ஞாயிறு, 15 மார்ச், 2020



அல்லாமா பீ.எஸ்.பீ. ஜைனுல் ஆபிதீன் பாகவி ஹள்ரத் அவர்களின் சுயவரலாற்று நூல் 14 03 2020 அன்று மண்ணடி லஜ்னத்துல் முஹ்ஸினீன் ட்ரஸ்ட் பள்ளிவாசலில் வெளியிடப்பட்டது. அவர்களுடைய மாணவர்கள், மாணவர்களின் மாணவர்கள் என ஆலிம்கள் பலர் கலந்து கொண்டார்கள். அந்நூலில் எனது வாழ்த்துரையும் இடம்பெற்றுள்ளது. அல்ஹம்து லில்லாஹ்.

இதோ...


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.
(இமாம், மஸ்ஜித் ஜாமிஉல் அன்வார் மணலி, சென்னை

துணையாசிரியர்-இனிய திசைகள் மாதஇதழ்)

படி என்று கூறி கல்விக்கு முன்னுரிமை கொடுத்த படைப்பாளன் அல்லாஹ்வுக்கே புகழ் யாவும் உரித்தாகட்டும். அறியாமை இருளில் மூழ்கியிருந்தோரைக் கல்வி என்னும் அறிவொளியால் வெளிச்சம் காட்டி நேரிய பாதைக்கு வழிகாட்டிய அண்ணல் நபி (ஸல்) அவர்கள்மீதும் அவர்கள்தம் உற்ற தோழர்கள்மீதும் அவர்கள்தம் குடும்பத்தார்மீதும் அல்லாஹ்வின் பேரருளும் பெருங்கருணையும் என்றென்றும் பொழிவதாக.
மௌலானா மௌலவி பி.எம். கலீலுர் ரஹ்மான் மன்பஈ அவர்கள் என்னிடம் இந்நூலைக் கொடுத்து, பிழைகள் களைந்து நூலைச் செப்பனிட்டுத் தருவதோடு ஓர் அணிந்துரையும் வழங்குமாறு கேட்டுக்கொண்டார். அதற்கேற்ப நான் இந்நூலை வாசிக்கத் தொடங்கினேன். ஹள்ரத் அவர்களின் வாழ்க்கை எவ்வளவு எளிய முறையில் இருந்துள்ளது; எவ்வளவு சிரமங்களையும் தொல்லைகளையும் இளவயதில் சந்தித்திருக்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது. அவர்கள் நடத்திய பாடம் ஒருபுறமிருக்க, அவர்களின் வாழ்க்கையே ஒரு பாடமாகத் திகழ்வதைக் கண்டு மகிழ்ச்சி கொள்ளாமல் இருக்க முடியவில்லை. ஹள்ரத் அவர்களோடு எனக்குள்ள தொடர்பையும் சில நிகழ்வுகளையும் நான் இவ்விடத்தில் சொல்லியே ஆக வேண்டும்.

மார்க்கக் கல்வியைத் தேடிய பயணத்தில் மிகுந்த ஆர்வத்துடனும் ஆசையோடும் வீட்டிலிருந்து புறப்பட்டு, நான் தன்னந்தனியாக அல்பாக்கியாத்துஸ்ஸாலிஹாத் பல்கலைக் கழகத்தில் முதன்முதலாக நுழைந்து, அதன் முதல்வரைச் சந்தித்தேன். நான் சென்ற ஆண்டில்தான், கண்ணியத்திற்குரிய ஆசிரியத் தந்தை பீ.எஸ்.பீ. ஜைனுல் ஆபிதீன் ஹள்ரத் அவர்கள் முதல்வராகப் பொறுப்பேற்றிருந்தார்கள். அந்த ஆண்டுதான் (1993) ‘அரபுக் கல்லூரி’ (குல்லிய்யா) என்பது பல்கலைக் கழகம்’ (ஜாமிஆ) எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

யாருமில்லாமத் தனியாக வந்திருக்கிறாயே, உன்னை எப்படிச் சேர்த்துக்கொள்வது? போய், உன்னோட அத்தாவ கூட்டிட்டு வா!என்று கூற, முதல்வரின் அருகில் அமர்ந்திருந்த கண்ணியத்திற்குரிய ஆசிரியத் தந்தை மர்ஹூம் ஹெச். கமாலுத்தீன் ஹள்ரத் அவர்கள், “ஓதணும்னு ஆர்வத்தோட வந்திருக்கான். சேத்துக்கங்க ஹஸ்ரத்என்று கூறியதை ஏற்றுக்கொண்டு, கல்லூரியின் சட்ட விதிமுறைகளை என்னிடம் கூறியதையடுத்து, நான் சென்று தலைமுடி மழித்து, குளித்து, லுங்கி-ஜுப்பா அணிந்துகொண்டு, ஹள்ரத் அவர்களின் முன்னிலையில் போய் நின்றபோது, “இப்பதான்டா ஓதுற புள்ள மாதிரி இருக்கெஎன்று கூறினார்கள்.

பின்னர் அங்கேயே 1993 முதல் 2000ஆம் ஆண்டு வரை எட்டாண்டுகள் பயின்று பட்டம் பெற்று வெளியே வந்தேன். அந்த எட்டாண்டுகளில் கற்றுக்கொண்ட பாடங்களும் கலைகளும் ஏராளம். ஒன்பதாம் வகுப்பைப் பாதியில் நிறுத்தியிருந்த நான், மேல்வகுப்பு நண்பர்களின் வழிகாட்டுதலோடு, பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை எழுதினேன். சென்னைப் பல்கலைக் கழகம் நடத்துகின்ற அஃப்ஸலுல் உலமா தேர்வை எழுதினேன். கடைசியில் இன்று நான் அரபியில் முனைவர் (பிஎச்.டி.) பட்டம் பெற்றுள்ளேன். எல்லாவற்றையும் நம் ஹள்ரத் அவர்கள் கூர்ந்து பார்த்துக்கொண்டே வந்துள்ளார்கள். பிறரிடமும் என்னைப் பற்றி விசாரித்துக்கொள்வார்கள்.

பாக்கியாத்தில் என்னைச் சேர்க்கத் தயங்கிய பீ.எஸ்.பீ. ஹள்ரத் அவர்களைச் சந்திக்க நேரிடும்போதெல்லாம், அங்கே நான் சேர்த்துக்கொள்ளப்பட்டதைப் பற்றி என்னிடமே நெகிழ்ச்சியுடன் கூறுவார்கள். நான் எழுதிய அல்லது தமிழாக்கம் செய்த நூல்களைப் பார்க்கும்போதெல்லாம், “அல்லாஹ் உன்னைக் கொண்டு வேலை வாங்குறான் அப்துல் ஹாதி; ரொம்ப சந்தோஷமா இருக்குஎன்று மகிழ்ச்சியுடன் கூறுவார்கள். நான் அண்மையில் நபிவழி மருத்துவம் எனும் அரபு-தமிழாக்க நூலைக் காட்டி, அணிந்துரை பெற்றபோதும், அதையே நெகிழ்ச்சியுடன் கூறிக் காட்டினார்கள். தயக்கத்தோடு என்னைச் சேர்த்த ஹள்ரத் அவர்களின் மனங்குளிரும் விதமாக நான் உருவானதேஅவர்களுக்குச் செய்யும் கைம்மாறாகக் கருதுகிறேன்.

ஒரு தடவை பாக்கியாத் மஸ்ஜிதில் ஃபஜ்ர் தொழுகையின்போது முன்சுன்னத் தொழுதுவிட்டு, இகாமத் வரை எஞ்சிய நேரத்தில் குர்ஆன் ஓதுவதற்காக, அதை என் இடக்கையால் எடுத்தபோது, அதைப் பின்னால் இருந்து பார்த்த ஹள்ரத் அவர்கள், ஒரு மாணவர் மூலம் என்னை அழைத்து, “குர்ஆனை எடுக்கும்போது வலக்கையால்தான் எடுக்க வேண்டும். அதுக்கு இஸ்ஸத் (மரியாதை) கொடுக்குறதில்லையா?” என்று கண்டிப்புடன் கூறி அனுப்பினார்கள். அன்று முதல் அப்பழக்கத்தை மாற்றிக்கொண்டேன். நான் இடக்கைப் பழக்கமுடையவன் என்பதால் என்னையறியாமல் இடக்கை முந்தும்போதெல்லாம் ஹள்ரத் அவர்களின் கண்டிப்பான முகம் என்முன் வந்து என்னை எச்சரித்துச் செல்லும்.


இந்நூலில் நம் ஹள்ரத் அவர்கள் தம் அனுபவங்களைப் பின்வரும் சந்ததியினருக்கும் மாணவர்களுக்கும் பாடமாகக் கூறியுள்ளார்கள் என்பதை நினைக்கும்போது ஹள்ரத் அவர்கள் எப்போதும் பாடம் நடத்திக்கொண்டே இருக்க விரும்புகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிகின்றது. மக்களிடம் எப்படிப் பழக வேண்டும்; எப்படிப் பேச வேண்டும்; எப்படி அவர்களுக்காக துஆச் செய்ய வேண்டும் என்பதையெல்லாம் இந்த நூலில் அவர்கள் கூறியுள்ளார்கள். இவையெல்லாம் கிடைக்கப்பெறாத அரிய தகவல்கள் என்பதில் ஐயமில்லை. தம் வாழ்க்கையின் உயர்வுக்கு உதவிய, வழிகாட்டிய உள்ளங்களை எவ்வாறு நினைத்துப் பார்க்க வேண்டுமென்பதையும் இந்நூல்மூலம் சொல்லித் தருகின்றார்கள்.  பல்வேறு நூல்களைப் புரட்டி, பல மணிநேரங்களை ஒதுக்கிப் பெற வேண்டிய அரிய தகவல்கள் பலவற்றை இந்நூலில் சேர்த்திருப்பது இதன் சிறப்பாகும்.

ஹள்ரத் அவர்களின் நேரடி மாணவர்கள் பலர் இருக்கும்போது, அவர்களுக்கு ஏற்படாத சிந்தனை, ஹள்ரத் அவர்களின் மாணவர் மௌலவி ஓ.எம். அப்துல் காதிர் பாகவி அவர்களின் மாணவராகிய மௌலவி கலீலுர் ரஹ்மானுக்கு வாய்த்திருப்பது மிக அரிய நற்பேறு ஆகும். ஹள்ரத் அவர்களின் சுயவரலாற்று நூலைப் படிக்கின்ற ஒவ்வொரு பாகவியும் ஹள்ரத் அவர்களுக்கும் இந்நூலைத் தொகுத்தவருக்கும் கண்டிப்பாக துஆச் செய்வார்கள் என்பது திண்ணம்.

ஆக, இந்நூல் பல்வேறு கோணங்களில் சிறந்துவிளங்குகிறது என்பதை எண்ணும்போது மனத்துக்குள் மகிழ்ச்சி பொங்கி எழுகிறது. இந்நூலைப் படிக்கின்ற ஒவ்வொருவருக்கும் இது ஒரு பாடமாக அமைய 
வேண்டுமென்றும் இதைத் தொகுத்தவருக்கும் இதைப் படிக்கின்ற அனைவருக்கும் இதன்மூலம் நன்மை கிடைக்க வேண்டுமென்றும் அல்லாஹ்விடம் துஆச் செய்கிறேன்.

அன்புடன்
முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி
===================================







கருத்துகள் இல்லை: