ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2010

உறவுகளைத் துண்டிக்காதீர்!




ஒருவர் தம் உணவு (வாழ்வாதாரம்) தமக்கு அதிகரிக்கப்படவும், தம் ஆயுள் தமக்கு நீட்டிக்கப்படவும் விரும்பினால் அவர் தம் உறவினரை இணைத்து வாழட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூற்கள்: புகாரீ, முஸ்லிம்

நிச்சயமாக அல்லாஹ், படைப்புகளைப் படைத்து முடித்தபோது `உறவு எழுந்து நின்றது. (என்னைத்) துண்டித்துக் கொள்வதைவிட்டு உன்னிடம் பாதுகாப்புக் கோரும் இடம் இது என்று கூறியது. ஆம்1 உன்னைச் சேர்த்துக்கொள்பவனை நானும் சேர்ப்பேன். உன்னைத் துண்டிப்பவனை நானும் துண்டிப்பேன் என்பதை நீ திருப்தியுறவில்லையா? என்று அல்லாஹ் கேட்டான். திருப்திதான் என உறவு கூறியதும், உனக்கு அது உண்டு என்று அல்லாஹ் கூறினான் என நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, பின்பு, நீங்கள் விரும்பினால் (பின்வரும்) இறைவசனத்தை ஓதுங்கள் என்றும் கூறினார்கள்.

நீங்கள் பொறுப்பாளர்களாக வந்துவிட்டால் பூமியில் நீங்கள் குழப்பம் செய்திடவும், உங்களின் இரத்தத் தொடர்புடையவர்களை நீங்கள் துண்டித்துக் கொள்ளவும் விரும்புகிறீர்களா? (துண்டிக்கும்) அவர்களை அல்லாஹ் சபித்துவிட்டான். அவர்களைச் செவிடாக்கிவிட்டான். அவர்களின் பார்வைகளைக் குருடாக்கி விட்டான். (47: 22-23)  அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி)நூற்கள்: புகாரீ, முஸ்லிம்

உறவு என்பது, அர்ஷைப் பிடித்துக்கொண்டு, என்னை இணைத்து வாழ்பவரை அல்லாஹ் இணைத்துக்கொள்வான். என்னைப் பிரித்துவிடுபவரை அல்லாஹ்வும் பிரித்துவிடுவான் என்று கூறும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அன்னை ஆயிஷா (ரலி)நூற்கள்: புகாரீ, முஸ்லிம்

பிரதி உபகாரம் (உதவிக்கு உதவி) என வாழ்பவர், உறவை இணைத்து வாழ்பவர் அல்லர். எனினும் தன் உறவினர் தம்மைத் துண்டித்தாலும், இணைத்து வாழ்பவரே உறவை இணைத்து வாழ்பவர் ஆவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னு ஆஸ் (ரலி)நூல்: புகாரீ

 நபி (ஸல்) அவர்களிடம், இறைத்தூதர் அவர்களே! சொர்க்கத்தில் என்னை நுழையச் செய்கின்ற, நரகத்திலிருந்து என்னைத் தூரமாக்கிவிடுகின்ற ஒரு செயலை என்னிடம் கூறுங்கள் என்று ஒருவர் கேட்டார். நீர் அல்லாஹ்வை வணங்குவீர்; எதையும் அவனுக்கு இணையாக்காதீர்; தொழுகையைப் பேணுவீர்; ஸகாத்தைக் கொடுப்பீர்; உறவினரை இணைத்து வாழ்வீர் என்று  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பாளர்: காலித் இப்னு ஸைத் அல்அன்ஸாரீ (ரலி)நூற்கள்: புகாரீமுஸ்லிம்

உங்களுள் ஒருவர் நோன்பு துறந்தால், ஒரு பேரீத்தம் பழத்தால் நோன்பைத் துறக்கட்டும். அதுவே அபிவிருத்தி தரும். ஒரு பேரீத்தம் பழம் இல்லையென்றால், தண்ணீர்  (மூலம் நோன்பு துறக்கட்டும்); அதுவே சுகாதாரமாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, ஏழைக்குத் தர்மம் தருவது, ஒரு தர்ம(க் கூலி)தான். உறவினருக்குத் தர்மம் வழங்குவது இரண்டு (கூலி)களாகும். ஒன்று தர்மம்; மற்றொன்று உறவை இணைத்து வாழ்தல் என்றும் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: சல்மான் இப்னு ஆமிர் (ரலி)நூல்: திர்மிதீ

சனி, 14 ஆகஸ்ட், 2010

இப்ராஹீம் நபியின் வரலாறு (தொடர் 4)

அழைப்புப் பணி

பாபில் நகர மக்கள் சிலைகளை வழிபட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்களிடம்தான் சிலைகளை வணங்கக் கூடாது என்பது பற்றியும் அவற்றை உடைத்தபோது ஏற்பட்ட பிரச்சினை பற்றியும் இப்ராஹீம் (அலை) அவர்கள் வாதம்செய்தார்கள். அவர் அவற்றை இழிவுபடுத்தினார்; அவை வீணானவை என்பதை அம்மக்களுக்குத் தெளிவுபடுத்தினார்.    

* அல்லாஹ் கூறுகின்றான்: மேலும், அவர் (இப்ராஹீம்), அல்லாஹ்வைத் தவிர சிலைகளை (க் கடவுளாக) நீங்கள் ஆக்கிக்கொண்டதெல்லாம், உலக வாழ்க்கையில் (அவர்கள்மீது) உங்களிடையேயுள்ள நேசத்தின் காரணத்தால்தான்; பின்னர், மறுமைநாளன்று உங்களுள் சிலர் சிலரை நிராகரிப்பர்; உங்களுள் சிலர் சிலரைச் சபித்துக்கொள்வர்; (இறுதியில்) உங்கள் ஒதுங்குமிடம் (நரக) நெருப்புதான். (அங்கு) உங்களுக்கு உதவியாளர் யாருமில்லை என்று கூறினார்.   (29: 25)


* நாம் இப்ராஹீமுக்கு முன்னரே (சிறுபிராயத்திலிருந்தே) அவருடைய நல்வழியைத் திண்ணமாகக்  கொடுத்தோம். மேலும், அவரைப் பற்றி நாம் அறிந்திருந்தோம். அவர் தம் தந்தையிடமும், தம் சமூகத்தாரிடமும், நீங்கள் வழிபடுகின்ற இந்த உருவங்கள் என்ன? என்று கேட்டபோது அவர்கள், எங்கள் முன்னோர்கள் இவற்றை வணங்கிக் கொண்டிருந்ததை நாங்கள் கண்டோம் என்று கூறினார்கள்.

அதற்கு அவர், திண்ணமாக நீங்களும், உங்களுடைய முன்னோர்களும் பகிரங்கமான வழிகேட்டில்தான் இருக்கிறீர்கள் என்று கூறினார். அதற்கு அவர்கள், நீர் எங்களிடம் உண்மையைக் கொண்டுவந்திருக்கிறீரா? அல்லது (எங்களிடம்) விளையாடுகின்றீரா? என்று கேட்டார்கள். அப்படியல்ல! உங்களுடைய இறைவன் வானங்களுக்கும் பூமிக்கும் இறைவனாவான். அவனே அவற்றைப் படைத்தவன். இதற்கு சாட்சி கூறுபவர்களுள் நானும் ஒருவனாக இருக்கின்றேன் என்று (இப்ராஹீம்) கூறினார்.

இன்னும், நீங்கள் புறங்காட்டித் திரும்பிச்சென்ற பின்னர் அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உங்கள் சிலைகளுக்கு ஒரு சதி செய்வேன்! (என்றும் கூறினார்). அவ்வாறே, அவர் அவற்றுள் பெரியதைத் தவிர (மற்ற) எல்லாவற்றையும் துண்டு துண்டாக்கினார். அவர்கள் அதன்பால் திரும்புவதற்காக (அதை விட்டு விட்டார்). எங்கள் தெய்வங்களுக்கு இவ்வாறு (தீங்கு) செய்தது யார்? நிச்சயமாக அவன் அநியாயக்காரர்களுள் ஒருவனாக இருப்பான் என்று கூறினார்கள்.

அதற்கு (அவர்களுள் சிலர்), இளைஞர் ஒருவர் இவற்றைப் பற்றிக் (குறை) கூறிக்கொண்டிருந்ததை நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம்; அவருக்கு `இப்ராஹீம் என்று சொல்லப்படுகிறது என்று கூறினார்கள். அப்படியானால், அவரை மக்கள் முன்னிலையில் கொண்டு வாருங்கள். அவர்கள் (அவரை) நேரடியாகக் காணலாம் என்று கூறினார்கள். இப்ராஹீமே! எங்கள் தெய்வங்களை இவ்வாறு செய்தவர் நீர்தாமே? என்று (அவர் வந்ததும்) அவர்கள் கேட்டனர்.

அதற்கு அவர், அப்படியல்ல! இவற்றில் பெரிய சிலை இதோ இருக்கிறதே, இதுதான் செய்திருக்கும். எனவே, இவை பேசக்கூடியவையாக இருப்பின், இவற்றையே நீங்கள் கேளுங்கள் என்று கூறினார்.  (இதற்கு பதில் கூறத்  தெரியாத) அவர்கள் தங்களுக்குள் திரும்பி, (ஒருவருக்கொருவர்) நிச்சயமாக நீங்கள்தாம் (இவற்றைத் தெய்வங்களாக நம்பிய) அநியாயக்காரர்கள் என்று பேசிக்கொண்டார்கள். பிறகு, அவர்கள் (அவமானத்துடன்) தங்கள் தலைகளைத் தொங்கப் போட்டுக்கொள்ளுமாறு செய்யப்பட்டார்கள். இவை பேசமாட்டா என்பதைத்தான் நீர் திண்ணமாக அறிவீரே! (என்று கூறினர்).

(அப்படியாயின்) அல்லாஹ்வையன்றி உங்களுக்கு எந்த நன்மையும் செய்யாத உங்களுக்குத் தீங்கும் அளிக்காதவற்றையா வணங்குகிறீர்கள்? என்று கேட்டார். சீச்சீ! உங்களுக்கும் நீங்கள் வழிபடுகின்ற அல்லாஹ் அல்லாதவற்றிற்கும் (கேடுதான்); நீங்கள் இதனை அறிந்து  கொள்ளமாட்டீர்களா? (என்று இப்ராஹீம் வினவினார்).  (இதற்கு) அவர்கள், நீங்கள் (இவரை ஏதாவது) செய்ய நாடினால் இவரை (நெருப்பிலிட்டு) எரியுங்கள். (இவ்வாறு செய்து) உங்கள் தெய்வங்களுக்கு உதவி செய்யுங்கள் என்று கூறினார்கள். (இப்ராஹீமைத் தீக்கிடங்கில் எறிந்தபோது) நெருப்பே! இப்ராஹீம் மீது நீ குளிர்ச்சியாகவும், சுகமளிக்கக் கூடியதாகவும் ஆகிவிடு என்று நாம் கூறினோம். மேலும், அவர்கள் அவருக்குச் சதிசெய்ய நாடினார்கள். ஆனால், நாம் அவர்களையே இழப்புக்குரியவர்களாக ஆக்கினோம்.  (21: 51- 70)


* இன்னும் நீர் இவர்களுக்கு இப்ராஹீமின் வரலாற்றையும் எடுத்துரைப்பீராக! அவர் தம் தந்தையையும், தம் சமூகத்தாரையும் நோக்கி, நீங்கள்  எதை வழிபடுகிறீர்கள்? என்று கேட்டபோது அவர்கள், நாங்கள் சிலைகளை வழிபடுகிறோம். நாம் அவற்றின் வழிபாட்டிலேயே நிலைத்திருக்கிறோம் என்று கூறினார்கள். (அதற்கு இப்ராஹீம்), நீங்கள் அவற்றை அழைக்கும்போது, (அவை காது கொடுத்துக்) கேட்கின்றனவா?;   அல்லது அவை உங்களுக்கு நன்மை செய்கின்றனவா?; அல்லது தீமை செய்கின்றனவா? என்று வினவினார். (அதற்கு அவர்கள்) இல்லை. நாங்கள், எங்கள் முன்னோர்கள் இவ்வாறே (வழிபாடு) செய்யக் கண்டோம் என்று கூறினார்கள்.


அவ்வாறாயின், நீங்கள் எவற்றை வழிபட்டுக் கொண்டிருந்தீர்கள்? என்பதை நீங்கள் பார்த்தீர்களா? என்று கேட்டார். நீங்களும், உங்கள் முன்னோர்களும் (எவற்றை வழிபட்டீர்கள் என்பதைக் கவனியுங்கள்!) நிச்சயமாக இவை எனக்கு விரோதிகளே; அகிலங்களின் இறைவனைத் தவிர (அவனே காப்பவன்). அவனே என்னைப் படைத்தான்; பின்னும், அவனே எனக்கு நல்வழி காண்பிக்கிறான்; அவனே எனக்கு உணவளிக்கின்றான்.
அவனே என்னைப் பருகச் செய்கின்றான்; நான் நோயுற்ற காலத்தில், அவனே என்னைக் குணப்படுத்துகிறான்; மேலும் அவனே என்னை மரணிக்கச் செய்கிறான்; பிறகு, அவனே என்னை உயிர்ப்பிப்பான்; (நியாயத்)தீர்ப்பு  நாளன்று எனக்காக என் குற்றங்களை மன்னிப்பவன் அவனே என்று நான் விரும்பு கின்றேன். இறைவா! நீ எனக்கு ஞானத்தை அளிப்பாயாக! மேலும், நல்லவர்களுடன் என்னைச்  சேர்த்துவைப்பாயாக! (26: 69-83)

* திண்ணமாக இப்ராஹீமும் அவருடைய வழியைப் பின்பற்றியவர்களுள் ஒருவரே ஆவார். அவர்  தூய நெஞ்சத்துடன் தம்முடைய இறைவனிடம் வந்தபோது,  அவர் தம் தந்தையையும் தம் சமூகத்தாரையும் நோக்கி, நீங்கள் எதனை வழிபடுகிறீர்கள்? எனக் கேட்டதையும், அல்லாஹ்வைத் தவிர பொய்யான தெய்வங்களையா நீங்கள் விரும்புகின்றீர்கள்? அவ்வாறாயின், அகிலங்களின் இறைவனைப் பற்றி உங்கள் எண்ணம்தான் என்ன? என்று கேட்டதையும் (நபியே!) நீர் எண்ணிப்பார்ப்பீராக! பின்னர், அவர் நட்சத்திரங்களை ஒரு பார்வை பார்த்தார். நிச்சயமாக நான் நோயாளியாக இருக்கிறேன் என்று கூறினார். எனவே, அவரை விட்டு அ(வருடைய சமூகத்த)வர்கள் திரும்பிச் சென்றனர். அதன்பின், அவர்களுடைய தெய்வங்களின்பால் அவர் சென்று, (உங்களுக்கு முன் படைக்கப்பட்டுள்ள உணவுகளை) நீங்கள் உண்ணமாட்டீர்களா? என்று கேட்டார். உங்களுக்கு என்ன (நேர்ந்தது)? நீங்கள் ஏன் பேசுவதில்லை? (என்றும் கேட்டார்). பின் அவர் அவற்றின் பக்கம் திரும்பி தம் வலக்கையால் அவற்றை அடித்து(உடைத்து)விட்டார்.

(அவற்றை வழிபடுபவர்கள்) அவரை நோக்கி விரைந்து வந்தார்கள். (அவர்களை நோக்கி) அவர்,  நீங்களே செதுக்கியவற்றையா வழிபடுகிறீர்கள்? உங்களையும் நீங்கள் செய்த (இ)வற் றையும், அல்லாஹ்வே படைத்திருக்கின்றான் என்று கூறினார். அதற்கு அவர்கள், இவருக்காக(ப் பெரியதொரு நெருப்புக்) கிடங்கை அமைத்து எரிநெருப்பில் அவரை எறிந்து விடுங்கள். (இவ்வாறாக) அவர்கள் அவருக்குச் சதிசெய்ய நாடினார்கள். ஆனால், நாம் அவர்களை இழிவானவர்களாக ஆக்கிவிட்டோம்.  (37: 83-98)



மூலம்: அல்பிதாயா வந்நிஹாயா (அரபி)
தமிழாக்கம்:நூ. அப்துல் ஹாதி பாகவி

சனி, 7 ஆகஸ்ட், 2010

நூல் வெளியீட்டு விழா (தினமணி)



சென்னை ஆயிஷா பதிப்பகம் சார்பாக, புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் அரபியில் எழுதிய அல்பிதாயா வந்நிஹாயா நூலின் ஒரு பகுதியான கஸஸுல் அன்பியாவின் தமிழாக்கம் நபிமார்கள் வரலாறு முதல் பாகம் வெளியீட்டு விழா 06.08.2010 வெள்ளிக்கிழமை மாலை 7.00 மணிக்கு, தேவநேயப் பாவாணர் அரங்கில் நடைபெற்றது.

பேராசிரியர், அ. முஹம்மது கான் ஃபாஸில் பாகவி இந்நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். பி. ஜபருல்லாஹ் கான் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியின் தொடக்கமாக, ஹாஃபிழ் எம்.என். புகாரி திருமறை வசனங்களை ஓதினார். அதைத் தொடர்ந்துஆயிஷா பதிப்பகத்தின் மொழிபெயர்ப்பாளர் மௌலவி, நூ. அப்துல் ஹாதி பாகவி வரவேற்புரை நிகழ்த்தினார்.  ஆயிஷா பதிப்பகத்தின் நிறுவனர்களுள் ஒருவரான ஜே. இக்பால் கான்  துவக்கவுரை நிகழ்த்தினார்.  மௌலவி அ. முஹம்மது கான் ஃபாஸில் பாகவி தம்முடைய தலைமையுரையில், ஆயிஷா பதிப்பகத்தார் தொடங்கியுள்ள இப்பணி வெகுவாகப் பாராட்டத்தக்கது. அரபியில் நூற்கள் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றைத் தமிழில் மொழிபெயர்க்கத் தகுந்த ஆட்கள் இல்லை. எனவே அரபிக் கல்லூரிகள் மொழிபெயர்ப்புக்காகவே ஒரு தனித்துறையைத் தொடங்க வேண்டும். மேலும், இவர்கள் தொடங்கியுள்ள இப்பணியைப்போல் மற்ற செல்வந்தர்களும் பொதுத்தொண்டு செய்ய முன்வர வேண்டும். அதற்கு அறிஞர்களும் செல்வந்தர்களும் ஒன்றிணைய வேண்டும் என்று குறிப்பிட்டார்.

அடுத்து, கவிக்கோ அப்துர் ரஹ்மான் வாழ்த்துரை வழங்கினார். அவர் தம்முடைய உரையில், என் வீட்டில் ஒரு பிரசவம் நடந்ததைப் போன்ற மகிழ்ச்சி எனக்கு உள்ளது. ஏனென்றால், ஆதாரப்பூர்வமான ஒரு வரலாற்று நூல் தமிழில் வராதா என நான் நீண்ட காலமாக ஏங்கிக்கொண்டிருந்தேன். என்னுடைய  ஏக்கத்தைத் தணிக்கும் வகையில் ஆயிஷா பதிப்பகத்தார் அதைக் கையில் எடுத்துக்கொண்டுச் செயல்படத் தொடங்கியுள்ளனர்; அவர்களின் இந்த முயற்சி மிகவும் பாராட்டுக்குரியது என்று குறிப்பிட்டார். 
   அவருக்கு அடுத்து, தமிழ்நாடு முஸ் லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர், டாக்டர், பேராசிரியர், எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் வாழ்த்துரை வழங்கினார். அவர் தம் உரையில், இந்நூல் மிகச் சிறந்த முறையில் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது பாராட்டத்தக்கது. கான் பாகவி கூறியதைப்போல், மொழிபெயர்ப்புக்கென்றே அரபிக் கல்லூரிகளில் தனிப்பிரிவு ஏற்படுத்த வேண்டும். இப்பணி தொடர்ந்து நடைபெற வேண்டும். சமுதாய மக்களுக்குப் பயன்படும் வகையில் ஒவ்வொருவரும் பொதுப்பணியில் ஈடுபட வேண்டும் என்று குறிப்பிட்டார்.

அடுத்து, டாக்டர் பி.எஸ். செய்யது மஸ்வூத் ஜமாலி நூல் அறிமுக உரை நிகழ்த்தினார். அவர் தம் உரையில், இமாம் இப்னு கஸீர் (ரஹ்) அல்பிதாயா வந்நிஹாயா எனும் இந்த வரலாற்று நூலை மிக நுட்பத்தோடு ஆராய்ச்சி செய்துள்ளார். அவர் நூஹ் நபியின் கப்பலைப் பற்றி ஆய்வுசெய்து கூறியுள்ள தகவல்களையும்  ஜூதி மலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நூஹ் நபியின் கப்பலை 1959ஆம் ஆண்டு அமெரிக்கத் தொல்லியல் துறை அறிஞர்கள் ஆய்வுசெய்து வெளியிட்ட தகவல்களையும் ஒப்பிட்டுப் பார்த்தபோது நான் அதிசயித்துப்போனேன். இரண்டும் ஒன்றாகவே உள்ளது என்று குறிப்பிட்டார். அவரைத் தொடர்ந்து, மௌலவி, ஏ.எம். முஹம்மது இல்யாஸ்  ஃபாஸில் பாகவி வாழ்த்துரை வழங்கினார். அவர் தம் உரையில், ஐரோப்பியர்களும் ஆங்கிலேயர்களும் இஸ்லாமிய வரலாற்றைத் திரித்து எழுதி, அதையே பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பாடமாக வைத்துப் போதித்துவிட்டனர். இதனால் இஸ்லாமியர்களைப் பற்றிய தவறான சிந்தனையே மக்கள் மத்தியில் உள்ளது.  மேலும், ஆங்கிலேயர்கள், ஜிஹாத் எனும் அரபி வார்த்தைக்கு, போர் என்ற தவறான அர்த்தத்தைக் கூறி இஸ்லாமிய மார்க்கம் போரையே வலியுறுத்திக் கூறுகின்ற ஒரு வன்மையாக மார்க்கம் என்ற பொய்யான தோற்றத்தை உண்டாக்கியுள்ளனர். ஆனால், ஜிஹாத் எனும் வார்த்தைக்கு, போராட்டம் என்று பொருள் என்று கூறினார்.  எனவே இதுபோன்ற தவறான செய்திகளைப் படித்துக்கொண்டிருக்கிற நாம், நபிமார்களைப் பற்றிய சரியான தகவல்களைத் தெரிந்துகொள்ள வேண்டுமாயின், `நபிமார்கள் வரலாறு எனும் இந்த நூலை வாங்கிப் படியுங்கள் என்று குறிப்பிட்டார். அதனைத் தொடர்ந்து,   மௌலவி, காஞ்சி அப்துல் ரவூப் பாகவியும், டாக்டர் அப்துல்லாஹ்வும் (பெரியார்தாசன்) வாழ்த்துரை வழங்கினர். டாக்டர், அப்துல்லாஹ் தம்முடைய உரையில், இந்நூல் பாமரனும் விளங்கிக்கொள்ளக்கூடிய, எல்லா மக்களும் புரிந்துகொள்ளக்கூடிய வகையில், எளிய நடையில் இனிய தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. இத்தகைய இந்நூலை மலிவுப் பதிப்பில் அச்சிட்டு எல்லோரும் வாங்கும் நிலையை உருவாக்க ஆயிஷா பதிப்பகத்தார் ஆவண செய்ய வேண்டும்; இந்நூல் ஒவ்வொருவரின் வீட்டிலும் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

சென்னைப் பல்கலைக் கழக அரபித் துறைத் தலைவர், டாக்டர். பி. நிஸார் அஹ்மத்  நூலை வெளியிட்டார்.  எல்.கே.எ. சையித் அஹ்மத் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார்.  நிகழ்ச்சியில் பங்குகொண்ட சிறப்பு அழைப்பாளர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியின் இறுதியில் ஆயிஷா பதிப்பகத்தின் நிறுவனர்களுள் ஒருவரான எம். சாதிக் பாட்சா நன்றியுரை கூறினார்.  
                                                                                                 -தருபவர்:   நூ. அப்துல் ஹாதி பாகவி

புதன், 4 ஆகஸ்ட், 2010

இப்ராஹீம் நபியின் வரலாறு (தொடர் 3)

இப்ராஹீம் (அலை) செய்த வாதம்

* இவ்வாறுதான்,  நாம் இப்ராஹீமுக்கு, அவர் உறுதியான நம்பிக்கையாளர்களுள் ஒருவராக ஆவதற்காக வானங்கள் மற்றும் பூமியின் அரசாட்சியைக் காட்டினோம். (ஒரு நாள்) அவரை இரவு சூழ்ந்தபோது அவர் ஒரு நட்சத்திரத்தைக் கண்டார். (அப்போது)  இது என் இறைவன் (ஆகுமோ?) என்று கூறினார். பின்னர், அது மறைந்துவிடவே, மறையக்கூடியவற்றை நான் (இறைவனாக்க) விரும்பவில்லை என்று சொன்னார்.


பின்னர், முகிழ்க்கும் நிலவைக் கண்டபோது,  இதுதான் என் இறைவன் (ஆகுமோ?) என்று  கூறினார்.  அதுவும் மறைந்து விடவே, என் இறைவன் எனக்கு நல்வழி காட்டவில்லை யானால், நான் வழிதவறிய மக்களுள் ஒருவனாக ஆகிவிடுவேன் என்று கூறினார். பின்னர், உதிக்கும் சூரியனை அவர் கண்டபோது, இது மிகவும் பெரியது. (எனவே,) இது என்  இறைவன் (ஆகுமோ?)  என்று கூறினார்.  அதுவும் மறைந்து விடவே,  என்  சமூகத்தாரே! நீங்கள் (ஏக இறைவனுக்கு) இணைவைப்பதிலிருந்து நிச்சயமாக நான் விலகிக்கொண்டேன் என்று கூறினார்.
வானங்களையும் பூமியையும் (முன்மாதிரியின்றிப்) படைத்தவன் எவனோ அவனை நோக்கி, உண்மைவழியில் நின்று, நான் என் முகத்தைத் திருப்புகிறேன். நான் இணைவைப் போருள்  ஒருவன் இல்லை (என்றும் அவர் கூறினார்). அவருடன் அவருடைய சமுதாயத்தார் தர்க்கம்செய்தனர். அப்போது அவர், அல்லாஹ் எனக்கு நல்வழி காட்டியிருக்க, அவனைக் குறித்தா நீங்கள் என்னுடன் தர்க்கம் செய்கின்றீர்கள்?  நீங்கள் இணை கற்பிக்கின்றவற்றுக்கு  நான் பயப்படமாட் டேன். என் இறைவன் எதை நாடுகின்றானோ அதைத் தவிர (வேறு எதுவும் எனக்கு நேராது). என் இறைவனின் அறிவு எல்லாப் பொருட்களிலும் விரவியுள்ளது. (இதை)  நீங்கள் உணரமாட்டீர்களா? என்று கேட்டார்.


அல்லாஹ் எதைப் பற்றி உங்களுக்கு எந்தச் சான்றையும் அருளவில்லையோ அதை அவனுக்கு இணையாகக் கற்பிப்பது குறித்து நீங்கள் அஞ்சாமல் (நிம்மதியாக) இருக்கும்போது நீங்கள் இணை கற்பிப்பவற்றை நான் எவ்வாறு அஞ்சுவேன்? எனவே, நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால், (நம்)இரு பிரிவினர்களில் நிம்மதியாக இருக்க மிகவும் தகுதி உடையோர் யார்?  (என்றும் அவர் கேட்டார்).
யார் இறைநம்பிக்கை கொண்டு, தமது இறைநம்பிக் கையுடன் அநீதியைக் கலக்காது இருக்கிறார்களோ அவர்க ளுக்கே நிம்மதி உண்டு. அவர்களே நல்வழி பெற்றவர்கள் ஆவர். இது நம்முடைய சான்றாகும். இப்ராஹீமுடைய சமுதாயத் தாருக்கெதிராக இதை நாம் அவருக்கு வழங்கினோம். நாம் விரும்புவோருக்குப் பதவிகளை உயர்த்துகிறோம்.  உம்மு டைய இறைவன் ஞானம் நிறைந்தோனும்  நன்கறிந்தோனும் ஆவான். (6: 75-83)


மேற்கண்ட வசனங்கள் இப்ராஹீம் (அலை) அவர்கள் தம்முடைய சமுதாயத்தினரோடு செய்த  தர்க்கத்தைச் சுட்டிக் காட்டுகின்றன. மேலும், விண்ணில் காணப்படுகின்ற, ஒளிர் கின்ற விண்மீன்களின் வடிவங்கள் பற்றி அவர் அவர்களுக்கு விளக்கியுள்ளார். அவை இறைவனாக இருக்கத் தகுதியில்லை என்பதையும் அல்லாஹ்வுடன் அவை வணங்கப்படுவதற்குத் தகுதியில்லை என்பதையும் அவர் அம்மக்களுக்கு விளக்கினார். ஏனென்றால், அவை யாவும் படைக்கப்பட்டவை; அவை இறைவனால் ஆளப்படுபவை; அவை மாறிமாறி வருபவை; இறைவனின் கட்டுப்பாட்டில் உள்ளவை. அவை நாள்தோறும் உதித்துப் பின்னர் மறைந்துவிடுகின்றன. ஒரு நாள் அவை இவ்வுலகைவிட்டே மறைந்துவிடும். ஆனால், அல்லாஹ் ஒருபோதும் மறையமாட்டான்; அவனை எப்பொருளும் மறைக்காது. மாறாக, அவன் நீங்காமல் நிலையாக இருப்பவன். அவனைத் தவிர எந்த இறைவனும் இல்லை. அவனைத் தவிர பரிபாலிப்பவன் யாருமில்லை என்பதைத் தெளிவாக்கினார்.

 முதலில் அவர் அவர்களுக்கு, நட்சத்திரங்கள் வணங்கப்படு வதற்குத் தகுதியில்லை என்பதை விளக்கினார். அது ஸுஹ்ர் என்ற நட்சத்திரம் என்று கூறப்படுகிறது. பின்னர், அவர் அதிலிருந்து முன்னேறி அதைவிட ஒளியாலும் அழகாலும் மிகைத்த சந்திரனை முன்னோக்கினார். பின்னர், அவர் அதிலிருந்து சற்று முன்னேறி அதைவிட ஒளியாலும் பருமனாலும் மிகைத்த பெரும் வடிவமான  சூரியனை முன்னோக்கினார். அது அல்லாஹ்வின் கட்டுப்பாட்டில் உள்ளது;   அது  வேகமாகச் சுழலக்கூடியது என்று விளக்கினார்.

 * அல்லாஹ் கூறுகின்றான்: இரவும் பகலும், சூரியனும் சந்திரனும் அவனுடைய சான்றுகளுள் உள்ளவையாகும். ஆகவே, நீங்கள் சூரியனுக்கும் சந்திரனுக்கும் சிரம் பணியா தீர்கள். அவனையே நீங்கள் வணங்குபவர்களாக இருந்தால், அவற்றைப் படைத்தவனாகிய அல்லாஹ்வுக்கே சிரம் பணி யுங்கள். (41:  37)

இதனால்தான் அவர் கூறினார்:   பின்னர், உதிக்கும் சூரியனை அவர் கண்டபோது, இது மிகவும் பெரியது. (எனவே,) இது என்  இறைவன் (ஆகுமோ?)  என்று கூறினார்.  அதுவும் மறைந்து விடவே,  என்  சமூகத்தாரே! நீங்கள் (ஏக இறைவனுக்கு) இணைவைப்பதிலிருந்து நிச்சயமாக நான் விலகிக்கொண்டேன் என்று கூறினார்.


வானங்களையும் பூமியையும் (முன்மாதிரியின்றிப்) படைத்த வன் எவனோ அவனை நோக்கி, உண்மைவழியில் நின்று, நான் என் முகத்தைத் திருப்புகிறேன். நான் இணைவைப்போருள்  ஒருவன் இல்லை (என்றும் அவர் கூறினார்). அவருடன் அவருடைய சமுதாயத்தார் தர்க்கம்செய்தனர். அப்போது அவர், அல்லாஹ் எனக்கு நல்வழி காட்டியிருக்க, அவனைக் குறித்தா நீங்கள் என்னுடன் தர்க்கம் செய்கின்றீர்கள்?  நீங்கள் இணை கற்பிக்கின்றவற்றுக்கு  நான் பயப்படமாட் டேன். என் இறைவன் எதை நாடுகின்றானோ அதைத் தவிர (வேறு எதுவும் எனக்கு நேராது). என் இறைவனின் அறிவு எல்லாப் பொருட்களிலும் விரவியுள்ளது.  (6: 78-80) அதாவது அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குகின்ற இந்தத் தெய்வங்களை நான் பொருட்படுத்தமாட்டேன். ஏனென்றால், அவை எந்தப் பயனும் தருவதில்லை; அவை எதையும் கேட்பதில்லை; அவை எதையும் விளங்குவதில்லை. மாறாக, அவை அல்லாஹ்வால் பரிபாலிக்கப்படுபவை; நட்சத்திரங்கள் உள்ளிட்டவை போன்றே அவையும் அல்லாஹ்வின் கட்டுப்பாட் டில் உள்ளவை. அல்லது அவை மனிதனால் செய்யப்பட்டவை; செதுக்கி எடுக்கப்பட்டவை; வடிவமைக்கப்பட்டவை.


நட்சத்திரங்களை மேற்கோள்காட்டி இப்ராஹீம் (அலை) அவர்கள் செய்த இந்த அறிவுரை ஹர்ரான்வாசிகளுக்குத்தான்.  ஏனென்றால், அவர்கள்தாம் அந்த நட்சத்திரங்களையும் கோள்களையும்  வணங்கிக்கொண்டிருந்தார்கள் என்பது தெளிவான கருத்தாகும்.   இப்ராஹீம் நபி சிறுவராக இருந்தபோது, சரப் என்ற இடத்தில் மேற்கண்ட நிகழ்ச்சி நடைபெற்றதாகக் கூறுபவர்களுக்குப் பதிலடியாகவே மேற்கூறப்பட்ட கருத்து அமைந்துள்ளது. இப்னு இஹாக் போன்றவர்கள் அவ்வாறு கருதியுள்ளனர். ஆனால், அவை எல்லாம் இரவேலர்களின் கட்டுக்கதைகள் ஆகும். அதற்கு எந்த ஆதாரமும் இல்லை. குறிப்பாக,  உண்மைக்கு முரணாக அமையும்போது அவை கட்டுக்கதைகளே ஆகும்.



மூலம்: அல்பிதாயா வந்நிஹாயா (அரபி)
தமிழாக்கம்:நூ. அப்துல் ஹாதி பாகவி

செவ்வாய், 3 ஆகஸ்ட், 2010

சனி, 24 ஜூலை, 2010

இப்ராஹீம் நபியின் வரலாறு (தொடர் 2)

திருக்குர்ஆனில் இப்ராஹீம் (அலை) வரலாறு

* நாம் இப்ராஹீமுக்கு முன்னரே (சிறு பிராயத்திலிருந்தே) அவருடைய நல்வழியைத் திண்ணமாகக் கொடுத்தோம். மேலும், அவரைப் பற்றி நாம் அறிந்திருந்தோம். (21: 51) அதாவது அவர் தம் சிறுபிராயத்திலேயே அதற்குத் தகுதியான வராக இருந்தார்.

* இன்னும் இப்ராஹீமையும் (தூதராக நாம் அனுப்பினோம்); அவர் தம் சமூகத்தாரிடம், அல்லாஹ்வை(மட்டும்) நீங்கள் வணங்குங்கள். அவனையே நீங்கள் அஞ்சுங்கள். நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால் இதுவே, உங்களுக்கு நன்மையுடையதாக இருக்கும் என்று கூறிய வேளையை (நபியே! எண்ணிப்பார்ப்பீராக!) அல்லாஹ்வைத் தவிர நீங்கள் வழிபடுவதெல்லாம் சிலைகளைத்தான்.

மேலும், நீங்கள் பொய்யாகப் படைத்துக்கொண்டீர்கள். நிச்சயமாக, அல்லாஹ்வைத் தவிர நீங்கள் வணங்கிவருபவை உங்களுக்கு உணவளிக்க சக்திபெறமாட்டா. ஆதலால், நீங்கள் அல்லாஹ்விடமே உணவைத் தேடுங்கள். அவனையே வணங்குங்கள். அவனுக்கே நன்றிசெலுத்துங்கள். அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.

இன்னும், நீங்கள் பொய்ப்பிக்க முற்பட்டால் (தளர்ந்துவிடப் போவதில்லை; ஏனெனில்) உங்களுக்கு முன்னிருந்த சமுதாயத்தவரும் (அவர்களுக்கு அனுப்பப்பட்ட தூதர்களை இவ்வாறே) பொய்ப்பிக்க முற்பட்டார்கள். ஆகவே, (இறைத்) தூதரின் கடமை (தம் தூதை) பகிரங்கமாக எடுத்துரைப்பதே ஆகும். அல்லாஹ் எவ்வாறு முதலில் படைப்பைத் துவங்கிப் பிறகு, அதனை (எவ்வாறு தன் பக்கம்) மீட்டுகின்றான் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு மிகவும் எளிதாகும்.

பூமியில் நீங்கள் பயணம் செய்து, அல்லாஹ் எவ்வாறு படைப்பைத் துவங்கிப் பின்னர், அவன் பிந்திய படைப்பை எவ்வாறு உண்டுபண்ணுகிறான் என்பதைப் பாருங்கள். நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்ற லுள்ளவன் என்று (நபியே) நீர் கூறுவீராக! தான் நாடியவரை அவன் வேதனை செய்கிறான். இன்னும், தான் நாடியவருக்கு அன்புகாட்டுகிறான். (இறுதியில்) அவனிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள். பூமியிலோ வானத்திலோ நீங்கள் (அவனை) இயலாமல் ஆக்குபவர்கள் அல்லர். மேலும், உங்களுக்கு அல்லாஹ்வையன்றி (வேறு) பாதுகாவலனோ, உதவியாளனோ இல்லை.


இன்னும் எவர்கள் அல்லாஹ்வின் வசனங்களையும் அவனைச் சந்திப்பதையும் நிராகரித்தார்களோ அவர்கள்தாம் என் அருளைவிட்டு நிராசையாகிவிட்டனர். மேலும், இ(த்தகை ய)வர்களுக்கு வதைக்கும் வேதனை உண்டு. இதற்கு அவருடைய சமூகத்தாரின் பதிலெல்லாம், அவரைக் கொன்றுவிடுங்கள். அல்லது நெருப்பிலிட்டுப் பொசுக்குங்கள் என்று கூறியதைத் தவிர வேறில்லை. ஆனால், அல்லாஹ் அவரை (அந்த) நெருப்பிலிருந்து காப்பாற்றினான். நிச்சயமாக இதில், நம்பிக்கைகொண்ட சமூகத்தாருக்குத் தக்க சான்றுகள் உள்ளன.

மேலும், அவர் சொன்னார்: அல்லாஹ்வையன்றி சிலைகளை(க் கடவுளாக) ஆக்கிக்கொண்டதெல்லாம், உலக வாழ்க்கையில் (அவர்கள் மீது) உங்கள் மத்தியிலுள்ள நேசத்தின் காரணத்தினால்தான். பின்னர், மறுமை நாளன்று உங்களுள் சிலர் சிலரை நிராகரிப்பார்கள். உங்களுள் சிலர் சிலரைச் சபித்துக்கொள்வார்கள். (இறுதியில்) உங்கள் ஒதுங்குமிடம் (நரக) நெருப்புதான். (அங்கு) உங்களுக்கு உதவியாளர் எவருமில்லை. (இதன் பின்னர்) லூத் (மட்டுமே) அவர் மீது நம்பிக்கை கொண்டார். (அவரிடம் இப்ராஹீம்), நிச்சயமாக நான் என் இறைவனை நாடி (இவ்வூரை விட்டுத்) துறந்து செல்கிறேன். நிச்சயமாக அவன் (யாவற்றையும்) மேலோங்கியவன்; ஞானமிக்கோன் என்று கூறினார். மேலும், அவருக்கு இஸ்ஹாக்கையும் யஅகூபையும் அளித்தோம். இன்னும் அவருடைய சந்ததியில், நபித்துவத்தையும் வேதத்தையும் ஏற்படுத்தினோம். அவருக்கு அவருடைய கூலியை இவ்வுலகத்திலும் கொடுத்தோம். மறுமையில் அவர் நல்லவர்களுள் ஒருவராவார். (29: 16-27)

இதன் பின்னர், இப்ராஹீம் நபியவர்கள் தம்முடைய தந்தையோடும் தம் சமுதாயத்தாரிடமும் செய்த தர்க்கத்தைப் பற்றி அல்லாஹ் கூறுகின்றான். அது பற்றிய விளக்கத்தை வரும் பக்கங்களில் காணலாம்.

சிலைகளை வழிபட்டுக்கொண்டிருந்த தம்முடைய தந்தையிடமிருந்துதான் அவர் தம்முடைய முதல் அழைப்பைத் தொடங்கினார். ஏனென்றால், தந்தைதான் அவருடைய உள்ளார்த்தமான உபதேசத்தைக் கேட்க மிகவும் தகுதியானவர். எனவேதான், அவர் தம்முடைய தந்தையிடமிருந்தே தம்முடைய அழைப்புப் பணியைத் தொடங்கினார். அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!) இவ்வேதத்தில் இப்ராஹீ மைப் பற்றியும் நினைவுகூர்வீராக! நிச்சயமாக அவர் மிக்க உண்மையாளராகவும் நபியாகவும் இருந்தார். என் அருமைத் தந்தையே! (யாதொன்றையும்) கேட்க இயலாத, பார்க்க இயலாத, உங்களுக்கு எந்தத் தேவையையும் பூர்த்தி செய்ய முடியாததை ஏன் நீங்கள் வழிபடுகின்றீர்கள்? என்று அவர் தம் தந்தையிடம் கூறியதை எண்ணிப்பார்ப்பீராக!

என்னருமைத் தந்தையே! மெய்யாக உங்களிடம் வந்திராத ஞானம் எனக்கு வந்திருக்கிறது. ஆகவே, நீங்கள் என்னைப் பின்பற்றுங்கள். நான் உங்களைச் செம்மையான நல்வழியில் நடத்துகிறேன். என் அருமைத் தந்தையே! நீங்கள் ஷைத்தானை வழிபடாதீர்கள். நிச்சயமாக ஷைத்தான், அளவற்ற அருளாளனுக்கு மாறுசெய்பவன். என் அருமைத் தந்தையே! அளவற்ற அருளாளனிடமிருந்துள்ள வேதனை உங்களைத் தீண்டிவிடுமென்றும், அப்போது நீங்கள் ஷைத்தானின் கூட்டாளியாகி விடுவீர் என்றும், நிச்சயமாக நான் அஞ்சுகிறேன் (என்று கூறினார்).

(அதற்கு அவர்) இப்ராஹீமே! நீர் என் தெய்வங்களைப் புறக்கணிக்கிறீரா? நீர் (இதை விட்டு) விலகிக் கொள்ளாவிட்டால் உம்மைக் கல்லாலெறிந்து கொல்வேன்; இனி, நீர் என்னைவிட்டு நெடுங்கா லத்திற்கு விலகிப் போய்விடுவீர் என்று கூறினார். (அதற்கு இப்ராஹீம்), உம்மீது சலாம் உண்டாவதாக! மேலும், விரைவில் நான் என் இறைவனிடம் உமக்காகப் பாவமன்னிப்புத் தேடுவேன். நிச்சயமாக அவன் என் மீது அன்புடையவனாக இருக்கிறான் என்று கூறினார். நான் உங்களைவிட்டும், அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குபவற்றை விட்டும் விலகிக் கொள்கிறேன். மேலும், நான் என் இறைவனிடம் பிரார்த்தனை செய்துகொண்டே இருப்பேன். என் இறைவனைப் பிரார்த்தனை செய்வதன் மூலமே நான் துர்பாக்கியவனாகாமல் இருக்கலாம் (என்று கூறினார்). (19: 41-48)

அவருக்கும் அவருடைய தந்தைக்கும் இடையே நடந்த உரையாடலையும் தர்க்கத்தையும், அவர் தம் தந்தையை எப்படி மிக நளினமாகவும் மென்மையாகவும் உண்மை மார்க்கத்தை நோக்கி அழைத்தார் என்பதையும் அல்லாஹ் மிகத் தெளிவான முறையில் கூறியுள்ளான். அவர் தம் தந்தையிடம், சிலை வழிபாட்டின் தீங்கையும், அந்தச் சிலைகளை வணங்குபவர் கேட்கின்ற எந்தப் பிரார்த்தனை யையும் அவை செவியேற்பதில்லை என்பதையும் அவர் நிற்கின்ற இடத்தைக்கூட பார்ப்பதில்லை என்பதையும் மிகத் தெளிவாக விளக்கினார். அவை என்ன பயனளிக்கும்? அல்லது அவை உணவு கொடுப்பது, உதவி செய்வது போன்ற என்ன நலவைத் தான் செய்யும்? என்றெல்லாம் கேட்டார். பின்னர், அவர் தம் தந்தையைவிடச் சிறியவராக இருந்த போதிலும், அல்லாஹ் தமக்கு வழங்கியுள்ள நல்வழி மற்றும் பயனுள்ள கல்வியின்படி அவர் தம்முடைய தந்தையை எச்சரித்தார்.


மேலும் அவர் கூறினார்: என்னருமைத் தந்தையே! மெய்யாக உங்களிடம் வந்திராத ஞானம் நிச்சயமாக எனக்கு வந்திருக்கிறது. ஆகவே, நீங்கள் என்னைப் பின்பற்றுங்கள். நான் உங்களைச் செம்மையான நல்வழியில் நடத்துகிறேன். (19: 43) அதாவது செவ்வையான, தெளிவான, எளிதான வழி; அது உம்மை ஈருலகிலும் நன்மையில்பால் சேர்க்கும் என்றுரைத்தார்.

அவர் தம் தந்தைக்கு எல்லா விசயங்களையும் மிகத் தெளிவாகக் கூறிய பின்னரும், நேரிய வழியையும் தெளிவான உபதேசத்தையும் முன்வைத்த பின்னரும், அவர் அவற்றை ஏற்கவுமில்லை; அவர் அதை எடுத்துக்கொள்ளவுமில்லை. மாறாக, அவர் தம் மகனை எச்சரித்தார்.
இப்ராஹீமே! நீர் என் தெய்வங்களைப் புறக்கணிக்கிறீரா? நீர் (இதை விட்டு) விலகிக் கொள்ளாவிட்டால் உம்மைக் கல்லா லெறிந்து கொல்வேன். (19: 46) கல்லால் அடிப்பேன் என்று வார்த்தையால் மட்டும் சொன்னார் என்று கூறப்பட்டுள்ளது. உண்மையில் அவர் கல்லால் அடித்தார் என்றும் கூறப்பட்டுள்ளது. இனி, நீர் என்னைவிட்டு நெடுங்காலத்திற்கு விலகிப் போய்விடுவீர் என்று கூறினார். (19: 46)

அந்நேரத்தில்தான் இப்ராஹீம் நபியவர்கள் தம் தந்தையிடம் கூறினார்: உம் மீது சலாம் உண்டாவதாக! (19: 47) அதாவது இனி என் மூலம் உமக்கு எந்தத் தொல்லையும் ஏற்படாது; நீர் வெறுக்கத்தக்க எந்தச் செயலும் ஏற்படாது. மாறாக, நீர் என்னிலிருந்து நீங்கிக்கொண்டுவிட்டீர் என்று சொன்னதோடு மட்டுமின்றி, அவர் தம் தந்தைக்காக அல்லாஹ்விடம் நன்மையை நாடி, பாவமன்னிப்பும் கேட்க முயன்றார். மேலும், விரைவில் நான் என் இறைவனிடம் உமக்காகப் பிழை பொறுக்கத் தேடுவேன். நிச்சயமாக அவன் என் மீது அன்புடையவனாக இருக்கிறான் என்று கூறினார். (19: 47) அதாவது, அவன் மென்மையானவன். அவனை மட்டும் வணங்குவதற்கு எனக்கு அவன் வழிகாட்டினான். (எனவே அவன் என் மீது மிக்க அன்புடையவன்) என்று இப்னு அப்பா (ரளி) கூறியுள்ளார்கள். இதனால்தான் இப்ராஹீம் கூறினார்: நான் உங்களைவிட்டும், அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குபவற்றை விட்டும் விலகிக் கொள்கிறேன். மேலும், நான் என் இறைவனிடம் பிரார்த்தனை செய்துகொண்டே இருப்பேன். என் இறைவனைப் பிரார்த்தனை செய்வதன் மூலமே நான் துர்பாக்கியவனாகாமல் இருக்கலாம் (என்று கூறினார்). (19: 48)


அவர் தம் தந்தைக்காகப் பிரார்த்தனை செய்வேன் என்று வாக்களித்தபடி, அவருக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேட்டார். அவர் அல்லாஹ்வுடைய விரோதி என்று தெரிந்த வுடன் அதிலிருந்து இப்ராஹீம் (அலை) விலகிக்கொண்டார். அல்லாஹ் கூறுகின்றான்: இப்ராஹீம் (நபி) தம் தந்தைக்காக மன்னிப்புக் கோரியது ஒரு வாக்குறுதிக்காகவே ஆகும். அதனை அவருக்கு அவர் வாக்களித்திருந்தார். நிச்சயமாக அவர் (தந்தை) அல்லாஹ்வின் விரோதி என்பது அவருக்குத் தெளிவாகியதும், அதிலிருந்து அவர் விலகிக்கொண்டார். நிச்சயமாக இப்ராஹீம் இளகிய மனமுடையவராகவும் சகிப்புத்தன்மை உடையவராகவும் இருந்தார்.(9: 114)

இப்ராஹீம் தம்முடைய தந்தை ஆஸரை மறுமையில் சந்திப்பார். ஆஸருடைய முகத்தில் (புகையின்) கருமையும் புழுதியும் படிந்திருக்கும். அப்போது இப்ராஹீம் அவரைப் பார்த்து, எனக்கு நீர் மாறுசெய்யாதீர் என்று நான் உம்மிடம் கூறவில்லையா? என்று கேட்பார். அவருடைய தந்தை, இன்றைய நாள், நான் உமக்கு மாறுசெய்யமாட்டேன் என்று கூறுவார். அப்போது இப்ராஹீம் (அலை), இறைவா! மக்களுக்கு உயிர்கொடுத்து எழுப்பப்படும் மறுமை நாளில் என்னை நீ இழிவுபடுத்தமாட்டாய் என்று வாக்குறுதி அளித்திருந்தாய்; இப்போது என்னுடைய தந்தை (உன் கருணையிலிருந்து) வெகு தூரமாகி (நரகத்தில் நுழைந்து)விட்டார்; எனக்கு அதைவிடப் பேரிழிவு என்ன இருக்க முடியும்? என்று வினவுவார்.

நான் இறைமறுப்பாளர்கள்மீது சொர்க்கத்தைத் தடைசெய்து விட்டேன் என்று அல்லாஹ் பதிலளிப்பான். பிறகு, இப்ராஹீமே! உம்முடைய இரண்டு கால்களுக்குக் கீழே என்ன? என்று அல்லாஹ் கேட்பான். உடனே இப்ராஹீம் கீழே பார்ப்பார். அப்போது, அங்கே இரத்தத்தில் தோய்ந்த முடிகள் நிறைந்த கழுதைப்புலி ஒன்று கிடக்கும். பின்னர், அதன் கால்களைப் பிடித்துத் தூக்கப்பட்டு நரகத்தில் எறியப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரளி) அறிவித்துள்ளார்கள். (நூல்: புகாரீ)

இப்ராஹீம் தம் தந்தை ஆஸரிடம், சிலைகளையா நீர் தெய்வங்களாக ஆக்கிக்கொண்டீர்? நீரும் உம்முடைய சமுதாயத் தாரும் தெளிவான வழிகேட்டில் இருப்பதையே நான் காண்கிறேன் என்று கூறியதை (எண்ணிப்பாருங்கள்). (6: 74) இப்ராஹீம் நபியின் தந்தை பெயர் ஆஸர் என்று இவ்வசனம் தெரிவிக்கிறது. இப்னு அப்பா (ரளி) போன்ற வமிசம் பற்றிக் கூறுபவர்களுள் பலர், அவருடைய தந்தை பெயர், `தாரிஹ் என்று தெரிவிக்கின்றனர். வேதக்காரர்கள் `தாரிஃக் என்று தெரிவிக்கின்றனர். அவர் சிலையின் பெயரால் புனைப்பெயரிட்டு அழைக்கப் பட்டார். அவர் வழிபட்டுக் கொண்டிருந்த சிலையின் பெயரே `ஆஸர் ஆகும் என்று கூறப்பட்டுள்ளது. சரியானது என்னவென்றால், அவருடைய பெயர் ஆஸர். அவருக்கு இரண்டு இயற்பெயர் இருந்திருக்கலாம். அல்லது அவ்விரண்டில் ஒன்று புனைப்பெயராகவும் மற்றொன்று இயற்பெயராகவும் இருந்திருக்கலாம் என்று இப்னு ஜரீர் (ரஹ்) கூறியுள்ளார். இவர் கூறிய கருத்து உறுதியானது இல்லை. அல்லாஹ்வே நன்கறிபவன்.

மூலம்: அல்பிதாயா வந்நிஹாயா (அரபி)
தமிழாக்கம்:நூ. அப்துல் ஹாதி பாகவி

புதன், 21 ஜூலை, 2010

இப்ராஹீம் நபியின் வரலாறு

வமிசம்

இப்ராஹீம் பின் தாரிக் (வயது 250), பின் நாஹூர் (வயது 148), பின் சாரூஹ் (வயது 230), பின் ராஹூ (வயது 239), பின் ஃபாலிஹ் (வயது 439), பின் ஆபிர் (வயது 464), பின் ஷாலிக் (வயது 433), பின் அர்ஃபக்ஷத் (வயது 438),பின் சாம் (வயது 600) பின் நூஹ் (அலை) ஆவார்.
இது வேதக்காரர்களின் வேதத்தில் உள்ள மூலம் ஆகும். வரலாற்றாசிரியர்கள் கூறிய காலங்களைப்போல, அவர்களுடைய பெயர்களுக்குக் கீழே அவர்களுடைய வயதுகளை இந்திய எண்ணில் நான் தெரிவித்திருக்கிறேன். மேலும், அவர்கள் அதனை அவ்வாறே எழுதியுள்ளார்கள். நூஹ் (அலை) அவர்களின் வயதை நாம் ஏற்கெனவே கூறிவிட்டதால் அதை மீண்டும் கூறத் தேவையில்லை.

அல்ஹாஃபிழ் பின் அசாகிர் (ரஹ்), இப்ராஹீம் (அலை) அவர்களின் வாழ்க்கைக் குறிப்பை இஸ்ஹாக் பின் பிஷ்ர் அல்காஹிலீ (ரஹ்) என்பாரிடமிருந்து அறிவித்துள்ளார். இஸ்ஹாக் என்பவரே `முப்ததா எனும் நூலின் ஆசிரியர் ஆவார். இப்ராஹீம் நபியின் தாயார் பெயர் அமீலா என்று கூறிய பிறகு, அவருடைய பிறப்பு பற்றிய வரலாற்றைக் கூறியுள்ளார். அது நீண்ட நிகழ்வாகும்.
கல்பீ (ரஹ்) கூறியுள்ளார்: அவருடைய தாயார் பெயர், பூனா பின்த் கிர்பத்தா பின் கர்ஸா ஆகும். அவர் அர்ஃபக்ஷத் பின் சாம் பின் நூஹ் என்ற வமிசத்தில் வந்தவர் ஆவார். இப்ராஹீம் நபி `விருந்தினரின் தந்தை (`அபுள் ளீஃபான்) என்ற புனைப் பெயரால் அழைக்கப்பட்டார் என்று இக்ரிமா மூலம் இப்னு அசாகிர் (ரஹ்) அறிவித்துள்ளார்.

பிறப்பு

தாரிக் என்பவரின் வயது 75 ஆன போது அவருக்கு இப்ராஹீம் (அலை) பிறந்தார். பின்னர், நாஹூர், ஹாரான் இருவரும் பிறந்தனர். ஹாரானுக்கு லூத் பிறந்தார். அவர்களுள் இப்ராஹீம் (அலை) அவர்கள்தாம் நடுவில் உள்ளவர். ஹாரான் என்பவர், தாம் பிறந்த மண்ணிலேயே தம்முடைய தந்தையின் வாழ்நாட்களிலேயே இறந்துவிட்டார். அவ்வூர் கல்தானிய்யீன் எனும் பாபில் நகரமாகும்.

இதுவே வரலாற்று ஆசிரியர்களிடம் மிகச் சரியான பிரபலமான கருத்தாகும். இதை இப்னு அசாகிர் (ரஹ்) என்பவரும் சரியெனக் கூறியுள்ளார். பின்வருகின்ற, இப்னு அப்பாஸ் (ரளி) அவர்களின் கூற்று அதற்கு ஆதாரமாக அமைந்துள்ளது. இப்ராஹீம் (அலை) திமஷ்க் நகரின் ஹூத்தா எனுமிடத்தில் பிறந்தார். அது ஒரு கிராமம். அந்தக் கிராமத்திற்கு `பர்சா என்று பெயர். அது மலைமீது உள்ள ஒரு கிராமமாகும். அதற்கு காசியூன் என்றும் சொல்லப்படுகிறது. பிறகு, அவர் பாபிலில் பிறந்தார் என்பதே சரியான கூற்றாகும் என்று கூறியுள்ளார். இப்ராஹீம் (அலை) திமஷ்கில் (டமாஸ்கஸ்) பிறந்தார் என்று கூறப்படுவதற்குக் காரணம், இப்ராஹீம் (அலை), லூத் (அலை) அவர்களுக்கு உதவி செய்ய வந்தபோது அவ்விடத்தில் இப்ராஹீம் (அலை) தொழுதார்.

திருமணம்

இப்ராஹீம் (அலை), சாரா அவர்களை மணந்துகொண்டார். நாஹூர் என்பவர், தம்முடைய சகோதரர் ஹாரானின் மகளான மல்காவை மணந்துகொண்டார் என்று வரலாற்றாசிரியர்கள் கூறியுள்ளனர்.

சாரா அம்மையார் குழந்தை பெறமுடியாதவராக இருந்தார் என்றும் வரலாற்றாசிரியர்கள் கூறியுள்ளனர். தாரிக் என்பவர், தம்முடைய மகன் இப்ராஹீம், அவருடைய மனைவி சாரா, அவருடைய அண்ணன் மகன் லூத் பின் ஹாரான் ஆகியோரை அழைத்துக்கொண்டு கல்தானிலிருந்து கன்ஆனை நோக்கிப் புறப்பட்டார். அங்கு அவர்கள் ஹர்ரான் எனும் இடத்தில் தங்கினார்கள். அங்குதான் தாரிக் என்பவர் இறந்தார். அவருக்கு அப்போது 250 வயது. எனவே, இப்ராஹீம் (அலை) ஹர்ரானில் பிறக்கவில்லை என்பதை இது தெரிவிக்கிறது. இப்ராஹீம் (அலை) பிறந்தது கல்தானில்தான். அது பாபில் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ளது.

இப்ராஹீமும் அவருடைய குடும்பமும்

பிறகு, அவர்கள் கன்ஆனை நோக்கிப் புறப்பட்டார்கள். அதுதான் பைத்துல் முகத்தஸ் உள்ள ஊராகும். எனவே, அவர்கள் ஹர்ரானில் தங்கினார்கள். அந்தக் காலத்தில் அதுதான் கல்தானாக இருந்தது. அவ்வாறே ஜஸீரா மற்றும் சிரியாவும் இருந்தன. அவர்கள் ஏழு நட்சத்திரங்களை வழிபட்டுக் கொண்டிருந்தனர். திமஷ்க் நகரத்தை உருவாக்கியவர்கள் இந்த மார்க்கத்திலேயே இருந்து வந்தனர். வடதுருவத்தை முன்னோக்கி ஏழு நட்சத்திரங்களை அவர்கள் வழிபட்டுவந்தனர். சொல்லாலும் செயலாலும் அவர்களின் வழிபாடு இருந்தது. இதனால்தான் திமஷ்க்கின் பழைய ஏழு வாசல்களுள் ஒவ்வொன்றிலும் அந்த ஏழு நட்சத்திரங்களுள் ஒவ்வொன்றுக்கும் ஒரு கோவில் இருந்தது. அவர்கள் அவற்றிற்கு விழாக் கொண்டாடுவார்கள்; அறுத்துப் பலியிடுவார்கள்.

இவ்வாறே ஹர்ரானில் வாழ்ந்த யாவரும் நட்சத்திரங்களையும் சிலைகளையுமே வழிபட்டுக்கொண்டிருந்தார்கள். இப்ராஹீம் (அலை), அவருடைய மனைவி மற்றும் அவருடைய சகோதரரின் மகன் லூத் (அலை) ஆகியோரைத் தவிர, அந்நிலத்தில் வாழ்ந்த யாவரும் இறைமறுப்பாளர்களாகவே இருந்தனர்.

இப்ராஹீம் (அலை) அவர்கள் மூலம்தான் அந்தத் தீங்குகளையெல்லாம் அல்லாஹ் நீக்கினான். அவர் மூலமே அந்த வழிகேடுகளை ஒழித்தான். நிச்சயமாக அல்லாஹ் அவருடைய இளமைப் பருவத்திலேயே அவருக்கு நல்வழியை வழங்கினான். அவருடைய மூத்த வயதில் அவரை அல்லாஹ் தூதராக அனுப்பியதோடு தன்னுடைய நண்பராகவும் தேர்ந்தெடுத்துக் கொண்டான்.

மூலம்: அல்பிதாயா வந்நிஹாயா (அரபி)
தமிழாக்கம்:நூ. அப்துல் ஹாதி பாகவி