-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி
குறிப்பிட்ட தேதியில் அலுவல் தொடங்கியது. மொழிபெயர்ப்புச் செய்வதோடு, அதைத் தட்டச்சு செய்தும் கொடுத்தார். பின்னர் பிழைதிருத்தத்தையும் அவரே மேற்கொண்டார். எல்லாவற்றையும் செவ்வனே செய்து, பிரிண்ட் எடுத்து, உஸ்தாதிடம் கொண்டுசென்று காட்டினார். அதைப் பார்வையிட்ட உஸ்தாத், அங்கு தம்மோடு பணியாற்றி வருகிற மொழிபெயர்ப்பாளர் மௌலவி சித்தீக் என்பவரிடம் அதைப் பார்வையிட வழங்கினார். அவர் தம்மால் இயன்ற அளவிற்குப் பிழைகளைச் செப்பனிட்டுத் தந்தார். அதன்பின் அந்நூல் அரபுக் கல்லூரிப் பேராசிரியர் ஒருவருக்கு அனுப்பப்பட்டு, அதனை மேலாய்வு செய்துதருமாறு கோரப்பட்டது.
அவர் உரிய முறையில் இரண்டு நூல்களையும் ஒப்பிட்டுப் பார்த்து, மேலாய்வுசெய்து அனுப்பிவைத்தார். அதன்பின் அறிஞர்களிடம் வாழ்த்துரை, அணிந்துரையெல்லாம் வாங்கி, எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து, நூல் அச்சுக்குச் சென்றுவிட்டது. அதன்பின் வெளியீட்டு விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
சென்னை மாநகரின் முக்கியமான நூலகத்தோடு (லைப்ரரி) இணைந்துள்ள ஓர் அரங்கில் அந்த நூலின் முதல் பாகம் வெளியிடப்பட்டது. அறிஞர்கள் பலர் சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்து வாழ்த்திப் பேசினார்கள். எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், புத்தக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் பார்வையாளர்களாக வருகை தந்திருந்தனர். சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் பொன்னாடை போர்த்திக் கண்ணியப்படுத்தப்பட்டார்கள். மொழிபெயர்ப்பாளர் அப்துல் அஹத் அவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. அந்நேரத்தில் “அதை என் மாமுவின் கைகளிலிருந்து நான் வாங்கிக்கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்” என்று கூறித் தம் மாமுவை மேடைக்கு வரச் செய்து, அவர்மூலம் அந்த நினைவுப்பரிசைப் பெற்றுக்கொண்டார் அஹத்.
தம் தந்தையை மேடை ஏற்றவே அஹத் ஆசைப்பட்டார். ஆனால் அவருடைய தந்தை தம் வயது மூப்பின் காரணமாக அந்த நிகழ்வுக்கு வருகைதரவில்லை. தாயின்றித் தந்தையின் அரவணைப்பில்தான் அஹத் வளர்ந்துவந்தார். மற்றொரு திருமணம்கூடச் செய்துகொள்ளாமல் பிள்ளைகளின் நலனுக்காகவே வாழ்ந்த தம் தந்தையைக் கண்ணியப்படுத்த ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்தார். ஆனால் அது கைகூடவில்லை.
முதலாம் பாகம் வெளியீட்டிற்கு முன்னரே இரண்டாம் பாகத்தின் பணியைத் தொடங்கி, கால்வாசிப் பகுதியை மொழிபெயர்த்து முடித்திருந்தார். அன்று வழமைபோல் மொழிபெயர்ப்புப் பணியை மேற்கொண்டிருந்தபோது, மூமினா பதிப்பக உரிமையாளர் அஹதைத் தம் அலுவலக அறைக்கு வரச்சொன்னார். “இந்தக் கோப்பினைப் பாருங்கள். இதோ இந்த சார் உங்கள் அருகில் அமர்ந்து, பிழைகள் ஒவ்வொன்றாகச் சொல்லச் சொல்ல அதை நீங்கள் சரிசெய்து கொடுங்கள்” என்றார்.
அவர் பெயர் அலீ அஹ்மது. அவர் இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் செயலாளராக இருந்து வருகிறார். அவரோடு மற்றொரு பேராசிரியரும் வந்திருந்தார். இலக்கியக் கழகத்தின் சார்பாக ஓர் ஆய்வு நூல் வெளியிட உள்ளார்கள். அதற்காகப் பேராசிரியர்கள் பலரிடமிருந்து கட்டுரைகளை வாங்கித் தொகுத்து வந்திருந்தார்கள். அந்த நூலை மூமினா அச்சகத்தின் மூலம் வெளியிட விரும்பியே அங்கு வந்திருந்தார்கள்.
அந்தக் கோப்பினைத் திறந்து, அலீ சார் சொல்லச் சொல்லத் திருத்தம் செய்தார் அஹத். சிலவற்றை அவர் சொல்லாமலே அஹத் தாமே திருத்தம் செய்தார். அதைப் பார்த்து வியப்புற்று, “உங்களுக்குத் தமிழ் நன்றாகத் தெரிகிறதே” என்று பாராட்டினார். அதன்பின் அவர், “நாம் நடத்திவருகிற மாதப் பத்திரிகைக்கு ஒருவர் தேவைப்படுகிறார். நீங்கள் சேர்ந்து கொள்கிறீர்களா?” என்று கேட்டார்.
“சரி, என் பெயரை ஆசிரியர் குழுவில் சேர்த்துக்கொள்வீர்களா?” என்று முன்னெச்சரிக்கையோடு கேட்டார். ஏனென்றால் பலர் பணிகளை மட்டும் பெற்றுக்கொள்வார்கள். அதற்குரியவரின் பெயரை இடம்பெறச் செய்யமாட்டார்கள். அதுபோல் பல தடவை அவர் அனுபவப்பட்டிருக்கிறார். பல நூல்களைப் பிழைதிருத்தம் செய்துகொடுத்துள்ளார். அதற்கான சிறுதொகையைக் கொடுத்துவிட்டு, அப்படியே விட்டுவிடுவார்கள். இன்னவர் இதைப் பிழைதிருத்தம் செய்துகொடுத்தார் என்று பெயரைப் பதிவுசெய்வதில்லை. அதனால்தான் அவரிடம் இப்படி ஒரு கேள்வியை அஹத் கேட்டார்.
“நான் இதுவரை யார் பெயரையும் இடம்பெறச்செய்யவில்லை. இனி அதை ஒழுங்குபடுத்தி, உங்கள் பெயரைத் துணையாசிரியர் பொறுப்பில் சேர்த்துக் கொள்கிறேன்” என்றார். அதைக் கேட்ட அஹத் மகிழ்ச்சியடைந்தார். ஆக ஒருபுறம் மொழிபெயர்ப்புப் பணி; மற்றொரு புறம் ஒரு பத்திரிகையில் துணையாசிரியர் பணி எனப் பொறுப்புகள் கூடின. பதிப்பகத்தில் அமர்ந்து மொழிபெயர்ப்புப் பணியை முடித்துவிட்டு, மாலை 6 மணிக்கு மேல் வீட்டில் அமர்ந்து பத்திரிகைப் பணியை மேற்கொண்டார். அத்தோடு பிற மாதப் பத்திரிகைகளுக்கும் கட்டுரைகள் எழுதிவந்தார்.
***
காலப்போக்கில் அந்த வரலாற்று நூலின் இரண்டாம் பாகமும் வெற்றிகரமாக முடிக்கப்பட்டு, வெளியிடப்பட்டது. மூன்றாம் பாகம் பணி முடிந்து, நான்காம் பாகத்திற்கான பணியைத் தொடங்கிவிட்டார். அது நல்லவிதமாகச் சென்றுகொண்டிருந்தபோது, அங்கிருந்த பதிப்பக உரிமையாளர், அஹதுடைய கம்ப்யூட்டரில் தம்முடைய கம்ப்யூட்டரை நெட்வொர்க்கிங் செய்துகொண்டு, “வேலை செய்கிறாரா, இன்டர்நெட் பார்த்துக்கொண்டிருக்கிறாரா” என்று அவ்வப்போது அவரை வேவு பார்க்கத் தொடங்கினார். இது அஹதுக்கு அறவே பிடிக்கவில்லை.
இது குறித்துத் தம் உஸ்தாதிடம் பேசினார். “உஸ்தாத், என்மீது நம்பிக்கையில்லாதவரிடம் இனி என்னால் பணியை மேற்கொள்ள முடியாது” என்று கூறி அங்கிருந்து விடைபெறும் முடிவெடுத்தார்.
“சற்றுப் பொறு தம்பி! நான் பேசுறேன்” என்றார் உஸ்தாத்.
சில நாள்கள் கடந்தன. அங்கிருந்து செல்லும் முடிவில் இருந்ததால், வேறு பணி குறித்து யோசனை செய்துகொண்டே இருந்தார். அப்போதுதான் சென்னையில் நன்றாக இயங்கிவருகிற ஒரு பதிப்பகத்திற்கு ஆள் தேவை என்ற செய்தியை நண்பர் அபூசஹ்லான் என்பவர்மூலம் கேள்விப்பட்டார். மனச் சங்கடத்தோடு பணி செய்கிற இடத்திலிருந்து விடைபெறுவதற்கு நல்லதொரு வாய்ப்பை அல்லாஹ் உருவாக்கியிருக்கிறான் என்று கருதிய அஹத், அங்கே செல்ல முடிவெடுத்தார்.
“சம்பளம் எவ்வளவு?” என்று அந்த நண்பரிடம் கேட்டபோது, “பதினைந்தாயிரம்” என்றார்.
ஏற்கெனவே வாங்குவதோ ஒன்பதாயிரம் மட்டுமே. அதற்கே இவ்வளவு கெடுபிடி. இப்போதோ மாதம் பதினைந்தாயிரம், அத்தோடு எந்தக் கெடுபிடியும் கிடையாது. ஹதீஸ்கள் மொழிபெயர்ப்புப் பணி. ஒரு மாதத்திற்கு 250 ஹதீஸ்கள் என்ற குறிப்பிட்ட வரையறையும் உண்டு. அதனால் அதை முடித்துவிட்டு, வேறு பணிகளையும் கவனித்துக் கொள்ள வாய்ப்புண்டு. இவை அனைத்தையும் மனதில்கொண்டு மூமினா பதிப்பகத்திலிருந்து விடைபெற முடிவெடுத்தார்.
ஒவ்வொருவரும் தம்முடைய வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் குறிக்கோளாகக் கொண்டுதான் செயல்படுவார்கள். அந்த வகையில்தான் அஹத் முடிவெடுத்துள்ளார். இதை யாரும் தவறென்று சொல்ல முடியாது. ஆனால் அஹதின் முடிவு அவருடைய உஸ்தாதுக்குப் பிடிக்கவில்லை. அதன் பிறகு அஹதோடு அவர் நீண்ட காலம் பேசாமலேயே இருந்தார்.
பரக்கத் பதிப்பகத்தின் உரிமையாளருக்குச் சென்னையில் மற்றோர் இடத்தில் ஒரு சொந்தக் கட்டடம் இருந்தது. அங்கிருந்து கொண்டு பணியாற்றுமாறு கேட்டுக்கொண்டார்.
சரியென ஒப்புக்கொண்டு அங்கிருந்தபடி ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட ஹதீஸ்களை மொழிபெயர்த்து அனுப்பிவைத்தார். அபூஸஹ்லான் என்பவர் அதை மேலாய்வு செய்து, செப்பனிட்டுக் கொடுத்தபின், பரக்கத் பதிப்பகம் அதை வெளியிட்டது. அத்தோடு ‘எண்திக்குகள்’ என்ற பத்திரிகைப் பணியையும் கவனித்துக்கொண்டார். இவ்வாறே நான்காண்டுகள் நன்றாகச் சென்றன.
ஐந்தாம் ஆண்டில் பணியைத் தொடர்ந்துகொண்டிருந்தபோது, ஒரு நாள் பரக்கத் பதிப்பக உரிமையாளர்,
அஹதை நேரடியாகச் சந்தித்துப்
பேசினார். “நீங்க இங்கு வந்துதான் பணி செய்யணும் என்ற கட்டாயம் கிடையாது. வீட்டில் இருந்துகொண்டும்
செய்யலாம்; எனக்குத் தேவை பணி நல்லவிதமாக நடைபெற வேண்டும். அவ்வளவுதான்” என்றார்.
இதைக் கேட்ட அஹத் நன்கு யோசித்து ஒரு முடிவெடுத்தார். வீட்டில் இருந்துகொண்டு செய்வதைவிட, ஒரு பள்ளிவாசலில் இமாமாக இருந்துகொண்டு, அங்கிருந்து மொழிபெயர்ப்புப் பணியைச் செய்தால் நமக்கும் சமுதாயத்திற்கும் பயனுள்ளதாக இருக்குமே என்று எண்ணினார்.
அதன்படி தாம் குடியிருந்து வருகிற மஹல்லா இமாமான நூர்முஹம்மதுவிடம் சொல்லிவைத்திருந்தார். அவரும் தகவல் தெரிவிப்பதாகச் சொல்லியிருந்தார். ஒரு நாள் அஸர் தொழுகைக்குப்பின் அஹதைச் சந்தித்த அவர், வடசென்னையில் உள்ள ஒரு பள்ளிவாசலுக்கு இமாம் தேவைப்படுகிறார் என்ற செய்தியைச் சொன்னார். அவரிடம் முகவரி வாங்கிக் கொண்டு அப்பள்ளியை நோக்கிச் சென்றார். அங்கு சென்றதும் மஃக்ரிப் தொழுகை நடத்தச் சொன்னார் அப்பள்ளியின் தலைவர் கபீர் ஹாஜியார்.
தொழுகை நடத்திய விதமும் ஓதிய தொனியும் தலைவர் உள்பட மக்கள் அனைவருக்கும் பிடித்திருந்தது. எனவே அவரை அப்பள்ளிக்கு இமாமாகச் சேர்த்துக்கொண்டனர். பின்னர் அஹத் தம் குடும்பத்தோடு அந்த மஹல்லாவிற்குக் குடிபெயர்ந்தார்.
அந்தப் பள்ளியில் இமாமுக்கென ஒரு தனியறை ஒதுக்கப்பட்டது. அதில் அவர் தமது கம்ப்யூட்டரை வைத்துக்கொண்டு, மொழிபெயர்ப்புப் பணியைச் செய்துவந்தார். அஹதுக்கு இப்போது மூன்று பணிகள் சேர்ந்துகொண்டன. இமாமாக இருந்துகொண்டு அங்குள்ள பணிகளையும் கவனிக்க வேண்டும். அத்தோடு மொழிபெயர்ப்புப் பணியையும் பத்திரிகைப் பணியையும் கவனிக்க வேண்டும். ‘எண்திக்குகள்’ பத்திரிகையின் ஆக்கங்களைத் தட்டச்சு செய்வதும், அவற்றைக் கூட்டல் கழித்தல் பிழைதிருத்தம் உள்ளிட்ட எடிட்டிங் செய்வதும் அவர்தாம்.
இவ்வளவுக்கும் இடையில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் பிஎச்.டி. செய்ய விண்ணப்பம் செய்திருந்தார். அதற்கான ஆய்வேட்டைத் (தீஸிஸ்) தயார் செய்வதிலும் கவனம் செலுத்த வேண்டியிருந்தது. அதனால் ஹதீஸ்களை மொழிபெயர்ப்புச் செய்து முடித்தபின், எஞ்சியுள்ள நேரத்தில் அதற்காகப் படிப்பதிலும் ஆய்வு செய்து குறிப்புகளைத் தயாரிப்பதிலும் ஈடுபட்டார். ஈராண்டுகள் கடுமையான உழைப்பிற்குப்பின் ஆய்வேட்டைத் தயார் செய்துமுடித்தார்.
அதற்குள் தம்முடைய ஆய்வு வழிகாட்டி (கைடு) நிஸார் அஹ்மத் ஸாப் தம் பணியிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டார். எனவே அவரை செல்பேசியில் தொடர்புகொண்டு பேசியபோது, “அந்த தீஸிஸை எடுத்துக்கொண்டு, நாளைக்கு என்னை என் வீட்டில் வந்து சந்திங்க மவ்லவி ஸாப்” என்று கண்ணியமாகக் கூறினார். அவரின் கட்டளைக்கேற்ப அவருடைய சொந்த ஊருக்குப் புறப்பட்டார். அங்கு சென்று தம்முடைய தீஸிஸை அவரிடம் காண்பித்தார். ஆய்வேட்டைப் பார்வையிட்ட வழிகாட்டி, ஆங்காங்கே சிற்சில தவறுகளைச் சுட்டிக்காட்டி, அதையெல்லாம் சரிசெய்துகொடுத்தார். “இதையெல்லாம் சரிசெய்து டைப் செய்துவிட்டு, இறுதியாக ஐந்து நகல்கள் பைண்டிங் செய்துகொண்டுவாங்க மவ்லவி ஸாப்” என்று கூறி அனுப்பிவைத்தார். அவர் தம் வீட்டிலேயே பகலுணவைச் சாப்பிட்டுவிட்டுப் புறப்படுமாறு அன்போடு கூறி, நல்லவிதமாக உபசரித்து வழியனுப்பி வைத்தார்.
***
ஊருக்கு வந்துசேர்ந்தபின் மறுநாள் அவர்தம் வழிகாட்டி கூறியபடி ஒரு பிரிண்ட் அவ்ட் எடுத்து, அதை நான்கு நகல்கள் ஜெராக்ஸ் எடுத்தார். மொத்தம் ஐந்து நகல்கள் ஆயிற்று. எல்லாவற்றையும் அந்த ஜெராக்ஸ் கடையிலேயே பைண்டிங் செய்து கொடுத்தார்கள். அதற்கான தொகையைச் செலுத்திவிட்டு, மீண்டும் தம் வழிகாட்டியைச் சந்திக்கச் சென்றார். குறிப்பிட்ட தேதியில் அவர் சென்னை வருவதாகவும், அரபுத்துறையில் வந்து சந்திக்குமாறும் கூறியிருந்தார். அவர் சொன்னபடி அஹத் தம் ஆய்வேட்டை எடுத்துக்கொண்டு, வழிகாட்டியைச் சந்திக்கச் சென்றார்.
அவர் எல்லாவற்றையும் பார்வையிட்டுவிட்டு, ஒரு கடிதம் கொடுத்து, இதையெல்லாம் பிஎச்.டி. துறையில் சமர்ப்பிக்குமாறு கூறினார். எல்லாவற்றையும் கொண்டு சென்று பிஎச்.டி. துறையில் சமர்ப்பித்துவிட்டார். இதோ சமர்ப்பித்து ஈராண்டுகள் சென்றுவிட்டன. மீண்டும் மீண்டும் அங்கு சென்று, “என்னுடைய பிஎச்.டி. ரிசல்ட் என்னாச்சு?” என்று கேட்டுக்கொண்டே இருந்தார். “உள்நாட்டு ரிசல்ட் வந்துருச்சு; வெளிநாட்டு ரிசல்ட் மட்டும் இன்னும் வரல” என்று சொன்னார்கள். அதிலேயே மூன்றாண்டுகள் சென்றுவிட்டன.
பிறகு அஹத் மீண்டும் மீண்டும் கேட்டபின், பிஎச்.டி. துறையிலிருந்து ஆய்வு வழிகாட்டி (கைடு)க்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. அவர் குறிப்பிட்ட அயல்நாட்டுத் தேர்வாள (ஃபாரீன் எக்ஸாமின)ரைத் தொடர்புகொண்டு பேசியபோது, “நான் இடம் மாறியதில் அந்தப் பிரதி எங்கோ தொலைந்துபோய்விட்டது. ஆகவே நான் சென்னை வரும்போது என்னிடம் ஒரு பிரதி கொண்டுவந்து கொடுக்கச் சொல்லுங்கள். நான் உடனடியாக ரிசல்ட்டை அனுப்பி வைக்கிறேன். மஆஃப் செய்ங்க” என்று தாழ்குரலில் கூறினார். வயது மூப்பின் காரணமாக ஆய்வு வழிகாட்டி எதுவும் பேசாமல் இருந்துவிட்டார். அதன்பின் அஹதிடமிருந்து ஒரு பிரதி பெற்று அந்த அயல்நாட்டுத் தேர்வாளருக்கு அனுப்பிவைத்தார். அதன்பிறகு ஒரே வாரத்தில் ரிசல்ட் வந்துவிட்டது.
***
வடசென்னையிலுள்ள பள்ளிவாசலில் சேர்ந்த பிறகுதான் அதற்கான நேர்முக வாய்மொழித் தேர்வு (வைவா) ஆணை வந்தது. அந்த நிகழ்வில் பங்குகொள்ள அந்தப் பள்ளிவாசலின் தலைவர் கபீர் தலைமையில் நிர்வாகிகளும் பொதுமக்கள் சிலரும் வருகைபுரிந்திருந்தனர். வைவா நல்லபடியாக நடைபெற்று முடிந்தது. முனைவர் பட்ட ஆய்வுக்கான வழிகாட்டியாக இருந்த டாக்டர் நிஸார் அஹ்மத் ஸாப் தம் மாணவரான அஹதைப் பாராட்டி உரையாற்றினார். பார்வையாளர்களாக வருகை தந்திருந்த முஹம்மது அலீ ஐபிஎஸ் “இதுபோன்ற ஆய்வுகள் தமிழில் நூலாக வெளிவந்தால் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்” என்ற கருத்தை முன்வைத்தார்.
அந்தக் கருத்தை உள்வாங்கிய அஹத், பொருளாதார உதவி செய்தால் இந்த ஆய்வேட்டைத் தமிழில் மொழிபெயர்த்துத் தருவதாக உறுதியளித்தார். எல்லோரின் கேள்விகளுக்கும் உரிய முறையில் ஆய்வாளர் அஹத் பதிலளித்தார். அதன்பிறகு புறத்தேர்வாளராக வருகை புரிந்திருந்த முனைவர் இப்ராஹீம், “இந்த ஆய்வு மாணவர் தம் ஆய்வேட்டைச் சமர்ப்பித்து, வாய்மொழி நேர்முகத் தேர்வில் வெற்றிபெற்றுள்ளார். எனவே இவருக்கு ‘முனைவர்’ பட்டம் வழங்குவதற்குச் சென்னைப் பல்கலைக் கழகத்திற்கு நான் பரிந்துரை செய்கிறேன்” என்று அறிவித்தார்.
அதைக் கேட்ட அனைவரும் ‘பாரக்கல்லாஹ்’ என்று கூறி வாழ்த்தினர். ஒருவர்பின் ஒருவராக அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். பிறகு அவர் பணியாற்றுகிற பள்ளிவாசல் தலைவர் மேடைக்கு வந்து, ஆரத் தழுவினார். பின்னர் அவருக்கு சால்வை அணிவித்து, தம் பாராட்டையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார். பத்திரிகையாளர் ரசூல், அவரைத் தனியாக அழைத்துச் சென்று, நிழற்படம் எடுத்துக்கொண்டு அதைத் தம் பத்திரிகையில் பிரசுரிக்கவும் செய்தார். அத்துடன் அஹத் தாம் பணியாற்றுகிற ‘எண்திக்குகள்’ பத்திரிகையில் வாய்மொழித் தேர்வில் வெற்றிபெற்றது குறித்த செய்தியை வெளியிட்டார். அந்தச் செய்தியைப் பார்த்த பலர் செல்பேசி வாயிலாகத் தம் வாழ்த்துகளைச் சொன்னார்கள்.
இதன்பின் அந்த மஹல்லாவில் அஹத் இமாம்மீது மிகுந்த மரியாதை ஏற்பட்டது. நம் பள்ளிவாசல்
இமாம் ஒரு பிஎச்.டி. பட்டதாரி என்று நினைத்துப் பெருமிதம் அடைந்தனர். பிற மஹல்லாவாசிகளுடன்
பேசும்போதும் அது குறித்துப் பெருமையாகப் பேசிவந்தனர்.
அது மட்டுமின்றி அவர் அந்த மஹல்லாவின் சிறுவர்-சிறுமியருக்கான குர்ஆன் வகுப்பைச் சிறப்பாக நடத்தி வந்தார். ஆண்டுதோறும் பிள்ளைகளுக்கான ஆண்டுவிழா நடத்தி, அப்பிள்ளைகள்மூலம் சமுதாய மக்கள் சீர்திருத்தம் அடைவதற்கான கருத்துகளைப் பரப்பினார். அந்த மஹல்லாவில் பரவியிருந்த மூடப்பழக்கங்களை ஒழித்தார். குறிப்பாக எதற்கெடுத்தாலும் கயிறு முடிந்து போட்டுக்கொள்ளும் பழக்கத்தை ஒழிக்க அயராது பாடுபட்டார். கருப்புக் கயிறுக்கு ஒரு விலை, சிவப்புக் கயிறுக்கு ஒரு விலை என்று முஸ்லிம்கள், இந்துக்கள் என அனைவரிடமும் சகட்டுமேனிக்கு வாங்கிக்கொண்டிருந்தார் அங்கிருந்த முஅத்தின். அதையெல்லாம் ஒழித்து, வெறுமனே திருக்குர்ஆன் வசனங்களை ஓதி ஊதினால் நிவாரணம் கிடைக்கும் என்று கூறி மக்கள் மனங்களில் நம்பிக்கையை வளர்த்தார்.
ஓதி ஊதிய பின் மக்கள், பத்து, இருபது என்று தரும் அன்பளிப்புகளை வாங்க மறுத்து, “முழுமையாக நிவாரணம் அடைந்தபின் நீங்கள் மகிழ்ச்சியோடு தரும் அன்பளிப்பைத்தான் நான் ஏற்றுக்கொள்வேன்; நீங்கள் சோகத்தோடும் நோயோடும் இருந்து, துக்கத்தோடு தரும் பணம் எனக்கு வேண்டாம்” என்று கூறிவிடுவார். இது மக்கள் மத்தியில் அவர்மீது நம்பிக்கையை ஏற்படுத்தியது.
நோய் குணமானதும் பலரும் வந்து, இன்முகத்தோடு, “இந்தாங்க சாமி! இதை வாங்கிக்கங்க” என்று பத்து, இருபதை நீட்டும்போது, “என்னை ‘சாமி’ என்று சொல்லக்கூடாது; நானும் ஒரு மனிதன்தான்; என்னை இமாம் என்றே சொல்லுங்க” என்று இந்துச் சகோதர, சகோதரிகளுக்கு அறிவுரை கூறுவார். இதையெல்லாம் பார்க்கும் மஹல்லா மக்களுக்கு அஹத் இமாம்மீது மிகுந்த மரியாதை ஏற்பட்டது.
அந்த மஹல்லாவில் ஏழைகள் மிகுதியாக வசித்துவந்தனர். அவர்களுள் வறுமைக் கோட்டிற்குக்கீழ் உள்ளவர்களையும் கைம்பெண்களையும் மாற்றுத்திறனாளிகளையும் கண்டறிந்து அவர்களுக்கு அவ்வப்போது உதவிகள் செய்துவந்தார். பிறர் மூலம் பொருளாதார உதவிகளைப் பெற்றுக்கொடுத்தார். ரமளான் மாதத்தில் பலர் ஸகாத் வழங்குவது எல்லா ஊர்களிலும் உள்ள பழக்கம்தான். அச்சமயத்தில் செல்வர்கள் வழங்குகின்ற பணத்தையெல்லாம் தாமே பெற்றுக்கொண்டு சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணாமல் நம்மைவிடக் கீழ் நிலையில் உள்ளவர்களுக்கு அதை வசூலித்துக் கொடுக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தை அப்பள்ளியின் தலைவர் கபீரிடம் கூறினார்.
“உங்கள் விருப்பம்போல் செய்யுங்க இமாம் ஸாப்” என்று அவர் கூறிவிட்டார். அதன்பின் ‘ஸகாத் பெட்டி’ ஒன்றை அப்பள்ளியில் வைத்து, “நீங்கள் உங்கள் ஸகாத் பணத்தை இந்தப் பெட்டியில் போடுங்கள்; அது இங்குள்ள ஏழைகளுக்குப் பள்ளியின் சார்பாக வழங்கப்படும்” என்று ஜும்ஆவில் அறிவிப்புச் செய்துவிட்டார். மக்களும் தத்தம் ஸகாத் பணத்தை அப்பெட்டியில் போட்டனர். அதன்பின் மக்கள் தம் ஃபித்ராவை வழங்குவதற்காக, அதற்கெனத் தனியாக ஒரு பெட்டி வைத்து, அந்தப் பணமும் அரிசியும் வசூல் செய்யப்பட்டன. எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து, எண்ணிப் பார்த்ததில் கணிசமான தொகை சேர்ந்தது. அத்தோடு அரிசியும் குவிந்திருந்தது.
எல்லாவற்றையும் பங்கிட்டு, ஏற்கெனவே தயாரித்து வைக்கப்பட்டிருந்த பட்டியலில் உள்ளோரை மட்டும் தொலைபேசியில் தொடர்புகொண்டு பள்ளிக்கு வரச்சொல்லி பணமும் அரிசியும் வழங்கப்பட்டன. இதைப் பார்த்த நிர்வாகிகள், “இதற்குமுன் நம் பள்ளியில் இதுபோன்ற நடைமுறை இருந்ததில்லை. அஹத் இமாம்தான் இதுமாதிரியான செயல்களையெல்லாம் செய்கிறார்” என்று பேசிக்கொண்டார்கள். “ஆமா பாய், இவருக்குப் பணத்தின்மீதான ஆசை இல்லை; பொதுத்தொண்டு செய்யும் எண்ணம்தான் இருக்கு” என்று மற்றொருவர் கூறினார்.
***
சில நேரங்களில் அந்த மஹல்லாவில் உள்ள செல்வர்கள் தம் வீட்டில் ஏதேனும் நிகழ்வில் பிரியாணி எஞ்சிவிட்டால், அல்லது அகீகா கொடுத்தால் அஹத் இமாமிடம் வந்து, ‘ஏழைகள் பட்டியலில்’ உள்ள பெயர்களையும் தொடர்பு எண்களையும் பெற்றுச் சென்று, அவர்களைத் தொடர்புகொண்டு அவற்றைக் கொடுப்பார்கள். சிலவேளைகளில் பொருளாதார உதவிகளையும் செய்வார்கள். அஹத் இமாம் தயாரித்து வைத்திருந்த அந்தப் பட்டியல் செல்வர்கள் பலர் தகுதியானவர்களுக்குத் தர்மம் செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியது.
அதன்பிறகு அந்த மஹல்லாவில் நிர்வாகத்தின் சார்பாகவே ‘ஜாமிஆ பைத்துல் மால்’ உருவாக்கப்பட்டு, அதன்மூலம் ஸகாத் வசூலிக்கப்பட்டு, அது ஏழைகளுக்கும் விதவைப் பெண்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
அங்கு பள்ளிவாசலின் பின்புறம் இமாமுக்கென ஒதுக்கப்பட்ட அறையில் அமர்ந்துகொண்டு, பரக்கத் பதிப்பகத்திற்கான பணிகளையெல்லாம் முடித்துவிட்டார். பிறகு, “வேறு ஏதாவது மொழிபெயர்க்க வேண்டியுள்ளதா?” என்று கேட்டபோது, “இப்போதைக்கு எதுவும் இல்லை” என்று அதன் உரிமையாளர் கூறிவிட்டார்.
பின்னர் ஒரு நாள் அப்துல் மாலிக் என்பவர் அஹத் இமாமைத் தொடர்புகொண்டு, “அரபியில் ஒரு மருத்துவ நூல் உள்ளது. அதைத் தமிழாக்கம் செய்து தருகிறீர்களா?” என்று கேட்டார். “இன் ஷாஅல்லாஹ் செய்யலாம்” என்று ஒத்துக்கொண்டார். ஒரு நாள் அவர் நேரடியாக வந்து, அவரைச் சந்தித்து அந்த நூலைக் கொடுத்துவிட்டு, முன்பணமாகச் சில ஆயிரங்களையும் வழங்கிவிட்டுச் சென்றார். மருத்துவ வார்த்தைகளைத் தமிழுக்குக் கொண்டுவர மிகுந்த சிரமப்பட்டார். முதலில் அரபி வார்த்தைக்கு நிகரான ஆங்கில வார்த்தை என்னவென்று பார்த்து, பின்னர் அதற்கு நிகரான தமிழ் வார்த்தையைக் கண்டறிந்து, அதை உறுதிப்படுத்திக்கொண்டு எழுதினார். இவ்வாறு செய்ததால் அந்நூலை முடிக்க ஈராண்டுகள் ஆயிற்று.
பிறகு ஒரு தடவை கோவையிலிருந்து அமீர் என்பவர் தொடர்புகொண்டு, தாம் ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் செய்த நூலை மேலாய்வு செய்து, செம்மைப்படுத்தித் தருமாறு கேட்டுக்கொண்டார். அதை ஏற்றுக்கொண்ட அஹத் இமாம், அந்நூலை நல்லவிதமாகச் செம்மைப்படுத்திக் கொடுத்தார். ‘திருக்குர்ஆன் கலைக் களஞ்சியம்’ என்ற பெயரில் அது வெளிவந்து விற்பனையில் சாதனை படைத்தது.
***
ஒரு நாள் ஃபஜ்ர் தொழுகையில் கஹ்ஃபு சூரா ஓதினார். சில வசனங்களில் அவருக்குத் தடுமாற்றம் ஏற்பட்டது. தொழுகையாளிகளுள் ஒருவரான ரஹீம் என்பவர், தொழுகைக்குப் பின் அதைச் சுட்டிக்காட்டினார். அதை ஆமோதித்த அஹத் இமாம், “ஆமா ரஹீம் பாய், தொழுகையில் குர்ஆன் வசனங்களை ஓதும்போது சில நேரங்களில் தடுமாற்றம் வரத்தான் செய்யும். அதைப் பெரிதுபடுத்தக் கூடாது. ஓர் இமாம் தொழுகைக்காக நிற்கும் இடம் இருக்கிறதே அது ‘மிஹ்ராப்’ என்று அழைக்கப்படுகிறது. ‘மிஹ்ராப்’ என்றால் சண்டையிடுமிடம் என்று பொருள். அதாவது ஷைத்தானோடு சண்டையிடுமிடம். அவன் அந்த இமாமைக் குழப்புவான்; தடுமாற்றத்தில் ஆழ்த்துவான். அதையெல்லாம் தாண்டித்தான் ஓர் இமாம் தொழுகை நடத்துகிறார் என்று தெளிவுபடச் சொன்னார்.
அதைக் கேட்ட ரஹீம் உள்படப் பலர், “அப்படியா இமாம் ஸாப், இப்படி விளக்கமா யாரும் இதுவரை எங்களுக்குச் சொன்னதில்லையே?” என்றனர். அதன்பின் ரஹீம் பாய், “இனி இது மாதிரி தடுமாற்றம் ஏற்பட்டால், கேள்வியெல்லாம் கேட்கமாட்டேன் இமாம் ஸாப்” என்று பணிவுடன் பதில் சொன்னார். ரஹீம் பாய் ஒவ்வொரு வாரமும் ஜும்ஆ நாளன்று வழமையாக சூரா கஹ்ஃபு ஓதுபவர். அவ்வாறு ஓதி ஓதியே அந்த சூரா அவருக்கு மனனம் ஆகிவிட்டது. இவ்வாறு பலர் பற்பல சூராக்களை வழமையாக ஓதவும் மனனம் செய்யவும் அஹத் இமாம் மிகப் பெரும் காரணமாக அமைந்தார். ஏனெனில் அவருடைய சொற்பொழிவில் அதுபோன்ற செய்திகளை மிகுதியாகச் சொல்லிவந்தார்.
அவர் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அந்த மஸ்ஜிதில் உள்ள கரும்பலகையில் எழுதிப்போடுகிற குர்ஆன் வசனங்களையும் ஹதீஸ்களையும் பார்க்கின்ற ஒவ்வொருவரும் ஃபோட்டோ எடுத்துக்கொள்வார்கள். ஏனென்றால் அவரது கையெழுத்து அவ்வளவு அழகாக இருக்கும். படித்தவுடன் எளிதாகப் புரிகின்ற ஹதீஸ்களை மட்டுமே தேர்வு செய்து எழுதிப்போடுவார். அன்றைய சொற்பொழிவின் மிக முக்கியமான வசனங்களையும் ஹதீஸ்களையும் எழுதிப்போடுவதால் அதைப் படிக்கின்ற பலர், இன்றைய சொற்பொழிவின் தலைப்பு என்னவென்பதை ஊகித்துக்கொள்வார்கள். அன்று ஜும்ஆவுக்கு அங்கு வராதவர்களும் கரும்பலகையில் எழுதப்பட்டுள்ள செய்திகளைப் படிக்கிறபோது, அந்த வாரம் என்ன பயான் என்பதை அறிந்துகொள்வார்கள்.
அவர் எழுதுகிறபோது சிலர் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பார்கள். அவர் எழுதும் முறையைப் பார்த்து இரசிப்பார்கள். “நீங்க எப்படி இவ்வளவு அழகா எழுதுறீங்க இமாம் ஸாப்” என்று யாரேனும் கேட்டால், சிறு வயதிலிருந்தே புத்தகத்தில் உள்ள மாதிரி எழுதி எழுதிப் பழகுவேன். அந்தப் பழக்கம்தான் இப்படி எழுதுவதற்கான காரணம்” என்பார். அது மட்டுமில்லாமல் நாங்க ஓதுற காலத்துல அதீக் என்று ஓர் ஓவியர் இருந்தார். அவர் எங்களுக்கு எளிதாக எழுதும் முறையைக் கற்றுக்கொடுத்தார். அதை அப்படியே பார்த்துப் பழகிக்கொண்டேன்” என்று கற்பித்தவரின் பெயரை மறக்காமல் நன்றியுணர்வோடு கூறுவார்.
-தொடரும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக