புதன், 6 ஜூலை, 2011

இப்ராஹீம் நபியின் வரலாறு (தொடர் 24)

இறைமறைக் குர்ஆன் இப்ராஹீமைப் புகழ்தல்

அல்லாஹ் கூறுகின்றான்: (இறைவனின் கட்டளைகளை) முழுமையாக நிறைவேற்றிய இப்ராஹீம். (53: 37) அதாவது அவருக்கு ஏவப்பட்ட அனைத்தையும் அவர் நிறைவேற்றினார். இறைநம்பிக்கைக்குரிய அனைத்துக் குணங்களையும் அதன் உட்பிரிவுகளுக்குரிய அனைத்துக் குணங்களையும் அவர் மேற்கொண்டார். அவருடைய எவ்வளவு பெரிய வேலையும், அவர் செய்ய வேண்டிய சிறிய நல்லறத்தைக்கூடத் தடுத்துவிடாது. பெரிய பெரிய நற்காரியங்களை மேற்கொள்கின்ற நேரத்தில் அவருடைய சிறிய செயல்கள் அவருக்கு மறந்துபோகா.

இப்ராஹீமை அவருடைய இறைவன் பல கட்டளைகள் மூலம் சோதித்ததை எண்ணிப் பாருங்கள். அவர் அவற்றை முழுமையாக நிறைவேற்றினார். (2: 124) என்ற வசனத்திற்கு இப்னு அப்பாஸ் (ரளி) அவர்கள் விளக்கமளித்துள்ளார்கள். அதாவது அல்லாஹ் அவரைத் தூய்மை எனும் செயலால் சோதித்தான். அவற்றுள் ஐந்து தலையைச் சார்ந்தவை; வேறு ஐந்து உடலோடு உள்ளவை. தலையைச் சார்ந்தவை: 1.மீசையைக் கத்தரித்தல், 2. வாய்கொப்பளித்தல், 3.பல்துலக்கு(மிஸ்வாக் செய்)தல், 4. நாசிக்குத் தண்ணீர் செலுத்துதல், 5.தலைமுடியை (மாங்கு எடுத்து நடுவே) பிரித்தல். உடலோடு உள்ளவை: 1.நகங்களை நறுக்குதல், 2. அந்தரங்க உரோமங்களைக் களைதல், 3.விருத்தசேதனம் செய்தல், 4. அக்குள் முடி(யைப் பிடுங்கிக்) களைதல், 5. மலம் மற்றும் சிறுநீர் கழித்தபின் தண்ணீரால் சுத்தம்செய்தல். (நூல்: தஃப்சீர் இப்னு அபீ ஹாத்திம்)

சயீத் பின் அல்முசய்யப், முஜாஹித், அஷ்ஷஹ்பீ, அந்நஃகயீ, அபூஸாலிஹ் மற்றும் அபுல்ஜல்த் (ரஹ்-அலைஹிம்) போன்றோரிடமிருந்து இவ்வாறே அறிவிக்கப்பட்டுள்ளது.

இயற்கையானவை ஐந்து உள்ளன. அவை: 1.விருத்தசேதனம் செய்தல், 2. அந்தரங்க உரோமங்களைக் களைதல், 3.மீசையைக் கத்தரித்தல், 4. நகங்களை நறுக்குதல், 5. அக்குள் முடி களைதல் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரளி) அறிவித்துள்ளார்கள். (நூல்கள்: புகாரீ, முஸ்லிம்) இதை இப்னு கஸீர் (ரஹ்) எடுத்துரைக்கின்றார்.

இயற்கையானவை பத்து உள்ளன. அவை: 1.மீசையைக் கத்தரித்தல், 2. தாடியை வளர்த்தல், 3.பல்துலக்கு(மிஸ்வாக் செய்)தல், 4. நாசிக்குத் தண்ணீர் செலுத்துதல், 5.நகங்களை நறுக்குதல், 6. விரல் முடிச்சுகளையும் அவற்றின் இடைகளையும் கழுவுதல், 7.அக்குள் முடி(யைப் பிடுங்கிக்) களைதல் 8.அந்தரங்க உரோமங்களைக் களைதல், 9.மலம் மற்றும் சிறுநீர் கழித்தபின் தண்ணீரால் சுத்தம்செய்தல் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஆயிஷா (ரளி) அறிவித்துள்ளார்கள். (நூல்: முஸ்லிம்)

முஸ்அப் (ரஹ்) கூறுகிறார்: பத்தாவ(து என்ன என்ப)தை நான் மறந்துவிட்டேன். அது `வாய்கொப்பளிப்பதாகத்தான் இருக்க வேண்டும். வகீஹ் (ரஹ்) கூறுகிறார்: `இன்த்திகாஸுல் மாஹ் என்பது மலம் மற்றும் சிறுநீர் கழித்தபின் தண்ணீரால் சுத்தம் செய்தல் ஆகும். இப்ராஹீம் (அலை) அவர்களின் வயது மற்றும் அவர் விருத்தசேதனம் செய்துகொண்டது பற்றிய விரிவான விளக்கத்தை இனிவரும் பக்கங்களில் காணலாம். இன்ஷா அல்லாஹ்.
சுருக்கமாக, இப்ராஹீம் (அலை) அவர்கள் அல்லாஹ்வுக்காக தூய்மையான மனதுடன் நல்லறங்களை மேற்கொள்வதும் வணக்க வழிபாடுகளை மெத்தப் பணிவுடன் செய்வதும் அவர் தம்முடைய உடல் சுத்தத்தைப் பராமரிப்பதைவிட்டுத் தடுக்கவில்லை. அதாவது அவர் தம் தலைமுடிகளையோ நகங்களையோ அதிகமாக வளர்த்துக்கொள்வதோ, அவற்றினுள் அழுக்குகளையும் அசிங்கங்களையும் சேரவிடுவதோ கிடையாது. மாறாக, அசிங்கமானவற்றைக் களைந்து, தம் உடலின் ஒவ்வோர் உறுப்புகளையும் முறையாகப் பேணி, அவற்றை அழகாக வைத்துக்கொள்ளத் தவறியதில்லை.

`(இறைவனின் கட்டளைகளை) முழுமையாக நிறைவேற்றிய இப்ராஹீம்.’ (53: 37) என்று அல்லாஹ் இப்ராஹீம் (அலை) அவர்களைப் புகழ்ந்து கூறியுள்ளதின் அடிப்படையே இதுதான்.

இப்ராஹீம் நபியின் கோட்டை

அல்ஹாஃபிழ் அபூபக்ர் அல்பஸ்ஸார் (ரஹ்) கூறுகிறார்: நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரளி) அவர்கள் அறிவித்துள்ளதாவது: நிச்சயமாக சொர்க்கத்தில் ஒரு கோட்டை உள்ளது. (அது முத்துக்களால் ஆனது-என்று கூறியதாக நான் எண்ணுகிறேன்). அதில் பிளவோ பலவீனமோ கிடையாது. அல்லாஹ் அதில் தன் உற்ற நண்பரான இப்ராஹீமுக்கு விருந்து ஏற்பாடு செய்துள்ளான்.1

இப்ராஹீம் நபியின் தன்மைகள்

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஜாபிர் (ரளி) அறிவித்துள்ளார்கள்: நபிமார்கள் எனக்கு முன்னிலையில் எடுத்துக் காட்டப்பட்டார்கள். மூசா நபி; அவர் ஆண்களுள் ஒரு வகை மனிதர்; அவர் அவலட்சணமான தோற்றமுடைய மனிதர்களுள் ஒருவரைப் போன்று காணப்பட்டார். நான் ஈசா பின் மர்யம் (அலை) அவர்களைக் கண்டேன். அவரை உர்வா பின் மஸ்ஊத் உடைய தோற்றத்தில் நான் கண்டேன். இப்ராஹீம் (அலை) அவர்களை திஹ்யத்துல் கலபீ உடைய தோற்றத்தில் நான் கண்டேன்.2 (நூல்: முஸ்னத் அஹ்மத்)

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரளி) அறிவித்துள்ளார்கள்: நான் ஈசா பின் மர்யம், மூசா, இப்ராஹீம் (அலைஹிமுஸ் ஸலாம்) ஆகியோரைக் கண்டேன். ஈசா நபி சிவப்பானவர்; சுருட்டைமுடி நிறைந்தவர்; விசாலமான மார்புடையவர். மூசா நபி (கோதுமை போன்ற) பழுப்பு நிறமுடையவர்; பருமனானவர். அப்போது, (அப்படியானால்) இப்ராஹீம் நபி? என்று வினவினார்கள். நீங்கள் உங்கள் தோழரைப் பாருங்கள் என்று (தம்மைச் சுட்டிக்காட்டிக்) கூறினார்கள். (நூல்: முஸ்னத் அஹ்மத்) முஜாஹித் (ரஹ்) அறிவிக்கிறார்: இப்னு அப்பாஸ் (ரளி) அவர்கள் (சபையில்) இருந்தபோது மக்கள் தஜ்ஜாலின் இரண்டு கண்களுக்கிடையே (நெற்றியில்) `காஃபிர் (இறைமறுப்பாளன்) என்றோ, `காஃப் ஃபா ரா என்றோ எழுதப்பட்டிருக்கும் (என்பது உண்மையா?) என்று பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது, இப்னு அப்பாஸ் (ரளி) அவர்கள், நான் அவ்வாறு செவியுறவில்லை. ஆனால், நபி (ஸல்) அவர்கள், இப்ராஹீம் (அலை) அவர்கள் (எத்தகைய தோற்றமுடையவராக இருந்திருப்பார் என்று தெரிந்துகொள்ள) உங்கள் தோழரான என்னைப் பாருங்கள்! மூசா (அலை) அவர்களோ சுருள்முடி கொண்டவர்களாகவும், (கோதுமை போன்ற) பழுப்பு நிறமுடையவராகவும் இருந்தார்.

ஈச்சை மர நாராலான கடிவாளம் இடப்பட்ட சிவப்பு வண்ண ஒட்டகத்தின் மீது சவாரி செய்வார். அவர் (ஹஜ்ஜின்போது `அல்அரக் எனும்) பள்ளத்தாக்கில் இறங்குவதை (இப்போதும்) நான் காண்பதைப் போன்று உள்ளது என்று கூறியதை நான் கேட்டேன். (நூல்: புகாரீ)3

மரணம் இப்னு ஜரீர் (ரஹ்) தம்முடைய வரலாற்று நூலில் கூறுகிறார்: இப்ராஹீம் (அலை) நும்ரூத் பின் கன்ஆன் என்ற அரசனின் காலத்தில் பிறந்தார். நும்ரூத் பின் கன்ஆன் என்பவன் பிரபலமான அரசன் அள்ளஹ்ஹாக் ஆவான். அவன் ஆயிரம் ஆண்டுகள் ஆட்சி செய்தான் என்று கூறப்படுகிறது. அவன் மிக அதிகமாக அநியாயமும் அட்டூழியமும் செய்துவந்தான்.
அறிஞர்கள் சிலர் கூறுகின்றனர்: நூஹ் (அலை) தூதராக அனுப்பப்பட்ட பனூ ராசிப் உடைய குலத்தில் ஒருவனாக அவன் இருந்தான். அவன் அந்நேரத்தில் உலகையே ஆள்கின்ற அரசனாக இருந்துவந்தான். அவனது ஆட்சிக் காலத்தில் ஒரு நாள், ஒரு நட்சத்திரம் தோன்றியது. அது சூரியன் மற்றும் சந்திரனின் ஒளியையே மங்கச் செய்துவிட்டது. அக்கால மக்கள் அதைக் கண்டு திடுக்கிட்டனர். அந்தக் கொடுங்கோல் அரசன் நும்ரூதும் பயந்தான். எனவே குறிகாரர்களையும் நட்சத்திரங்களைப் பற்றித் தெரிந்தவர்களையும் அவன் ஒன்றுதிரட்டி, அவன் அது பற்றி அவர்களிடம் கேட்டான். உன் ஆட்சிப் பகுதியில் ஒரு குழந்தை பிறக்கப்போகிறது. அவருடைய கையில்தான் உம்முடைய ஆட்சி முடிவுக்கு வர இருக்கிறது என்று அவர்கள் கூறினர். இதைக் கேட்ட அந்த அரசன், ஆண்கள் தம் மனைவியரோடு இணைவதைத் தடுக்கவும், அந்நேரத்திலிருந்து அவ்வூரில் பிறக்கின்ற குழந்தைகள் அனைத்தையும் கொன்றிடவும் கட்டளையிட்டான். இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில்தான் இப்ராஹீம் நபி பிறந்தார். எனவே, அல்லாஹ் அந்தப் பாவிகளின் சூழ்ச்சியிலிருந்து அவரைப் பாதுகாத்துவிட்டான். அதன்பின் அவர் வாலிபராக ஆனார். அல்லாஹ் அவரை நல்ல முறையில் வளர்த்து வந்தான். பின்னர், அவருடைய வாழ்க்கையில் என்னென்ன நடக்க வேண்டுமோ அவையெல்லாம் நடந்து முடிந்தன. அவை பற்றிய தகவல்கள் ஏற்கெனவே சென்று விட்டன.

அவர் பிறந்த இடம் சவ்ஸ் ஆகும். பாபில் என்றும் கூறப்படுகிறது. கூஸாவின் ஓரத்தில் அமைந்துள்ள சவாத் என்றும் கூறப்படுகிறது. அவர் டமாஸ்கசின் கிழக்கே அமைந்துள்ள பரஸா எனுமிடத்தில் பிறந்தார் என்று இப்னு அப்பாஸ் (ரளி) கூறியுள்ள நபிமொழி ஏற்கெனவே கூறப்பட்டுள்ளது. அல்லாஹ் நும்ரூதை, இப்ராஹீம் நபியின் கையால் அழித்தபின், அவர் ஹர்ரான் எனும் ஊரை நோக்கிப் புறப்பட்டார். பின்னர், சிரியா (ஷாம்) நோக்கிச் சென்றார். பின்னர், நாம் ஏற்கெனவே கூறியுள்ளபடி, அவர் ஈலியா என்ற ஊரில் தங்கினார். அங்குதான் அவருக்கு இஸ்மாயீல் மற்றும் இஸ்ஹாக் எனும் இரண்டு மகன்கள் பிறந்தனர்.

சார்ரா (அலை) அவர்களின் மரணம்

கன்ஆன் நாட்டிலுள்ள ஹப்ரூன் எனும் சிற்றூரில் சார்ரா (அலை) அவர்கள், இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு முன்பே மரணித்துவிட்டார். வேதக்காரர்கள் கூற்றுப்படி, அவர் மரணித்த போது அவருடைய வயது 127 ஆகும். அவரின் மரணத்தை நினைத்து இப்ராஹீம் (அலை) மிகவும் வருந்தினார். அவர் மீது அல்லாஹ் இரக்கம்காட்டுவதற்காக அல்லாஹ்விடம் அழுது பிரார்த்தனை செய்தார். மேலும், பனூஹீஸ் குலத்தைச் சார்ந்த, இஃப்ரூன் பின் ஸஃக்ர் என்பாரிடமிருந்து மஹாரா என்ற இடத்தை 400 (ஏறத்தாழ 1600 கிராம்) வெள்ளிக்கு வாங்கி, தம் துணைவியின் பிரேதத்தை அங்கேயே நல்லடக்கம் செய்துவிட்டார்.

இஸ்ஹாக் நபிக்கு மணம் பேசுதல்

இப்ராஹீம் (அலை) தம்முடைய மகன் இஸ்ஹாக்கிற்கு ரிஃப்கா என்ற பெண்ணை மணம் பேசினார். அப்பெண்ணைத் தம் மகனுக்கு மணமுடித்து வைத்தார். இவர் ரிஃப்கா பின்த் பத்தூஈல் பின் நாஹூர் பின் தாரிக் ஆவார். அவருடைய மவ்லா, அப்பெண்ணுடைய நாட்டிலிருந்து அவருக்காக ஓர் ஒட்டகச் சுமையை ஏற்றி அனுப்பினார். அவருடன் பாலூட்டுகின்ற ஒரு பெண்ணும் அவருடைய அடிமைப் பெண்களும் இருந்தனர்.

இப்ராஹீம் நபியின் திருமணம்

இப்ராஹீம் (அலை) கன்தூரா என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். அப்பெண், ஸம்ரான், யக்ஷான், மாதான், மத்யன், ஷியாக், ஷூஹ் ஆகிய பிள்ளைகளைப் பெற்றெடுத்தார். இவர்கள் மூலம் பிறந்த குழந்தைகள் அனைவரையும் கன்தூராவின் குழந்தைகள் என்று கூறுகின்றனர். இப்ராஹீம் (அலை) அவர்களிடம், உயிரைக் கைப்பற்றுகின்ற வானவர் (மலக்குல் மவ்த்) வந்ததைப் பற்றி வேதக்காரர்கள் அதிகமான செய்திகளைக் கூறியுள்ளனர். இச்செய்தியை முற்கால அறிஞர்கள் பலரிடமிருந்து இப்னு அசாகிர் (ரஹ்) அறிவித்துள்ளார். இவை சரியானவையா என்பதை அல்லாஹ்வே நன்கறி வான். இப்ராஹீம் (அலை) திடீரென இறந்துவிட்டார் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோலவே சுலைமான் (அலை), தாவூத் (அலை) இருவரும் திடீரென இறந்துவிட்டார்கள். இதை வேதக்காரர்களும் மற்றவர்களும் இதற்கு மாற்றமாகவே கூறுகின்றார்கள்.

இப்ராஹீம் நபியின் மரணதறுவாய்

பின்னர் இப்ராஹீம் (அலை) அவர்கள் நோய்வாய்ப்பட்டார். அவர் தம் 175ஆம் வயதில் மரணமடைந்தார். 190ஆம் வயதில் மரணமடைந்தார் என்றும் கூறப்பட்டுள்ளது. அவர் மஹாரா எனும் இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டார். அது ஹப்ரூன் என்ற இடத்தில் உள்ளது. இஃப்ரூன் அல்ஹீஸீ என்பாருடைய வயல்வெளியில், அவருடைய துணைவி சார்ரா (அலை) அவர்களோடு அவர் நல்லடக்கம் செய்யப்பட்டார். அவரை நல்லடக்கம் செய்கின்ற பொறுப்பை அவருடைய மகன்களான இஸ்மாயீல் (அலை) மற்றும் இஸ்ஹாக் (அலை) இருவரும் ஏற்றுக்கொண்டனர். இப்ராஹீம் (அலை) அவர்கள் இருநூறு ஆண்டுகள் வாழ்ந்தார் என்று இப்னு அல்கல்பீ (ரஹ்) கூறுகிறார். (நூல்: தாரீக் அத்தப்ரீ)

இப்ராஹீம் (அலை), அவர்தம் நூற்று இருபதாம் வயதில் (கதூம் எனும்) வாய்ச்சியால் விருத்தசேதனம் செய்துகொண்டார். அதன் பிறகு அவர் எண்பது ஆண்டுகள் வாழ்ந்தார் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரளி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (நூல்: இப்னு ஹிப்பான்)4
இப்ராஹீம் (அலை), அவர்தம் நூற்று இருபதாம் வயதில் விருத்தசேதனம் செய்துகொண்டார். அதன் பிறகு அவர் எண்பது ஆண்டுகள் வாழ்ந்தார். அவர் (கதூம் எனும்) வாய்ச்சியால் விருத்தசேதனம் செய்துகொண்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரளி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (நூல்: இப்னு ஹிப்பான்)

(இப்ராஹீம் நபி விருத்த சேதனம் செய்த போது) அவருக்கு எண்பது வயது ஆகிவிட்டது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரளி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். இதை அல்ஹாஃபிழ் இப்னு அசாகிர் (ரஹ்) பதிவுசெய்துள்ளார்.

அல்கதூம் என்பது (அவர் விருத்தசேதனம் செய்துகொண்ட) கிராமத்தின் பெயராகும் என்று அப்துர் ரஸ்ஸாக் (ரஹ்) கூறியதை இப்னு ஹிப்பான் (ரஹ்) அறிவித்துள்ளார்.

(இப்னு கஸீர் ஆகிய) நான் கூறுகிறேன்: புகாரீயில் வந்துள்ள, அவருக்கு எண்பது வயதானபோது அவர் விருத்த சேதனம் செய்துகொண்டார் என்பதும், மற்றோர் அறிவிப்பில், அவர் எண்பது வயதாக இருந்தபோது (விருத்தசேதனம் செய்துகொண்டார்) என்பதும் ஒன்றுக்கொன்று முரண் இல்லை. ஏனென்றால், அவர் அதன் பின்னர் எண்பது ஆண்டுகள் வாழ்ந்துள்ளார். அல்லாஹ்வே நன்கறிபவன்.


இப்ராஹீம் நபியின் சிறப்புகள்

முதன் முதலில் முழுக்கால் சட்டை (சுர்வால்-பேண்ட்) அணிந்தவர் இப்ராஹீம் (அலை) ஆவார். முதன் முதலில் தலைமுடிகளை இரண்டாகப் பிரித்து (மாங்கெடுத்துச்) சீவிக்கொண்டவர்; முதன் முதலில் அந்தரங்க உரோமங்களைக் களைந்தவர்; தம்முடைய நூற்று இருபதாம் வயதில் (கதூம் எனும் வாய்ச்சியால்) கட்டைகளைச் செதுக்கும் கருவியால் முதன் முதலில் விருத்தசேதனம் செய்துகொண்டவர்; அதன் பிறகு, எண்பது ஆண்டுகள் வாழ்ந்தார்; முதன் முதலில் விருந்தாளிக்கு உணவளித்து உபசரித்தவர்; முதன் முதலில் நரைமுடி வரப்பெற்றவர் இவரே ஆவார் என்று அபூஹுரைரா (ரளி) கூறுகின்றார்கள். முஹம்மத் பின் இஸ்மாயீல் அல்ஹஸ்ஸானீ (ரஹ்) இதை அறிவித்துள்ளார்.

இப்ராஹீம் நபியே, முதன் முதலில் விருந்தாளிக்கு உணவளித்து உபசரித்தவர்; மக்களுள் முதன் முதலில் விருத்தசேதனம் செய்துகொண்டவர்; தம்முடைய மீசையை முதன் முதலில் கத்தரித்துக்கொண்டவர்; முதன் முதலில் நரைமுடியைப் பார்த்தவர். அந்த நரைமுடியைப் பார்த்து, இறைவா! இது என்ன? என்று வினவினார். உயர்ந்தோன் அல்லாஹ், (அது) கண்ணியம் (கம்பீரம்) என்று பதிலளித்தான். இறைவா! (அப்படியானால் கம்பீரத்தை) கண்ணியத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக! என்று கூறினார் என சயீத் பின் அல்முசய்யப் (ரளி) கூறியுள்ளார்கள். (நூல்: முஅத்தா)

மற்றவர்கள் மேற்கண்ட இரண்டையும்விட சற்று அதிகப்படுத்திக் கூறியுள்ளார்கள். அதாவது தம்முடைய மீசையை முதன் முதலில் கத்தரித்துக்கொண்டவர்; முதன் முதலில் அந்தரங்க உரோமங்களைக் களைந்தவர்; முதன் முதலில் முழுக்கால் சட்டை (சுர்வால்-பேண்ட்) அணிந்தவர். அவருடைய மண்ணறை, அவருடைய மகன் இஸ்ஹாக் உடைய மண்ணறை, இஸ்ஹாக் உடைய பிள்ளை யஅகூப் (அலை) அவர்களுடைய மண்ணறை யாவும் மர்பஆ எனும் இடத்தில் உள்ளன. அதை சுலைமான் பின் தாவூது (அலை) ஹப்ரூன் எனும் ஊரில் கட்டினார். அது இன்று, `ஃகலீல் எனும் பெயரில் அறியப்படுகிறது. மேற்கண்ட இத்தகவல்கள் அனைத்தும் தலைமுறை தலைமுறையாக பாதுகாக்கப்பட்டவை ஆகும். பனூ இராயீல் காலத்திலிருந்து நம்முடைய இக்காலம் வரை பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதாவது, அவருடைய மண்ணறை மர்பஆ எனும் இடத்தில் கண்டிப்பாக உள்ளது. ஆனால், அங்கே `இதுதான் என்று ஒரு மண்ணறையைச் சுட்டிக்காட்ட இயலாது. எனவே, அந்த இடம் முழுவதையும் நல்ல முறையில் பேணுவதும் கண்ணியப்படுத்துவதும் அவசியமாகும். அதன் ஓரங்களை மிதிக்காமல் காப்பதும், அவ்விடத்தை மேன்மைப்படுத்துவதும் அவசியமாகும். ஏனென்றால், அங்கு இப்ராஹீம் நபியின் மண்ணறை இருக்கலாம்; அல்லது அதன்கீழ் அவரின் பிள்ளைகளுள் யாரேனும் ஒரு நபியின் மண்ணறை இருக்கலாம்.
வஹ்ப் பின் முநப்பிஹ் கூறுவதாக இப்னு அசாகிர் (ரஹ்) கூறுகிறார்: இப்ராஹீம் நபியின் மண்ணறை அருகே உள்ள கல்லில் பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது:

அறிவிலியை அவனுடைய மேலெண்ணம் வீணாக்கிவிட்டது.
யாருடைய தவணை வந்துவிட்டதோ அவர் மரணமடைகிறார்.
யார் மரணத்தை நெருங்கிவிட்டாரோ, அவருக்கு
அவருடைய சூழ்ச்சி ஏதும் பயனளிக்காது.
அவருடைய முன்னோர்களெல்லாம் இறந்துவிட
பின்னோராகிய இவர் மட்டும் எப்படி நீடித்திருக்க முடியும்? எந்த மனிதருக்கும் அவருடைய நற்செயல்களே அவரோடு மண்ணறையில் (துணையாக) வரும். (நூல்: தாரீக் திமஷ்க்)

இப்ராஹீம் நபியின் பிள்ளைகள்

இப்ராஹீம் நபிக்கு, முதன் முதலில் ஹாஜிர் மூலம் பிறந்தவர் இஸ்மாயீல் (அலை) ஆவார். அவர் எகிப்து நாட்டில் கிப்தீ வமிசத்தைச் சார்ந்தவர் ஆவார். பின்னர், சார்ரா (அலை) மூலம், இஸ்ஹாக் பிறந்தார். சார்ரா (அலை), இப்ராஹீம் (அலை) அவர்களின் சிற்றப்பா மகள் ஆவார். பின்னர், அவர் கன்தூரா என்ற பெண்ணை மணந்துகொண்டார். இவர் யக்துன் உடைய மகள் ஆவார். இவர் கன்ஆன் நாட்டைச் சார்ந்தவர். இவருக்கு ஆறு பிள்ளைகள் பிறந்தனர். அவர்கள்: மத்யன், ஸம்ரான், சர்ஜ், யக்ஷான், நஷக் ஆவர். ஆறாம் பிள்ளைக்குப் பெயர் சூட்டவில்லை. பின்னர், அவர் ஹஜூன் எனும் பெண்ணை மணந்துகொண்டார். இவருடைய தந்தை பெயர் அமீன் ஆகும். இவருக்கு ஐந்து பிள்ளைகள் பிறந்தனர். அவர்கள்: கைசான், சூரஜ், உமைம், லூத்தான், நாஃபி ஆவர். (நூல்: அத்தப்ரீ)

இவ்வாறுதான் அபுல்காசிம் அஸுஹைலீ (ரஹ்) தம்முடைய `அத்தஅரீஃப் வல்இஹ்லாம் எனும் நூலில் கூறியுள்ளார்.

----------அடிக்குறிப்புகள்------------


1) இதேபோன்ற நபிமொழியை அந்நள்ர் பின் ஷுமைல் (ரஹ்) நமக்கு அறிவித்துள்ளார் என்று அல்பஸார் (ரஹ்) கூறுகிறார். இந்த நபிமொழியை யஸீத் பின் ஹாரூன் மற்றும் அந்நள்ர் பின் ஷுமைல் இவ்விருவர்தாம் ஹம்மாத் பின் சலமாவோடு இணைத்துள்ளனர். இவ்விருவரைத் தவிர மற்றவர்கள் இந்த நபிமொழியை நபித்தோழர்கள் வரைதான் (மவ்கூஃப்) இணைத்து அறிவித்துள்ளார்கள் என்று அல்பஸார் கூறியுள் ளார். இந்தக் காரணம் மட்டும் இல்லையென்றால் இந்நபி மொழி `ஸஹீஹ் உடைய நிபந்தனைக்குள் வந்திருக்கும் என்று இப்னு கஸீர் (ரஹ்) கூறுகிறார்.

2. இந்த முறையில் இந்த வார்த்தைகளுடன் வந்துள்ள இந்நபிமொழியை அஹ்மத் (ரஹ்) மட்டுமே அறிவித்துள்ளார்.

3. இவ்வாறே புகாரீ மற்றும் முலிம் நூல்களில் வேறு சில வழிகளிலும் இந்த நபிமொழி பதிவுசெய்யப்பட்டுள்ளது.

4. இக்ரிமா மூலம் அபூஹுரைரா (ரளி) அவர்கள் வரை செல்கின்ற ஒரு நபிமொழியை அல்ஹாஃபிழ் இப்னு அசாகிர் (ரஹ்) அறிவித்துள்ளார்.


அரபி:           அல்பிதாயா வந்நிஹாயா (இமாம் இப்னு கஸீர்- ரஹ்) 
தமிழாக்கம்: நூ. அப்துல் ஹாதி பாகவி M.A., M.Phil.



                                                                                                                           (முற்றும் )

கருத்துகள் இல்லை: