வமிசம்
இப்ராஹீம் பின் தாரிக் (வயது 250), பின் நாஹூர் (வயது 148), பின் சாரூஹ் (வயது 230), பின் ராஹூ (வயது 239), பின் ஃபாலிஹ் (வயது 439), பின் ஆபிர் (வயது 464), பின் ஷாலிக் (வயது 433), பின் அர்ஃபக்ஷத் (வயது 438),பின் சாம் (வயது 600) பின் நூஹ் (அலை) ஆவார்.
இது வேதக்காரர்களின் வேதத்தில் உள்ள மூலம் ஆகும். வரலாற்றாசிரியர்கள் கூறிய காலங்களைப்போல, அவர்களுடைய பெயர்களுக்குக் கீழே அவர்களுடைய வயதுகளை இந்திய எண்ணில் நான் தெரிவித்திருக்கிறேன். மேலும், அவர்கள் அதனை அவ்வாறே எழுதியுள்ளார்கள். நூஹ் (அலை) அவர்களின் வயதை நாம் ஏற்கெனவே கூறிவிட்டதால் அதை மீண்டும் கூறத் தேவையில்லை.
அல்ஹாஃபிழ் பின் அசாகிர் (ரஹ்), இப்ராஹீம் (அலை) அவர்களின் வாழ்க்கைக் குறிப்பை இஸ்ஹாக் பின் பிஷ்ர் அல்காஹிலீ (ரஹ்) என்பாரிடமிருந்து அறிவித்துள்ளார். இஸ்ஹாக் என்பவரே `முப்ததா எனும் நூலின் ஆசிரியர் ஆவார். இப்ராஹீம் நபியின் தாயார் பெயர் அமீலா என்று கூறிய பிறகு, அவருடைய பிறப்பு பற்றிய வரலாற்றைக் கூறியுள்ளார். அது நீண்ட நிகழ்வாகும்.
கல்பீ (ரஹ்) கூறியுள்ளார்: அவருடைய தாயார் பெயர், பூனா பின்த் கிர்பத்தா பின் கர்ஸா ஆகும். அவர் அர்ஃபக்ஷத் பின் சாம் பின் நூஹ் என்ற வமிசத்தில் வந்தவர் ஆவார். இப்ராஹீம் நபி `விருந்தினரின் தந்தை (`அபுள் ளீஃபான்) என்ற புனைப் பெயரால் அழைக்கப்பட்டார் என்று இக்ரிமா மூலம் இப்னு அசாகிர் (ரஹ்) அறிவித்துள்ளார்.
பிறப்பு
தாரிக் என்பவரின் வயது 75 ஆன போது அவருக்கு இப்ராஹீம் (அலை) பிறந்தார். பின்னர், நாஹூர், ஹாரான் இருவரும் பிறந்தனர். ஹாரானுக்கு லூத் பிறந்தார். அவர்களுள் இப்ராஹீம் (அலை) அவர்கள்தாம் நடுவில் உள்ளவர். ஹாரான் என்பவர், தாம் பிறந்த மண்ணிலேயே தம்முடைய தந்தையின் வாழ்நாட்களிலேயே இறந்துவிட்டார். அவ்வூர் கல்தானிய்யீன் எனும் பாபில் நகரமாகும்.
இதுவே வரலாற்று ஆசிரியர்களிடம் மிகச் சரியான பிரபலமான கருத்தாகும். இதை இப்னு அசாகிர் (ரஹ்) என்பவரும் சரியெனக் கூறியுள்ளார். பின்வருகின்ற, இப்னு அப்பாஸ் (ரளி) அவர்களின் கூற்று அதற்கு ஆதாரமாக அமைந்துள்ளது. இப்ராஹீம் (அலை) திமஷ்க் நகரின் ஹூத்தா எனுமிடத்தில் பிறந்தார். அது ஒரு கிராமம். அந்தக் கிராமத்திற்கு `பர்சா என்று பெயர். அது மலைமீது உள்ள ஒரு கிராமமாகும். அதற்கு காசியூன் என்றும் சொல்லப்படுகிறது. பிறகு, அவர் பாபிலில் பிறந்தார் என்பதே சரியான கூற்றாகும் என்று கூறியுள்ளார். இப்ராஹீம் (அலை) திமஷ்கில் (டமாஸ்கஸ்) பிறந்தார் என்று கூறப்படுவதற்குக் காரணம், இப்ராஹீம் (அலை), லூத் (அலை) அவர்களுக்கு உதவி செய்ய வந்தபோது அவ்விடத்தில் இப்ராஹீம் (அலை) தொழுதார்.
திருமணம்
இப்ராஹீம் (அலை), சாரா அவர்களை மணந்துகொண்டார். நாஹூர் என்பவர், தம்முடைய சகோதரர் ஹாரானின் மகளான மல்காவை மணந்துகொண்டார் என்று வரலாற்றாசிரியர்கள் கூறியுள்ளனர்.
சாரா அம்மையார் குழந்தை பெறமுடியாதவராக இருந்தார் என்றும் வரலாற்றாசிரியர்கள் கூறியுள்ளனர். தாரிக் என்பவர், தம்முடைய மகன் இப்ராஹீம், அவருடைய மனைவி சாரா, அவருடைய அண்ணன் மகன் லூத் பின் ஹாரான் ஆகியோரை அழைத்துக்கொண்டு கல்தானிலிருந்து கன்ஆனை நோக்கிப் புறப்பட்டார். அங்கு அவர்கள் ஹர்ரான் எனும் இடத்தில் தங்கினார்கள். அங்குதான் தாரிக் என்பவர் இறந்தார். அவருக்கு அப்போது 250 வயது. எனவே, இப்ராஹீம் (அலை) ஹர்ரானில் பிறக்கவில்லை என்பதை இது தெரிவிக்கிறது. இப்ராஹீம் (அலை) பிறந்தது கல்தானில்தான். அது பாபில் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ளது.
இப்ராஹீமும் அவருடைய குடும்பமும்
பிறகு, அவர்கள் கன்ஆனை நோக்கிப் புறப்பட்டார்கள். அதுதான் பைத்துல் முகத்தஸ் உள்ள ஊராகும். எனவே, அவர்கள் ஹர்ரானில் தங்கினார்கள். அந்தக் காலத்தில் அதுதான் கல்தானாக இருந்தது. அவ்வாறே ஜஸீரா மற்றும் சிரியாவும் இருந்தன. அவர்கள் ஏழு நட்சத்திரங்களை வழிபட்டுக் கொண்டிருந்தனர். திமஷ்க் நகரத்தை உருவாக்கியவர்கள் இந்த மார்க்கத்திலேயே இருந்து வந்தனர். வடதுருவத்தை முன்னோக்கி ஏழு நட்சத்திரங்களை அவர்கள் வழிபட்டுவந்தனர். சொல்லாலும் செயலாலும் அவர்களின் வழிபாடு இருந்தது. இதனால்தான் திமஷ்க்கின் பழைய ஏழு வாசல்களுள் ஒவ்வொன்றிலும் அந்த ஏழு நட்சத்திரங்களுள் ஒவ்வொன்றுக்கும் ஒரு கோவில் இருந்தது. அவர்கள் அவற்றிற்கு விழாக் கொண்டாடுவார்கள்; அறுத்துப் பலியிடுவார்கள்.
இவ்வாறே ஹர்ரானில் வாழ்ந்த யாவரும் நட்சத்திரங்களையும் சிலைகளையுமே வழிபட்டுக்கொண்டிருந்தார்கள். இப்ராஹீம் (அலை), அவருடைய மனைவி மற்றும் அவருடைய சகோதரரின் மகன் லூத் (அலை) ஆகியோரைத் தவிர, அந்நிலத்தில் வாழ்ந்த யாவரும் இறைமறுப்பாளர்களாகவே இருந்தனர்.
இப்ராஹீம் (அலை) அவர்கள் மூலம்தான் அந்தத் தீங்குகளையெல்லாம் அல்லாஹ் நீக்கினான். அவர் மூலமே அந்த வழிகேடுகளை ஒழித்தான். நிச்சயமாக அல்லாஹ் அவருடைய இளமைப் பருவத்திலேயே அவருக்கு நல்வழியை வழங்கினான். அவருடைய மூத்த வயதில் அவரை அல்லாஹ் தூதராக அனுப்பியதோடு தன்னுடைய நண்பராகவும் தேர்ந்தெடுத்துக் கொண்டான்.
மூலம்: அல்பிதாயா வந்நிஹாயா (அரபி)
தமிழாக்கம்:நூ. அப்துல் ஹாதி பாகவி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக