திங்கள், 23 மார்ச், 2026

ஒழுக்கம் கைவிடேல்!

 

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி. 


‘நல்ல நெறிகளைப் பின்பற்றி நடப்பதே ஒழுக்கம்’ என்று ஒழுக்கத்திற்கு வரையறை செய்யப்படுகிறது.  ஒழுக்கம் குறித்து எல்லாச் சமயங்களும் வேத நூல்களும் தமிழ் இலக்கிய நூல்களும் கூறியுள்ளன. நம் முன்னோர்கள்  ஒழுக்கத்தோடும் சுய கட்டுப்பாட்டோடும் வாழ்ந்து வந்தார்கள். தற்காலத்தில் நம்மைச் சுற்றி, ஒழுக்கத்திற்கு அப்பாற்பட்ட செயல்களே அதிகம் அரங்கேறுகின்றன. ஒழுக்கம் தவறியோர் நம்மைச் சுற்றிப் பலர் வாழ்கின்றார்கள். இதனைக் காணும்போது, ‘நாமும் அப்படி வாழ்ந்தால் என்ன தவறு’ என்ற மனநிலை நம்முள் சிலருக்கு ஏற்படலாம். இத்தகைய தடுமாற்ற நிலை ஏற்படும்போதுதான், ‘நான் ஒருபோதும் ஒழுக்கம் தவற மாட்டேன்’ என்று நாம் உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும்.



ஒழுக்கம் பேணுவதன் முதற்படி, நாணம் பேணுவதுதான். அந்த நாணம் தற்போது கொஞ்சம் கொஞ்சமாகக் காணாமல் போய்க்கொண்டிருக்கிறது. நாணமில்லாப் பெண்களும் ஆண்களும் பெருகி வருகிறார்கள். ‘ஒழுக்கம்’ என்றதும் எல்லோருக்கும் முதலில் நினைவுக்கு வருவது, ஆடையொழுக்கம்தான். அதில் ஆண்களும் பெண்களும் நாணம் துறந்த ஆடைகளையே அணிகின்றார்கள். அதையெல்லாம் சுட்டிக்காட்டினாலும் அவர்கள் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. மாறாக அத்தகைய அறிவுரை கூறுவோரைப் பரிதாபமாகவும் பரிகாசமாகவும் பார்க்கின்றார்கள். இதுவே இன்றைய பெரும்பாலான இளைஞர்கள்-இளைஞிகளின் நிலையாகும்.



அணிகின்ற ஆடையிலேயே ஒழுக்கம் தவறுகின்றபோது, பிறகு அதைத் தாண்டியுள்ள பல்வேறு ஒழுக்கங்களை எவ்வாறு அவர்கள் பின்பற்றுவார்கள்? பெரியோரை மதித்தல், சிறியோரிடம் அன்பு காட்டுதல், பெற்றோரின் பேச்சைக் கேட்டல், ஆசிரியருக்கு மரியாதை செலுத்துதல், குப்பைகளைத் தெருவில் வீசாமல் குப்பைத் தொட்டியில் அல்லது அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் போடுதல், போக்குவரத்து விதிகளை மதித்தல், நியாய விலைக் கடையில் வரிசை முறையைப் பேணுதல் முதலான பல்வேறு ஒழுக்கங்கள் உள்ளன.


 

உயர் பதவியில் உள்ள ஒருவர், தம் அலுவலகப் பணிகளை முடித்துவிட்டு வீடு திரும்பும் வழியில்  அரசு மதுக்கடையில் மது அருந்திவிட்டு, போதை தலைக்கேறியபின் வீதியில் புரண்டால் அவரது மதிப்பு என்னாகும்? ஒருவர் தாம் பணியாற்றுகிற அரசு அலுவலகத்தில் கையூட்டு பெற்றதற்காகப் பலர் முன்னிலையில் காவல்துறையால் கைது செய்யப்பட்டால் அவரது மதிப்பு என்னாகும்? வாங்கிய கடனை உரிய காலத்தில் திரும்பச் செலுத்தாததால் கடன்கொடுத்தவர் அவர் வீட்டின்முன் பலர் முன்னிலையில் கூச்சலிட்டுச் சண்டையிட்டால் அவரது மதிப்பு என்னாகும்? வீட்டு வாடகையை உரிய முறையில் கொடுக்காததால் வீட்டின் உரிமையாளர் அங்கு வந்து தகாத வார்த்தைகளைக் கூறினால் அவரது மதிப்பு என்னாகும்?  



மது அருந்துதல் ஓர் ஒழுக்கக்கேடான செயல் ஆகும். அதனால் உயர்பதவியில்ய உள்ளவன்கூடத் தன் மதிப்பை இழக்கின்றான். புகைபிடித்தல், பான்பராக் போன்ற  போதைப் பாக்குகளை மெல்லுதல் இவையெல்லாம் ஒழுங்கீனமாகும். இப்பழக்கம் உள்ளவரின் வாயிலிருந்து எப்போதும் துர்வாடை வீசும். அத்தகையவரிடம் பிறர் அண்மி வந்து பேசச் சங்கடப்படுவார்கள். மேலும் ஒருவர் தம் பேராசையால் குறுக்கு வழியில் சம்பாதிக்க ஆசைப்பட்டு, கையூட்டு வாங்குவது ஒரு வகையான ஒழுங்கீனமாகும். கடன் வாங்கினால் உரிய முறையில் திரும்பச் செலுத்துவதுதான் ஒழுக்கமுடையோர் செய்யும் செயலாகும். உரிய முறையில் செலுத்தாமல் இழுத்தடிப்பதோ, ஏமாற்ற நினைப்பதோ ஒழுங்கீனமாகும். வீட்டு வாடகையைக் குறிப்பிட்ட தேதியில் கொடுத்துவிடுவதுதான் ஒழுக்கமுடையோரின் பண்பாகும்.


     

ஒழுக்கம் என்பது சுயகட்டுப்பாடு ஆகும். ஒவ்வொருவரும் தமக்கெனச் சில கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்தே ஆக வேண்டும். பொய் பேசாமை, வாக்குறுதி மீறாமை, கையூட்டு பெறாமை உள்ளிட்டவை அதில் அடங்கும். சுய ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகிறது. இதைப் பார்க்கின்ற இளவயதினர் தாமும் இப்படி நடந்துகொண்டால்  என்ன என்ற சிந்தனைக்கு வந்துவிடக் கூடாது. மாறாக ‘மக்கள் பலர் வரம்பு மீறினாலும் நான் என்றென்றும் ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பவனாகவே இருப்பேன்’ என்று உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்.



ஒழுக்கம்தான் ஒருவரை உயர்த்தும்; உயர் பதவிகளைக் கொடுக்கும்; மக்களிடம் மரியாதையைப் பெற்றுத் தரும்; நண்பர்கள், உறவினர்கள், சமூக மக்கள் ஆகியோரின் நம்பிக்கையைப் பெற்றுத்தரும்.  நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒழுக்கமுடையவர்களாக இருந்ததால்தான் அவர்களை ‘அல்அமீன் - நம்பிக்கைக்குரியவர்’ என்று மக்கள் அழைத்தனர். அவர்களை நம்பி பலர் தம் பணத்தைக்  கொடுத்து வைத்தனர். அவற்றையெல்லாம் திருப்பிக் கொடுத்துவிட்டுத்தான் நபியவர்கள் மக்காவிலிருந்து மதீனா சென்றார்கள். ஆக நம்முடைய ஒழுக்கத்தால்தான் மக்களுக்கு நம்மீதான நம்பகத்தன்மை உண்டாகிறது என்பதை மறந்துவிடக் கூடாது. 



ஒழுக்கமில்லா வாழ்க்கை பற்பல தீமைகளைக் கொண்டுவரும். நம்பிக்கை இழப்பு, அவமதிப்பு, சமூகப் புறக்கணிப்பு முதலானவை ஏற்படும். யாரும் அத்தகையவரை மதிக்க மாட்டார்கள்; அவரிடம்  ஆலோசனை கேட்க மாட்டார்கள்; யாரும் உதவி கேட்க மாட்டார்கள்; கனிவோடு பேச மாட்டார்கள்; சமூகத்தில் புறக்கணிக்கப்பட்டவராகவே வாழ்வார். ஒழுக்கம் தவறினால் எல்லாம் தவறும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 


நமக்குள் ஒழுக்கத்தை வளர்த்துக்கொள்ள நல்ல சூழலில் இருப்பது அவசியம். நல்ல நண்பர்களோடு சேர்தல், நல்ல நல்ல நூல்களை வாசித்தல், மூத்தோரின் அறிவுரையைக் கேட்குதல், நேரத்தை மதித்து அதற்கான அட்டவணையைப் பின்பற்றுதல், சுய கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்தல், எதிலும் பொறுப்புணர்வோடு இருத்தல் முதலானவை  ஒழுக்கத்தை மேன்மேலும் வளர்க்கும்.



இஸ்லாமிய மார்க்கம் ஒழுக்கத்தையே முதன்மையாகப் போதிக்கிறது. ஆசிரியரை மதித்தல், மூத்தோரை மதித்தல், வெட்கம் பேணுதல், பார்வையைப் பேணுதல் உள்ளிட்ட ஏராளமான ஒழுக்கங்களைப் போதிக்கிறது. ஒழுக்கத்தின் உறைவிடமாகத் திகழ்ந்த அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை, “நிச்சயமாக நீர் உயர்ந்த ஒழுக்கத்தில் உள்ளீர்” (68: 4) என்று அல்லாஹ் கூறுகின்றான். இதனால்தான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கையே ஒழுக்கமான வாழ்க்கைக்கு முன்னோடியாக உள்ளது. அதையே முஸ்லிம்கள் பின்பற்றி வருகின்றார்கள்.


  

ஒழுக்கத்தைப் பேணும் மனிதர் சமூகத்தில் நல்ல குடிமகனாக, நீதியை நிலைநாட்டுபவராக, மனித உள்ளங்களைச் சீர்திருத்துபவராக, அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றவராக, அநாதைகளுக்கும் ஏழைகளுக்கும் உதவி செய்பவராக, எல்லோரையும் மதிப்பவராகத் திகழ்வார். “நல்லொழுக்கத்தை நிறைவு செய்யவே நான் அனுப்பப்பட்டேன்” என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். ஆகவே ஒருவர் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களின் நல்வழியைப் பின்பற்றி நடந்தால் அவர் மிகுந்த ஒழுக்கமுடையவராக மாறிவிடுவார். 



உண்மை பேசுதல், பொறுமையை மேற்கொள்ளுதல், பணிவாக இருத்தல், பிறர்மீது இரக்கம் காட்டுதல், பிறரின் குற்றங்குறைகளை மறைத்தல், பிறரின் தொல்லைகளைச் சகித்துக்கொள்ளுதல் உள்ளிட்ட அனைத்தும் ஒழுக்க வாழ்க்கையை மேற்கொள்வோர் கடைப்பிடிக்கும் நற்குணங்கள் ஆகும்.  ஆக ஒழுக்கமான வாழ்க்கை பல்வேறு நற்பண்புகளை நம்முள் தோற்றுவிக்கிறது. 




கொடுத்த வாக்கை நிறைவேற்றல், சொன்ன நேரத்திற்குச் சென்றடைதல், நம் செல்பேசியில் பிறரின் அழைப்பைத் தவறவிட்டிருந்தால் அவரை அழைத்துப் பேசுதல், வாட்ஸ் அப்பில் செய்தி அனுப்பியிருந்தால் அதற்குப் பதிலுரைத்தல், விளக்கம் கேட்டிருந்தால் விளக்கமளித்தல், தெரியாதவற்றைத் ‘தெரியாது’ என்று சொல்லல், விருந்துக்கு அழைத்திருந்தால் அதில் கலந்துகொள்ளுதல் இவை அனைத்தும் ஒழுக்கம் சார்ந்தவையே ஆகும். 



ஆக இன்றைய நவீன உலகில் பலர் ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பதில்லை. அத்தகையோரைப் பார்க்கின்ற நமக்கு, ‘நாமும் அவர்களைப் போல் ஆகிவிடலாமா’ என்ற சிந்தனை வராமல் நம்மைக் கட்டுப்படுத்திக்கொள்வதே நம்மை மேன்மேலும் உயர்த்தும். வெட்க உணர்வின்றி ஆடவரும் பெண்டிரும் வாழும் இக்காலத்தில் நாம் ஒழுக்கத்தைப் பேணி வாழ்வது அல்லாஹ்வின் அன்பைப் பெறவும் அவனுடைய தூதரின் அன்பைப் பெறுவதற்காகவும்தான் என்பதை நினைவில் கொண்டு, ‘ஒருபோதும் ஒழுக்கம் கைவிடேன்’  என்று உறுதிமொழியேற்று வாழ்வோம்.

====================================







கருத்துகள் இல்லை: