திங்கள், 8 ஏப்ரல், 2019

எளிமையான வாழ்வே மகிழ்ச்சி!


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

ஏந்தல் நபி (ஸல்) அவர்கள் எளிமையான வாழ்க்கை முறையைக் கற்றுத் தந்ததோடு அவ்வாறே எளிமையாக வாழ்ந்து காட்டினார்கள். எளிய வாழ்க்கை என்றால் என்ன? அதில் மகிழ்ச்சி உண்டா? என்று கேட்போர் உண்டு. எளிய வாழ்க்கை என்பது அவசியத் தேவைகளைக்கூட நிறைவேற்றிக்கொள்ளாமல் கஞ்சத்தனமாக வாழ்க்கையை நடத்துவதல்ல. மாறாக, தேவையைச் சுருக்கிக்கொள்வதும் திட்டமிட்டுச் செலவழிப்பதுமே ஆகும். 

இன்றைய அவசர உலகில் நுகர்வுக் கலாச்சாரத்தால் மனிதன் சிறைவைக்கப்பட்டுள்ளான் என்றே சொல்லலாம். விளம்பரங்களால் ஈர்க்கப்படுகின்ற பெண்கள் தம் கணவர்களை வற்புறுத்தி வாங்கச் செய்கின்ற எத்தனையோ பொருள்கள் வீட்டில் பயன்பாடு இல்லாமல் பரணியில் கிடப்பதைக் காணலாம். மனிதர்கள் மத்தியில் தம் பகட்டைக் காட்டுவதற்காகத் தேவையில்லாத பொருள்களையும் வாங்கிக் குவிக்கும் பேராசை எண்ணமே நுகர்வுக் கலாச்சாரம். எதையாவது வாங்கிக்கொண்டே இருப்பதுதான் மகிழ்ச்சி என்று சிலர் நினைக்கின்றனர். அதை வாங்குமுன், அப்பொருள் நமக்குத் தேவையா என்று யோசிக்க வேண்டும். அது இல்லாமலும் நம்மால் வாழ முடியுமா என்று கூடி ஆலோசிக்க வேண்டும். ஏனென்றால் எத்தனை பொருள்கள் வாங்கினாலும் மனம் நிறைவுபெறாது என்பதுதான் உண்மை. 

சிலர் பணம் கொடுத்து வாங்குகின்றனர். பலர் பணமே இல்லாமல் எதிர்கால வருமானத்தை அடகுவைத்து வாங்கிக் குவிக்கின்றனர். எல்லாவற்றிற்கும் கடன் (லோன்)தான். இருசக்கர வாகனக் கடன், வீட்டுக் கடன், மகிழுந்துக் கடன் உள்ளிட்ட ஏராளமான கடன்கள். அவற்றைத் திரும்பச் செலுத்துவதற்காக இரவு-பகல் பாராமல் ஓடியோடி உழைக்க வேண்டியுள்ளது. மாதந்தோறும் தவணை கட்டவேண்டுமே என்ற நெருக்கடியிலும் மனஅழுத்தத்திலுமே மனிதன் ஓடிக்கொண்டிருப்பதால் அக்கம் பக்கம் யார் இருக்கிறார் என்றோ, குடும்ப உறவுகள் யார் யார் என்றோ தெரிந்துகொள்ள நேரமில்லை; குடும்ப உறுப்பினர்களிடம் மனம்விட்டுப் பேச நேரமில்லை; மனைவியிடம் மகிழ்ந்து பேச நேரமில்லை; ஒரே படபடப்பு; பதற்றம். இதுதான் இன்றைய நகர மக்கள் பெரும்பாலோரின் வாழ்க்கை. 

வீட்டில் எல்லாப் பொருள்களும் உள்ளன. ஆனால் மகிழ்ச்சி இல்லை. சொந்த வீடு, சொந்த வாகனம் எல்லாம் இருந்தும் மகிழ்ச்சி இல்லை. மகிழ்ச்சியாக வாழ்வதற்காக எல்லாவற்றையும் வாங்கியும் மகிழ்ச்சி மட்டும் இல்லாமல் போனதேன்? மகிழ்ச்சி எதில் உள்ளது என்பதை அறியாமல் போனதே அதற்கான காரணம். வீட்டில் எல்லாப் பொருள்களும் இருந்துவிட்டால் மகிழ்ச்சி ஏற்படுமா? நம்மை எல்லோரும் பாராட்டினால் மகிழ்ச்சி வந்துவிடுமா? சொந்த வீடுதான் மகிழ்ச்சிக்குக் காரணமா?

போதுமென்ற மனம்தான் மகிழ்ச்சிக்குக் காரணம். எளிமையான வாழ்க்கைதான் மகிழ்ச்சிக்குக் காரணம். கடனின்றி யாருக்கும் அடிமையாக இல்லாமல் தலை நிமிர்ந்து வாழ்வதுதான் மகிழ்ச்சி. இது தெரியாமல் பலர் சிரமப்படுவதைக் கண்டு கவலைப்படாமல் இருக்க முடியவில்லை. அதாவது மனிதன் இவ்வுலக வாழ்க்கையை மேற்கொள்ள மிகுந்த சிரமங்களை மேற்கொள்கிறான். பிறர் தம்மை மதிக்க வேண்டுமென்பதற்காகவும் கேவலமாகக் கருதிவிடக்கூடாது என்பதற்காகவும் தேவையைவிட மிகுதியாகச் செலவு செய்ய முனைகிறான். தன்னுடைய மகன் அல்லது மகளின் திருமணத்தை மிக எளிதாக நடத்தி முடிக்க எல்லா வாய்ப்புகளும் இருந்தும், பிறரின் மதிப்பைப் பெறுவதற்காக மிகுந்த பொருட்செலவில் அத்திருமணத்தைச் செய்து முடிக்கிறான். இதனால்தான் அவன் மிகுதியாக உழைக்க வேண்டியுள்ளது. கடன் பெற்றாவது ஆடம்பரமாகத் திருமணம் செய்து முடிக்கவே எண்ணுகிறான். அதுவே அவனுடைய மகிழ்ச்சியை இழக்கச் செய்கிறது.

செலவுக்குப் போதாது என்ற காரணத்திற்காகவே ஆணும் பெண்ணும் சம்பாதிக்கப் புறப்பட்டு விடுகின்றார்கள். இரண்டு பேரும் நாள்தோறும் உழைத்துக் களைத்து, வீட்டுக்கு வருகின்றார்கள். இதனால் வீட்டிலுள்ளோரையும் பிள்ளைகளையும் ஒழுங்காகக் கவனிக்க முடிவதில்லை. ஒரு பெண் ஆணுக்குச் செய்ய வேண்டிய பணிவிடைகளைச் செய்ய முடிவதில்லை. அதனால் அங்கே இருவருக்குமிடையே சண்டை ஏற்பட்டு, மனக்கசப்பு ஏற்பட்டுவிடுகிறது. அல்லது ஒரு பெண் அலுவலகப் பணிகள், வீட்டு வேலைகள் ஆகிய இரண்டுவிதமான சுமைகளையும் சுமக்க வேண்டிய கட்டாயச் சூழலுக்குத் தள்ளப்படுகின்றாள். தாராளமாகச் செலவு செய்து, மகிழ்ச்சியாக வாழ வேண்டுமென்பதற்காகவே பெண்ணும் சம்பாதிக்கப் புறப்பட்டாள். ஆனால் தாராளமாகவும் செலவு செய்ய முடிவதில்லை. மகிழ்ச்சியாகவும் வாழ முடிவதில்லை. இதை இன்றைய இளம் தம்பதிகள் தெளிவாக உணரலாம். 

புதிதாக வீடு கட்டிக் குடியேறும்போது பெருமளவில் செலவு செய்து ஒரு திருமண விருந்தைப்போல் விருந்து ஏற்பாடு செய்யப்படுகிறது. எளிதாக, ஆர்ப்பாட்டம் இல்லாமல் செய்ய வேண்டிய நிச்சயதார்த்த நிகழ்வைக்கூட திருமண விருந்துபோல் நடத்தப்படுகிறது. திருமணமோ ஈராயிரம், மூவாயிரம் பேர் கொண்ட மாநாடாக நிகழ்த்தப்படுகிறது. கத்னா (விருத்தசேதனம்) ஊர்வலம், வளைகாப்பு விழா, பூப்பு   நீராட்டு விழா, காதணி விழா உள்ளிட்ட எத்தனையெத்தனையோ சடங்குகளைச் செய்து சங்கடங்களை ஏற்படுத்திக்கொள்கிறார்கள். ஏன், மரணித்த வீட்டிலேயே திருமண விருந்தைப்போல் உணவு பரிமாறப்படுகிறது. இப்படி எல்லாச் செயல்பாடுகளிலும் மனிதன் தன் சக்திக்கு மீறிய செலவைச் செய்யத் துணிந்துவிட்டான். அவ்வாறு செய்யாவிட்டால் தன் மதிப்புக்கும் மரியாதைக்கும் களங்கம் ஏற்பட்டுவிடும் என்று கருதுகிறான்; மற்றவர்கள் என்ன பேசுவார்களோ என்று அஞ்சுகிறான். இறைவனின் அன்பைப் பெறுவதற்கோ, இறைத்தூதரின் வழிமுறையைப் பின்பற்றுவதற்கோ சிறிதும் முயல்வதில்லை.
ஒரு திருமணத்தை நடத்தி முடிக்கப் பல இலட்சங்கள் செலவழிக்கப்படுகின்றன. மேடை அலங்காரம், மாப்பிள்ளை-பெண் அலங்காரம், வீடியோ, விருந்து, ஐஸ்க்ரீம், பழ வகைகள், வெற்றிலை பாக்கு உள்ளிட்டவை அடங்கும். இவற்றுள் சிலவற்றைத் தவிர மற்றவை வேண்டாத செலவுகள் என்றே சொல்லலாம். “செலவு குறைவான திருமணமே அபிவிருத்தி மிக்கது” என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ள பொன்னான வாக்கை ஓர் ஓரமாய் ஒதுக்கிவைத்துவிடுகின்றார்கள். சுயகௌரவத்தை நிலைநாட்டப் பல இலட்சங்கள் செலவழிக்கின்றார்கள். 

போதாது, போதாது என்று நினைக்கும்போதெல்லாம் நாம் நம் மகிழ்ச்சியை இழக்கிறோம்; தவிக்கிறோம். போதும், போதும் என்று சொல்லும்போதெல்லாம் நம் மனம் மகிழ்ச்சியில் திளைக்கிறது. குறைவாக இருந்தாலும் மனத்திருப்தி ஏற்பட்டுவிடுகிறது. இதுவே இருப்பதைக்கொண்டு மகிழ்தல் ஆகும். நாம் என்னதான் பிறர் மெச்சவேண்டுமென்பதற்காக அள்ளி அள்ளிச் செலவு செய்தாலும் அவர்கள் குறைதான் சொல்வார்கள். ஏனெனில் இது குறை சொல்லும் உலகம். மனிதன் குறையுடையவனாகத்தான் படைக்கப்பட்டுள்ளான். இறைவனுடைய திருப்தியைப் பெற வேண்டுமென்பதற்காகவே நாம் நம் செயல்களை மேற்கொள்ளும்போது மனிதர்களுடைய திருப்தியும் அதில் கிடைத்துவிடும். நபித்தோழர்கள் அத்தகைய நோக்கத்தில்தான் எல்லாச் செயல்களையும் மேற்கொண்டார்கள். அதனால் இறைவனுடைய திருப்தியைப் பெற்றார்கள். இன்று வரை நாம் அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்துகொண்டிருக்கிறோமல்லவா! 

அன்றைய காலத்தில் ஓர் இணை ஆடைகளுடன் திருப்தியுடன் வாழ்ந்தார்கள் பெண்கள். இரண்டு இணை ஆடைகள் உள்ளவர்களைக் கண்டு வியப்படைந்தார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். இன்று பீரோ முழுக்க சேலைகளாக அடுக்கி வைத்துக்கொண்டும் அவற்றை உடுத்திக்கொள்ளாமல் அடுத்த சேலையை வாங்குவதிலேயே நாட்டம் கொள்கிறார்கள் இன்றைய பெண்கள். இப்போது மகிழ்ச்சி எங்கே உள்ளது? வாங்கிக் குவிப்பதிலா, இருப்பதைக் கொண்டு திருப்தியடைவதிலா?

சேமிப்புப் பணம் கையில் இல்லாமலேயே கடனை வாங்கி, வீட்டைக் கட்டிவிட்டு, பிறகு அக்கடனை அடைக்கப் பாடாய்ப்படுபவர்கள், ஓடாய்த் தேய்பவர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள். சிலர் அக்கடனை அடைக்க முடியாமல் கட்டிய வீட்டை இழக்கவும் நேரிடுகிறது. இவ்வாறு திட்டமிடல் இல்லாமல் மகிழ்ச்சியைக் கடன் வாங்கினால் அது நிலைக்காது. எத்தனை நாளைக்குத்தான் வாடகை வீட்டிலேயே இருப்பது என்று யோசிப்பதைவிட, எத்தனையோ பேர் வாடகைக்கு ஒரு வீடு பிடித்து இருக்க முடியாமல் சாலையோரம் வாழ்வதைப் பார்க்கிறோமே. அத்தகையவர்களைவிட அல்லாஹ் நம்மை மேல்நிலையில்தானே வைத்துள்ளான் என்ற உயர்ந்த எண்ணம் மனதில் வந்தால்தான் நாம் மகிழ்ச்சியை உணர முடியும். இறைவனின் வெகுமதியை உணர்ந்து அவனுக்கு நன்றி செலுத்த முடியும். 

“உனக்கு மேல் உள்ளோரைப் பார்க்காதே. உனக்குக் கீழ் உள்ளோரைப் பார்” எனும் நபிமொழிக்கேற்ப நம் பார்வையை நாம் மாற்றிக்கொண்டால் மகிழ்ச்சி தானாக வரப்போகிறது. 
===========================================





 

கருத்துகள் இல்லை: