செவ்வாய், 5 மார்ச், 2019

நபிவழி மருத்துவம்

அல்பாகியாத்துஸ் ஸாலிஹாத் அரபுப் பல்கலைக் கழகத்தின் லஜ்னத்துல் இர்ஷாத் மாணவர் மன்ற நூற்றாண்டு நிறைவு விழா சிறப்பு மலருக்கு நான் எழுதிய கட்டுரை. 


நபிவழி மருத்துவம் 
-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.
(இமாம்-மஸ்ஜித் ஜாமிஉல் அன்வார், மணலி, சென்னை-68
துணையாசிரியர்-இனிய திசைகள் மாதஇதழ்)
--------------------------------------------------------------------

ஒரு மனிதனின் உணவைவிட உடல் ஆரோக்கியம் முக்கியமானது. ஏனெனில் உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் அவன் உண்ணும் உணவு உரிய முறையில் செரிமானம் அடைந்து உடலுக்குத்  தேவையான ஆற்றல்களை எடுத்துக்கொண்டு கழிவுகளை வெளியேற்றும். உண்ணும் உணவு சரியான முறையில் செரிமானம் அடைந்து, கழிவு இயல்பாக வெளியேறினால் அவனது உடல் ஆரோக்கியமாக உள்ளது என்று பொருள். 

வருமுன் காப்போம்: நோய் வராமலிருக்க என்ன செய்ய வேண்டும் என்பது பலரும் கேட்கும் வினா. அதற்கான விடை உண்டு. ஆனால் அதைச் செயல்படுத்துவார் அரிது. திருக்குர்ஆனில் அதற்கான விடை: உண்ணுங்கள், பருகுங்கள்; விரையம் செய்யாதீர்கள்.

“விரையம் செய்யாதீர்கள்” என்பதன்  பொருள், தேவையைவிட மிகுதியாக உண்ணாதீர்கள் என்பதையே குறிக்கிறது. அதாவது ஒருவன் ஐந்து இட்டலி சாப்பிட்டவுடன் பசி அடங்கிவிட்டது; வயிறும் நிறைந்துவிட்டது எனில், அவன் ஆறாவதாக ஒன்றைச் சாப்பிடுவதுதான் விரையம் ஆகும். அதையும் தாண்டி மூச்சுமுட்டச் சாப்பிடுவோரும் உண்டு. உண்ணலின் நோக்கம் அறிந்துகொண்டால் குறைவான அளவு உணவிலேயே திருப்தியும் மனநிறைவும் ஏற்பட்டுவிடும். 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறும் விடை: “ஆதமுடைய மகன் (மனிதன்) தனது வயிற்றைவிட மோசமான பை எதையும் நிரப்புவதில்லை. ஆதமின் மகனுக்கு, தனது முதுகை நிமிர்த்துக்கொள்ள உணவின் ஒரு சில கவளங்களே போதுமானவையாகும். அவற்றைவிட (அதிகமாக) உண்டேயாக வேண்டும் என்றிருந்தால், (தனது வயிற்றை மூன்று பாகங்களாகப் பிரித்து) ஒரு பாகத்தை உணவுக்காகவும், மற்றொரு பாகத்தை நீருக்காகவும், இன்னொரு பாகத்தை மூச்சு விடுவதற்காகவும் ஒதுக்கிக் கொள்ளட்டும்.” (நூல்: திர்மிதீ: 2302)   
மனிதன் உயிர்வாழ ஓரிரு கவள உணவே போதுமா? அப்படியெனில் நாம் அளவு கடந்து உண்ணும் உணவெல்லாம் வீணா? ஆம்! நாம் உண்ணும் மிகுதியான உணவை நம் உடல் கொழுப்பாகச் சேமித்து வைத்துக்கொள்கிறது. தேவையானபோது அதனை எரித்து ஆற்றலை எடுத்துக்கொள்கிறது. அத்தகைய தேவை ஏற்படாவிட்டால், அது அப்படியே கொழுப்பாகச் சேர்ந்து உடல் பருமனாகி, தொங்கு தசைகளாக மாறிவிடும். 

எளிதாகப் புரியும் வகையில் இதற்கு ஓர் உதாரணம் சொல்லலாம். நூறு ரூபாய் சம்பாதிக்கும் ஒருவன்  தன் செலவுபோக, எஞ்சிய இருபத்தைந்து ரூபாயை நாள்தோறும் சேமித்து வைக்கிறான். நாளடைவில் அது ஒரு பெருந்தொகையாகச் சேர்ந்துவிடுகிறது. அவன் சம்பாதிக்காத நாள்களில் தனது சேமிப்பிலிருந்து எடுத்துப் பயன்படுத்திக்கொள்வான். நாள்தோறும் சேமித்துக்கொண்டே இருந்தால், அந்தச் சேமிப்பிலிருந்து எடுத்துச் செலவுசெய்யவேண்டிய தேவை ஏற்படாதல்லவா? அதுபோலவே உடலும் சேமித்துக்கொண்டே இருக்கிறது. நாம் இரண்டு வேளை உண்டு, ஒரு வேளை உண்ணாமல் இருந்தால்,  மாதத்தில் சில நாள்கள் நோன்பு நோற்றால் அந்நாள்களில், ஏற்கெனவே நம் உடல் சேமித்ததை ஆற்றலாக மாற்றிக்கொள்ளும். மாறாக, அந்தச் சேமிப்பிலிருந்து எடுத்துச் செலவு செய்வதற்கான வாய்ப்பையே நாம் கொடுக்கவில்லையென்றால் அது தொங்கு தசைகளாகவே மாறிவிடும்.

நோயின் அறிகுறி: பசித்தால் உண்கிறோம்; தாகம் ஏற்பட்டால் அருந்துகிறோம். இது இயல்பானது.  இதுவே உடல்மொழி. நம் உடல் தனது தேவையை ஒவ்வோர் உணர்வின் மூலம் வெளிப்படுத்தும். அதையறிந்து அதற்கு அதையதை நாம் கொடுக்க வேண்டும். நம் உடலானது நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் (வாயு) ஆகிய ஐம்பூதங்களால் ஆனது. அதாவது இவ்வைந்து தன்மைகளும் நம் உடலுக்குள் இருக்கின்றன. இருப்பினும் நீர், நெருப்பு ஆகிய இரண்டுதான் உடலின் சமநிலை இயக்கத்திற்கு முக்கியமானவை. அவை முறையே குளிர்ச்சி, வெப்பம் என அறியப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் மற்றொன்றை உண்டு வாழ்கின்றன. ஒன்று குறைந்து மற்றொன்று மிகுந்தால் நோய் ஏற்படும். குளிர்ச்சி மிகுந்தால் குளிர்க் காய்ச்சல் என்றும் வெப்பம் மிகுந்தால் (வெப்பக்) காய்ச்சல் என்றும் கூறுகிறோம். 

காய்ச்சல்: உடலைக் காய்ச்சுவதால்தான் காய்ச்சல் என்கிறோம். காய்ச்சல் ஏன் ஏற்படுகிறது? நம் உடலின் சராசரி வெப்பம் 98.4 முதல் 98.6 வரை இருக்க வேண்டும். சராசரி வெப்பத்தைவிட மிகுந்தால் உடல் சூடாகி, காய்ச்சல் ஏற்படும். சராசரி வெப்பத்தைவிடக் குறைந்தால், குளிர்ச்சி மிகுந்து குளிர்க் காய்ச்சல் ஏற்படும். இரண்டுக்கும் எதிரெதிர் உணவுப்பொருள்களை உண்ண வேண்டும். குளிர்க் காய்ச்சல் ஏற்பட்டால் வெப்பமான பொருள்களையும் வெப்பக் காய்ச்சல் என்றால் குளிர்ச்சியான பொருள்களையும் உண்ண வேண்டும். இவ்விடத்தில் நபி (ஸல்) அவர்கள் கூறிய செய்தி கவனத்தில் கொள்ளத்தக்கது: “காய்ச்சல், நரகத்தின் கடுமையான வெப்பத்தால் உண்டாகிறது. ஆகவே, அதைத் தண்ணீரால் தணித்துக் கொள்ளுங்கள்.” (நூல்: புகாரீ: 3262) தண்ணீரால் தணித்துக்கொள்வதும், நீர்ச்சத்துள்ள பொருள்களை உண்பதும்தான் அதற்கான சிகிச்சை முறை என்பதை இந்நபிமொழியிலிருந்து அறியலாம்.

உடலில் காய்ச்சல் வருவது நல்லதுதான். காய்ச்சல் வந்தால் அது மனித உடலைக் காய்ச்சி, அதனுள் உள்ள கழிவுகளை வெளியேற்றவே செய்கிறது. எனவே அச்சமயத்தில் மூன்று நாள்களுக்கு ஓய்வெடுக்க வேண்டும். தேவையில்லாமல் வலிந்து எதையும் சாப்பிடக் கூடாது. அதனால்தான் வாயில் கசப்புத்தன்மை ஏற்படுகிறது. அது ‘உண்பது தடை’ என்பதற்கான அறிகுறியாகும். மூன்று நாள் ஓய்வுக்குப்பின் தானாகவே பசியெடுக்கும். அப்போது தேவையானதை உண்டுகொள்ளலாம்.  

உடலுக்கு நோய் வந்தால் இயற்கையான உண்பொருள்களைச் சாப்பிட்டே அதைச் சரிசெய்துகொள்ளலாம். அதைத் தாண்டி, சிகிச்சை மேற்கொள்ள முனைந்தால், அதற்கான சிகிச்சை முறைகள் பல உள்ளன. சித்த (மூலிகை) மருத்துவம், ஆங்கில மருத்துவம், அக்குபஞ்சர் மருத்துவம், நாடி மருத்துவம், சீன மருத்துவம் என அதன் கிளைகள் விரிகின்றன. ஆனால் பெரும்பாலான மக்களுக்குத் தெரிந்த மருத்துவம் ஆங்கில மருத்துவம்தான். இதனால்தான் இன்றைய மக்கள் கூண்டுக்குள் சிக்கிய எலியாக மாட்டிக்கொண்டுள்ளார்கள். சீக்குண்ட உடலைச் சீர்செய்யப் பல்வேறு சிகிச்சை முறைகள் இருந்தும், ஆங்கில மருத்துவ முறைக்கு மக்கள் அடிமைப்பட்டுள்ளனர். ஆங்கில மருத்துவம் படித்த மருத்துவர்கள் பலர் பன்னாட்டுக் கம்பெனிகளின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றார்கள். அவர்களின் வழிகாட்டுதல்படி, இல்லாத நோயையெல்லாம் இருப்பதாக அல்லது மிகைப்படுத்தி, அச்சமூட்டுவதால் வேறு வழியில்லாமல் மக்கள் மிகுந்த பணத்தைச் செலவழித்துக் கொண்டிருக்கின்றார்கள். சிகிச்சை என்று தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்றுவிட்டால், அவ்வளவுதான். மக்களை அவர்கள் பணம் எடுக்கும் ஏடிஎம் மெஷின்களாகக் கருதிக்கொள்கிறார்கள். 

சின்னச் சின்ன மாத்திரைகளில் சரி செய்ய வேண்டிய சாதாரண நோய்களைப் பெரிதாக்கி, பயமுறுத்தி, டெஸ்ட், ஸ்கேன் முதலான புதிர்வார்த்தைகளைக் கூறி, பணம் பறிக்கிறார்கள். இன்றைக்கு மனிதப் பிறப்பே இயற்கைக்கு முரணான வழியில்தான். தாயின் வயிற்றிலிருந்து இயல்பாகப் பிறக்க வேண்டிய குழந்தை, வயிறு கிழிக்கப்பட்டு வெளியே எடுக்கப்படுகிறது. நூற்றுக்குத் தொண்ணூற்றைந்து சதவிகிதம்  அறுவைப் பிரசவம்தான். இவற்றிலிருந்தெல்லாம் நாம் வெளியே வரவேண்டுமெனில் இயற்கையான மருத்துவ முறையான ‘நபிவழி மருத்துவம்’ நோக்கித் திரும்ப வேண்டும். 

நோய்குணமாக முழுமுதற் காரணம் நம்பிக்கைதான். காய்ச்சல் உள்பட எது வந்தாலும், “எனக்கு எதுவும் இல்லை; நான் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறேன்” என்று நம்பினாலே நாம் குணமடைந்துவிடலாம். அதேநேரத்தில் எதைச் சாப்பிட வேண்டுமோ அதையறிந்து சாப்பிட வேண்டும்.  அந்த உணவே நம் உடலுக்குத் தேவையான ஆற்றலைக் கொடுத்து, நோயைச் சீர்செய்துவிடும்.     

ஆன்மிக வாழ்க்கைக்கான வழியை மட்டுமன்றி, அல்லாஹ் அறிவித்துக்கொடுத்த மருத்துவத் தகவல்களையும் மனித சமுதாயத்திற்குப் போதித்துச் சென்றுள்ளார்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள். மனிதப் பயன்பாட்டிற்காகவே யாவற்றையும் படைத்துள்ள உயர்ந்தோன் அல்லாஹ் அவனுக்கு ஏற்படும் நோய்களைத் தீர்த்துக்கொள்வதற்கான மருந்துகளையும் மூலிகைச் செடிகளையும் அவற்றைப் பயன்படுத்தும் வழிமுறைகளையும் நபி (ஸல்) அவர்கள் மூலம் கற்பித்தான்.

மனநோய்களைக் களைந்து புத்துணர்வூட்ட மகத்தான வேதமான திருக்குர்ஆனையும் உடல் தொடர்பான நோய்களைத் தீர்த்துக்கொள்ள பல்வேறு மூலிகைகளையும் உயர்ந்தோன் அல்லாஹ் மனித சமுதாயத்திற்கு ஓர் அருட்கொடையாகவே வழங்கியுள்ளான்.  அவன் படைத்த ஒவ்வொரு பொருளும் பல்வேறு பயன்களைக் கொண்டுள்ளது. அதையே நபி (ஸல்) அவர்களின் மூலம் மனித சமுதாயத்திற்குத் தெளிவுபடுத்தியுள்ளான். 

 நபி (ஸல்) அவர்கள் மூவகைச் சிகிச்சை முறைகளைத் தம் சமுதாய மக்களுக்குக் கற்பித்துச் சென்றுள்ளார்கள். 1. குறிப்பிட்ட நோய்க்கு அதற்குரிய மருந்தை உட்கொள்ளச் சொல்லுதல், 2. குறிப்பிட்ட பிரார்த்தனைகள் (துஆக்கள்) மூலம் நிவாரணம் பெறச்செய்தல், 3. தனித்தனிப் பொருள்களின் மருத்துவப் பயன்கள். சான்றாக வயிற்றுப்போக்கிற்குத் தேனை உட்கொள்ளச் சொன்னது, இடுப்புக் கீல்வாதத்திற்கு, காட்டு ஆட்டின் வாலிலுள்ள கொழுப்பை எடுத்து உருக்கி உண்ணச் சொன்னது, பேதிக்கு  மருந்தாக ஆவாரை இலையை உண்ணச் சொன்னது, விலா வலிக்கு வெண்கோஷ்டத்தையும் ஒலிவ எண்ணெய்யையும் மருந்தாகப் பயன்படுத்தச் சொன்னது, தலைவலி ஏற்பட்டால் மருதாணியைப் பற்றுப்போடச் சொன்னது, அடிநாக்கு அழற்சிக்கு இந்திய (கோஷ்ட)க் குச்சியைப் பயன்படுத்தச் சொன்னது, உளநோய்க்குப் பேரீச்சம் பழங்களை விதைகளோடு அரைத்து உண்ணச் சொன்னது முதலானவை. 

இரண்டாவது, பிரார்த்தனைகள் மூலம் ஓதிப் பார்த்து நோய்களைக் குணப்படுத்தும் சிகிச்சை முறையை மனித சமுதாயத்திற்கு அனுமதித்து, அதைத்  தெளிவாகக் கற்றுக்கொடுத்துள்ளார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். மனித உடலுக்குள் ஓடிக்கொண்டிருக்கிற உயிரானது ஒருவிதமான காற்றைப் போன்றதாகும். அதற்கு இடையூறளிக்கும் விதத்தில் கெட்ட ஆவிகள் அதனுள் புகுந்துகொள்ளும்போது திருக்குர்ஆன் வசனங்களை ஓதி ஊதுவதன்மூலம் அதனைக் குணப்படுத்தலாம்.

நபி (ஸல்) அவர்களுக்கு இறைவன் புறத்திலிருந்து கிடைக்கப்பெற்ற துஆக்கள் மூலம் ஓதிப் பார்த்தல், திருக்குர்ஆன் வசனங்களைக் கொண்டு ஓதிப் பார்த்தல் ஆகிய இரண்டு வகை உள்ளன. “இறைநம்பிக்கை கொண்டவர்களுக்கு இந்தக் குர்ஆனை நிவாரணமாகவும் அருளாகவும் இறக்கியுள்ளோம்” (17: 82) என்று அல்லாஹ் கூறுகின்றான். இவ்வசனத்தின்படி திருக்குர்ஆனின் வசனங்கள் அனைத்தும் ஒவ்வொரு நோய்க்கு மருந்தாகத் திகழ்கின்றன என்பது தெளிவாகிறது. 

அந்த அடிப்படையில்தான், ஒரு குழுவின் தலைவரைத் தேள் கொட்டிவிட்டபோது ‘அல்ஃபாத்திஹா’ எனும் அத்தியாயத்தை ஓதி  அவர்மீது ஊதியதன்மூலம் அவருக்கு அதிலிருந்து நிவாரணம் கிடைக்கச் செய்துள்ளார் ஒரு நபித்தோழர். பொதுவாக நபி (ஸல்) அவர்கள் துயில்கொள்ளுமுன், அல்ஃபலக், அந்நாஸ் ஆகிய இரண்டு அத்தியாயங்களையும் ஓதி, தம் கையில் ஊதி, அதைத் தம் உடல் முழுவதும் தடவிக்கொள்வார்கள். இவ்வாறு செய்வதன்மூலம் கெட்ட ஆவிகள் தீண்டாதிருத்தல், சூனியம் தாக்காதிருத்தல் உள்ளிட்ட  எல்லாவிதமான ஆபத்துகளிலிருந்தும் பாதுகாப்புத் தேடியுள்ளார்கள். 

ஒவ்வொரு நோயும் வெவ்வேறு விதமானது. எனவேதான் அந்தந்தத் தருணங்களுக்கேற்ற துஆவை நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள். தேள்கடி, சின்னம்மை, பாம்புகடி, கொப்புளம், காயம், உடல்வலி, துன்பம், துயரம், துக்கம், தூக்கமின்மை, திடுக்கம் உள்ளிட்ட ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொருவிதமான பிரார்த்தனை உண்டு. அதை நன்கறிந்து, உறுதியான நம்பிக்கையோடு ஓதி ஊதினால் நோய்கள் குணமாகும் என்பது உண்மை. ஏனெனில் பிரார்த்தனைகள், திருக்குர்ஆன் வசனங்கள் ஆகியவற்றின் ஆற்றல் மகத்தானது. இவற்றை ஓதி ஊதும்போது மனித உடலுக்குள் ஊடுருவியுள்ள வலுவற்ற கெட்ட ஆவிகள் அகன்றுவிடுகின்றன. இதுதான் ஓதிப் பார்த்தலின் பயனும் சூட்சுமமும் ஆகும்.

“மனிதன் நோயுற்றவுடன் மருந்து என்று எதைக் கொடுத்தாலும் அதன்மீது நம்பிக்கை வைத்து பயபக்தியுடன் பத்தியத்துடன் உண்கிறான். அந்த மருந்து வேலை செய்வதைவிட அவனது மூளை, தனது வலிக்கான மருந்து கிடைத்துவிட்டது என நினைத்துச் சமாதானமடைந்து, பதற்றத்தைக் குறைத்து நிவாரணத்தைப் பரப்பத் தொடங்குகிறது. எனவே உடலில் நோய் குணமாக , மருந்தைவிட நம்பிக்கையே கைகொடுக்கிறது” என்று கர்நாடக மாநிலத்திலுள்ள உடுப்பியைச் சேர்ந்த இருதய சிறப்பு மருத்துவரான திரு.பெல்ல மோனப்ப ஹெக்டே கூறுகிறார்.

இந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் துஆக்களும் திருக்குர்ஆன் வசனங்களும் நிவாரணம் கொடுக்கின்றன. நம்பிக்கையோடு ஓதினால் எந்த நோயையும் விரட்டலாம். எனவே நாம் அதன் பக்கமும் கொஞ்சம் கவனத்தைத் திருப்ப வேண்டும். 

முட்டை, வெங்காயம், பூண்டு, இஞ்சி, பேரீச்சம்பழம், அத்திப்பழம், மாதுளை, காய்ந்த அத்திப்பழம், தர்பூசணி, வெள்ளரிக்காய், எலுமிச்சை, ‘அஜ்வா’ வகை பேரீச்சம் பழம், கருஞ்சீரகம், வெந்தயம், துளசி, உலர் திராட்சை, வாற்கோதுமை (பார்லி), ஸைத்தூன் எண்ணெய், நெய், தேன், சோற்றுக் கற்றாழை (Aloe), மருதாணி மொட்டு, கரும்பு முதலான தனித்தனிப் பொருள்கள் அனைத்தும் குறிப்பிட்ட மருத்துவத் தன்மைகளைக் கொண்டவை. அவற்றின் தன்மைகளையும் குணங்களையும் அறிந்து ஏற்ற நேரத்தில் உண்டால் நோய் வரவிடாமல் பாதுகாத்துக்கொள்வதோடு உடலை ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ளலாம். இவைபோன்ற பல்வேறு பொருள்களின் மருத்துவக் குணங்களை நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள். அவற்றை விரிவாகத் தெரிந்துகொள்ள வேண்டுமெனில், ‘நபிவழி மருத்துவம்’ எனும் நூலைப் படிக்க வேண்டும்.  

ஆக, எல்லா வழிகளிலும் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல் இருக்க, நாமோ அதையெல்லாம்  கண்டுகொள்ளாமல், இன்றைய வியாபார நோக்கம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகின்ற ஆங்கில மருத்துவத்தையே நாடுவது, கனியிருக்கக் காயை உவந்து சாப்பிடுவதற்கொப்பாகும். எனவே நபி (ஸல்) அவர்கள் காட்டிய பாதையில் நடைபோட்டு ஆரோக்கியமாக வாழ முனைவோம்!
----------------------------------------




கருத்துகள் இல்லை: