* இவ்வாறுதான், நாம் இப்ராஹீமுக்கு, அவர் உறுதியான நம்பிக்கையாளர்களுள் ஒருவராக ஆவதற்காக வானங்கள் மற்றும் பூமியின் அரசாட்சியைக் காட்டினோம். (ஒரு நாள்) அவரை இரவு சூழ்ந்தபோது அவர் ஒரு நட்சத்திரத்தைக் கண்டார். (அப்போது) இது என் இறைவன் (ஆகுமோ?) என்று கூறினார். பின்னர், அது மறைந்துவிடவே, மறையக்கூடியவற்றை நான் (இறைவனாக்க) விரும்பவில்லை என்று சொன்னார்.
பின்னர், முகிழ்க்கும் நிலவைக் கண்டபோது, இதுதான் என் இறைவன் (ஆகுமோ?) என்று கூறினார். அதுவும் மறைந்து விடவே, என் இறைவன் எனக்கு நல்வழி காட்டவில்லை யானால், நான் வழிதவறிய மக்களுள் ஒருவனாக ஆகிவிடுவேன் என்று கூறினார். பின்னர், உதிக்கும் சூரியனை அவர் கண்டபோது, இது மிகவும் பெரியது. (எனவே,) இது என் இறைவன் (ஆகுமோ?) என்று கூறினார். அதுவும் மறைந்து விடவே, என் சமூகத்தாரே! நீங்கள் (ஏக இறைவனுக்கு) இணைவைப்பதிலிருந்து நிச்சயமாக நான் விலகிக்கொண்டேன் என்று கூறினார்.
வானங்களையும் பூமியையும் (முன்மாதிரியின்றிப்) படைத்தவன் எவனோ அவனை நோக்கி, உண்மைவழியில் நின்று, நான் என் முகத்தைத் திருப்புகிறேன். நான் இணைவைப் போருள் ஒருவன் இல்லை (என்றும் அவர் கூறினார்). அவருடன் அவருடைய சமுதாயத்தார் தர்க்கம்செய்தனர். அப்போது அவர், அல்லாஹ் எனக்கு நல்வழி காட்டியிருக்க, அவனைக் குறித்தா நீங்கள் என்னுடன் தர்க்கம் செய்கின்றீர்கள்? நீங்கள் இணை கற்பிக்கின்றவற்றுக்கு நான் பயப்படமாட் டேன். என் இறைவன் எதை நாடுகின்றானோ அதைத் தவிர (வேறு எதுவும் எனக்கு நேராது). என் இறைவனின் அறிவு எல்லாப் பொருட்களிலும் விரவியுள்ளது. (இதை) நீங்கள் உணரமாட்டீர்களா? என்று கேட்டார்.
அல்லாஹ் எதைப் பற்றி உங்களுக்கு எந்தச் சான்றையும் அருளவில்லையோ அதை அவனுக்கு இணையாகக் கற்பிப்பது குறித்து நீங்கள் அஞ்சாமல் (நிம்மதியாக) இருக்கும்போது நீங்கள் இணை கற்பிப்பவற்றை நான் எவ்வாறு அஞ்சுவேன்? எனவே, நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால், (நம்)இரு பிரிவினர்களில் நிம்மதியாக இருக்க மிகவும் தகுதி உடையோர் யார்? (என்றும் அவர் கேட்டார்).
யார் இறைநம்பிக்கை கொண்டு, தமது இறைநம்பிக் கையுடன் அநீதியைக் கலக்காது இருக்கிறார்களோ அவர்க ளுக்கே நிம்மதி உண்டு. அவர்களே நல்வழி பெற்றவர்கள் ஆவர். இது நம்முடைய சான்றாகும். இப்ராஹீமுடைய சமுதாயத் தாருக்கெதிராக இதை நாம் அவருக்கு வழங்கினோம். நாம் விரும்புவோருக்குப் பதவிகளை உயர்த்துகிறோம். உம்மு டைய இறைவன் ஞானம் நிறைந்தோனும் நன்கறிந்தோனும் ஆவான். (6: 75-83)
மேற்கண்ட வசனங்கள் இப்ராஹீம் (அலை) அவர்கள் தம்முடைய சமுதாயத்தினரோடு செய்த தர்க்கத்தைச் சுட்டிக் காட்டுகின்றன. மேலும், விண்ணில் காணப்படுகின்ற, ஒளிர் கின்ற விண்மீன்களின் வடிவங்கள் பற்றி அவர் அவர்களுக்கு விளக்கியுள்ளார். அவை இறைவனாக இருக்கத் தகுதியில்லை என்பதையும் அல்லாஹ்வுடன் அவை வணங்கப்படுவதற்குத் தகுதியில்லை என்பதையும் அவர் அம்மக்களுக்கு விளக்கினார். ஏனென்றால், அவை யாவும் படைக்கப்பட்டவை; அவை இறைவனால் ஆளப்படுபவை; அவை மாறிமாறி வருபவை; இறைவனின் கட்டுப்பாட்டில் உள்ளவை. அவை நாள்தோறும் உதித்துப் பின்னர் மறைந்துவிடுகின்றன. ஒரு நாள் அவை இவ்வுலகைவிட்டே மறைந்துவிடும். ஆனால், அல்லாஹ் ஒருபோதும் மறையமாட்டான்; அவனை எப்பொருளும் மறைக்காது. மாறாக, அவன் நீங்காமல் நிலையாக இருப்பவன். அவனைத் தவிர எந்த இறைவனும் இல்லை. அவனைத் தவிர பரிபாலிப்பவன் யாருமில்லை என்பதைத் தெளிவாக்கினார்.
முதலில் அவர் அவர்களுக்கு, நட்சத்திரங்கள் வணங்கப்படு வதற்குத் தகுதியில்லை என்பதை விளக்கினார். அது ஸுஹ்ர் என்ற நட்சத்திரம் என்று கூறப்படுகிறது. பின்னர், அவர் அதிலிருந்து முன்னேறி அதைவிட ஒளியாலும் அழகாலும் மிகைத்த சந்திரனை முன்னோக்கினார். பின்னர், அவர் அதிலிருந்து சற்று முன்னேறி அதைவிட ஒளியாலும் பருமனாலும் மிகைத்த பெரும் வடிவமான சூரியனை முன்னோக்கினார். அது அல்லாஹ்வின் கட்டுப்பாட்டில் உள்ளது; அது வேகமாகச் சுழலக்கூடியது என்று விளக்கினார்.
* அல்லாஹ் கூறுகின்றான்: இரவும் பகலும், சூரியனும் சந்திரனும் அவனுடைய சான்றுகளுள் உள்ளவையாகும். ஆகவே, நீங்கள் சூரியனுக்கும் சந்திரனுக்கும் சிரம் பணியா தீர்கள். அவனையே நீங்கள் வணங்குபவர்களாக இருந்தால், அவற்றைப் படைத்தவனாகிய அல்லாஹ்வுக்கே சிரம் பணி யுங்கள். (41: 37)
இதனால்தான் அவர் கூறினார்: பின்னர், உதிக்கும் சூரியனை அவர் கண்டபோது, இது மிகவும் பெரியது. (எனவே,) இது என் இறைவன் (ஆகுமோ?) என்று கூறினார். அதுவும் மறைந்து விடவே, என் சமூகத்தாரே! நீங்கள் (ஏக இறைவனுக்கு) இணைவைப்பதிலிருந்து நிச்சயமாக நான் விலகிக்கொண்டேன் என்று கூறினார்.
வானங்களையும் பூமியையும் (முன்மாதிரியின்றிப்) படைத்த வன் எவனோ அவனை நோக்கி, உண்மைவழியில் நின்று, நான் என் முகத்தைத் திருப்புகிறேன். நான் இணைவைப்போருள் ஒருவன் இல்லை (என்றும் அவர் கூறினார்). அவருடன் அவருடைய சமுதாயத்தார் தர்க்கம்செய்தனர். அப்போது அவர், அல்லாஹ் எனக்கு நல்வழி காட்டியிருக்க, அவனைக் குறித்தா நீங்கள் என்னுடன் தர்க்கம் செய்கின்றீர்கள்? நீங்கள் இணை கற்பிக்கின்றவற்றுக்கு நான் பயப்படமாட் டேன். என் இறைவன் எதை நாடுகின்றானோ அதைத் தவிர (வேறு எதுவும் எனக்கு நேராது). என் இறைவனின் அறிவு எல்லாப் பொருட்களிலும் விரவியுள்ளது. (6: 78-80) அதாவது அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குகின்ற இந்தத் தெய்வங்களை நான் பொருட்படுத்தமாட்டேன். ஏனென்றால், அவை எந்தப் பயனும் தருவதில்லை; அவை எதையும் கேட்பதில்லை; அவை எதையும் விளங்குவதில்லை. மாறாக, அவை அல்லாஹ்வால் பரிபாலிக்கப்படுபவை; நட்சத்திரங்கள் உள்ளிட்டவை போன்றே அவையும் அல்லாஹ்வின் கட்டுப்பாட் டில் உள்ளவை. அல்லது அவை மனிதனால் செய்யப்பட்டவை; செதுக்கி எடுக்கப்பட்டவை; வடிவமைக்கப்பட்டவை.
நட்சத்திரங்களை மேற்கோள்காட்டி இப்ராஹீம் (அலை) அவர்கள் செய்த இந்த அறிவுரை ஹர்ரான்வாசிகளுக்குத்தான். ஏனென்றால், அவர்கள்தாம் அந்த நட்சத்திரங்களையும் கோள்களையும் வணங்கிக்கொண்டிருந்தார்கள் என்பது தெளிவான கருத்தாகும். இப்ராஹீம் நபி சிறுவராக இருந்தபோது, சரப் என்ற இடத்தில் மேற்கண்ட நிகழ்ச்சி நடைபெற்றதாகக் கூறுபவர்களுக்குப் பதிலடியாகவே மேற்கூறப்பட்ட கருத்து அமைந்துள்ளது. இப்னு இஹாக் போன்றவர்கள் அவ்வாறு கருதியுள்ளனர். ஆனால், அவை எல்லாம் இரவேலர்களின் கட்டுக்கதைகள் ஆகும். அதற்கு எந்த ஆதாரமும் இல்லை. குறிப்பாக, உண்மைக்கு முரணாக அமையும்போது அவை கட்டுக்கதைகளே ஆகும்.
மூலம்: அல்பிதாயா வந்நிஹாயா (அரபி)
தமிழாக்கம்:நூ. அப்துல் ஹாதி பாகவி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக