-------------------------------------
மக்களோடு எப்போதும் நேரடித் தொடர்பில் இருப்பவர்களைத் திடீரென வீட்டில் அடைத்துப் போட்டால் அது அவர்களுக்கு மிகப்பெரும் மனஉளைச்சலையே ஏற்படுத்தும். அன்றாடம் மக்களோடு நேரடித் தொடர்பில் இருந்து அவர்களுடைய கேள்விகளுக்குப் பதில் சொல்லியே பழகிப்போனவர்களைத் திடீரெனத் தனியறைக்குள் அடங்கி இரு என்றால் அது அவர்களுக்கு மிகப்பெரும் துயரமாகவும் சுமையாகவும் இருக்கும். மனஇறுக்கத்தையும் ஏற்படுத்தும்.
அதேநேரத்தில் மக்கள் தொடர்பே இல்லாமல், எப்போதும் தனி அறைக்குள்ளேயே பணி செய்து பழகியவர்களுக்குத் தற்போதைய ஊரடங்கு உத்தரவு ஒரு சுமையாகத் தெரியாது.
அதுபோலவே தனியறைக்குள் இருந்துகொண்டு எழுதிக்கொண்டிருக்கிற எழுத்தாளர்களுக்கும் எப்போதும் தனியாக அமர்ந்து நூல்களை வாசித்துக்கொண்டே இருக்கிற புத்தகப் பிரியர்களுக்கும் தனிமை ஒரு சுமையல்ல.
தனிமை ஒரு சுமையா அல்லது சுகமா என்றால் அது அவரவர் தேர்ந்தெடுத்துக்கொண்டுள்ள பணியைப் பொறுத்தது. ஓர் ஆய்வாளரும் அல்லது கண்டுபிடிப்பாளர் தனியாக இருந்து, சுதந்திரமாகச் செயல்பட்டால்தான் அவர் தமது ஆய்வின் முடிவைக் கண்டறிய முடியும். கதாசிரியர், எழுத்தாளர், கவிஞர் உள்ளிட்ட படைப்பாளர்கள் தனியே அமர்ந்தால்தான் தம் படைப்புகளை நிறைவு செய்ய முடியும். இத்தகையோரிடம் தனிமை குறித்துக் கேட்டால், அது ஒரு சுகம் என்றே சொல்வார்கள்.
மேடைப் பேச்சாளர்கள், நடிகர்கள், மக்கள் தொடர்பாளர்கள், செய்தி சேகரிப்பாளர்கள் உள்ளிட்டோரிடம் கேட்டால் தனிமை ஒரு சுமை என்று சொல்வார்கள். ஆக அவரவர் தேர்ந்தெடுத்துக்கொண்ட பணியைப் பொறுத்து அது மாறுகிறது. அன்பான மனைவியைப் பிரிந்து தனிமையில் இருப்பது சுமை. கோபக்கார மனைவியோடு இத்தனை நாள்களை ஒன்றாகக் கழிக்க வேண்டும் என்பது ஆண்களுக்குச் சுமை. இப்படிச் சுமையும் சுகமும் ஒவ்வொருவருக்கும் மாறுபடும்.
வயதில் மூத்தவர்களுக்குத் தனிமை ஒரு சுமை. தம்முடைய கடந்த கால வாழ்க்கையையும் நிகழ்கால நிகழ்வுகளையும் பேசித் தீர்க்க ஆள் இல்லையே என்ற கவலை அவர்களை வாட்டும். யாரேனும் ஆள் கிடைத்துவிட்டால் அவர்களின் மனம் மகிழும். அவரிடம் தம் மனக்கிடக்கைகளையெல்லாம் கொட்டித் தீர்த்துவிடுவார்கள். அது அவர்களுக்கு ஒரு மகிழ்ச்சி.
ஆகவே ஏப்ரல் 14 வரை கிடைத்துள்ள ஓய்வையும் தனிமையையும் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள, பயனுள்ள நூல்களை வாசிக்கலாம்; திருக்குர்ஆனைக் கற்றுக்கொள்ளலாம்; கற்றுக்கொடுக்கலாம். படிக்கத் தெரியாதவர்கள் இறைத்துதியில் (திக்ரில்) ஈடுபடலாம். முதியோரிடம் அன்பாக உரையாடலாம்.
ஆக தனிமையை வெறுமையாகவும் வீணாகவும் கழித்துவிடாமல் நன்மையாக மாற்ற முயல்வோம்.
அன்புடன்
-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி
30 03 2020 / 04 08 1441
======================================
-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி
30 03 2020 / 04 08 1441
======================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக