உண்மையை உணர வைத்தல்
அவர்களிடம் பண்டிகை கொண்டாடுகின்ற பழக்கம் இருந்தது. ஒவ்வோராண்டும் அவர்கள் தம் பண்டிகையைக் கொண்டாட ஊரின் எல்லைக்குச் சென்றுவிடுவார்கள். அவ்விழாவில் கலந்துகொள்ள அவருடைய தந்தை தம் மகன் இப்ராஹீமை அழைத்தார். அப்போது அவர், நான் நோயுற்றிருக்கிறேன் என்று பதிலளித்தார். அல்லாஹ் கூறுகின்றான்: பின்னர், அவர் நட்சத்திரங்களை ஒரு பார்வை பார்த்தார். திண்ணமாக நான் நோயாளியாக இருக்கிறேன் என்று கூறினார். (37: 88-89)
அதாவது அவர்களுடைய சிலைகளை இழிவுபடுத்துவது, அல்லாஹ்வுடைய மார்க்கத்திற்கு உதவி செய்வது மேலும் அவர்கள் வணங்கிக் கொண்டிருந்த சிலைகளை- அவை உடைக்கப்படுவதற்கும் இழிவுபடுத்தப்படுவதற்கும் தகுதியானவை- பொய்யெனத் தெரிவிப்பது இவையே அவரின் நோக்கமாக இருந்தன. அவற்றை அவர்தம் பேச்சிலேயே அம்மக்களுக்கு எடுத்துக் காட்டினார்.
அவர்களெல்லாம் தம்முடைய விழாவைக் கொண்டாடச் சென்றுவிட்டபோது, அவர் மட்டும் ஊரிலேயே தங்கிவிட்டார். அவர்களுடைய தெய்வங்களிடம் அவர் சென்றார். (37: 91)
அதாவது வேகமாகவும் மறைந்தும் சென்றார். அவர் மிகப்பெரும் முற்றத்தில் அவற்றைக் கண்டார். அந்தச் சிலைகளுக்கு முன்பாக வகை வகையான உணவுகளை காணிக்கையாக அவர்கள் படைத்திருந்தார்கள். அவர் அச்சிலைகளைப் பார்த்து, (உங்களுக்குமுன் படைக்கப்பட்டுள்ள உணவுகளை) நீங்கள் உண்ண மாட்டீர்களா? என்று கேட்டார். உங்களுக்கு என்ன (நேர்ந்தது)? நீங்கள் ஏன் பேசுவதில்லை? (என்றும் கேட்டார்). பின் அவர் அவற்றின் பக்கம் திரும்பி தம் வலக்கையால் அவற்றை அடித்து(உடைத்து)விட்டார். (37: 91-93)
ஏனென்றால், அவை மிக வலுவானவை; வேகமானவை; அடக்கிஆள்பவை. எனவே அவற்றை அவர் தம்முடைய கையிலிருந்த சுத்தியலால் உடைத்தெறிந்தார். அல்லாஹ் கூறுகின்றான்: அவர் அவற்றைத் துண்டு துண்டாக்கிவிட்டார். (21: 58) அதாவது அவர் அவை அனைத்தையும் உடைத்துவிட்டார். அவர் அவற்றுள் பெரியதைத் தவிர (மற்ற) எல்லாவற்றையும் துண்டு துண்டாக்கினார். அவர்கள் அதன்பால் திரும்புவதற்காக (அதை விட்டுவிட்டார்).(21: 58)
அதன் பின்னர், அவர் தம்முடைய சுத்தியலை அங்கிருந்த பெரிய சிலையின் கையில் வைத்துவிட்டார். தன்னோடு சமமாக இச்சிறிய சிலைகளும் வழிபடப்படுவதைப் பொறுக்காத அந்தப் பெரிய சிலை அச்சிறிய சிலைகளை உடைத்துவிட்டது என்று சுட்டிக்காட்டவே என்று கூறப்பட்டுள்ளது.
அவர்கள் தம் விழாவைக் கொண்டாடிவிட்டு ஊருக்குள் திரும்பியபோது, அவர்களுடைய தெய்வங்களுக்கு நேர்ந்ததைக் கண்டு திடுக்கிட்டு, எங்கள் தெய்வங்களுக்கு இவ்வாறு (தீங்கு) செய்தது யார்? திண்ணமாக அவன் அநியாயக்காரர்களுள் ஒருவனாக இருப்பான் என்று கூறினார்கள். (21: 59)
அவர்கள் அறிவுடையவர்களாக இருந்தால் அவர்களுக்கு இதில் தெளிவான ஆதாரம் இருக்கிறது. அதாவது அவர்கள் வழிபட்டுக்கொண்டிருந்த தெய்வங்களுக்கு நிகழ்ந்ததே அதுவே ஆதாரமாகும். ஏனென்றால், அவை உண்மையிலேயே தெய்வங்களாக இருந்திருந்தால் எவன் தமக்குத் தீங்கு செய்ய முற்பட்டானோ அவனைத் தடுத்திருக்க வேண்டும். ஆனால், அவை அப்படிச் செய்யவில்லை. இருப்பினும் அம்மக்கள் தம் அறிவின்மையாலும் வழிகேட்டினாலும் இவ்வாறு கூறுகின்றார்கள்: எங்கள் தெய்வங்களுக்கு இவ்வாறு (தீங்கு) செய்தது யார்? நிச்சயமாக அவன் அநியாயக்காரர்களுள் ஒருவனாக இருப்பான் என்று கூறினார்கள். அதற்கு (அவர்களுள் சிலர்), இளைஞர் ஒருவர் இவற்றைப் பற்றிக் (குறை) கூறிக் கொண்டிருந்ததை நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம்; அவருக்கு `இப்ராஹீம் என்று சொல்லப்படுகிறது என்று கூறினார்கள். (21: 59-60)
அவர் நம் தெய்வங்களைக் குறைகூறுகிறார்; அவற்றை அவர் கேலி செய்கிறார்; அவரே ஊரில் தங்கியிருந்தார். அவர்தான் நம் தெய்வங்களை உடைத்திருக்க வேண்டும் என்று கூறினர். இப்னு மஸ்ஊத் (ரளி) அவர்கள், இப்ராஹீம் நபி சொன்ன- (இன்னும், நீங்கள் புறங்காட்டித் திரும்பிச்சென்ற பின்னர் அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உங்கள் சிலைகளுக்கு ஒரு சதி செய்வேன்) -என்ற வார்த்தைகளையும் அவர்கள் நினைவூட்டினார்கள் என்று கூறியுள்ளார்கள்.
அதனைக் கேட்ட அவர்கள், அப்படியானால், அவரை மக்கள் கண்முன்னே கொண்டு வாருங்கள். அவர்கள் (அவரை) நேரடியாகக் காணலாம் என்று கூறினார்கள். (21: 61) அதாவது பெரும் திரள் முன்னிலையில் அவரைக் கொண்டு வந்தால், அவரை எல்லோரும் நேரடியாகக் காண்பார்கள்; அவர் பேசுவதை எல்லோரும் கேட்பார்கள் என்ற எண்ணத்தில்தான் அவரை மக்கள் முன்னிலையில் கொண்டு வர வேண்டும் என்று கூறினார்கள்.
இப்ராஹீம் நபியின் உயர் நோக்கம்
மக்கள் யாவரையும் ஒன்றிணைய வைப்பதே இப்ராஹீம் நபியின் உயர் நோக்கமாக இருந்தது. அவர்கள் அவ்வாறு ஒன்றிணைந்தால்தான் அவர்கள் வழிபட்டுவருகின்ற சிலைக ளுக்கு எதிரான ஆதாரத்தை அவர்கள் முன்னிலையிலேயே நிலைநாட்ட முடியும். எனவேதான், அந்த வாய்ப்பை அவர் எதிர்பார்த்துக் காத்திருந்தார். இது, மூசா (அலை) அவர்கள் பிர்அவ்னுக்குக் கூறியதைப் போன்று உள்ளது. பண்டிகை நாளே உங்களுடைய தவணையாகும். மேலும், மனிதர்கள் யாவரும் முற்பகலி லேயே ஒன்று திரட்டப்பட வேண்டும் என்று அவர் கூறினார். (20: 59)
மக்களெல்லாம் ஒன்றுகூடிய பின்னர், அவ்விடத்திற்கு இப்ராஹீம் நபி கொண்டுவரப்பட்டார். அல்லாஹ் கூறுகின்றான்: இப்ராஹீமே! எங்கள் தெய்வங்களை இவ்வாறு செய்தவர் நீர்தாமே? என்று (அவர் வந்ததும்) அவர்கள் கேட்டனர். அதற்கு அவர், அப்படியல்ல! இவற்றுள் பெரிய சிலை இதோ இருக்கிறதே, இதுதான் செய்திருக்கும் என்று கூறினார். (21: 62-63) அதாவது அந்தப் பெரிய சிலைதான் அவற்றை உடைக்க என்னைத் தூண்டியது. அதனால்தான் பின்வருமாறு அவர் கூறினார்: இவை பேசக்கூடியவையாக இருப்பின், இவற்றையே நீங்கள் கேளுங்கள். (21: 63)
இதை அவர் சொன்ன காரணம், அவற்றால் பேச முடியாது என்று அவர்கள் சொல்ல வேண்டும் என்பதற்காகத்தான். ஆக அவர் நினைத்தபடியே, மற்ற ஜடங்களைப் போன்று அவையும் உயிரற்ற ஜடங்களே என்பதை அம்மக்கள் ஒத்துக்கொண்டார்கள். அதன் பின்னர், அவர்கள் தங்களுக்குள் திரும்பி, (ஒருவருக்கொருவர்) திண்ணமாக நீங்களே (இவற்றைத் தெய்வங்களாக நம்பிய) அநியாயக்காரர்கள் என்று பேசிக்கொண்டார்கள்.(21: 64) அவர்கள் தமக்குள்ளாகவே ஒருவரையொருவர் குறைகூறிக் கொள்ளத் தொடங்கினார்கள். நீங்களே அநியாயக்காரர்கள் என்று கூறினார்கள். அதாவது அந்தச் சிலைகளுக்கு எந்தப் பாதுகாவலரும் ஏற்பாடு செய்யாமல் தனியாக விட்டுவிட்டுச் சென்றது நம் தவறுதான் என்று கூறினார்கள்.
பிறகு, அவர்கள் (அவமானத்துடன்) தங்கள் தலைகளைத் தொங்கப்போட்டுக் கொண்டார்கள். (21: 65) சுத்தீ (ரஹ்) கூறியுள்ளார்: பின்னர், அவர்கள் தமக்குத்தாமே கருத்து வேறுபாடு கொண்டார்கள். இதன்படி அவர்கள், நிச்சயமாக நீங்களே அநியாயக்காரர்கள் என்று கூறியதன் பொருள், அதை அவர்கள் வணங்குவதில் அநியாயக்காரர்கள் என்பதாகும்.
கத்தாதா (ரஹ்) கூறியுள்ளார்: அச்சமூக மக்களை ஒரு தீய எண்ணம் ஆட்கொண்டது. அவர்கள் தம் தலைகளைத் தொங்கப் போட்டுக்கொண்டார்கள். பின்னர் அவர்கள், இவை பேசமாட்டா என்பதைத்தான் நீர் நிச்சயமாக அறிவீரே! என்று கேட்டனர். (21: 65) இப்ராஹீமே! இச்சிலைகளால் பேச முடியாது என்பதைத்தான் நீர் அறிவீரே! பின்னர், எப்படி அவற்றுடன் பேச எங்களை ஏவுகின்றீர்? என்று அவர்கள் கேட்டார்கள். அந்நேரத்தில்தான் இப்ராஹீம் நபியவர்கள், (அப்படியாயின்) அல்லாஹ்வையன்றி உங்களுக்கு எந்த நன்மையும் செய்யாத உங்களுக்குத் தீங்கும் அளிக்காதவற்றையா வழிபடுகிறீர்கள்? என்று கேட்டார். சீச்சீ! உங்களுக்கும் நீங்கள் வழிபடுகின்ற அல்லாஹ் அல்லாதவற்றிற்கும் (கேடுதான்); நீங்கள் இதனை அறிந்து கொள்ளமாட்டீர்களா? (என்று இப்ராஹீம் கூறினார்). (21: 66-67)
* (அவற்றை வழிபடுபவர்கள்) அவரிடம் விரைந்துவந்தார்கள். நீங்களே செதுக்கியவற்றையா வழிபடுகிறீர்கள்? என்று கேட்டார். (37: 94-95) அதாவது மரக்கட்டைகளிலிருந்தும் கற்களிலிருந்தும் நீங்களே செதுக்கிய சிலைகளை நீங்கள் எப்படி வழிபடுகின்றீர்கள்? மேலும், நீங்கள் விரும்பியவாறு உருவம் கொடுக்கின்ற அவற்றையா நீங்கள் வழிபடுகின்றீர்கள்? என்று கேட்டார். மேலும் அவர், உங்களையும் நீங்கள் செய்த(இ)வற்றையும் அல்லாஹ்வே படைத்திருக்கின்றான் என்று கூறினார். (37: 96)
அதாவது, அச்சிலைகள் யாவும் படைக்கப்பட்டவை; உங்களால் உருவாக்கப்பட்டவையாகும். எனவே படைக்கப்பட்ட ஒருவன் தன்னைப்போல் படைக்கப்பட்ட மற்றொன்றை எப்படி வழிபடலாம்? அவற்றை நீங்கள் வழிபடுவதைவிட உங்களை அவை வழிபடுவது ஒன்றும் பெரிதில்லை. அவை உங்களை வழிபடுவது தவறானது என்றால், நீங்கள் அவற்றை வழிபடுவதும் தவறானதே! ஏனென்றால், வழிபடுதல் என்பது படைத்த இறைவனுக்கு மட்டும்தான் தகும்; அவனை வணங்குவதே கடமையாகும்; அவன் தனித்தவன்; அவனுக்கு யாதோர் இணையுமில்லை.
மூலம்: அல்பிதாயா வந்நிஹாயா (அரபி)
தமிழாக்கம்:நூ. அப்துல் ஹாதி பாகவி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக