின்றீரோ, எங்கள் கடவுள்களைப் பற்றி குறைத்து மதிப்பிடுகின்றீரோ, மேலும் அதன் காரணமாக எங்கள் முன்னோரைப் பழிக்கின்றீரோ இவற்றையெல்லாம் நீர் உண்மையாகத்தான் சொல்கின்றீரா? அல்லது எங்களோடு விளையாடுகின்றீரா? என்று கேட்டார்கள்.

*அப்போது அவர்அப்படியல்ல! உங்களுடைய இறைவன் வானங்களுக்கும் பூமிக்கும் இறைவனாவான். அவனே அவற்றைப் படைத்தவன். இதற்கு சாட்சி கூறுபவர்களுள் நானும் ஒருவனாக இருக்கின்றேன் என்று (இப்ராஹீம்) கூறினார்.  (21: 56)

அதாவது நான் அதையெல்லாம் உண்மையாகத்தான் கூறுகின்றேன்.  உங்கள் இறைவன் அல்லாஹ்தான்; அவனைத் தவிர வணங்கப்படுவதற்குத் தகுதியானவன் வேறு யாருமில்லை; அவனே உங்கள் இறைவனும் உலகிலுள்ள ஒவ்வொரு பொருளின் இறைவனும் ஆவான்; அவன் வானங்களையும் பூமியையும் படைத்தவன்; முன்னுதாரணமின்றி அவற்றை அவன் படைத்தான்; எனவே, அவனே வணங்கப்படத் தகுதியானவன்; அவன் தனித்தவன்; அவனுக்கு யாதோர் இணையுமில்லை; நான் அதற்குச்  சாட்சிசொல்பவன்.

 * அல்லாஹ் கூறுகின்றான்: இன்னும், நீங்கள் புறங்காட்டித் திரும்பிச்சென்ற பின்னர் அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உங்கள் சிலைகளுக்கு ஒரு சதி செய்வேன்! (என்று கூறினார்). (21: 57)
 அம்மக்கள் தம்முடைய பண்டிகையைக் கொண்டாட ஊரின் எல்லைப் பகுதிக்குச் சென்றுவிட்ட பிறகுஅவர்கள் வழிபட்டுக் கொண்டிருந்த சிலைகளுக்கு எதிராக ஒரு சூழ்ச்சி செய்வேன் என்று இப்ராஹீம் (அலை) சத்தியம் செய்து கொண்டார். அவர் இதைத்  தம் மனதுக்குள் சொல்லிக்கொண்டார் என்று கூறப்படுகிறது. அவருடைய கூற்றைச் சிலர் செவியுற்றனர் என்று இப்னு மஸ்ஊத் (ரளி) கூறியுள்ளார்கள்.


மூலம்: அல்பிதாயா வந்நிஹாயா (அரபி)
தமிழாக்கம்:நூ. அப்துல் ஹாதி பாகவி M.A., M.Phil.

கருத்துகள் இல்லை: