வியாழன், 19 ஆகஸ்ட், 2010
இறைநம்பிக்கையாளரின் இனிய பண்புகள்
செயல்களைத் தூய்மையான எண்ணத்துடன் செய்தல்
அல்லாஹ்வைத் தூய்மையான எண்ணத்துடன் வணங்க வேண்டுமென அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. (98: 5)
அல்லாஹ்வுக்காக மட்டும் செய்த செயலையும், அவனுடைய திருப்தியை நாடிச் செய்த செயலையுமே அல்லாஹ் ஏற்றுக்கொள்கின்றான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஉமாமா (ரலி), நூல்: நசயீ
செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே (கூலி கொடுக்கப்படும்) என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஉமாமா (ரலி), நூற்கள்: புகாரீ, முஸ்லிம்
நிச்சயமாக அல்லாஹ் உங்களின் உடலையோ தோற்றத்தையோ பார்ப்பதில்லை. உங்களின் உள்ளங்களையும் செயல்பாடுகளையுமே பார்க்கிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்
துன்ப நேரங்களில் பொறுமையைக் கடைப்பிடித்தல்
இறைநம்பிக்கைகொண்டவர்களே! பொறுமையுடன் இருங்கள்; (இன்னல்களைச்) சகித்துக்கொள்ளுங்கள்! (ஒருவரையொருவர்) பலப்படுத்திக்கொள்ளுங்கள்! அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்; (இம்மையிலும் மறுமையிலும்) வெற்றியடைவீர்கள்! (3: 200)
நிச்சயமாக உங்களை ஓரளவு அச்சத்தாலும் பசியாலும், பொருள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பாலும் சோதிப்போம். (எவர் இச்சோதனையில்) பொறுமையைக் கடைப்பிடிப்பாரோ அவருக்கு (சுவர்க்கம் உண்டு என்ற) நற்செய்தியை (நபியே நீர்) கூறுவீராக! (2: 155)
இறைநம்பிக்கையாளரின் அனைத்துச் செயல்பாடுகளும் நன்மையாக அமைவது வியப்பாக உள்ளது. இந்நிலையை இறைநம்பிக்கையாளரைத் தவிர வேறு எவரும் அடைய முடியாது. அவருக்கு மகிழ்ச்சி ஏற்பட்டால் அதற்காக (இறைவனுக்கு) நன்றி செலுத்துகிறார். இது அவருக்கு நன்மையாக அமைந்துவிடுகிறது. அவருக்குத் துன்பம் ஏற்பட்டால் அதைச் சகித்துக்கொள்கிறார். அதுவும் அவருக்கு நன்மையாக அமைந்துவிடுகிறது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸுஹைப் இப்னு சினான் (ரலி), நூல்: முஸ்லிம்
அல்லாஹ் யாருக்கு நன்மையை நாடுகின்றானோ அவரைச் சோதிப்பான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரீ
உண்மையும் பொய்யும்
இறைநம்பிக்கைகொண்டவர்களே! அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள். உண்மையாளர்களுடன் நீங்களும் ஆகிவிடுங்கள். (9: 179)
எவன் பொய்யனாகவும் இறைமறுப்பாளனாகவும் இருக்கின்றானோ அவனை அல்லாஹ் நல்வழியில் செலுத்துவதில்லை. (39: 3)
நிச்சயமாக உண்மை நல்ல விசயங்களின்பால் கொண்டுசெல்கிறது. நல்ல விசயங்கள் சொர்க்கத்தின்பால் கொண்டு செல்கிறது. மனிதன் உண்மை பேசிக்கொண்டே இருக்கிறான். இறுதியில் அவன் அல்லாஹ்விடம் ஸித்தீக் (அதிகம் உண்மை பேசுபவன்) என்று எழுதப்பட்டு விடுகிறான். நிச்சயமாகப் பொய் கெட்ட விசயத்தின்பால் கொண்டு செல்கிறது. கெட்ட விசயம் நரகத்தின்பால் கொண்டு செல்கிறது. மனிதன் பொய் பேசிக்கொண்டே இருக்கிறான். இறுதியில் அல்லாஹ்விடம் அவன் மாபெரும் பொய்யன் என எழுதப்பட்டுவிடுகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி), நூற்கள்: புகாரீ, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ
சந்தேகமானதை விட்டுவிட்டு உறுதியான விசயத்தை நீ எடுத்துக்கொள். (ஏனெனில்) உண்மை மன நிம்மதி தரக்கூடியது; பொய் சந்தேகமானது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஹசன் (ரலி), நூற்கள்: அஹ்மது, நசயீ, திர்மிதீ, இப்னு ஹிப்பான்
நாவைப் பேணுதல்
அவன் (பேசக்கூடிய) எந்தச் சொல்லையும், அவனிடம் கண்காணித்து எழுதக்கூடிய (வானவர்கள் அதைப் பதியாமல்) மொழிவதில்லை. (50: 18)
தமது இரண்டு தாடைகளுக்கு இடையிலுள்ள (நாவையும்) இரண்டு தொடைகளுக்கு இடையிலுள்ள அந்தரங்க உறுப்பையும் (சரியான முறையில் பயன்படுத்துவேன் என) எவர் பொறுப்பேற்றுக் கொள்வாரோ அவருக்கு நான் சொர்க்கத்தைப் பொறுப்பேற்றுக்கொள்கிறேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: சஹ்ல் இப்னு சஅத் (ரலி), நூல்: புகாரீ
எவருடைய நாவிலிருந்தும் கையிலிருந்தும் முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவரே முஸ்லிம்களுள் சிறந்தவர் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூமூசா (ரலி), நூற்கள்: புகாரீ, முஸ்லிம்
ஓர் அடியான் எதையும் சிந்திக்காமல் (சில) வார்த்தைகளைப் பேசுகிறான். (இதனால்) கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையே உள்ள தூரமளவுக்கு நரகத்தின் உள்ளே விழுந்துவிடுகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூற்கள்: புகாரீ, முஸ்லிம், திர்மிதீ, முஅத்தா
ஓர் அடியான் எதையும் பொருட்படுத்தாமல் அல்லாஹ்வுக்குத் திருப்தியளிக்கும் பேச்சைப் பேசுகிறான். அதன் மூலம் அல்லாஹ் அவனைப் பல அந்தஸ்துகளுக்கு உயர்த்துகிறான். மற்றோர் அடியான் எதையும் பொருட்படுத்தாமல் அல்லாஹ்வுக்குக் கோபம் ஏற்படுத்தும் வார்த்தைகளைப் பேசுகிறான். அதனால் அவனை நரகத்தில் அல்லாஹ் வீசுகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரீ
அல்லாஹ்வையும் மறுமைநாளையும் நம்பிக்கைகொண்டோர் நல்லதைச் சொல்லட்டும் அல்லது மவுனமாக இருக்கட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூற்கள்: புகாரீ, முஸ்லிம், அபூதாவூத்
கெட்ட வார்த்தைகளைப் பேசுபவன்மீது அல்லாஹ் கோபம்கொள்கிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி), நூற்கள்: அஹ்மத், இப்னு ஹிப்பான்
லேபிள்கள்:
இனிய பண்புகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக