செவ்வாய், 31 மார்ச், 2020

கருந்தலைப் பறவை

-----------------------------
இப்படத்திலுள்ள பறவையின் பெயர் கருந்தலைப் பறவை. இது ஒரு நாளில் 900 தடவை தன் கூட்டைவிட்டு வெளியே சென்று, கூட்டில் வாழும் குஞ்சுகளுக்கு இரையைத் தன் அலகில் கவ்விக் கொண்டுவரும் பழக்கமுடையது. இப்பறவைபோல் ஏழைகள் பல கோடிப்பேர் நம் நாட்டில் உள்ளனர். அவர்கள் தம் வீட்டிலிருந்து அன்றாடம் வெளியில் சென்று சம்பாதித்தால்தான் தம் குடும்பத்தாருக்கு உணவு வழங்க முடியும். அவர்களின் உணவுக்கான எந்த முன்னேற்பாடும் செய்யாமல் திடீர் ஊரடங்கு உத்தரவு விதித்தது சரியா எழுத்தாளர்கள் பலர் வினாத் தொடுக்கின்றனர்.

சீனாவில் கொரோனா நுண்கிருமி பரவிய நேரத்தில் இங்கு எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காமல், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வருகையைக் கோலாகலமாகக் கொண்டாடுவதிலும் தில்லியில் முஸ்லிம்களை இனப் படுகொலை செய்யத் திட்டமிடுவதிலும் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்துவிட்டு, திடீர் ஊரங்கு விதித்தது சரியா என்று பலரும் கேட்டுக்கொண்டிருக்கின்றனர்.

டெல்லியில் நடந்த தப்லீஃக் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டோர் மூலம் கொரோனா நாடு முழுவதும் பரவுவதைப்போன்ற மாயத்தோற்றத்தைக் காட்டி, இதில்கூட முஸ்லிம்களை வஞ்சம்தீர்க்க நெஞ்சுறுதி கொள்வதேனோ? சுய ஊரடங்கு உத்தரவு வருவதற்குமுன், பல மாதங்களாகத் திட்டமிட்ட ஆலோசனைக் கூட்டம் குறிப்பிட்ட தேதியில் நடந்தது. அப்போதுதான் ஊரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. உத்தரவு வந்தவுடனேயே அக்கூட்டம் இடையில் நிறுத்தப்பட்டது. பின்னர் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டதால் அக்கூட்டத்தில் கலந்துகொண்ட இந்தியர்கள், வெளிநாட்டினர் யாரும் எங்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு, நிர்ப்பந்த நிலையில் அங்கேயே தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அவர்கள் திரும்பிச் செல்வதற்கான எந்த வாய்ப்பும் கொடுக்கப்படாமல், அவர்களைக் குற்றவாளிகளாக்குவது எவ்வகை நியாயம்? அவர்களை வைத்து, முஸ்லிம் சமுதாயத்தையே ஒட்டுமொத்தமாகக் குற்றவாளியாக்குவது எவ்வகை தர்மம்?

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி
31 03 2020 / 05 08 1441
==============================


கருத்துகள் இல்லை: