புதன், 2 ஏப்ரல், 2014

உரையாடல்-1


(மக்தப் மத்ரசா ஆண்டுவிழாவில் இரண்டு  பெண்பிள்ளைகளுக்கு இடையே நடந்த உரையாடல்)

ஆமினா: ஆயிஷா! விஷயம் தெரியுமா?

ஆயிஷா: என்ன விஷயம் ஆமினா? மார்க்க விஷயமா? உலக விஷயமா?

ஆமினா: மார்க்க விஷயமெல்லாம் இல்லை. உலகம் விஷயம்தான் ஆயிஷா.

ஆயிஷா: என்ன விஷயம்னு சொல்லு.

ஆமினா: பக்கத்துல வா! ஒரு இரகசியம். நம்மோட ஒன்னாப் படிச்சாலே நஃபீசா, அவ பக்கத்துத் தெருவுல உள்ள முருகேசனைக் கல்யாணம் செய்துகிட்டாளாம்.

ஆயிஷா: அஸ்தஃக்ஃபிருல்லாஹ்! நாம மூனு பேரும் ஒன்னாத்தானே ஸ்கூல் போவோம். அவ நல்லாப் படிப்பவளாச்சே? அவளா இப்படிச் செய்துட்டா? என்னாலே நம்பவே முடியலையே!

ஆமினா: ஆமா ஆயிஷா! அவளோட அப்பா, அம்மா ரெண்டு பேரும் அவளைச் செல்லமா வளர்த்தாங்க. அவ கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்தாங்க. கூடவே செல்போனும் வாங்கிக் கொடுத்தாங்க. அதனால வந்த வெனைதான் இது.

ஆயிஷா: அப்படின்னா, அவளுக்கு இஸ்லாமிய மார்க்கம் பற்றி எதுவும் தெரியாதா?

ஆமினா: ஆமா! அறவே தெரியாது. ஒரு பெண் பருவ வயதை அடைந்துவிட்டால் முகம், கை, கால் தவிர உடல் முழுவதும்  மறைக்க வேண்டும். பார்வையைத் தாழ்த்தி நடக்க வேண்டும் என்பதுதான் இஸ்லாம் கூறும் கட்டளை. இதைத்தான் நாம் நம்முடைய மக்தப் மத்ரசாவில் படித்தோம். அவதான் மத்ரசாவுக்கே வரவில்லையே?

ஆயிஷா: அது அவளுக்குத் தெரியாமல் போனதற்கு யார் காரணம்?

ஆமினா: அவளோட பெற்றோர்தான் காரணம். அவங்க அவளெ நாள்தோறும் மக்தப் மத்ரசாவுக்கு அனுப்பியிருந்தா அவள் இஸ்லாமிய மார்க்கத்தைப் பற்றித் தெரிந்திருப்பா. அதனால் அவ தவறான பாதையில போயிருக்கமாட்டா.

ஆயிஷா: அப்படின்னா, பெற்றோருடைய கடமை என்ன?

ஆமினா: குழந்தை வளர்ந்து, பேசத் தொடங்கிவிட்டால் அதற்கு லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்ற ஏகத்துவக் கலிமாவைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். பிறகு படிப்படியா இஸ்லாமிய விஷயங்களைச் சொல்லிக் கொடுத்து, குர்ஆனைக் கற்பிக்க வேண்டும். பெற்றோருக்கு ஓதத் தெரியாவிட்டால் மத்ரசாவுக்கு அனுப்பி ஓத வைக்க வேண்டும். இப்படியெல்லாம் ஒரு பெற்றோர் செய்தால் பிள்ளைகள் வழிகெட்டுப் போகமாட்டாங்க. புரிந்ததா?

ஆயிஷா: நன்றாகப் புரிந்தது. அப்படின்னா, உலகப் படிப்பு படிக்க, பெண்பிள்ளைகளை ஸ்கூலுக்கு அனுப்பக் கூடாதா?

ஆமினா: அப்படியில்லை. தாராளமா அனுப்பலாம். ஆனால் பெண்பிள்ளைகளைப் பெண்கள் மட்டும் படிக்கிற ஸ்கூலில்தான் சேர்க்க வேண்டும். ஏனென்றால், ஆண்-பெண் கலந்து படிக்கும் பள்ளிக்கூடத்தில் சேர்ப்பதால் நிறைய ஆபத்துகள் உண்டு.

ஆயிஷா: அப்படின்னா, பெண்கள் மட்டும் படிக்கிற ஸ்கூல் நம்ம மஹல்லாவில் இல்லையே? என்ன செய்வது?

ஆமினா: நம்ம மஹல்லாவில் பெண்கள் கல்விக் கூடங்களை நாமேதான் உருவாக்கணும். அது மட்டுமல்லாமல் மகளிர் அரபிக் கல்லூரியையும் நடத்தணும். அதில் படிக்கிற மாணவிகள் ஆலிமாக்களாகி நம் சமுதாய மக்களுக்கு தீன் பணி செய்வாங்க. தம்மோட பிள்ளைகளையும் ஷரீஅத்படி வளர்ப்பாங்க.

ஆயிஷா: இதையெல்லாம் நாம் இப்ப யாரிடம் சொல்வது?

ஆமினா: வா ஆயிஷா! நாம் நம்முடைய தோழிகளையும் சேர்த்துக்கொண்டு நம்ம மஹல்லா பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் மகளிர் கல்விக்கூடங்களை ஏற்படுத்துவதன் அவசியத் தேவையை எடுத்துச் சொல்லி இது போன்ற பிரச்சனை இனியும் ஏற்படாமல் தடுத்து நிறுத்துவோம்.

ஆயிஷா: சரி ஆமினா! கண்டிப்பா நானும் உன்னோட வாறேன். வா போவோம்!


 -உஸ்தாத் நூ அப்துல் ஹாதி பாகவி