சனி, 14 ஆகஸ்ட், 2010

இப்ராஹீம் நபியின் வரலாறு (தொடர் 4)

அழைப்புப் பணி

பாபில் நகர மக்கள் சிலைகளை வழிபட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்களிடம்தான் சிலைகளை வணங்கக் கூடாது என்பது பற்றியும் அவற்றை உடைத்தபோது ஏற்பட்ட பிரச்சினை பற்றியும் இப்ராஹீம் (அலை) அவர்கள் வாதம்செய்தார்கள். அவர் அவற்றை இழிவுபடுத்தினார்; அவை வீணானவை என்பதை அம்மக்களுக்குத் தெளிவுபடுத்தினார்.    

* அல்லாஹ் கூறுகின்றான்: மேலும், அவர் (இப்ராஹீம்), அல்லாஹ்வைத் தவிர சிலைகளை (க் கடவுளாக) நீங்கள் ஆக்கிக்கொண்டதெல்லாம், உலக வாழ்க்கையில் (அவர்கள்மீது) உங்களிடையேயுள்ள நேசத்தின் காரணத்தால்தான்; பின்னர், மறுமைநாளன்று உங்களுள் சிலர் சிலரை நிராகரிப்பர்; உங்களுள் சிலர் சிலரைச் சபித்துக்கொள்வர்; (இறுதியில்) உங்கள் ஒதுங்குமிடம் (நரக) நெருப்புதான். (அங்கு) உங்களுக்கு உதவியாளர் யாருமில்லை என்று கூறினார்.   (29: 25)


* நாம் இப்ராஹீமுக்கு முன்னரே (சிறுபிராயத்திலிருந்தே) அவருடைய நல்வழியைத் திண்ணமாகக்  கொடுத்தோம். மேலும், அவரைப் பற்றி நாம் அறிந்திருந்தோம். அவர் தம் தந்தையிடமும், தம் சமூகத்தாரிடமும், நீங்கள் வழிபடுகின்ற இந்த உருவங்கள் என்ன? என்று கேட்டபோது அவர்கள், எங்கள் முன்னோர்கள் இவற்றை வணங்கிக் கொண்டிருந்ததை நாங்கள் கண்டோம் என்று கூறினார்கள்.

அதற்கு அவர், திண்ணமாக நீங்களும், உங்களுடைய முன்னோர்களும் பகிரங்கமான வழிகேட்டில்தான் இருக்கிறீர்கள் என்று கூறினார். அதற்கு அவர்கள், நீர் எங்களிடம் உண்மையைக் கொண்டுவந்திருக்கிறீரா? அல்லது (எங்களிடம்) விளையாடுகின்றீரா? என்று கேட்டார்கள். அப்படியல்ல! உங்களுடைய இறைவன் வானங்களுக்கும் பூமிக்கும் இறைவனாவான். அவனே அவற்றைப் படைத்தவன். இதற்கு சாட்சி கூறுபவர்களுள் நானும் ஒருவனாக இருக்கின்றேன் என்று (இப்ராஹீம்) கூறினார்.

இன்னும், நீங்கள் புறங்காட்டித் திரும்பிச்சென்ற பின்னர் அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உங்கள் சிலைகளுக்கு ஒரு சதி செய்வேன்! (என்றும் கூறினார்). அவ்வாறே, அவர் அவற்றுள் பெரியதைத் தவிர (மற்ற) எல்லாவற்றையும் துண்டு துண்டாக்கினார். அவர்கள் அதன்பால் திரும்புவதற்காக (அதை விட்டு விட்டார்). எங்கள் தெய்வங்களுக்கு இவ்வாறு (தீங்கு) செய்தது யார்? நிச்சயமாக அவன் அநியாயக்காரர்களுள் ஒருவனாக இருப்பான் என்று கூறினார்கள்.

அதற்கு (அவர்களுள் சிலர்), இளைஞர் ஒருவர் இவற்றைப் பற்றிக் (குறை) கூறிக்கொண்டிருந்ததை நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம்; அவருக்கு `இப்ராஹீம் என்று சொல்லப்படுகிறது என்று கூறினார்கள். அப்படியானால், அவரை மக்கள் முன்னிலையில் கொண்டு வாருங்கள். அவர்கள் (அவரை) நேரடியாகக் காணலாம் என்று கூறினார்கள். இப்ராஹீமே! எங்கள் தெய்வங்களை இவ்வாறு செய்தவர் நீர்தாமே? என்று (அவர் வந்ததும்) அவர்கள் கேட்டனர்.

அதற்கு அவர், அப்படியல்ல! இவற்றில் பெரிய சிலை இதோ இருக்கிறதே, இதுதான் செய்திருக்கும். எனவே, இவை பேசக்கூடியவையாக இருப்பின், இவற்றையே நீங்கள் கேளுங்கள் என்று கூறினார்.  (இதற்கு பதில் கூறத்  தெரியாத) அவர்கள் தங்களுக்குள் திரும்பி, (ஒருவருக்கொருவர்) நிச்சயமாக நீங்கள்தாம் (இவற்றைத் தெய்வங்களாக நம்பிய) அநியாயக்காரர்கள் என்று பேசிக்கொண்டார்கள். பிறகு, அவர்கள் (அவமானத்துடன்) தங்கள் தலைகளைத் தொங்கப் போட்டுக்கொள்ளுமாறு செய்யப்பட்டார்கள். இவை பேசமாட்டா என்பதைத்தான் நீர் திண்ணமாக அறிவீரே! (என்று கூறினர்).

(அப்படியாயின்) அல்லாஹ்வையன்றி உங்களுக்கு எந்த நன்மையும் செய்யாத உங்களுக்குத் தீங்கும் அளிக்காதவற்றையா வணங்குகிறீர்கள்? என்று கேட்டார். சீச்சீ! உங்களுக்கும் நீங்கள் வழிபடுகின்ற அல்லாஹ் அல்லாதவற்றிற்கும் (கேடுதான்); நீங்கள் இதனை அறிந்து  கொள்ளமாட்டீர்களா? (என்று இப்ராஹீம் வினவினார்).  (இதற்கு) அவர்கள், நீங்கள் (இவரை ஏதாவது) செய்ய நாடினால் இவரை (நெருப்பிலிட்டு) எரியுங்கள். (இவ்வாறு செய்து) உங்கள் தெய்வங்களுக்கு உதவி செய்யுங்கள் என்று கூறினார்கள். (இப்ராஹீமைத் தீக்கிடங்கில் எறிந்தபோது) நெருப்பே! இப்ராஹீம் மீது நீ குளிர்ச்சியாகவும், சுகமளிக்கக் கூடியதாகவும் ஆகிவிடு என்று நாம் கூறினோம். மேலும், அவர்கள் அவருக்குச் சதிசெய்ய நாடினார்கள். ஆனால், நாம் அவர்களையே இழப்புக்குரியவர்களாக ஆக்கினோம்.  (21: 51- 70)


* இன்னும் நீர் இவர்களுக்கு இப்ராஹீமின் வரலாற்றையும் எடுத்துரைப்பீராக! அவர் தம் தந்தையையும், தம் சமூகத்தாரையும் நோக்கி, நீங்கள்  எதை வழிபடுகிறீர்கள்? என்று கேட்டபோது அவர்கள், நாங்கள் சிலைகளை வழிபடுகிறோம். நாம் அவற்றின் வழிபாட்டிலேயே நிலைத்திருக்கிறோம் என்று கூறினார்கள். (அதற்கு இப்ராஹீம்), நீங்கள் அவற்றை அழைக்கும்போது, (அவை காது கொடுத்துக்) கேட்கின்றனவா?;   அல்லது அவை உங்களுக்கு நன்மை செய்கின்றனவா?; அல்லது தீமை செய்கின்றனவா? என்று வினவினார். (அதற்கு அவர்கள்) இல்லை. நாங்கள், எங்கள் முன்னோர்கள் இவ்வாறே (வழிபாடு) செய்யக் கண்டோம் என்று கூறினார்கள்.


அவ்வாறாயின், நீங்கள் எவற்றை வழிபட்டுக் கொண்டிருந்தீர்கள்? என்பதை நீங்கள் பார்த்தீர்களா? என்று கேட்டார். நீங்களும், உங்கள் முன்னோர்களும் (எவற்றை வழிபட்டீர்கள் என்பதைக் கவனியுங்கள்!) நிச்சயமாக இவை எனக்கு விரோதிகளே; அகிலங்களின் இறைவனைத் தவிர (அவனே காப்பவன்). அவனே என்னைப் படைத்தான்; பின்னும், அவனே எனக்கு நல்வழி காண்பிக்கிறான்; அவனே எனக்கு உணவளிக்கின்றான்.
அவனே என்னைப் பருகச் செய்கின்றான்; நான் நோயுற்ற காலத்தில், அவனே என்னைக் குணப்படுத்துகிறான்; மேலும் அவனே என்னை மரணிக்கச் செய்கிறான்; பிறகு, அவனே என்னை உயிர்ப்பிப்பான்; (நியாயத்)தீர்ப்பு  நாளன்று எனக்காக என் குற்றங்களை மன்னிப்பவன் அவனே என்று நான் விரும்பு கின்றேன். இறைவா! நீ எனக்கு ஞானத்தை அளிப்பாயாக! மேலும், நல்லவர்களுடன் என்னைச்  சேர்த்துவைப்பாயாக! (26: 69-83)

* திண்ணமாக இப்ராஹீமும் அவருடைய வழியைப் பின்பற்றியவர்களுள் ஒருவரே ஆவார். அவர்  தூய நெஞ்சத்துடன் தம்முடைய இறைவனிடம் வந்தபோது,  அவர் தம் தந்தையையும் தம் சமூகத்தாரையும் நோக்கி, நீங்கள் எதனை வழிபடுகிறீர்கள்? எனக் கேட்டதையும், அல்லாஹ்வைத் தவிர பொய்யான தெய்வங்களையா நீங்கள் விரும்புகின்றீர்கள்? அவ்வாறாயின், அகிலங்களின் இறைவனைப் பற்றி உங்கள் எண்ணம்தான் என்ன? என்று கேட்டதையும் (நபியே!) நீர் எண்ணிப்பார்ப்பீராக! பின்னர், அவர் நட்சத்திரங்களை ஒரு பார்வை பார்த்தார். நிச்சயமாக நான் நோயாளியாக இருக்கிறேன் என்று கூறினார். எனவே, அவரை விட்டு அ(வருடைய சமூகத்த)வர்கள் திரும்பிச் சென்றனர். அதன்பின், அவர்களுடைய தெய்வங்களின்பால் அவர் சென்று, (உங்களுக்கு முன் படைக்கப்பட்டுள்ள உணவுகளை) நீங்கள் உண்ணமாட்டீர்களா? என்று கேட்டார். உங்களுக்கு என்ன (நேர்ந்தது)? நீங்கள் ஏன் பேசுவதில்லை? (என்றும் கேட்டார்). பின் அவர் அவற்றின் பக்கம் திரும்பி தம் வலக்கையால் அவற்றை அடித்து(உடைத்து)விட்டார்.

(அவற்றை வழிபடுபவர்கள்) அவரை நோக்கி விரைந்து வந்தார்கள். (அவர்களை நோக்கி) அவர்,  நீங்களே செதுக்கியவற்றையா வழிபடுகிறீர்கள்? உங்களையும் நீங்கள் செய்த (இ)வற் றையும், அல்லாஹ்வே படைத்திருக்கின்றான் என்று கூறினார். அதற்கு அவர்கள், இவருக்காக(ப் பெரியதொரு நெருப்புக்) கிடங்கை அமைத்து எரிநெருப்பில் அவரை எறிந்து விடுங்கள். (இவ்வாறாக) அவர்கள் அவருக்குச் சதிசெய்ய நாடினார்கள். ஆனால், நாம் அவர்களை இழிவானவர்களாக ஆக்கிவிட்டோம்.  (37: 83-98)



மூலம்: அல்பிதாயா வந்நிஹாயா (அரபி)
தமிழாக்கம்:நூ. அப்துல் ஹாதி பாகவி

கருத்துகள் இல்லை: