வியாழன், 20 நவம்பர், 2025

கஞ்சத்தனம் தவிர்ப்போம்!


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

 

“கஞ்சத்தனத்தைவிட்டுப் பாதுகாக்கப்பட்டோரே வெற்றியாளர்கள்” (64: 16) என்ற இறைவசனம் ஆழ்ந்து சிந்திக்கத்தக்கது. இறைவன் வாரி வழங்கிய செல்வத்தை அவனது திருப்தியை நாடி ஏழைகளுக்கும் தேவையுடையோருக்கும் தானமாகச் செலவழிக்காமல் செல்வத்தைச் சேர்த்துச் சேர்த்துத் தேக்கி வைத்துக்கொள்வதால் எந்த நன்மையும் இல்லை. செல்வத்தைச் சேர்த்து வைத்துக்கொள்வதால் அதனுடைய சுழற்சி தடைபட்டுவிடுகிறது. பணம் என்பது நாலாப்புறமும் தடையின்றிச் சுற்றிவந்தால்தான் அது எல்லோரின் தேவையையும் நிறைவு செய்வதாக அமையும்.

 

நண்பர்கள் மூவர் சந்தித்துக்கொண்டார்கள். அவர்கள் தமக்குள் பெற்ற கடனை நிறைவேற்ற எண்ணினார்கள். முதலாமவனிடம் இரண்டாமவன் பெற்ற இருநூறு ரூபாயில் நூறு ரூபாயைத் தற்போது திருப்பித் தருவதாகக் கூறி, அவனிடம் கொடுத்தான். அதைப் பார்த்த மூன்றாமவன் முதலாமவனிடம்,  “என்னிடம் வாங்கிய இருநூறைத் திருப்பிக்கொடு” என்றான். “இப்போது நூறை வைத்துக்கொள்; பிறகு நூறைத் தருகிறேன்” என்று சொல்லி, அதை அவனிடம் கொடுத்தான். அதைப் பார்த்த இரண்டாமவன்  மூன்றாமவனிடம், “என்னிடம் வாங்கிய இருநூறைத் திருப்பிக் கொடு” என்றான். “இப்போது நூறை வைத்துக்கொள்; பிறகு நூறைத் தருகிறேன் என்று சொல்லி, அதை அவனிடம் கொடுத்தான். அதைப் பார்த்த முதலாமவன், “எஞ்சிய நூறை எனக்குத் திருப்பிக்கொடு” என்றான். அதை முதலாமவனிடம் கொடுத்தான்... இவ்வாறு அவர்கள் மூவர் வாங்கிய கடன் ஒரே நூறு ரூபாயில் தீர்ந்தது.  இவ்வாறுதான் பணத்தின் இடப்பெயர்ச்சி பல்வேறு மனிதர்களின் தேவையை நிறைவேற்றுகிறது.

 

ஒருவன் தன்னிடமுள்ள பணத்தைச் செலவு செய்வதால் அது இடம்விட்டு இடம் மாறுகிறது. ஒரு கையிலிருந்து வேறொரு கைக்கு மாறுவதால் அது மற்றொருவனுக்குப் பயன்படுகிறது. ஒருவன் காய்கறிக் கடையில் காய்கறி வாங்கினால், அந்தப் பணம் சந்தைக்குப் போகும். அங்குச் செலவு செய்யும்  பணம் மொத்த வியாபாரிக்குச் செல்லும். அவர் விவசாயியிடம் கொடுப்பார். அதைப் பெறுகிற விவசாயி மீண்டும் பயிரிடத் தொடங்குவார். பின்னர் அவரிடமிருந்து மொத்த வியாபாரி காய்கறிகளை வாங்குவார். இப்படியே இது ஒரு சங்கிலித் தொடராகத் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கும்.

 

இன்றைய பெரும்பாலான மக்களின் வறுமைக்குக் காரணம் பணம் குறிப்பிட்ட சில இடங்களில் தேங்கிக் கிடப்பதுதான். அரசியல்வாதிகள், செல்வர்கள், பெருமுதலாளிகள் உள்ளிட்டோர் பெருமளவில் பணத்தைச் சேமித்து வைத்துள்ளதால் அதன் சுழற்சி தடைபட்டுள்ளது. அதனால் ஏழ்மை பரவலாக உள்ளது. எல்லோருமே தாராளமாகச் செலவு செய்யவும், ஏழைகளுக்குத் தர்மம் வழங்கவும் தொடங்கிவிட்டால் ஏழ்மை எவ்வாறு எஞ்சியிருக்கும்?

   

ஒருவனைச் செலவு செய்யவிடாமல் தடுப்பது அவனது கஞ்சத்தனம்தான். அந்த உணர்வை மனித மனங்களில் போடுபவன் மனிதகுல விரோதியான ஷைத்தானே ஆவான். மனிதன் நன்மைகளை அடைந்துவிடக்கூடாது எனத் தடுப்பதில் அவன் சூழ்ச்சிக்காரன். குற்றச் செயல்களைச் செய்யத் தூண்டுவது மட்டுமின்றி, நன்மைகளைச்  செய்யவிடாமல் தடுக்கும் வேலையையும் அவன் செய்கிறான். அந்த வகையில் மனிதன் அல்லாஹ்வின் அன்பைப் பெறும் நோக்கில், அவனது பாதையில் தர்மம் செய்து நன்மைகளை ஈட்டிவிடக்கூடாது என்ற தீய எண்ணத்தில் அவனைச் செலவு செய்யவிடாமல் தடுக்கின்றான். அத்தோடு கஞ்சத்தனத்தை அவனது மனத்தில் விதைக்கின்றான். எனவே நாம் அவனுடைய சூழ்ச்சி வலைக்குள் சிக்கிவிடாமல் நம்மை நாமே காத்துக்கொள்ள வேண்டும்.

 

அந்த அடிப்படையில்தான், “கஞ்சத்தனத்தைவிட்டுப் பாதுகாக்கப்பட்டோரே வெற்றியாளர்கள்” (64: 16) என்னும் இறைவசனத்தை நாம் சிந்திக்க வேண்டும். ஆகவே நாம் கஞ்சத்தனம் செய்யாமல், நம் செல்வத்தை அல்லாஹ்வின் திருப்தியை நாடிச் செலவு செய்தால்தான் ஷைத்தானின் சூழ்ச்சி வலையை முறியடிக்க முடியும்.

 

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உரை நிகழ்த்தியபோது கூறினார்கள்: “கஞ்சத்தனம் குறித்து உங்களை எச்சரிக்கிறேன். ஏனெனில் உங்களுக்கு முன்சென்ற சமுதாயத்தினர் கஞ்சத்தனம் செய்ததால்தான் அழிந்து போனார்கள். அவர்களின் கஞ்சத்தனம் அவர்கள் தர்மம் செய்ய வேண்டாமெனக் கட்டளையிட்டது. எனவே அவர்கள் கஞ்சத்தனம் செய்தார்கள். அவர்களின் கஞ்சத்தனம் உறவினர்களைத் துண்டித்து வாழக் கட்டளையிட்டது. எனவே அவர்கள் உறவினர்களைத் துண்டித்து வாழ்ந்தார்கள். கஞ்சத்தனம் அவர்களைப் பாவங்கள் செய்யக் கட்டளையிட்டது. எனவே அவர்கள் பாவங்கள் செய்தார்கள்.” (அபூதாவூத்: 1698/ 1447)

 

‘கஞ்சத்தனம் ஒரு சமுதாயத்தையே அழித்துவிடும்’ என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ளார்கள். அது எப்படி அழிக்கும்? ஓர் ஊரிலுள்ள செல்வர்கள் யாரும் ஏழைக்குக் கொடுக்காமல் கஞ்சத்தனம் செய்தால், அவர்கள் அனைவரும் பசியால் இறந்துவிடுவார்கள். பின்னர் விவசாயிகள் அழிவார்கள். பின்னர் உண்ண உணவின்றி அந்தச் செல்வர்களும் அழிவார்கள். இதுதான் இயற்கை நியதி. இதை உணர்ந்துகொண்டால் ஒவ்வொருவரும் தம்மால் இயன்றதைச் செலவு செய்யத் தொடங்கிவிடுவர்.

 

கடமையான ஸகாத்தை உரிய முறையில் கொடுக்காமல் கஞ்சத்தனம் செய்த செல்வர்கள் குறித்துத் திருக்குர்ஆன் கூறுகிறது: அல்லாஹ் தன் அருளால் தங்களுக்கு வழங்கிய பொருள்களில் கஞ்சத்தனம் செய்கின்றவர்கள் அது தங்களுக்கு நல்லதென்று எண்ணிட வேண்டாம். அது அவர்களுக்குத் தீங்காகவே இருக்கும். கஞ்சத்தனத்தால் சேர்த்த பொருள் மறுமையில் அவர்கள் கழுத்தில் அரிகண்டமாக (இரும்பு வளையமாக) மாட்டப்படும். (3: 180)

 

ஷைத்தான் மனிதர்களை நரகத்தில் விழச் செய்வதற்காகவே கஞ்சத்தனத்தை அவர்களின் மனங்களில் விதைக்கிறான். அதனால் செல்வர்கள் தம் செல்வத்திலிருந்து ஏழைகளின் பங்கான ஸகாத்தை உரிய முறையில் நிறைவேற்றாமல் தடுத்துவைத்துக்கொள்வதால் ஏழைகள் பாதிக்கப்படுகின்றார்கள். அதன் காரணமாக அவர்கள் நாளை மறுமையில் அல்லாஹ்வின் தண்டனைக்கு ஆளாக நேரிடும். எனவே மறுமையின் தண்டனையிலிருந்து தப்பிக்க, இம்மையிலேயே ஏழைகளுக்கு உரிய பங்கை வழங்கிவிட்டால் அவர்கள் தப்பித்துக்கொள்ளலாம்.

 

செலவு செய்தால் பணம் குறைந்துவிடும் என்ற எண்ணத்தை மனித மனங்களில் போட்டு, அவர்களை நன்மைகள் செய்ய விடாமல் ஷைத்தான் தடுக்கின்றான். கஞ்சத்தனம் ஒரு மனிதனின் உள்ளத்தில் குடிகொண்டுவிட்டால் அவன் யாருக்கும் செலவு செய்ய முன்வர மாட்டான். உறவினர்கள் தன் வீட்டிற்கு வருவதை விரும்பமாட்டான். சுருக்கமாக, தன் பணம் செலவழிந்துவிடக் கூடாது என்று எண்ணுவான்.

 

ஒருவன் தன் கஞ்சத்தனத்தால் தனக்கே நல்ல முறையில் செலவு செய்துகொள்ளாமல் இருந்துவிடலாம். அல்லது தன் பிள்ளைகளுக்கும் மனைவிக்கும்கூடச் செலவு செய்யாமல் இருந்துவிடலாம். எனவேதான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “ஒருவன் தன் மனைவிக்கு ஊட்டுகிற ஒரு கவள உணவும் அவனுக்கு ஸதகா (தர்மம்)” என்று கூறினார்கள். ஆக அவன் தன் மனைவிக்குச் செய்கின்ற செலவுகளுக்குப் பதிலாக அல்லாஹ் அவனுக்கு நன்மையைத் தந்துவிடுகின்றான். எனவே அதை ஒரு செலவாகக் கருத வேண்டியதில்லை.

 

ஆக கஞ்சத்தனம் என்பது ஒரு மனிதனின் இயல்பான வாழ்க்கையையே கெடுத்துவிடுகிறது. கஞ்சன் தானும் நிம்மதியாக வாழாமல் பிறரின் சுகமான வாழ்விற்குத் தடையாகவும் இருக்கிறான். எனவே கஞ்சத்தனம் செய்வதிலிருந்து முற்றிலும் தவிர்ந்துகொள்வோம். நாமும் சுகமாக வாழ்ந்து, பிறரும் சுகமாக வாழக் காரணமாக இருப்போம். இறைவன் நம்மைக் கஞ்சத்தனத்திலிருந்து விடுவிப்பானாக.  

=============








கருத்துகள் இல்லை: