சனி, 10 ஏப்ரல், 2021

பலதரப்பட்ட நோன்புகள்

பலதரப்பட்ட நோன்புகள் 
   
-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

------------

நம்மைப் படைத்த இறைவனுக்காக உண்ணாமல், பருகாமல், உடலுறவு கொள்ளாமல் இருப்பதே நோன்பாகும். அது வைகறையிலிருந்து தொடங்கி அந்தி மறையும் வரை நீடிக்கிறது. நோன்பு என்பது இஸ்லாமிய மார்க்கத்தின் ஐந்து தூண்களுள் ஒன்றாகும். இது ஹிஜ்ரீ 2ஆம் ஆண்டு கடமையாக்கப்பட்டது. இருப்பினும் அதற்குமுன்னரே நோன்பு இருந்து வருகிறது.


நோன்பு குறித்து அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறியுள்ளான்: உங்களுள் யார் அம்மாதத்தை (ரமளான்) அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கட்டும். (2: 185) 


இந்த நோன்பு இந்தச் சமுதாயத்திற்கு மட்டுமின்றி முந்தைய சமுதாயத்திற்கும் கடமையாக்கப்பட்டிருந்தது என்பதைத் திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது: இறைநம்பிக்கை கொண்டோரே! உங்களுக்கு முன்னுள்ளவர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்தது போல் உங்கள்மீதும் நோன்பு நோற்பது கடமையாக்கப்பட்டுள்ளது. (அதனால்) நீங்கள் இறை அச்சமுடையவர்களாக ஆகலாம். (2: 183)


பருவமடைந்த ஒவ்வோர் ஆணும் பெண்ணும் ரமளான் மாதம் முழுவதும் நோன்பு நோற்பது கடமையாகும்.  சிலருக்கு இதில் விதிவிலக்கு உண்டு. ரமளான் மாதத்தில் மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள், பிரசவ உதிரப்போக்கு ஏற்பட்ட பெண்கள், பாலூட்டும் அன்னையர்கள், பயணிகள், நோய்வாய்ப்பட்டிருந்தோர் முதலியோர் நோன்பு நோற்காமல் இருக்கச் சலுகை வழங்கப்படுகிறது. அத்தகையோர் ரமளான் மாதம் கழிந்துபின் பிற மாதங்களில் தமக்குத் தோதுவான நாள்களில், விடுபட்டுப்போன நோன்புகளை களா-நிறைவேற்ற வேண்டும். இதற்கு ‘களா நோன்பு’ என்று கூறப்படுகிறது.  


விடுபட்டுப்போன நோன்பைப் பிற நாள்களில் களா-நிறைவேற்ற வேண்டும் என்று அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்: (உங்களுள்) யாராவது நோயாளியாகவோ பயணத்திலோ இருந்தால் (ரமளான் அல்லாத) மற்ற நாள்களில் (விட்டுப்போன நாள்களின் நோன்பைக்) கணக்கிட்டு (நோற்று) விடட்டும். (2: 185)


ஆறு நோன்பு: ரமளான் மாத நோன்பு நோற்று முடிந்து ஷவ்வால் பிறை 1 அன்று ஈத் பெருநாள் கொண்டாடிய கையோடு அன்று இரவே ஸஹர் சாப்பிட்டு, மறுநாள் முதல் 6 நாள்கள் வரை நோற்கப்படுகிற நோன்பே ‘ஆறு நோன்பு’ என்று சொல்லப்படுகிறது. இந்த ஆறு நோன்பைத் தொடர்படியாக ஆறு நாள்கள் நோற்க வேண்டும்.  அதேநேரத்தில் அதற்கான வாய்ப்பைப் பெறாதவர்கள் அந்த மாதத்திற்குள் ஏதேனும் ஆறு நாள்கள் நோற்றுக்கொள்ளலாம் என்று மார்க்க அறிஞர்கள் கூறியுள்ளார்கள்.


இதனுடைய சிறப்பென்ன என்பதைப் பார்ப்போம். “ரமளான் மாதம் நோன்பு நோற்று அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு நோற்றவர், காலமெல்லாம் நோன்பு நோற்றவரைப் போன்றவராவார்” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (நூல்: முஸ்லிம்: 2159)


அதாவது ஒரு நற்செயலுக்கு, அதைப் போன்ற பத்து மடங்கு நன்மை உண்டு. அதன்படி, ரமளான் ஒரு மாதம் நோன்பு நோற்பதற்கு வருடத்தில் 10 மாதம் நோன்பு நோற்ற நன்மையும், ஷவ்வால் மாதத்தில் நோற்கும் ஆறு நோன்பிற்கு 60 நாட்கள் (2 மாதம்) நோன்பு நோற்ற நன்மையும், ஆக மொத்தம் 12 மாதங்கள் (ஒரு வருடம்) நோன்பு நோற்ற நன்மையும் கிடைக்கும் என்ற விளக்கவுரை அல்மின்ஹாஜ் எனும் நூலில் காணப்படுகிறது.

 
சுன்னத்தான நோன்புகள்: முஹர்ரம் பத்து-ஆஷூரா நாளில் நோற்கின்ற நோன்பு சுன்னத் ஆகும். இந்த ஆஷூரா நோன்பு ரமளான் நோன்பு கடமையாக்கப்படுவதற்குமுன் மிக முக்கியமான இடத்தைப் பெற்றிருந்தது.  அதன்பின் ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்டபின் அதன் முக்கியத்துவம் குறையத் தொடங்கியது. இருப்பினும் அதற்கான நன்மையும் சிறப்பும் குறையவில்லை.


ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறியதாவது: குறைஷி குலத்தினர் அறியாமைக் காலத்தில் ஆஷூரா நாளில் நோன்பு நோற்றுவந்தனர். ரமளான் நோன்பு கடமையாக்கப்படும் வரை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் ஆஷூரா நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள். (ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்ட) பின்னர் "(ஆஷூரா நாளின் நோன்பை) நோற்க விரும்புபவர் அதை நோற்கட்டும்! விட்டுவிட விரும்புபவர் அதை விட்டுவிடட்டும்!'' எனக் கூறினார்கள். (நூல்: புகாரீ: 1893) 


ஆக சுன்னத்தான நோன்புகளுள் ஒன்றாகக் கருதப்படுகிற ஆஷூரா நாள் நோன்பை விரும்பியோர் நன்மையைக் கருதி நோற்கலாம். நோற்க வாய்ப்பில்லாதோர் அதை விட்டுவிடலாம். நோன்பு நோற்காதவரை நாம் குறை சொல்லக்கூடாது. ஆஷூரா நோன்பு மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் காலத்திலிருந்தே நோற்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 


அரஃபா நோன்பு: துல்ஹஜ் மாதம் 9ஆம் நாள் அரஃபா நாளன்று ஹாஜிகள் அல்லாதோர் நோற்கும் நோன்பே அரஃபா நோன்பாகும்.  


“...துல்ஹஜ் ஒன்பதாவது நாள் (அரஃபா) அன்று நோன்பு நோற்பதை, அதற்கு முந்தைய ஓராண்டிற்கும் அதற்குப் பிந்தைய ஓராண்டிற்கும் பாவப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என்று நான் எதிர்பார்க்கிறேன்...” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (நூல்: முஸ்லிம்: 2151)


பராஅத் நோன்பு: ஷஅபான் 15ஆம் நாள் நோற்கப்படுவது பராஅத் நோன்பு ஆகும். இதை நோற்கலாமா கூடாதா என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது. இருசாராரும் தமக்குரிய ஆதாரத்தை முன்வைக்கின்றனர். இருப்பினும் நன்மையைக் கருதி நஃபில் என்ற அடிப்படையில் நோற்பதில் தவறில்லை. ஆனால் அதை பித்அத் என்று சொல்வதைத் தவிர்த்துக்கொள்ளலாம். 
நோற்கக் கூடாது என்று கூறுவோர் முன்வைக்கும் ஆதாரம்: “ஷஅபான் அரைத் திங்கள் கழிந்துவிட்டால் நீங்கள் நோன்பு நோற்காதீர்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (நூல்: ஷரஹுஸ்ஸுன்னா லில்பஃகவீ: 1721) 


நோற்கலாம் என்று கூறுவோர் முன்வைக்கும் ஆதாரமும் மேற்கண்ட நபிமொழிதான். அவர்கள் அதற்கு இவ்வாறு விளக்கம் சொல்கிறார்கள். அதாவது அரைத்திங்கள் என்பது 15 ஆம் நாளையும் உட்கொண்டதுதான்.  எனவே 15ஆம் நாளில் நோற்கலாம். 16ஆம் நாளில்தான் நோற்கக்கூடாது. ஆக ஷஅபான் 15ஆம் நாள் நோற்பதை பித்அத் என்று சொல்வதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். அவரவர் எண்ணப்படி நோன்பு நோற்றவருக்கு நன்மை கிடைத்துவிடும். 


மிஅராஜ் நோன்பு: ரஜப் 27ஆம் நாள் அன்று நோற்கப்படுகிற நோன்பு மிஅராஜ் நோன்பு எனப்படுகிறது. இந்த நோன்பு ஹதீஸ் நூல்களில் பதிவு செய்யப்படவில்லை. எனினும் மக்கள் சிலர் இந்நாளில் நோன்பு நோற்று வருகின்றனர். எனவே அதை பித்அத் என்று சொல்லாமல் நஃபிலான நோன்பை நோற்கிறார்கள் என்று நாம் எடுத்துக்கொள்ளலாம். ஏனென்றால் நஃபிலான நோன்பு எப்போது வேண்டுமானாலும் நோற்கலாம் அல்லவா? 


அய்யாமுல் பீள் நோன்பு: ஒவ்வொரு மாதமும் பிறை 13, 14, 15 ஆகிய (பௌர்ணமி) வெளிச்ச நாள்களில் (அய்யாமுல் பீள்) நோற்கப்படுகிற  நோன்புக்கு அய்யாமுல் பீள் நோன்பு என்று பெயர்.  சிலர் 12, 13, 14 ஆகிய மூன்று நாள்கள் என்கிறார்கள். வேறு சிலர் பிறை 1, 11, 21 ஆகிய மூன்று நாள்கள் என்று கூறியுள்ளார்கள். இருப்பினும் முதற்கருத்தே சரியானது எனப் பெரும்பாலான அறிஞர்கள் கூறுகின்றார்கள்.


அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது: ஒவ்வொரு மாதமும் மூன்று நாள்கள் நோன்பு நோற்குமாறும், "ளுஹா' நேரத்தில் இரண்டு ரக்அத்கள் தொழுமாறும், உறங்குவதற்கு முன் வித்ர் தொழுகையைத் தொழுதுவிடுமாறும் இந்த மூன்று விஷயங்களை என் உற்ற தோழர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  எனக்கு அறிவுறுத்தினார்கள். (நூல்: புகாரீ: 1981) 

‘அய்யாமுல் பீள் நோன்பு’ என்ற தலைப்பின்கீழ் இந்த ஹதீஸை இமாம் புகாரீ ரஹிமஹுல்லாஹ் பதிவு செய்துள்ளார். அதிலிருந்தே இதன் சிறப்பு அறியப்படுகிறது. 
வாரந்தோறும் நோன்பு: வாரந்தோறும் திங்கள்கிழமை மட்டும் அல்லது திங்கள்கிழமையும் வியாழக்கிழமையும் நோன்பு நோற்பது நஃபிலான-உபரியான நோன்பாகும். நபியவர்களே வாரந்தோறும் திங்கள்கிழமை நோன்பு நோற்றுள்ளதாக நபிமொழித் தொகுப்பு நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 


அபூகத்தாதா அல்அன்ஸாரீ ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம், திங்கட்கிழமை நோன்பு நோற்பது குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு "அன்றுதான் நான் பிறந்தேன்; அதில்தான் எனக்குக் குர்ஆன் (முதன்முதலில்) அருளப்பெற்றது'' என்று கூறினார்கள். (நூல்: முஸ்லிம்: 2153) 


 மாதந்தோறும் நோற்கின்ற நோன்பைத்தான் நபியவர்கள் திங்கள்கிழமையும் வியாழக்கிழமையும் நோற்றுள்ளார்கள். வாரந்தோறும் தனியாகவும் மாதந்தோறும் தனியாகவும் நோற்கவில்லை என்பதை வேறு சில நபிமொழிகள்மூலம் அறிய முடிகிறது.

 அதாவது அய்யாமுல் பீள் எனும் 13, 14, 15 ஆகிய மூன்று நாள்களைத் தொடர்படியாக நோற்காமல் முதல் வாரத்தில் திங்கள், வியாழனும் அடுத்த வாரத்தில் திங்கள் அல்லது வியாழனும் நோற்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்கள். நபியவர்கள் இவ்வாறு தொடர்ந்து செய்வதைக் கண்ட உஸாமா பின் ஸைத் ரளியல்லாஹு அன்ஹு அல்லாஹ்வின் தூதர்  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் அந்த இரண்டு நாள்கள் மட்டும் தவறாமல் நோன்பு நோற்கின்றீர்களே?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “எந்த இரு நாட்கள்?'' என்று கேட்டார்கள். “திங்கள், வியாழன் ஆகிய கிழமைகள்தாம்” என்றார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "அந்த இரு நாட்களில்தான் அகிலங்களின் அதிபதியிடம் நல்லறங்கள் எடுத்துக் காட்டப்படுகின்றன. ஆகவே நான், நோன்பு நோற்ற நிலையில் என் நல்லறம் எடுத்துக் காட்டப்படுவதையே விரும்புகிறேன்'' என்று கூறினார்கள். (நூல்: நஸாயீ: 2318) 



ஆக நபியவர்கள் திங்கள்கிழமை நோற்ற காரணம் அது அவர்களின் பிறந்த நாள் என்பதற்காகவாகும். வியாழக்கிழமை நோன்பு நோற்ற காரணம்  அன்றுதான் நம்முடைய நல்லறங்கள் அல்லாஹ்வின் சந்நிதானத்தில் எடுத்துக் காட்டப்படுகின்றன என்பதற்காகவாகும்.

 
ஒரு நாள் விட்டு: வாரந்தோறும் நோன்பு, மாதந்தோறும் நோன்பு என்று பார்த்தோம். ஆனால் ஒருவர் இன்னும் அதிகமாக நோன்பு நோற்க விரும்புகிறார் என்றால் அவர் என்ன செய்யலாம். அவர் ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பு நோற்கலாம். இஸ்லாமிய ஷரீஅத்தில் அதற்கான அனுமதி அவருக்குண்டு. 

அதற்கான சான்றைக் காண்போம். 
அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது: “அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உயிருடனிருக்கும்வரை பகலெல்லாம் நோன்பு நோற்று இரவெல்லாம் நின்று வணங்குவேன்” என்று நான் கூறிய செய்தி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு எட்டியது. (இது பற்றி அவர்கள் என்னிடம் கேட்டபோது) “என் தந்தையும் தாயும்  தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! நான் அவ்வாறு கூறியது உண்மையே!'' என்றேன். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “இது உம்மால் முடியாது! (சில நாள்கள்) நோன்பு நோற்றுக்கொள்; (சில நாள்கள்) நோன்பை விட்டுவிடு! (சிறிது நேரம்) தொழு; (சிறிது நேரம்) உறங்கு! ஒவ்வொரு மாதமும் மூன்று நாள்கள் நோன்பு நோற்றுக்கொள்! ஏனெனில், ஒரு நற்செயலுக்கு அது போன்று பத்து மடங்கு நற்பலன் அளிக்கப்படும்! எனவே, இது காலமெல்லாம் நோன்பு நோற்றதற்குச் சமமாகும்!'' என்றார்கள். 


நான், “என்னால் இதைவிடச் சிறப்பாகச் செய்ய முடியும்'' என்று கூறினேன். “அப்படியானால் ஒரு நாள் நோன்பு நோற்று, இரண்டு நாள்கள் விட்டுவிடு!'' என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். அப்போது “என்னால் இதைவிடச் சிறப்பாகச் செய்ய முடியும்?'' என்று நான் கூறினேன். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “அப்படியானால் ஒரு நாள் நோன்பு நோற்று ஒரு நாள் விட்டுவிடு!, இதுதான் தாவூத் நபியின் நோன்பாகும்! நோன்புகளில் இதுவே சிறந்ததாகும்!'' என்றார்கள். நான் “என்னால் இதைவிடச் சிறப்பாகச் செய்ய முடியும்” என்று கூறினேன். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் “இதைவிடச் சிறந்தது எதுவும் இல்லை!'' என்றார்கள். (நூல்: புகாரீ: 1976)


ஆகவே ஒருவர் நிறைய நோன்புகள் நோற்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் அவர் அதிகப்பட்சமாக ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பு நோற்க அனுமதியுண்டு. அதேநேரத்தில் ஒருவர் தொடர்படியாக நோன்பு நோற்க அனுமதியில்லை. ஏனென்றால் ஒருவர் இல்லற வாழ்வில் ஈடுபடுவதும் அவர்களுக்காகச் சம்பாதித்துக்கொடுப்பதும்  ஒரு வகை இபாதத்-வழிபாடுதான். ஆதலால் நோன்பு, தொழுகை ஆகியவற்றைப்போல் ஒரு முஸ்லிமுடைய தூக்கமும் உழைப்பும் இபாதத்-வழிபாடுதான் என்பதை உணர்ந்து நம் வாழ்க்கையின் ஒவ்வொரு கணப்பொழுதையும் இறைவனுக்காக அமைத்துக்கொள்வோம்.   
====================

கருத்துகள் இல்லை: