திங்கள், 23 மார்ச், 2026

நீதியின் பக்கம் நிற்போம்!

  


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

 

மனித வாழ்வு சீராகவும் செம்மையாகவும் நீடிக்கவே உயர்ந்தோன் அல்லாஹ் விதிமுறைகளையும் சட்டங்களையும்  அமைத்தான். அச்சட்டங்களையும் விதிமுறைகளையும் பேணி நடக்கின்ற வரை யாருக்கும் எத்தீங்கும் ஏற்படாது.  மனித வாழ்க்கை சீராகவும் ஒழுக்கமாகவும் சென்றுகொண்டிருக்கும். அச்சட்டங்களை மனிதர்கள் மீறும்போது பிறருக்குத் தீங்கும் துன்பமும் ஏற்படும். எனவே நாம் விதிமுறைகளைப் பேணி வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்.

 

 

சான்றாக, போக்குவரத்து விதிகளை நாம் சற்று உற்று நோக்கலாம். சிவப்பு விளக்கு ஒளிர்ந்தால் வாகனத்தை நிறுத்த வேண்டும்; பச்சை விளக்கு ஒளிர்ந்தால் வாகனத்தைச் செலுத்த வேண்டும். இது சாதாரண விதிதான். இதைப் பின்பற்றி நாம் வாகனத்தை இயக்கினால் நமக்கோ பிறருக்கோ எந்த விபத்துமின்றி நாம் பயணிக்கலாம்.  அந்த விதிகளை நாம் மீறும்போது நமக்கும் பிறருக்கும் விபத்து ஏற்படலாம். அல்லது நம்மைப் பார்த்துப் பிறரும் அந்த விதிகளை மதிக்காமல் வாகனத்தை இயக்க முற்படலாம். பின்னர் சிறிது நேரத்தில் எதிரெதிர்த் திசையில் செல்ல வேண்டியோர் தம் வாகனத்தை இயக்க முற்படுவார்கள்; அதனால் அங்குப் போக்குவரத்துச் சீர்குலைவு ஏற்படும். அதைச் சரிசெய்ய நீண்ட நேரம் ஆகும். ஆக விதிகளைப் பின்பற்றாததால் எத்தனைப் பேருக்குப் பாதிப்பு ஏற்படுகிறது என்பதைப் பாருங்கள்.

 

 

இதைப் போலவே ஒவ்வொன்றிலும் விதிகள், சட்டங்கள் உள்ளன. மனித வாழ்க்கைக்கு ஏராளமான சட்டங்கள் உள்ளன. மனிதனைப் படைத்த அல்லாஹ், அவனுடைய சீரான வாழ்க்கைக்குச் சில சட்டவிதிகளை வகுத்துள்ளான். எல்லோரும் நேர்மையாக, நீதியாக நடந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகின்றான். அநியாயம் செய்வோரைக் கண்டிக்கின்றான்; எச்சரிக்கிறான். நீதியாக நடந்துகொள்வோரை அல்லாஹ் நேசிப்பதாகத் திருக்குர்ஆனில் கூறுகின்றான்: “நிச்சயமாக அல்லாஹ் நீதியாளர்களை நேசிக்கின்றான்.”  (49: 9)

 

 

நம்முடைய ஒவ்வொரு செயலிலும் நீதியையும் நேர்மையையும் பின்பற்றி வாழும்போது அந்த வாழ்க்கை மனதுக்கு இதமாகவும் மகிழ்வாகவும் இருக்கும். அதேநேரத்தில் நாம் நம்முடைய செயல்பாடுகளில் நீதியைப் பின்பற்றாமல்  அநீதியாகச் செயல்படுகிறபோது, அது நம் மனதை வாட்டும். நம் மகிழ்ச்சியைச் சிதைக்கும். பிறரின் துன்பத்திற்கும் காரணமாகும். எனவே நாம் எப்போதும் நீதியின் பக்கமே நிற்க வேண்டும். அதுவே நமக்கும் பிறருக்கும் நன்மை பயக்கும். அத்தகையோருக்குத்தான் அல்லாஹ் உயர்வைக் கொடுக்கின்றான்.

 

 

எப்போது மனிதன் சட்டத்தை மீறி, நீதி பிறழ்கிறான்? ஒன்றை அவசரமாகப் பெறத் துடிக்கும்போதும், பிறரின் அன்பைப் பெற வேண்டும் என்று எண்ணும்போதும், தன்னுடைய பலத்தைக் காட்ட வேண்டும் என்று நினைக்கும்போதும், தன்னுடைய உறவினருக்குச் சாதகமாக அமைய வேண்டும் என்று கருதும்போதும், பணத்தைச் சம்பாதிக்க நினைக்கும்போதும், பிறர்மீது பகை இருக்கும்போதும் ஒருவன் எல்லை மீறுகின்றான்; வரம்பை உடைக்க முனைகிறான்; நீதியோடு செயல்பட மறுக்கிறான்; அநியாயமாக அதைப் பெறத் துடிக்கிறான்.

 

 

அதனால்தான் அல்லாஹ் கூறுகின்றான்: இறைநம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்காக நீதியாக (உண்மை) சாட்சி சொல்பவர்களாகவே இருங்கள். ஒரு வகுப்பார் மீது (உங்களுக்கு)ள்ள பகைமை அவர்களுக்கு அநியாயம் செய்யும்படி உங்களைத் தூண்டா திருக்கட்டும். (எவ்வளவுதான் பகைமை இருந்த போதிலும்) நீங்கள் நீதியே செலுத்துங்கள். அதுதான் இறையச்சத்திற்கு மிக நெருக்கமானது. (5: 8)

 

 

மற்றொரு வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான்: இறைநம்பிக்கை கொண்டோரே! நீங்கள் நீதியின் மீதே உறுதியாக நிலைத்து இருங்கள். (நீங்கள் சாட்சி கூறினால் அது) உங்களுக்கோ, உங்கள் தாய், தந்தைக்கோ உங்கள் உறவினர்களுக்கோ பாதகமாக இருந்தபோதிலும் அல்லாஹ்வுக்காக (உண்மையையே) சாட்சி கூறுபவர்களாக இருங்கள். (நீங்கள் யாருக்காகச் சாட்சி கூறுகிறீர்களோ) அவர் பணக்காரராயினும் ஏழையாயினும் (உண்மையையே கூறுங்கள். ஏனென்றால்) அல்லாஹ் அவ்விருவருக்குமே (உதவி செய்ய) மிகத் தகுதியானவன். ஆகவே, நீங்கள் (உங்கள்) மனவிருப்பங்களைப் பின்பற்றி வரம்பு மீறாதீர்கள்! (4: 135)

 

 

நண்பர், உறவினர், எதிரி என்ற எந்தப் பாகுபாடுமின்றி நீதி செலுத்த வேண்டும். அனைவரையும் ஒரே பார்வையில்  பார்க்க வேண்டும். அந்த அடிப்படையில்தான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் செயல்பட்டார்கள். அதனால்தான் மக்ஸூமி குலத்தைச் சார்ந்த உயர்குடிப் பெண் ஃபாத்திமா திருடி விட்டாள்.  அவளுடைய கையை வெட்ட அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  ஆணையிட்டுவிட்டார்கள். அதை எப்படியாவது தடுத்த நிறுத்த வேண்டும் என அக்குலத்தைச் சார்ந்தோர் தீர்மானித்தார்கள். அதற்காக நபியவர்களிடம் பரிந்துபேச ஒருவரைத் தேடினார்கள். அவர்களிடம் இது குறித்துப் பேச யார் தகுதியானவர் என்று ஆலோசனை செய்தார்கள். உஸாமா பின் ஸைத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களே தகுதியானவர் என்று முடிவெடுத்து அவரை நபியவர்களிடம் அனுப்பினார்கள். அவர் நபியவர்களிடம்  அது குறித்துப் பேசியபோது, “அல்லாஹ்வின் தண்டனைகளுள் ஒரு தண்டனையின் விஷயத்திலா (அதைத் தளர்த்தும்படி என்னிடம்) நீ பரிந்துரை செய்கிறாய்’’ என்று நபியவர்கள் சினம் கொண்டு கூறினார்கள்.

 

 

உங்களுக்கு முன் இருந்த சமூகங்கள் அழிந்ததற்குக் காரணம் என்ன தெரியுமா? உயர்குலத்தவர் திருடினால் விட்டுவிடுவார்கள், பலவீனர்கள் திருடினால் தண்டிப்பார்கள்.” பிறகு “முஹம்மதின் மகள் ஃபாத்திமாவே திருடினாலும் நான் அவளது கையைத் துண்டிப்பேன்” என்று சொன்னார்கள். (புகாரீ: 3475) இதன்மூலம் “சட்டத்தின்முன் அனைவரும் சமம்; இதுதான் நீதி” என்பதை  நபியவர்கள் விளக்கியுள்ளார்கள்.

 

 

இதுதான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நிலைப்பாடு. இத்தகைய நீதியைத்தான் அவர்கள் போதித்தார்கள். அதன்படியே செயல்பட்டார்கள். அதை இந்தச் சமுதாய மக்கள் பின்பற்றினால் வெற்றிபெறுவார்கள் என்பது திண்ணம். மாறாக பெரிய இடம், வேண்டியவர், செல்வர், குலப்பெருமை மிக்கவர், நம்ம ஊர்க்காரர் முதலான காரணங்களை முன்வைத்து, விதிகள் மீறப்படும்போது சமநீதி இறந்துபோய்விடுகிறது. அதனால் பலவீனர்கள் பாதிக்கப்படுவார்கள்; ஏழைகளுக்கு நீதி எட்டாக் கனியாகிவிடும். பதவி, பணம் இவற்றைக் காட்டி ஆசையூட்டி நீதியை வளைப்போர் உள்ளனர்.

 

 

அவற்றிற்கு மயங்காதோரை பயம் காட்டி மிரட்டி நீதியை வளைக்கப்பார்ப்பார்கள். இதுதான் தொன்று தொட்டு வம்பர்கள் கடைப்பிடிக்கும் உத்தி. ஆனால் இவற்றிற்கெல்லாம் மயங்காதோரும் இருக்கத்தான் செய்கின்றார்கள். அவர்கள்தாம் நீதியாளர்கள். அவர்கள் ஈருலகிலும் வெற்றிபெற்றவர்கள்.

 

 

 

தற்காலத்தில் எத்தனையோ நீதிபதிகளைப் பார்க்கிறோம். அவர்களுள் பெரும்பாலோர் பணத்திற்கும் பதவிக்கும் ஆசைப்பட்டு, நீதிக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கிவிட்டுத் தம் ஓய்வுக்குப் பின் உயர்பதவிகளை அடைந்துகொள்வதைப் பார்க்கின்றோம். வேறு சிலர் பணத்தைப் பெற்றுக்கொண்டு, நீதியைப் புறக்கணித்து, அநியாயத் தீர்ப்பு வழங்கிக்கொண்டிருக்கின்றார்கள். வேறு சிலர் அரசியல்வாதிகளின் மிரட்டலுக்குப் பணிந்து தீர்ப்பை மாற்றிக் கூறுகின்றார்கள். அதேநேரத்தில் பணம், பதவி, பயம் எதற்கும் இசைந்துவிடாமல் நீதியை மட்டுமே  நிலைநாட்டுவோரும் உள்ளனர். அந்த வரிசையில் உள்ளவர்தாம், முன்னாள் முதல்வர் ஷெயலலிதாவுக்கு, அவரது குற்றத்திற்கான தண்டனையை உறுதிசெய்து தீர்ப்பளித்த நீதிபதி குன்ஹா ஆவார். இவர்போன்ற துணிச்சலான நீதிபதிகள் நாடெங்கும், உலகெங்கும் இருந்தால் குற்றம் செய்வோர் அஞ்சுவர். அது மட்டுமின்றி, மக்கள் யாவரும் மகிழ்ச்சியோடு வாழ்வர்.

 

 

விதிகளைப் பின்பற்றி நீதியோடு நடக்கின்ற நம்மைச் சிலருக்குப் பிடிக்காமல் போகலாம்; சிலர் நம்மை வசைபாடலாம்; சிலர் நம்மை வெறுக்கலாம். ஆனால் அதுதான் நமக்கு மனஅமைதியையும் நிம்மதியையும் தரும். நீதியை வழுவாது கடைப்பிடிக்கின்ற நம்மால் பலர் பயனடைவார்கள்; தூரத்திலிருந்து நம்மை வாழ்த்திக்கொண்டிருப்பார்கள்; வேறு சிலர் நமக்காகப் பிரார்த்தனை செய்துகொண்டிருப்பார்கள்; சிலர் நம்மைப் பற்றிப் பிறரிடம் நல்லவிதமாகப் பேசிக்கொண்டிருப்பார்கள். இத்தகைய வாழ்த்துகளும் பிரார்த்தனைகளும்தான் இம்மையிலும் மறுமையிலும் நமக்குப் பயன்தரும்.

 

 

நாம் நீதியைக் கடைப்பிடிக்கும்போது எதிரிகளும் நம்மை மதிக்கத் தொடங்கிவிடுவார்கள். அவர்களுக்குள் ஏதேனும் பிரச்சனை என்றால், நம்மை நாடி வருவார்கள். அத்தகைய நிலையைத்தான் நபியவர்களின் வாழ்வில் காண்கின்றோம். நபியவர்களின் நீதி குறித்து எதிரிகளும் நன்கு அறிவர். அதனால்தான் அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனைகளுக்குத் தீர்வு காண அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்தார்கள். அதற்கான சான்றுகள் ஏராளம் உள்ளன. படிப்பினைக்காக ஒரு நிகழ்வைக் காணலாம்.

 

 

அது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மதீனாவில் ஆட்சித் தலைவராக இருந்த காலத்தில் நடந்த நிகழ்வு. ஒரு நாள் அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கும் யூதன் ஒருவனுக்கும் இடையே ஒரு கவசம் குறித்துத் தகராறு ஏற்பட்டது. “இந்தக் கவசம் என்னுடையது” என்று அலீ ரளியல்லாஹு அன்ஹு கூறினார். அதை அந்த யூதன் மறுத்து, “இல்லை, இது என்னுடையது” என்றான். அலீ அவர்களோ நபியவர்களின் உறவினர். இஸ்லாமிய அரசின் முக்கியத் தலைவர்களுள் ஒருவர் ஆவார். அந்த யூதனோ முஸ்லிமல்லாத ஒருவன்; அரசின் எதிர் தரப்பைச் சேர்ந்தவன். இருப்பினும் அந்த யூதன் நேராக நபியவர்களிடமே நீதிக்காக வந்தான். நபியவர்கள் மனிதர்களின் முகங்களைப் பார்க்காமல் நீதியை நிலைநாட்டுவார்கள் என்ற நம்பிக்கை அவனுக்கு இருந்தது. நபியவர்கள், அலீ அவர்களிடம், “உங்களிடம் சாட்சி உள்ளதா?” என்று கேட்க, அலீ ரளியல்லாஹு அன்ஹு, “இல்லை” எனச் சொன்னார். அப்போது நபியவர்கள், “சாட்சி இல்லாத நிலையில், இந்தக் கவசம் யூதனுக்கே உரியது” எனத் தீர்ப்புக் கூறினார்கள்.

 

 

நபியவர்கள் தமது உறவினருக்கு ஆதரவாகச் சிறிதளவுகூடச் செயல்படவில்லை. இந்தத் தீர்ப்பைக் கேட்ட, அந்த யூதன் அதிர்ச்சியடைந்தான். “இது உண்மையான நீதிதான்! ஒரு நபி; ஓர் ஆட்சியாளர், தம் உறவினருக்கு எதிராக எனக்கு ஆதரவாகத் தீர்ப்புச் சொல்கிறார் என்றால் இது உண்மையான மார்க்கமே!” என்று கூறி, அவன் அந்த இடத்திலேயே இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக்கொண்டான். இதுதான் நீதியின் வெற்றி.

 

 

இன்றைய ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக எத்தனையெத்தனை தீர்ப்புகள்? அத்தனையும் அநியாயமான தீர்ப்புகள். ஏற்கெனவே நூறு ஆண்டுகளுக்கு முன்னரே முடித்து வைக்கப்பட்ட தீர்ப்புகளுக்கு எதிராகவும் முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிராகவும் இன்றைய நீதிபதிகள் தீர்ப்பு வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களெல்லாம் நீதிக்குத் தலை வணங்காமல் வேறு யாருக்கோ தலை வணங்கிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களால் இச்சமுதாயத்திற்கு மிகப்பெரும் கேடுதான் விளையும்.

 

 

மறுமை விசாரணை நாளில் எல்லோரும் தம் தீர்ப்பிற்காகக் காத்திருப்பார்கள். விசாரணை தொடங்கும் அந்நேரத்தில் எல்லோரும் கட்டாந்தரையில் கடும் வெப்பத்தில் நின்றுகொண்டிருப்பார்கள். அவ்வேளையில் அல்லாஹ்வின் ஆசனத்தின் (அர்ஷ்) நிழலைத் தவிர வேறு நிழலே இருக்காது. அத்தகைய நிழலில் அல்லாஹ் ஏழு வகையினருக்கு நிழல் கொடுப்பான். அவர்களுள் ஒருவர் நீதிமிக்க ஆட்சியாளர் ஆவார். (புகாரீ: 666) இதுதான் நீதியாளர்களுக்கு அல்லாஹ் வழங்கும் கண்ணியமாகும்.

 

 

இளைஞர்களே, நீங்கள் நீதியைக் கடைப்பிடிக்கத் தொடங்க வேண்டிய இடம் நீதிமன்றமோ சட்டமன்றங்களோ இல்லை. மாறாக உங்கள் மனசாட்சியிடம்தான். ஆம்! நம் மனதுதான் நமக்கான நீதிமன்றம் (கோர்ட்). நாம் நம்முடைய அன்றாட வாழ்வில் சந்திக்கின்ற ஒவ்வொருவரிடமும் நீதியோடு நடந்துகொண்டால் நம் மனம் அமைதியடையும்; நாமும் மகிழ்ச்சியடையலாம்; நம்மைச் சுற்றியுள்ளோரும் மகிழ்ச்சியடைவர்.

==================

கருத்துகள் இல்லை: