சனி, 22 நவம்பர், 2025

ஈயும் கையே மேலானது


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

இமாம் மதீனா பள்ளிவாசல், பட்டினம்பாக்கம் சென்னை-28    


நம்முள் சிலர் செல்வ நிலையில் மகிழ்ச்சியாக வாழ்கின்றார்கள். வேறு சிலர் ஏழைகளாக வாழ்கின்றார்கள். அல்லாஹ் நினைத்திருந்தால் மனிதர்கள் அனைவரையும் சமநிலையில் ஆக்கியிருக்கலாம். ஆனால் இரு சாராரையும் சோதிக்கும் விதமாகவே இரு வேறு நிலைகளில் படைத்துள்ளான். செல்வ நிலையில் உள்ளவன், தனக்கு வழங்கப்பட்ட செல்வத்தை ஏழைகளுக்கும் உறவினர்களுக்கும் கொடுக்கின்றானா என்று சோதிக்கின்றான்.  ஏழை தனது ஏழ்மை நிலையிலும் நேர்மை தவறாது வாழ்ந்து, பிறரிடம் கையேந்தாமல் தன்னிடம் மட்டுமே கையேந்துகிறானா என்று சோதிக்கின்றான்.

 

செல்வம் வழங்கப்பட்டவன், தன் செல்வத்தைத் தானும் அனுபவித்து, பிறருக்கும் தர்மம் செய்வதில்தான் மகிழ்ச்சியிருக்கிறது; நன்மை கிடைக்கிறது. ஏழைகள் சிலர் வாய்விட்டுக் கேட்கலாம்; கையேந்தலாம். வேறு சிலர் தன்மானத்தைக் காப்பதற்காக யாரிடமும் கையேந்தாமல் இருப்பார்கள்; தம் ஏழ்மைநிலை பிறருக்குத் தெரியக் கூடாது என்று மறைப்பார்கள். ஆக இரு வகையான மனிதர்களுக்கும் தர்மம் செய்தல் செல்வர்கள்மீது கடமையாகும். இவ்வாறு இரு வகையான மனிதர்கள் இருப்பதால்தான், தானம், தர்மம் எனத் தமிழில் இரண்டு வார்த்தைகள் பயன்பாட்டில் உள்ளன.

 

நம்மிடம் கையேந்திக் கேட்போருக்கு நாம் ஈவது தானம் ஆகும். பிறரிடம் கையேந்திக் கேட்காமல், தம் வறுமையைப் பிறரிடம் சொல்லிப் புலம்பாமல், தன்மானத்தோடு வாழ்வோரை நாமாகத் தேடிக் கண்டறிந்து ஈவது தர்மம் ஆகும். ஆக இரு சாராருக்கும் நாம் ஈய வேண்டும். அதற்காகவே நாம் செல்வம் வழங்கப்பட்டுள்ளோம்.  அதேநேரத்தில் ஏழையாக உள்ளவன் தன் ஏழ்மை நிலையிலும் மக்களிடம் கேட்காமல் அல்லாஹ்விடம் மட்டுமே கேட்டுப்பெறுவேன் என்ற வைராக்கிய உள்ளம் கொண்டவனாக இருந்தால் அல்லாஹ் அவனை அப்படியே ஆக்கிவிடுவான். “யார் (பிறரிடம் கையேந்தாமல்) சுயமரியாதையுடன் இருக்கிறானோ அவனை அல்லாஹ்வும் அவ்வாறே ஆக்குகிறான். யார் அல்லாஹ்விடத்தில் தன்னைப் பிறரிடம் தேவையற்றவனாக ஆக்க வேண்டுமென வேண்டினானோ அவனை அல்லாஹ் பிறரிடம் தேவையற்றவனாக ஆக்கிவிடுவான்”. (புகாரீ: 1427-1428)

 

தர்மம் செல்வத்தைக் குறைக்காது: செல்வ நிலையில் உள்ளவன் தன் செல்வத்தைப் பிறருக்குச் செலவழிக்க அஞ்சுவான்; அந்த அச்சத்தை மனித விரோதி ஜைத்தான்தான் அவனது உள்ளத்தில் தோன்றச் செய்வான். அந்த அச்சத்தைப் போக்கும் விதத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “தர்மம் செய்வது செல்வத்தைக் குறைக்காதுஎன்று கூறியுள்ளார்கள். (நூல்: முஸ்லிம்) நபியவர்களை நேசிக்கக்கூடிய நாம், அவர்களது கூற்றின்மீது நம்பிக்கை கொண்டுள்ளோம். அவர்களின் கூற்றை நாம் நம்பியுள்ளது உண்மையெனில், தர்மம் செய்வதால் நம் செல்வம் குறைந்துவிடும் என்னும் எண்ணத்தை நம் மனத்திலிருந்து தூக்கியெறிந்துவிட்டு,  மிகத் தாராளமாக ஏழைகளுக்கு ஈவதைப் பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

 

செல்வராக வழியென்ன?: ஒருவர் செல்வராக வேண்டுமெனில், முதலில் பிறருக்குத் தர்மம் கொடுக்கத் தொடங்க வேண்டும். நாம் பிறருக்குக் கொடுக்கத் தொடங்கிவிட்டாலே, நாம் செல்வராக உயரத் தொடங்கிவிட்டோம் என்று பொருள். ஏனெனில் கொடுப்பதால் குறையாதுஎன்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறிவிட்டதால் நாம் கொடுக்கத் தொடங்கிவிட்டோம். அதனால் நாம் செல்வராக மாறிவிட்டோம். ஏனெனில் உயர்ந்த (ஈயும்) கை, தாழ்ந்த (வாங்கும்) கையைவிடச் சிறந்தது” (புகாரீ: 1427-1428) என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ளார்கள். அதன் அடிப்படையில், நாம் ஈவதால் உயர்வடைகிறோம்.

 

விரைந்து தர்மம் செய்: அறம் செய விரும்பு, ஈவதுவிலக்கேல், ஐயமிட்டு உண் ஆகிய முதுமொழிகள் தர்மம் வழங்குவதன் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றன. அதையும் உடனடியாக வழங்க வேண்டும் என்பதை நபியவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். அதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தம் வாழ்நாளில் செய்தும் காட்டியுள்ளார்கள்.

 

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எங்களுக்கு அஸ்ர் தொழுகை தொழுவித்துவிட்டு உடனே விரைந்து வீட்டினுள் சென்று, தாமதிக்காமல் வெளியே வந்தார்கள். அப்போது நான் காரணம் கேட்டேன் -அல்லது கேட்கப்பட்டது -அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நான் எனது வீட்டில் தர்மப் பொருளான தங்கக் கட்டியை வைத்திருந்தேன்; அப்பொருளுடன் இரவைக் கழிக்க விரும்பவில்லை. எனவே அதைப் பகிர்ந்துவிட்டேன்''  எனக் கூறியதாக உக்பா பின் ஹாரிஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளார்கள். (புகாரீ: 1430)

 

நாலடியார் எனும் நூலில் தர்மத்தின் உயர்வு குறித்தும் அதை உடனடியாகச் செய்துவிட வேண்டும் என்பது குறித்தும் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:

புன்னுனிமேல் நீர்போல் நிலையாமை' என்றெண்ணி,

இன்னினியே செய்க அறவினை- ‘இன்னினியே 

நின்றான், இருந்தான், கிடந்தான், தன்கேள் அலறச் 

சென்றான்' எனப்படுத லான்! (பாடல்: 29, அதிகாரம்: யாக்கை நிலையாமை)

இப்பொழுதுதான் ஒருவன் நின்று கொண்டிருந்தான். அப்புறம் உட்கார்ந்தான்; அப்புறம் படுத்தான்; அப்புறம் தன் உறவினர்கள் அலறித் துடிதுடிக்க இறந்து போய்விட்டான்!' இப்படி உடலின் நிலையாமை பற்றிச் சொல்லப்படுவதால், 'புல்லின் நுனியின் மேலாக இருக்கும் நீர்த்துளியைப் போன்று யாக்கையும் நிலையாமை உடையது' என்று எண்ணி, இப்பொழுதே அறச்செயல்களைச் செய்வதில் ஈடுபடுங்கள்.

 

அதாவது புல்லின் நுனியில் உள்ள பனித்துளி சூரியன் வந்ததும் காய்ந்து மறைந்துவிடும். அதுபோல் இந்த உடலும் மிக விரைவில் மரணத்தின்மூலம் அழியத்தான் போகிறது. அதற்குள் விரைவாகத் தர்மம் செய்துகொள் என்று அப்பாடல் கூறுகிறது. எனவே தர்மம் செய்ய வேண்டும் என்று நினைத்தால் விரைந்து அதைச் செய்துவிட வேண்டும். இல்லையேல் மனம் மாறிவிடும். பிறகு செய்துகொள்ளலாம் என்றெண்ணினால் ஷைத்தான் நம் மனதை  மாற்றிவிடுவான்.  

 

வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்: நாம் உழைத்துச் சம்பாதித்த பணத்திலிருந்து தர்மம் செய்யும்போது நாம்தாம் மகிழ்ச்சியடைய வேண்டும். ஏனெனில் அத்தகைய நல்வாய்ப்பை அல்லாஹ் நமக்கு வழங்கியுள்ளான். அந்த வாய்ப்பை நாம் ஒவ்வொரு நாளும் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஆகவே நம்மிடம் கையேந்தும் ஏழைகளைக் கண்டு நாம் கோபப்படக்கூடாது. மாறாக அவர்களைப் பார்த்து மகிழ்ச்சியடைந்து, பேருவகையோடு அவர்களுக்கு ஈந்து, அவர்களிடம் நன்றியுணர்வோடு நடந்துகொள்ள வேண்டும். ஏனெனில் நாம் தர்மம் செய்து நன்மையை ஈட்டிக்கொள்ள அந்த ஏழைதான் காரணமாக அமைந்தான்; அவன்தான் நாம் வழங்கும் தர்மத்தை ஏற்றுக்கொண்டான். நாம் வழங்கும் தர்மத்தை அவன் ஏற்றுக்கொள்ளவில்லையானால் நாம் நன்மையை எவ்வாறு ஈட்ட முடியும்?

 

இதனால்தான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்:  “தர்மம் செய்யுங்கள்! ஏனெனில் உங்களிடையே ஒரு காலம் வரும். அப்போது ஒருவர் தமது தர்மப் பொருளை எடுத்துக்கொண்டு அலைவார்; அதைப் பெறுவதற்கு யாரும் இருக்க மாட்டார். அப்போது ஒருவன், "நேற்றே இதை நீ கொண்டு வந்திருந்தாலாவது நான் வாங்கியிருப்பேன்; இன்றோ அது எனக்குத் தேவையில்லையே!'' என்று கூறுவான். (புகாரீ: 1411) எனவே நாம் தர்மம் வழங்குவதற்கான நல்வாய்ப்பை நல்கும் ஏழைகள் வாழும் காலத்தில் நாம் வாழ்கிற இக்காலம் நமக்கான பொற்காலம் ஆகும். ஏனெனில் அவர்கள் மூலமே நாம் நன்மைகளை ஈட்டிக்கொள்கிறோம்.

 

இழந்த நிலையிலும் ஈகை: ஒருவர் செல்வ நிலையில் இருக்கும்போது தர்மம் கொடுப்பது அவ்வளவு பெரிதன்று. ஒருவர் தம் பொருளை இழந்த நிலையிலும், தம் வியாபாரத்தில் நட்டம் ஏற்பட்ட நிலையிலும், துக்கமான நிலையிலும் துவண்டு விடாமல் தர்மம் செய்வதுதான் மிகவும் பாராட்டுக்குரியதாகும். மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை மத்ரஸாவிற்கோ பள்ளிவாசலுக்கோ ஓர் ஏழைக்கோ நன்கொடையாகக் கொடுத்து வருகிற ஒருவர், குறிப்பிட்ட அந்த மாதத்தில் தம் வியாபாரத்தில் நட்டம் ஏற்பட்டுவிட்ட நிலையிலும், வழமையாக வழங்கி வருகிற நன்கொடையை நிறுத்திவிடாமல் கொடுத்துவிடுகிறார் என்றால், அவர் மிகவும் பாராட்டுக்குரியவர் ஆவார். அவர் செய்த அந்த நன்கொடையின் அபிவிருத்தியால், அவர் ஏற்கெனவே இழந்ததையெல்லாம் அல்லாஹ் மீண்டும் அவருக்குத் திருப்பிக்கொடுப்பான். அவரது வியாபாரத்தில் முன்பைவிட அதிகமாக அபிவிருத்தி செய்வான்.  மேலும் இத்தகையோரை அல்லாஹ் பாராட்டிப் பேசுகிறான்: செழுமையிலும் சிரமத்திலும் அவர்கள் (தர்மமாகச்) செலவு செய்வார்கள். (3: 134)

 

ஈகையா, உபரித்தொழுகையா: கடமையான தொழுகைகளைத் தவறாமல் நிறைவேற்றுவதோடு உபரியான தொழுகைகளையும் நிறைவேற்றுவதன்மூலமே ஒருவன் தன் இறைவனை நெருங்க இயலும். அவ்வாறு இருக்கும்போது கடமையான தொழுகைகளை மட்டும் நிறைவேற்றுபவன் அல்லாஹ்வால் விரும்பப்படுபவனாகவும் இறைநெருக்கத்தைப் பெற்றவனாகவும் முடியுமா? ஆம். ஏழைகளுக்குத் தர்மம் கொடுக்கக்கூடிய கொடையுள்ளம் கொண்டவன் உபரியான தொழுகைகளைத் தொழாவிட்டாலும் அவனது ஈகைக் குணத்தால் அல்லாஹ்வால் விரும்பப்படுகிறான். அது குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ளார்கள்: “கொடையுள்ளம் கொண்ட அறிவிலி,  கருமித்தனம் கொண்ட வணக்கசாலியைவிட அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானவன் ஆவான். (திர்மிதீ: 1884)

 

சேர்த்து வைத்துக்கொள்ளாதே: தர்மம் செய்யாமல் சேர்த்துச் சேர்த்து வைத்துக்கொள்வர் சிலர். அத்தகையோர் தம் செல்வம் வளர்வதாக எண்ணிக்கொள்வர். அவர்களின் செல்வம் வளர்ச்சியடைவதில்லை. மாறாக அழிந்துகொண்டுதான் இருக்கிறது.  ஏனெனில் நாம் தர்மம் செய்யும்போதுதான் அது மிகப்பெரிய அளவில் வளர்ச்சியடைகிறது. தர்மம் செய்வோருக்கே அல்லாஹ் வளர்ச்சியை ஏற்படுத்துகிறான்; அதில் அபிவிருத்தி செய்கின்றான். தர்மம் செய்யாதோருக்கு அபிவிருத்தி செய்வதில்லை.  

 

நீ (தர்மம் செய்யாமல்) முடிந்து வைத்துக்கொள்ளாதே! அல்லாஹ் உன்மீது (தன் அருளைப் பொழியாமல்) முடிந்து வைத்துக்கொள்வான். (எனவே) உன் சக்திக்கேற்பச் சிறிதளவாவது தர்மம் செய்!” என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அஸ்மா பின்த் அபீபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளார்கள். (புகாரீ: 1434)

 

அல்லாஹ் கூறுகிறான்: யார் அல்லாஹ்வுடைய உவப்பை நாடி மனப்பூர்வமாக தங்கள் செல்வங்களைச் செலவு செய்கிறார்களோ அவர்களு(டைய தர்மத்து)க்கு உவமை, மேடான பூமியிலுள்ள ஒரு தோட்டம் போன்றதாகும். அதில் பெருமழை பெய்யும் பொழுது தனது கனிகளை அது இரட்டிப்பாகத் தருகின்றது. பெருமழை அதில் பெய்யவில்லை என்றாலும் இலேசான தூறல்கூட அதற்குப் போதுமானதாகும். (2: 265)

 

ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை

வைத்திழக்கும் வன்க ணவர். (குறள்: 228) ஏழை எளியோர்க்கு எதுவும் ஈந்திடாமல் ஈட்டிய பொருள் அனைத்தையும் இழந்திடும் ஈவு இரக்கமற்றோர், பிறர்க்கு வழங்கி மகிழ்வதில் ஏற்படும் இன்பத்தை அறியமாட்டாரோ? என்று கலைஞர் கருணாநிதி இக்குறளுக்கு உரை எழுதியுள்ளார்.

 

ஔவையாரின் கொன்றை வேந்தன் நூலில் இடம்பெற்றுள்ள ஈயார் தேட்டை தீயார் கொள்வர்" என்ற பழமொழியின் பொருள், வறியவர்களுக்குக் கொடுக்காதவர்களின் சம்பாத்தியத்தைத் திருடர்கள் போன்ற தீயவர்கள் அபகரித்துக்கொள்வார்கள் என்பதாகும். ஒருவர் தாம் ஈட்டிய பொருளை மற்றவர்களுக்குக் கொடுக்காமல் தம்மிடமே வைத்துக்கொண்டால், அது தீயவர்களின் கையில் போய்விடும் என்பதைக் குறிக்கிறது.

 

தர்மத்தின் முக்கியத்துவம்:  எல்லோரும் தர்மம் செய்ய வேண்டும் என்றே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஆர்வமூட்டியுள்ளார்கள்.  பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளோர்,  எங்களால் தர்மம் செய்ய இயலாது என்று சொல்ல முடியாத அளவிற்கு நபியவர்கள் வழிகாட்டியுள்ளார்கள். “பேரீச்சம் பழத்தின் சிறு துண்டையேனும் (தர்மம் செய்து) நரகத்திலிருந்து (உங்களைப்) பாதுகாத்துக் கொள்ளுங்கள்என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (புகாரீ: 1417) இதன்மூலம் ஒவ்வொருவரும் தத்தம் பொருளாதார நிலைக்கேற்பத் தர்மம் செய்ய வேண்டும் என்பதை அறிகிறோம். மேலும் தர்மம் செய்வதால் நரகத்திலிருந்து நமக்கு விடுதலையும் கிடைக்கிறது.

 

எனவே ஈயும் கையே மேலானதுஎன்ற அடிப்படையில் நம்மால் இயன்ற அளவிற்குப் பிறருக்கு ஈந்து, அதன்மூலம் ஈருலகிலும் வளத்தோடு வாழப் பேரிறைவன் அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள்புரிவானாக.  

==========================================

கருத்துகள் இல்லை: