திருச்சிராப்பள்ளி ஜமால் முகமது கல்லூரி முதுகலை & தமிழாய்வுத்துறை மற்றும் சான்லாக்ஸ் பன்னாட்டுத் தமிழியல் ஆய்விதழ் இணைந்து நடத்திய "தமிழ் இலக்கியங்களில் சமயமும் சமுதாயமும்" எனும் பொருண்மையிலான ஒரு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம் 11.12.2024 (புதன்கிழமை) அன்று நடைபெற்றது.
அந்தக் கருத்தரங்க ஆய்விதழுக்கு
"தமிழ் இலக்கியங்களில் ஏகத்துவக் கொள்கை" எனும் தலைப்பில் நான் எழுதிய கட்டுரை தங்கள் பார்வைக்கு...
தமிழ் இலக்கியங்களில் ஏகத்துவக் கொள்கை
-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.
மொழிபெயர்ப்பாளர், பொறுப்பாசிரியர் இனிய திசைகள் மாத இதழ்
முதல் மனிதன் படைக்கப்பட்ட காலத்திலிருந்தே, சமயக்கொள்கை இருந்துவருகிறது.
இப்பிரபஞ்சத்தைப் படைத்து ஆளுகின்ற அனைத்து ஆற்றல்களும் கொண்ட இறைவன் ஒருவன் இருக்கின்றான்
என்பதைப் பெரும்பாலானோர் ஏற்றுக்கொண்டிருக்கின்றனர். இன்றைய மக்கள் பற்பல தெய்வங்களை
வணங்கிக்கொண்டும் பல்வேறு சிலைகளின் பெயர்களைக் கூறிக்கொண்டும் இருந்தாலும் அவர்கள்
அனைவருக்கும் ஒரே இறைவன்தான் இருக்கின்றான் என்பதைப் பொய்யாமொழிப் புலவர் ஆணித்தரமாகக்
கூறியுள்ளார்.
அது மட்டுமல்ல, இறைவனின் பண்புகளையும் ஆங்காங்கே கூறியுள்ளார். இறைவன் என்பவன் அவனது பண்புகளால்
பல்வேறு பெயர்களில் அறியப்படுகிறான். இறைவனுடைய தன்மைகளையும் பண்புகளையும் வள்ளுவர்
தம் நூலில் குறிப்பிடுகிறார். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னுள்ள தொன்மையான நூலான திருக்குறளில்
ஓரிறைக் கொள்கை குறித்துக் கூறப்பட்டுள்ளது வியப்பிற்குரியதுதான்.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி, பகவன் முதற்றே உலகு. (குறள்: 1) எழுத்துகளுக்கெல்லாம் தொடக்கமாக ‘அ’கரம் இருப்பதைப் போல் இந்த உலகிற்கு
முதன்மையானவன் பகவன் (இறைவன்) இருக்கின்றான் என்று தெரிவிக்கிறது. ஆக இந்த உலகில் முதன்முதலாகத்
தோன்றியவன் இறைவன்தான் என்பதைத் திருக்குறள் நிறுவுகிறது. இறைவனின் பண்புகள் குறித்துப்
பேசும் திருக்குர்ஆன் இறைவனை ‘முதன்மையானவன்’ (57: 3) என்று கூறுகிறது.
இறைவன் ஒருவனே: ‘தனக்குவமை இல்லாதான்’ எனும் 7ஆம் குறள் ‘இறைவன் ஒருவனே’ என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. இறைவன் குறித்துச் சிந்திப்போர், ‘இவ்வுலகை ஆளுகின்ற இறைவன் ஒருவன்தான்
இருக்க முடியும்’ என்பதைத் தம் சிந்தனையால் உணர்ந்துகொள்வர். ஏனென்றால் ஒன்றுக்கு
மேற்பட்ட கடவுள் இருந்திருந்தால் ஒவ்வொரு கடவுளும் ஒருவிதமான கட்டளையைப் பிறப்பிப்பார்.
அப்போது இவ்வுலகிலுள்ள கோள்கள், நட்சத்திரங்கள் உள்ளிட்டவை எப்படி
இயங்கும்? சூரியன் மேற்கே உதிக்க வேண்டுமா, கிழக்கே உதிக்க வேண்டுமா என்று தீர்மானிப்பவர் யார்?
குழப்பம்தான் ஏற்படும்.
ஆகவே ஒரே இறைவன்தான் இவ்வுலகை ஆள்கிறான் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.
அதே கருத்தைத் திருக்குர்ஆன் கூறுகிறது: அவனுக்கு நிகராக யாரும் இல்லை. (112:
4) அவனைப் போல் எதுவும்
இல்லை. (42: 11) ஆக இவ்வுலகைப் படைத்தாளுகின்ற இறைவன் ஒருவனே. அவனுக்கு நிகரானவர் எவரும் இவ்வுலகில் இல்லை. அவன்தான் மனிதர்கள்,
விலங்குகள், கால்நடைகள், பறவைகள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களையும்
உயிரற்றவற்றையும் படைத்துள்ளான். அவனே அவற்றைப் பராமரிக்கின்றான்.
வினாவுக்கு விடையில்லை: ஓரிறைக் கொள்கைக்கு எதிராக இன்றைய மக்கள் வணங்கி வழிபட்டு
வருகின்ற தெய்வங்கள் குறித்து சீரிய சிந்தனையுடையவன்
சிறிது நேரம் சிந்தித்தால் அவனது கொள்கை போலியானது என்பதை எளிதில் விளங்கிக்கொள்வான்.
படைக்கும் கடவுள் பிரம்மா என்றும் காக்கும் கடவுள் விஷ்ணு என்றும் அழிக்கும் கடவுள் சிவன் என்றும் மக்கள் பாகுபடுத்தி
வழிபட்டு வருகின்றார்கள். இவ்வாறு மூன்று செயல்களுக்கு மூன்று கடவுள்கள் என்று இருந்தால், ஒரு கடவுள் படைப்பதை இன்னொரு
கடவுள் எப்படி அழிக்க முடியும்? காக்கும் கடவுள் ஒருவனைக் காக்க நினைக்கும்போது, இன்னொரு கடவுள் எப்படி அவனை
அழிக்க முடியும்? இருவருக்கும் சண்டை வராதா? அல்லது அவர்களுள் ஒருவர் பலவீனராகவும், மற்றொருவர் பலசாலியாகவும் ஆகிவிட
மாட்டார்களா? அப்படியெனில் பலவீனமானவர் எப்படிக் கடவுள் எனும் தகுதியைப் பெறுவார்? எனவே ஒரே இறைவன்தான் அனைத்தையும்
படைத்தவன். அவனே படைக்கவும் அழிக்கவும் செய்கிறான். அனைத்து ஆற்றல்களும் உடையவன் அவனே.
“நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப்
பொருள்கள்மீதும் ஆற்றல் மிக்கவன் ஆவான்” (2: 20) என்று அல்லாஹ்வே தன்னைப் பற்றித்
திருக்குர்ஆனில் கூறுகின்றான்.
அஞ்சுவது அஞ்சாமை: ஒவ்வொரு மனிதனும் கடவுளுக்கு அஞ்சினால், அவன் செல்லுமிடமெல்லாம் அவனுடைய அச்சத்தோடு செல்வான். அதனால் பாவம் செய்ய
அஞ்சுவான். அதேநேரத்தில் இறைவனுக்கு அஞ்சாதவன் பாவம் செய்ய அஞ்சமாட்டான். அதனால் இறைவனை
அஞ்சாமை ஒருவனைப் பாவம் செய்யத் தூண்டும்.
அதைத்தான் அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில் (428) எனும் குறள் உணர்த்துகிறது.
கொன்றைவேந்தன் எனும் நீதி நூலில்,
‘அன்னையும் பிதாவும் முன்னறி
தெய்வம்’ என்று ஔவை கூறுகிறார். உன்னை ஈன்றெடுத்த அன்னை, அதன்பின் தந்தை ஆகியோரை அறிவதற்குமுன்,
நீ இவ்வுலகில் பிறப்பதற்குத்
திட்டமிட்ட தெய்வத்தை - இறைவனை அறிந்துகொள். தெய்வத்தை நன்கறிந்த பின், ‘ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ என்பதை உணர்த்த முற்படுகிறார்.
அதாவது ஒவ்வொருவரும் வழிபாட்டுத்தலம் சென்று இறைவனைத் தொழுவது சாலச் சிறந்தது என்கிறார்.
பார்வையற்ற ஒருவர் இறைத்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து,
எனக்குக் கூட்டுத்தொழுகையிலிருந்து
விதிவிலக்கு வேண்டும் என்கிறார். “நீர் பாங்கோசையைக் கேட்கின்றீரா?” என்று வினாத் தொடுக்க, அவர் “ஆம்”
என்றார். “அப்படியானால் அதற்கு நீர் பதிலளிப்பீராக
(அதாவது பள்ளிவாசலுக்கு வந்து கூட்டுத் தொழுகையில் கலந்துகொள்வீராக)” என்றார்கள். (முஸ்லிம்: 1157)
பார்வையற்ற ஒருவரே தம்
வீட்டில் தொழுதுகொள்ள அனுமதியில்லை எனும்போது மற்றவர்கள் பள்ளிவாசல் வந்து,
கூட்டுத்தொழுகையில்
கலந்துகொண்டுதான் ஐவேளைத் தொழுகையை நிறைவேற்ற வேண்டும் என்பதை நாம் அறியலாம்.
யூதமும் கிறிஸ்தவமும்: யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய மும்மதத்தினரும் ஓரிறைக் கொள்கையைத்தான் கொண்டுள்ளார்கள். இருப்பினும்
அவரவர்களுக்கு வந்த இறைத்தூதர்களை அடிப்படையாகக் கொண்டு வேறு வேறு மதத்தினராக மாறிவிட்டனர்.
உண்மையில் ஏக இறைவன் அல்லாஹ்தான் மூஸா, ஈஸா, முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஆகியோரை மனிதர்களுக்குத் தூதர்களாக அனுப்பி,
ஏக இறைவனான அல்லாஹ்வையே
வணங்கி வழிபட வேண்டும் என்று தெரிவிக்கச் செய்தான்.
கிறிஸ்தவர்கள் இறைத்தூதர் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மரணத்திற்குப்பின் இயேசு
கிறிஸ்துவையே கடவுளின் நிலைக்கு உயர்த்திவிட்டார்கள்; அவரின் சிலையையே வணங்கிவருகின்றார்கள்.
அவர், சிலுவையில் அறையப்பட்டு
மரணத் தறுவாயில் இருந்தபோது, “பிதாவே, இவர்களை மன்னியும்; இவர்கள் அறியாமல் செய்கின்றார்கள்” (லூக்கா: 23: 34) என்று கூறியதை பைபிள் பதிவு செய்துள்ளது.
ஆக இயேசு இறந்தபோது, தம்முடைய ஏக இறைவனை அழைத்துள்ளார்; அந்த ஒரே இறைவனிடம் பாவிகளுக்காக மன்னிப்பை வேண்டியுள்ளார்.
ஆகவே இயேசு கற்பித்தது ஏகத்துவக் கொள்கையைத்தான் என்பதை நாம் உறுதிபடக் கூறலாம்.
திருக்குர்ஆன் தமிழுரையில் அதற்கான சான்று உள்ளது. மறுமையில் எல்லோரையும் உயிர்கொடுத்து
எழுப்பி விசாரணை செய்யப்படும் நேரத்தில், ஈஸா அலைஹிஸ்ஸலாம் வருவார். அவரிடம் விசாரணை செய்யப்படும். அது குறித்துத் திருக்குர்ஆன் வார்த்தைகள் இதோ:
அல்லாஹ் (மறுமை நாளில் ஈஸாவை நோக்கி) ‘மர்யமுடைய மகன் ஈஸாவே! அல்லாஹ்வுடன் என்னையும், என்னுடைய தாயையும் இரண்டு கடவுள்களாக
எடுத்துக் கொள்ளுங்கள் என்று மனிதர்களை நோக்கி நீங்கள் கூறினீர்களா?’ என்று கேட்பான் என்பதையும் நினைவூட்டுங்கள்.
அதற்கு அவர் கூறுவார்: “நீ மிகப் பரிசுத்தமானவன். எனக்கு ஒரு சிறிதும் தகாததை நான் ஒருபோதும் கூறமாட்டேன்.
அவ்வாறு நான் கூறியிருந்தால் நிச்சயமாக நீ அதனை அறிந்திருப்பாயே! என் உள்ளத்திலுள்ளதை
நீ நன்கறிவாய். உன் உள்ளத்திலுள்ளதை நான் அறியமாட்டேன். நிச்சயமாக நீதான் மறைவானவை
அனைத்தையும் நன்கறிபவன்.
(மேலும்) நீ எனக்குக் கட்டளையிட்டபடியே நான் (அவர்களை நோக்கி) ‘நீங்கள் எனக்கும் உங்களுக்கும்
இறைவனாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்’ என்று கூறினேனேயன்றி வேறொன்றையும்
(ஒருபோதும்) நான் கூறவில்லை. நான் அவர்களுடன் இருந்த வரை அவர்களின் செயலை நான் பார்த்துக்
கொண்டிருந்தேன். நீ என்னைக் கைப்பற்றிய பின்னர் நீதான் அவர்களைக் கண்காணித்தவனாக இருந்தாய்;
அனைத்திற்கும் நீயே சாட்சி.''
(5: 116-117)
ஆகவே அந்த இறைவிசாரணையில், அவர் தாம் மக்களுக்குச் சொன்ன ஏகத்துவக் கொள்கையை உறுதிப்படுத்திவிட்டு,
முக்கடவுள் கொள்கையை
மறுப்பார் என்பதை மேற்கண்ட திருக்குர்ஆன் உரையாடல் சுட்டிக்காட்டுகிறது.
ஒருவன் இவ்வுலகில் வாழும் காலத்தில் எதையுமே வணங்கி வழிபடாமல், இவ்வுலகைப் படைத்த ஓர் இறைவன்
இருக்கின்றான் என்று மட்டும் நம்பியிருந்து அதேநிலையில் மரணித்துவிட்டால் இஸ்லாமிய
மார்க்கத்தின் நிலைப்பாடு என்ன? அவன் தொடக்கத்தில் தண்டனை கொடுக்கப்பட்டாலும், இறுதியில் ஒரு நாள் இறைவன் நாடுகிறபோது
அவனை மன்னித்து, சொர்க்கத்திற்கு அனுப்பலாம். அதற்கான சான்று நபிமொழித் தொகுப்பு நூல்களில் காணப்படுகிறது.
அதேநேரத்தில் எதை வேண்டுமானாலும் வழிபடலாம் என்ற நோக்கத்தில் எதையாவது நம்பி,
எதையாவது வழிபட்டு வாழ்ந்து,
மரணித்திருந்தால் அவன்
ஏக இறைவனுக்கு இணைவைத்தோர் பட்டியலில் சேர்க்கப்பட்டு நரகத்தில் நுழைவிக்கப்படுவான்
என்பது உறுதி. ஏனெனில் திருக்குர்ஆன் அதைத்தான் கூறுகிறது: “எவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ
அவனுக்கு நிச்சயமாக அல்லாஹ் சொர்க்கத்தைத் தடைசெய்து விடுகின்றான்; அவன் செல்லுமிடம் நரகம்தான்.
(5: 72)
இறைவன் ஒளிமயமானவன்: அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்சோதி... (திருவருட்பா) என்று இறைவனை (ஜோதி) ஒளி வடிவில் காண்கிறார் வள்ளலார். இந்த மந்திரத்தில் தயவு, கருணை, அருள் என்னும் மூன்றும் அடங்கியுள்ளன .அதுதான் இறைவனுடைய இயற்கைப் பண்புகளாகும். ஆக வள்ளலார் காண்பதும் உருவமில்லா ஓர் இறைவனைத்தான். அதைத்தான் திருக்குர்ஆனும் கூறுகின்றது: அல்லாஹ், வானங்கள், பூமி ஆகியவற்றின் ஒளியாக இருக்கிறான். (24: 35)
யார் இறைவன்?: இந்து மத நம்பிக்கையுள்ளவன் வெங்கடாசலபதி, முருகன், பிள்ளையார், ஆதிபராசக்தி என்று எண்ணற்ற கடவுளிடம் கேட்கின்றான். கிறிஸ்தவ மத நம்பிக்கையுள்ளவன் இயேசுவிடம் கேட்கின்றான். அவரே தனக்கு அனைத்தையும் வழங்குகிறார் என்று நம்புகிறான். ஒரு முஸ்லிம் அல்லாஹ்விடமே கேட்கின்றான். அவனே அனைத்தையும் தனக்கு வழங்குவதாக நம்புகிறான். அல்லாஹ்வின் தன்மையை அறியாதவன் நாகூர், ஏர்வாடி, முத்துப்பேட்டை, அஜ்மீர், உள்ளிட்ட இறைநேசர்கள் அடங்கியுள்ள மக்பராவிற்குச் சென்று, அங்கு தன் தேவைகளைக் கேட்கின்றான். அவனுடைய தேவைகள் நிறைவேறியதும் அவர்கள்தாம் தனக்குக் கொடுத்ததாக நம்பிக்கைகொள்கின்றான். ஒரு பெண் அரச மரத்தைச் சுற்றி வருகிறாள். அவளது தேவை நிறைவேறியதும் அதுதான் தனக்குக் குழந்தையைக் கொடுத்ததாக நினைத்துக்கொள்கிறாள். மேற்கண்ட மனிதர்களுள் யாருடைய நம்பிக்கை மிகச் சரியானது? எல்லோருடைய தேவைகளையும் உண்மையிலேயே நிறைவேற்றுபவன் யார்?
அதற்கான விடையைத் திருக்குர்ஆனில் காண்கிறோம்: ஜின்களையும், மனிதர்களையும் (எனக்கு வழிப்பட்டு) என்னை வணங்குவதற்கன்றி (வேறெதற்காகவும்) நான் படைக்கவில்லை. அவர்களிடம் நான் யாதொரு பொருளையும் கேட்கவில்லை. மேலும், எனக்கு உணவு கொடுக்குமாறும் கோரவில்லை. நிச்சயமாக அல்லாஹ்தான் அனைவருக்கும் உணவளிப்பவனும், அசைக்கமுடியாத பலசாலியுமாவான். (51: 56-58)
ஆக பல்வேறு மதநூல்களும் தத்துவ ஞானிகளும் கூறுவது ஒரே இறைவனைத்தான். உலகில் பெரும்பாலோர் நம்புவது ஓரிறைவனைத்தான். எனவே இவ்வுலகைப் படைத்துப் பரிபாலித்துக் கொண்டிருக்கின்ற அல்லாஹ்வே அந்த இறைவன் என்பதை உணர்ந்து அவனையே வணங்கி வழிபட்டு, இருமையிலும் வெற்றியடைவோம்.
================0
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக