சனி, 11 செப்டம்பர், 2010

இப்ராஹீம் நபியின் வரலாறு (தொடர் 7)

சான்றைச் சமர்ப்பித்தல்

* அவர்கள் கூறினார்கள்: இவருக்காக(ப் பெரியதொரு நெருப்புக்) கிடங்கை அமைத்து எரிநெருப்பில் அவரை எறிந்துவிடுங்கள். (இவ்வாறாக) அவர்கள் அவருக்குச் சதிசெய்ய நாடினார்கள். ஆனால், நாம் அவர்களை இழிவானவர்களாக ஆக்கிவிட்டோம்.  (37: 97-98)  போதிய ஆதாரங்கள்  இல்லாமல் தோல்வி கண்டபோது அம்மக்கள் வாதம் செய்ய முன்வரவில்லை.  எனவே, அவர்கள் தம் ஆற்றலையும் அதிகாரத்தையும் பயன்படுத்துவதைத் தவிர அவர்களுக்குச் சாதகமாக எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. அவர்கள் தம் அறியாமையாலும் வரம்புமீறுதலாலும், தம் தெய்வங்களுக்கு உதவி செய்ய நாடினார்கள். அந்நேரத்தில் அல்லாஹ் தன்னுடைய மார்க்கத்தை நிலைநாட்டவும் அதை உயர்த்தவும் நாடினான்.

 * (இதற்கு) அவர்கள், நீங்கள் (இவரை ஏதாவது) செய்ய நாடினால் இவரை (நெருப்பிலிட்டு) எரியுங்கள். (இவ்வாறு செய்து) உங்கள் தெய்வங்களுக்கு உதவி செய்யுங்கள் என்று கூறினார்கள். (இப்ராஹீமை தீக்கிடங்கில் எறிந்தபோது) நெருப்பே! இப்ராஹீம் மீது நீ குளிர்ச்சியாகவும், சுகமளிக்கக் கூடியதாகவும் ஆகிவிடு என்று நாம் கூறினோம். மேலும், அவர்கள் அவருக்குச் சதிசெய்ய நாடினார்கள். ஆனால், நாம் அவர்களையே இழப்புக்குரியவர்களாக ஆக்கினோம்.  (21: 68- 70)

அவர்களால் இயன்ற இடமெல்லாம் விறகுகளைச் சேகரிக்கத் தொடங்கினார்கள். அவ்வாறு விறகைச் சேகரிப்பதிலேயே நீண்ட காலம் கழிந்தது. அவர்களுள் ஒரு பெண் நோய்வாய்ப்பட்டு விடுகின்றபோது, நான் சுகம்பெற்றுவிட்டால், இப்ராஹீமை எரிக்க விறகுகளைச் சுமந்துவருவேன் என்று நேர்ச்சை செய்துகொள்வாள். பின்னர், ஒரு நாள் அவர்கள் ஒரு பெரிய பாதாளக் குழியைத் தோண்டினார்கள். அதனுள் அவர்கள் விறகுகளைப் போட்டு எரியவைத்தார்கள்.

அந்நெருப்பு கொழுந்துவிட்டு எரிந்தது. அதன் மேல் தீப்பொறிகள் பறந்தன. அதைப் போன்ற நெருப்பை யாரும் பார்த்ததில்லை. பின்னர், பீரங்கி போன்ற ஒரு கருவியில் இப்ராஹீம் நபியை வைத்தார்கள். ஹைஸன் என்பவன்தான் அந்தக் கருவியைச் செய்தான். அவன்தான் முதன் முதலில் அந்தப் பீரங்கியைச்  செய்தான். எனவே, அல்லாஹ் அவனைப் பூமிக்குள் செருகி விட்டான். அவன் அதனுள் மறுமைநாள் வரை சப்தமிட்டுக் கொண்டே இருப்பான்.  (நூல்: தஃப்சீர் தப்ரீ) பிறகு, அவர்கள் அவரைக் கட்டினார்கள்; அவருடைய கைகளைப் பின்புறமாக்கி, தோளோடு சேர்த்துக்  கட்டி விட்டார்கள். அந்நேரத்தில், இப்ராஹீம் (அலை) அவர்கள், உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. நீ தூயவன்; அகிலத்தாரின் இறைவன்; உனக்கே புகழ் யாவும்; உனக்கே அரசாட்சி; உனக்கு இணையாக எதுவும் இல்லை என்று ஓதினார்.  (நூல்: தஃப்சீர் தப்ரீ)

இப்ராஹீம் நபி ஓதிய துஆ

இப்ராஹீம் (அலை) அவர்களை பீரங்கி போன்ற ஒரு கருவியில் வைத்து, கைகளைப் பின்புறமாக்கி, தோளோடு சேர்த்துக் கட்டி அதிலிருந்து தூக்கி எறிந்தார்கள். அப்போது அவர், நமக்கு அல்லாஹ்வே போதுமானவன்; அவனே பொறுப்பாளர்களில் நல்லவன் என்று ஓதினார்கள். இப்னு அப்பாஸ்  (ரளி) அறிவித்துள்ள நபிமொழியை புகாரீ (ரஹ்) அவர்கள் பதிவுசெய்துள்ளார்.

இப்ராஹீம் நபி நெருப்பில் போடப்பட்டபோது, நமக்கு அல்லாஹ்வே போதுமானவன்; அவனே பொறுப்பாளர்களில் நல்லவன் என்று ஓதினார். பின்வருகின்ற வசனம் முஹம்மது நபிக்குக் கூறப்பட்டபோது, அவர்களும் இந்த துஆவை ஓதினார்கள். அந்த வசனம்: அவர்களிடம் மக்கள் (சிலர்), உங்களுக்கு எதிராக (யுத்தம் புரிய) மனிதர்கள் ஒன்று திரண்டுவிட்டார்கள். எனவே, அவர்களை அஞ்சுங்கள் என்று கூறினர். ஆனால், அது அவர்களுக்கு இறைநம்பிக்கையை மேலும் அதிகமாக்கியது. (அதனால்) அவர்கள், எங்களுக்கு அல்லாஹ்வே போதுமானவன்; அவனே பொறுப்பாளர்களில் நல்லவன் என்று  கூறினார்கள். இதனால் அவர்கள் அல்லாஹ்வின் அருளுடனும் வளத்துடனும் திரும்பினார்கள்.  அவர்களுக்கு எத்தகைய தீங்கும் நேரவில்லை.  (3: 173-174, நூல்: புகாரீ)

இப்ராஹீம் நபி நெருப்பில் போடப்பட்ட போது, இறைவா! நீ வானத்தில் ஒருவன்;  பூமியில்  உன்னை வணங்குபவன் நான் ஒருவனே என்று கூறினார் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரளி) அறிவித்துள்ளார்கள். இதை அபூயஅலா (ரஹ்) பதிவு செய்துள்ளார்.

அல்லாஹ் காப்பாற்றுதல்

முந்தைய அறிஞர்கள் சிலர் கூறியுள்ளனர்: ஜிப்ரீல் (அலை) அவர்கள், இப்ராஹீம் (அலை) அவர்களின்முன் தோன்றி, இப்ராஹீமே! உமக்கு எதுவும் தேவை இருக்கிறதா? என்று கேட்டார். உம்மிடம் இல்லை  என்று இப்ராஹீம் நபி பதிலளித்தார்.

இப்னு அப்பாஸ்  (ரளி) மற்றும் சயீத் பின் ஜுபைர் (ரளி)- இருவரிடமிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. மழையின் வானவர், நான் எப்போது ஏவப்படுவேன். (என்னை ஏவினால்) நான் மழையைப் பொழிய வைத்துவிடுவேன் என்று கூறலானார். ஆனால், அதற்குள் அல்லாஹ்வின் கட்டளை விரைந்து விட்டது. நெருப்பே! நீ இப்ராஹீமுக்குக் குளிர்ச்சியாகவும் இதமாகவும் ஆகிவிடு! என்று நாம் கூறினோம் (21: 69) என்று அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அலீ (ரளி) அவர்கள் கூறியுள்ளார்கள்: அதாவது அவருக்கு  நீ துன்பமிழைக்காதே! என்பதுதான் அவ்வசனத்தின் பொருள். இப்னு அப்பாஸ்  (ரளி) மற்றும் அபுல்ஆலியா (ரளி) இருவரும் கூறியுள்ளார்கள்: அல்லாஹ் `சலாமன் (இதமாக) என்று சொல்லியிருக்காவிட்டால், அதன் குளிர்ச்சி இப்ராஹீமுக்கு நோவினை கொடுத்திருக்கும். கஅபுல் அஹ்பார் (ரளி) கூறியுள்ளார்கள்: அன்றைய நாளில் இப்புவியில் யாரும் நெருப்பின் மூலம் பயன்பெற முடிய வில்லை. அவரைக் கட்டப்பட்டிருந்த கயிறுகளைத் தவிர எதுவும் கரியவில்லை.  ளஹ்ஹாக் (ரஹ்) கூறியுள்ளார்: ஜிப்ரீல் (அலை) இப்ராஹீம் நபியுடன் இருந்தார். அப்போது அவர், இப்ராஹீம் நபியின் முகத்திலிருந்த வியர்வையைத் துடைத்தார். அதைத் தவிர அந்நெருப்பிலிருந்து அவரை எதுவும் தீண்டவில்லை.

சுத்தீ (ரஹ்) கூறியுள்ளார்: இப்ராஹீம் நபியுடன் நிழலின் வானவரும் இருந்தார். அவர் கரிக்குள் இருப்பதைப் போன்று இருந்தார். அவரைச் சுற்றி  நெருப்பு இருந்தது. அவர் பசுமையான தோட்டத்திற்குள் இருந்தார். அம்மக்கள் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், அவர்கள் அவரை அடைய முடியவில்லை. அவரும் அவர்களிடம்  வர முடியவில்லை.
அபூஹுரைரா (ரளி) அறிவித்துள்ளார்கள்: இப்ராஹீம் நபியின் தந்தை மிக அழகிய வார்த்தையைக் கூறினார். அந்த நிலையில்  அவர் தம் மகனைப் பார்த்தபோது, இப்ராஹீமே! உம்முடைய இறைவன் சிறந்த இறைவன் என்று கூறினார்.

இக்ரிமா (ரளி) அவர்களிடமிருந்து இப்னு அசாகிர் (ரஹ்) அறிவித்துள்ளார்: திண்ணமாக இப்ராஹீம் நபியின் தாய்  தம்முடைய மகனைப் பார்த்தார். என்னருமை மகனே! நான் உன்னிடம் வர விரும்புகிறேன். எனவே, உன்னைச் சுற்றியுள்ள தீக்கனலிலிருந்து என்னைப் பாதுகாக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்! என்று கூறினார். அவரும் பிரார்த்தனை செய்தார். அவர் தம் மகனை முன்னோக்கிச் சென்றார். நெருப்பின் சூடு அவரின் அன்னையைத் தீண்டவில்லை. அவர் அவரிடம் சென்றடைந்தபோது, தம் மகனைக் கட்டியணைத்து அவரை முத்தமிட்டார்; பின்னர், திரும்பி வந்தார். (நூல்: தாரீக் திமஷ்க்)

மின்ஹால் பின் அம்ர் (ரஹ்) கூறியுள்ளார்: திண்ணமாக இப்ராஹீம் நபி அங்கு நாற்பது அல்லது ஐம்பது நாட்கள் தங்கினார். நான் அதனுள் இருந்தபோது வாழ்ந்த இரவுகளையும் பகல்களையும் போன்ற இனிய வாழ்க்கையை (வேறெங்கும்) அனுபவிக்கவில்லை. மேலும், நான் அதனுள் இருந்தபோது, என் வாழ்க்கை முழுவதும் இதே போன்று இருக்க வேண்டும் என்று விரும்பினேன் என இப்ராஹீம் நபி கூறியதாக எனக்கு அறிவிக்கப்பட்டது.       (நூல்: தஃப்சீர் இப்னு கஸீர்) அவர்கள் பழிவாங்க  நாடினார்கள்; ஆனால், அவர்கள் இழிவுபடுத்தப்பட்டார்கள்; அவர்கள் உயர்வடைய நாடினார்கள்; ஆனால், இழிவடைந்தார்கள்; அவர்கள் மேலோங்க நினைத்தார்கள்; ஆனால், அவர்கள் தாழ்த்தப்பட்டார்கள். அல்லாஹ் கூறுகின்றான்:  அவர்கள் அவருக்கு எதிராகச் சதிசெய்ய நாடினார்கள். ஆனால், நாம் அவர்களையே இழப்புக்குரியவர்களாக ஆக்கினோம்! (21: 70) மற்றொரு வசனத்தில், இழிவானவர்களாக ஆக்கிவிட்டோம் (37: 98) என்று கூறியுள்ளான். 

எனவே, அவர்கள் நட்டத்தையும் இழிவையுமே பெற்றார்கள். இது இவ்வுலகில்தான். மறுமையில், நிச்சயமாக அவர்களுடைய நெருப்பில் குளிர்ச்சியோ இதமோ இருக்காது. அவர்கள் அங்கே எந்த வாழ்த்துரையையும் பெறமாட்டார்கள். மாறாக, அவர்கள் தங்குமிடம் பின்வருகின்ற வசனத்தில் அல்லாஹ் கூறுவதைப் போல் இருக்கும்: திண்ணமாக அது வாழ்வதற்கும் வசிப்பதற்கும் மிகக்கெட்ட இடமாகும். (25: 66)

மூலம்: அல்பிதாயா வந்நிஹாயா (அரபி)
தமிழாக்கம்:நூ. அப்துல் ஹாதி பாகவி
  

கருத்துகள் இல்லை: