சனி, 24 ஜூலை, 2010

இப்ராஹீம் நபியின் வரலாறு (தொடர் 2)

திருக்குர்ஆனில் இப்ராஹீம் (அலை) வரலாறு

* நாம் இப்ராஹீமுக்கு முன்னரே (சிறு பிராயத்திலிருந்தே) அவருடைய நல்வழியைத் திண்ணமாகக் கொடுத்தோம். மேலும், அவரைப் பற்றி நாம் அறிந்திருந்தோம். (21: 51) அதாவது அவர் தம் சிறுபிராயத்திலேயே அதற்குத் தகுதியான வராக இருந்தார்.

* இன்னும் இப்ராஹீமையும் (தூதராக நாம் அனுப்பினோம்); அவர் தம் சமூகத்தாரிடம், அல்லாஹ்வை(மட்டும்) நீங்கள் வணங்குங்கள். அவனையே நீங்கள் அஞ்சுங்கள். நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால் இதுவே, உங்களுக்கு நன்மையுடையதாக இருக்கும் என்று கூறிய வேளையை (நபியே! எண்ணிப்பார்ப்பீராக!) அல்லாஹ்வைத் தவிர நீங்கள் வழிபடுவதெல்லாம் சிலைகளைத்தான்.

மேலும், நீங்கள் பொய்யாகப் படைத்துக்கொண்டீர்கள். நிச்சயமாக, அல்லாஹ்வைத் தவிர நீங்கள் வணங்கிவருபவை உங்களுக்கு உணவளிக்க சக்திபெறமாட்டா. ஆதலால், நீங்கள் அல்லாஹ்விடமே உணவைத் தேடுங்கள். அவனையே வணங்குங்கள். அவனுக்கே நன்றிசெலுத்துங்கள். அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.

இன்னும், நீங்கள் பொய்ப்பிக்க முற்பட்டால் (தளர்ந்துவிடப் போவதில்லை; ஏனெனில்) உங்களுக்கு முன்னிருந்த சமுதாயத்தவரும் (அவர்களுக்கு அனுப்பப்பட்ட தூதர்களை இவ்வாறே) பொய்ப்பிக்க முற்பட்டார்கள். ஆகவே, (இறைத்) தூதரின் கடமை (தம் தூதை) பகிரங்கமாக எடுத்துரைப்பதே ஆகும். அல்லாஹ் எவ்வாறு முதலில் படைப்பைத் துவங்கிப் பிறகு, அதனை (எவ்வாறு தன் பக்கம்) மீட்டுகின்றான் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு மிகவும் எளிதாகும்.

பூமியில் நீங்கள் பயணம் செய்து, அல்லாஹ் எவ்வாறு படைப்பைத் துவங்கிப் பின்னர், அவன் பிந்திய படைப்பை எவ்வாறு உண்டுபண்ணுகிறான் என்பதைப் பாருங்கள். நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்ற லுள்ளவன் என்று (நபியே) நீர் கூறுவீராக! தான் நாடியவரை அவன் வேதனை செய்கிறான். இன்னும், தான் நாடியவருக்கு அன்புகாட்டுகிறான். (இறுதியில்) அவனிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள். பூமியிலோ வானத்திலோ நீங்கள் (அவனை) இயலாமல் ஆக்குபவர்கள் அல்லர். மேலும், உங்களுக்கு அல்லாஹ்வையன்றி (வேறு) பாதுகாவலனோ, உதவியாளனோ இல்லை.


இன்னும் எவர்கள் அல்லாஹ்வின் வசனங்களையும் அவனைச் சந்திப்பதையும் நிராகரித்தார்களோ அவர்கள்தாம் என் அருளைவிட்டு நிராசையாகிவிட்டனர். மேலும், இ(த்தகை ய)வர்களுக்கு வதைக்கும் வேதனை உண்டு. இதற்கு அவருடைய சமூகத்தாரின் பதிலெல்லாம், அவரைக் கொன்றுவிடுங்கள். அல்லது நெருப்பிலிட்டுப் பொசுக்குங்கள் என்று கூறியதைத் தவிர வேறில்லை. ஆனால், அல்லாஹ் அவரை (அந்த) நெருப்பிலிருந்து காப்பாற்றினான். நிச்சயமாக இதில், நம்பிக்கைகொண்ட சமூகத்தாருக்குத் தக்க சான்றுகள் உள்ளன.

மேலும், அவர் சொன்னார்: அல்லாஹ்வையன்றி சிலைகளை(க் கடவுளாக) ஆக்கிக்கொண்டதெல்லாம், உலக வாழ்க்கையில் (அவர்கள் மீது) உங்கள் மத்தியிலுள்ள நேசத்தின் காரணத்தினால்தான். பின்னர், மறுமை நாளன்று உங்களுள் சிலர் சிலரை நிராகரிப்பார்கள். உங்களுள் சிலர் சிலரைச் சபித்துக்கொள்வார்கள். (இறுதியில்) உங்கள் ஒதுங்குமிடம் (நரக) நெருப்புதான். (அங்கு) உங்களுக்கு உதவியாளர் எவருமில்லை. (இதன் பின்னர்) லூத் (மட்டுமே) அவர் மீது நம்பிக்கை கொண்டார். (அவரிடம் இப்ராஹீம்), நிச்சயமாக நான் என் இறைவனை நாடி (இவ்வூரை விட்டுத்) துறந்து செல்கிறேன். நிச்சயமாக அவன் (யாவற்றையும்) மேலோங்கியவன்; ஞானமிக்கோன் என்று கூறினார். மேலும், அவருக்கு இஸ்ஹாக்கையும் யஅகூபையும் அளித்தோம். இன்னும் அவருடைய சந்ததியில், நபித்துவத்தையும் வேதத்தையும் ஏற்படுத்தினோம். அவருக்கு அவருடைய கூலியை இவ்வுலகத்திலும் கொடுத்தோம். மறுமையில் அவர் நல்லவர்களுள் ஒருவராவார். (29: 16-27)

இதன் பின்னர், இப்ராஹீம் நபியவர்கள் தம்முடைய தந்தையோடும் தம் சமுதாயத்தாரிடமும் செய்த தர்க்கத்தைப் பற்றி அல்லாஹ் கூறுகின்றான். அது பற்றிய விளக்கத்தை வரும் பக்கங்களில் காணலாம்.

சிலைகளை வழிபட்டுக்கொண்டிருந்த தம்முடைய தந்தையிடமிருந்துதான் அவர் தம்முடைய முதல் அழைப்பைத் தொடங்கினார். ஏனென்றால், தந்தைதான் அவருடைய உள்ளார்த்தமான உபதேசத்தைக் கேட்க மிகவும் தகுதியானவர். எனவேதான், அவர் தம்முடைய தந்தையிடமிருந்தே தம்முடைய அழைப்புப் பணியைத் தொடங்கினார். அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!) இவ்வேதத்தில் இப்ராஹீ மைப் பற்றியும் நினைவுகூர்வீராக! நிச்சயமாக அவர் மிக்க உண்மையாளராகவும் நபியாகவும் இருந்தார். என் அருமைத் தந்தையே! (யாதொன்றையும்) கேட்க இயலாத, பார்க்க இயலாத, உங்களுக்கு எந்தத் தேவையையும் பூர்த்தி செய்ய முடியாததை ஏன் நீங்கள் வழிபடுகின்றீர்கள்? என்று அவர் தம் தந்தையிடம் கூறியதை எண்ணிப்பார்ப்பீராக!

என்னருமைத் தந்தையே! மெய்யாக உங்களிடம் வந்திராத ஞானம் எனக்கு வந்திருக்கிறது. ஆகவே, நீங்கள் என்னைப் பின்பற்றுங்கள். நான் உங்களைச் செம்மையான நல்வழியில் நடத்துகிறேன். என் அருமைத் தந்தையே! நீங்கள் ஷைத்தானை வழிபடாதீர்கள். நிச்சயமாக ஷைத்தான், அளவற்ற அருளாளனுக்கு மாறுசெய்பவன். என் அருமைத் தந்தையே! அளவற்ற அருளாளனிடமிருந்துள்ள வேதனை உங்களைத் தீண்டிவிடுமென்றும், அப்போது நீங்கள் ஷைத்தானின் கூட்டாளியாகி விடுவீர் என்றும், நிச்சயமாக நான் அஞ்சுகிறேன் (என்று கூறினார்).

(அதற்கு அவர்) இப்ராஹீமே! நீர் என் தெய்வங்களைப் புறக்கணிக்கிறீரா? நீர் (இதை விட்டு) விலகிக் கொள்ளாவிட்டால் உம்மைக் கல்லாலெறிந்து கொல்வேன்; இனி, நீர் என்னைவிட்டு நெடுங்கா லத்திற்கு விலகிப் போய்விடுவீர் என்று கூறினார். (அதற்கு இப்ராஹீம்), உம்மீது சலாம் உண்டாவதாக! மேலும், விரைவில் நான் என் இறைவனிடம் உமக்காகப் பாவமன்னிப்புத் தேடுவேன். நிச்சயமாக அவன் என் மீது அன்புடையவனாக இருக்கிறான் என்று கூறினார். நான் உங்களைவிட்டும், அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குபவற்றை விட்டும் விலகிக் கொள்கிறேன். மேலும், நான் என் இறைவனிடம் பிரார்த்தனை செய்துகொண்டே இருப்பேன். என் இறைவனைப் பிரார்த்தனை செய்வதன் மூலமே நான் துர்பாக்கியவனாகாமல் இருக்கலாம் (என்று கூறினார்). (19: 41-48)

அவருக்கும் அவருடைய தந்தைக்கும் இடையே நடந்த உரையாடலையும் தர்க்கத்தையும், அவர் தம் தந்தையை எப்படி மிக நளினமாகவும் மென்மையாகவும் உண்மை மார்க்கத்தை நோக்கி அழைத்தார் என்பதையும் அல்லாஹ் மிகத் தெளிவான முறையில் கூறியுள்ளான். அவர் தம் தந்தையிடம், சிலை வழிபாட்டின் தீங்கையும், அந்தச் சிலைகளை வணங்குபவர் கேட்கின்ற எந்தப் பிரார்த்தனை யையும் அவை செவியேற்பதில்லை என்பதையும் அவர் நிற்கின்ற இடத்தைக்கூட பார்ப்பதில்லை என்பதையும் மிகத் தெளிவாக விளக்கினார். அவை என்ன பயனளிக்கும்? அல்லது அவை உணவு கொடுப்பது, உதவி செய்வது போன்ற என்ன நலவைத் தான் செய்யும்? என்றெல்லாம் கேட்டார். பின்னர், அவர் தம் தந்தையைவிடச் சிறியவராக இருந்த போதிலும், அல்லாஹ் தமக்கு வழங்கியுள்ள நல்வழி மற்றும் பயனுள்ள கல்வியின்படி அவர் தம்முடைய தந்தையை எச்சரித்தார்.


மேலும் அவர் கூறினார்: என்னருமைத் தந்தையே! மெய்யாக உங்களிடம் வந்திராத ஞானம் நிச்சயமாக எனக்கு வந்திருக்கிறது. ஆகவே, நீங்கள் என்னைப் பின்பற்றுங்கள். நான் உங்களைச் செம்மையான நல்வழியில் நடத்துகிறேன். (19: 43) அதாவது செவ்வையான, தெளிவான, எளிதான வழி; அது உம்மை ஈருலகிலும் நன்மையில்பால் சேர்க்கும் என்றுரைத்தார்.

அவர் தம் தந்தைக்கு எல்லா விசயங்களையும் மிகத் தெளிவாகக் கூறிய பின்னரும், நேரிய வழியையும் தெளிவான உபதேசத்தையும் முன்வைத்த பின்னரும், அவர் அவற்றை ஏற்கவுமில்லை; அவர் அதை எடுத்துக்கொள்ளவுமில்லை. மாறாக, அவர் தம் மகனை எச்சரித்தார்.
இப்ராஹீமே! நீர் என் தெய்வங்களைப் புறக்கணிக்கிறீரா? நீர் (இதை விட்டு) விலகிக் கொள்ளாவிட்டால் உம்மைக் கல்லா லெறிந்து கொல்வேன். (19: 46) கல்லால் அடிப்பேன் என்று வார்த்தையால் மட்டும் சொன்னார் என்று கூறப்பட்டுள்ளது. உண்மையில் அவர் கல்லால் அடித்தார் என்றும் கூறப்பட்டுள்ளது. இனி, நீர் என்னைவிட்டு நெடுங்காலத்திற்கு விலகிப் போய்விடுவீர் என்று கூறினார். (19: 46)

அந்நேரத்தில்தான் இப்ராஹீம் நபியவர்கள் தம் தந்தையிடம் கூறினார்: உம் மீது சலாம் உண்டாவதாக! (19: 47) அதாவது இனி என் மூலம் உமக்கு எந்தத் தொல்லையும் ஏற்படாது; நீர் வெறுக்கத்தக்க எந்தச் செயலும் ஏற்படாது. மாறாக, நீர் என்னிலிருந்து நீங்கிக்கொண்டுவிட்டீர் என்று சொன்னதோடு மட்டுமின்றி, அவர் தம் தந்தைக்காக அல்லாஹ்விடம் நன்மையை நாடி, பாவமன்னிப்பும் கேட்க முயன்றார். மேலும், விரைவில் நான் என் இறைவனிடம் உமக்காகப் பிழை பொறுக்கத் தேடுவேன். நிச்சயமாக அவன் என் மீது அன்புடையவனாக இருக்கிறான் என்று கூறினார். (19: 47) அதாவது, அவன் மென்மையானவன். அவனை மட்டும் வணங்குவதற்கு எனக்கு அவன் வழிகாட்டினான். (எனவே அவன் என் மீது மிக்க அன்புடையவன்) என்று இப்னு அப்பா (ரளி) கூறியுள்ளார்கள். இதனால்தான் இப்ராஹீம் கூறினார்: நான் உங்களைவிட்டும், அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குபவற்றை விட்டும் விலகிக் கொள்கிறேன். மேலும், நான் என் இறைவனிடம் பிரார்த்தனை செய்துகொண்டே இருப்பேன். என் இறைவனைப் பிரார்த்தனை செய்வதன் மூலமே நான் துர்பாக்கியவனாகாமல் இருக்கலாம் (என்று கூறினார்). (19: 48)


அவர் தம் தந்தைக்காகப் பிரார்த்தனை செய்வேன் என்று வாக்களித்தபடி, அவருக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேட்டார். அவர் அல்லாஹ்வுடைய விரோதி என்று தெரிந்த வுடன் அதிலிருந்து இப்ராஹீம் (அலை) விலகிக்கொண்டார். அல்லாஹ் கூறுகின்றான்: இப்ராஹீம் (நபி) தம் தந்தைக்காக மன்னிப்புக் கோரியது ஒரு வாக்குறுதிக்காகவே ஆகும். அதனை அவருக்கு அவர் வாக்களித்திருந்தார். நிச்சயமாக அவர் (தந்தை) அல்லாஹ்வின் விரோதி என்பது அவருக்குத் தெளிவாகியதும், அதிலிருந்து அவர் விலகிக்கொண்டார். நிச்சயமாக இப்ராஹீம் இளகிய மனமுடையவராகவும் சகிப்புத்தன்மை உடையவராகவும் இருந்தார்.(9: 114)

இப்ராஹீம் தம்முடைய தந்தை ஆஸரை மறுமையில் சந்திப்பார். ஆஸருடைய முகத்தில் (புகையின்) கருமையும் புழுதியும் படிந்திருக்கும். அப்போது இப்ராஹீம் அவரைப் பார்த்து, எனக்கு நீர் மாறுசெய்யாதீர் என்று நான் உம்மிடம் கூறவில்லையா? என்று கேட்பார். அவருடைய தந்தை, இன்றைய நாள், நான் உமக்கு மாறுசெய்யமாட்டேன் என்று கூறுவார். அப்போது இப்ராஹீம் (அலை), இறைவா! மக்களுக்கு உயிர்கொடுத்து எழுப்பப்படும் மறுமை நாளில் என்னை நீ இழிவுபடுத்தமாட்டாய் என்று வாக்குறுதி அளித்திருந்தாய்; இப்போது என்னுடைய தந்தை (உன் கருணையிலிருந்து) வெகு தூரமாகி (நரகத்தில் நுழைந்து)விட்டார்; எனக்கு அதைவிடப் பேரிழிவு என்ன இருக்க முடியும்? என்று வினவுவார்.

நான் இறைமறுப்பாளர்கள்மீது சொர்க்கத்தைத் தடைசெய்து விட்டேன் என்று அல்லாஹ் பதிலளிப்பான். பிறகு, இப்ராஹீமே! உம்முடைய இரண்டு கால்களுக்குக் கீழே என்ன? என்று அல்லாஹ் கேட்பான். உடனே இப்ராஹீம் கீழே பார்ப்பார். அப்போது, அங்கே இரத்தத்தில் தோய்ந்த முடிகள் நிறைந்த கழுதைப்புலி ஒன்று கிடக்கும். பின்னர், அதன் கால்களைப் பிடித்துத் தூக்கப்பட்டு நரகத்தில் எறியப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரளி) அறிவித்துள்ளார்கள். (நூல்: புகாரீ)

இப்ராஹீம் தம் தந்தை ஆஸரிடம், சிலைகளையா நீர் தெய்வங்களாக ஆக்கிக்கொண்டீர்? நீரும் உம்முடைய சமுதாயத் தாரும் தெளிவான வழிகேட்டில் இருப்பதையே நான் காண்கிறேன் என்று கூறியதை (எண்ணிப்பாருங்கள்). (6: 74) இப்ராஹீம் நபியின் தந்தை பெயர் ஆஸர் என்று இவ்வசனம் தெரிவிக்கிறது. இப்னு அப்பா (ரளி) போன்ற வமிசம் பற்றிக் கூறுபவர்களுள் பலர், அவருடைய தந்தை பெயர், `தாரிஹ் என்று தெரிவிக்கின்றனர். வேதக்காரர்கள் `தாரிஃக் என்று தெரிவிக்கின்றனர். அவர் சிலையின் பெயரால் புனைப்பெயரிட்டு அழைக்கப் பட்டார். அவர் வழிபட்டுக் கொண்டிருந்த சிலையின் பெயரே `ஆஸர் ஆகும் என்று கூறப்பட்டுள்ளது. சரியானது என்னவென்றால், அவருடைய பெயர் ஆஸர். அவருக்கு இரண்டு இயற்பெயர் இருந்திருக்கலாம். அல்லது அவ்விரண்டில் ஒன்று புனைப்பெயராகவும் மற்றொன்று இயற்பெயராகவும் இருந்திருக்கலாம் என்று இப்னு ஜரீர் (ரஹ்) கூறியுள்ளார். இவர் கூறிய கருத்து உறுதியானது இல்லை. அல்லாஹ்வே நன்கறிபவன்.

மூலம்: அல்பிதாயா வந்நிஹாயா (அரபி)
தமிழாக்கம்:நூ. அப்துல் ஹாதி பாகவி

கருத்துகள் இல்லை: